காதல் கனவே சேராயோ? கண்களே கண்ணீரை தாராயோ?
கனவே சேராயோ?? 25
“ஏங்க, இவ்வளவு நாள் கல்லையும், கம்பியையும், மண்ணையும் பார்த்துட்டிருந்தவன். முதல் முறையா ஒரு பொண்ணை ஆசையா பாக்குறான்னா?? நாம சந்தோஷம்தானே படணும்?? அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு தானே நாம முயற்சி பண்ணிட்டிருக்கோம்?? அவன் பிடி கொடுக்காமல் இருக்கான். இப்ப அவனா ஒரு பொண்ண பார்க்குறானா? அது நல்லதுக்கு தானேங்க”? என்றார் காவியா.
“நான் பார்த்து வச்சிருக்க வரனுக்கு அவன் சம்மதம் சொன்னா பரவால்ல? அவன் ஒருத்திய பார்த்தா என்னால எப்படி அதுக்கு வழி விட முடியும்?? எவ்வளவு பெரிய பெரிய பில்டர்ஸும், பணக்காரங்களும், ஏன் மந்திரி கூட அவர் பொண்ணை தரத்துக்கு தயாரா இருக்காரு தெரியுமா?? அவர் ஆர்வமா பேசுறதை நான்தான் உன்கிட்ட சொன்னேனே காவியா”? உன் பையன் தான் இவ்வளவு நாள் பிடி கொடுக்காமல் இருந்தான். இப்ப என்னன்னா கதையே வேற மாதிரி மாறுது. எனக்கு ஒண்ணுமே புரியல”? என்று ஆதங்கமாக பேசினார் வெங்கடேசன்.
“பணத்துக்கு எப்ப நீங்க முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சீங்க?? நம்ம பையனோட சந்தோஷத்தை விட, இதெல்லாம் தான் உங்களுக்கு முக்கியமா?? அந்த காலத்துல நாமளே காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க தானே?? பையன் ஒரு பொண்ண விரும்புறானா அதுக்கு நாம வழி விடாம, நம்ம இஷ்டத்துக்கு அவனை ஆட்டி படைக்கணுமா”? என்று கேட்டார் காவியா.
“நீ சொல்றதெல்லாம் சரிதான். அவனே காதல் செஞ்சானா? எனக்கு பிரச்சனை இல்ல. ஆனா இவங்க ரெண்டு பேரையும் பார்த்தா அப்படி தெரியல? ப்ரீ பிளான்டா எல்லாத்தையும் செய்யுற மாதிரி தான் தோணுது” என்றார் வெங்கடேசன்.
“நீங்கதான் அவங்க குடும்பத்தை பத்தி விசாரிச்சீங்கல்ல? எதுவும் அப்படியெல்லாம் இல்லைன்னு தானே வந்து சொன்னீங்க? திரும்பவும் ஏன் முருங்கை மரம் ஏருறீங்க”? என்று காவியா கேட்க.
“எனக்கு அந்த பொண்ணை பிடிக்கல, அவ்வளவுதான். பெரிய பெரிய இடத்து சம்பந்தத்துனால நம்ம கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியும், நம்ம மகனும் ஓஹோன்னு போகப் போறாங்க. அது எல்லாத்தையும் விட்டுட்டு இந்த பொண்ணுக்கு நாம ஏன் கட்டிக் கொடுக்கணும்”? என்றார் வெங்கடேசன்.
“இப்படி எங்கப்பா நினைச்சிருந்தா என்ன ஆகிறது? நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி இருப்போமா? இல்ல நமக்கு தான் தேஜா போல ஒரு அருமையான மகன் கிடைச்சிருப்பானா?? தவமா தவமிருந்து பெத்த பையன். ஒத்த பையனா இருக்கான். அவனோட சந்தோஷத்தை விட பணம் ஒன்னும் முக்கியம் கிடையாது” என்று காவியா திடமாக சொல்ல.
