யாதவ் கிருஷ்ணாவும் செந்தாழினியும் சுயநினைவுக்கு வந்த போது வேன் அருகே இருந்தனர்.
யாதவ் மனைவியை பார்த்ததும் அவளை இறுக அணைத்துக் கொண்டான், “ராதி உனக்கெதுவும் ஆகலையே. உன்னை எப்படி கண்டுபிடிக்கறதுனு தெரியாம தவிச்சுட்டு இருந்தேன். முரளிகிட்ட இருந்து தப்பிச்சு வந்துட்டியா? எப்படி தப்பிச்சே? எங்க அவன்?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான்.
அந்த அணைப்பிலேயே கணவனை உணர்ந்தவள், மேலும் அவனோடு ஒடுங்கி நின்றாள். “யாதவ் நீங்க முன்னாடியே எனக்கு ஒரு முறை எச்சரிக்கை பண்ணதால தான் என்னால சரியா யோசிச்சு நிலைமையை சமாளிக்க முடிஞ்சது. நீங்க சந்தேகப்பட்டது போலவே அவன் உங்களை அடிச்சு போட்டுட்டு உங்க உருவத்துல வந்து என்னை கூப்பிட்டான். அவன் கண் பார்வையில தெரிஞ்ச குரூரத்தை வச்சே வந்தது முரளி தான்னு கண்டுபிடிச்சிட்டேன். அவனை சந்தேகமாக பார்த்தாலோ மறுத்து பேசினாலோ என்னையும் அவன் கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துடுவானோனு பயந்து தான் அவன் கூடவே போனேன்,
ஏதோ ஒரு குருட்டு தைரியத்துல அவன் கூட போய்ட்டேனே தவிர. எனக்கு எவ்வளவு பயமா இருந்தது தெரியுமா? கந்தர்வ வனத்துல பிரதாப்புக்கு நடந்த போல நான் பிளான் பண்ணி நடந்தாலும் அவன் பேச்சும் பார்வையும் எல்லை மீறிட்டே இருந்தது. என் பயத்தை அவனுக்கு காட்டாம எப்படியோ பேசி அவன்கிட்ட இருந்து புல்லாங்குழலை வாங்கிட்டேன்.
நான் கெஸ் பண்ணது போலவே புல்லாங்குழலை அவனால வாசிக்க முடியல. அவன்கிட்ட இருந்து புல்லாங்குழலை வாங்கி என்னையும் அறியாம கல்லாகி போனு சொன்னேன். அவ்வளவு தான் நியாபகம் இருக்கு. வேறே எதுவும் எனக்கு நியாபம் இல்ல யாதவ்”
“அப்போ முரளி இப்போ கல்லாகிட்டானா? எங்கே இருக்கான்?”
“தெரியல யாதவ்” என்று உதட்டை பிதுக்கினாள்.
“கண்டிப்பா அவனுக்கு எதாவது தண்டனை கிடைச்சிருக்கும்னு தான் நினைக்கிறேன். அப்படியே அவன் திரும்பி வந்தாலும் நான் அவனை சும்மா விடப்போறது இல்ல. சரி கிளம்பு போகலாம். வீட்ல அப்பாவும் அம்மாவும் முரளி என்னை எதாவது பண்ணிடுவானோனு ரொம்ப பயந்து போய் இருப்பாங்க. நம்மளை பாத்தா தான் நிம்மதியா இருப்பாங்க. நான் கொண்டு வந்த வேன்லயே போயிடலாம்”
“முரளி கிருஷ்ணா எங்கேனு அத்த மாமா கேட்டா என்ன சொல்வீங்க யாதவ்?”
“ம்ம்” என்று தாடையை தட்டி சில நிமிடங்கள் யோசித்தவன், “நமக்கு நடக்கிற விஷயங்களை வெளிய சொன்னா நம்மளை எல்லாரும் பைத்தியம்னு நினைப்பாங்க. அதனால நடந்த உண்மையை அப்படியே சொல்ல முடியாது. எப்படியும் அப்பா முரளி கிருஷ்ணாவுக்கு பைத்தியம் பிடிச்சு போச்சுனு நம்பிட்டாரு. அதனால அவனை மனநலம் பாக்கற ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டோம்னு சொல்லிடுவோம்” என்றான் யாதவ்
“அதுவும் சரி தான். ஆனா மறுபடியும் முரளி வந்து இதே மாதிரி பிரச்சனை கொடுத்தா என்ன பண்றது யாதவ்?”
