நாளைடைவில் இருவரது உறவும் பலப்பட்டது.
வாசுவுடன் பேசாத நாளெல்லாம் நாளாகவே இருக்காது ஆருத்ராவிற்கு.
வகுப்பிற்கு சென்று கொண்டிருந்தவனின் அலைப்பேசி ஒலித்தது.
எடுத்துப் பார்த்தான் திவ்யா தான் அழைத்திருந்தாள்.
அவளது அழைப்பை ஏற்று பேசிக் கொண்டே வந்தவனின் எதிரில் ஆருத்ரா நின்றிருந்தாள்.
’ஒரு நிமிடம்’ என சைகை செய்தவன் ,” சொல்லு திவ்யா என்ன விஷயம்?” என்றான்.
“ டேய்..அண்ணா இந்த முறையும் நாம தான் செமஸ்டர் ஃபீஸ் கட்டணும். என்ன பண்றது? அது போக ப்ராஜெக்ட் பண்ணனும். அதுக்கும் கொஞ்சம்
செலவாகும் போல. இன்னும் ஒரு வாரத்துல கட்டணும். இல்லன்னா ஃபைனோட கட்டற மாதிரி இருக்கும்.”என்றாள் கவலையாக.
“ ஏய்…திவி இதுக்கு போய் ஏன் இவ்வளவு ஃபீல் பண்ணுற. இன்னும் ஒரு வாரம் இருக்கு தானே .நான் ஃபீஸ் கட்டுறதுக்கு ஏற்பாடு செய்யுறேன். நீ உருப்படியா படிக்குற வேலை மட்டும் பாரு..சரி. இதையெல்லாம் உன் மண்டையில ஏத்தி கிட்டு படிப்புல கோட்டை விட்டுடாதே..” என்றான்.
“ ம்ம்..சரி வச்சிடுறேன்..” என வைத்து விட்டாள்.
பெரிய தொகை தேவைப்படுவதால் பணத்தை புரட்டுவது நிச்சயமாக வாசுவிற்கு சற்று கடினமாகத் தான் இருக்கும் என நினைத்து வருந்தினாள் திவ்யா.
வாசு திவ்யாவிடம் பேசியதை வைத்து ஓரளவிற்கு விஷயத்தை யூகித்து விட்டாள் ஆருத்ரா.
ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் பொதுவாக பேசுவதைப் போல பேசி திவ்யா படிக்கும் கல்லூரியின் பெயரையும் , எந்தப் பிரிவில் எந்த ஆண்டு என்பதையும் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.
வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவைத் தவிர ஒரு நாளும் அவன் கேண்ட்டினில் உண்பதில்லை என்பதையும் பார்த்துக் கொண்டே தான் இருந்தாள்.
அவன் மீது பரிதாபப் பார்வை வீசாமல் இயல்பாகவே அவனை கேண்ட்டினுக்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டே மாறுதலுக்கு அவனை வேறு ஏதாவது உணவை உண்ண வைத்து விட்டு அவன் கொண்டு வரும் உணவைத் அவள் உண்டு விடுவாள்.
வாசு ஏதேனும் கேட்டால், “ ஏன் எங்க மாமியார் செய்யற சாப்பாட்டை நான் சாப்பிடக்கூடாதுன்னு சொல்றீங்களா?” என்று கூறி வாயை அடைத்து விடுவாள்.
அவனோ சிரித்துக் கொண்டே டிஃபன் பாக்ஸை அவளிடம் கொடுத்துவிட்டு அன்று மெனுவில் இருக்கும் வேறு உணவை உண்பான்.
சாமர்த்தியமாக ஆருத்ரா பணத்தை கொடுத்து விட்டு வந்து விடுவாள்.
வழக்கம் போல பெட்ரோல் பஃங்குக்கிற்கு வந்த வாசுவிற்கு உண்மையிலேயே பணத்தை ஏற்பாடு செய்வது பெரும் சவாலாக தான் இருந்தது.
வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடங்களுக்கு மேலானாலும் யாரிடமும் சென்று பெரிய தொகையை கடனாக கேட்க மனம் ஒப்பவில்லை.
ஒரிரு இடங்களில் முயற்சி செய்து பார்த்தான். கிடைக்கவில்லை.
அன்று வேறு வழியின்றி பெட்ரோல் பஃங்கின் உரிமையாளரிடம் சென்று தேவைப்படும் தொகையை கடனாக கேட்டான் .
