முழுதாக எட்டு மாதங்கள் கடந்திருந்தது
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் மலை முகட்டில் இருந்த விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தாள் ஆருத்ரா.
எங்கெங்கு காணினும் இயற்கை தனது கொடையை வாரி வழங்கியிருந்தது. மெல்லிய குளிர் திறந்திருந்த கண்ணாடி சன்னல் வழியாக நுழைந்து இதத்தை அளித்தது.
காதில் செவிப்பொறியை மாட்டிக்கொண்டு இளையராஜாவின் தாலாட்டும் பாடல்களை கண்மூடி ரசித்திருந்தாள் ஆருத்ரா.
இலகுவான உடையணிந்து தலைமுடியை தூக்கி கொண்டையிட்டிருந்தாள். அவளது விரல்கள் தலையணையில் ராகத்திற்கேற்ப தாளம் போட்டுக் கொண்டிருந்தது.
மனம் முழுவதும் ஒருவித அமைதி பரவி நிற்சலனமாக இருந்தது.
தட்டில் இடியாப்பமும் தேங்காய்பாலும் எடுத்துக் கொண்டு அவள் முன்பு வந்தமர்ந்தார் ப்ரேமா.
பாடலில் தன்னை மறந்து மூழ்கியிருந்தாள் ஆருத்ரா. அவளைச் சுற்றிலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாவல்கள் பரப்பி இருந்தது. அவற்றை தள்ளி வைத்து விட்டு அவளது கைகள் தொட்டார் ப்ரேமா.
விழிகளை திறந்தவள் தாய் உணவோடு இருப்பதை கண்டு செவிப்பொறியை கழற்றி வைத்து விட்டு உணவை எடுத்துக் கொண்டாள்
“ நீங்க சாப்ட்டீங்களா ம்மா…”
“ இல்ல டா…நீ சாப்பிடு…அப்புறமா ந் சாப்ட்டுக்குறேன்…”
“ ம்மா…போங்க… போய் இன்னொரு தட்டுல நீங்களும் போட்டு எடுத்துட்டு வாங்க…ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்…தனியா சாப்பிட ஒருமாதிரி இருக்கு..” என்றபடி இடியாப்பத்தை தேங்காய் பாலில் நனைத்து உண்டாள்.
அனுவின் நியாபகம் வருவதை அவளால் தடுக்க முடியவில்லை. மனதை அதிகம் யோசிக்க விடாமல், “ அப்பா ஃபோன் பண்ணினாரா?” என்றாள்.
“ ம்ம்…பண்ணினாரு ம்மா…ஸ்டாஃப்ஸ் எல்லாருக்கும் இன்சென்டிவோட இன்கிரிமெண்டும் கொடுத்திருக்காரு… எல்லாரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்களாம். உனக்கு நன்றி சொல்லப் சொல்லி சொன்னாங்கன்னு அப்பா சொன்னாரு ஆரும்மா…”என்றார்.
சிரித்த படி உண்டு கொண்டிருந்தாள். மனம் வாசுவையும் எண்ணிப் பார்க்க தவறவில்லை.
ப்ரேமாவும் உண்டு விட்டு அவளுக்கான மாத்திரையை கொடுத்து விட்டு நகர்ந்தார்.
எட்டு மாதங்ளுக்கு முன்பு…
வாசு சென்றவுடன் மகளை பார்ப்பதற்காக உள்ளே வந்த ராகவன் மூச்செடுக்க மிகுந்த சிரமப்பட்டுக் கொண்டிருந்த மகளைப் பார்த்து பதறியடித்துக் கொண்டு வந்தார்.
நாற்காலியில் கண்கள் சொருகி மூச்சிரைக்க அமரந்திருந்தவளின் அருகில் ஓடி வந்து, “ஆரும்மா…என்னடா செய்யது..? மூச்சு விட கஷ்டப்படுறியே…? அய்யோ…!என்னாச்சு டா?” என்று பதறியவர், அருகிலிருந்த அவளது அலைப்பேசியை எடுத்து ப்ரேமாவை வரச்சொல்லி விட்டு காரோட்டியிடம் காரை எடுக்கச் சொன்னார்.