“எனக்கென்னவோ அவன் அவ்வளவு சீக்கிரத்துல வரமாட்டான்னு தான் தோணுது. இந்த புல்லாங்குழல் நம்மகிட்ட இருக்கணும்ங்கிறதுக்காகவே ஏதோ ஒரு சக்தி நம்ம கூட இருக்கு, அது நம்மை காப்பாத்தி வழி நடத்துது. அதனால எதப்பத்தியும் யோசிக்காம நம்மால பிரயோசனமா எதாவது செய்ய முடியறதை செய்யலாம்”
செந்தாழினி சம்மதமாக தலையசைக்கவும் இருவரும் வேனில் ஏறி வெற்றிவேந்தன் வீட்டை நோக்கி சென்றனர்.
*******
காலை பதினொரு மணி, செல்வி வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் இருந்த கிருஷ்ணரின் உருவச்சிலைக்கு மாலையிட்டு கொண்டிருந்தார். “கிருஷ்ணா, என் மகன்கள் இரண்டு பேருக்கும் எதுவும் ஆக கூடாது. அவங்களை காப்பாத்து” என்றபடி பூஜையறையை அலங்கரித்து விளக்கேற்றினார்.
“செல்வி வாசல்ல கிருஷ்ணர் பாதம் வரைஞ்சு வை, கிருஷ்ணன் வரானோ இல்லையாே, என்னோட சின்ன மகன் யாதவ் கிருஷ்ணா வந்தா ரொம்ப சந்தோஷப் படுவேன். அவனுக்கு இன்னைக்கு பொறந்த நாள் வேற.
அவன் பிறந்ததுல இருந்த ஒன்பது வயசுவரைக்கும் அவன் பிஞ்சு காலை அரிசி மாவுல நனைச்சு கோலம் போடுவ, அவன் அந்த மாவு காலோட அப்படியே வீடு முழுக்க ஓடுவான்” என்று அந்த நாட்களின் இனிமையில் ஆழ்ந்தார் வெற்றிவேந்தன்.
செல்வியும் அவர் சொன்னது போல அரிசி மாவை கரைத்து வாசலில் இருந்து உட்பக்கமாக கிருஷ்ணர் பாதத்தை வரைந்துக் கொண்டிருந்தார். வாசலில் நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தார். யாதவ் கிருஷ்ணா தான் தன் மனைவி செந்தாழினியின் கரங்களை பற்றியபடி புன்னகையுடன் நின்றிருந்தான்.
“யாதவா” என்று ஆனந்த அதிர்ச்சியில் கூவினார் செல்வி
சத்தம் கேட்டு வெற்றிவேந்தனும் வேலுவும் ஓடி வந்தனர். சின்ன மகனை பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டார் வெற்றி. “யாதவ் உனக்கெதுவும் ஆகலையே?” என்றபடி அவனை மேலிருந்து கீழாக ஆராய்ச்சியாக பார்த்தார்.
“எனக்கெதுவும் ஆகலப்பா, நான் நல்லாதான் இருக்கேன்” என்றான் கனிவான குரலில்.
