நாட்கள் வேகமாக நகர்ந்தது…
வழக்கம் போல அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தான் வாசு.
“ அனு குட்டி .. “ என்று ஆருத்ரா அழைக்கும் போதே , “ ஆரும்மா…பென்சில் பாக்ஸ் எடுத்து வச்சிக்கிட்டேன். டவல் எடுத்து வைச்சி கிட்டேன் அப்பறம் ….ம்ம்.. ஹான்..கிட்டுவுக்கு ஸ்நாக்ஸ் எடுத்து வச்சிக்கிட்டேன்…அப்பறம் டைரி எடுத்து வச்சிக்கிட்டேன்.. ஓகே வா..?“ என தலையை சரித்துக் கூறி விட்டு, “அப்பறம் ஹேப்பி ஃபர்த்டே ஆரும்மா…” என்று கூறி அவளது கன்னத்தில் முத்தமிட்டாள்.
“ தேங்க் யூ டா தங்கம்…”
“ ஆரும்மா ஸ்விம்மிங் …” என்று கூறி கொண்டே சாக்ஸை தப்பும் தவறுமாக போட்டுக் கொண்டிருந்தாள்.
எந்த செயலையும் தடவிக் கொடுத்து பழக்காமல் தவறாக இருந்தாலும் அவளையே செய்ய வைத்து பழக்கியிருந்தாள் ஆருத்ரா
“ ஆரும்மா…ஸ்விம்மிங்…” என்று மீண்டும் அவள் கூற, ” சாக்ஸை கரெக்டா போடு அனு… இன்னைக்கு கண்டிப்பா ஸ்விம் பண்ணலாம்.. ஓகே வா.” என்று ஆருத்ராவை கிறக்கமாக பார்த்தபடி வாசு கூற , சிரித்துக் கொண்டவள் , “ டிஃபன் பாக்ஸை மறக்காம எடுத்துக்கோங்க “என்றாள்.
“ பை ஆருத்ரா…” என்றவன் அனுவை தனது பைக்கில் ஏற்றுக் கொண்டு பள்ளிக்கு அனுவை விட கிளம்பி விட்டான்.
வேறு ஒரு முக்கிய வேலை இருந்ததால் சீக்கிரமே கிளம்பி விட்டான்.
ஆருத்ரா தனது காரை மட்டுமே அவளது வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்தாள். முக்கிய பொருட்களை தவிர பிற பொருட்களை தன்னவனின் சம்பாத்தியத்தில் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியத்தோடு இருந்தாள்.
அலுவலகத்தில் அவளது கேபினுக்கு அருகிலேயே அவனது கேபினும் அமைக்கப்பட்டது.
பல நேரங்களில் ஒருவரையொருவர் பார்வையாலேயே பருகிக் கொண்டே வேலையை தொடருவார்கள்.
அன்று மதியம் வாசுவும் ஆருத்ராவும் சிக்கிரமே வீட்டிற்கு வந்து விட்டனர்.
அனு வந்தவுடன் அவளுடன் நீச்சல் குளத்தில் சிறிது நேரம் விளையாடினாள் ஆருத்ரா.
மாலையில் மூவருமாக சேர்ந்து கோவிலுக்கு சென்று விட்டு, கடற்கரை அலையில் கால் புதைய நின்று, மணல் வீடு கட்டி விளையாடி விட்டு , வெளியே உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பினர்.
அனு உறங்கியவுடன் வாசுவும் ஆருத்ராவும் நீச்சல் குளத்தில் நீந்த ஆரம்பித்தனர். வீட்டிற்குள்ளே நீச்சல் குளம் இருந்ததினால் அவர்களின் அறைக் கதவை மட்டும் சாற்றி விட்டு நீச்சல் குளத்திற்கு வந்தனர்.
“ ஹேப்பி ஃபர்த்டே ருத்ரா…” என்றுகூறி அவளது இதழ்களில் முத்தமிட்டவன், அவளுக்கு பிடித்த டார்க் சாக்லெட்டை பிய்த்து அவளுக்கு ஊட்டி விட்டான். இதழ் முத்தத்தோடு இனிப்பும் தாராளாமாக பரிமாற்றம் செய்யப்பட்டது .
அவளது மேனியின் வனப்பை கைகளால் ஆராய்ந்தவாறு அடுத்த கட்டத்திற்கு சென்றான். நீரின் மெல்லிய சலசலப்பு மட்டுமே அந்த இரவில் நிறைந்திருந்தது.
