வேலு அலங்காநல்லூரை அடையும் போதே இரவு பத்துமணி ஆகி இருந்தது. பஸ் நிறுத்தத்தில் நின்று தன்னை வெகுவாக ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஊருக்குள் சென்றார். ஊர்மக்கள் யாரும் தூங்காமல் வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். வேலுவைக் கண்டதும் அவர் பின்னால் வந்த அவருடைய சகாக்கள், “என்ன வேலு இப்படி ஆகிடுச்சே, பாவம் அந்த பொண்ணு அருவி ஒத்தையில அழுதுட்டு இருக்கா. உன் தங்கச்சி செல்வி தான் பக்கத்துல துணையா இருந்தா. இப்போ அவளும் புருஷனோட வாழ போயிட்டா. இந்த அருவி தனியா ஒத்தையில நின்னு என்ன செய்ய போகுதோ தெரியல” என்றபடி அவருடைய சகாக்கள் பேசிக் கொண்டே வர வேலுவின் முகம் இறுக்கமாகி கொண்டே போனது.
செல்வியின் வீட்டுக்கு சற்றுத் தள்ளி இருந்த அருவியின் வீட்டை நோக்கி கனத்த மனதுடன் போனார். அருவியின் வீடு துக்க வீடு என்பதற்கு அறிகுறியாக வாசலில் எரிந்துக் நெருப்பு கொண்டிருந்தது.
உள்ளே அருவி தன் அன்னையின் தலைமாட்டில் அமர்ந்தபடி, பொன்னியின் மஞ்சள் பூசிய முகத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். கதறி அழவில்லையே தவிர கண்ணீர் நிற்காமல் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.
அன்று மதியம் நன்றாக சாப்பிட்டு விட்டு, “அருவி ஏதோ களைப்பாக இருக்கு சித்தநேரம் தூங்கறேன்” என்று சொல்லிவிட்டு படுத்த தன் தாய் பொன்னி இப்போது நிரந்தரமாக தூங்கி கொண்டிருப்பதை பார்த்த அருவி அழுவதை கூட மறந்து அதிர்ச்சியில் இருந்தாள்.
தன்னை நிர்கதியாக விட்டு விட்டு தன் தாய் போய்விடுவாள் என்று ஒரு நாளும் அவள் நினைக்கவில்லை. அவளுக்கு பொன்னியை விட்டால் யார் இருக்கிறார்கள்? இதோ சொந்தம் என்று நினைத்த செல்வி அத்தையும் கூட ஊரை விட்டு சென்னைக்கு சென்று விட்டார்கள். தன்னை மணந்து கொள்வான் என்று நினைத்த யாதவ் யாரையோ கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்துவிட்டான். இனி மகள் நிலைமை என்ன என்று கொஞ்சமாவது இந்த அம்மா யோசித்து இருக்க வேண்டாமா? அதெப்படி பொறுப்பில்லாமல் தன் வயது வந்த பெண்ணை விட்டுட்டு நிரந்தமாக போகலாம்? உறங்கி கொண்டிருந்தவளை எழுப்பி கேட்கும் ஆவேசம் வந்தது. எவ்வளவு உலுக்கினாலும் அவள் தான் எழப்போவது இல்லையே? அவள் யோசனையை கலைத்தது வேலுவின் அழுகுரல்.
அவள் தாய் இறந்தது அவளை விட இங்கே யாருக்கு அதிகம் வருத்தம் இருக்க போகிறது. யார் இப்படி அழுறாங்க? அம்மாவோடு சேர்ந்து வாழாத அப்பா வெளியூரில் இருப்பதாகவும் வருவதற்கில்லை என்ற செய்தியும் வந்து விட்டதே! இப்போ அழுவது யார்? மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.
வேலு கதறிக் கொண்டே அங்கே மரபெஞ்சில் படுக்க வைத்திருந்த பொன்னியின் கழுத்தில் தன் கைகளில் கொண்டு வந்திருந்த மாலையை எடுத்து போட்டார்.
இளம்வயதில் இதே போல ஒரு மாலையை பொன்னியின் கழுத்தில் போட தான் ஆசைப்பட்டதையும் அந்த ஆசை நிராசை ஆகி போனதையும் எண்ணி குலுங்கி குலுங்கி அழுதார். அவரோடவே வந்த அவருடைய நண்பர்கள் வேலுவின் முதுகை தடவி கொடுத்தனர்.
