வேங்குழல் 22

யாதவ் கிருஷ்ணா வேனில் வெகுதூரம் பயணம் செய்தான், முரளி எங்கே சென்றிருப்பான் என்ற கேள்வி மூளையை குடைந்து கொண்டிருந்தாலும் அவன் தன் வேகத்தை குறைத்திருக்கவில்லை.

 

அரண்மனை மாளிகையில் செந்தாழினி முரளியை திரும்பி பார்த்து சிரித்துக் கொண்டே ஓடினாள்

 

“வாராய்  வாராய்  நீ  வாராய்

நான்  போகும்  இடம்  வெகு  தூரமில்லை நீ வாராய்

கூறாய்  கூறாய்  நீ  கூறாய்

என்  ரத்த  இதழ்  உன்  முத்த  கடல் என  கூறாய்” 

 

என்று அவனை பார்த்து பாடியபடி தன் நீள் பாவாடையை இருகைகளால் தூக்கிக் கொண்டு அவள் ஓட

 

“தாராய்  தாராய் உனை  தாராய்

நான்  காத்திருக்க  இனி

நேரமில்லை   நீ   தாராய்

 

கள்ளாக  நீ  உள்ளுக்குள்  தீ

ஏன்  இன்னும்  தாகம்  ஊற்றிகொள்ளட்டா

பஞ்சத்தில்   நான்  மஞ்சத்தில்  மான்

கொஞ்சல்கள்  வீண்  அள்ளி  தின்னட்டா !!!

 

என்று தீரா மோகத்துடன் அவளை நெருங்கி விட்டான். அவன் கைகளை நீட்டி அவளை தொட முயற்சிக்க, அவள் குனிந்து வளைந்து நெளிந்து அவனுக்கு போக்கு காட்டிக் கொண்டிருந்தாள்.

 

வளையல்  உனது  கரங்கள்  எனது அழகே

வளைவு  உனது  வரங்கள்   எனது மலரே

 

என்று பாடியபடி அவளின் வளைக்கரத்தை பற்றி இழுத்தான். அவள் அதிர்ந்து போய் அவனை பார்க்க, அவன் கண்களில் மோகத்தீ கொழுந்து விட்டு எரிந்தது, அவனையும் அறியாமல் தன்னை வெளிப்படுத்தினான்,

 

நீ  எந்தன்  சொந்தம்  இல்லை மானே  மானே

ஆனாலும்  உந்தன்  மேலே  மோகம்  தானே

 

என்றபடி அவள் மலர்கூந்தலை ஒருகையால் பற்றி தன் முகம் நோக்கி செந்தாழினியின் மதிமுகத்தை நிமிர்த்தினான். அவள் கண்களின் இமைகள் படப்படக்க அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவள் அதிர்ச்சியை அவதானிக்கும் நிலையில் அவன் இல்லை. அவன் பார்வை அவளின் கள்ளூரும் இதழில் தேன் பருக துடித்தது. இதழ்களின் வரிவடிவத்தை மோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

*********

 

அதே நேரம் யாதவ் கிருஷ்ணா ஒரு காட்டு பகுதிக்கு வந்திருந்தான். வழியில் மரம் விழுந்திருந்ததால் மேற்கொண்டு வேனை அவனால் செலுத்த முடியவில்லை. ஸ்டிரியங்கில் ஓங்கி குத்திவிட்டு கீழே இறங்கினான். 

 

நள்ளிரவு நேரம் என்பதால் அந்த அத்துவான காட்டில் எந்த பக்கம் வழி என்று கூட தெரியவில்லை. அவன் போகவேண்டிய பாதை இது தானா? அதுவும் தெரியாது. வானத்தை நோக்கி தலையை நிமிர்த்தி  “ஆ” என்று சத்தமாக கத்தினான். அவனுக்குள் எல்லையில்லா கோபம் ஆத்திரம் பொங்கி எழ, அதை கட்டுப்படுத்தும் வழிதெரியாமல் ஆகாயமே அதிரும்படி கத்திக் கொண்டிருந்தான்.