நிலவு மகளும் வெட்கம் கொண்டு மேகத்தில் ஒளிந்து கொண்டாள்.
மருத்துவர் முன்பு ஆருத்ராவும் வாசுவும் அமர்ந்திருந்தனர்.
சொல்லின் வடிக்க முடியாத மகிழ்ச்சி இருவரது மனதிலும் கரை புரண்டு ஓடியது.
“ கங்கிராட்ஸ் மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் வாசு… ஷீ இஸ் ப்ரக்னென்ட். ம்ம்கூம் …யூ ஆர் கோயிங் டூ பி பேரண்ட்ஸ் . எதுக்கும் ஒரு ஸ்கேன் மட்டும் எடுத்துட்டு வந்துடுங்க…” என்றார்.
சிறிது நேரத்தில் ஸ்கேன் செய்து கொண்டு வந்து விட, பரிசோனை அறிக்கையப் பார்த்த மருத்துவர் , “ஓ..மை காட்.. ட்ரிப்லெட்ஸ் பேபிஸ்.. ரொம்ப கேர் ஃபுல்லா இருக்கணும். ஆருத்ரா…ஏற்கனவே உங்களுக்கு மனஅழுத்த பிர்ச்சனை இருக்கு…சோ..நீங்க கம்ப்ளீட் பெட் ரெஸ்ட் ல இருக்கணும். ஏழாவது மாசமே நீங்க ஹாஸ்பிட்டல வந்து அட்மிட் ஆகிடணும். குழந்தைகள் பிறக்குற வரைக்கும் நீங்க எங்களோட கண்காணிப்புல தான் இருக்கணும்…மெடிசின்ஸ் தர்றேன் கரெக்ட்டா எடுத்துக்கோங்க…மன்த்லி மன்த்லி செக்கப் வந்துடுங்க…தேர்ட் மன்த் ஸ்கேன் எடுத்துக்கலாம்.” என்று கூறினார்.
வீட்டிற்கு வந்த வாசுவிற்கு பயமாக இருந்தது. ஆனால் அவளுக்கு குழந்தைகள் மிகவும் பிடிக்கும் என்பதால் அமைதியாக நின்றிருந்தான்.
அவனது எண்ணவோட்டத்தை அறிந்தவள் அவனருகே வந்து நின்று , * தேவ்…பயப்படுறீங்களா..?” என்றவள் அவனது கைகளை பிடித்து தனது வயிற்றின் மீது வைத்துக் கொண்டு, “இது எவ்வளவு அழகு தெரியுமா? நான் முழுசா ஃபீல் பண்ணனும். நான் ,நீங்க அனு நம்ப குழந்தைங்கக்கு ன்னு அழகா ஒரு வாழ்க்கையை வாழ ஆசைப்படுறேன்…எனக்காக ஒன்னு செய்வீங்களா?” என்றவள் குழம்பி இருந்த அவனது முகத்தை நன்றாக நிமிர்த்தி தன்னைப் பார்க்க வைத்தாள்.
“ சொல்லு ருத்ரா…” என்றான் சுரத்தே இல்லாமல்.
“ ம்ம்ச்…இப்ப தானே சொன்னேன்…இது நம்ப குழந்தைங்க ன்னு. சியர் அப் தேவ்…சந்தோஷப்படுங்க. இப்படி முகத்தை தூக்கி வச்சிக்காதீங்க..”
“ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ருத்ரா…ஆனா உனக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா என்னால தாங்க முடியாது ருத்ரா. என்னோட பலமே நீ தான் டி…” என்று கூறி அவளை கரங்களை இறுகப் பிடித்துக் கொண்டான்.
“ ம்ம்.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது… பாசிடிவ்வா நினைங்களேன். சரி…நான் சொல்றதை மறுக்காம கேப்பீங்க தானே?”
“ சொல்லு மா. நான் என்ன பண்ணனும்?”
“ இப்ப உங்க குழந்தைங்களுக்கு முத்தம் வேணுமாம்..அதை முதல்ல கொடுங்க..” என்றாள் அவனது அடர்ந்த கேசத்தை கலைத்து விட்டபடியே.
அவளை கட்டிலில் மெல்ல சாய்த்தவன் அவளது புடவையை நன்றாக தளர்த்தி விட்டு விட்டு வலிக்காமல் அவளது மணி வயிற்றில் முத்தமிட்டு இதழை வயிற்றிலேயே சிறிது நேரம் புதைத்து இருந்தான்.