அதை கேட்பதற்குள்ளாகவே அவனுக்கு ஒரு மாதிரியாக ஆகி விட்டது .
அவரோ அவன் கேட்டதில் பாதி தொகையை மட்டும் கடனாக தருவதாக கூறினார்.
யோசனையுடன் சரியென்று கூறிவிட்டு வந்துவிட்டான்.
குறிப்பிட்ட தேதிக்குள் அவனால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை.
திவ்யா பயிலும் கல்லூரி முதல்வரை நேரில் சந்தித்து ஒரு சில நாட்களில் பணத்தைக் கட்டுவதாக கூறி அனுமதி வாங்கலாம் என்று நினைத்து அவளது கல்லூரிக்குச் சென்று முதல்வரை சந்தித்து பேசினான்.
அவரோ ,” ஒரு நிமிஷம்..பேரு என்னன்னு சொன்னீங்க? எந்த டிபார்ட்மென்ட்? எந்த இயர்?” என்றார்..
“ திவ்யா சி.எஸ்.சி. பைனல் இயர்” என்றான்..
அலுவலக ஊழியர்களிடம் கூறி கணினியில் சென்ற முறை கட்டணம் சரியான தேதியில் கட்டியுள்ளனரா என பார்க்கச் சொன்னார்.
உதவியாளர் கணினியில் பார்த்து விட்டு, “ சார்..இந்த டெர்ம் ஃபீஸூம் கட்டியாச்சு சார்..” என்றார்.
வாசுவோ அதிர்ந்து போனான்..
“ நா திவ்யாவோட அண்ணன் வாசுதேவன். என்னைத் தவிர வேற யாரும் கட்டிருக்க மாட்டாங்க…ஒரு வேளை ஸ்பான்சரே கட்டியிருக்காங்களா பாருங்க சார்…” என்றான் பதட்டத்துடன்.
“ஆர்.எம் கம்பெனி ஓனர் தானே எப்பவும் பே பண்ணுவார். ஆனா அந்த பேர்ல இந்த டெர்ம் சுக்கு யாரும் கட்டல சார். ஆருத்ராங்கறவங்க தான் கட்டி சைன் பண்ணியிருக்காங்க”என்றார் உதவியாளர்.
வாசுவிற்கு முகம் மாறியது.
“ஆருத்ராங்கறது உங்களோட ரிலேட்டிவ்வா?”
அவரது கேள்வியில் ஒரு கணம் தடுமாறியவன்,” ஆ..ஆமா சார்…தேங்க்ஸ் நா…தான் மறந்துட்டேன். ஐ யம்..சாரி சார்…” என்று கூறி விட்டு விருட்டென்று வெளியேறினான்.
வாசுவிற்கு அவ்வளவு எளிதில் கோபம் வந்து விடாது. முடிந்த வரை கோபத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்வான்.
ஆனால் ஆருத்ரா தான் திவ்யாவிற்கு கல்லூரி கட்டணம் செலுத்தியிருக்கின்றாள் என்றவுடன் கண்மண் தெரியாத கோபம் வந்தது..
இரு சக்கர வாகனத்தை காட்டுத்தனமாக செலுத்திக் கொண்டு கல்லூரிக்கு விரைந்தான் .
அவனது தன்மானம் சீண்டப் பட்டதாக உணர்ந்தான்.
தனது இயலாமையை கேலி செய்து விட்டது போன்றதொரு மாயை. அதே கோபத்தில் வந்தவன் அவளது கல்லூரி வளாகத்தில் நுழைந்து வகுப்பிற்கு முன்பு வந்து நின்றிருந்தான்.
அவளுக்கு பாடவேளை என்பதால் வராண்டாவிலேயே நின்று விட்டான்.
சிறிது நேரத்தில் வகுப்பு முடிந்தது. வகுப்பு ஆசிரியர் வெளியே சென்று விட்டார்.
வாசு தனது வகுப்பிற்கு முன்பு நிற்பதை பார்த்த ஆருத்ரா சிரிப்புடன் வெளியே வந்து விட்டாள்.
“ ஹாய் தேவ்..! என்ன திடீர்னு இந்த டைம்ல வந்துருக்கீங்க?” என்றாள் முகம் கொள்ளா புன்னகையுடன்.
