கன்னத்தை பிடித்து கொண்டு கண்கள் கலங்க நின்றிருந்தாள் ஆருத்ரா.
“ ச்சீ…பொண்ணாடி நீ..? பைத்தியம்தான் புடிச்சிருக்கு உனக்கு. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு . ஏன் டி புரிஞ்சிக்க மாட்டேங்குற..? என்னென்ன பேச்சு பேசிட்டு இருக்குற..? என் வாழ்க்கை இனி என்னோட பொண்டாட்டியோட தான். ஒரு காலத்துல உன்னை விரும்பினேன் அது சந்தர்ப்ப சூழ்நிலையால கை கூடல. நீயும் எல்லாத்தையும் மறந்துட்டு வேற வாழ்க்கையை வாழப் பாரு. என்னை விட்டுடு. நல்லவிதமா சொல்றேன் ஆரு. ப்ளீஸ்…! உனக்குன்னு ஒருநல்ல வாழ்க்கை அமையும். உனக்கான வன் நானில்லை.” என்றான் கெஞ்சுதலாக.
அவனது வார்த்தைகள் அவளது நெஞ்சில் ஊசியாய் இறங்கியநு உண்மை தான்.
ஆனால் அதனை அழகாக மறைத்துக் கொண்டு நொடியில் தன்னை சமன் செய்து கொண்டாள்.
அவளை அடித்து திட்டி விட்டவனுக்கு மனது கேட்கவில்லை. அவளை அடித்த தனது கரத்தினை ஒரு முறை மூடித் திறந்தவன் தனது அவசர புத்தியை எண்ணி மானசீகமாக தலையிலடித்துக் கொண்டான்.
அவளது அல்லை மீறிய பேச்சு அவனது நிதானத்தை சோதித்து விட்டது.
அவளை கை நீட்டி அடித்த விட்ட குற்றவுணர்வுடன் பார்த்தவன், “ஐ…ஐ..யம்…ரியலி…சா…” என ஆரம்பித்தவனை கையமர்த்தினாள் ஆருத்ரா.
அவனைப் பார்த்து எள்ளலாக சிரித்தவள், “ என்னைத் தொட மாட்டேன்னு சொன்னீங்க வாசு. ஆனா பாருங்க.. என்னோட கன்னத்தை தொட்டு தான் நீங்க அடிச்சிருக்கீங்க..அப்பறம் ஆருன்னு வேற செல்லமா கூப்ட்ருக்கீங்க. சீக்கிரம் உங்க மனசு மாறும்ன்னு நம்பிக்கை இருக்கு எனக்கு..” எனக் கூறியவள் தனது இருக்கைக்கு சென்று அவனை பார்த்தபடியே கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.
அவளது பேச்சில் மறைந்திருந்த கோபம் மீண்டும் தலையெடுக்க, “ச்சை..! “என தனது தொடையில் குத்தியவன் அவளை முறைத்து பார்த்து விட்டு கதவை திறந்து கொண்டு வெளியேறினான்.
சுழலும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவன் சென்ற திசையை பார்த்தபடி சுழன்றுக் கொண்டே விரலிலிருந்த மோதிரத்தை கழட்டி கழட்டி மாட்டிக் கொண்டிருந்தாள்.
அதனை எடுத்துப் பார்த்தவளின் மனதில் அதனை அவள் விரலில் அணிவித்த போது அவளது தேவ்வின் முகத்தில் தெரிந்த அளவில்லா காதல் தான் கண்முன்னே வந்து போனது.
அவனுடன் கழித்த ஒவ்வொரு நொடியும் அவளுக்கு விலைமதிப்பில்லாதது தான்.
அவனது ஒவ்வொரு வார்த்தையையுமே பொக்கிஷமாக சேர்த்து வைத்திருந்தாள் அந்த காதல் பைத்தியகாரி.
தனது இருக்கையில் வந்தமர்ந்தவன் தலையை பிடித்து கொண்டான்.
எப்பாடு பட்டாவது வேறு வேலையை தேடி விட வேண்டும் என்று நினைத்தவன் தனது நண்பனுக்கு அழைத்து வேறு இடத்தில் வேலை ஏதாவது இருந்தால் தன்னிடம் தெரிவிக்குமாறு கூறினான்.
“ எங்க கம்பெனிலயே இம்மீடியட் ஓப்பனிங் இருக்குடா. நீ இன்னைக்கே வந்து இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணு. உனக்கு எக்ஸ்பீரியன்ஸூம் இருக்கு . நிச்சயமா நல்ல சேலரியோட இந்த வேலை கிடைக்கும் டா…” என்று நம்பிக்கையூட்டும் விதமாக கூறினான்.
அதனைக் கேட்டு சற்று தெளிந்தவன் மேலும் சில விபரங்களை கேட்டுவிட்டு அலைப்பேசியை வைத்தான்.
