திவ்யாவை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு தனது கல்லூரிக்குச் சென்றான் வாசு.
கல்லூரி வளாகத்தில் நுழைந்தவன் வாகனத்தை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு தனது துறையை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தான்.
வேமாக நடந்து கொண்டிருந்தவனின் நடையை தடை செய்தது ஆருத்ராவின் குரல்.
“ ஹலோ..! மிஸ்டர் தேவ்” என்றழைத்தவளின் குரல் கேட்டு திரும்பினான் வாசு.
யாரும் அவனை தேவ்வென்று அழைத்தது கிடையாது.
ஆருத்ரா தான் முதன்முதலாக தேவ் என்று அழைத்திருந்தாள்.
அவனருகே வந்தவள் நேரடியாக விஷயத்திற்கு வராமல், “ என்ன பஸ் ஸ்டாப்ல ஒரே கேர்ள்ஸ் ஃபேன்ஸ் போல? ஒரே என்ஜாய் தான் ம்ம்…?” என்றாள் சின்னச் சிரிப்புடன்.
அவனோ ,” அய்யய்யோ.. அதெல்லாம் இல்லங்க. என்னோட சிஸ்டரை ட்ராஃப் பண்ணிட்டு வந்தேன். நீங்க என்னைப் பாத்தீங்களா? அந்த வழியா தான் எப்பவும் வருவீங்களா?” என்றான்.
“ ஓ…சிஸ்டரா? நான் கூட கேர்ள் ஃப்ரெண்டோன்னு நினைச்சுட்டேன்..”
“ அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. கேர்ள் ஃப்ரெண்ட்டெல்லாம் எனக்கு செட்டாகாது?”
“ ஏன்?” என்றாள் ஆச்சரியமாக.
“தெரியல…ஆனா ஒத்து வராது. பொண்ணுங்களோட எதிர்பார்ப்புகளை நம்மளால நிறைவேத்த முடியாது. ரெண்டாவது அதுல இன்ட்ரெஸ்ட்டும் இல்லை.” என்றான் தோளினை குலுக்கி.
“அடேயப்பா..! பொண்ணுங்களோட எதிர்ப்பார்ப்புகளை அந்தளவுக்கு தெரிஞ்சு வச்சிருக்கீங்களா? என்னன்னு சொல்லுங்க பாப்போம்?” என்றாள் விழிகளை அகல விரித்தவாறே.
அவளது கேள்வியில் ஒரு கணம் திகைத்தவன் சமாளித்துக் கொண்டு,” என்ன…எப்ப பார்த்தாலும் அவங்களோடவே பேசிட்டு இருக்கணும்ன்னு சொல்லுவாங்க, வாரா வாரம் எங்கயாவது அவுட்டிங் கூட்டிட்டு போகணும். நிறைய ஷாப்பிங் பண்ணனும், ஈகோ பாக்காம கால்ல விழணும். காரணமே இல்லாம லவ் யூ.. லவ் யூன்னு சொல்லிட்டு திரியணும். உன்னை மாதிரி அழகி யாரும் இல்லைன்னு புகழ்ந்து கிட்டே இருக்கணும். டெய்லி காலையில பல்லு விளக்குறதுல்ல இருந்து காலேஜ் கிளம்பி வர்ற வரைக்கும் அப்டேட் குடுக்கணும்..அப்பறம்..” என்னவனை கையமர்த்தி வாய் விட்டு சிரித்தாள் ஆருத்ரா.
குலுங்கி குலுங்கி சிரித்தவளுக்கு கண்களில் இருந்து நீரே வந்து விட்டது.
கைக்குட்டையால் கண்ணீரை துடைத்துக் கொண்டே, “ஹா..ஹா..ஷப்பா…முடியல டா சாமி…ம்ம்.. இவ்வளவு பெரிய லிஸ்ட்டை எங்கிருந்து தயாரிச்சிங்க? கேர்ள்ஸை பத்தி உங்களோட அபிப்ராயம் சூப்பர்..!” என இரு விரலை அருமை என்பது போல காட்டினாள்.
அவனுக்கோ சற்று கூச்சமாகி விட்டது.
அதிகப்படியாக பேசி விட்டோமோ என்று கூட தோன்றியது.
“சாரி… கூட இருக்கறவனுங்க லவ் பண்ணுறேன்னு இப்படியெல்லாம் அவஸ்தை படுறானுங்க. அதான்…நான் பொதுவா என்னோட கருத்தை சொன்னேன். உங்களுக்கு ஹேர்ட் ஆகியிருந்தா ஐ யம் சாரி” என்றவனை பார்த்து சிரித்து விட்டு தங்களுடைய வளாகத்திற்குச் சென்றாள்.
ஏனோ தெரியவில்லை அவனிடம் பேசிக் கொண்டிருப்பது அவளுக்கு ஒரு வித சுவாரஸ்யத்தை கொடுத்தது.
