தாயின் பேச்சினை கேட்டு முகம் இறுக அமர்ந்திருந்தான் வாசு. கோபம் கொப்பளித்துக் கொண்டு வர காத்திருந்தது.
“ சந்தியா உனக்கு சம்மதமா மா..” என பாசத்துடன் கேட்டார் சாந்தி.
சந்தியாவோ பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்,” நீங்க என்ன சொன்னாலும் எனக்கு சம்மதம் தான் மா.” என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டாள்.
“ அப்ப நாங்கள் கிளம்புறோம் சம்மந்தியம்மா.. நிச்சயம் எல்லாம் வேணாம் .நேரடியா கல்யாணத்தையே வச்சிடலாம். “ என்று கூறி விடைப் பெற்றார்.
வெளியே வந்தவன் கோபமாக அரசியிடம் ஏதோ கூற வர அவனது அலைப்பேசிக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
எடுத்துப் பேசியவனின் முகம் யோசனையில் சுருங்கியது.
“இதோ வர்றேன் சார்.. “என்றவன் அரசியை வீட்டில் விட்டு விட்டு வெளியே கிளம்பினான்.
நேராக அவன் வந்திறங்கியது ஆருத்ரா வின் வீட்டிற்கு தான்.
வீட்டினுள்ளே நுழைய முயன்றவனை தடுத்து நிறுத்தியது ராகவனின் குரல்.
“ மிஸ்டர் வாசுதேவன்..”
அவரது குரல் வந்த திசையை நோக்கி நடந்தான்
வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த ரோஜாத் தோட்டத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமரந்திருந்தார்.
அவர் முன்பு வந்து நின்றவனை மேலிருந்து கீழாக பார்வையால் அளவிட்டுக் கொண்டே, “உக்காருங்க வாசு”.என்றார்.
அவரது செயலில் கோபம் தான் வந்தது .ஆருத்ராவிற்காக முயன்று தன்னை சமன்படுத்திக் கொண்டு ஒரு பெருமூச்சுடன் நாற்காலியில் அமர்ந்தான்.
“என்னடா உங்களை உள்ளக் கூப்பிடாம வெளியேவே நிக்க வச்சு பேசுறேன்னு தப்பா நினைக்காதீங்க . வீட்டை க்ளீன் பண்ணிட்டு இருக்காங்க. அதான்.
“ என்ன விஷயமா என்னை வரச் சொல்லியிருந்தீங்க சார்…சொல்லுங்க” என்றான் சலிப்பாக.
“ அடடா…ரொம்ப ஷார்ப் நீங்க. என்ன விஷயமா வரச்சொல்லிருப்பேன்னு நீங்களே சொல்லுங்களேன் வாசு..”என்றார் எள்ளலுடன்.
ஏற்கனவே சாந்தியின் பேச்சில் எரிச்சலடைந்திருந்தவனுக்கு ராகவனின் செயல் கோபத்தை இன்னமும் கிளறிக் கொண்டிருந்தது.
“சார் நானும் உங்க பொண்ணு ஆருத்ராவும் ஒருத்தருக்கொருத்தர் விரும்புறோம். உங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கனும் ஆசைப்படுறோம்.உங்க பொண்ணோட விருப்பத்துக்கு மதிப்பு குடுப்பீங்கன்னு நினைக்கிறேன் “ என்றான் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டே.
“ நல்லா பேசுறீங்க மிஸ்டர் வாசு. ஒரு விஷயம் நியாபகம் வச்சிக்கோங்க..நீங்க இப்ப வாங்குற சம்பளத்தை விட அதிகமாக எங்க வீட்டு வாட்ச்மேன் வாங்குறாரு. இப்ப வேணா காதல் மயக்கத்துல காசு, பணம் வேணாம் காதல் மட்டும் போதும்னு வசனம் பேசத் தோணும். ஆனா நாளாக நாளாக ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் வாழ்க்கை என் பொண்ணுக்கு அலுத்துக் போயிடும். .என் பொண்ணு பல் தேய்க்குற ப்ரஷ்லயிருந்து உபயோகிக்குற கார் வரைக்கும் எல்லாமே இம்ப்போர்ட்டட். ஆனா உங்க வீட்ல…?அதை நான் தப்பா சொல்லல. உங்களோட ஸ்டேட்டஸ் அவ்வளவு தான். நீங்க ஒண்ணும் சூர்யவம்சம் சரத்குமார் இல்ல என் பொண்ணு தேவயானியும் இல்லை. அவ உங்களை கல்யாணம் பண்ணுவதும் அப்படியே உங்க ஸ்டேட்டஸ் மாற. நீங்களே கொஞ்சம் ப்ராக்டிக்கலா யோசிச்சு பாருங்க…உங்க சுயநலத்துக்காக அவளை நீங்க கஷ்டப்பட வைக்கலாமா? “ என குத்தலாகவும் அதே சமயம் சாமர்த்தியமாக பேசினார்.