“தேவ்….ப்பா….தேவ்….போயிட்டாரு….ப்பா….ஏன்…இப்படி…? நான் …நான்…நல்லது…தானே…” என்றவளுக்கு மேற்கொண்டு பேச முடியவில்லை.
தலையிலடித்துக் கொண்டவர், “அய்யோ….!பாவிப் பொண்ணே…!அவன் மேல ஏன் இப்படி பைத்தியமா இருக்க….நீ நல்லா ஆகி வா…அவனையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கு…” என முடிப்பதற்குள் மயங்கி விட்டாள் ஆருத்ரா.
தந்தையின் பேச்சு முழுவதும் அவளது காதில் விழவில்லை போலும். ராகவன் வாசு வீட்டில் நடப்பதனைத்தையும் தெரிந்து வைத்திருந்தார். எனவே தான் மகள் படும் துன்பத்தை காண சகியாமல் எப்பாடுபட்டாவது வாசுவை அவளுக்கே மணமுடித்து வைத்து விட முடிவெடுத்தார் .
பாதுகாவலர் உதவியுடன் அவளை காரிலேற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாள் ஆருத்ரா.
மருத்துவரோ ராகவனிடம், “டிப்ரெஷனோட கடைசி லெவல்க்கு போயிருக்காங்க…இன்னும் கொஞ்சம் விட்டுருந்தா…கோமாவுக்கு போயிருக்க கூட வாய்ப்பிருந்திருக்கும். தேங்க் காட்…சீக்கிரம் கூட்டிட்டு வந்துட்டீங்க…எவ்வளவு நாளா டிப்ரெஷனுக்கு டேப்லெட் போடுறாங்க…?”
“ மூணு நாலு வருஷமா டாக்டர்..” என்றார் ராகவன்.
“ஓ.. ஓகே அவங்க இன்னும் மயக்கமா தான் இருக்காங்க. ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு. மூணு நாலு மாசத்துக்கு கொஞ்சம் ஹெவி டோஸ் மெடிசின் தர்றேன்… அதிகமான நேரம் தூங்கிட்டு தான் இருப்பாங்க. அப்பறமா அவங்களை செக் பண்ணிட்டு டோசேஜை குறைச்சுக்கலாம். ஏதோ ஒரு விஷயம் அவங்கள ரொம்பவே அதிகமா பாதிச்சிருக்கு. அது என்னன்னு கேட்டு அதை ரிசால்வ் பண்ணப் பாருங்க. அப்பறம் இந்த வெர்க் பிரஷரெல்லாம் இல்லாம கொஞ்ச நாள் ரிலாக்ஸ்டா எங்கயாவது ஸ்டே பண்ணிட்டு வரச்சொல்லுங்க. மைண்டும் மனசும் கொஞ்சம் ப்ரீயா இருக்கட்டும். அவங்களோட மனசு எப்ப பார்த்தாலும் எதையோ போட்டு அதிகமா யோசிச்சி ஸ்ட்ரெஸ் ஆகி அளவுக்கு அதிகமாக அழுத்தத்தை கொடுத்திருக்கு. சோ…நான் சொன்னதை நீங்க கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க…” என்று கூறி விட்டு சென்றார் மருத்துவர்.
கதவைத் தோய்ந்த முகத்துடன் நின்றிருந்த ப்ரேமாவை பார்த்தவர் , “ அவளுக்கு பிடிச்சதை ஒரு தடவை மறுத்ததுக்கு இவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்துட்டா…இனியும் என் மகளை இப்படி உடைஞ்சி போய் பாக்குற அளவுக்கு சக்தி எனக்கு கிடையாது. அவளுக்கு என்ன விருப்பம்னு கேளு…அது படி எல்லாம் நடக்கட்டும்…” என்றார்.
ஒரு வாரம் மருத்துவமனை வாசம். அதீத அமைதி தென்பட்டது அவளிடம்.