அவன் தான் வேனில் கிளம்பும் போது வெற்றிவேந்தன் சொன்னதை கேட்டிருந்தானே? முரளி எங்கே தன் சின்ன மகனை கொன்று விடுவானோ என்று பயந்து தான் இத்தனை நாளாக அவனை பார்க்க வராமல் இருந்திருக்கிறார். அவன் உயிரை காப்பாத்துவதற்காக தன் தந்தை பாசத்தை தியாகம் செய்திருக்கிறார். இதை அவர் ஏற்கனவே ஒரு முறை ஹாஸ்பிட்டலில் இருக்கும் போது சொல்லியிருக்கிறார். ஆனால் அவனால் அதை மனதார ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவருடைய மூத்த மகனை எதிர்த்து பெற்றவரால் எதுவும் செய்ய முடியாதா என்ன? என்று மனதோரம் ஒரு உறுத்தல் இருந்துக் கொண்டே தான் இருந்தது. ஆனால் முரளியின் உருவத்தில் இருந்த தன்னிடம் அவர் காட்டிய கோபமும், அவனை வெளியே போகவிடாமல் தடுக்க செய்த முயற்சிகளுமே அவருக்கு யாதவ்வின் மேல் எவ்வளவு பாசம் என்பதை தெளிவாக காட்டி விட்டது. அதனால் யாதவ்விற்கு தன் தந்தையின் மேல் இருந்த கோபம் முற்றிலும் போய்விட்டிருந்தது
அவர் பேசிக் கொண்டே இருந்தார், “முரளிக்கு சித்தபிரமை போய் பைத்தியம் ரொம்ப முத்திடுச்சுனு நினைக்கிறேன். அந்த நிலைமையிலும் அவனுக்கு நீ செந்தாழினியை கல்யாணம் பண்ணிக்கிட்டது தெரிஞ்சுடுச்சு போல, அதனால எங்க கிட்ட அவன் தான் யாதவ்னு சொல்லி ஒரே ஆர்ப்பாட்டம். உன்னை கொல்ல போறதா வேற சொல்லிட்டு இருந்தான். வேறவழியில்லாம அவனை உள்ள வச்சு பூட்டி வச்சிருந்தேன்.
அவனை அடச்சு வச்சதும் அவனோட ஆத்திரம் இன்னும் அதிகமாயிடுச்சு உன்னை கொல்ல போறதா கதவை ஒடச்சிட்டு வெளியே வந்துட்டான். ஹாஸ்பிட்டல்ல இருந்து பத்து பேர் வந்தும் அவனை அடக்க முடியல. அவங்க கொண்டு வந்த வேனை எடுத்துட்டு வெறியோட போனான். உன்னை என்ன பண்ண போறானோனு பயந்துட்டே இருந்தேன்” என்று நடத்தியவனிடமே நடந்ததை விளக்கி கொண்டிருந்தார்
யாதவ் வந்த புன்னகையை அடக்கியபடி மனைவியை பார்த்தான். இதெல்லாம் என்னை காப்பாற்றுவத்றகாக நீ செய்த வேலையா? என்பது போல அவள் பார்க்க, அவன் ஆமாம் என்று கண்ணசைத்தான்.
செல்வியோ தன் மூத்த மகனை தான் விசாரித்தார், “யாதவா முரளியை பார்த்தியா? அவ்வளவு ஆக்ரோஷமா வண்டியை ஓட்டிட்டு போனானே, அவனுக்கு எதுவும் ஆகி இருக்காது இல்ல?” என்றார் கவலையாக
இப்போது வெற்றியும் வேலுவும் கூட அதே கேள்வியோடு யாதவ்வை பார்த்தனர். அவன் தொண்டையை செருமிக் கொண்டு, “முரளி வேனை வேகமாக ஓட்டிட்டு வர்றதை பார்த்த என் பிரண்ட்ஸ் எனக்கு போன் பண்ணி சொன்னாங்க. அவங்க உதவியோட அவனை பிடிச்சு ஒரு சித்தமருத்துவம் முறையில மனநலத்தை சரிபண்ற ஹோம்ல சேர்த்திட்டு வந்திருக்கேன். குணமானதும் சொல்றதா சொல்லியிருக்காங்க. அதுவரைக்கும் யாரும் அவனை பார்க்க வரவேண்டாம், வந்தா இன்னும் அவனோட மூர்க்கத்தனம் அதிகமாயிடும்னு சொன்னாங்கம்மா” என்று பொய்யுரைத்தான்.
“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்” என்பதால் செந்தாழினியும் கணவன் சொல்வதையே ஆமோதித்தாள்.
“அந்த கடவுள் சீக்கிரமே அவன் மனசையும் புத்தியையும் தெளிய வைக்கட்டும்” என்று கண்மூடி இறைவனை வேண்டினார் செல்வி.
