பிழை-4

அனுவை ஆட்டோவில் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பியவன் தன் தாயின் அறையினுள் நுழைந்தான்.

“ ம்மா… உங்களுக்கு தேவையான மாத்திரை மருந்தெல்லாம் பக்கத்துலயே வச்சிருக்கேன். எங்கயும் தேடாதீங்க. கொஞ்சம் பழம் வெட்டி அந்த டப்பாவுல வச்சிருக்கேன். பசிச்சா எடுத்து சாப்பிடுங்க. சாப்பாடு இந்த கேரியர்ல எடுத்து வச்சிருக்கேன். மறக்காம மாத்திரை போட்டுட்டு சாப்பிடுங்க. காஃபி ஃப்ளாஸ்க்ல போட்டு வச்சிருக்கேன். நாலு மணி போல குடிச்சிடுங்க. அப்பறம் ரொம்பவே ஆறிடும். இந்த ஃபோன்ல என்னோட நம்பர் முதல்லயே இருக்கு. எதுவா இருந்தாலும் தயங்காம கூப்பிடுங்க. அடுத்த நம்பர் சந்தியாவோடது இருக்கு. நான் ஒருவேளை எடுக்கலைன்னா அவளுக்கு கூப்பிடுங்க. சுந்திரி அக்காவோடதும் இருக்குது. கவனமா எழுந்து பாத்ரூம் போய்ட்டு வாங்க. வேற எதுவும் வேணுமா..? எல்லா மருந்தும் இப்போதைக்கு ‌இருக்குது. அடுத்த மாசத்துக்கு அப்பறம் வாங்கிக்கலாம்…சரியா..?” என்றவன்  மாத்திரைப் பட்டையை கிழித்து மாத்திரையை அவர் கையில் கொடுத்து தண்ணீரை அருந்த கொடுத்தான்.

அதனை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு விழுங்கியவருக்கு கண்கள் கலங்கியது.

அதனைக் கண்டவன் பதறி போய், “என்னம்மா…? என்ன ஆச்சு..? ஏன் கண்ணு கலங்குறீங்க..?” என்றான்.

“ஒண்ணுமில்ல டா தங்கம். உன்னை போட்டு ரொம்பவே கஷ்டப்படுத்துறேனோன்னு தோணுது. என்னால தான்‌ உன் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சோன்னு கவலை மனசை அரிச்சிட்டு இருக்குது…” என்றார் அவனது முகத்தை தடவிக் கொண்டே.

அவரது கரங்களை தன்னுடைய கைகளும் அடக்கியவன்,  “அம்மா…நீங்க கவலைப்படுற அளவுக்கு இங்க ஒரு பிரச்சனையும் இல்லை. எல்லா வீட்டுலையும் ‌நடக்குறது தானே…?. அதையெல்லாம் பத்தி யோசிச்சி உங்க மனசை போட்டு குழப்பிக்காதீங்க. அப்பறம் உடம்புக்கு வந்துடும் ம்மா…எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்.  ம்ம்…ஒரு நாள் எல்லாம் சரியாகிடும்…” என்றவனுக்குத் தெரியவில்லை அவனது நம்பிக்கை யெல்லாம் பொய்த்துப் போகப் போகின்றதென…

தாய் அறியாத சூல் உண்டோ..? அவை தன்னை சமாதானப்படுத்துவதற்காக கூறப்படும் வார்த்தைகள் என புரிந்தது.

ஆயாசமாக கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.

“அம்மா…எதுவா இருந்தாலும் எனக்கு போன் பண்ணிடுங்க ம்மா…” என்றான்‌ மனது கேளாமல்.

“கவலைப்படாதே வாசு…சுந்தரி தினமும் சாயந்திரம் வந்து ஃப்ளாஸ்க்ல இருக்குற காஃபியை சூடு பண்ணி கொடுத்துட்டு ஏதாவது அவ வீட்ல ஏதாவது செஞ்சிருந்தா கொண்டு வந்து கொடுத்துட்டு போவாப்பா…நீ கிளம்பு பா..நேரமாச்சு பாரு…” என்றார்.

“ சரிம்மா…பாத்துக்கோங்க…” என்று கூறி கதவினை சாத்தி விட்டு அலுவலகத்திற்கு கிளம்பினான்.

மாற்று சாவி ஒன்று எப்போதும் சுந்தரி அக்காவிடம் இருக்கும். 