மதியம் வாசுவிற்கு வகுப்பேதும் இல்லையென்பதால் வெளியே செல்லலாம் என நண்பர்கள் வற்புறுத்தினர்.
அவனும் அவனுடைய நண்பனும் இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்கள்.
“ டேய் வாசு…அங்கப் பாரு டா. அந்த தியேட்டர் வாசல்ல நிக்கறது உன்னோட தங்கச்சி திவ்யா தான?” என்றான் .
ப்ரேக் அடித்து வாகனத்தை நிறுத்தினான் வாசு.
எதிர்ப்புறம் உள்ள திரையரங்கில் தனது தோழிகளுடன் வாயடித்துக் கொண்டிருந்தாள் திவ்யா.
‘அடிப்பாவி…க்ளாஸ் கட்டடிச்சிட்டு சினிமாக்கு வந்துட்டியா? இன்னைக்கு இருக்கு டி மகளே உனக்கு ‘ எனப் பல்லைக் கடித்தவன் நண்பன் முன்பு அவளை விட்டுக் கொடுக்காமல், “ஆமா டா காலையிலேயே சொல்லிட்டு தான் வந்தா. இன்னைக்கு ஒரு நாள் தானே…என்ஜாய் பண்ணட்டும். விடுடா” என்றபடி வாகனத்தை கிளப்பிக் கொண்டு சென்றான் .
மாலையில் வீடு திரும்பியவள் , “ஷப்பப்பா…என்னா வெயிலு…? என்னா வெயிலு? ம்மா…கொஞ்சம் ஃப்ரிட்ஜ்ல இருந்து சில்லுன்னு தண்ணி எடுத்துட்டு வாங்கம்மா. நாக்கெல்லாம் வறண்டு போச்சு.. இன்னைக்கு அந்த கெமிஸ்ட்ரி புரஃபசரோட ஒரே ரோதனைம்மா…கை வலிக்க வலிக்க நோட்ஸ் கொடுத்து உயிரை வாங்கிட்டாரு.” என ஷாலை கழற்றி சோஃபாவில் தூக்கி எறிந்து விட்டு கண்மூடி சாய்ந்து அமர்ந்தாள்.
மூடிய விழிகளுக்குள் நாயகன் நாயகியின் மிக நெருக்கமாக காட்சி வந்து தொலைத்தது.
மெல்லிய சிரிப்புடன் கண்மூடி அமர்ந்திருந்தாள்.
“ இந்தா …” என தண்ணீரை நீட்டினார் அவளது தாய்.
அதனை வாங்கி மடமடவென குடித்துவிட்டு நிமிர்ந்தவளின் பார்வையில் விழுந்தான் வாசுதேவன்.
“டேய் அண்ணா…! என்னடா சீக்கிரம் வந்துட்ட? க்ளாஸை கட் அடிச்சிட்டியா? “ என நக்கலாக கேட்க அவனோ தாயாரின் புறம் திரும்பி அர்த்தமாக பார்த்தான்.
“ ஏது.. அவன் க்ளாஸை கட் அடிச்சிட்டு ஊர் சுத்துனானா? கழுதை நீ தான்டி கட் அடிச்சிட்டு சினிமாக்கு போயிட்டு வந்துருக்க? என்ன தைரியம் உனக்கு? “ என்றவர் பின்னால் மறைத்து வைத்திருந்த பிரம்பினை எடுத்து அடி பின்னி விட்டார்.
“ஆ...அம்மா…அடிக்காதீங்க மா…வலிக்குது. நான் காலேஜ்ல தான் மா இருந்தேன். எங்கேயும் போகலை. யாரோ உங்க கிட்ட என்னைப் பத்தி தப்பு தப்பா போட்டுக் கொடுத்திருக்காங்க. ஆ…ஆம்..மா அடிக்காதீங்க” என சோஃபாவை சுற்றிக் கொண்டு ஓட அவளை வளைத்துப் பிடித்தான் வாசு.
“ பொய் சொல்லாத டி…பொட்டை பிள்ளையை பெத்துட்டு வயித்துல நெருப்பைப் கட்டிட்டு இருக்கேன். நீ என்னடான்னா ஊர் பொறுக்க போற..? வாசு அவளைப் பிடிடா..”என்றார் அவளை துரத்தியபடியே.
“ டேய்…அண்ணா..! விடுடா…என்னை. எட்டப்பா….நீ தான் போட்டுக் கொடுத்தியா…? இரு இரு எனக்கும் நேரம் வரும் “ என்று கோபத்துடன் அவனைப் பார்க்க.
அவனோ சிறிதும் மசியவில்லை.
அவளை இறுக பிடித்து வைத்திருந்தான்.