 

பைராகி சொன்ன விஷயத்தை அவன் இவ்வளவு சாதாரணமாக எடுத்திருக்க கூடாது. புல்லாங்குழலை அவன் கையால் யாருக்கும் தரக்கூடாது என்று அவர் சொல்லியதை அவன் பொருட்படுத்தாமல் முரளியிடம் கொடுத்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? 

 

பிறன்மனை நோக்காத பேராண்மையை முரளியிடம் எதிர்ப்பார்க்க முடியுமா? செந்தாழினியின் நிலை என்னவோ? தவித்தான். ஆனால்  என்ன தான் முரளி யாதவனின் உருவத்தில் சென்றிருந்தாலும் செந்தாழினியின் புத்தி கூர்மையை பற்றி யாதவ் அறியாததா என்ன?

 

ஒரே நாளில் அவன் முரளிகிருஷ்ணா இல்லை என்று கண்டுபிடித்தவளுக்கு, வந்திருப்பவன் தன் கணவன் யாதவ் கிருஷ்ணா இல்லை என்பதை நிச்சயம் கண்டுபிடித்திருப்பாள். ஆனால் அவனிடமிருந்து எப்படி தப்பிக்க போகிறாள்? என்பதே யாதவனுக்கு கவலை.

 

முரளியின் கையில் இப்போது மந்திரசக்தியுடைய புல்லாங்குழல் இருக்கிறது. அவள் கொஞ்சமாக எதிர்வினை புரிந்தாலும் அந்த மந்திரக்கோலால் அவளை அவன் வசப்படுத்திவிடுவானே? அதை நினைக்கும் போது ஆத்திரம் வர அங்கே பாதையிலிருந்த மரத்தை முரளியாய் நினைத்து தன் வலிய கரத்தால் தூக்கி வீசினான்.

 

அதே சமயம் மணி பன்னிரண்டை நெருங்கிவிட்டதால் கந்தர்வர்கள் எல்லாம் தங்கள் இசை கருவிகளுடன் யாதவனின் வேங்குழல் நாதத்தை கேட்க புறப்பட்டு விட்டார்கள். மாயோன் எந்த இடத்தில் மறைந்திருக்கிறானோ அவர்களுக்கு தெரியாது. ஆனால் அவன் பிறந்த நாளில் வேணுகானம் இசைப்பதை மட்டும் அவன் மறக்க மாட்டான்.

 

ஆண்டு தோறும் அந்த இசை வரும் சத்தத்தை வைத்தே அவன் இருக்கும் இடத்தை கண்டறிந்து கந்தர்வர்கள் அங்கே சென்று அவர்களுடைய இசை வாத்தியங்களையும் வாசித்து, மாயவனிடம் ஆசிப்பெற்று வருவது வழக்கம். சில சமயம் அவன் புல்லாங்குழலை அவர்களிடம் கொடுத்து அனுப்புவதும் உண்டு. அதை பயபக்தியுடன் வாங்கி வந்து மீண்டும் யமுனை ஆற்றை கடந்து பந்திர்வன் காட்டுக்குள் அது ஏற்கனவே இருந்த இடத்தில் வைத்துவிட்டு யாதவனின் வேங்குழலுக்கு காவல் இருப்பார்கள்.

 

இந்த ஆண்டும் பகவானை தரிசிக்க, அவர் உருவில் இப்போது இருக்கும் யாதவ் கிருஷ்ணாவை தேடி தங்க ரதத்தில் வானில் பறந்து வந்துக் கொண்டிருந்தனர். அவன் வேங்குழல் இசை எங்காவது கேட்கிறதா என்று காதை கூர்மையாக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

 

அதே சமயம் அந்த காட்டில் பாதையை மறைத்திருந்த மரத்தை தூக்கி வீசி விட்டு திரும்பிய யாதவனின் காலில் ஏதோ தட்டுப்படவும் கீழே குனிந்து பார்த்தான். அது ஒரு மூங்கில் கொம்பு. அந்த நேரத்தில் அவனுக்கு தோன்றிதை செய்ய தொடங்கினான்.

