பிழை-13

மிகுந்த தயக்கத்துடன் ஆருத்ராவை பார்த்து விட்டு பாடுவதற்காக எத்தனித்த போது, “ ஆரூ..ஆரூ…” என பதட்டத்துடன் அவளது தோழியொருத்தி மூச்சிரைக்க வந்து நின்றாள்..

அத்தனை நேரம் சிரித்துக் கொண்டிருந்தவள் ஓடி வந்து தன்னருகே நின்றவளை யோசனையுடன் பார்த்தாள்.

“என்ன ராதிகா? என்னாச்சு? ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க?” என்றாள்.

“ ந…நம்ம..ம்ம பவி இருக்கால்ல..” என்று கூறி விட்டு சிறிது நிறுத்தினாள்.

“ என்ன டி…பவிக்கு என்ன?

“ அவ…அவ…”

“ம்மச்…இப்ப உன்னைக் கொல்லப் போறேன் பாரு. சீக்கிரம் சொல்லித் தொலை டி எருமை” என்றாள் கடுப்பாக.

“ அவ தூக்க மாத்திரை சாப்பிட்டுடா டி”

“என்ன டி சொல்ற? என்னாச்சு? ஏன்‌ இப்படி பண்ணினா?” ன்று  பதறினாள்.

“ அந்த ஷிவா…அதான் மினிஸ்டரோட அல்லக்கை பையன் அவளை ஏமாத்திட்டான் டி. அவ…அவ…இப்ப…இப்ப…” என திணறினாள்.

ஆருத்ராவைச் சுற்றி நண்பர்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

எனவே அனைவரையும் பார்த்து தயங்கி நின்றாள் ராதிகா. 

விஷயத்தை எப்படி வெளிப்படியாக சொல்வது என்று தயங்கினாள்.

ஆருத்ராவிற்கோ பொறுமை பறந்தோடியது. அவளருகே வந்து பளாரென்று அறை விட்டாள் ராதிகாவை..

அவளது அறையில் பதறியவள் படபடவென பேசினாள்.

“ அவ இப்ப டூ மன்த்ஸ் பிரக்னென்ட்டா இருக்கா.  அதை அவன் கிட்ட சொல்லி அழுதுருக்கா. ஆனா அந்த ஷிவா அவளை ரொம்ப கேவலமா பேசி விரட்டி விட்டுட்டான்.‌ அதான் இப்படி தப்பான டிசிஷன் எடுத்திட்டா … ”‌‌ என்றவளுக்குமே ஷிவாவை நினைத்து ஆத்திரமாக வந்தது.

“ம்ம்…சரி அதை நான்‌ பாத்துக்குறேன். முதல்ல ஒரு விஷயத்தை முழுசா சொல்ல கத்துக்கோ… அது.. அது.. வந்து..வந்துன்னு இழுக்காதே… புரிஞ்சுதா.!.இப்ப எங்க இருக்கா…? வந்து தொலை என் கூட “ என அவளை இழுத்துக் கொண்டே சென்றாள் ஆருத்ரா.

வாசுவை  இடித்துக் கொண்டு அவள் செல்ல, அவளது அதிரடியில் சற்றே மிரண்டு போய் நின்றிருந்தான் வாசுதேவன்.

“ஆம்புலன்ஸ்க்கு சொல்லிருக்காங்க…ஆரூ..பவி மயக்கமாயிருக்கா..” என்று கூறி கொண்டே வந்தாள் ராதிகா.

கல்லூரி வளாகத்தில்   சத்தமிட்டுக் கொண்டே வந்து நின்றது  ஆம்புலன்ஸ்.

சக ஆசிரியர்கள் சிலரும் ஆருத்ரா மற்றும்  சில நண்பர்களும் அதில் ஏறிக் கொண்டனர்.

சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தால் அவளது உயிரைக் காப்பாற்ற முடிந்தது . 

எனினும் மாத்திரையின் வீரியத்தினால் அவளது கர்ப்பம் கலைந்து விட்டது. 

அழுது கொண்டே இருந்தவளுக்கு சமாதானம் சொல்லி விட்டு வீட்டிற்கு வந்தாள்.

சோர்வுடன் கண்களை மூடிக்கொண்டு சோஃபாவில் அமர்ந்திருந்தாள் ஆருத்ரா .

“ என்ன ஆச்சு என்னோட குட்டிம்மாக்கு? இவ்வளவு டல்லா இருக்க மாட்டியே டா தங்கம்? உடம்பு ஏதும் சரியில்லை யா?” என் அவளது நெற்றியை தொட்டுபா பார்த்துக் கொண்டே அவளருகே அமர்ந்தார் அவளது தந்தை ராகவன்.