திடீரென்று யாதவ் கிருஷ்ணாவின் மாமா வேலு வந்து தன் தாய் பொன்னிக்கு மாலைப்போட்டுவிட்டு குலுங்கி குலுங்கி அழுவதையும் மற்றவர்கள் அவரை தேற்றுவதையும் பார்த்த அருவி, தன் அழுகையையும் துக்கத்தையும் மறந்து அதிர்ச்சியோடு வேலுவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பக்கத்தில் இருந்த வயதான பெண்மணி, “அருவி இந்த வேலு இளவயசுல உங்கம்மா பின்னாடியே சுத்திட்டு அவளை தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு இருந்தாரு. உங்கம்மாவுக்கும் அவரை புடிக்கும் தான். ஆனா இரண்டு பேரும் பேசிக்கிட்டது இல்ல. ஒரு முறை மஞ்சுவிரட்டுல இரண்டு பேரும் மாத்தி மாத்தி மஞ்ச தண்ணி ஊத்திக்கிட்டாங்க. இதை பார்த்து தான் உன் தாத்தனுக்கு இவங்க இரண்டு பேரும் விரும்பறாங்கனு தெரிஞ்சுகிட்டாரு.
வேலு மெட்ராஸ்ல டிரைவர் வேலைக்கு போன சமயமா பார்த்து சட்டு புட்டுனு உங்கப்பன் குடிகாரனுக்கு உங்கம்மாவ கட்டி வச்சிட்டாரு உங்க தாத்தா. விஷயம் கேள்விப்பட்டதுல இருந்து வேலு நம்ம ஊருக்கே வரதை நிறுத்திட்டாரு. ஒருமுறை செல்விக்கு புருஷன் வீட்ல ஏதோ பிரச்சனைனு கூட்டிட்டு வந்து ஊருல விட்டுட்டு போனதோடு சரி. ஊர் பக்கமே வரதில்ல.
இதுல உங்கம்மா வேற நீ பொறந்ததும் உங்கப்பன் கூட வாழமாட்டேன்னு வந்துட்டா. அவனும் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு கேள்விப்பட்டு வேலு மறுபடியும் பொன்னிய ஏத்துகிறதா வந்து கேட்டாரு. ஆனா அவ ஒத்துக்கல. ஏற்கனவே உங்கப்பன் வேலுவோட சேத்து வச்சு தான் சந்தேகப்பட்டாரு. இப்போ அவரையே கல்யாணம் கட்டிக்கிட்டா அது உண்மைனு ஆகிடாதானு வேண்டாம்னு சொல்லி ஒத்தையாவே நின்னு உன்னைய வளர்த்து ஆளாக்கினா. பொண்ணோட வாழ்க்கையை இப்படி வீணாகி போயிடுச்சேனு உன் தாத்தனும் அம்மாச்சியும் அந்த கவலையிலேயே போய் சேர்ந்துட்டாங்க. புருஷன் இல்லாத செல்விக்கு உங்கம்மாவும் உங்கம்மாவுக்கு செல்வியும் துணையா இருந்தாங்க.
நீங்க பக்கத்து வீட்லயே இருக்கறதால வேலு செல்வியை பாக்கறதுக்கு கூட அடிக்கடி வரமாட்டாரு. வந்தாலும் உடனே கிளம்பிடுவாரு.
உங்கம்மாவ நினைச்சானு தெரியல, இதுவரைக்கும் அவர் கல்யாணமே பண்ணிக்கல. இன்னைக்கு உங்கம்மா போயிட்டானு கேள்வி பட்டதும் ஆடி போயிருப்பாரு. அதான் அடக்க முடியாம அழறாரு” என்று பக்கத்தில் இருந்த பெண்மணி கூறவும் அருவி இப்போது மீண்டும் வேலுவை கலங்கிய கண்களுடன் பார்த்தாள்.
வேலுவை இதற்கு முன் பார்த்திருக்கிறாள் தான். ஆனால் இவருக்கும் தன் தாயிற்கும் இப்படி ஒரு கதை இருந்திருக்கும் என்று அவள் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. ஏனென்றால் செல்வியோ அவள் தாய் பொன்னியோ இதைப்பற்றி மூச்சுகூட விட்டதில்லை. வேலுவையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அப்போது தான் உறைத்தது செல்வியும் யாதவனும் துக்கத்துக்கு வரவில்லை. ஒரு வேளை காலையில் வருவாங்களோ என்று நினைத்தவளுக்கு மேலும் கண்ணீர் பெருகியது.
அவளுக்கென்று இருந்தது செல்வி அத்தை தான், அவரோட வம்பிழுத்தாலும் அவர்தான் அவளுக்கு ஆதரவாக இருப்பார். கூடவே யாதவ்வின் நினைவும் சேர்ந்தே வர, பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள். அவள் அழுகுரலை கேட்டு அவள் அருகில் வந்த வேலு, அவள் தலையை ஆதரவாக தடவிவிட்டு சென்றார்.
