அத்தியாயம் 11
அன்று வழக்கம் போல வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள் பிருந்தா.
அவள் வேலைக்கு சென்றே நான்கு நாட்களுக்கு மேல் ஆகி விட்டது.
உடம்பு சரியானாலும் எங்கே வைத்தியசாலைக்கு சென்றால் மீண்டும் அந்த சிம்மனின் முகத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணமே அவளை இன்னும் இரண்டு நாட்கள் வீட்டிலே தங்க வைத்து விட்டது என்றே சொல்லாம்.
அந்த நான்கு நாள் விடுமுறை அவளது காய்ச்சலுக்கு மருந்தாக இருந்ததோ இல்லையோ, சிம்மனிடமிருந்து தப்பிக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
ஆனால், இன்று அவனை எதிர்கொள்ள வேண்டுமே! அந்த நினைப்பே அவளுக்குள் நடுக்கத்தைத் தந்தது.
கண்ணாடியின் முன் நின்று தன் சோர்வான முகத்தைப் பார்த்தவள், ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு மருத்துவமனைக்குக் கிளம்பினாள்.
நர்சிங் ஸ்டேஷனுக்கு சென்று தன் வருகையைப் பதிவு செய்துவிட்டு, வார்டுக்குள் நுழைந்தவள் தன் வேலையை செய்ய ஆரம்பித்து இருந்தாள்.
அதே நேரம் “ஹாய் பிருந்தா… வந்துட்டுட்டியா?” என்று சிரித்த படி கையில் சில கோப்புகளை எடுத்து கொண்டு வந்தாள் ஜானவி.
அவள் குரலில் திரும்பிய பிருந்தா “ம்ம் இப்போ தான் வந்தேன் டி” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.
“என்னடி முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு? இன்னும் பீவர் குறையலையா?” என்று அக்கறையாகக் கேட்டாள் ஜானவி.
“ம்ம் அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் இப்போ நல்லா இருக்கேன்டி. ஐ அம் ஓகே” என்றாள் முகத்தில் புன்னகையுடன்.
ஜானவியும் “இன்னைக்கும் நீ வர மாட்டியோன்னு நெனச்சேன். பட் வந்துட்ட” என்று அவள் பெரு மூச்சு விட,
பிருந்தாவோ அவளை ஒரு மாதிரியாக பார்த்து கொண்டே “ஏன் மேடம் என்னை ரொம்ப மிஸ் பண்ணீங்களோ?” என்று நக்கலாகக் கேட்க,
“பின்ன… இந்த ஹாஸ்பிடல்ல உன்ன தவிர என் கூட நல்லா பேசுறதுக்கு யாரு இருக்கா? பாரு உனக்கு உடம்பு சரியில்லன்னு தெரிஞ்சதும் நாலு நாளா நான் ஒழுங்கா சாப்பிடாம இளச்சி போயிட்டேன்” என்று பாவமாக முகத்தை வைத்து படி சொல்ல,
“ஆமா ஆமா பார்த்தாலே தெரிது. என்னோட சாப்பாடையும் சேர்த்து நீயே சாப்பிட்டு நல்லா குண்டாகி இருக்க!” என்று பொய்யாக அவளை முறைத்த
படி சொல்ல,
ஜானவியும் சிரித்த படி, “அது சரி எதுக்கு நீ செல்போனை ஸ்விச் ஆப் பண்ணி வச்சிருந்த? நான் எத்தனை வாட்டி போன் பண்ணி பார்த்தேன் தெரியுமா?” என்று சொல்ல,
பிருந்தாவோ “அது… இல்ல சார்ஜ் போட மறந்துட்டேன்.” என்றாள் சமாளிப்பாக.
ஆனால் அதற்கான உண்மையான காரணம் அவளுக்கு மட்டுமே தெரிந்தது.
அவ் வேளை அங்கே வந்த கார்த்திகாவின் விழிகளில் ஜானவியோடு பேசிக் கொண்டிருந்த பிருந்தாவே பட்டாள்.
அவளை கண்டவளுக்கோ அன்று ஹோட்டலில் நடந்த நிகழ்வே அவள் மனக் கண்ணில் வந்து போக, அவன் சுட்ட இடமோ இப்போது கூட எரிவது போலவே தோன்றியது.
அவளை முறைத்த படியே, எதையும் கவனிக்காமல் விறுவிறுவென நடந்து வந்த கார்த்திகா, எதிர்பாராத விதமாகத் தரையைத் துடைத்துக் கொண்டு முன்னே வந்த ஒரு துப்புரவுப் பெண் மீது பலமாக மோதி விட்டாள்.
மோதிய வேகத்தில் அந்தப் பெண்ணின் கையில் இருந்த தண்ணீர் வாலி கீழே சரிந்து, தண்ணீரோ வார்டு முழுவதும் சிதறியது.
“ஐயோ… சாரி சிஸ்டர்….. நீங்க வந்ததை கவனிக்கல” என்று அந்தப் பெண் பதறியபடி தண்ணீரைத் துடைக்க முயல, கார்த்திகாவோ ஆவேசத்தின் உச்சத்திற்கே சென்றாள்.