 

ஆம், மூங்கில் கொம்பை எடுத்து அதை மூன்று அடியாக உடைத்து உடைந்த பகுதியின் கூர்மையை கொண்டே அதில் துளைகளையும் இட்டு வேணு என்னும் புல்லாங்குழலை உருவாக்கி இருந்தான். தான் இருக்கும் நிலையில் வேணுகானம் இசைப்பது தான் முக்கியமா என்று எல்லாம் யோசிக்க அவன் இப்போது சாதாரண யாதவ் கிருஷ்ணா இல்லை. மணி பன்னிரண்டை நெருங்கிவிட்டதால் யாதவனாகி விட்டான் போலும்.

 

வேங்குழலை எடுத்து தன் இமை மூடி வேணுகானம் அதை இசைக்க தொடங்கினான். அந்த இசை சாதாரண மனிதர்களுக்கு கேட்காது. ஆனால் வானில் அவனை தேடிவந்துக் கொண்டிருந்த கந்தர்வர்களுக்கு தெளிவாக கேட்டது. அவர்கள் அவன் இருந்த இடத்திற்கு வந்திறங்கி அவன் காலில் விழுந்து வணங்கினர்.

 

அவன் கையில் பான்சூரி என்னும் முரளியை காணவில்லை, எளிமையான வேணு இருப்பதை பார்த்து திகைத்தாலும், அவனை கேள்வி கேட்கும் எண்ணமில்லாமல் தங்கள் இசை வாத்தியங்களை எடுத்து வாசிக்க தொடங்கினார்கள். அதில் கண்களை திறந்து தன் வாசிப்பை நிறுத்தியவன் கையை நீட்டி அவர்களை தடுத்தான்.

 

“கந்தர்வர்களே இதற்கெல்லாம் நேரமில்லை. நான் இப்போதே ராதியை காணவேண்டும். என்னை அவள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்றான்

 

அதற்கு பின் கந்தர்வர்கள் புடைசூழ யாதவன் பறக்கும் தங்க ரதத்தில் ஏறி முரளி இருந்த அரண்மனைக்கு பயணிக்க தொடங்கினான்.

 

********

 

முரளி கிருஷ்ணா தன் இதழ்நோக்கி வரவும், சட்டென்று முகத்தை திருப்பிக் கொண்டாள் செந்தாழினி.

 

புருவம் சுருக்கி “என்னாச்சு செந்தாழினி” என்றான் முரளி கிருஷ்ணா

 

“யாதவ் நான் உங்க கிட்ட என்ன சொல்லி இருக்கேன்?” என்று அவனை எதிர் கேள்வி கேட்டாள்.

 

“என்ன சொல்லி இருக்கே?”

 

“போங்க யாதவ் எல்லாமே மறந்துட்டீங்களா? நாம முதல் முறையா சேரும் முன்னாடி நீங்க அந்த முரளி புல்லாங்குழலில் எனக்காக ஒரு முறை வாசிக்கணும்னு சொன்னேனே நியாபகம் இல்லையா? இந்த புல்லாங்குழல நீங்க வாசிச்சா எப்பேர்ப்பட்டவர்களும் உங்க மேல காதல்வயப்படுவாங்க. ஏற்கனவே உங்களோட காதல் வலையில் இருக்கிற நான் நீங்க வாசிச்சதும் உங்களோட மோகவலைக்குள் சிக்கிக்குவேன்ல” என்றாள் சிணுங்கலாக

 

“ஆஹாங், அப்படியா” என்று உல்லாசமாக சிரித்தவன், “எனக்கு வாசிக்க தெரியாதே பேபி” என்றான்.

 

“டிரை பண்ணுங்க யாதவ், அன்னைக்கு மாதிரி நீங்க சும்மா வாயில வச்சு ஊதூங்க, அதுல தானே நான் உங்க மேல மயங்கினேன்” என்றாள் மயக்கும் புன்னகையோடு

 

‘ஒஹோ அதனால தான் இவ யாதவ்கிட்ட மயங்கிட்டாளா? அதானே பாத்தேன். அவனை விட பணக்காரனாகவும் பளிச்சுனும் இருந்த என்னையே இவ கண்டுக்கல, இந்த கரியனை எப்படி காதலிச்சானு குழம்பிட்டு இருந்தேன். இதானா விஷயம். இப்பவே அந்த புல்லாங்குழலை வாசிச்சு என் காதல் அடிமையா இவளை மாத்திடணும்’ என்று எண்ணியபடி உள்ளே சென்று மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்த புல்லாங்குழலை எடுத்து வந்து அவள் முன்னால் நின்றான்.