மனம் விட்டு அழக்கூட முடியாமல் தன் அம்மாவிற்கு ஒரே மகளாக இருக்கும் அவள் தானே தன் அன்னையின் இறுதி சடங்கை செய்ய வேண்டும்? எப்படி செய்ய போகிறோம்? என்ற யோசனையிலேயே இருந்தாள் அருவி. ஆனால் வேலு எல்லாவற்றையும் முன்னே நின்று பார்த்துக் கொண்டார். கடைசியாக இறுதி ஊர்வலத்தின் போது யார் கொள்ளி வைப்பது என்ற கேள்வி வர, “பொண்ணா இருந்தா என்ன? அருவி தானே பொன்னியோட வாரிசு. அவளே கொள்ளி வைக்கட்டும்” என்று முடித்தார் வேலு.
அருவி தன் தாயிற்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய பொன்னியின் உடலோடு சொந்தபந்தங்கள் புடைசூழ இடுகாட்டிற்கு சென்றாள். இடுகாட்டிற்குள் மேள சத்தத்துடன் ஊர்மக்கள் வருவதை சிலையாக இருந்த முரளி கிருஷ்ணாவால் உணரமுடிந்தது. தலையை திருப்பி பார்க்க முடியாவிட்டாலும் அவன் பார்வை வட்டத்தில் அவர்களை காணமுடிந்தது.
சில்வர் ஸ்பூனோடு பிறந்து வளர்ந்தவன், இப்போது தான் முதன் முறையாக ஒரு பிணத்தை அடக்கம் செய்வதை நேரில் பார்க்க போகிறான். அவனுடைய சிறுவயதில் அம்மாவும் தாத்தாவும் இறந்தது கூட தெரியாமல் அவன் தான் ஹாஸ்பிட்டலில் நினைவின்றி கிடந்தானே!
அங்கே நடப்பவற்றை கூர்ந்து கவனிக்க தொடங்கினான். இறந்தது யாரோ ஒரு பெண் போல, உடலை குழியில் இறக்கியவுடன், அங்கே ஒரு பெண் கதறி துடித்துக் கொண்டிருந்தாள். “என்னையும் என் அம்மாவோடவே புதைச்சிடுங்க” என்று உள்ளே விழப்போனவளை பிடிக்க பத்துபேர் தேவைப்பட்டது.
“இதுக்கு தான்யா பொம்பளை புள்ளைங்கள சுடுகாட்டுக்கு கூட்டிட்டு வர்றது இல்ல. சொன்னா வியாக்கானம் பேசுவீங்க” என்று ஒரு பெரியவர் புலம்ப, வேலு அந்த பெண்ணுக்கு புத்தி சொல்லி கொண்டிருந்தார்.
“பாரும்மா அருவி, இந்த உலகத்துல பொறந்த எல்லாருக்கும் சாவு என்பது அவங்க பொறக்கும் போதே விதிக்கப்பட்டது. எல்லாரும் ஒருநாள் போக வேண்டியவங்க தான். இன்னைக்கு உங்கம்மா, நாளைக்கு நான், இன்னொரு நாள் நீ, எத வேணும்னாலும் மாத்தலாம் இதை மாத்த முடியாது.
கடவுள் கொடுத்திருக்கிற இந்த உடம்பு தற்காலிகமானது. இருக்கற வரைக்கும் யாருக்காச்சும் உபயோகமா இருக்கணும் இல்லனா தொந்தரவு செய்யாமலாவது இருக்கணும் அவ்வளவு தான். உன் அம்மாவோட ஆசி எப்பவும் உன்கூட தான் இருக்கும். அவங்களுக்கு செய்ய வேண்டியதை செஞ்சு முடிக்கிறது உன்னோட கடமை” என்று வேலு சொல்லிக் கொண்டிருப்பது புதரின் மறைவில் சிலையாக இருந்த முரளியின் காதுகளில் விழுந்தது.
‘இந்த வேலு பஞ்ச் டயலாக் பேசறதை எல்லாம் கேக்க வேண்டியதா போச்சே’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான். அந்த செந்தாழினி அவனுடைய உணர்வுகளை தூண்டிவிட்டு பிளான் செய்து அவனிடமிருந்து புல்லாங்குழலை எடுத்ததும் இல்லாம இப்படி சிலையாக்கிட்டாளே!
எவ்வளவு பெரிய மாஸ்டர் பிளான் போட்டு இந்த யாதவ்வை இதுல சிக்க வச்சு, அவனை புல்லாங்குழலை எடுக்க வச்சேன்? பைத்தியம் போல நடிச்சேன், அந்த யாதவ் என்னை வெறுப்பேத்த செஞ்ச அத்தனை விஷயத்தையும் பல்லைகடிச்சி பொறுத்துக்கிட்டேன். எதுக்காக? எல்லாம் அந்த புல்லாங்குழலை அடையறதுக்கு தானே! இத்தனை வருஷ உழைப்பையும் என் புத்திசாலித்தனத்தையும் வச்சு யாதவ் கிட்ட இருந்து மந்திரசக்தி கொண்ட புல்லாங்குழலை வாங்கின நான், இந்த செந்தாழினியை எப்படியோ போய் தொலையட்டும்னு விட்டுட்டு போயிருக்க கூடாதா?