“ தேவ் மீசை குத்துது பா… உங்க மீசை எப்பவுமே டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்கு..பொல்லாத மீசை “ என்று கூறி அவனது மீசையை பிடித்திழுத்தாள்.
“ இனி நீங்க தான் நம்ப கம்பெனியோட எம்.டி.…எல்லா ரெஸ்பான்சிபிலிட்டீஸையும் நீங்க எடுத்துக்கோங்க பா…” என்றவளிடம் மறுத்துக் கூற வந்தவனை இடை மறித்து, “ நான் சொல்லி முடிச்சிடுறேனே… நான் இந்த ஆஃபிஸ் டென்ஷன் எதுவும் இல்லாம உங்களையும் நம்ப குழந்தைகளையும் மட்டும் நல்லா கவனிச்சுக்கணும். லேசுபட்ட ஆள் இல்ல நீங்க. தாராளப் பிரபுவா மூணு குழந்தைங்களை சிங்கிள் அடெம்ப்ட்ல கொடுத்திருக்கீங்க. மூணு ஒன்னு நாலையும் நல்லா கவனிச்சுக்க வேண்டாமா..? என்னால வெர்க் அண்ட் லைஃப் பேலன்ஸ் பண்ண முடியாது.. ப்ளீஸ்…! ப்பா..கொஞ்ச வருஷம்..குழந்தைங்க வளர்ந்து அவங்களோட வேலையை அவங்களே செஞ்சிக்குற வரைக்கும்…” என்று கண்களை சுருக்கி அவள் கேட்ட விதத்தில் அவனால் மறுக்கத் தோன்றவில்லை.
விஷயத்தை கேள்விப்பட்டு ப்ரேமா ஆருத்ராவிற்கு உதவி செய்வதற்காக வந்து விட்டார்.
முதல் மூன்று மாதங்கள் மிகவும் சோர்ந்து போய் தெரிந்தாள் ஆருத்ரா. தலை சுற்றல் , வாந்தி என மசக்கை அவளை படுத்தியெடுத்தி விட்டது.
“ ஆரும்மா…நீங்க ஏன் ஸ்விம் பண்ண வர மாட்டேன்றீங்க…? எப்ப பார்த்தாலும் தூங்கிட்டே இருக்கீங்க..லேசி ஆரும்மாவா ஆகிட்டீங்க…” என்று சலித்துக் கொண்டாள் அனு.
அவளை தன்னருகே அழைத்து அமர வைத்து கொண்ட ஆருத்ரா, “ அனு தங்கம்….ஆரும்மா வயித்துல த்ரீ பேபீஸ் இருக்கு.. அதனால இன்னும் கொஞ்ச நாளைக்கு உன் கூட ஸ்விம் பண்ண வர மாட்டேன்…அப்பா கூட நீங்க ஸ்விம் பண்ணுங்க ஓகே வா? பேபீஸ் வந்ததுக்கு அப்பறமா ஆரும்மா…உன் கூட விளையாட வருவேன்..ஸ்விம் பண்ண வருவேன்…சரியா..?” என்று அவளுக்கு புரியும் வகையில் கூறினாள்.
அவள் கூறியதைக் கேட்டு விழிகளை விரித்தவள், “ ஒன்…டூ…த்ரீ…பேபீஸ் வயித்துல இருக்காங்களா?” என்றாள் ஆச்சர்யமாக.
சிரித்தபடி , “ ஆமா…”என்றாள்.
“ அப்ப அந்த த்ரீ பேபீஸ்..எப்ப என் கூட விளையாட வருவாங்க..? நான் அவங்க கூட விளையாடலாமா?”என்றாள் வெகுளியாக.
அவளது பேச்சல் சொக்கிப் போனவள் அவளை நெட்டி முறித்து கன்னத்தில் முத்தமிட்டு, “ கண்டிப்பா நீ அவங்க கூட விளையாடலாம்…ஆனா அதுக்கு கொஞ்ச நாள் ஆகும்..நீ தான் பேபீஸை நல்லா பாத்துக்கணும்..ஓகே வா?” என்றாள்.
