மறுநாள் விடியல் மெல்லிய சூரிய வெளிச்சத்துடன் விடிந்தது.
முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வேலைகளை செய்து கொண்டிருந்தாள் சந்தியா.
“ உங்கம்மா எழுந்துட்டாங்க போல. போய் காஃபி போட்டுக் கொடுங்க. இல்லன்னா அப்படியே என்னை பரிதாபமா பாத்துட்டு இருப்பாங்க. என்னவோ நான் அவங்களுக்கு சாப்பாடே கொடுக்காம கொடுமை படுத்துற மாதிரி… பாத்திரத்தை தேய்ச்சு வச்சிடுங்க. இன்னைக்கு நான் சீக்கிரம் கிளம்பணும். மதியத்துக்கு சமைக்கல. காலையில டிபன் மட்டும் தான் பண்ணிருக்கேன்.” என்றாள் அவசரமாக கிளம்பியபடியே.
“ அப்ப மதியம் அனுவுக்கு..?” என்றான்.
“ அது எனக்குத் தெரியாது. நீங்க ஆபிஸ்ல இருந்து வந்து ஏதாவது வாங்கி அவ ஸ்கூல்ல கொடுத்துவிட்டு போங்க. நான் வெளியே சாப்ட்டுக்குறேன்..” என்றாள் உதட்டுச்சாயம் பூசியபடியே.
“முன்னாடியே சொல்லிருக்கலாம்ல காலையில சீக்கிரம் எழுந்து நானே சமைச்சு வச்சிருப்பேன்..? நானும் ஆபிஸ் கிளம்பணும் சந்தியா. என்னோட நிலைமையை கொஞ்சம் கூட யோசிக்காம பேசிட்டு இருக்க. மதியம் எப்படி நான் அவ்வளோ தூரத்துல இருந்து வந்து அனுவுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க முடியும்..?”என்றான் காட்டமாக.
“ இப்ப என்ன உங்களுக்கு..?நான் சீக்கிரம் ஆஃபிஸ் கிளம்பக் கூடாது? உங்க எல்லாருக்கும் வடிச்சி கொட்டிட்டு கிளம்பணும். அவ்வளவு தானே? இவ்வளவு பேசுறீங்களே நீங்க ஒரு நாள் ஆஃபிஸ்க்கு லீவ் போட வேண்டியது தானே..? அதென்ன எப்ப பாரு பொம்பளைங்க நாங்களே எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் பண்ணணுமா..?” என எரிச்சலுடன் பேசினாள்.
வாசு தனது நெற்றியை நீவியபடி , “இங்க பாரு…நான் சொன்னதை நீ சரியா புரிஞ்சிக்கல. நான் லீவ் போடமாட்டேன்னுயெல்லாம் சொல்லல. எனக்கும் உன்னோட வேலை எவ்வளவு முக்கியம்னு தெரியும். முன்னமே சொல்லிருக்கலாமேன்னு தான் கேட்டேன். அதுக்கு ஏன் இவ்வளவு பேசற நீ..? சோஷியல் மீடியாவுல எதையாவது பாத்துட்டு வந்து தேவையில்லாததை பேசவேண்டியது.. நீ கிளம்பு நான் பாத்துக்குறேன்..”என்றவனிடம் கோபமாக பதில் ஏதோ கூற வந்தவள் வாசலில் யாரோ இருவர் நிற்கவும் , “ என்னவோ பண்ணித் தொலைங்க…” என்றபடி பையை மாட்டிக் கொண்டு கிளம்பினாள்.
வாசலில் நின்றவர்களை யோசனையுடன் பார்த்தவன் , “என்ன வேணும் சார்? யார் நீங்க?” என்றான்
“மிஸ்டர் வாசுதேவன் நீங்க தானே..?”
“ஆமா சார் நான் தான் வாசுதேவன்..”
“ நாங்க ஆர் 8 போலீஸ் ஸ்டேஷன் ல இருந்து வர்றோம். உங்க மேல கம்பளைண்ட் வந்துருக்கு. கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வந்துட்டு போறீங்களா…?” என்றார்.
அவனோ புருவத்தை சுருக்கி, “யார் சார் கம்பளைண்ட் கொடுத்தது..? நான் எந்த தப்பும் பண்ணல சார்…” என்றான் நிதானமாக.