அவரது தோளில் சாய்ந்தவள், “ஒண்ணுமில்ல டாட். இன்னைக்கு காலேஜ்ல ஒரு‌ பொண்ணு தூக்க மாத்திரை சாப்பிட்டுடா. லவ் பெஃயிலியர். அதான் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. அந்த ராஸ்கல் இன்னைக்கு கண்ணுல மாட்டுல. மாட்டுனான் செத்தான் அவன் …” என பல்லைக் கடித்து கொண்டு பேசினாள்.

“ குட்டிம்மா இதுக்கெல்லாம் நீ டென்ஷன் ஆகக்கூடாது டா தங்கம். உன்னோட ஹெல்த் தானே ஸ்பாயில் ஆகும். ஒழுங்கா அப்பா அம்மா பேச்சை கேட்டு அவங்க சொல்றவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் லைஃப் நல்லா இருக்கும். இப்படி தான்தோன்றித்தனமா செய்தா பெத்தவங்களுக்கு தானே கஷ்டம். இவ்வளவு வருஷம் கஷ்டப்பட்டு வளர்த்தவங்களுக்கு தன்னோட பிள்ளைகளுக்கு என்ன செய்யணும்னு தெரியாதா? பெத்தவங்களுக்கு தெரியாம செய்யற எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு தான் கஷ்டமா முடியும்” என்றார்.

ஆருத்ரா தலை மட்டும் நிமிர்த்தி தந்தையை பார்த்தவள், “ ரொம்பவே லெக்சர் எடுக்குறீங்க டாட்…போரிங்”என்று கூறி மீண்டும் அவரது தோளில் தலை சாய்த்தாள்.

அவரோ சிரித்தபடி அவளது தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார்.

“ டாட்…” 

“ ம்ம்..சொல்லு டா..”

“ஒண்ணு சொன்னா கோபப்பட மாட்டீங்களே?” 

“ நீ எதுவும் சொல்லி நான் எப்ப கோபப்பட்டுருக்கேன் தங்கம்.” 

“ ம்ம்…ஒருவேள..நான் யாரைவது காதலிக்குறேன்னு சொன்னா என்ன‌ செய்வீங்க டாட்? அக்சப்ட் பண்ணிப்பீங்களா? மாட்டீங்களா?” என்றாள் அவரது முகத்தை பார்த்து.

“என்ன பேச்சு பேசிட்டு இருக்க‌ ஆருத்ரா? அப்பா கிட்ட இப்படிதான் பேசுவாங்களா?” என்றபடி இருவருக்குமான தேநீர் கோப்பையை கொடுத்தார்  அவளது தாய் பிரேமா.

“ ஏய்…! என் பொண்ணு என் கிட்ட தானே கேட்டா. .நீயேன் தேவையில்லாம ஆஜராகுற. இது அப்பாவுக்கும் பொண்ணுக்கும் நடக்குற கான்வெர்சேஷன். நான் என் பொண்ணுக்கு பதில் சொல்லிக்குறேன். நீ உள்ள போ…” என்றவர் ஆருத்ராவின் புறம் திரும்பி, “ என் பொண்ணு என் பேச்சை கேட்டு நடப்பான்னு  நம்பிக்கை இருக்கு.” என்று கூறி சமாளிக்க பார்த்தார்.

அவளோ விடாமல், “சமாளிக்காதீங்க டேடி..ஒருவேளை எனக்கு ஒருத்தரை பிடிச்சி போய் இவரை தான்‌ கல்யாணம்‌ பண்ணிப்பேன்னு வந்து நின்னா என்ன பண்ணுவீங்க? பதில் சொல்லுங்க” என்றாள் .

அவரோ எழுந்து நின்று கொண்டு, “ போதும் குட்டிம்மா இந்த பேச்சு. நீ அப்பா‌ பொண்ணு… அப்பா சொல்ற பேச்சை தான் கேட்ப. என்னோட பேச்சை மீற மாட்டேன்னு நினைக்குறேன் “ என்று கூறி விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

“ டேடி…. எஸ்கேப் ஆகிட்டீங்கல்ல..பாத்துக்குறேன் . ஹா..ஹா..பயம் வந்துருச்சு உங்களுக்கு…ஹா..ஹா..” என்று கூறி வாய் விட்டு சிரித்தாள்.

இரு நாட்கள் கழிந்திருந்தது.

அக்கல்லூரியின் பிரம்மாண்டமான கலையரங்கத்திற்கு அருகில் ஷிவாவை  போட்டு அடித்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.

