பிழை -14

தன்னுடைய சட்டையை அயர்ன் செய்து கொண்டிருந்தான் வாசு.

“ என்னடா அண்ணா பண்ணுற?” என்றபடி‌ அவனின் பின்புறமாக வந்து நின்றாள் திவ்யா.

“ ம்ம்…சாப்டுட்டு இருக்கேன்” என்றான் திரும்பாமலேயே.

“அய்யே…ஜோக்கு. நான் அப்புறமா சிரிச்சிக்குறேன். ஏன் டா அண்ணா இவ்வளவு மொக்கையா ஜோக் அடிக்குற நீ?” என தலையிலடித்துக் கொண்டாள்‌ திவ்யா.

சட்டையை மடிப்பு கலையாமல் எடுத்து தனியாக வைத்தவன், ஸ்விட்ச்சை அணைத்து விட்டு அவள் புறம்திரும்பினான் . 

“ என்ன வேணும் உனக்கு? ஏன் காலையிலேயே வந்து வம்பு பண்ணிட்டு இருக்க?  இவ்வளவு குழையுறது எதுக்காக? என்ன வேலை ஆகணும் உனக்கு?” என அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கினான்.

“ஷப்பா….முடியல டா அண்ணா உன் கூட. எதுக்கு இத்தனை கேள்வி கேட்டு உயிரை வாங்குற?” என்றவள் குரலை தாழ்த்திக் கொண்டு, “ டேய்‌…அண்ணா மதியம் ஃப்ரெண்ட்ஸெல்லாம் படத்துக்கு கூப்பிடுறாங்க டா. போயிட்டு வந்துடுறேன். அம்மா கிட்ட கேட்டா விட மாட்டாங்க. நீ ஏதாவது சொல்லி  சமாளிச்சுக்க டா. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் டா.ப்ளீஸ்…ப்ளீஸ்…” என அவனது தாடையை பிடித்து கொண்டு கெஞ்சினாள்.

“ ஏய்..! போன மாசம் தானே ஒரு படத்துக்கு போயிட்டு வந்த. திரும்பவும் படத்துக்கு போறேன்னு வந்து நிக்குற? அதெல்லாம் முடியாது.‌ ஒழுங்கு மரியாதையா காலேஜூக்கு போயிட்டு வா… அம்மா கிட்டயெல்லாம்‌ என்னால சமாளிக்க முடியாது. போடி” எனக் கூறி விட்டு சட்டையை மாட்டிக் கொண்டான்.

“டேய்…டேய்…அண்ணா…!” என சிணுங்கிக்கொண்டு நின்றிருந்தாள்.

“திவி…முடியாதுன்னா முடியாது…ஒழுங்கா கிளம்பி வா. உன்னை பஸ் ஸ்டாஃப்ல விட்டுட்டு நான் கிளம்பணும் . வா.. வா..லேட்டாச்சு‌.” என அவளை அவசரப்படுத்தி விட்டு தனது இரு சக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

தரையில் காலை உதைத்து அதிருப்தியை வெளிப்படுத்தியவள் ,’ இரு டா‌ உன்னைய ஒருநாள் கவனிச்சுக்குறேன்..’ என மனதினுள் கருவியவள் முகத்தை தூக்கிக் கொண்டு அவனது இரு சக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தாள்.

வழியெங்கும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு  தான் வந்தாள்.

கண்ணாடியூடே  அவளை பார்த்தான் வாசு. 

சிறு குழந்தை போல முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருப்பவளை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது. 

அவன் சிரிப்பை அடக்க முயன்று கொண்டிருப்பதை பார்த்தவள் பட்டென அவனது முதுகில் அடித்தாள்.

“ஏய்‌‌..ராட்சசி..! ஏன் டி அடிக்குற? பஸ் ஸ்டாஃப் வந்துடுச்சு . இறங்கித் தொலை.” என்றான்.

வேகமாக இறங்கியவள்‌ அவனை முறைத்துக் கொண்டே அங்கிருந்த தோழிகளுடன் நின்று கொண்டாள்.

“ பை திவ்யா…” என கைக்காட்டியவனை கண்டு கொள்ளாமல் திரும்பி நின்று கொண்டாள்.

“ ஏய் திவ்யா..! உங்கண்ணன் பை சொல்றாரு டி. திரும்ப பை சொல்லு டி..” என்றாள் தோழியொருத்தி.

“ முடியாது டி… “

“பாவம் டி‌ அவரு…” என வாசுதேவனை பார்த்து ஜொள்ளியவாறு அவளது தோழி கூற  திவ்யாவோ முறுக்கிக் கொண்டு ,” தேவையில்லை. வேணும்னா நீ வேணா பை சொல்லிக்கோ…” என்று கூறினாள்.

“ நான் எதுக்கு டி பை சொல்லணும்? வேணும்னா  அவருக்கு ஐ லவ் யூ சொல்லட்டுமா?” என்றாள் வாசுவை ஓரக்கண்ணால் பார்த்தபடி.

அவள் கூறியதைக் கேட்டு நக்கலாக சிரித்தவள்,” எங்க அண்ணன் கிட்ட போய் இதை சொல்லிப்பாரு…அப்பறம் ஜென்மத்துக்கும் எந்த பையன் கிட்டயும் போய் நீ ஐ லவ் யூ சொல்ல மாட்ட. இவ்வளவு ஏன் நாளைக்கு கல்யாணம் ஆச்சுன்னா உன் ஹஸ்பண்ட்க்கு கூட சொல்ல மாட்ட‌” என்று கூறினாள்.

“ ஏன் டி அடிச்சிடுவாரா? அவ்வளவு டெர்ரா?” என்றாள் இன்னொருத்தி.

“ம்ம்ச்…ச்சே…ச்சே…அதெல்லாம் இல்லை. இந்த வயசுல காதலிக்கக்கூடாது. க்ளாஸை கட்டடிக்கக்கூடாது, படிக்கணும்…எக்சட்ரா எக்சட்ரான்னு கதாகலேட்சேபம் பண்ண ஆரம்பிச்சிடும்.” என்றாள் சலிப்புடன்.

தனது இருசக்கர வாகனத்தை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவன் அவளது உணவு  டப்பாவை அவளிடம் கொடுத்து விட்டு  கிளம்பினான்.

தன்னைப் பற்றி தான் அப்பெண்கள் ஏதோ பேசுகிறார்கள் என புரிந்தது. 

கண்டுகொள்ளாமல் இடத்தை காலி செய்தான்.

இவையனைத்தையும் காரிலிருந்து பார்த்துக் கொண்டு இருந்தாள் ஆருத்ரா.

வழக்கமாக அவள் கல்லூரிக்குச் செல்லும் வழியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தால் மாற்று வழியில் தனது தந்தையுடன் காரில் வந்தாள். 

அவர்களின் காருக்கு முன்பு‌ மற்றொரு வாகனம் நின்றிருந்ததால் சிறிது நேரம் அங்கு அவர்களின் கார் நின்றிருந்தது. அப்போது அவளது பார்வையில் பட்டார்கள் வாசுதேவனும் திவ்யாவும்.

‘யாரிந்த பெண்? உரிமையாக அவனது தோளில் அடித்து விளையாடுகிறாள். அவனும் சில நிமிடங்களாக அவளிடம் பேச‌ முயற்சிப்பதும் அவள் கோபமாக திரும்பிக் கொள்வதுமாக இருக்கின்றாளே..!’ என்ற எண்ணம் மனதை அரிக்கத் தொடங்கியது.

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top