தேவதை மாதிரி இருக்கிறவ மோகினி ஆட்டம் ஆடி கொஞ்ச நேரத்துல என்னை முட்டாளாக்கிட்டாளே! சிலையாக்கினது தான் ஆக்கினா என்னைய கொண்டு போய் வேற எங்காவது வச்சிருக்க கூடாதா? இந்த இடுகாட்டுலயா என்னைய நிக்க வைக்கணும்? இதெல்லாம் பார்க்க எவ்வளவு கொடுமையா இருக்கு? ச்சே, அவ மேல இருந்த கோபத்துல இதுக்கு என்ன பரிகாரம்னு கூட கேட்காம விட்டுட்டேன். இப்போ இதில இருந்து எப்படி வெளியே வரப்போறேன்?’ என்று பலமாக யோசித்துக் கொண்டிருந்தவனை மேலும் யோசிக்க விடாமல் அந்த பெண்ணின் அழுகுரல் அவன் சிந்தனையை கலைத்தது.
முரளியின் சின்னவயதில் அவன் அம்மா இறந்து போனதை கேட்டபோது கூட அவன் இந்த அளவிற்கு அழுதானா என்று தெரியவில்லை, இந்த பெண் என்ன இப்படி அழுகிறாளே என்று அவன் சிலைவடிவில் பார்த்திருக்க, அருவிக்கு ஏனோ யாரோ அவளை பார்ப்பது போன்ற உள்ளுணர்வு தோன்றியது. சுற்றும் முற்றும் பார்த்தாள்.
சடங்குகள் முடித்த பின் உடன் வந்தவர்கள் அருவியை சமாதானம் செய்து அழைத்து சென்றார்கள். முரளி சிலையான இரண்டாம் நாளில் அவன் பார்த்த முதல் இறப்பு இது தான். அனைவரும் சென்றபின் அவன் பார்வை வட்டத்தில் இருந்த அருவியின் அம்மாவை புதைத்த இடத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மண்குவியல் துடிப்பது போல உணர்ந்தான். உள்ளுக்குள்ளே அந்தம்மா புலம்புவது போல இருந்தது.
“அய்யோ என் பொண்ணுக்கு ஒரு நல்லது பண்ணாம போயிட்டேனே, தனியா அவ என்ன பண்ணுவாளோ” என்று சதா உள்ளுக்குள் புலம்புவது போல அவனுக்குள் ஒரு பிரமை தோன்றியது.
முரடனாக வலம் வந்துக் கொண்டிருந்த முரளியின் கற்சிலைக்குள் இருந்த இரும்பு இதயம் மேலும் கனமாகி போனதை போல உணர்ந்தான். அடுத்தடுத்து வந்த நாட்கள் முரளியை மேலும் மேலும் சோதனைக்குள்ளாக்கியது.
***********
யாதவ் கிருஷ்ணா டெல்லிக்கு ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்தான். செந்தாழினி அவர்கள் வரப்போவதை தன் தந்தை ஆருத்ரனுக்கு போன் செய்து சொல்லிக் கொண்டிருந்தாள். வெற்றிவேந்தனும் செல்வியும் எதிரெதிரே ஜன்னலருகே அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். செல்வி மதுரைக்கும் சென்னைக்கும் மட்டுமே போயிருக்கிறார், முதல் முறையாக நீண்ட தூர ரயில் பயணம், அதுவும் இனி சேரவே முடியாது என்று நினைத்திருந்த கணவருடன். வெற்றி பேசிக்கொண்டே வர, அவரின் முகத்தையே ஆர்வமாக பார்த்துக் கொண்டு வந்தார் செல்வி.
“செல்வி நான் சொல்றதை கவனிக்கறயா இல்லையா? என் முகத்தையே பார்த்திட்டு இருக்கிற?” என்றார் வெற்றி செல்லக் கோபத்துடன்.
“உங்களை இப்படியே பார்த்துட்டு இருந்தா அதுவே போதுங்கய்யா, நீங்க பேசறது எதுவும் எனக்கு புரியல, அதான் நீங்க பேசற அழகை பார்த்துட்டு வர்றேன்” என்றார்.