“சொன்னா புரிஞ்சுக்கம்மா?? நம்ம பையனோட வளர்ச்சின்றது அவனோட புத்திசாலித்தனத்தினால் மட்டும் கிடையாது. நம்மளோட புத்திசாலித்தனத்தினாலயும் தான். பெரிய இடத்து சம்பந்தங்கள் எத்தனை வருது தெரியுமா? அதுல எதை தேர்ந்தெடுக்கிறதுன்னு நான் அல்லாடிட்டு இருக்கேன். ஆனா இவன் ஒரு சாதாரண பெண்ணை, அதுவும் நம்ம கம்பெனில வேலை செய்யுற பொண்ண தேர்ந்தெடுத்தான்னா? நம்முடைய பிரெஸ்டிஜ் என்ன ஆகிறது”? என்றார்.
“எப்போதிலிருந்து நீங்க இப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சீங்க? என் பையன் வந்து காதல்னு நின்னானா? நான் அவனுக்குத்தான் துணையா நிப்பேன். ஏன் உங்களை எதிர்த்துகிட்டு கூட அவனுக்கு நான் கல்யாணம் பண்ணி வைப்பேன். மறந்துடாதீங்க”? என்று காவியா சற்று அழுத்தமாக கூறி விட.
அவர் இறங்கி போனார். மனைவியின் கையை பற்றி கொண்டார்.
“சரி நீ போய் ஜாதகக்காரர் கிட்ட நம்ம பையனோட ஜாதகத்தை பார்த்துட்டு வந்தியே, என்னாச்சு?? அவர் என்ன சொன்னாரு”? என்று இறங்கும் குரலில் கேட்டார்.
“அவன் விரும்புற பொண்ண அவன் கல்யாணம் பண்ணிப்பான்னு தான் சொன்னாரு. ஆனா நம்ம ஒப்புதலோடு தான் அவன் பண்ணிப்பானாம். அது மட்டும் இல்லாம இன்னும் ஏதோ ஒரு பிரச்சனை இருக்குன்னு சொன்னாரு. நான் என்னன்னு கேட்டேன். வேண்டாம் அதை பத்தி இப்ப கேட்காதீங்கன்னு சொல்லிட்டாரு.”
“நான் சொல்றேன்ல? அந்த பிரச்சனையே இந்த பொண்ணும், அவள் தம்பியும் தாம்மா”? என்று வெங்கடேசன் கூற..
“உங்களுக்கு நான் சொல்ல வர்றது புரியலங்க?? ஒன்னு பண்ணலாம். நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஜாதகக்காரர் கிட்ட போகலாம். அவர் என்ன சொல்றாருன்னு கேட்கலாம். அதுக்கப்புறம் முடிவு பண்ணலாம். சரியா”? என்று கேட்டார்.
“வா போகலாம். எனக்கும் இருப்பு கொள்ளல” என்று கூறி மனைவியை அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.
அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியான விஷயங்கள் காத்திருக்கிறது.
……..
மானசா எதிர்பார்த்த அந்த தருணமும் வந்தது. தேஜாவின் செகரட்டரி அவளை கீழே வரும்படி பணித்துவிட்டு நகர, அவளும் தன் ஹேண்ட்பேக்கை எடுத்துக்கொண்டு பின்னால் சென்றாள்.
காரில் ஏறி அவன் அமர்ந்ததும். அவனுடைய செக்ரட்டரி, டிரைவரின் அருகில் அமர்வதற்காக முன்பக்க கார் கதவை பிடித்துக் கொண்டு நிற்க.
இவள் எங்கே ஏறி அமர்வது?? என்று தயக்கமாக நின்றாள்.
“சார், சைட்டுக்கு நான் என்னோட ஸ்கூட்டில வந்துறவா”? என்று செக்கரட்டரியிடம் கேட்டாள்.
“பாஸ் கிட்ட கேளுங்க மானசா” என்று அவன் கூறி விட.
கண்ணாடி வழியாக குனிந்து அவனைப் பார்த்தவள். அதையே அவனிடமும் கேட்டாள்.
“ஏன்?? என் கூட வர்றதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?? நான் என்ன பண்ணிட போறேன்?? முன்னாடி இருக்கவங்க எல்லாம் மனுஷங்க தானே”? என்று கேட்டான்.
