Ep 4

அத்தியாயம் 4

கார்த்திகாவோ “எங்க சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஆனா ரொம்ப நல்லவரு. அவரு எல்லாரையும் ஒரே மாதிரி தான் பார்ப்பாரு.” என்று அவனை பற்றி விளக்கம் அளிக்க, 

பிருந்தாவோ அவள் பேசும் எதையும் கேட்கும் நிலையில் இல்லை. 

“ம்ம்” என்று மட்டும் சொல்லிக் கொண்டாள். 

கார்த்திகாவும் அவளை பி வார்டுக்கு அழைத்து வந்தவள், அந்த இடத்தை காட்டிய படி, “இங்க இருக்குற பேஷன்ட்ஸால அவங்கள கவனிச்சுக்க முடியாது. சோ அவங்களுக்கு தேவையான எல்லா ஹெல்ப்பையும் நீங்கதான் செய்யணும்,” என்று கூறிவிட்டு அங்கிருந்த மற்ற நர்ஸ்களிடம் பிருந்தாவை அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றாள். 

பிருந்தாவும் ஒரு முறை அந்த இடத்தை சுற்றிப் பார்த்தாள்.

அந்த அறையில் வீசிய ஒருவிதமான மருந்தின் நெடியும், அங்கிருந்த நோயாளிகளின் முனகல் சத்தமும் அவளது மனதிற்குள் ஒருவிதமான பாரத்தை ஏற்படுத்தியது.

அதே வேளை அங்கிருந்த சீனியர் நர்ஸான ரம்யா அவளை நோக்கி வந்தாள்.

அவளோ கையில் இருந்த நோயாளிப் பட்டியலைப் பார்த்தபடி, “நீங்க தான் புது நர்ஸா?” என்று கேட்க, 

அவளும் ஆம் என்பது போல தலையாட்டினாள். 

ரம்யாவோ “ம்ம்… இங்க இருக்குற பத்து பேருக்கும் இன்னைக்கு ஸ்பாஞ்ச் பாத் கொடுக்கணும். முதல்ல அந்தப் பத்தாவது பெட்ல இருக்குற பேஷன்ட்டுக்கு டயப்பரை சேஞ்ச் பண்ணிட்டு, படுக்கையையும் கிளீன் பண்ணிடுங்க” என்று கறாராகச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

பிருந்தாவும் தன் கையில் உறைகளை மாட்டிக் கொண்டு, முகத்தில் முக கவசத்தை அணிந்தவள், அந்தப் பத்தாவது படுக்கையை நோக்கி சென்றாள். 

அங்கு இருந்த முதியவர் சுயநினைவின்றி இருக்க, அவரது படுக்கையைப் பார்த்தவளுக்கோ ஒரு மாதிரியாக இருந்தது. 

அசுத்தமும், மருந்தின் நெடியும் கலந்த ஒரு மணம் அவளது நாசியைத் துளைத்தெடுத்தது. 

மெதுவாக அருகில் சென்று அவற்றைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள். 

பயிற்சி காலத்தில் இந்த வேலைகளை அவள் எற்கனவே செய்திருந்தாலும் இன்று ஏனோ அவளுக்கு இது கொஞ்சம் சவாலானதாகவே இருந்தது. 

அதே வேளை அங்கிருந்த சில செவிலியர்கள் அவளை பற்றி பேசிக் கொண்டு செல்வது அவள் செவிகளில் நன்றாக விழுந்தது. 

“இந்த பொண்ணு யாரு புதுசா இருக்கா?” என்று ஒருத்தி கேட்க, 

மற்றவளோ, “உனக்கு தெரியாதுல இவ நம்ம டீனோட பொண்ணாம். சிம்மன் சார் கிட்ட ட்ரைனிங்  வந்து இருக்கா” என்றாள். 