அப்போது தான் வெற்றிக்கு புரிந்தது பேச்சுவாக்கில் அவர் நிறைய ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தியதால் செல்விக்கு புரியவில்லை என்று உணர்ந்து “சாரி செல்வி” என்று மீண்டும் அவருக்கு புரியும் படி தன் அனுபவங்களை சொல்லிக் கொண்டிருந்தார். யாதவ் தன் பெற்றோரை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது போன் பேசிக் கொண்டிருந்த செந்தாழினி அவன் மேல் சாய்ந்தாள், “ராதி அப்பா அம்மா இருக்காங்கடி” என்றான்
“யாதவ், நான் வேணும்னு உன் மேல சாயல” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மேலே வைத்திருந்த அவர்களின் பொருட்கள் எல்லாம் கீழே விழுந்தது. யோசனையோடு எழுந்து எட்டிப்பார்த்தான், பக்கத்து கோச் இருக்கையில் இருப்பவர்களிடமும் சலசலப்பு தோன்றியது.
புருவ முடிச்சுடன் வெற்றியின் அருகே சென்று ஐன்னலோரத்தில் எட்டிப்பார்த்தான், ரயில் சாய்வாக போவது போல தோன்றியது. அவசரமாக ரயிலை நிறுத்த அங்கிருந்த சங்கிலியை பிடித்து இழுத்தான். ஆனால் ரயில் அதிவேகத்தில் சென்றது, அநேகமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்திருக்கும் என்று கணித்தான். அதற்குள் ரயில் நன்றாகவே சாயத்தொடங்கியது, எதிர்ப்புறம் அமர்ந்திருந்த பயணிகள் எல்லாம் ஒரேபக்கமாக சரிய தொடங்கினர். அப்போது தான் அவர்களுக்கும் நடந்துக் கொண்டிருக்கும் விபரீதம் புரிந்தது.
பெண்கள் குழந்தைகள் எல்லாம் உயிர்பயத்தில் அலறினர், வெற்றிக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. டிடிஆர் ஓட்டுநரிடம் பேச முயற்சித்தார் ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை. அவர்கள் சென்றுக் கொண்டிருந்த வழித்தடத்தில் நெட்வொர்க் சரியாக கிடைக்காததால் அடுத்து வரும் ஸ்டேஷனுக்கும் இன்பார்ம் பண்ண முடியவில்லை.
ஆளாளுக்கு வெவ்வேறு மொழிகளில் அவர்களுக்கு தெரிந்த கடவுளை அழைத்து காப்பாற்றும் படி கதறினார்கள். எந்த மொழியில் அழைத்தாலும் எந்த உருவத்தில் வணங்கினாலும் இறைவன் ஒருவன் தானே. அவனால் நேரில் வரமுடியாத காரணத்தில் தானோ என்னவோ யார் மூலமாவது தன் காரியத்தை நடத்திக் கொள்கிறான்.
மக்களின் கூக்குரல் யாதவனின் மனதை பிசைய எதாவது செய்து அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று தான் முதலில் நினைத்தான். சற்றும் யோசிக்காமல் ரயிலின் வெளிப்பக்கமாக எட்டிப்பார்த்தான், ஒரு பெரிய பாலத்தின் மேல் அந்த ரயில் படுவேகத்துடன் போய் கொண்டிருந்தது, தண்டவாளம் சேதமடைந்திருந்ததால் தான் ரயில் ஒரு பக்கமாக சாய்ந்துக் கொண்டிருக்கிறது, எந்த விநாடியிலும் அது மொத்தமாக சாய்ந்து விடலாம், அப்படி சாய்ந்து விட்டால், பெருத்த உயிர்சேதம் ஏற்படும் என்பதை உணர்ந்தவன் இது மனிதனால் தடுத்த நிறுத்த முடியாத காரியம் என்பதை உணர்ந்துக் கொண்டான். புல்லாங்குழலை பயன்படுத்தவேண்டிய நேரம் வந்து விட்டது என்று தோன்றியது.
யாதவ் அவசரமாக தான் கொண்டு வந்திருந்த பேகில் இருந்த புல்லாங்குழலை எடுத்துக் கொண்டு தனியாக வந்தவன் அதை வணங்கி ரயில் தடம் புரளக்கூடாது என்று மனதில் நினைத்தான். அவ்வளவு தான் அடுத்த நொடியே ரயில் பழையபடி தன் பயணத்தை தொடர்ந்தது. எல்லாருக்கும் ஆச்சரியம், என்ன நடந்தது? எப்படி ரயில் சாதாரணமாக தன் பயணத்தை தொடர்கிறது? ஆச்சரியத்துடன் அனைவரும் பேசிக் கொண்டனர்.