மருத்துவர் கூறியதை ஆருத்ராவிடம் கூறியவர், ”என்ன சொல்லுற ஆரும்மா? கொடைக்கானல் ல இருக்குற நம்ப விசிட்டர்ஸ் பங்களாவுக்கு போய் கொஞ்ச நாள் தங்கியிருந்துட்டு வரலாமா?” என்றார் ராகவன்
“ ம்ம் சரிப்பா…ஆனா நீங்க இங்கிருந்து என்னோட கம்பெனியை பாத்துக்கோங்க. நானும் அம்மாவும் போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வர்றோம். நான் எங்க போறேன்ங்கறது யாருக்கும் தெரியாம பாத்துக்கோங்க…அப்பறம் வாசுவோட சம்பளத்துல இருந்து கொஞ்சம் அமௌண்ட்டை டிடெக்ட் பண்ணிட்டு அவருக்கு சேலரி ஃப்ராசஸ் பண்ணுங்க…” என்றவள் மேலும் சில விவரங்களை அவரிடம் கூறி விட்டு கொடைக்கானலுக்கு கிளம்பினாள்.
இதற்கிடையில் வீட்டிற்கு வந்த வாசுவிற்கு ஆருத்ராவின் நியாபகமாகவே இருந்தது.
உடலளவில் அவளை வதைக்க நினைத்த தன்னை நினைத்தே ஆத்திரமாக வந்தது. அனுவின் முகமும் பொலிவில்லாமல் இருந்தது. பெயருக்கு அங்கிருந்த குழந்தைகளுடன் விளையாடி விட்டு வந்தாலும் அவளது முகம் சுணக்கமாகவே இருந்தது. இரவு நேரம் இருவரின் தனிமையை அதிகரித்து காட்டியது.
இரவு உணவு முடித்ததும் ஆருத்ராவிடம் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு விளையாடியதும், பாடங்களை அழகாக கற்றுக் கொடுத்ததையும் அனு நினைவில் வைத்திருந்தாள்.
‘தினமுமே அப்படியே இருந்தால் நன்றாக இருக்குமே ‘என குழந்தை மனது ஏங்கத் துவங்கியது.
சந்தியா இரண்டாம் கட்ட ஹியரிங்கிற்கு வந்திருந்தாள்.
அவள் வாசுவின் மீது கூறியிருந்த குற்ற்ச்சாட்டையெல்லாம் மறுத்தனர் ப்ரகாஷூம் சாந்தியும்.
இருவரையும் பார்த்து முறைத்தாள் சந்தியா. அனு வாசுவிடம் இருந்து கொள்ளவே விரும்பினாள். ஒரு தாயாக குழந்தையின் விலகல் கூட உறைக்கவில்லை போலும் அவளுக்கு.
வாசுவோ அவள் விரும்பிய வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும், தன்னுடன் வாழ வருமாறு அழைக்கப் போவதில்லை என்றும் கூறினான். மேலும் அவளுடன் வாழக்கையை இனியும் தொடர தான் சிறிதும் விரும்பவில்லை என்று கூறி விவாகரத்தை உறுதி செய்தான்.
அடுத்து வந்த சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.
சந்தியாவை நோக்கி நகர விழைந்த கால்களை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள் அனு. ஏனோ அம்மா என்றழைத்துக் கொண்டு அவளிடம் ஓடோடிச் செல்ல விரும்பவில்லை.
சந்தியாவும் அனுவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கடைசியாக அனுவை பார்த்தவளுக்கு ஏதோ ஒன்று உந்தித் தள்ள அவளருகே சென்றவள் முகத்திற்கு அருகே குனிந்து “ அனு..எப்படி டா இருக்க?” என அவளது தலையை வருட கைகளை நீட்ட, அதை வெடுக்கென்று தட்டி விட்டார் சாந்தி.
கேள்வியாக அவரைப் பார்க்க , “மரியாதையா அவன் கூடவே போயிடு…இல்லைன்னா பொண்ணுன்னு கூட பாக்க மாட்டேன் . அசிங்கமா ஏதாவது சொல்லிடுவேன். தயவு செஞ்சு திரும்ப வந்துடாத…என் பொண்ணு செத்து போயிட்டான்னு நினைச்சுக்குறேன். அழகான குடும்பம், அன்பான கணவன் கிடைக்குறதெல்லாம் வரம். எல்லாத்தையும் கெடுத்து குட்டிச்சுவராகிட்டு போயிட்ட.. நீ விரும்பின விவாகரத்து கிடைச்சிடுச்சுல்ல…இனி இந்த பக்கம் திரும்பி வந்துடாத…மரியாதை கெட்டுடும்..” என்றவர் அனுவை தூக்கிக் கொண்டு விடுவிடுவென நடந்தார்
ஏதோ ஒன்று மனதை உறுத்த வாசுவை பார்த்தாள்.