என்ன தான் முரளி முரடனாக இருந்தாலும் தன் மூத்த மகனாயிற்றே, அவன் இப்படி மனநலம் பாதிக்கப்பட்டு ஏதோ ஊர்பேர் தெரியாத மருத்தவமனையில் இருக்கிறான் என்று கேட்டதும் வெற்றிவேந்தனுக்கு மனது பாரமாகி போனது. ஆனால் மனோதிடம் மிக்கவனான அவன் எப்படியும் குணமாகி வந்திடுவனான், அவன் திரும்பி வருவதற்குள் சின்ன மகனுடன் வாழும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள கிடைத்த வாய்ப்பாகவே இதை நினைத்தவராக,
“சரி சரி, புள்ளைங்களுக்கு விருந்து சமைச்சு போடு செல்வி. பாவம் கல்யாணம் ஆன சின்னஞ்சிறுசுங்க, முரளியோட பிரச்சனையால இவங்களை நாம சரியாவே கவனிக்கல” என்றார்.
அப்போது தான் செல்விக்கு உறைத்தது, அவர் தன் கணவனை பற்றிய கவலையில், அவர்களின் முதல் இரவை கூட நடக்க விடாமல் கதவை தட்டியதும், பின்பு மூவரும் கிளம்பி மருத்துவமனைக்கு வந்ததும் நினைவு வந்தது. அதற்குபின் அவர்கள் முரளியின் பிரச்சனையால் தனிமையில் இருந்ததாக அவருக்கு நினைவில்லை. இன்று எப்படியும் அவர்களுக்கான தனிமையை கொடுத்தே ஆக வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.
“சரி இரண்டு பேரும் குளிச்சுட்டு வாங்க, சாமி கும்பிட்டு பலகாரம் சாப்பிடுங்க, அப்புறம் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க” என்று அவர்களை உள்ளே அனுப்பினார். அவர்களுக்கு வேண்டியதை செய்ய வேலுவும் அவர்களோடு சென்றார்
அவர்கள் சென்றதும் செல்வி தயங்கி கொண்டே கணவனை பார்த்து, “ஐயா” என்றார்
“சொல்லு செல்வி”
“அது வந்துங்க, இன்னைக்கு ராத்திரி” என்று அதற்குமேல் அவரிடம் அதைப்பற்றி எப்படி பேசுவது என்று புரியாமல் வெட்கத்துடன் தலையை குனிந்துக் கொண்டு புடவை முந்தாணையை முடிச்சிட்டு அவிழ்த்துக் கொண்டிருந்தார்.
திருமணம் ஆன புதிதில் தன் முன்னால் வெட்கப்பட்டு கொண்டு நின்றிருந்த மனைவியின் கோலம் அவர் நினைவில் நிழலாடியது. பல வருடங்களுக்கு பிறகு இன்று செல்வி அதே வெட்கத்துடன் பேச முடியாமல் தவிப்பதை பார்க்க வெற்றிவேந்தனுக்கு உல்லாசமாக இருந்தது.
மனைவியின் காதருகே குனிந்து மீசை உரச “சொல்லு செல்வி, இன்னைக்கு ராத்திரி என்ன?” என்றார் ஆழ்ந்த குரலில்
அதிர்ந்து போய் நிமிர்ந்து கணவனை பார்த்து திருதிருவென விழித்தார் செல்வி, ‘என்ன இவுக இத்தனை வருஷத்துக்கப்புறம் இப்படி பேசுறாக’
“என்ன செல்வி புதுசா பார்க்கிற, ஓ ரொம்ப வருஷமாயிடுச்சில்ல எல்லாம் மறந்துட்டியா?” என்று கண்சிமிட்டினார்.
“ஐயோ இத்தனை வருஷத்துக்கப்புறம் என்னங்க ஐயா இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க” என்றார் சிணுங்கலோடு
“எத்தனை வயசான என்ன? என் பொண்டாட்டி கிட்ட தானே இப்படி கேட்க முடியும்?”
“ம்ம், முரளி இல்லாத தைரியத்துல இப்படி எல்லாம் பேசறீங்களா?” என்றார் புன்னகையுடன். ஆனால் வெற்றிவேந்தனின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.
