கனவே சேராயோ??? 24

உறவாய் வந்தவளே உயிராய் நின்று விடு 

கனவே சேராயோ??? 24

“ம்ஹும், பதில் சொல்லுங்க மிஸ் மானசா”?  என்று கனைத்து, தன்னை மீட்டுக் கொண்டான் தேஜா.

 அவளும் தன்னை மீட்டு எடுத்துக் கொண்டாள். ஸ்கிரீன் புறம் திரும்பியவள். விளக்கம் கூற ஆரம்பித்தாள்.

“ஆவடியும், அதோட  சுற்று வட்டாரமும்,  அணைகளும், நீர் தேக்கங்களும்  இருக்கிற இடம் சார். இது கவர்மெண்ட்டோட ப்ராஜெக்ட். அதனால அங்கிருந்து தண்ணி வரவைக்கிறதுக்கு  நாம முயற்சி பண்ணலாம்” என்றாள்.

“கவர்மெண்ட் டெண்டர்ன்றனால?  நாம கேக்குறதை  எல்லாம் அவங்க கொடுப்பாங்கன்னு அர்த்தம் கிடையாது” என்றான்.

“சார், நீங்க சொல்றது சரிதான். ஆனா கொஞ்ச தூரத்திலேயே ஏரிகள் நிறைய இருக்கு.

அதை டேமா கட்டி வச்சிருக்காங்க.

செங்குன்றம் ஏரி (ரெட் ஹில்ஸ்), சோழவரம் ஏரி, புத்துச்சத்திரம் அணை (Puthuchathiram Dam):

நொச்சிமேடு நீர்த்தேக்கம் (Nochimedu Reservoir)

பூண்டி நீர்த்தேக்கம் (Poondi Reservoir) இப்படி மொத்தம் அஞ்சு ஏரிகளும் இதோட சுற்றுவட்டாரத்துல தான் இருக்கு. சென்னைக்கே இங்கிருந்துதான் தண்ணிர் போகுது. சோ தண்ணீர் வரத்து நல்லாவே இருக்கும் சார். நாம ஜஸ்ட் ஒரு அப்ளிகேஷன் போட்டோம்னா போதும். இந்த சுற்று வட்டாரத்துல தண்ணி வர்ற இடத்துல இருந்து நாம இந்த ப்ராஜெக்ட்டுக்கு தண்ணி எடுத்துக்கிறது மட்டும் இல்லாம, இன் ஃபியூச்சர் இங்க வாழுற மக்களுக்கும் தண்ணீர் கிடைக்கிற மாதிரி பைப் மூலமாக அதை கொண்டு வர்றதுக்கும் ஏற்பாடு பண்ணிடலாம்” என்று நிறுத்தினாள்.

“அதுக்கு நிறைய செலவாகும்  மானசா” என்றார் சிவில் இன்ஜினியர்.

“சார் பூமியில் இருந்து நாம் அதிகப்படியான தண்ணீரை கன்ஸ்ட்ரக்ஷனுக்கு உறிஞ்சி எடுத்துட்டோம்னா? அதுக்கப்புறம் இங்க வாழ போற மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். நமக்குமே ஏற்படும். முக்கியமான  பூசு வேலைகளுக்கெல்லாம் நம்ம தண்ணீரை வெளியில் இருந்து வாங்குற மாதிரி இருக்கும், அதோட ஒப்பிடும் போது கொஞ்சம் தான் செலவு அதிகப்படியாய் இருக்கும். ஆனா அதனால ஃபியூச்சர்ல இந்த பக்கம் நல்ல வளர்ச்சி இருக்கும் சார்.” என்றாள்.

 

“நாம ஏன் அதை பண்ணனும்? இது கவர்மெண்ட்டோட வேலை. இதனால நமக்கு என்ன பெனிஃபிட் இருக்கு மானசா?? செலவும் நாம எதுக்கு அதிகமா பண்ணனும்”? என்று புருவம் இடுங்க கேட்டான் தேஜா.

“சார், மேற்கு தொடர்ச்சி மலை நம்ம ஊர் பக்கம் இருக்கிறதுனால, அதிகமா மரங்கள் இருக்கிறதுனாலயும்,  நம்ம ஊருக்கு மழை வரத்து அதிகம் தான். வடகிழக்குப் பருவமழை மட்டுமில்லாமல், வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகளின்போதும் நம்ம ஊருக்கு அதிகமா கனமழை பெய்யும். இது எல்லாமே நம்ம ஊர் நீர்நிலைகள்ல சேரும்படியா அரசாங்கம் வழிவகை செஞ்சிருக்கு.”