முதன்முறையாக அவனாகவே அவளைத் தேடி வந்தது அவளுக்கு அத்தனை மகிழ்ச்சியை தந்தது.
“கொஞ்சம் தனியா பேசணும்…ஆடிட்டோரியம் பின் பக்கம் நிக்குறேன். வா” என சற்று அழுத்தமாக கூறிவிட்டு விறுவிறுவென சென்று விட்டான்.
“ அட…கொஞ்சம் இருந்தா தான் என்ன…நானும் கூட வருவேன் ல” ன முணுமுணுத்து கொண்டே அவன் பின்னால் ஓடினாள்.
மரநிழலில் நின்றவன் ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை சமன் படுத்திக் கொள்ள முயன்றான்.
ஆனால் அதையும் மீறி கோபம் கட்டுக்கடங்காமல் தான் வந்தது.
“ என்ன பா…சாயந்திரம் வரைக்கும் வெயிட் பண்ண முடியலயா? அதுக்குள்ள என்னை பாக்க வந்துட்டீங்க? ரொம்ப ஹேப்பி…” என முடிப்பதற்குள் அறைந்திருந்தான் அவளை.
கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அவனை அதிர்ந்து போய் பார்த்தாள்.
“எ..எதுக்கு தேவ்?”
” ஷ்ஷ்…பேசாதே…நீ கூட என்னை கையாலாகாதவனா நினைச்சுட்டல. பின்ன ஏன் டி என்னை லவ் பண்ணுற? வேற யாரவது வசதியானவனைப் பாத்து லவ் பண்ணிருக்க வேண்டியது தானே? என் கிட்ட காசு இல்லன்னு உன் கிட்ட வந்து கெஞ்சுனேனா? நீ யாரு என் தங்கச்சிக்கு ஃபீஸ் கட்ட?என் தங்கச்சிக்கு எப்படியாவது நான் ஃபீஸ் கட்டிட்டு போறேன். நடுவுல நீ வந்து பெரிய இவ மாதிரி பீஸ் கட்டிட்டு வந்துருக்க. அதை என் கிட்ட கேக்கணும்னோ இல்ல சொல்லணும்னோ உனக்குத் தோணலை ல? வசதி இல்லாட்டியும் யாருக்கிட்டயும் போய் கையேந்துற அளவுக்கு இல்ல நானு. ச்சே…என்னை பார்த்தா அவ்வளவு இளக்காரமா போச்சா உனக்கு? தயவு செஞ்சு என் கண்ணு முன்னாடி நிக்காத….போயிடு…போதும் இதோட நிறுத்திக்கலாம். இப்படி உன்னோட பணக்காரத் தனத்தை என் கிட்ட காட்டுவன்னு தெரிஞ்சிருந்தா பழகியிருக்கவே மாட்டேன்…” என்று முடிப்பதற்குள் பளாரென்று அவனை அடித்திருந்தாள் ஆருத்ரா.
இப்போது திகைத்து விழிப்பது வாசுவின் முறையானது.
அவனருகே வந்தவள் அவனது சட்டைக் காலரை பிடித்து இழுத்துக் கொண்டு,” ஏன்டா…உனக்கு என்ன பிரச்சினை? பணம் கொடுத்தது பொண்ணா இருந்ததுனாலயா? இல்ல உன்னை கேக்காம நானே பணம் கட்டுனதுனாலையா?உன்னை கேக்காம பணம் கட்டுனது தப்பு தான். அதுக்காக நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். ஏன் இவ்வளவு ஈகோ உனக்கு? என்னோட தேவ் மத்த ஆம்பிளைங்களை போல ஈகோ, திமிரெல்லாம் காட்ட மாட்டான்னு நினைச்சேன். ஆனா நீயும் ஒரு சராசரி ஆம்பிளைதான்னு நிருபிச்சிட்ட. இப்ப என்ன பணத்தை ஏன் நான் கட்டணேன்னு தெரியணும் அவ்வளவு தானே? ரொம்பவே சிம்பிள் திவ்யாவை வேத்து ஆளா பாக்கல..