“ ஏய் ஆரூ விடுடி…பெரிய இடத்து பையன்‌ டி அவன் ..ஏதாவது பிரச்சினை வந்துடப் போகுது. வர..வர உனக்கு கை நீட்டுற‌ பழக்கம் அதிகமாயிடுச்சு” என்றபடி ராதிகா அவளை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாள்.

அவள் ஒருத்தியால் ஆருத்ராவை சமாளிக்க முடியவில்லை. திமிறிக் கொண்டு போய் அவனை அடித்தாள்‌.

“ ஏன் டா பொறுக்கி நாயே..! எவ்வளவு தைரியம் உனக்கு? அவளை காதலிக்குறேன் சொல்லி ஏமாத்தி கர்ப்பமாக்கிட்டு அவளை பத்தி தப்பு தப்பா பேசிட்டு திரியுற நீ? உன்னை மாதிரி ஆளுங்களை எல்லாம் சும்மா விடக்கூடாது….” என எகிறினாள்.

“ அவ ரொம்ப யோக்கியமான? அவளும் தானே என் கூட ஊர் சுத்தினா. அவளும் ஆசைப்பட்டு தானே என் கூட படுத்தா. எப்பையாவது அவளை நான் காதலிக்கிறேன்னு சொன்னேன்னா? என்ன  நீ பெரிய ரவுடி மாதிரி பேசுற? நீயும் தானே எல்லா ஆம்பிளை பசங்க கூட சுத்திட்டு இரு…” என்பதற்குள் அவனது மூக்கிலிருந்து ரத்தம் கொடகொடவென கொட்டியது. 

கையை உதறியவள் மீண்டும் ஆக்ரோஷமாக பாய்ந்து  அவனை அடிக்கும் முன்பு முரட்டுக் கரம் ஒன்று அவளை பின்னிழுத்துக் கொண்டது.

“ ஏய்…! யார்றா அது..? “என கோபத்துடன் திரும்பி அடிக்க முயன்ற அவளது மற்றொரு கரத்தையும் பிடித்துக் கொண்டான் வாசுதேவன்.

ஆத்திரம் அடங்காமல் நின்றிருந்தவளின் தேகம் நடுங்கிக் கொண்டிருந்தது.

அவளை அணைத்தவாறே நின்றவன், “ ம்ம்ச்..!  ஏன் இவ்வளவு கோபம் ?” என்றான்‌ அமைதியான குரலில்.

அவளது ஆக்ரோஷத்தை அவனது அணைப்பு சற்று தணியச் செய்திருந்தது.

அவனை நிமிர்ந்து பார்த்தவள் தான் அவனது அணைப்பில் இருக்கின்றோம் என்பதை கண்டு கொண்டு அவனை தீயென முறைத்தாள்.

சட்டென்று கைகளை விலக்கிக் கொண்டவன், “ ஐ யம் சாரி…ஏன் இவனைப் போட்டு இப்படி போட்டு அடிக்கிறீங்க? போலீஸ் கேஸாகப் போகுது…விட்டுடுங்க ப்ளீஸ்..!”என்றான்.

“ஏன் சொல்ல மாட்ட…நீயும் ஒரு ஆம்பிளை தானே..அதான் அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுற.”என்றவள் ஷிவாவின் புறம் திரும்பி ,”உன்னை நம்பி ஒரு பொண்ணு வர்றான்னா அவளை எந்த விதத்திலும் கஷ்டப்படாம பாத்துக்கணும் . அவளோட நம்பிக்கையை உடைக்கக்கூடாது. இத்தனை வருஷம் பெத்து வளர்த்தவங்களோட பாசத்துக்கு ஈக்வலா அவ தன்னோட மொத்த காதலையும் உன் கிட்ட தான கொட்டுறா. அதை எப்படி இப்படி கேவலமா பேச முடிஞ்சது? நீ தான் அவளோட வாழ்க்கைன்னு நம்பி தானே உன் கூட வர்றா. அவ்வளவு ஈசியா வேண்டாம்னு சொல்லிட்டு போக எப்படி மனசு வருது?. உன் கூட இன்டிமேட்டா இருந்ததுனால அவ கெட்டவளாகிப் போயிட்டா நீ நல்லவன் ஆகிட்ட அப்படித்தானே..? அவ ப்ராஸ்டிடயூட்ன்னா நீயும் ப்ராஸ்டியூட் தான் டா. உன்னை மாதிரி ஒரு  ஆள் அவளுக்கு தேவையே கிடையாது.  அவளுக்கு  ஏத்த மாதிரி…உன்னை விட பெட்டாரா..அழகா …புரிஞ்சுக்குற லைஃப் பார்டனர்‌ கிடைப்பான்‌ டா. துரோகம் பண்ணுன உன்னையே நினைச்சு உருகிட்டு இருக்க மாட்டா. நீ வேணா பாரு…உன்‌ கண்ணு முன்னாடியே அவ செம்மையா வாழ்வா. ஆனா அவ லைஃப்ல குறுக்க புகுந்து ஏதாவது பண்ணனும்னு நினைச்ச…மவனே…ஜெயில்ல களி தான் திங்கணும்.” என்றவள் அங்கு அழுது கொண்டிருந்த பவித்ராவின் அருகில் சென்று,  “இப்ப சொல்லு பவி இப்படிபட்டவன் அவசியம் உனக்குக் தேவை தானா? வீணா இவனை நினைச்சு உருகுறதை விட்டுட்டு உன் கேரியரை பாரு. எப்படி முன்னேறனும்னு மட்டும் பாரு.. காதல் கத்திரிக்காய் இந்த இழவெல்லாம் வேண்டாம்….என்ன புரியுதா?”என அவளது தோளைப் பிடித்து உலுக்கினாள்‌