டிடிஆர் அவசரமாக ஓட்டுநர்களோடு தொடர்பு கொண்டார். அவர்களுக்கும் எதுவும் புரியவில்லை, இப்போது நடக்க போகும் ரயில் விபத்து தடுக்க முடியாதது என்ற முடிவுக்கே அவர்கள் வந்து விட்டிருந்தனராம். எப்படி ரயில் சரியாக பயணிக்கிறது என்று அவர்களுக்கே தெரியவில்லை என்றனர்.
செந்தாழினிக்கு மட்டுமே விஷயம் தெரிந்திருந்தது, ரயில் கதவோரம் நின்றிருந்தவனின் முழங்கையை தன் கைகளால் பற்றிக் கொண்டு அவன் தோள் மேல் சாய்ந்தாள். “யாதவா கொஞ்ச நேரத்துல எவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்கும், எத்தனை பேருக்கு என்னவெல்லாம் ஆகி இருக்குமோ நினைச்சுக் கூட பார்க்க முடியல. எப்படியோ எல்லாரையும் காப்பாத்திட்டே” என்றாள் பெருமூச்சோடு
“ராதி இப்போ தான்டி இந்த புல்லாங்குழலோட மகிமையே எனக்கு புரியுது. இவ்வளவு நாளா இதை சும்மா வச்சிருந்திட்டேனே. இந்த புல்லாங்குழலை வச்சு எத்தனையோ பேர் உயிரை காப்பாத்தியிருக்கலாமே. இத நினைச்சாலே எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு”
“தேவைப்படும்போது தானே அதை பயன்படுத்தமுடியும்? இதுக்கு எதுக்கு குற்ற உணர்ச்சினு எல்லாம் சொல்றே”
“இல்ல ராதி, நீ யோசிச்சுப்பாரு, நாம ஒருவேளை இந்த ரயில்ல வராம போயிருந்தா எத்தனை உயிர் போயிருக்குமோ? நாம வந்ததால தான நமக்கு ரயில் விபத்து ஏற்பட போகுதுனு தெரிஞ்சது, எல்லாரையும் காப்பாத்த முடிஞ்சது?”
ஆமா அதனாலென்ன என்பது போல விழித்தாள் செந்தாழினி
“புரியலையா ராதி, என் கண்ணெதிரில பிரச்சனை வந்தா நான் காப்பாத்துவேன்னு இல்லாம பிரச்சனை இருக்கிற இடங்களை தேடிப்போய் எல்லாரையும் காப்பாத்தணும்னு நினைக்கிறேன்”
“எல்லார்கிட்டயும் நாம போய் உங்களுக்கு என்ன பிரச்சனைனு கேட்கவா முடியும்? எங்கே பிரச்சனைனு நமக்கெப்படி தெரியும். பேசாம இங்கே பிரச்சனைகள் தீர்க்கப்படும்னு ஒரு சென்டர் வச்சிடலாமா?” என்றாள் குறும்புடன்
“ஏன்டி, இந்த கொலவெறி உனக்கு? அப்புறம் எல்லாரும் சேர்ந்து என்னை சாமியாராக்கிடுவாங்க பரவாயில்லையா உனக்கு?” என்று சிரித்தான்.
“அய்யோ அப்போ வேணாம்பா, ஏற்கனவே உங்க ஊர்ல எல்லா பொண்ணுங்களும் உன் பின்னாடி தான் சுத்துவாங்கனு உங்கம்மா சொல்லிட்டு இருந்தாங்க. நீ சாமியாராகி பேமஸ் ஆயிட்டா அவ்வளவு தான்” என்று சிரித்தாள்
“யாதவானந்தா சுவாமிகள்” என்று அவளுக்கு ஆசி வழங்குவது போல கையை உயர்த்தி காட்டி சிரித்தான்.
சாகப்போகிறோம் என்று பயந்து விட்ட செல்வி தன் கணவரின் முழங்காலில் முகம் புதைத்திருந்தார். வெற்றி அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார், “செல்வி பயப்படாதே எதுவும் நடக்காது, நீ கும்பிடுற கடவுள் நிச்சயம் நம்மளை கைவிட்டுட மாட்டார், ரயில் இப்போ நேரா தான் போகுது” என்று மனைவியின் தலையை ஆதரவாக தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்கவும் நால்வரும் பதட்டத்துடன் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர்களை பார்க்க ஓடிச்சென்றனர். அப்போது ஒரு பெண், தன் அருகில் இருந்த தன் கணவரை உலுக்கியபடி “அய்யோ எழுந்திருங்க, என்னை விட்டுட்டு போயிடாதீங்க” என்று கதறிக் கொண்டிருந்தார். அந்த நபரோ நெஞ்சில் கைவைத்தபடி மூர்ச்சையாகி இருந்தார். ரயில் கவிழப்போகிறது என்ற அதிர்ச்சியில் அவருக்கு நெஞ்சுவலி வந்திருக்கலாம் என்று புரிந்துக் கொண்ட யாதவ் அங்கிருந்தவர்களை பார்த்து, “அவருக்கு நல்லா காத்து வரணும், நான் முதல் உதவி செஞ்சு அவரை எழுப்பறேன். நீங்க எல்லாம் பக்கத்து இருக்கையில் இருங்க” என்று அனைவரையும் அனுப்பி விட்டு தன் கையிலிருந்த புல்லாங்குழலை எடுத்து வாசிக்க தொடங்கினான்.