“உங்க மேல கம்பளைண்ட் கொடுத்தது மிஸ் ஆருத்ரா ராகவன். வி.ஏ சொல்யூஷன்ஸோட எம்.டி. நேத்து நீங்க அவங்களை ஆஃபிஸ் டைம்ல கை நீட்டி அடிச்சிருக்கீங்க. அண்ட் ஆஃபிஸ் சோர்ஸை தப்பா உங்க சொந்த வேலைக்காக அடிக்கடி யூஸ் பண்ணிருக்கீங்க. ஏன்னு கேட்டதுக்கு மிஸ் ஆருத்ராவை மரியாதைக்குறைவா பேசி கை நீட்டி அடிச்சிருக்கீங்க..? முதல்ல நீங்க கிளம்புங்க ஸ்டேஷனுக்கு. உங்க மேல ஆக்ஷன் எடுக்கச் சொல்லி கம்பளைண்ட் கொடுத்துருக்காங்க. “ என்று விரைப்பாக கூறினார் அந்த காவலர்.
“ சார்..நீங்க ஏதோ தவறா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க…நான்…” என ஆரம்பிக்கும் முன்பே, “எதுவா இருந்தாலும் ஸ்டேஷன்ல வச்சி பேசிக்கலாம். இப்ப கிளம்புங்க . எங்களுக்கு வேற வேலை இருக்கு சார்…நீங்க நேத்து அவங்கள அடிச்சது உண்மை தானே…?” என்றார் அந்த காவலர்.
வாசுவோ தயக்கத்துடன், “ ஆ…ஆமா..சார்..”எனக் கூறி விட்டு அரசியையும் மகளையும் பார்த்தான்
‘அனு பள்ளிக்கு கிளம்ப வேண்டும். தாயிற்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைக்க வேண்டும். என்ன செய்வது..?’ என ஒரு கணம் யோசித்தவன் , “சார் ஒரு கால் மணி நேரம் டைம் கொடுங்க. பொண்ணுக்கும், அம்மாவுக்கும் தேவையானதை செஞ்சு வச்சிட்டு வர்றேன். உக்காருங்க சார்…” என்றவன் அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் சுந்தரி அக்காவின் வீட்டினை தட்டினான்.
“ வா….வாசு . என்ன விஷயம்.?” என்றார்.
அவனுக்கோ இப்படி அடிக்கடி அவரை தொடர்ந்து தொந்தரவு செய்வது சங்கடமாக இருந்தது.
இருப்பினும் ஆபத்திற்கு பாவமில்லை என்பதனால் , “அக்கா…ஒரு கேஸ் விஷயமா நான் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போறேன். வீட்ல…வீட்ல..அது வந்து…மதியத்துக்கு எதுவும் சமைக்கல. சந்தியாவுக்கு இன்னைக்கு வேலை அதிகமா இருக்குன்னு சீக்கிரமே கிளம்பிட்டா. நீங்க கொஞ்சம் மதியத்துக்கு மட்டும்…” என்று பாதியிலேயே வார்த்தைகளை நிறுத்தியவன் வலி மிகுந்த விழிகளுடன் அவரைப் பார்த்தான்
அவருக்கோ வாசுவை பார்க்க பாவமாக இருந்தது.
“ என்னப்பா வாசு…?இதுக்கெல்லாம் ஏன் இவ்வளவு கவலைப்படுறே..? நான் உன் கூட பிறந்த அக்கா மாதிரி…எந்த நேரம்னாலும் என்ன உதவி தேவைப்பட்டாலும் தயங்காம கேளுன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன். ஏன் இப்படி கூச்சப்படுற..? நான் பாத்துக்குறேன் வாசு..” என்றவர் , “என்ன வாசு…ஏதாவது ரொம்ப சீரியஸான விஷயமா..? எதுக்கு போலீஸ் மஃப்டில வந்துருக்காங்க.? மாமாவை வரச்சொல்லவா? அவருக்கு நிறைய இடத்துலே ஆட்களை தெரியும் பா..” என்றார் சற்று கவலையுடன்.
“அதெல்லாம் வேணாம் க்கா. நான் பாத்துக்குறேன். ரொம்ப பெரிய விஷயம் ஒண்ணுமில்லை. சின்ன என்கொய்ரி தான். சீக்கிரம் வந்துடுவேன்“ என்றான் தடுமாற்றத்துடன்.
மகளிடமும் தாயிடமும் அவர்களுக்கு புரியும் வகையில் விஷயத்தை கூறிவிட்டு காவலர்களுடன் அவர்களது வாகனத்தில் கிளம்பினான்.