“சாரி செல்வி என்னை மன்னிச்சுடு, என்ன இருந்தாலும் உன்னை நான் வீட்டை விட்டு அனுப்பி இருக்க கூடாது. அனுப்பிட்டு இத்தனை வருஷமாக உன்னை வந்து பாக்காம இருந்தது அதை விட பெரிய பாவம்” என்று அவர் மேலும் ஏதோ பேசிக் கொண்டே போக செல்வி அவசரமாக எட்டி அவர் வாயை தன் உள்ளங்கையால் மூடினார்.
“எதுவும் பேசாதீங்க, உங்க மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல. நீங்க வேணும்னு என்னைய ஒதுக்கி வைக்கலயே, சூழ்நிலையும் சந்தர்ப்பமும் அப்படி ஆகி போச்சு. இதுல யாரையும் குத்தம் சொல்ல முடியாது. இனி அதைப்பத்தி பேச வேணாமுங்க” என்றார்
“அப்போ என்னைய ஏத்துக்குவியா செல்வி”
“ஏத்துக்க என்ன இருக்கு, நான் எப்பவுமே உங்க பொஞ்சாதி தாங்க”
“நான் அதை சொல்லல செல்வி” என்று செல்வியை குறும்பாக பார்த்தார்.
அவர் பார்வையின் அர்த்தம் புரிய நாணத்தோடு, “ஐயோ பேர புள்ளைங்க வற்ர வயசுல என்னங்க இதெல்லாம்? நான் கேட்க வந்ததே நம்ம யாதவ்வுக்கு நடக்க வேண்டியது எல்லாம் நடக்கணும்னு தான். நீங்க என்னடான்னா” என்று நாணத்தோடு திரும்பி செல்ல எத்தனித்தவரின் கரம் பற்றினார் வெற்றி வேந்தன்.
“அவங்களுக்கு நடக்கட்டும், நமக்கும் ஒருபக்கம் நடக்கலாமில்லயா?” என்றார் குறும்புடன் சிரித்து. “ஐயா கைய விடுங்க” என்று பதறியபடி செல்வி கணவனிடமிருந்து கரத்தை விலக்கி கொள்ள போராடினார்.
“க்க்கும்” என்ற யாதவ்வின் கனைப்பு சத்தத்தில் இருவரும் திகைத்து விழிக்க வெற்றி அவசரமாக மனைவியின் கரத்தை விடுவித்து விலகி நின்றார்.
“இங்கே யாரு புதுசா கல்யாணம் ஆனவங்கனே தெரியலயே மாமா” என்று வேலுவுக்கு சொல்வது போல சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.
செல்வி அதற்கு மேல் அங்கே நிற்காமல் தட்டு தடுமாறி ஓடி சமையலறைக்குள் ஓடினார். அங்கே செந்தாழினி இடுப்பில் கைவைத்தபடி “என்னத்த மாமா ரொம்ப ரொமாண்டிக் போலயே” என்றாள் சிரித்துக் கொண்டே
செல்விக்கு வெட்கம் பிடுங்கி தின்றது, ‘இந்த மனுசனுக்கு என்னாச்சு இன்னைக்கு, என் மானத்தை வாங்கிபுட்டாரே’ என்று மனதுக்குள் கணவனை திட்டியபடி, “அது ஒண்ணுமில்ல மருமவளே, உங்களுக்கு தான் முத ராத்திரிக்கு ஏற்பாடு பண்ணனும் சொல்லிட்டு இருந்தாரு” என்றார் தயங்கிய குரலில்
“எங்களுக்கா? பாத்தா அப்படி தெரியலயே அத்தே” என்று அவள் மேலும் சிரிக்க, செல்விக்கு ஐயோ என்றாகி போனது.
******
மனைவியை வம்பிழுத்தாலும் வெற்றிவேந்தன் செல்வி சொன்ன ஏற்பாட்டை வேலுவை வைத்து செய்து முடித்திருந்தார். “நம்ம யாதவ் பிறந்த வீடு இது, அவனோட பிள்ளையும் இங்கே தான் பிறக்கணும்” என்று வேலுவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
வீட்டில் அவர்களுக்காக செய்யப்படும் ஏற்பாட்டை உணர்ந்து இருந்ததால் யாதவ்வின் கண்கள் அடிக்கடி செந்தாழினியை தேடியது. அவள் செல்வியோடு பேசி அரட்டை அடித்துக் கொண்டு கணவனை வேண்டுமென்றே அலைய விட்டாள்.