அந்த தெய்வீக இசை மயங்கியவரின் காதில் விழுந்து, நரம்புகள் வழியே சென்று இயங்க மறுத்த இதயத்தை துடிக்க செய்தது. மயங்கி இருந்த நபர் மெல்ல கண்விழித்து பார்த்ததும் யாதவ் அவர் மனைவியை அழைத்தான்.
என்ன விபரீதம் நடந்ததோ என்று பயந்துக் கொண்டே வந்த அவரின் மனைவி தன் கணவர் புன்னகையோடு அமர்ந்திருப்பதை பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தார். “சார் நீங்க உண்மையில தெய்வம் சார், என் புருஷனை காப்பாத்திட்டீங்க, ரொம்ப நன்றி சார்” என்று அவன் காலில் விழப்போனார். அவரை தடுத்து நிறுத்தி “அதெல்லாம் வேண்டாம்மா, நான் ஜஸ்ட் முதலுதவி தான் பண்ணேன்” என்று சொல்லிவிட்டு அவர்கள் இருக்கையை நோக்கி சென்றான்.
வெற்றி ஆச்சரியத்தோடு யாதவ்வை பார்த்து, “யாதவ் நீ ஏதோ டிகிரி படிச்சிருக்கேன்னு தானே சொன்னே? டாக்டருக்கா படிச்ச?”
அவனோ தொண்டையை செருமியபடி “இல்லப்பா ஜஸ்ட் முதலுதவி செய்ய கத்துக்கிட்டேன்”
இப்போது நம்ப முடியாமல் மகனை பார்த்தார், “கொஞ்ச முன்னாடி டிரெயின் ஒரு பக்கமா சாஞ்சுச்சு நீ அவசரமா உன் பேகில் எதையோ எடுத்தட்டு போனே, கொஞ்ச நேரத்துக்கெல்லாம் டிரெயின் நார்மலா ஓட ஆரம்பிச்சிடுச்சு. இப்போ நெஞ்சுவலியில மயங்கி கிடந்த அந்த ஆளு நிமிஷத்துல எழுந்து உட்கார்ந்துட்டான், நடக்கறது எல்லாமே பார்த்தா அதிசயமா இருக்கே, என்னனு என்கிட்ட மறைக்காம உண்மையை சொல்லு யாதவா”
“சொல்றேன்பா, ராதியோட வீட்டுக்கு போனதும் எல்லாம் விவரமா சொல்றேன். இங்கே வேணாம்”
அப்ப ஏதோ இருக்கு, அதனால தான் வீட்டுக்கு போனதும் சொல்றேன்னு சொல்றான் என்று நினைத்த வெற்றிவேந்தன் இப்போது யாதவ்வை தீர்க்கமாக பார்த்தார். அவன் கண்களில் ஒளி பொருந்திய தீட்சண்யமும், கனிவும், கருணையும், அன்பும் தெரிந்தது. இன்னும் கொஞ்ச நேரம் அவனை அப்படியே பார்த்தால் பெற்ற மகனையே கையெடுத்து கும்பிட்டு விடுவோமோ என்று தோன்ற பார்வை திருப்பி மருமகளை பார்த்தார்.
அவளோ யாதவ்வை தான் காதலோடு பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரும் ஒருவருக்காக ஒருவர் பிறந்தது போல அவர்களுக்குள் அப்படி ஒரு பிணைப்பு, இருவரும் சாதாரணமானவர்கள் போல தோன்றவில்லை வெற்றிக்கு.
மகனையும் மருமகளையும் கண் எடுக்காமல் பார்க்கும் கணவரிடம், “என்னங்கய்யா ஏதோ இப்போ தான் பாக்கற போல யாதவனை ஆச்சரியமா பாக்கறீங்க?”