“ ம்மா..புரியுது ஆரூ….இனி என்னோட கான்சென்ட்ரேஷன் எல்லாம் படிப்புல மட்டுந்தான் இருக்கும்.” என்றாள் அவளது தோளில் சாய்ந்து கொண்டு.

“தட்ஸ் மை கேர்ள்..” என்று கூறி அவளை தோளோடு அணைத்துக் கொண்டவள் ஷிவாவை பார்த்து , “என்ன லுக்கு?  போடா டேய்…உன்னை மாதிரி எத்தனை பேரை பாத்துருக்கேன். இடத்தை காலி பண்ணு. காத்து வரட்டும்” என்றாள் அலட்சியமாக .

ஆருத்ராவை  வன்மமாக பார்த்தபடியே சென்றான் ஷிவா.

அவன் செல்லும் வரை அமைதியாக இருந்தவள் பின்னர் பவித்ராவை பார்த்து ,“ஏன் தான் நீங்கயெல்லாம் இப்படி‌ இருக்கீங்களோ தெரியலை. உன்னோட காதலை மதிக்காம போனவனுக்காக உயிரை விடும் அளவுக்கு போயிட்ட ல?உன்னோட காதலுக்கு அவன் ‌தகுதியானவனான்னு பாரு. இல்லைன்னா தூக்கி எறிஞ்சிடடு போயிட்டே இரு… சும்மா…அவன் தான் என்னோட உலகம்…என்னோட வீடுன்னு ஃப்ளர்ட்‌ பண்ணிட்டு இருக்காத..சரியா?” என்றாள்.

“ ம்ம்..சரி..” என்றாள்.

ராதிகாவோ,” இவ்வளவு டையலாக் பேசுற நீ என்ன பண்ணப் போறன்னு பாக்கத்தானே போறேன். காதல்ல உருகிக் தவிக்கப்‌ போற பாரேன்…” என்றாள் கேலியாக.

அதுவரை வாயடித்துக் கொண்டிருந்தவள் ராதிகாவின் கூற்றில் அமைதியாக நின்றாள்.

அங்கிருந்த வாசுதேவனுக்கு ஒருவித சுவரஸ்யம் கூடியது அவள் என்ன கூறப் போகின்றாள் என்று.

“என்ன டி அமைதியாகிட்ட? நான் கேட்டதுக்கு உன் கிட்ட பதில் இல்லை ல?” என்றாள் கேலியாக.

“ஒரு வேளை நான் காதலிச்சா…இந்த மாதிரி பொறம்போக்கு, மொள்ளமாறியை காதலிக்கவே மாட்டேன். கண்டிப்பா என்னோட அன்புக்கும் காதலுக்கும் தகுதியானவனை தான்  காதலிப்பேன். அவனுக்கு மட்டும் தான் என்னோட மனசும் உடம்பும். அவனுக்காக மட்டும்தான் என்னோட வாழ்க்கை கடைசி வரை இருக்கும்” இப்படியெல்லாம் சொல்லுவேன்னு நினைச்சியா…ஹா..ஹா..சரிதான் போடான்னு போயிட்டே இருப்பேன்.” என்று ‌கூறி விட்டு நகர்ந்தாள்.

அவளது கேலியான வார்த்தைகள் பலிக்கப் போவதை அறியவில்லை பெண்ணவள்.

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top