அன்றிரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த அறையில் விளக்குகள் அணைக்கப்பட்டு மெழுகுவர்த்திகள் அறை முழுவதும் ஆங்காங்கே ஏற்றப்பட்டிருந்தது. யாதவ் கிருஷ்ணா தன் ராதிக்காக காத்திருந்தான். செந்தாழினியும் மயில் கழுத்துநிற பட்டுப்புடவையில் மயிலென நடந்து வந்தாள். அந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அவளின் செங்காந்தள் மலர் முகம் இன்னுமே பிரகாசமாக ஜொலித்தது.
யாதவ் கிருஷ்ணா மனைவியை காதலுடன் பார்த்து தன்னிடம் அடைக்கலமாகி விடு என்பது போல தன் இரு கைகளையும் விரித்து காட்டினான். அதற்காகவே காத்திருந்தது போல அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள். தனக்கு சொந்தமான இடத்தை சேர்ந்து விட்டது போன்றதொரு உணர்வு தோன்றியது அவளுக்கு. மேலும் மேலும் அவன் மார்புக்குள் புதைந்து போகவே துடித்தாள். அவனுக்கும் அப்படித்தான் தோன்றியதோ என்னவோ!
“ராதி, முதல் டைம் போலவே தோணலடி, ஆனா ரொம்ப நாளுக்கு அப்புறம் நாம சேர்ந்தது போல ஒரு பீலிங் வருது, உண்மையை சொல்லு அன்னைக்கு நமக்கள்ள எதுவும் நடக்கலயா?” என்று கேட்டபடி அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான்.
அவள் பதில் எதுவும் பேசாமல் அவன் மார்பில் விழி மூடி அவன் வாசத்தை ஆழ்ந்து அனுபவித்தாள். அவனோ அவள் இடையை பற்றி அழுத்தவும், அவனிடமிருந்து விலகாமலே புல்லாங்குழலை அவனிடம் நீட்டினாள். அதை ஆசையோடு வாங்கியவன் தன் மனைவிக்காக இதயத்தை உருக்கும் வகையில் காதல் ராகம் வாசித்தான். இசையின் இனிமையில் இருவரும் லயித்திருந்தனர். அவன் வாசித்த கீரவாணி ராகம் அவளுக்குள் மோக ராகமாக ஊடுருவி உடெலங்கும் ஒரு வித சிலிர்ப்பை தந்தது. இப்போது அவன் இடுப்பை தன் இருகைகைளால் சுற்றி வளைத்தபடி அண்ணாந்து அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். இதழ்கள் அவனை நோக்கி மலர்ந்திருந்தன.
யாதவா என்னை வாசி என்பதாய் அவள் கண்களும் இதழ்களும் அவனை யாசிக்க, இப்போது புல்லாங்குழல் மீதிருந்த தன் இதழ்களை பிரித்து தன்னவளின் ஈரமான இதழ்களில் பதித்தான். பன்னீர் ரோஜா போன்ற அவள் இதழ்களை மெல்ல ஒற்றியவன் பின்பு தேன்பருகும் வண்டாக மாறி இருந்தான். அவன் கைகள் இப்போது புல்லாங்குழலை பக்கத்தில் இருந்த மேஜையின் மேல் வைத்துவிட்டு தன் மனைவியின் பூவுடலை தழுவிக் கொண்டது.
இதழும் இதழும் உரசிக் கொள்ள இரு இதயங்களும் இடம் மாறிக் கொண்டன. யாதவனின் விரல்கள் அவள் மேனியெங்கும் யாழிசைக்க, அவளின் செல்ல சிணுங்கல்கள் அங்கே மோக கீதமாய் அந்த அறையெங்கும் ஒலிக்க தொடங்கியது.