 

“ம் வாசிங்க யாதவ்” என்றாள் கிறங்கிய பார்வையுடன்

 

அவள் பார்வை தந்த மயக்கத்தோடு புல்லாங்குழலை எடுத்து வாசிக்க முயற்சி செய்தான். அதிலிருந்து எந்த சத்தமும் வரவில்லை. முரளிகிருஷ்ணா என்று பேர் வைத்திருந்தால் முரளியை எடுத்து அவனால் வாசித்து விட முடியுமா என்ன? முரளியை மந்திர கோலாக அவனால் உபயோகப்படுத்த முடியுமே தவிர, அதை வாசிக்கும் அருகதை அவனுக்கு இல்லை என்பதை அவன் உணர்ந்திருக்கவில்லை.

 

மூச்சை அடக்கி அவனும் வாசித்தான், இசை வரவில்லை என்றாலும் பரவாயில்லை, சத்தமாவது வரவேண்டும் அல்லவா? அதுகூட வரவில்லை.

 

“செந்தாழினி இது ரொம்ப பழசாயிடுச்சு, பாரு சத்தமே வரல” என்றான் சலிப்பாக.

 

“இல்லயே அன்னைக்கு நல்லா தானே இருந்துச்சு, கொடுங்க நான் ஒரு முறை டிரை பண்றேன்”

 

“சரி டிரை பண்ணு, ஆனா அதுல மியூசிக் வந்தாலும் வரலனாலும் நீ என்னோட ஆசையை நிறைவேத்தணும் சரியா? அப்புறம் அதை வாசிச்சா தான் மத்தது எல்லாம்னு சொல்லக்கூடாது” என்று டீல் பேசினான்.

 

“சரி யாதவ் நான் டிரை பண்றேன். அதுக்கப்புறம் நடக்கறது எல்லாம் உங்க சாமர்த்தியம்” என்றாள் கண்சிமிட்டி

 

முரளி கிருஷ்ணா சிரித்துக் கொண்டே, “சரி இந்தா” என்று தன் கையில் இருந்த புல்லாங்குழலை எடுத்து செந்தாழினியின் கையில் கொடுத்தான்.

 

அதை கையில் வாங்கியவள் தன் வாயருகே கொண்டு சென்றபடி எதிரில் இருந்தவனை அழுத்தமாக பார்த்து “என்ன முரளி உங்களை ரொம்ப புத்திசாலினு நினைச்சேன். மந்திரசக்தி கொண்ட பொக்கிஷத்தை என்னை நம்பி இப்படி டக்குனு கொடுத்துட்டீங்க? அட ஆமா இல்ல, எப்பேர்ப்பட்ட சாம்ராஜ்யம் எல்லாம் பெண்ணாசையால தரைமட்டம் ஆகி இருக்கு. ஆனானப்பட்ட விசுவாமித்ரரே புலன்களை அடக்க முடியாம மேனகை கிட்ட தோத்துட்டாரு. நீங்க என்ன சாதாரண மனுஷன் தானே மிஸ்டர் முரளி கிருஷ்ணா” என்றாள் எகத்தாளமாக

 

அவள் பேசியதை முழுதாக கிரகிக்க முடியாவிட்டாலும் கடைசியாக சொன்ன முரளிகிருஷ்ணாவில் விக்கித்து போய் செந்தாழினியை பார்த்தான்.