அவரது பேச்சில் சிறிது உண்மை இருக்கத்தான் செய்தது. அவரிடம் கோபப்பட்டு பிரயோஜனம் இல்லை என நினைத்தவன் விரக்தியுடன் சிரித்துக் கொண்டே,”நான் சரத்குமாரும் இல்லை உங்க பொண்ணு தேவயானியும் இல்லை. ஒரே நாள்ல எல்லாம் மாறிட. கண்டிப்பா அவளை கஷ்டப்படாம என்னால பாத்துக்க முடியும். நானும் சராசரி மனுஷன் தான். நீங்க இவ்வளவு சீப்பா பிஹேவ் பண்றது உங்க பொண்ணுக்கு தெரிஞ்சா ஜென்மத்துக்கும் உங்களை மன்னிக்க மாட்டா.. ரொம்பவே பழைய டெக்னிக் இது. வேற ஏதாவது புதுசா ட்ரை பண்ணுங்க…”என்று கூறி விட்டு வெளியேறினான்.
சோர்வுடன் வீட்டிற்கு வந்தவன் அரசியை தேடினான்.
அவரோ சமயலறையில் யோசனையுடன் அமர்ந்திருந்தார்..
தாயிடம் தனது காதலை கூறி அவரது சம்மத்தத்தை வேண்டி நின்றான்..
சாந்தியிடம் ஒருமுறை பேசிப்பார்க்கலாம் என நினைத்து பேசியவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சாந்தி மிகவும் கறாராக பெண் குடுத்து பெண் எடுத்தால்தான் திருமணம் என்று கூறி விட்டார்…
மகனது காதல் ஒருபுறம் மகளது வாழ்க்கை ஒரு புறம் என்றிருக்க தராசுத்தட்டு மகளது புறமே சாய்ந்தது.
“ம்மா..ப்ளீஸ் மா . ரொம்ப நம்பிக்கையோட தான் அவ லண்டனுக்கு போயிருக்கா. அவளோட நம்பிக்கையை உடைக்க முடியாது மா..” என்றவனின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டார் அதைக் கண்டு பதறியவன், “அம்மா…!” என்று கத்த முயன்றவனுக்கு தொண்டை அடைத்து வார்த்தைகள் காற்றாக தான் வெளிவந்தது..
அவனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டவரின் கைகளை இறக்கி விட்டுவிட்டு வேகமாக வெளியேறினான்…
சிந்தை முழுவதும் தன்னவளின் நினைவே.. எத்தனையெத்தனை ஆசைகளுடனும் காதலுடனும் கிளம்பிச் சென்றாள். அவளது இதயத்தை நொறுக்கிவிடும் நிகழ்வை எண்ணி பாரமேறி தான் போனது வாசுவிற்கு.
ஆம்… சந்தியாவை மணந்து கொள்ள சம்மதித்து விட்டான். அவனது எல்லா சின்னஞ்சிறிய ஆசைகளும் கனவுகளும் கானல் நீராகிப் போனதைப் போல காதலும் கானல் நீராகி போனது.
இரண்டு மாதங்களில் திருமணம் என முடிவு செய்யப்பட்டது. எல்லாருடைய நலனுக்காக பொதுநலமாக செயல்பட்டவன் ஆருத்ரா விடம் மட்டும் சற்று சுயநலமுடன் நடந்து கொண்டான். ஆம்…! மிகப்பெரிய தவறை செய்து பெண்ணவள் மனதை சுக்குநூறாக உடைத்தான்.
சந்தியாவுடன் திருமணம் நிச்சயம் ஆனதைப் பற்றி ஒரு வார்த்தை கூட ஆருத்ராவிடம் தெரிவிக்கவில்லை. ஆருத்ரா விற்கு தெரிந்தால் நிச்சயமாக திருமணத்தை நிறுத்தி விடுவாள் என்பதாலும், தங்கையின் வாழ்க்கையை எண்ணியும் அவளிடம் கூற தைரியம் இல்லாமல் மறைத்து விட்டான்.
ஆனால் விதியின் விளையாட்டினால் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தெரிந்த கல்லூரி நண்பர்கள் மூலம் அவனது திருமணப் பத்திரிக்கை ஆருத்ராவின் கைகளுக்கு சென்றடைந்தது.