என் தேவ்வோட தங்கச்சி எனக்கும் உறவுதான்னு நினைச்சு உரிமையா அவளுக்கு பணத்தை கட்டினேன். அதுவும் என் பணத்தை தான் கட்டுனேன். புருஷன் கிட்ட பொண்டாட்டி உரிமையா வாங்குற மாதிரி பொண்டாட்டி கிட்ட உரிமையா கேட்டு வாங்குறதுக்கு உங்களோட தன்மானம் விடாதுல. ஆஃப்ட்ரால் பொண்ணு தானே…இவ எப்படி நமக்கு காசு குடுத்து கேவலப்படுத்தலாம்ங்கற எண்ணம். என்னோட தப்பு தான் உரிமை எடுத்துட்டிருக்க கூடாது. கவலைப்படாதீங்க.. நீங்க ஜாப் கிடைச்சதுக்கு அப்பறம் பணத்தை திரும்பக் கொடுங்க. நான் தாராளமா வாங்கிக்கிறேன். ஆனா..ஒரு விஷயம் மட்டும் உறுதியா சொல்றேன்…என்னை விட்டுட்டு போன்று சொன்னீங்கனாலோ…இல்ல நீங்க விட்டுட்டு போகணும்னு நினைச்சீங்கனாலோ….வேற விதமான ஆருத்ராவை தான் பாப்பீங்க…ஜாக்கிரதை..! நீங்க அடிச்ச உடனே கண்ணை கசிக்கிட்டு மன்னிச்சிடுங்கன்னு சொல்றவ இந்த ஆருத்ரா கிடையாது. கண்டிப்பா பதிலுக்கு பதில் தான்…”என்றவள் விடுவிடுவென நடந்து சென்றாள்.
மர நிழலிலேயே சிறிது நேரம் அமர்ந்து விட்டான் வாசு.
கடைசியாக அவள் கூறிவிட்டு சென்ற வார்த்தைகள் உதடுகளில் மெல்லிய சிரிப்பை வரவழைத்தது.
சிரித்தபடி கன்னத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டான். சிறிது எரிச்சலாக இருந்தது.
அதன் பின்னர் பத்து நாட்களாக அவனிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை ஆருத்ரா.
அவளிடம் தன்னுடைய செயலுக்கு எத்தனையோ முறை மன்னிப்பு கேட்டு விட்டான் வாசு.
அவளோ கோபத்துடன் முறைத்து விட்டு சென்றாள்.
அன்று மாலை அவளுக்கு சிறப்பு வகுப்புகள் இருந்தது.
முடித்து விட்டு கல்லூரி வளாகத்தின் வெளியே வந்து நின்றாள்.
அவளருகே தனது இருசக்கர வாகனத்தை கொண்டுவந்து நிறுத்தி,” ஏறு ஆருத்ரா…!” என்றான்.
அவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“ஏறுன்னு சொல்றேன்…சீன் கிரியேட் பண்ணாத.. எல்லாரும் பாக்குறாங்க…” என்றான் சிறிது அழுத்தத்துடன்.
அவனை முறைத்துக் கொண்டே இருச்சக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தவள் தனது தந்தைக்கு அழைத்து தான் வருவதற்கு சிறிது நேரம் ஆகலாம் என்பதால் தானே வீட்டிற்கு வந்து விடுவதாகவும் கூறி விட்டாள்.
மாலை மங்கி இருள் சூழத் தொடங்கியது.
வாகனத்தை கடற்கரையில் நிறுத்தி விட்டு அவளுடன் இணைந்து நடந்தான்.
படகிற்கு பின்னால் இருவரும் அமர்ந்திருந்தனர்.
பௌர்ணமி நிலவொளியின் பிம்பத்தை கடலலைகள் சுமந்து கொண்டு முன்னும் பின்னுமாக கரையைத் தொட்டு விளையாடிக் கொண்டிருந்தது.
முகத்தில் வந்து மோதிய கடற்கரை காற்று கூந்தலை அவளது முகத்தில் படரச் செய்து கொண்டிருந்தது.
கூந்தலை முகத்தில் இருந்து எடுத்து எடுத்து விட்டவள் ஒரு கட்டத்தில் கடுப்பாகி கூந்தலை தூக்கி கொண்டையாக போட்டுக் கொண்டாள்.
சிரிப்புடன் அவளது கரங்களை தன்னுடைய கரங்களுக்குள் வைத்துக் கொண்டான் வாசு.
“ருத்ரா…ப்ளீஸ்…பேசாம இருக்காத..கஷ்டமா இருக்குது டி. ஐ யம் சாரி…மா. ரொம்ப கெஞ்ச விடுற…உனக்கு ரொம்பவே கல் மனசு ருத்ரா…” என்றான்.