“அவர் கிட்டயா?” என்று சற்று ஆச்சர்யமாக கேட்க, 

மற்றவளோ “ம்ம். இன்னக்கி தான் ஜாயின் பண்ணி இருக்கா. வந்த முதல் நாளே இங்க அனுப்பி விட்டுட்டாரு. அவளை பார்த்தாலே பாவமா இருக்கு.” என்று சொல்லி சிரிக்க, 

மற்றவளும் சிரித்த படி, “இப்போவே பாதி டயடாயிட்ட மாதிரி இருக்கு. இவ எவ்ளோ நேரம் தாங்குவான்னு தான் தெரில.” என்க, 

“டீன் பொண்ணுங்குறதால வேலை பார்க்காம ஜாலியா இருக்கலாம்னு நினைச்சி வந்திருப்பா. ஆனா நம்ம சார் கிட்ட அதெல்லாம் செல்லுபடியாகுமா?” என்றாள். 

“சரி சரி வா போலாம். அவ காதுல கேட்டுட போகுது” என்று சொன்ன படி அவர்கள் இருவரும் அங்கிருந்து நகர்ந்து விட, 

பிருந்தாவுக்கோ அவர்கள் கூறியதை கேட்டு கண்கள் கரித்து கொண்டு வந்தது. 

அவள் ஒரு போதுமே தந்தையின் செல்வாக்கை பயன் படுத்தி வாழ நினைப்பவள் அல்ல. 

அவளுக்கிருந்த திறமை தான் அவளை இந்த அளவுக்கு கொண்டு வந்திருந்தது. 

ஆனால் பார்க்கும் அனைவருமே அவள் ஏதோ தந்தையின் சிபாரிசில் தான் இந்த அளவுக்கு வந்து இருக்கிறாள் என்று நினைத்தார்களே தவிர, அவளது திறமை யார் கண்ணுக்குமே தெரியவில்லை. 

கண்களை துடைத்த படி, மீண்டும் வேலையை பார்க்கத் துவங்கினாள். 

மூன்று மணித்தியாலங்கள் கழிந்திருந்தது.

அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு இறுதியாக ஒரு பெரியவரின் படுக்கையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.

இவ்வளவு நேரமும் ஓயாமல் வேலை செய்ததால் அவள் உடலோ மொத்தமாக சோர்ந்து போயிருந்தது. 

ஒரு வழியாக அனைத்து வேலையையும் முடித்து விட்டு ரம்யாவிடம் வந்தவள், “சிஸ்டர் நீங்க சொன்ன எல்லா வேலையையும் முடிச்சிட்டேன்,” என்றாள் களைப்பான குரலில்.

ரம்யாவும், “ஓகே பிருந்தா. அங்க இருக்குற ஃபைல்ஸ் எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு நீங்க கிளம்புங்க” என்று சொல்ல, அவளும் சரி என கூறி விட்டு அவற்றை அடுக்கி வைத்து கொண்டிருந்தாள்.

சரியாக அதே நேரம், ரவுண்ட்ஸ் சென்று கொண்டிருந்த சிம்மனும் அங்கு வந்திருந்தான்.

அவனை கண்ட நர்ஸ்கள் “சார் வந்துட்டாரு.” என்ற படி, அவசரமாக தத் தமது வேலைகளை பார்க்க, 

உள்ளே வந்த சிம்மனின் விழிகளோ அங்கே சோர்வாக நின்று கோப்புகளை அடுக்கி கொண்டிருந்த பிருந்தாவின் மீது தான் படிந்தது. 

அவள் முகத்தை பார்க்கும் போதே அவள் எந்த அளவுக்கு களைத்து போயிருக்கிறாள் என்று நன்றாகவே புரிந்தது. 

பிருந்தாவோ தன் வேலையில் மும்முரமாக இருக்க, அவன் வந்ததை கவனிக்கவில்லை போலும்.

“வேலை எல்லாம் முடிஞ்சதா?” என்ற குரலில் சட்டென திரும்பினாள் பாவை.

அங்கே சிம்மன் தான் பாக்கேட்டில் கையை போட்ட படி, அவளை பார்த்து கொண்டு நின்றிருந்தான். 

அவளோ தன் பதட்டத்தை மறைத்த படி, “முடிச்சிட்டேன் சார்,” என்றாள் மெல்லிய குரலில்.

“குட்” என்றவனோ, தன் பக்கத்தில் நின்றிருந்த கார்த்திகாவிடம் திரும்பி, “இந்த பைல் எல்லாம் பிருந்தா கிட்ட கொடு” என்றான். 