“ஏரிகள் அதிகமா இருக்குற மாவட்டமா திருவள்ளூர் இருக்கு.. அது மட்டும் இல்லாம, மழைநீரை சேகரிக்கிற முக்கியமான ஏழு மாவட்டங்களில் ஒண்ணா திருவள்ளூர் மாவட்டமும் இருக்கு. இங்கு மட்டும்  மொத்தம் மூன்றாயிரத்து எழுநூற்று ஐம்பத்து எட்டு (3,758) மழைநீர் சேமிப்பு கிடங்கு இருக்கு  சார்.  அதனால இங்க தண்ணிருக்கு பஞ்சம் இருக்காது சார். நாம இப்பவே குழாய்கள் மூலமா இந்த ஏரியாவுக்கு தண்ணீர் வரதுக்கான வழிகளை ஏற்பாடு செஞ்சோம்னா?? நம்ம கன்ஸ்ட்ரக்ஷனுக்கும் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது.” என்று அவள் கூறும் போதே தேஜா இடை புகுந்தான். 

“தண்ணீர் இங்கு அதிகமா வருதுன்றதுகாக நமக்கு கொடுப்பாங்கன்னு சொல்ல முடியாது மானசா”? என்றான்.

“சார், உங்க இன்சுளுயன்சை  வச்சு உங்களால கொண்டு வர முடியும் சார்.. முயற்சி பண்ணாமலே தோல்வியை நாம் ஏன் ஒத்துக்கணும்? இதனால நமக்கும் பெனிஃபிட் இருக்கு.” என்றாள்.

“என்ன பெனிபிட்”?

“கர்நாடகாவில் அதிகப்படியான மழை பேஞ்சதுனா, அவங்க டாம் திறந்து விடுவாங்க. காவிரி நீர் நேரா இங்க வரலைனாலும்,  பூண்டி நீர் தேக்கம் வழியா, இணைப்பு  குழாய் மூலமாக   செங்குன்றம், சோழவரம் ஏரிகளுக்கு வந்து சேரும் சார். அதே போல ஆந்திரால மழை பேஞ்சாலும், கிருஷ்ணா நதி நீர் கங்கை திட்டத்தின் மூலமா பூண்டி நீர் தேக்கத்துக்கு வரும். அதோட இணைப்பு குழாய் மூலமா, மத்த ஏரிகளை வந்து சேரும். கொஞ்சம் செலவு பிடிச்சாலும் இந்த சுற்று வட்டாரத்துல இங்க வாழ போற   மக்களுக்கும் தண்ணீர் பிரச்சனை இருக்கவே இருக்காது. 

“இன் பியூச்சர் இந்த இடம்  இதனால  வளர்ச்சி அடையும். அதனால, நம்ம கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு கவர்மெண்ட்டோட  கான்ட்ராக்ட் நிறைய வருவதற்கு வாய்ப்பு இருக்கு. லாபத்தை மட்டும் பாக்காம, மக்களோட நலத்தையும் பார்த்து செய்யறதுனால மக்களிடையேயும் நம்ம கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு பெயர் கிடைக்கும் சார்” என்று முடித்தாள் மானசா. 

 அவள் கூறிய விளக்கத்தில்  அவளைப்  பிரம்மிப்பாய் பார்த்தான் தேஜா. அவன் பார்வையில் ரசனையும் கூடி இருந்ததோ?? அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் சற்று தடுமாறியவள். பின்பு தன்னை சுதாரித்து  திரும்பி கொண்டாள்.

 

அவளின் செயலில் அவனும் தன்னை மீட்டுக் கொண்டான்.

“வெல், குட் வொர்க்” என்று கைகளைத் தட்டியபடி பாராட்டினான். 

 சீஃப் இன்ஜினியருக்கு சந்தோஷம் பொறுக்கவில்லை.

“ஐ நோ சார்,  ஷீ இஸ் வெரி பிரில்லியன்ட். அண்ட் டேலெண்டெட் டூ. அதனாலதான் இவளை என்னோட அசிஸ்டென்டா இந்த டூ இயர்ஸ்லையே ப்ரோமோஷன் கொடுத்துட்டேன்”  என்று அவரும் பாராட்டினார்.

அவளுக்கு உச்சி குளிர்ந்து விட்டது. தனியாக திட்டினாலும், மற்றவர்கள் முன்பே பாராட்டுகிறார் அல்லவா??

 

“தேங்க்யூ  சார்” என்று நெஞ்சில் கையை வைத்தபடி நன்றி கூறினாள். 