“ ஆமா..எனக்கு கல் மனசு தான். ஆனா அந்த கல் மனசையே உடைச்சு உள்ள நுழைஞ்சவரு நீங்க மட்டும் தான். ஆனா நான் கல்லுங்கறதுக்காக வார்த்தைகளால் என்னை போட்டு உடைச்சிட்டீங்க. அந்த கல்லுக்குள்ளயும் ஒரு மனசு இருக்குங்கறதை மறந்துடாதீங்க…”என்றவளின் விழிகள் கலங்கியது.
அவளது முகத்தை தாங்கியவன், “ஐ யம் சாரி ருத்ரா…ஏன் டி இவ்வளவு காதலை என் மேல வச்சிருக்க? இதுக்கு தான் தகுதியான ஆளான்னு நினைச்சு தான் எனக்கு அன்னைக்கு அவ்வளவு கோவம் வந்தது. இவ்வளவு காதலை என்னால தாங்க முடியல டி. சரி சொல்லு என்ன பண்ணுனா உன்னோட கோபம் குறையும். நிச்சயமா நான் அதை பண்றேன்.” என்றான் அவளது விழி நீரை துடைத்துக்கொண்டே.
கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள்,” ப்ராமிஸ்”என்றாள்.
சிரித்துக் கொண்டே “ப்ராமிஸ்” என்றான்.
“அப்ப கிஸ் பண்ணுங்க” என்றாள்.
“அய்யோ..! இங்கயா? இது பப்ளிக் ப்ளேஸ்..” என்று பதறினான் வாசு.
தனது உதட்டை சுட்டிக் காட்டியவள், “ஹலோ..இது உங்களுக்கான ப்ரைவேட் ப்ளேஸ்..கிஸ் பண்ணலாம் தப்பில்லை. சுத்திலும் யாருமில்லை. இருக்குற ஒண்ணு ரெண்டு பேரும் வேற உலகத்துல இருக்காங்க..ம்ம்..டீப்பா…எப்பவுமே மறக்க முடியாத அளவுக்கு ஸ்பைசியா இருக்கணும். சரியா இல்லன்னா சரியா கொடுக்குற வரைக்கும் திரும்பத் திரும்ப கிஸ் கொடுத்திட்டே இருக்கணும். இது தான் உங்களுக்கு பனிஷ்மெண்ட்..ம்ம்..குடுங்க..” என்று உரிமையாக அவனிடம் கேட்டாள்.
அவனுக்கு தான் அத்தனை தயக்கமாக இருந்தது.
யாரேனும் பார்த்து விடுவார்களோ என்று சற்று பதட்டமாக இருந்தது.
“ என்ன யோசனை பண்ணிட்டு இருக்கீங்க?” என்றவள் அவனைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
மெல்ல அவள் புறம் திரும்பி அவளது முகத்தை தாங்கியவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவளிதழில் மென்மையாக முத்தத்தை பதித்து விட்டு வேகமாக விலகினான்
அவனை நன்றாக முறைத்தவள், “இதுக்கு பேரு முத்தமா? கடவுளே…!” எனத் தலையில் கை வைத்துக் கொண்டாள்.
“ருத்ரா…கிளம்பலாமா? நல்லா இருட்டிருச்சு …மழை வரும் போல இருக்கே..!” என்றான் வானத்தை ஆராய்ந்து கொண்டு.
அவனது காலரை பிடித்து தன்னருகே இழுத்தவள்,” இப்ப ஒழுங்கு மரியாதையா காலத்துக்கும் மறக்காத மாதிரி…என்னையே நான் மறக்குற அளவுக்கு ஒரு கிஸ் குடுக்கணும்…இல்லன்னா.. இன்னைக்கு நான் உங்களை விட மாட்டேன்..” என போலியாக மிரட்டினாள்.
அவனோ தயங்கியபடி அவளருகே வர அவனது கரத்தை எடுத்து தன்னிடையில் வைத்துக் கொண்டு, “இப்படி நல்லா பிடிச்சிட்டு கிஸ் பண்ணுங்க…உங்க கை ஏன் இப்படி நடுங்குது.. நானென்ன பேயா.. பிசாசா! ஆஃப்ட்ரால் ஒரு கிஸ்ஸூக்கு இப்படி பயப்படுறீங்க..” என்றவள் அவனது கரங்களை தன்னிடையில் வைத்து இறுக்கிக் கொண்டாள்.