 

உச்சப்பட்ச அதிர்ச்சியில், “செந்தாழினி, நான் யாதவ் கிருஷ்ணா, என்னை ஏன் முரளினு கூப்பிடுறே” என்றான் எச்சிலை விழுங்கி கொண்டு

 

“அடச்சீ, நீ யாதவ் கிருஷ்ணாவா? என் யாதவனை எனக்கு தெரியாதா? நீ சென்னை வீட்ல இருந்த என்னை கூப்பிட்டு உடனே கிளம்ப சொன்னதுமே எனக்கு தெரியும்டா நீ யாதவ் இல்லனு

 

என் யாதவ் இப்படி நட்டாத்துல யாரையும் விட்டுட்டு வரமாட்டாரு. நீ எப்பேர்ப்பட்ட அயோக்யன்னு தெரிஞ்சும் உனக்கு பணிவிடை செஞ்சாரு. அப்படியே கிளம்பறதா இருந்தாலும் கோயிலுக்கு போன அவங்க அப்பா அம்மா வந்ததும் சொல்லிட்டு தான் கிளம்பி இருப்பார். என்ன தான் நீ யாதவ் உருவத்துல இருந்தாலும் நீ யாதவ் இல்ல முரளி தான்னு அந்த கணமே நான் தெரிஞ்சுக்கிட்டேன்.

 

ஆனா யாதவ்வுக்கு என்னாச்சுனு தெரியாம நான் உன்கிட்ட என்னை வெளிப்படுத்திக்க கூடாதுனு அமைதியா நீ சொன்னதை எல்லாம் கேட்டேன். உன்னை காரை எடுக்க சொல்லிட்டு நீ இருந்த அறைக்கதவோட சாவி துவாரத்துல பார்த்தேன். உன்னோடு உருவத்துல என் யாதவ் அந்த அறையோட மூலையில் மயங்கி கிடந்தாரு.

 

அடிப்பட்டு மயங்கி கிடந்தது உண்மையில் முரளியா இருந்தா நிச்சயமா என் யாதவ் அப்படி அவனை விட்டுட்டு வரமாட்டாரு. அப்பவே கண்பார்ம் பண்ணிட்டேன் ரூமுக்குள்ள இருக்கிறது தான் என் கணவர் யாதவ். ஏதோ ஒருவகையில நீ ஏமாத்தி புல்லாங்குழலை யாதவ் கிட்ட இருந்து வாங்கி இருக்கனு  நான் கெஸ் பண்ணிட்டேன். அத்தோட மந்திரசக்தியை  வச்சு நீ ஏதோ செஞ்சு உருவத்தை மாத்தியிருக்கனு புரிஞ்சுக்கிட்டேன்.

 

நானும் என்னை வெளிப்படுத்திட்டா நீ என்னையும் உன் கையில் இருக்கிற மந்திரக்கோல் சக்தியால உன் கட்டுக்குள்ள வரவச்சிடுவனு நினைச்சேன். அதனால நான் உன்னை யாதவ் கிருஷ்ணானு நம்பறதை போலவே நடிச்சேன். எப்படியாவது உன் கையால இந்த புல்லாங்குழலை வாங்கிடணும்னு தான் காத்திருந்தேன். நான் நினைச்சது போல வசமா என்கிட்ட மாட்டிக்கிட்ட. எவ்வளவு திமிர் இருந்தா என்னை அடைய நினைப்பே” என்றாள் கர்ஜனையுடன்.

 

இவ்வளவு நேரம் மோகத்தை கொடுத்த அவளின் முகம் இப்போது பயத்தை கொடுத்தது. தன் குட்டு வெளிப்பட்டதை எண்ணி உள்ளுக்குள் பலமாக திகைத்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “ஏய் மரியாதையா அந்த புல்லாங்குழலை என்கிட்ட கொடுத்துடு. நான் அதுக்காக நிறைய உழைச்சிருக்கேன். என் வாழ்க்கையில பெரும்பகுதியை இழந்திருக்கேன். அந்த புல்லாங்குழல் எனக்கு தான் சொந்தம்” என்று ஆத்திரத்துடன் வந்து அவள் கையில் இருந்த புல்லாங்குழலை பிடுங்க போனான்.

 

“ம்ம்” என்று கண்களை அகல விரித்து முறைத்தவள், கையில் இருந்த புல்லாங்குழலை நீட்டி, “கயவனே கல்லாகி போ” என்றாள்.