நேரத்தை பார்த்தான். நேரம் மதிய உணவு இடைவேளையை நெருங்கிக் கொண்டிருந்தது. ஏதாவது சாக்கு சொல்லி தான் கிளம்ப வேண்டும் என நினைத்தவனுக்கு மகளின் மாணவர் பெற்றோர் சந்திப்பு இன்றுதான் என நினைவுக்கு வந்தது.
அரை நாள் விடுப்பு சொல்லிட்டு கிளம்பலாம் என்று நினைத்தவன் ஆருத்ராவின் அறைக்குள் அனுமதி கேட்டு நுழைந்தான்.
முக்கிய கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தவள் அவனை அமரச் சொல்லாமலும் என்ன விஷயம் என்று கேட்காமலும் அலட்சியமாக அமர்ந்திருந்தாள்.
அவனும் “ எக்ஸ்கியூஸ் மீ மேடம்…” என மூன்று முறை அழைத்துப் பார்த்துவிட்டான்.
அவளோ அவனை சிறிதும் மதியாமல் கோப்புகளிலேயே பார்வையை பதித்திருந்தாள்.
பொறுத்து பொறுத்து பார்த்தவன் இரு கைகளையும் மேசையின் மீது ஊன்றி முகத்தை அவளருகே கொண்டு சென்று , “மேடம்….!” என்றான் சற்று அழுத்தமாகவே.
அவளோ சாவகாசமாக கோப்பினை மேசை மீது வைத்து விட்டு இருக்கையை முன்னிழுத்து அவன் முகத்துருகே தன் முகத்தை கொண்டு வந்து, “சொல்லுங்க வாசுதேவன்….” என்றாள் .
அவளது முகத்தை கூர்ந்து பார்த்ததில் சற்று நேரத்திற்கு முன்பு தான் அவளை நீட்டி அடித்த ஐவிரல் தடம் பதிந்திருந்ததை பார்க்க முடிந்தது.
சட்டென்று அப்பொழுது தான் அவனுக்கு செய்த காரியத்தின் வீரியம் புரிந்தது.
வீட்டிலிருந்து கிளம்பும் போதே நிம்மதியற்ற மனநிலையில் கிளம்பியவனுக்கு தான் அவளை அடித்து விட்டுமன்னிப்பு கூட கேட்காமல் சென்றது நினைவுக்கு வந்தது.
ஆனால் அவளோ அவன் அடித்ததில் சிறிதும் வருத்தம் கொள்ளாமல் எப்போதும் போலவே அலட்சிய பார்வை ஒன்றை வீசினாள்.
கன்னத்தில் படிந்திருக்கும் வரிவரியான சிவப்பு தடத்தை சரி செய்ய வேண்டும் என்ற நினைப்பு கூட இல்லாமல் சாதாரணமாகவே இருந்தாள்.
அவனுக்குத்தான் ஒரு மாதிரியாக ஆகி விட்டது.
“சாரி…மேடம். உங்களை கை நீட்டி அடிச்சிருக்கக் கூடாது. அவசரப்பட்டுட்டேன். மன்னிச்சிடுங்க.” என்றான் உண்மையான வருத்தத்துடன்.
அவனைப் பற்றி ஆதி முதல் அந்தம் வரை அறிந்திருப்பவள் அல்லவா..? சிறிது கூட ஆண் என்கிற அகம்பாவம் இல்லாத மனிதன் அவன்.
செய்த செயலுக்கான வருத்தம் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அதனை குறித்துக் கொண்டதவளுக்கு மனம் பாரமாகிப் போனது.
உடனே அதை தள்ளி வைத்துவிட்டு பழையபடி அலட்சிய பாவத்துடனே, “ சாரி ரொம்ப சீக்கிரமாவே சொல்லிட்டீங்க…நான் தான் முதலாளிங்கற கொஞ்சமாவது பயம் இருக்கா உங்களுக்கு?. என்னவோ கட்டின பொண்டாட்டிய கை நீட்டி அடிக்குற மாதிரி அடிக்குறீங்க…! இதுவே வேற யாராவது என்னைத் தொட்டிருந்தா இந்நேரம் ஜெயிலுக்கு போயிருப்பாங்க. இனியாவது கேர் ஃபுல்லா இருங்க…”என்று கூறியவள் , “வேற ஒண்ணும் இல்லைன்னா நீங்க கிளம்பலாம்…”என்றாள் கணினியில் ஏதோ தட்டச்சு செய்தபடியே.
“ மேடம் எனக்கு ஒரு ஹாஃப் டே பர்மிஷன் வேணும்..” என்றான்.