அவள் கூறும் பாங்கு வித்தியாசமாகத்தான் இருந்தது. சற்று தலையை லேசாக கீழ் நோக்கி குனிந்தபடி நெஞ்சில் கையை வைத்து நன்றி கூறிய விதம், அவனையும் வசிகரித்தது.

“ஓகே இந்த பிளானையே எக்ஸிக்யூட் பண்ணலாம். ஆனா சைட் விசிட் இருக்கும். அதை இக்னோர் பண்ணக் கூடாது. இது கவர்மெண்ட்டோட ப்ராஜெக்ட்ன்றதனால ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது அங்க போய் பார்க்கணும். நீங்க ரெண்டு பேருமே பார்வையிடனும். சோ நீங்க ரெண்டு பேரும் ஆல்டர்நேட்டிவ் டேஸ் போகலாம். நோ இஸ்யூஸ்.  நானும் வந்து அப்பப்ப செக் பண்ணுவேன்” என்று கூறினான் தேஜா.

“கண்டிப்பா சார், போயிடலாம்” என்றாள். 

கோட்டை விலக்கி விட்டபடி எழுந்து நின்றவன். “இன்னைக்கு கன்ஸ்ட்ரக்ஸன் செய்யப் போற இடத்தை  பார்வையிட்டு வந்துடலாம்.  லஞ்சுக்கு மேல ரெடியா இருங்க” என்று கூறினான்.

“சார் மாதவரம் ப்ராஜெக்ட்டுக்கு நான் தான் ஹெட்டா இருக்கேன். அங்க இன்னைக்கு போக வேண்டியது இருக்கு. காலையில மீட்டிங் இருந்ததுனால மத்தியானம் போகலாம்னு  தான் யோசிச்சிருந்தேன்”  என்று தலைமை என்ஜினியர் சொல்ல.

“ஓகே, நோ  இஸ்யூ.  இன்னைக்கு பார்வையிட தானே போறோம்? மிஸ் மானசா மட்டும் என்கூட வரட்டும்” என்று கூறினான்.

இருவரும் சரி என்று தலையாட்டினார்கள்.

ஆனால் அவளுக்கு மட்டும் படபடப்பு கூடியது.  

‘சீஃப் இன்ஜினியர் இல்லாமல் தனியாக அவனுடன் செல்ல வேண்டுமா?? இதுவரை அப்படி சென்றதில்லை?? அவனைப் பொறுத்தவரை கண்ணியவான் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதிகமான கேள்விகள் கேட்டால் என்ன செய்வது??

தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் பார்க்கும்போது ஏற்படும் படபடப்பு மட்டும் தான் அவளிடம். ஆனால் அவனிடம்??

மதிய உணவை மானசா கொரித்துக் கொண்டிருக்க. “என்னடி இப்படி சாப்பிடுற?? பசிக்கலையா என்ன”? என்று அவளுடைய தோழி கேள்வி கேட்டாள்.

“இல்லடி, மதியானம் பாஸோட  சைட்டுக்கு போகணும். அதான் கொஞ்சம் படபடப்பா இருக்கு” என்றாள்.

“உன்னோட பிளான் நல்லபடியா ஒரே அட்டெம்ப்ல சக்ஸஸ் ஆனதுக்கு நீ எனக்கு ட்ரீட் கொடுக்கணும்” என்றாள் ராதா.

“முதல்ல கன்ஸ்ட்ரக்ஷன் ஒழுங்கா நடந்து முடியட்டும். அதுக்கப்புறம் கொடுக்கிறேன்.”

“அதெல்லாம் ஒத்துக்கப்படாது.” என்று ராதா  தலையாட்ட.

“முதல்ல இன்னைக்கு போயிட்டு வரேன் டி. இன்னிக்கு அவர் கூட தனியா போறதுக்கே எனக்கு பதட்டமா இருக்கு. அவர் கேட்கிற கேள்விக்கு எல்லாம் எக்ஸ்பிளைன் பண்ணனும் வேற”? மானசா பதட்டமாக பேசிக் கொண்டிருந்தாள்.

“நானும் இதுவரைக்கும் போனதில்லை. அவர் நல்ல டைப் தான். ஆனா ரொம்ப கோபப்படுவாரே?? சொதப்பி மட்டும் வச்சிறாத டி” என்றாள் ராதா.

அவள் ஆறுதல் சொல்வாள் என்று பார்த்தால்?? இன்னும் பதட்டத்தை  தான் கூட்டி இருந்தாள். பீதியை  கிளப்பி விட்டிருந்தாள்.