“ ம்ம்மா…மா..ஃப்ளீஸ் மா..என் செல்ல அம்மா ல. இந்த ஒரு தடவை மன்னிச்சிடு மா. இனி செத்துப் போன உங்க ஆயா சத்தியமா நான் கட்டடிச்சிட்டு சினிமாவுக்கு போக மாட்டேன் மா. என்னை நம்பு ம்மா…”என வாசுவின் கையில் திமிறிக்கொண்டு இருந்தாள்.
அவனது பிடியோ இறுகியது.
அரசியோ கோபத்துடன் , “காலையிலயே அவன் போக்ககூடாதுன்னு சொல்லிட்டு தானே போனான். அவன் பேச்சை மீறிட்டு போனா என்ன அர்த்தம்? ஆப்பிளை இல்லாத வீடு. அவன் தான் உனக்கு அப்பா ஸ்தானத்தில இருந்து நல்லதை சொல்றான். இப்படியே உன்னிஷ்டத்துக்கு பண்ணிட்டு இருந்தா என்ன பண்றது? இன்னைக்கு வாங்கற வாங்குல அடுத்து நீ வெளியே காலை எடுத்து வைக்க யோசிக்கணும்.” என்றவர் நீட்ட பிரம்பினால் திவ்யாவை அடி பின்னி விட்டார்.
பிரம்பை கீழே போட்டவர் மூச்சு வாங்க,” சொல் பேச்சு கேட்டு நடக்கிறதா இருந்தா காலேஜூக்கு போ. இல்லன்னா வீட்டுலயே கிட…” என கத்திவிட்டு சென்றார்.
மடங்கி அமர்ந்தவள் சுடிதார் பேன்ட்டை கணுக்காலுக்கு மேலே சற்று தூக்கிப் பார்த்தாள்.
வரிவரியாக சிவந்திருந்தது.
கண்ணீரை துடைத்துக் கொண்டே எழுந்தவள், “ இருடா மவனே…! நேரம் பார்த்து உன்னை கோர்த்து விடலை என் பேரு திவ்யா இல்லை..” என வீராவேசம் பேசிக் கொண்டே எழுந்து நடக்க முயன்றவளுக்கு காலில் சுளீரென வலி தோன்ற “ ஸ்ஸ்…ப்பா..வலிக்குதே…! “ என நொண்டிக் கொண்டு நடந்தவளை கைத்தாங்கலாக பிடித்துக் கொள்ள வந்தவனின் கைகளை தட்டி விட்டு விட்டு கோபமாக உள்ளறைக்குச் சென்றாள்.
இரவு உணவை தவிர்த்து விட்டாள்.
நேரம் ஆக ஆக கால் வலி உயிர் போனது.
திவ்யா வலியோடு படுத்திருக்க.
கதவினை திறந்து கொண்டு வந்தவன் தங்கையின் கால்களை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு அவள் மறுக்க மறுக்க களிம்பை போட்டுவிட்டான்.
“ இந்தா இந்த டேப்லெட்டை போட்டுட்டு படு” என்றான்.
“உன்னோட அக்கறை ஒண்ணும் தேவையில்லை. போடா” என்று கூறி மாத்திரையை தூக்கி எறியப் போனவளின் கைகளை பிடித்துக் கொண்டு,” திவிம்மா… சாரி டா.நீ பண்ணதும் தப்பு தானே..! தெரிஞ்சவங்க யாராவது பாத்துட்டு ஏதாவது சொல்லிட்டங்கன்னா நல்லா இருக்காது டா. அதான் அம்மா கிட்ட தானே சொல்லிட்டேன்”என்றான்.
“ மத்தவங்களுக்காக வாழறதை விடு. நமக்கு பிடிச்ச மாதிரி தான் வாழணும். அவன் பேசுவான் இவன் பேசுவானெல்லாம் பயந்துட்டு வாழ முடியாது .படத்துக்கு போனது தப்பா? இதை ஒரு விஷயம்ன்னு அம்மா கிட்ட போட்டுக் குடுத்து அடி வாங்க வச்சிட்டல்ல. உன் கிட்ட பேச மாட்டேன் போ…” என முகத்தை எட்டு முழ நீளத்திற்கு தூக்கி வைத்துக் கொண்டாள்.
“ திவி…” என்றழைத்தான் மீண்டும்.
“போன்னு சொன்னேன். உன் கிட்ட பேசறதுக்கு எனக்கு ஒண்ணுமில்லை.” என கோபமாக கத்தி விட்டு போர்வையை போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள்.
அவளது கோபம் அவனறிந்ததே.
இலகுவில் சமாதானம் ஆகவே மாட்டாள். அவளாகவே ஆனால் தான் உண்டு.
அவன் மீது எவ்வளவு கோபம் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டாலும் அவன் மீது அளவிற்கதிகமாக பாசமும் உண்டு அவளுக்கு.
ஒரு பெருமூச்சுடன் அறையை விட்டு வெளியே வந்தான்.