அவளோ அவனை இன்னும் அலட்சியமாக பார்த்தபடி நாற்காலியில் சுழன்றவள், “ ஓ….அதுக்குத்தான் உடனே ஓடி வந்து சாரி சொல்லணும்னு தோணிச்சா…நான் கூட உண்மையிலேயே நீங்க பண்ணுற தப்பை உணர்ந்து தான் என் கிட்ட வந்து சாரி சொல்லுறீங்கன்னு நான் கூட தப்பா நினைச்சிட்டேன்…” என்றவளின் ஆழ்மனம், ‘ அவன் கள்ளம் கபடமற்றவன் என்பது உன் உள்ளத்திற்கு நன்கு தெரியும். எனவே அவனைப் பற்றி அபாண்டமாக பேசாதே…!’ எனக் கூக்குரலிடத்தை பொருட்படுத்தாமல் அவனை வார்த்தைகளால் அடித்தாள்.
உணர்வுகள் உள்ளே ஆர்ப்பரித்த போதும் அதனை ஒதுக்கி வைத்து விட்டு, “ என் பொண்ணுக்கு பேரெண்ட்ஸ் மீட்டிங். அதுக்குத்தான் மேடம் பர்மிஷன் .” என்றான் நிதானமாக.
ஆனால் வேறு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வுக்கு செல்வதை அவளிடம் கூறவில்லை.
நிச்சயமாக அவளுக்கு தெரிந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. தெரிந்தால் பார்த்துக் கொள்ளலாம் என தப்புக்கணக்கு போட்டுவிட்டான் வாசு.
ஆனால் ஆருத்ராவிற்கோ அவனை நினைத்து சற்று ஆச்சர்யமாகத் தான் இருந்தது.
அன்று போல் இன்னும் எத்தகைய கடினமான சூழ்நிலையிலும் நிதானத்தை இழக்காமல் பேசுவது புருவத்தை உயர வைத்தது.
அதற்கு மேல் அவனை சீண்டாமல் “ம்ம்…சரி…” என்பதோடு முடித்துக் கொண்டாள்.
ஒரு பெருமூச்சுடன் வெளியே வந்தவன் தனது சுயவிவர குறிப்பினை கணனியில் இருந்து நகலெடுத்துக் கொண்டு நண்பனின் அலுவலகத்திற்கு விரைந்தான்.
உடனடியாக அவர்களது நிறுவனத்தின் தலைமை கணக்காளார் பதவிக்குத் தகுதியான ஆள் தேவைப்பட்டதால் அன்றே வந்து நேர்முகத் தேர்வை எதிர் கொள்ளும் படி கூறிவிட்டான் அவனது நண்பன்.
வாசுவிற்கு ஆருத்ரா தன்னை நெருங்கி வருவது சரியானதாகப் படவில்லை . அவளை விட்டு தள்ளிப் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது.
அவன் மட்டும் நினைத்து விட்டால் போதுமா? அவள் நினைக்க வேண்டுமே?
அவன் விலக விலக அவள் நெருங்கிக் கொண்டால்லவா இருக்கின்றாள்.
மேலும் அவள் வேண்டும்ன்றே மூன்றாண்டுகளாக ஊதிய உயர்வும் அளிக்கவில்லை பதவி உயர்வும் அளிக்கவில்லை. அவனுக்கோ ஊதியம் சற்று அதிகமாக வந்தால் நன்றாக இருக்கும் என்ற நிலை.
ஆனால் ஆருத்ராவோ அவனது முன்னேற்றத்திற்கு உண்டான பாதையை அனைத்தையும் அடைத்து வைத்து கிட்டத்தட்ட நிராயுதபாணியாக நிற்க வைத்திருந்தாள்.
நேர்முகத் தேர்வை நன்றாக முடித்துவிட்டு வெளியே வந்தான்.
“ ரொம்ப நல்லா இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணுன மச்சான். கண்டிப்பா இந்த வேலை உனக்குத்தான். நாளைக்கு எப்படியும் உனக்கு ஹெச் ஆர் கிட்டயிருந்து கால் வந்துடும். எல்லா டாக்குமெண்ட்டும் ரெடியா வச்சிக்கோ..” என்றவன் வாசுவை லேசாக அணைத்து விடுவித்தான்.
வாசுவின் மனம் சற்றே தெளிவடைந்தது. நிறைவான மனநிலையுடன் அனுவின் பள்ளிக்குச் சென்று பெற்றோர் மற்றும் ஆசிரியர் கலந்துரையாடலில் கலந்து கொண்டான்.
அன்று இரவு அனு உறங்கிய பிறகு மெல்ல எழுந்து சந்தியாவினருகே வந்து அமர்ந்தான்.
“சந்தியா..! தூங்கிட்டியா…?”
பதில் கூறாமல் கண்களை மட்டும் மூடிக்கொண்டு படுத்திருந்தாள்.
அவளது தோளை மெல்லத் தொட்டான்.