 

அடுத்தகணம் முரளி கிருஷ்ணா நீட்டிய கை நீட்டியபடி இருக்க அப்படியே கல்லாகிப் போனான். ஆனால் அவனால் பார்க்க முடிந்தது யோசிக்க முடிந்தது. பேச முடியவில்லை, அசையவும் முடியவில்லை. 

 

அப்போதும் அவன் கண்களில் தெரிந்து குரூரத்தை கண்ட செந்தாழினிக்கு கோபம் தலைக்கேற “நீயெல்லாம் அடங்க மாட்டேடா. இந்த உலகத்தில் இருக்கவே தகுதி இல்லாதவன்  நீ, இப்போதே மாய்ந்து…” என்று அவள் முடிப்பதற்குள் யாதவ் வந்து அவள் இதழ்களின் மேல் தன் விரல்களை வைத்து அவளை பேசவிடாமல் தடுத்திருந்தான்.

 

அந்த நேரத்தில் தன்னவனை கண்டதும் செந்தாழினி ஏனோ தன்னை ராதை என உணர்ந்தாள், “யாதவா” என்றாள் இதழ்களை அசைத்து

 

“ராதி இது நடந்திடக் கூடாதுனு தான் நான் ஓடோடி வந்தேன். வெற்றிவேந்தனோட இரண்டு மகன்களோட உயிருக்கு எந்த ஆபத்தும் வராதுனு யாதவ் மூலமா நான் வாக்கு கொடுத்திருக்கேன். உன்னை தற்காத்துக்க கடைசி முயற்சியா நீ முரளியை கொன்னுடுவன்னு எனக்கு தெரியும். நான் பயந்தது சரியா போச்சு, அதுக்கு தான் கந்தர்வர்களை அழைச்சிட்டு உடனே இங்கே வந்தேன்”

 

“யாதவா அவனை சும்மாவா விட சொல்றீங்க? அவன் அடுத்தவங்க மனைவியை எப்படி எல்லாம் பாக்க கூடாதோ அப்படி எல்லாம் பார்த்தான். அது தெரிஞ்சும் நானும் அவன் போக்குலயே நடிக்க வேண்டியதா போச்சு. இனியும் அவனை உயிரோட விட்டா யாதவ் செந்தாழினியோட வாழ்க்கைக்கு நல்லது இல்ல. அவங்களை இவன் நிம்மதியா வாழ விடமாட்டான். 

 

அதுமட்டுமில்ல இவனோடது பேராசை, அது எப்பவுமே அடங்காது. மறுபடியும் பான்சூரியை அடையறதுக்கு முயற்சி செய்துட்டே இருப்பான். அவன் கையில அது கிடைச்சா உலகையே ஆட்டி படைக்கும் அரக்கனா தான் மாறுவான். இவனோட இடையூறு இல்லாம இருந்தா தானே யாதவ் கிருஷ்ணாவால நீங்க கொடுத்த கடமைகளை செய்து முடிக்க முடியும்? நீங்க கருணை பெருங்கடலா இருந்து அவனை மன்னிக்கலாம். ஆனா என்னால அவனை மன்னிக்க முடியாது மாதவா?” என்றாள் அழுத்தத்துடன்

 

“நீ அவனை மன்னிக்க வேண்டாம், செஞ்ச தப்பை உணரும்படி தண்டனை கொடுக்கலாம் தானே ராதி” என்றான் யாதவன்

 

“என்ன தண்டனை கொடுக்க சொல்றீங்க?”

 

“நீயே யோசி, பாதிக்கப்பட்டவ நீ தான். அதனால தண்டனையையும் நீதான் கொடுக்கணும். அந்த தண்டனையால அவன் சாக கூடாது செஞ்ச தப்பை உணரனும்” என்றான்.