அவள் அவனருகினில்! இதை விட ஒரு கவிதை இருக்கிறதா என்ன? யாதவனின் இன்ப தீண்டல்களில் நிலைத்தடுமாறி, கால்கள் தொய்ந்து போக கண்கள் சொருக கீழே விழப்போனாள். அவள் இடையை பற்றி அவள் கண்களை ஆழ்ந்து நோக்கினான்
“என்னாச்சு ராதி?” என்றான் ஆழ்ந்த குரலில்
“யாதவா நாம இப்போ சுயநினைவுல தான் இருக்கோமா? இல்லை வேறொருத்தவங்களா இருக்கோமா? எனக்கு எதுவுமே புரியலை யாதவா? இது கனவா ? நிஜமா? இல்லை இரண்டுமேவா”
“உனக்குள்ள என்னையும் எனக்குள்ள உன்னையும் தேடற நேரம்டி இது? இப்போ தான் நீ ஆராய்ச்சி பண்ணுவியா? இது நம்மோட நெடுநாளைய கனவு நிறைவேறும் நிகழ்காலம், இது கனவும் நிஜமும் சேர்ந்த ஏகாந்தம்” என்றபடி அவள் கழுத்துவளைவில் முத்தமிட்டவன் தன் இருகைகளால் அவள் பூமேனியை தூக்கிக் கொண்டு கட்டிலில் படுக்க வைத்தனான்.
ரோஜா மலரின் செவ்விதழ்களால் பரப்பப்பட்ட மலர் படுக்கையில் அவள் இருக்க, அவள் மலர் மேனியில் வண்டென படர்ந்தான் யாதவ் கிருஷ்ணா.
கனவா நிஜமா
இது இரண்டும் தானா?
விடை அறிகின்ற தேடல்கள்
தேவை தானா?
வெயிலா மழையா இது வானவில்லா
இதை அணைக்கின்ற ஆகாயம்
நானே நானா?
வானவில்லாக ஜொலித்தவளை ஆகாயவண்ணன் தன் ஆளுமைக்குள் கொண்டு வந்திருந்தான்
தன் விரல்களாலும் இதழ்களாலும் கண்களாலும் செந்தாழினி என்னும் கவிதையை விடிய விடிய ரசித்து வாசித்தான் யாதவ். தன்னவன் தங்குதடையின்றி வாசிக்க தன்னை முழுதாய் கொடுத்து அவனுள் முழ்கிப் போனாள் அவள்.
நீ எனதருகினில் நீ
இதை விட ஒரு கவிதையே கிடையாதே
நீ எனதருகினில் நீ
இதை விட ஒரு புனிதமும் இருக்காதே
அவனும் அவளும் இணைந்து ஒரு ரகசிய கவிதை வாசிக்க, புனிதமான தாம்பத்யம் அங்கே அரங்கேறியது.
********
மறுநாள் காலையில் யாதவ் கண்விழிக்கும் போது, அவனுடைய உரமேறிய மார்பில் மலர்கொடியாக படர்ந்திருந்தாள் செந்தாழினி.
அவளோடு உருண்டு, தனக்கு கீழ் கொண்டுவந்தவன் மீண்டும் அவளோடு தன் கூடலை தொடர்ந்தான். “யாதவா ராத்திரி போட்ட ஆட்டம் பத்தாதா, உடம்பெல்லாம் வலிக்குதுடா” என்று சிணுங்கினாள்.
“என்னடி இது? அன்னைக்கும் அப்படி தான் சொன்னே, அப்புறம் எதுவுமே நடக்கலனு சொல்லிட்டே. இன்னைக்கும் அதே போல சொல்றே? இப்பவும் எதுவுமே நடக்கலைனு சொல்லிடுவியாடி? அப்ப ராத்திரி நான் பண்ண பர்பாமன்ஸ் எல்லாம் வேஸ்டா?” என்றான் அதிர்ச்சியாக
கண்களை திறக்காமலே மலர்ந்து சிரித்தவள், “இது கனவா நிஜமானு அப்பவே கேட்டேன். நீதான் இந்த ஆராய்ச்சி முக்கியமானு கேட்டே, எனக்கு இன்னும் அந்த டவுட் போகல, கனவுல நடந்தது போல இருக்கு யாதவா” என்றாள்.