 தன்னறையில் அமர்ந்து கொண்டு சிசிடிவி வழியாக அவளைத்தான் அளவெடுத்துக் கொண்டிருந்தான் தேஜா. இப்பொழுதெல்லாம் அவளை அதிகமாக கவனிக்கிறான். ரசிக்கவும் செய்கிறான். அவன் சிந்தனை நிர்மலையும் தேடுகிறது.

“பரவால்ல பார்க்க  இன்னசென்ட்டா தெரிஞ்சாலும் கேனத்தனமான, வேலை செஞ்சாலும், புத்திசாலித்தனமும் அதிகமா இருக்கு” என்று அவன் உதடுகள் தானாகவே உச்சரித்தது.

…….

 இங்கு வீட்டில், குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த வெங்கடேசனை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தார் காவியா.

“இப்ப என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க? ஆபீசுக்கும் சரியா போறதில்லை? சொன்னா தானே எனக்கும் தெரியவரும்”? என்று மனைவி கேட்டது தான் தாமதம். வேகமாக வந்து மனைவியை இடித்தார் போல அமர்ந்து கொண்டார்.

 அவர் முகத்தில் இருந்த பதட்டம் காவியாவிற்கு புரிந்தது. அவர் கைகளை பற்றிக் கொண்டார். அதற்கே காத்திருந்தது போல, மல மல வென்று கொட்ட ஆரம்பித்துவிட்டார் தன் மனக்குமுறல்களை.

“கம்பெனிக்கு நான் ஒன்னும் போகாம இல்ல? உன் பையன் தான் என்னை வரவிடாம அங்க இங்கனு மாத்தி மாத்தி வேலையை கொடுத்துக்கிட்டு இருக்கான்.” என்று நிறுத்தினார்.

“ அவன் ஏங்க அப்படி எல்லாம் பண்ண போறான்?  நீங்க இப்ப எல்லாம் அதிகப்படியா சிந்திக்க ஆரம்பிச்சிட்டீங்க”? என்றார் காவியா.  

“எல்லாம் அந்த பொண்ணுக்காக தான். நான் என் ஆளுங்க மூலமா விசாரிச்சுட்டேன். இப்ப எல்லாம் அந்த பொண்ணை அவன் ஆர்வமாக பார்க்கிறதா கேள்விப்பட்டேன். வேலையில் இருந்து அந்த பொண்ண எடுத்துடலாம்னு சொன்னேன். நான் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டான். சரி அவன் பார்த்துப்பான்னு பாத்தா?? இப்ப அவளைத்தான்  பாத்துட்டு இருக்கான். இதெல்லாம் சரி கிடையாது காவியா. இது எங்க போய் முடியும்னு தெரியல?? எல்லாத்துக்கும் காரணம் அந்தப் பையன் தான். அவன் மட்டும் என் கண்ணுல கிடைச்சான்னா அவ்வளவுதான்”? என்று நிர்மலையும் இழுத்து வைத்து  அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார்.

 அதில் வேலை செய்து கொண்டிருந்தவனுக்கு புரை ஏறியது.

 அதனால்  நேஹாவின் கவனமும் அவன் புறம் சென்றது.

 ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தவனுக்கு எப்படி இவ்வளவு புரை ஏறும்?? அதிகப்படியான அவனுடைய இருமலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் கவனம் கூட அவன் பக்கம் திரும்பியது. அவன் வாயை ஒரு கையால் மூடிக்கொண்டு. அங்கிருந்து அகன்றான். அவள் புருவம் இடுங்க பார்த்துவிட்டு தன் இடத்திலிருந்து இறங்கி அவனை நோக்கி சென்றாள்.

 மட மடவென்று தண்ணீரை வாயில் கவிழ்த்து கொண்டிருந்தவனைப் பார்த்தவள். “யாரோ உங்கள திட்டுறாங்கன்னு நினைக்கிறேன்?? இப்படி தண்ணி குடிக்காதீங்க? மூச்சு அடைக்க போகுது”? என்று அக்கறையாக கூறினாள்.

அவளுடைய அக்கறையான பேச்சில் உள்ளம் குளிர்ந்தவன். மலர்ந்த முகமாக ஆவலாக  அவளை ஏறிட்டான்.

‘கொஞ்சம் விட்டா இவன் ஓவரா ரியாக்ஷன் கொடுப்பான். போயிடு நேஹா.’ என்று அவள் உள்ளம் இட்ட கட்டளையை உடனே செயலாற்றினாள். 

 

 

 

 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top