“ ஹா…ஹான்…ஓகே…ஆரும்மா…பாப்பா உச்சா போனா உங்க கிட்ட வந்து சொல்லிடுவேன்…பாப்பா அழுதா உங்க கிட்ட சொல்லிடுவேன்…அப்பறம்…” என்று பட்டியலிட்டு கொண்டே போனவளின் பேச்சை ரசித்து மகிழ்ந்திருந்தாள் ஆருத்ரா.
கதவில் சாய்ந்து கொண்டு மகளது பேச்சை வாசுவும் ரசித்து பார்த்திருந்தான்..
அலுவலகத்தில் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டான் வாசு. அவளது அறையில் அவள் அமர்ந்திருந்த சுழல் நாற்காலியில் அமர்ந்து அனைத்து வேலைகளையும் செய்தான்.
அலைப்பேசி காணெளி மூலம் அவனுக்கு அழைத்தாள்.
“ சொல்லுங்க மேடம்…என்ன திடீர்னு வீடியோ கால்?”
“ சும்மா தான்…ஏன் நான் பண்ணக் கூடாதா?”
“ பண்ணலாம் தப்பில்ல…ஜூஸ் குடிச்சிட்டியா?”
“ ஆஃபிஸ்க்கு போய் அரை மணி நேரம் தான் ஆகுது மிஸ்டர் தேவ்…ரொம்ப பாசத்தை கொட்டுறீங்க…தாங்க முடியல என்னால..” என்றவள் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கம்பீரமாக அமர்ந்திருந்த கணவனை ரசித்திருந்தாள்.
அவள் கூறியதைக் கேட்டு சிரித்தவன் அலுவலக விவரங்கள் சிலவற்றை அவளிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டான்.
காணொளி மூலம் அவனுக்கு அவசர முத்தத்தை வைத்து விட்டு அழைப்பினை துண்டித்தாள் ஆருத்ரா.
ஏழாவது மாதமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவளை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டான வாசு. ப்ரேமாவும் உதவிக்கு இருந்தார்.
ப்ரேமாவுடன் முதலில் ஒன்ற மறுத்த அனு சூழ்நிலையை புரிந்து கொண்டு அவருடன் ஒட்டிக் கொண்டாள்.
அனுவிற்கு தேவையானதை அனைத்தையும் பட்டியலிட்டு அவரிடம் ஏற்கனவே கொடுத்திருந்தாள் ஆருத்ரா.
ஒன்பதாம் மாதம் தொடக்கத்தில் வீட்டளவிற்கு வளைகாப்பை நடத்தினான் வாசு.
தாய்மையின் பூரிப்பும் வாசுவின் அன்பும் அவளது முகத்திற்கு தனி அழகைக் கொடுத்தது. மேடிட்ட வயிற்றுடன் அமர்ந்திருந்தவளை ரசித்து பார்த்திருந்தான் வாசு.
அடுத்து வந்த சில நாட்களில் அறுவை சிகிச்சை மூலம் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர்.
மருத்தவர்கள் மூன்று குழந்தைகளையும் அவனது கைகளில் கொடுத்தனர். குழந்தைகள் அவனது கரங்களுக்குள் பாந்தமாக அடங்கிக் கொண்டனர்.
“ அய்…த்ரீ…பேபீஸ்….த்ரீ..பேபிஸ்…அப்பா..அப்பா நானு நானு….ஒரு பேபியை என் கிட்ட தாங்க…ஏன் எல்லா பேபீஸூம் எப்ப பார்த்தாலும் தூங்கிட்டே இருக்காங்க? எப்ப என் கூட விளையாட வருவாங்க…” என்று கேள்விகளால் துளைத்து விட்டாள்.
திவ்யா, ப்ரகாஷ், சாந்தி என் அனைவரும் குழந்தையை காண வந்திருந்தனர்.
குழந்தைகளை கையில் ஏந்திக் கொண்டு ஆருத்ராவின் அருகில் வந்தவன் மயக்கத்தில் இருந்தவளை பார்த்து, “ தேவதைப் பொண்ணு டி நீ..” என்று முணுமுணுத்து விட்டு அவளது நெற்றியில் முத்தமிட்டான்.
“ சார் …பேபீஸை கொடுங்க..இன்குபேட்டர் ல வைக்கணும்…” என்று கூறிய செவிலியர் குழந்தைகளை வாங்கிக் கொண்டு சென்றார்.
ஆதவ், அர்ஜூன், ஆர்யன் என மூன்று குழந்தைகளுக்கும் பெயரிட்டு மகிழ்ந்தனர் இருவரும்.