திடீரென மழை மேகம் திரண்டு கொண்டு வர, அவ்விதமே இருட்டானது.
மண்வாசனையுடன் கூடிய இதமான காற்று வீச அவளது கழுத்தில் கரம் வைத்து தன் புறமாக இழுத்தவன் அவளது விழிகளை பார்த்துக் கொண்டே இதழை அழுத்தமாக சிறை செய்தான்.
பெண்ணவளின் மேனியிலிருந்த வந்தத வாசனையும் அவளது இதழின் சுவையும் ஆணவனுக்கு உணர்வுகளை கட்டவிழ வைத்தது.
அவளது இடையில் இறுகியது அவனது பிடி.
உதடுகளை விட மனமில்லாமல் இன்னுமின்னும் அவளிதழ்களில் புதைந்து போனான்.
அவனே எதிர்பாராத வண்ணம் வன்மையாகவே இருந்தது அவனது முத்தம். அவளுக்குமே அந்த வன்மை வேண்டியதாக இருந்தது .
மொத்த காதலையும் தன்மேல் கொட்டிக் கவிழ்க்கும் பெண்ணின் அன்பு உள்ளத்தை வெகுவாக அசைத்தது.
இந்த கணம் இன்னும் நீண்டுக்கொண்டே போகாதா என்றிருந்தது இருவருக்கும்.
சடசடவென மழைத்துளி விழ இருவரும் மனமின்றி விலகினர்.
அவளது முகத்தை நிமிர்த்தி பார்த்தான். மின்னல் வெட்டியதில் அவளது உதடுகளில் இருந்து இரத்தம் கசிவதை கண்டு கொண்டான்.
“ரத்தம் வருது ருத்ரா…வலிக்குதா..? என்று கூறி அதனை துடைத்து விட்டான்.
அவனது கைகளை பற்றியவள், “பரவாயில்ல கொஞ்சம் ஸ்பைசியா தான் முத்தம் கொடுத்திருக்கீங்க. ஐ ஜஸ்ட் லவ்ட் இட்..” என்று கூறி கண்ணடித்தாள்.
அவனோ தலையை இருபுறமும் ஆட்டி சிரித்தான்.
கன்னத்தில் விழுந்த கன்னக்குழி வழக்கம் போல அவளை இம்சித்தது.
“இந்த கன்னக்குழி தான் என்னைய ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்கு தேவ்..” என்றவள் இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டாள்.
அதனை அப்படியே உள்வாங்கி கொண்டவன் மழை வலுக்கவே, “மழை பெய்ய ஆரம்பிச்சிருச்சு…வா சீக்கிரம் கிளம்பலாம்…” என்றபடி அவளுடன் வேகமாக நடந்துச் சென்று இருசக்கர வாகனத்தை எடுத்தான்
“ துப்பட்டாவை வேணா தலையில் போட்டுக்க..”
“ ஹலோ…முழுக்க நனைஞ்சாச்சு…துப்பட்டாவும் தான் நினைச்சு போச்சு…நீங்க ஓட்டுங்க தேவ்..எனக்கு இது மாதிரி மழையில் நனைஞ்சுட்டு உங்க கூட வர்றது ரொம்பவே பிடிக்குது..” என்றவள் அவன் பின்னால் ஏறி அமர்ந்து அவளை இறுக கட்டிக் கொண்டு அவனது முதுகில் தலை சாய்த்துக் கொண்டாள்.
வாகனத்தை மிதமான வேகத்தில் செலுத்தினான் வாசு.
நனைந்து கொண்டே பயணத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தனர் இருவரும்
நாட்கள் வேகமாக உருண்டோடியுது.
வாசு கேம்பஸில் தேர்வாகி புகழ்பெற்ற நிறுவனத்தில் பணிபுரிய ஆரம்பித்தான்.
திவ்யாவும் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள்.
ஆருத்ரா வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் மேற்ப்படிப்பிற்கு விண்ணப்பத்திருந்தாள் .
ஏதோ சில காரணங்களால் கல்லூரியில் சேர நாட்கள் தள்ளிக் கொண்டே போனது.
சும்மா இருக்கப் பிடிக்காமல் தனது தந்தையின் நிறுவனத்திற்கு சென்று நிர்வாகப் பொறுப்பை பற்றி தெரிந்து கொண்டாள்