அவளும் புரியாமல் பார்த்தவள், அந்த கோப்புகளை பிருந்தாவிடம் நீட்டினாள்.

சிம்மனோ ஆழ்ந்த மூச்சு ஒன்றை விட்ட படி, “மிஸ் பிருந்தா இந்த ஃபைல்ல இருக்குற பத்து பேருக்கும் நாளைக்குத் தேவையான மெடிகேஷன் சார்ட்டை இப்போவே அப்டேட் பண்ணிடுங்க. இன்னும் அரை மணி நேரத்துல இது எனக்கு வேணும்” என்று சாதாரணமாக சொல்லி விட்டு அங்கிருந்து நோயாளிகளை பார்க்க செல்ல, 

அவளோ அதிர்ந்து போய் தான் நின்றிருந்தாள். 

ஏற்கனவே மூன்று மணி நேரமாக நின்றுகொண்டே வேலை செய்ததில் அவளது கால்கள் இரண்டும் கடுக்கத் தொடங்கியிருந்தன. இப்போது மீண்டும் அரை மணி நேரத்திற்குள் ஒரு புதிய வேலையைச் செய்ய சொல்லிவிட்டுச் போகிறானே இவனுக்கெல்லாம் மனசாட்சி இருக்கிறதா என்று தான் எண்ணினாள். 

கார்த்திகாவுக்கோ அவளை பார்க்கவே பாவமாக இருந்தது. 

சிம்மனிடம் வந்தவள், “சார் அந்த பொண்ணு பாவம். ரொம்ப நேரமா ரெஸ்ட் எடுக்காம வேலை பார்த்துட்டு இருக்கா. அதுக்குள்ள நீங்க அடுத்த வேலையை….” என்று அவள் முடிக்க முன்னரே, 

“வில் யூ ஷட் அப்” என்று கோபமாக கர்ஜித்தான் சிம்மன். 

கார்த்திகாவோ அவன் குரலில் பயந்து போய் பின்னால் சென்று விட, அவன் கத்தியது அங்குள்ள அனைவரையுமே ஒரு நொடி அதிர்ச்சி அடையவே வைத்தது. 

அவனோ அவளை அனலாக முறைத்தவன், “ஹவ் டேர் யூ? நான் என்ன பண்ணனும்னு நீ எனக்கு ஆர்டர் போடுறியா?” என்று அவன் கோபமாக கேட்க, 

அவளோ “நோ… சார் ந… நான் அப்படி சொல்ல வரல… அது… ” என்று பயத்தில் நடுங்கிய படி அவள் திணற,

சிம்மனோ “லிசன் கார்த்திகா! இது ஹாஸ்பிட்டல். இங்க வொர்க் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் ரொம்ப இம்போர்ட்டண்ட். அவங்க அப்பா அவளை ஒரு நல்ல நர்ஸா மாத்தச் சொல்லி என்கிட்ட ஒப்படைச்சிருக்காரு. அந்தப் பொறுப்பு எனக்கிருக்கு. ஒரு நர்ஸ்க்குப் பொறுமையை விட வேகம்தான் ரொம்ப முக்கியம். அந்த வேகம் வரணும்னா இதெல்லாம் பண்ணி தான் ஆகணும். இது அவளுக்குக் கஷ்டமா தெரிஞ்சா, ஐ டோன்ட் கேர்.” என்று பெருங் குரலில் சொன்னவன், 

“இதுக்கப்புறம் மத்தவங்களுக்காக வக்காலத்து வாங்கிட்டு என் கிட்ட வராத. புரிஞ்சிதா?” என்று கோபமாக கத்தி விட்டு அங்கிருந்து செல்ல, 

கார்த்திகாவோ சிலை போல அதே இடத்தில் உறைந்து போய் நின்றிருந்தாள்.

அங்கிருந்த அனைவரும் அவளை பாவமாக பார்க்க, 

பிருந்தாவுக்கோ கார்த்திகா அவளுக்காகப் பேசப் போய் இப்படி அனைவர் முன்னிலையிலும் திட்டு வாங்கியது வருத்தமாக இருந்தது. 