அதனைப் பார்த்தவளுக்கு இதயம் தன் இயக்கத்தை நிறுத்திவிட்டது போல ஒரு பிரமை. படிப்பு சம்மந்தமாக வேறு ஒரு நாட்டிற்கு அவள் இரு மாதங்களுக்கு முன்பு சென்றதால் வாசுவுடன் சரியாக பேச சந்தர்ப்பம் அமையவேயில்லை. ஊர் திரும்பியதும் ஆசையாக அவனுக்கு அழைத்துப் பேசலாம் என்றிருந்தவளுக்கு பேரிடியாக வந்து சேர்ந்தது அவனது திருமணப் பத்திரிக்கை.
அதனைப் பார்த்த உடனே அவனுக்கு அழைத்தாள் .
நான்கைந்து முறை அழைத்தும் அவளது அழைப்பு ஏற்கப்படவில்லை. கோபத்துடன் திவ்யாவின் எண்ணிற்கு அழைத்தவள்,” உங்க வீட்டு புது மாப்பிள்ளை மிஸ்டர் வாசுதேவன் கிட்ட நான் கொஞ்சம் பேசணும்…” என்றாள் காட்டமாக.
திவ்யாவோ யோசனையுடன் வாசுவிடம் சென்று அலைப்பேசியை கொடுத்தாள்.
அவன் பேசுவதற்கு முன்பே, “என்ன கல்யாண மாப்பிள்ளை எப்படியிருக்கீங்க? அவசர அவசரமா கல்யாணத்துக்கு ரெடி ஆயிட்டீங்க போல? அதெப்படி டா…என் கூட பழகிட்டு இன்னொருத்தியோட படுக்க ரெடி ஆயிட்ட?என்னோட காதலை அவ்வளவு கேவலமா நினைச்சிட்டியா? ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே கல்யாணம் பிக்ஸ் பண்ணிருக்காங்க. அதை கூட என் கிட்ட நீ சொல்லல? பயங்கரமான சுயநலவாதி டா நீ…அப்படி என்னடா நான் தப்பு செஞ்சேன்? உன்னை அளவுக்கு அதிகமாக காதலிச்சதை தவிர? ஹான்.. சொல்லு தேவ்..சொல்லு…எனக்கு நீ வேணும் டா…என்னால நீ இல்லாம வாழ முடியாது தேவ்…ப்ளீஸ்…புரிஞ்சிக்க ட்ரை பண்ணு…இங்க…இங்க..பாரு என்னை பிரச்சினை னு சொல்லு..நாம ரெண்டு பேரும்…இல்ல..இல்ல..நான் வந்து சரி பண்ணிடுறேன் தேவ். ஆனா..ப்ளீஸ் இந்த கல்யாணம் மட்டும் வேண்டாம் டா…ப்ளீஸ் ரொம்ப வலிக்குது தேவ்..நீ வேணும்…உன்னோட காதல் முழுசும் எனக்கே எனக்கு வேணும். நீ ..நீ குடுத்த கிஸ்ஸெல்லாம் இங்க….மனசு முழுக்க சேமிச்சு வச்சிருக்கேன் மா…உன்னோட லவ்வை வேற யாரு கிட்டயும் ஷேர் பண்ணிக்காத டா…ப்ளீஸ்…தேவ்…என்னை விட்டுடாத டா…”என ஆங்காரமாக ஆரம்பித்து தேம்பித் தேம்பி குழந்தை போல அழ ஆரம்பித்து விட்டாள்.
வாசுவிற்கோ வார்த்தைகள் வரவில்லை. அவளது அழுகை அவனுள் பிரளையத்தை ஏற்படுத்தியது. உள்ளம் நடுங்க வார்த்தைகளை உதிர்த்தான் தேவ், “ ஐ யம் சாரி ஆருத்ரா. என்னை மறந்துடு டி…எல்லாம் முடிஞ்சு போச்சு…” என்று கூறி விட்டு அலைப்பேசியை அணைத்து விட்டான். அதற்கு அவளது அழுகையை கேட்கும் சக்தி அவனுக்கில்லை.
கண்கள் சிவந்து நின்றிருந்தவனின் தோளைத் தொட்ட திவ்யா, “யாருண்ணா அது?” என்றாள் கலக்கமாக.
எல்லா கோபமும் திவ்யாவின் மேல் திரும்பியது. அவளை முறைத்தவன் பல்லிடுககில் வார்த்தைகளை கடித்து துப்பினான்
“எல்லாம் உன்னால தான். உன்னால தான் என் வாழ்க்கை போச்சு…என்னோட காதல் போச்சு…என்னோட உயிரும் போச்சு. நீங்க எல்லாரும் நல்லா இருங்க. உன்னோட அவசர புத்தியால நான் தான் கஷ்டப்படுறேன் . என்னோட தேவதையை இழந்துட்டு நிக்குறேன்…போடி…போடி…நீ சந்தோஷமா இரு…எவ்வளவு சுயநலம் ? ச்சை…” என்று கத்தி விட்டு வெளியே சென்றான்.