“இல்ல ஒன்னும் இல்ல சார். ஸ்கூட்டி எடுத்துட்டு வந்தா அப்படியே சாயங்காலம் வீட்டுக்கு போயிடலாம்னு”? என்று நாக்கை கடித்தபடி நிறுத்தினாள்.
அவன் கன்னக்கதுப்பில் நாக்கை வைத்து உருட்டியபடி, அவளை ஏளனமாக பார்த்து வைத்தான். அதில் அவள் நெஞ்சு கூட்டில் பிரளயமே ஏற்பட்டது.
இப்போதெல்லாம் அவன் பார்வைக்கு அர்த்தம் புரிந்து. அது அவளையும் தாக்குகிறதே?? அதில் அவள் தானாக அந்த கதவை திறந்து கொண்டு ஏறி அமர்ந்து விட்டாள். கார் ஸ்டார்ட்டானது.
‘காலைல லேட்டா வந்துட்டு, அவர் கண் முன்னாடி மாட்டிகிட்டு, அவர் மேல மோதுர மாதிரி வேற போய் நின்னு. இப்ப அவர்கிட்ட பர்மிஷன் கேட்காம, வீட்டுக்கு போற வரைக்கும் பிளான் பண்ற?? சரி இல்லடி மானசா. சரியே இல்ல. இப்படியே போனா நீ கதம் கதம் தான்’ என்று மனதிற்குள் மானசீகமாக எண்ணிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று கேட்ட தேஜாவின் குரலில் திடுக்கிட்டாள்.
“செந்தில் அண்ணா கார் டோர் லாக்கை செக் பண்ணுங்க. இந்த பொண்ணு கொஞ்ச நேரத்துல கீழ விழுந்தாலும் விழுந்துரும்” என்றான் அசால்டாக.
அவள் அதிர்ந்து போய் அவனை திரும்பிப் பார்த்தாள்.
“என்ன பாக்குறீங்க?? கீழ நீங்க விழுந்தீங்கன்னா? நாங்க தான் உங்க பேரண்ட்ஸ்க்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும்”? அவனோ மிக சாதாரணமாக கூறியபடி, அவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் இடைவெளியை பார்வையால் சுட்டி காட்டினான்.
“ஈஈஈ” என்று இளித்தபடி சற்று தள்ளி அமர்ந்தாள்.
அவன் தன் அலைபேசியில் கவனம் செலுத்துவது போல, அவளுடைய பிரயத்தனத்தை தான் அவதானித்துக் கொண்டிருந்தான்.
சற்று உடலை அவன் பக்கமாக நகர்த்தியவள். பிறகு கதவு பக்கமாக நகர்த்தினாள். அவள் செயலில், அவனுக்குள் மெல்லிய புன்னகை மனதினுள் படர்ந்தது.
சரியாக அந்த நேரத்தில், கார் ஒரு வளைவில் வேகமாக திரும்பியது. அவள் சறுக்கிக் கொண்டே அவன் அருகில் சென்று விட்டாள். அவன் மீது மீண்டும் மோதாமல் இருக்க, முன் சீட்டை பற்றி கொண்டவள். கண்களையும் இறுக்கமாக மூடியிருந்தாள்.
“செந்தில் அண்ணா என்ன ஆச்சு?? கூட லேடீஸ் வரும்போது ரேஷ் டிரைவிங் வேண்டாம். பார்த்து பொறுமையா போங்க. அவசரம் இல்லை” என்றான் தேஜா.
அதற்குள் அவள் சுதாரித்து. இன்னும் கார் கதவருகில் ஒண்டி அமர்ந்து கொண்டாள்.
‘இந்நேரம் அவன் தந்தை மட்டும் பார்த்திருந்தால் அவ்வளவுதான்’? என்று மனதினுள் நினைத்தாள்.
“மானசா” என்று அழைத்தான். அவள் திரும்பி பார்த்தாள். அவன் பார்வையால் கார் டோருக்கு மேலே இருக்கும் கம்பியை சூட்டி காட்டினான்.