 

சற்றுநேரம் யோசித்தவள், “சரி இவன் கொஞ்ச காலத்துக்கு இப்படியே ஒரு சிலை போல இருக்கட்டும். பார்க்க இவன் ஒரு கற்சிலையா இருந்தாலும் யார் கண்ணுக்கும் அவ்வளவா தெரியமாட்டான். மத்தவங்க  பேசறது எல்லாம் இவனுக்கு கேட்கும், யோசிக்கவும் முடியும். ஆனா திரும்ப பேசவோ தன் உணர்ச்சிகளை காட்டவோ முடியாது”

 

“இங்கே யாருமில்லாத இந்த அத்துவான காட்டுல அவன் சிலையா இருக்கறதால அவன் எப்படி திருந்த போறான் ராதி?”

 

“இவன் சிலையா இருக்க போறது அத்துவான காட்டுல இல்ல யாதவா, பிணங்களை எரிக்கும் இடுகாட்டுல தான் இனி இருக்க போறான்”

 

“உன்னோட உத்தேசம் என்னனு எனக்கு புரியுது ராதி. அதை அப்புறமா பார்த்துக்கலாம், முதல்ல கந்தர்வர்களுக்கு ஆசி வழங்கலாம் வா” என்றவன் தன் ராதையை அழைத்தபடி கந்தர்வர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான்.

 

அவள் தன் கையிலிருந்த முரளியை (புல்லாங்குழலை) தன்னவனிடம் நீட்ட, அதை வாங்கி தேவகானம் இசைக்க தொடங்கினான் யாதவ் கிருஷ்ணா. கந்தர்வர்கள் தம்பதிகளை வணங்கி தங்கள் இசைக்கருவிகளை மீட்ட, அங்கே ஒரு இனிமையான இசைக் கச்சேரி நடந்தேறியது. 

 

கந்தர்வர்கள் ஆசிப்பெற்று கிளம்பியதும் யாதவன் தன் புல்லாங்குழலால் மீண்டும் யாதவ்கிருஷ்ணாவின் சுயஉருவத்தை அடைந்தான். தன் எதிரே சிலையாக இருந்த முரளி கிருஷ்ணாவை நோக்கி தன் கையில் இருந்த முரளியை (புல்லாங்குழலை) ஒரு முறைக்காட்ட, சிலையாக இருந்த முரளி கிருஷ்ணா மறைந்து போனான்.

 

“யாதவா ஏன் அவனை மறைய வச்சுட்டீங்க”

 

“ராதி நீ சொன்னது போல, இப்போ முரளிகிருஷ்ணா அலங்காநல்லூர்ல இருக்கற இடுகாட்டில் சிலையா இருப்பான், உனக்கு எப்போ அவனுக்கு விடுதலை கொடுக்கணும்னு தோணுதோ, அப்போ கொடு. அதுவரைக்கும் அவன் யார் கண்ணுக்கும் தெரியமாட்டான்”

 

“முரளி தன் தப்பை எப்போ உணர்கிறானோ, அப்போது தான் அவன் யார் கண்ணுக்காவது தெரிவான். அவனுக்காக யாராவது பாவ விமோசனத்தை யாசித்தால் அப்போ அவன் சுய உருவம் அடைவதை பத்தி யோசிக்கிறேன்” என்றாள் ராதி

 

“அப்படியே ஆகட்டும் ராதி, இந்த விஷயத்துல உன் முடிவு தான் என் முடிவும்” என்ற யாதவனின் தோள் சாய்ந்தாள் ராதி.

 

******

 

பேராசை பெருநஷ்டம் என்பது போல பிணங்கள் எரிந்துக் கொண்டிருக்கும் இடுகாட்டில் முட்புதர்களுக்கு நடுவில் ஒரு கையை மட்டும் நீட்டியபடி சிலையாக நின்றிருந்தான் முரளி கிருஷ்ணா. 

 

சிலையாகி இருந்தவனின் இதயம் இரும்பை விட கனமாகி இருந்தது. அரசனாக நாட்டை ஆள நினைத்த நான், இப்போது மனிதனாக கூட வாழமுடியாமல் பிணங்களுக்கிடையே உணர்வுகள் உள்ள பிணமாக இருக்க வேண்டுமா? இதிலிருந்து எப்படி தப்பிக்க போகிறேன்? முரளியின் கேள்விகளுக்கு விடை கிடைக்குமா? 

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top