ஆங்காங்கே நின்றிருந்த சிலர் அவன் காவல்துறை வாகனத்தில் ஏறியதைக் கண்டு தங்களுக்குள் குசுகுசுவென பேசிக்கொண்டார்கள்.
அவர்களுக்கு வாசுவைப் பற்றி தெரியும் என்பதால் பெரிதுபடுத்த வில்லை. இருப்பினும் காவல்துறையினர் எதற்காக வாசுவை அழைத்துச் சென்றார்கள் என்பதை அறிந்துக் கொள்ள சற்று ஆவல் தான்.
காவல்நிலையத்தில் அமர வைக்கப்பட்டிருந்தான் வாசு. கைகளை கோர்த்துக் கொண்டு தலையை குனிந்தபடி அமரந்திருந்தான்.
மனம் முழுவதும் அத்தனை ரணம். ஒரு காலத்தில் அவனை விரட்டி விரட்டி காதலித்து விழகளாலேயே அவனை கொன்று தின்றவள் இன்று உயிருடன் அவனை வைத்துக் கொண்டல்லவா இருக்கின்றாள்.
எதற்காக தன் மீது இத்தனை வன்மம்..? விலக விடாமல் இறுகப் பற்றிக் கொண்டிருக்கின்றாள். என்ன வேண்டும் அவளுக்கு..? என் ஆயிரம் கேள்விகள் தலைக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக அமர்ந்திருந்தான். அழைத்து வந்ததோடு சரி காவலர்கள் அவனிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை.
எழுந்து சென்றவன் காவலரிடம் , “சார்…விசாரிக்கணும், ஆக்ஷன் எடுக்கணும்னு சொல்லிட்டு இப்படியே உக்கார வச்சிருக்கீங்களே..! நான் பண்ணுணது தப்பு தான் சார்.. ஆனா ஆஃபிஸ் சோர்சை தப்பா யூஸ் பண்ணல சார்..” என்றான்.
“கொஞ்சம் உக்காருங்க சார்…உங்களுக்கு முன்னாடி சில முக்கியமான கேஸெல்லாம் இருக்கு. அதெல்லாம் விசாரிச்சதுக்கு அப்பறம் தான் உங்களை விசாரிக்க முடியும் .” என எரிச்சலுடன் கூறினார்.
மீண்டும் போய் அந்த மரபெஞ்சில் அமர்ந்து கொண்டான்.
இடையிடையே சுந்தரி அக்காவிற்கு அழைத்து அனுவைப் பற்றியும் தாயையைப் பற்றியும் விசாரித்துக் கொண்டான்.
மனது கேட்காமல் சந்தியாவின் அலைப்பேசிக்கு மூன்றாம் முறையாக அழைத்தான்.
அலைப்பேசியை எடுத்தவள், “என்ன வேணும் உங்களுக்கு..? காலையில் இருந்து ரெண்டு மூணு தடவை கூப்ட்டுட்டீங்க..? முக்கியமான வேலையில இருக்கேன். திரும்பத் திரும்ப கால் பண்ணி எரிச்சல் பண்ணாதீங்க..!” எனக் கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
என்ன கூற வருகிறேன் என்பதைக் கூட கேட்காமல் அவள் தன் அழைப்பைத் துண்டித்தது எரிச்சல்படுத்தியது அவனை.
அலைப்பேசியை அணைத்துவிட்டு சட்டைப் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான்.
இதற்கு காரணமானவளோ அலுவலகத்தில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பழரசத்தை நிதானமாக அருந்திக் கொண்டிருந்தாள்.
மணித்துளிகள் உருண்டோடியது.
இறுக்கமான முகத்துடனே அமர்ந்திருந்தான் வாசு.
நேரத்தை பார்த்தான்.
மணி மாலை ஆறாகி விட்டது. இதற்கு மேல் குழந்தை சுந்திரி அக்காவிடம் இருக்க மாட்டாள். .
தன்னைத் தேட ஆரம்பித்து விடுவாள் என்ற பதற்றம் தொற்றிக் கொண்டது.
அலைப்பேசியை எடுத்தவன் முன்பு ஏதோ நிழலாடவே நிமிர்ந்து பார்த்தான்.
ஆருத்ரா தான் நின்று கொண்டிருந்தாள்.
கூரிய விழிகளால் அவனை அளவெடுத்தாள்.