அதனை வைத்து திறந்து கொண்டு வந்துவிடுவார். சிறிது நேரம் அரசியிடம் பேசிவிட்டு பலகாரம் மற்றும் காஃபியை கொடுத்து விட்டுச் செல்வார்.

அனு பிறந்து ஒரு வருடம் ஆகும் வரை நன்றாகத் தான் இருந்தார்.

திடீரென ஒரு நாள் சக்கரையின் அளவு கூடியதால் தலை சுற்றி குளியலறையில் வழுக்கி விழுந்தார். 

காலிலும் நெற்றியிலும் பலமான அடி. காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 

அறுவை சிகிச்சை செய்தும் கூட பயனில்லாமல் போனது. 

அவ்வபோது சீரற்ற உடல்நிலை வேறு அவரை படுத்தி எடுத்தது.

ஒன்றரை வருட கைக்குழந்தையை வைத்திருந்த சந்தியாவிற்கோ எரிச்சலுடன் கோபமும் வந்தது. 

குழந்தையை வைத்துக் கொண்டு அரசியைப் பார்த்துக் கொள்ள முடியாது என்று கூறி விட்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டாள். 

அங்கிருந்து தான் வேலைக்கு சென்று வந்தாள். அங்கோ வாசுவின் தங்கை திவ்யா தான் முழுக்க முழுக்க அனுவை பார்த்துக் கொண்டாள். 

காலையில் செல்பவள் இரவில் தான் வீட்டிற்கு வந்து சேருவாள். 

மாமியாரின்‌ சுடுசொற்களோடு சந்தியாவின்‌ அலட்சியமும் அவளை காயப்படுத்தினாலும் அதனை பொருட்படுத்தாமல் அனுவை கண்ணுங்கருத்துமாக பார்த்துக் கொண்டாள். 

வாசு எவ்வளவோ முறை அவளது தாய்‌ வீட்டிற்கு வந்து சந்தியாவை அழைத்துப் பார்த்தான் . அவளோ அவனுடன் வர மறுத்து விட்டாள்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு ஓரளவிற்கு அரசி தேறி வந்தார். அதன் பிறகே சந்தியா குழந்தையுடன் வீட்டிற்கு வந்தாள். 

பிரசவத்திற்கு  தாய் வீட்டிற்கு சென்று வந்த பிறகு நிறைய மாற்றங்கள் சந்தியாவிடம். 

அரசியால் தன்னளவில்  மட்டுமே வேலைகளை செய்து கொள்ள முடியுமே தவிர நீண்ட நேரம் நின்று கொண்டிருக்க முடியாது.  

எனவே சமையல் பொறுப்பு சந்தியாவிடம் சென்றது. வீட்டு வேலைக்கு ஆள் வைத்து பார்த்தான் வாசு. வேலை செய்பவரோடு தகராறு ஏற்பட்டதால் நிறுத்த வேண்டியதாயிற்று. 

அலுவலகத்திலும் வேலைப்பளு அதிகமாக இருந்தது. ஆட்களும் சரியாக வீட்டு வேலைக்கு வரவில்லை . எனவே அனைத்து வேலைகளும் வாசுவின் மீது விழுந்தது. 

சந்தியா பெயருக்கு சமைத்து மட்டும் வைத்து விட்டு அலுவலகத்திற்கு சென்று விடுவாள். 

அனுவிற்கு தேவையானவற்றை செய்து முடித்து விட்டு தாயிற்கு தேவையானதும்‌ செய்து விட்டு அலுவலகம் கிளம்புவதற்குள் போதும்போதுமென்றாகி விடும்.

பல்வேறு சிந்தனையுடன் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான் வாசு.

வி.ஏ செல்யூஷன்ஸ் நிறுவனத்தில் தலைமை கணக்காளாராக பணிபுரிகிறான். 

இந்நிறுவனத்தில் சேர்ந்து முழுவதாக நான்காண்டுகள் ஆகின்றது.

கடந்த மூன்றாண்டுகளாக ஒரே ஊதியத்தில் பணியாற்றி வருகிறான். 

ஊதிய உயர்வு கேட்டதற்கு ஆருத்ரா சரியான பதிலளிக்கவில்லை.

அவனுக்கு மட்டும் வேலைப் பளு அதிகமாக இருந்தது. 

வேறு நிறுவனத்தில் சேர எவ்வளவோ முயன்று பார்த்து விட்டான். 

ஆனால் அனைவரும் சொல்லி வைத்தார் போல் ஒரே பதிலை கூறி விட்டனர்.