அவனது கோபத்தையும் அனல் கக்கும் வார்த்தைகளையும் கேட்டவள் திக்பிரமை பிடித்தவள் போல நின்றிருந்தாள்.
அண்ணனின் வார்த்தைகள் மூளைக்குள் சென்றடையவே சில கணங்கள் ஆனது. ஆனால் வார்த்தைகளின் வீரியம் அவளுள் முழுமையாக இறங்கி மனதை மரத்துப் போகச் செய்தது.
‘தன் அண்ணன் காதலித்தானா? அவனது காதலை கொன்று புதைத்து விட்டு தன் காதலை வாழ வைக்கின்றானா?’ என்ற எண்ணமே அவளது இதயத்தை நடுங்கச் செய்தது. தன் தாயிடம் சென்று திருமணத்தை நிறுத்தி விடச் சொல்லி வாதாடினாள்.
ஆனால் அரசி பிடிவாதமாக மறுத்துவிட்டார். “உன்னோட இஷ்டத்துக்கு எல்லாம் பண்ண முடியாது. அவனும் நானும் இவ்வளவு செலவு செஞ்சி எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணுனா..நீ உன் இஷ்டத்துக்கு கல்யாணத்தை நிறுத்த சொல்லுவ? அதை நாங்க பண்ணனும்? மாசமா இருக்கியேன்னு பாக்குறேன். இல்லன்னா விளக்கு மாத்து கட்டை பிஞ்சிடும். மரியாதையா போயிடு…” என ஒரு ஆட்டம் ஆடி தீர்த்து விட்டார்..
லண்டனிலோ அலைப்பேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா. மனம் முழுவதும் நரக வேதனை.
அருகிலிருந்த திருமண பத்திரிகையை எடுத்துச் சுக்கல் சுக்கலாக கிழித்துப் போட்டவள்” ஆ…ஆ”வென தலையை பிடித்து கொண்டு கதறி விட்டாள்.
அறையிலிருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி விட்டாள். அப்போதும் அவளது உள்ளத்தின் அனல் அணைய மறுத்தது.
ஏதோ யோசித்தவள் இந்தியா செல்ல விமானத்தை முன் பதிவு செய்தாள். மூன்று நாட்கள் கழித்தே சென்னைப் செல்ல விமானம் இருந்தது.
எப்படியோ சமாளித்து கொண்டு இந்தியாவிற்கு வந்திறங்கியவள் நேராக திருமண மண்டபத்திற்கு சென்றாள். அங்கு தன்னவன் முகம் இறுக சந்தியாவிற்கு தாலி கட்டும் காட்சியை தான் பார்க்க நேரிட்டது. அவளது கடைசி முயற்சியும் வெற்றிகரமாக தோல்வியை தழுவியது கண்ணில் பதிந்த காட்சி கருத்தில் பதிய மறுத்தது . தளர்ந்து போய் தூண் மீது சாய்ந்து நின்றவளுக்கு அழுகை கூட வரவில்லை.
இனி அவன் தன்னவன் இல்லை என்ற நிதர்சனமே அதீத அழுத்தத்தைக் கொடுத்தது. தலைக்குள் பெரிய பாறாங்கல்லை வைத்ததை வைத்ததைப் போன்றதொரு அழுத்தம். பைத்தியகாரியை போல் நின்றிருந்தவளின் கோலத்தை கண்டு அங்கிருந்தவர்கள் ஒரு மாதிரியாக பார்த்து விட்டு சென்றனர். மெல்ல தன்னிலை அடைந்தவள் கடைசியாக திருமணக் கோலத்தில் அவனை கண்ணில் நிறப்பிக் கொண்டு வீட்டிற்கு சென்றாள்.
திவ்யாவின் முகமும் தெளிவில்லாமல் இருந்தது.
‘தன் அண்ணன் தன்னை புரிந்து வைத்துள்ளது அவ்வளவு தானா? அவனது காதலை தான் கொன்று விட்டேனா? தன்னால் அவனுடைய வாழ்க்கை அழிந்து விட்டதா? இப்படியெல்லாம் கூட வாசு பேசுவானா?’ என்ற ஆதங்கம் கோபமாக உருமாறியது
ஆக மொத்தம் நிம்மதியற்ற சூழலில் நடைப்பெற்றது இரு ஜோடிகளின் திருமண