“தெரியல செல்வி, இரண்டு பேரும் எனக்கு இப்போ புதுசா தெரியறாங்க” என்றார் குழப்பத்துடன்
************
முரளி இருந்த சுடுகாட்டில் அணையாமல் நெருப்பு கனன்றுக் கொண்டே இருந்தது. காரணம், தினம் தினம் யாராவது இறந்து போனார்கள். அந்த ஊரைச் சுற்றி இருக்கும் பதினெட்டு கிராமங்களுக்கும் பொதுவான பெரிய இடுகாடு என்பதால் தகனம் செய்யவும் புதைக்கவும் தினம் ஆட்கள் வந்து கொண்டே இருந்தார்கள். ‘ச்சே கல்லாகி போனதை கூட சகிச்சுக்கலாம், இந்த இடத்துல இருக்கறதை தான் டாலரேட் பண்ண முடியல, தினம் யாராவது சாவறதும் அதுக்காக அழறதும்’ என்று கடுப்புடன் நினைத்தவன், அங்கே பெரிய பெரிய விஐபிகள் வருவதை அப்போது தான் கவனித்தான்.
இறந்தது யார் என்று அவன் யோசிக்கும் போதே இரண்டு நபர்கள் பேசிக் கொண்டார்கள், “மனுஷன் என்னமா வாழ்ந்தாரு, வார்டு மெம்பராகி, எம்எல்ஏ ஆகி மத்திய அமைச்சராகி, எவ்வளவு ஆடம்பரமா வாழ்ந்தாரு. எல்லா ஸ்டேட்லயும் ஒரு வீடு, எக்கசக்கமான சொத்து மதிப்பு, நூற்றுக்கணக்கான வேலை ஆளுங்க, பத்து தலைமுறைக்கும் அதிகமான சொத்து, ஊருக்கு ஒரு பொண்டாட்டி, இவ்வளவு இருந்து என்ன பயன் சொல்லு? சும்மா நெஞ்சுவலினு போனாரு, காப்பாத்த முடிஞ்சுச்சா?” என்று ஒருவர் சொல்ல
மற்றொருவரோ, “பிச்சைக்காரனா இருந்தாலும் உலகத்துலயே பெரிய கோடீஸ்வரனா இருந்தாலும் கடைசியில ஆறடி தானப்பா நிரந்தரம். பிறக்கும் போது வெறுங்கையோட எதையும் கொண்டு வராம தான் பொறந்தோம், இறக்கும் போதும் அதே வெறுங்கையோட எதையும் கொண்டு போகாம தான் போக போறாம். இந்த இடைப்பட்ட காலத்துல எத்தனை போட்டி, பொறாமை, பேராசை, பகை, கோபம், வெறுப்பு” என்று அவர்கள் தங்களுக்குள் தத்துவங்களை பேசிக் கொண்டிருக்க, முரளியின் காதுகளில் அது அச்சுபிசகாமல் விழுந்தது.
எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது,
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது,
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது,
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும் –
என்ற பகவத்கீதையின் வரிகள் முரளியின் காதுகளில் ரீங்காரமிட்டது. புல்லாங்குழல் தன் கையை விட்டு போனதை எண்ணி எண்ணி உள்ளுக்குள் ஓய்ந்து போய் கொண்டிருந்தவனின் மூளையை யாரோ சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. புல்லாங்குழலை செந்தாழினி திட்டமிட்டு வாங்கி இருக்காவிட்டாலும், எத்தனை நாள் அதை அவனோட வைத்திருக்க முடியும்?
ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம், தன் அதிகாரத்தில் உலகையே காலடியின் கீழ் கொண்டு வந்து இருக்கலாம், அதற்கு பிறகு? பசித்தவனுக்கு தான் உணவின் ருசி தெரியும், அது போல தேவை இருக்கும் போது அது கிடைத்தால் தான் அதன் அருமை தெரியும். எப்போதும் எல்லாமும் தேவைக்கு அதிகமாக இருந்தால், அந்த வாழ்க்கை அலுப்பாக இருக்காதா? போரடித்து விடாதா? வாழ்க்கையில் போராடாமல், எந்த தேடலும் இல்லாமல், சுலபமாக கிடைக்கும் ஏகபோக ஆடம்பர வாழ்க்கை, வாழ்நாள் முழுவதும் சந்தோஷத்தை கொடுத்து விடுமா?
அப்படியே அது சந்தோஷத்தை கொடுத்தாலும், எத்தனை நாளைக்கு? பிறந்தவர் ஒருநாள் இறந்து தானே ஆக வேண்டும், அதை யாராலும் மாற்ற முடியுமா? இன்று கிருஷ்ணரின் புல்லாங்குழலை தேடி அலையும் நான், அந்த கிருஷ்ணருக்கே இறப்பு என்பது நடந்திருக்கிறதை எப்படி மறந்தேன்? கடவுளே மனிதனாக அவதாரம் எடுத்ததாக சொல்லப்பட்ட புராணங்களில் அவர் இறப்பையும் சொல்லி இருக்கிறார்களே. அப்படிப்பட்ட இறப்பு இந்த முரளிகிருஷ்ணாவுக்கு மட்டும் வராதா என்ன?
(தொடரும்)