“ சாரி சார்…நாங்க எதிர்ப்பார்த்த அளவுக்கு உங்க ஃபுரோபைல் இல்லை. நாங்க இன்னும் எலிஜிபில் கேண்டிடேட் பாக்குறோம். பெட்டர்‌ லக் நெக்ஸ்ட் டைம்…” என‌ கைவிரித்து விட்டனர்.

அவனுக்கோ சலித்து தான்‌ போனது.

சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்தவன் தனது இருக்கையில் சென்று அமர்ந்தான்

முதல் நாள் செய்து‌ முடித்த வேலைகளை சரி பார்த்தவன். 

அதனை ஆருத்ராவின்‌ மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தான்.

மற்ற வேலைகளை  சரி பார்த்துக் கொண்டிருந்தவன் செவியில் ,

‘ டொக்…டொக்…’ என்ற உயர்குதி காலணியின் சத்தம் கேட்டது.

அந்த சப்தம்‌ மட்டுமே கேட்கும் அளவிற்கு அலுவலகத்தில் இருந்தவர்கள் அமைதியாக வேலை செய்து கொண்டிருந்தனர்.

“குட்‌மாரினிங் மேடம்….குட்‌ மார்னிங் மேடம்…” என ஒவ்வொருவரும் எழுந்து ஆருராவிற்கு வணக்கம் வைத்தனர்.

வாசுவிற்கு இவ்வாறு எழுந்து நின்று அவளுக்கு வணக்கம் வைக்க பிடிக்கவில்லை தான். 

ஆனால் தான் மட்டும் எழுந்து நிற்கவில்லை என்றால் தவறாகிவிடும் என்பதால் அவனருகே அவள்‌ வரும்‌ போது எழுந்து நின்று, “ குட்‌ மார்னிங் மேடம்…” என்றான்.

ஒரு கணம் அவனருகே தேங்கி நின்றவள் அவனது முகத்தை கூர்ந்து கவனித்து விட்டு சின்ன சிரிப்புடன் நகர்ந்து விட்டாள்.

அனைவரும் எழுந்து வணக்கம் வேண்டுமென்பதெல்லாம்‌ ஓராண்டுக்கு‌ முன்பு‌ உருவாக்கிய சட்டம் தான். முக்கியமாக வாசுவை வைத்து செய்ய வேண்டுமென்பதற்காகவே புதுப்புது நடைமுறைகளை அலுவலகத்தில் கொண்டு வந்தாள் என்று கூறலாம்.

மிடுக்காக தனது அறைக்குள் நுழைந்தவள் தான் அமரும் நாற்காலியை வெறித்தாள். 

மனம் முழுவதும் இறுகிப் போய் இருந்தது ‌வழக்கம் போல அவளது இதயத்தில் வலி , வேதனை, ஆத்திரம் பல்வேறு உணர்வுகளின் குவியல் அவளை பலமாக தாக்கியது.

தலை உலுக்கிக் கொண்டு தன்னை சமன் செய்து கொண்டவள் மிடுக்காக இருக்கையில் சென்று அமர்ந்தாள்.

முக்கியமான வேலைகளை சரி‌பார்த்தவள் வாசுவின் மின்னஞ்சலை பார்த்து விட்டு அவனுக்கு அழைத்தாள்.

“மிஸ்டர் வாசுதேவன் கம்‌ டூ மை கேபின்…” 

“ எஸ் மேடம்..” என்றவன் எழுந்து அவளது அறைக்குச் சென்றான்.

கதவினை லேசாக திறந்து ,” மே ஐ கம் ‌இன் மேம்…” என்றான்.

“உங்களுக்காக கதவு எப்போதும் திறந்து தான் இருக்கும் வாசு…” என்றாள்.

அவனுக்கோ எரிச்சலாக இருந்தது. உள்ளே வந்து அவள் எதிரே நின்றான்.

கால் மேல் கால் போட்டுக் கொண்டு. அமர்த்தலாக அமரந்திருந்தவள் வாசுவை தலை முதல் கால் வரை தனது கூரிய பார்வையால் அளந்தாள்.

“என்னன்னு சொல்லுங்க மேடம்…” என்றான் இறுக்கமான முகத்துடன்.

“ஏன் அவசரப்படுறீங்க மிஸ்டர் வாசு…சொல்றேன் கொஞ்சம் பொறுங்க..” என்றவள் எழுந்து வந்து அவனை நெருங்கி நின்றாள்.