அவளோ எரிச்சலுடன், “ தள்ளிப் போங்க முதல்ல .எனக்கே உடம்பெல்லாம் வலிக்குது. இதுல இது ஒண்ணு தான் குறைச்சல். அடிக்கறதை அடிச்சிட்டு இப்ப ராத்திரிக்கு மட்டும் நான் வேணுமா.? ஏன் தான் எல்லா ஆம்பளைங்களும் இப்படி இருக்கீங்களோ? தள்ளி போங்க பேசாம. ஏதாவது சொல்லிடப்போறேன்…”என்றவள் ஃபோனில் ரீல்ஸ் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
“சந்தியா…நாம கொஞ்சம் மனசு விட்டு பேசலாமா..?”
ஃபோனை நோண்டிக் கொண்டே, “எதைப் பத்தி…?” என்றாள் எரிச்சலுடன்.
அவளது எரிச்சலை பொருட்படுத்தாமல் , “ நம்ம எதிர்காலத்தை பத்தி…நம்ம குழந்தையை பத்தி…காலையிலயும் உன் கூட பேச நேரம் கிடைக்க மாட்டேங்குது. நைட்டும் நீ வரலேட்டாகிடுது. சனி ,ஞாயிறும் நீ உங்க அம்மா வீட்டுக்கு போயிடற. உங்கூட பேச முடியறதில்லை. இப்படியே எந்நேரமும் நாம சண்டை போட்டுட்டே இருந்தா குழந்தை தான் ரொம்பவே பாதிக்கப்படுவா. அவளுக்காகவாவது நம்ம ரெண்டு பேரும் சண்டை போடாம இருப்போம் மா…” என்றான் அவளது தோளைத் தொட்டு.
அவனது கையை வெடுக்கென்று தட்டி விட்டவள், “ நீங்க சமாதானம் பேச வந்த மாதிரியே தெரியலையே? இப்ப கூட நாந்தான் எப்பப் பாரு உங்க கிட்ட சண்டை போட்டுட்டே இருக்கேன்ங்குற மாதிரி பேசுறீங்க.? நா எங்க அம்மா அப்பா வீட்டுக்கு அடிக்கடி போறேன்னு குத்திக் காமிக்கிறீங்களா? வாரத்துல ஆறு நாளும் உழைச்சிட்டு ஒரே ஒரு நாள் எங்கம்மா வீட்டுக்கு போறேன். அது பொறுக்கலையா உங்களுக்கு.? உங்களோட ஆம்பிளை திமிரை காட்டுறீங்களா? உங்களுக்கு தான் என் மேல எப்பவும் அக்கறை இருந்ததேயில்லையே. உங்க மனசுல உங்க முன்னாள் காதலி தான் இருப்பா. என் மேல ஆசை இருந்திருந்தா இந்நேரம் எப்பாடு பட்டாவது என்னைய தங்கத்தாலும் வைத்தாலும் இழைச்சிருப்பீங்களே….! உங்க மனசு பூராவும் உங்க முன்னாள் காதலி தான் இருக்கா. அதுனால தான் ‘இவளுக்கெல்லாம் இது போதும்ன்னு’ நினைச்சிட்டீங்க. ம்ம்…என் தலையெழுத்து உங்க கூட இன்னும் எத்தனை வருஷம் இப்படியே கஷ்டப்பட்டுட்டே குப்பை கொட்டணும்ன்னு தெரியலை…போய் படுங்க. பெரிய ஐ.நா வில் இருந்து சமாதானம் பண்ண வந்துட்டார். எதிர்காலம்….குழந்தை…குட்டின்னு..” என எரிந்து விழுந்து விட்டு போர்வையை போர்த்தி கொண்டாள்.
அவனோ அவளை அடித்து விட்டதற்காக உண்மையிலேயே மனம் வருந்தி தான் சமாதானம் செய்ய வந்தான்.
அவளோ அவளோ பணம் நகை என்று ஏதேதோ பேசி அவனை வாயடைக்க வைத்து விட்டாள்.
நிம்மதி என்பது பணத்திலோ தங்கத்திலோ இல்லை. பரஸ்பர அன்பிலும் புரிதலிலும் தான் உள்ளது என்பது சந்தியாவிற்கு புரியவில்லையா? அல்லது புரியாதது போல் நடிக்கின்றாளா.?என் குழம்பி தான் போனான் வாசு.
திருமணமானதிலிருந்து இருவரிடையே தாம்பத்தியம் என்பது விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே இருந்தது.
சந்தியாவை எப்போதுமே அவன் இரவில் தொந்திரவு செய்தது கிடையாது.
அதே சமயம் அவளை விட்டு விலகியதும் இல்லை. மனைவியாக அவளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையையும் அன்பையும் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றான்.
ஆனால் எங்கோ எதுவோ பிழையாகிப் போனது அவனது வாழ்க்கையில்.