“இருக்கும்டி இருக்கும். நைட் பூரா தூங்காம வேலை பாத்தவன் நானு. கனவுனா சொல்றே, இருடி இது நிஜம்னு உறைக்கிற மாதிரி பண்றேன்” என்றபடி இரவு அவளிடம் காட்டிய மென்மையை விடுத்து வன்மைக்கு மாறி இருந்தான். அவன் திருட்டுகனியை கடிப்பது போல அவள் முகம் எங்கும் ஆங்காங்கே செல்லக்கடி கடித்து வைக்க, அவள் மேனியெங்கும் சிவந்து போனது.
அவன் கொடுத்த வலியும் இன்பத்தை தர அவன் முதுகை வருடி தன் ஆதரவை காட்டினாள். தன்னவளின் மேலுள்ள தீராக் காதலை தீர்த்துக் கொள்ள மீண்டும் களமிறங்கி விட்டான் யாதவ் கிருஷ்ணா.
இப்படியே ஒரு வாரம் இரவும் பகலுமாக தன்னவளோடு தனித்திருந்தவன் தன் பெற்றோருக்கு தேவையானதையும் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டான்.
வெற்றிவேந்தனுக்கு தன் இளையமகன் தன்னை புரிந்துக் கொண்டதிலும் மனைவியோடு சேர்ந்ததிலும் மனம் நிறைவாக இருந்தது. முரளி மட்டும் யாதவ் போல இருந்திருந்தால் இந்நேரம் வாழ்க்கை எவ்வளவு இனிமையானதாக இருந்திருக்கும்? அவனுக்கும் திருமணம் செய்து வைத்து இருமகன்களையும் அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகளோடு அவர்கள் வாழ்வதை கண்குளிர பார்த்திருக்கலாம்.
“யாதவா குடும்பத்தோடு ஒரு முறை எல்லாரும் வெளியே போய்ட்டு வரலாம்ப்பா” என்றார்
“போகலாம்பா, ஒரு முறை ராதியோட அப்பாவையும் நாம குடும்பமா பார்த்துட்டு வந்தா அவர் ரொம்ப சந்தோஷப்படுவார். போய் வரலாமாப்பா?”
“அதுகென்ன தாராளமா போய்ட்டு வரலாம், உன் அம்மாகிட்டயும் பொண்டாட்டிகிட்டயும் ரெடியா இருக்க சொல்லு. நாளைக்கே போய்ட்டு வரலாம்” என்றார்.
இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த செந்தாழினி சந்தோஷமாக தயாரானாள்.
“யாதவா சென்னைல இருந்து டெல்லிக்கு டிரெயின்ல போகலாம்பா, பிளைட்ல சீக்கிரமா போய் இறங்கறத விட, டிரெயின்ல எல்லாரும் குடும்பமா பேசிட்டு அரட்டை அடிச்சிட்டு போகலாம், அது ஒரு தனிசுகம். சின்னவயசுல போனது” என்று வெற்றிவேந்தன் சொல்லிவிட, அனைவரும் டிரெயினில் போக தயாராகினர். வேலு வீட்டை பார்த்துக் கொள்வதாக கூறி அங்கேயே தங்கி விட்டார்.
டிரெயினில் தந்தையும் மகனும் அரட்டை அடித்துக் கொண்டு வர, செல்வி தன் மருமகளிடம் ஏதேதோ கதைகள் பேசிக்கொண்டிருந்தார். வீட்டிலிருந்த வேலுவிற்கு அலங்காநல்லூரில் இருந்து போன் வந்தது. அதில் சொல்லப்பட்ட செய்தியை கேட்டு அதிர்ந்து போன வேலு வெற்றிவேந்தனுக்கு போன் செய்து செல்வியிடம் பேச நினைத்தார்.
பின்பு வெகுநாட்களுக்கு பிறகு இப்போது தான் குடும்பமாக சென்றிருக்கிறார்கள் எதற்கு தொல்லை செய்ய வேண்டும் என்று நினைத்து தன் எண்ணத்தை கைவிட்டவர், அலங்காநல்லூருக்கு செல்ல அவசரமாக ஆயத்தமானார். ஏனோ வேலுவின் கண்களில் நிற்காமல் கண்ணீர் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.
வேலு போன் செய்யாமல் போனது நன்மைக்கா தீமைக்கா என்று பொறுத்திருந்து பார்ப்போம்
(தொடரும்)