“அறிவில்ல உனக்கு? கண்ண எங்க வச்சிட்டு வர இடியட்?” என்று கத்தியபடியே, அந்தப் பெண்ணின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டாள்.
அவள் போட்ட சத்தத்தில் அங்குள்ள வைத்தியர்கள் முதல் நோயாளிகள் வரை அனைவரும் திடுக்கிட்டு போய் அவர்களை பார்த்தனர்.
சில நர்ஸ்களோ “இவளுக்கு என்னாச்சு இன்னக்கி? இவ்ளோ ஹார்ஷா நடந்துக்குறா?” என்று ஒருவர் காதில் ஒருவர் கிசு கிசுத்துக் கொண்டனர்.
கார்த்திகாவோ “சாரி கேட்டா எல்லாம் சரியாயிடுமா? ஒரு வேலையை ஒழுங்கா செய்யத் துப்பில்லை.. போயும் போயும் உன்னையெல்லாம் வேலைக்கு வச்சிருக்காங்களே!” என்று கத்தியவள் அங்கிருந்து கோபமாக சென்று விட,
அவள் அறைந்த பெண்ணோ கண்ணீருடன் அந்த இடத்தை சுத்தம் செய்தாள்.
“என்னடி ஆச்சு இவங்களுக்கு? சின்ன விஷயத்துக்குப் போய் அந்தப் பொண்ணை இப்படி அடிச்சிட்டுப் போறாங்க? பாவம் அந்த பொண்ணு” என்று அந்த பெண்ணை பார்த்து வருத்தமாக பிருந்தா சொல்ல,
ஜானவியோ “அதான் எனக்கும் புரியல. இதுக்கு முன்னாடி இவங்க இப்படி எல்லாம் நடந்துக்க மாட்டாங்களே! இன்னக்கி என்ன ஆச்சுன்னு தெரியல.” என்றாள் தோள்களை குலுக்கி.
*****
சிம்மனோ ஒரு நோயாளியை பரிசோதித்த படியே, “கொஞ்ச நேரத்துக்கு கூட உங்களால பேஷன்ஸை ஒழுங்கா கவனிச்சிக்க முடியாதா? ஸ்டுபிட்ஸ்… ஒரு எமர்ஜென்சி கூட ஹேண்டில் பண்ணத் தெரியாம எதுக்கு இங்க இருக்கீங்க?” என்று கோபமாக அங்கிருந்த டாக்டர்களையும், தாதிகளையும் கடிந்து கொண்டிருந்தான்.
அங்கிருந்தவர்களோ பயத்தில் வியர்த்து விறு விறுக்க என்ன பதில் சொல்லுவது என புரியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள்.
அதே வேளை அவ்வழியாக சில மருந்துகளை எடுத்து கொண்டு கடந்து சென்ற பிருந்தாவின் செவிகளில் அவன் குரல் விழ,
அவளோ தன் நடையை சற்று தளர்த்திய படி, அந்த திசையை திரும்பிப் பார்த்தாள்.
அங்கே வெள்ளை நிற கோர்ட் அணிந்து அதன் கையை சற்று மடித்து விட்ட படி, முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு ஒரு பைலை புரட்டிய படி நின்று இருந்தான் சிம்மன்.
அவனை சற்று தூரத்தில் இருந்து பார்த்தவளுக்கோ ஏனோ தன்னையும் மீறி அவனை ரசிக்கத் தோன்றியது.
நான்கு நாட்கள் அவனை பார்க்காமல் இருந்ததற்கு மொத்தமாக சேர்த்து இந் நொடி அவனை பார்வையாலேயே வருடிக் கொண்டிருந்தாள் என்றே சொல்லலாம்.
‘கோப படும் கூட செம்மயா இருக்கானே!’ என்று அவள் மனம் நினைத்துக் கொள்ள, அடுத்த நொடி ‘என்ன நாம இப்படி எல்லாம் யோசிக்கிறோம். இவனை போய் நான் சைட் அடிக்கிறேனா’ என்று நொந்து கொண்டாள்.
இங்கே பைலை பார்த்து கொண்டிருந்தவனுக்கோ தன் மீது ஏதோ ஊசி துளைக்கும் பார்வை உணர,
சட்டென தன் விழிகளை நிமிர்ந்து அத் திசையை பார்க்க,
‘ஐயோ’ என்று பதறிய படி சுவற்றுக்கு பின்னால் மறைந்து கொண்டவள்,
‘ஜஸ்டு மிஸ்ஸு. கொஞ்ச நேரத்துல மாட்டி இருப்போம்’ என்று பெரு மூச்சு விட்டவள் அங்கிருந்து அவசரமாக ஓடி விட்டாள்.
சிம்மனும் சுற்றி முற்றி பார்த்தவன் யாரும் இல்லை என்று நினைத்து விட்டு தன் வேலையில் மூழ்கினான்.