இதுபோல சமயங்களில் அவசரத்திற்கு பிடிப்பதற்கு தான் அதை அமைத்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவசரத்திற்கு அதெல்லாம் எங்கு ஞாபகத்தில் வந்து தொலைகிறது??
மீண்டும் அதே இளிப்பு அவளிடம்.
காலையில் புத்திசாலித்தனமாக தன்னிடம் விளக்கங்கள் கூறிக் கொண்டிருந்தவள். இப்பொழுது அசட்டுத்தனமாக இருப்பதை அவன் மனதில் ரசித்துக் கொண்டிருந்தான்.
‘இவளும், இவள் தம்பியும் நொடிக்கு ஒரு முறை முக பாவனைகளை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். முகச் சாயலும் ஒற்றுமையாக இருப்பதால்தான் அவன் மீது இருக்கும் ஆர்வம் ஏற்படுகிறது?? இது சரி இல்லை. நான் என் ஹார்மோன்களை செக் செய்ய வேண்டும்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
அதற்குள் அவர்கள் செல்ல வேண்டிய அந்த இடமும் வந்திருந்தது.
பெரிய நிலப்பரப்பிலான அந்த இடத்தை, ஒரு அரசனைப் போல தோரணையாக நின்றபடி பார்வையிட்டான் சாய் தேஜா. அவன் தோரணையை பார்த்துவிட்டு அவளும் அந்த சைட்டை பார்வையிட்டாள்.
வெயில் சுள்ளென்று அவர்களை தாக்க ஆரம்பித்தது.
அவளோ தன் நெற்றிக்கு மேலே கைகளை கோர்த்து வைத்தபடி, அந்த இடத்தை பார்வையிட்டாள்.
அவள் புறமாக திரும்பியவன். “வெயில் ரொம்ப அதிகமா இருக்குள்ள”? என்று கேட்டான்.
அவள் ‘ஆமாம்’ என்று கூறினாலும், என்ன செய்துவிட முடியும் அவளால்?? நாய் வேஷம் போட்டால் குலைத்து தான் ஆக வேண்டும். சிவில் இன்ஜினியரிங் படித்தால், இதையெல்லாம் அனுபவித்து தானாக வேண்டும்.
இதை தான் தன் தந்தை படித்து படித்து சொன்னார். ஆனால் இவளுக்கு ஆர்வம் இதில் தான் இருக்கிறது. கலைஞர் ஒருவன் சிலையை வடித்து முடிக்கும் போது ஏற்படும் திருப்தி. ஒரு கட்டிடத்தை எழுப்பி முடிக்கும் போதும் அவர்களுக்குள்ளும் ஏற்படும். அதை அவளும் உணர்ந்திருக்கிறாள். இது அவளுடைய மூணாவது ப்ராஜெக்ட். இதை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்று மனதிற்குள் அவ்வளவு பேராவல் இருந்தது.
“ஸ்கூட்டி ஓட்டிட்டு வரும்போது, முகத்தை மறைக்குற மாதிரி ஷாலை போட்டுப்பீங்களே?? அது மாதிரி போட்டுக்கோங்க. நெஸ்ட் டைம் வரும்போது கேப் போட்டுட்டு வாங்க” என்றான் தேஜா.
விழி விரித்து அவனைப் பார்த்தாள். தான் ஓட்டிக் கொண்டு வருவதை, இவன் எப்பொழுது பார்த்தான்? என்று.
“வாட் அப்படி போட தெரியாதா”?? என்று புருவத்தை ஏற்றி இறக்கி அவன் கேட்க.
“தெரியும் சார்” என்று சொல்லிவிட்டு அவசரமாக அவளுடைய ஷாலை எடுத்து முகத்தை மறைத்தார் போல முக்காடு போட்டுக் கொண்டாள். அது அவளுடைய முன் புறத்தையும் சேர்த்து மறைத்திருந்தது.
அவள் முகத்தை மறைப்பதற்காக சொன்னானா? அல்லது, தளர்ந்திருந்த அவளுடைய முன்பகுதியை மறைப்பதற்காக சொன்னானோ?? அது அவனுக்கு தான் வெளிச்சம்.