‘சரியான ஹிட்லர் இவன்’ என்று வாய்க்குள் அவனை திட்டியவள், 

கார்த்திகாவின் தோள்களை பற்றி, “நீங்க எதுக்காக சிஸ்டர் எனக்காக அவர் கிட்ட திட்டு வாங்குறீங்க? தயவு செஞ்சு மறுபடியும் இப்படி எல்லாம் பண்ணாதீங்க. என்னோட வேலைய என்னால பார்த்துக்க முடியும்” என்று சொன்னவள், அவன் கொடுத்த வேலையை செய்யத் துவங்கினாள்.

என்ன தான் அவள் அந்த வேலையை அரை மணித்தியாலத்துக்குள் செய்து முடிக்க நினைத்தாலும், அது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை.

ஒரு மணித்தியாலத்துக்கு மேல் ஆகி இருந்தது. 

ஒரு வழியாக அவன் சொன்ன வேலையை முடித்தவள், அதை எடுத்து கொண்டு அவசரமாக அவனது கேபினுக்கு ஓடினாள்.

அவள் அனுமதி கேட்டுக் கொண்டு உள்ளே நுழைய, அவனோ யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.

அவளை கண்டவன் விழிகளாலேயே உள்ளே வரும் படி செய்கை காட்ட, அவளும் அவனருகில் வந்தவள், அந்த பைலை அவன் மேசையில் வைத்தாள்.

அவனும் போனில் பேசிய படியே அதை எடுத்து புரட்டிக் கொண்டிருக்க, 

பிருந்தாவின் விழிகளோ அவன் முகத்தை தான் ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தது. 

இப்போது தான் அவனை நன்றாக கவனித்தாள். 

தடித்த புருவங்கள், கூர்மையான விழிகள், செப்பமாக சேதுக்கப்பட்ட இதழ்கள், ட்ரிம் செய்த தாடி, மீசை என்று பார்க்க ஏதோ சினிமா நடிகன் போல இருந்தான் அவன். 

அவளையும் மீறி பெண்ணவளின் பார்வை ஆடவனின் மீது ரசனையாக படிய, 

“என்ன சைட் அடிக்கிறியா?” என்ற குரலில் சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள். 

அவனது பார்வையோ அவள் மீது நக்கலாக படிந்திருக்க, புருவத்தை ஏற்றி இறக்கி என்ன என்பது போல கேட்டான். 

‘ஐயய்யோ இவன் எப்போ நம்மள பார்த்தான்?’ என்று மனதுக்குள் நொந்த படியே, “நோ சார்…. அது… வந்து… நீங்க கேட்ட பைல் ரெடி பண்ணிட்டேன்” என்று சமாளிப்பாக சொன்னவளுக்கு  ஐயோடா என்ற உணர்வு தான். 

அவளின் தடுமாற்றத்தை கண்டு உள்ளுக்குள்ளேயே ரசித்துக் கொண்டவன் முகமோ வெளியில் என்னவோ கடு கடுவென்று தான் இருந்தது. 

அவன் எப்போதுமே உணர்வுகளை அவ்வளவு இலகுவில் வெளிக் காட்ட மாட்டான். 

பைலை பார்த்த படியே, “ஏன் இவ்ளோ லேட்?” என்று மீண்டும் வேலையில் குறியாகி விட, 

அவளோ தலை குனிந்த படி, “சார்… அது….பத்து பேஷன்ட்ஸோட டீடைல்ஸையும் சரியா செக் பண்ணிட்டு வரதுக்கு கொஞ்சம் டைம் எடுத்தது. அதான்…” என்று இழுக்க,

அவனோ அவளை முறைத்த படி, “எனக்கு டைமிங்குறது ரொம்ப முக்கியம். இதுக்கப்புறம் இந்த மாதிரி சில்லி ரீசன் எல்லாம் என் கிட்ட சொல்ல கூடாது. புரிஞ்சிதா?” என்று அதட்டலாக கேட்க, 

அவளும் ஆம் என்பது போல தலையாட்டினாள். 

சிம்மனும், “திஸ் ஈஸ் யுவர் பஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்” என்று கூறியே அவளை அனுப்பி இருந்தான்.

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top