தன்னிச்சையாக அவனது கால்கள் பின்னால் சென்றது.

இதழ்களுக்குள் சிரிப்பை ஒளித்தவள் மீண்டும் வேண்டுமென்றே அவனை நெருங்கி நின்று, “ஏ.வி கார்மெண்ட்ஸோட ஃபில்ஸ்யெல்லாம் செட்டில் பண்ணியாச்சா…?” என்றாள்.

“ம்ச்ச்…” என்று‌ சலித்தபடி அவளை விட்டு விலகி நின்றவன், “ அதை தானே மேடம் உங்களுக்கு மெயில் பண்ணிருந்தேன். ஆஷ்ரமத்துக்கான செக்கும் அனுப்பிட்டேன். கேட்டரிங்கும் செட்டில் பண்ணியாச்சு…” என்றான்‌ அவள் கேளாமலேயே…

அவனை மெச்சும் பார்வை ஒன்றைப் பார்த்தவள் , “ ம்ம்…பரவாயில்லயே நான் கேட்காமலேயே எல்லா டீடெயில்ஸூம் ‌சொல்லிட்டீங்க. என்னோட பிறந்தநாளையையும்‌ வருஷா வருஷம் நான்‌ என்னென்ன பண்ணுவேன்னும் நியாபகம் வச்சிருக்கீங்களே…பழசை மறக்க முடியலையா மிஸ்டர் வாசு…தேவ்..வாசுதேவன்.?” என்றபடி அவனது முகத்தில் நுனி விரல் கொண்டு கோடிளுத்தாள்‌.

பட்டென்று அவளது கையை தட்டி விட்டவன் ஆத்திரமாக,   “கம்பெனிக்கு மட்டும் தான் நான் வேலை பாக்குறேன். அது சம்மந்தமான வேலையை மட்டும் தான் நான்‌பாக்குறேன். யாரோட பர்சனலும் எனக்குத் தேவையில்லை  வேற எதுவும் எங்கிட்ட கேக்கறதுக்கு இல்லன்னா நான் கிளம்பறேன்..” என நகர முயன்றவனை அவளது வார்த்தைகள் தடுத்து நிறுத்தியது. 

ஏற்கனவே எரிச்சலில் இருந்தவனுக்கு ஆருத்ரா வின் நடவடிக்கை சிறிதும் பிடிக்கவில்லை.

“ வீட்டுல செம்ம டோஸ்‌ வாங்கிட்டு வந்துருக்கீங்களா மிஸ்டர் வாசுதேவன்?  இவ்வளவு சூடா இருக்கீங்க..?” என்றவள் அவனது நுனி மூக்கினை லேசாக விரல் கொண்டு தட்டிவிட்டாள்.

இருக்கும் கோபத்தில் அவளை அடித்துவிடுவோம் என்கிற படத்தில் கண்களை இறுக மூடி திறந்தான்.

“வேலையை பாக்க விடுங்க…மேடம். தொட்டு பேசுற வேலையை வச்சிக்காதீங்க. நான் கல்யாணம் ஆனவன். அஞ்சு வயசுல ஒரு ‌பொண்ணும்‌ எனக்கிருக்கா. கல்யாணம் ‌ஆன ஆம்பிளை பின்னாடி அலையாதீங்க…” என்று எவ்வளவோ முயன்றும் சூடான வார்த்தைகள் அவனை மீறி‌ வாயிலிருந்து வெளிப்பட்டது.

சட்டென்று நிமிர்ந்தாள் ஆத்திரத்துடன், “ என்ன சொன்ன உன்னை தொட்டும் பேசக் கூடாதா..? ஒரு காலத்துல , ’உன்னை தொட்டுட்டே இருக்கணும்’னு சொன்னது யாரு.. மிஸ்டர் வாசுதேவன்?. அப்பறம்‌ என்ன சொன்னீங்க..? ஹான்..நான்  ஆம்பிளை பின்னாடி அலையுறேனா? இதுக்கெல்லாம் யாரு காரணம்.? இப்ப கூட ஒண்ணும் குறைஞ்சு போகலை உன்‌ பொண்டாட்டியை விட்டுட்டு  என் கூட வாங்க. உங்க கஷ்டமெல்லாம் ‌தீர்ந்துடும் .என்ன‌ சொல்றீங்க தேவ்..?” என்றவளை பளாரென்று அறைந்திருந்தான் வாசுதேவன்.

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top