காலை முதல் அன்ன ஆகாரம் இன்றி, தலை கலைந்து , சட்டையை ஏனோதானோ என்று அணிந்து அமர்ந்திருந்தவனின் தோற்றம் ஒரு கணம் அவளது மனதை இளகத்தான் வைத்தது.
அதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு அவனருகே அமர்ந்தாள்.
பார்வை அவனை வருடிய போதும் குரலில் ஒரு அழுத்தத்தை கொண்டு வந்து , “என்ன மிஸ்டர் வா…சு…தேவன்..? ஸ்டேஷன்ல ரொம்ப நேரமா உக்காந்திருக்கீங்களா..? த்ச்சு…..த்ச்சு….சோ….சேட். உங்களை பாக்கவே பரிதாபமா இருக்கே..? என்ன பண்றது..?”எனப் போலியாக யோசிப்பவள் போல பாவனை செய்தாள்.
அவனோ இறுகிப் போய் அமர்ந்திருந்தான்.
இயலாமையால் வந்த கோபத்தினால் அவனது முகம் முழுவதும் சிவந்திருந்தது.
காது மடல் கூட சூடாகி சிவந்திருப்பதை பார்த்தவள் மெல்ல அவனது காது மடலை சுண்டி விட்டு, “ப்பா…! என்னம்மா சிவந்திருக்கு வாசுதேவன். அவ்வளவு கோபம் வருதா…? வரட்டும் வரட்டும். என் கம்பெனிலேயே உக்காந்துட்டு என் கம்பெனி சிஸ்டத்தை யூஸ் பண்ணி ரெசியூம் காஃபி எடுத்துருக்கீங்க. பொய் சொல்லி பெர்மிஷன் கேட்டு வேற கம்பெனிக்கு இன்டர்வியூவுக்கும் போயிருக்கீங்க..? என்ன தைரியம் உங்களுக்கு..? இதுக்கே உங்களை உள்ள தள்ள முடியும் என்னால ஆனா அதைச் செய்யமாட்டேன் நான். என்னை விட்டு தள்ளிப் போகணும்ன்னு நினைச்சதுக்கே உங்கள் ஒரு நாள் முழுசா ஸ்டேஷன்ல உக்கார வச்சிடடேன். இனியும் இது போல செய்தீங்கன்னா…! பாவ புண்ணியம் பாக்க மாட்டேன். ஜெயில்ல உங்கந்து களி தான் திங்கணும். ஏற்கெனவே வீட்ல பெண்டாட்டி உங்களை மதிக்க மாட்டா. இதுல நீங்க ஜெயிலுக்கு வேற போயிட்டீங்கன்னா உங்க குழந்தையையும் உங்க அம்மாவையும் யார் பாத்துக்குவா..? நல்லா யோசிச்சிக்கோங்க. உலகத்துல நீங்க எந்த மூலைக்கும் போனாலும் ஒரு செகண்ட் கூட உங்களால நிம்மதியா இருக்க முடியாது. என் கிட்டதான் வந்தாகணும். அதுக்கு மரியாதையா என்னோட கம்பெனிலேயே வேலையை கன்டின்யூ பண்ணுங்க. அது தான் எல்லாருக்கும் நல்லது. முக்கியமா உங்களுக்கு. உங்களுக்கு இந்த பாடம் போதும்ன்னு நினைக்கிறேன்.” என்றவள் அவனது முகத்தை பார்த்தாள்.
சலனமற்ற அவனது பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்.
ஒரு கணம் அதில் தடுமாறியவள் சட்டென்று சுதாரித்துக் கொண்டு, “என் கூட வாங்க மிஸ்டர் வாசு..நானே உங்களை வீட்ல ட்ராப் பண்ணிடுறேன்.” என்றாள் எதுவுமே நடவாதது போல்.
“வேண்டாம் மேடம் . கால்ல இன்னும் தெம்பு இருக்கு…நடந்தே போயிடுவேன்.” என்றவனின் வார்த்தைகளில் அத்தனை வலி.
அவளது பதிலை கூட எதிர்பார்க்காமல் நடந்து சென்றான்.
காரின் மேல் சாய்ந்து நின்றிருந்தவளின் விழிகள் அவனது உருவம் சிறிதாகி தேய்ந்து மறையும் வரை அவனது பிம்பத்தின் பின்னே பயணித்தது.
மறையத் தொடங்கிய மாலை நேர சூரியனின் பொன்னொளி வானமெங்கும் பரவத் தொடங்கியதில் புள்ளியாய் அவனது உருவம் மறைந்தது.