அவளை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு நடந்தான்.
முதன்முறையாக ஏதோ பெரிதாக தவறு செய்துவிட்டது போல தோன்றியது அவளுக்கு. கைகளை பிசைந்து கொண்டு நின்றிருந்தாள் சந்தியா.
“ விடு சந்தியா…நமக்கான வாழ்க்கையை நாம தான் டிசைட் பண்ணனும்…இனி நிம்மதியா நாம் வாழ ஆரம்பிக்கலாம் …” என்று கூறி அவளது தோளை அணைத்தபடி சென்றான் மாதேஷ்.
இவையனைத்தும் நடந்து முடிந்து ஏழு மாதங்கள் ஆகிவிட்டன.
அலுவலகத்திற்கு வந்த வாசுவிற்கு ஆருத்ரா வராதது ஏமாற்றத்தை அளித்தது. ராகவன் தான் தலைமை பொறுப்பை ஏற்றிருந்தார்.
ராகவனிடம் சென்று ஆருத்ரா வை பற்றி கேட்க மனமொப்பவில்லை. தவிப்புடனே காலத்தை கடத்தினான்.
ராகவன் வாசுவை அழைத்திருந்தார்.
“ மே ஐ கம்பின் சார்..”
“ வாங்க வாசு…ப்ளீஸ் பீ சீடட்..”
“ தேங்க் யூ சார். என்ன விஷயம்?”
“ உங்களை சீனியர் மேனேஜரா புரமோட் பண்ணிருக்கேன். ஃபினானஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்குறவங்க உங்களுக்கு நேரடியா ரிப்போர்ட் பண்ணுவாங்க… இந்த ஆஃபரை நீங்க அக்சப்ட் பண்ணி கிட்டாலும் ஓகே தான். இல்ல வேற கம்பெனிக்கு நீங்க ஜாப் ட்ரை பண்ணுனாலும் ஓகே தான்…”என்று கூறி வட்டு அவனைப் பார்த்தார்.
அவரது கடைசி வார்த்தையை கேட்டவன் நிச்சயமாக ஆருத்ரா தான் இதனை கூறியிருப்பாள் என சரியாக ஊகித்தான்.
ஒரு பெருமூச்சுடன், “ நான் இதை அக்சப்ட் பண்ணிக்குறேன்னு ருத்ரா கிட்ட சொல்லிடுங்க சார்…” என்று கூறி விட்டு வெளியேறினான்.
அவனது புரிதலை கண்டு வியந்து நின்றார் ராகவன்.
சாந்தியின் நடத்தையில் நிறைய மாற்றங்கள் தெரிந்தது. மகளது செயலில் மிகவும் நொந்து போயிருந்தார்.
திவ்யாவை தேவையில்லாமல் தேளாய் கொட்டுவது குறைந்திருந்தது . மாலையில் ஆரோனுடன் கோவிலுக்கு சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டார். இடுப்பொடியும் வேலைகளை திவ்யாவின் தலையில் கட்டுவதில்லை.
அன்று காலையில் ப்ரகாஷிற்கும் சாந்திக்கும் திவ்யா உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.
திடுமென்று சாந்தி, “ அப்பறம் என்ன செய்யப் போறதா உத்தேசம் திவ்யா? காலம் முழுக்க இப்படியே வீட்டுக்குள்ளேயே இருந்து செக்கு மாடு மாதிரி சுத்தி வரப்போறீயா?” என்றார்
அவளோ ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டே ப்ரகாஷை பார்க்க, அவனும் அவளைப் போல தான் முழித்துக் கொண்டிருந்தான்.
‘ சுத்தம்…இவரு அதுக்கு மேல..’ என நினைத்தவள் சாந்தியிடம், “நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல அத்தை..”
“ எல்லாத்தையும் விளக்கமா தான் சொல்லணுமா..உனக்கு..? பையனை பெத்து வச்சிருக்க .. பின்னாடி அவன் படிப்பு , டியுஷன்னு நிறைய செலவு இருக்கு. இந்த காலத்துல ஒரு வருமானம் காணாது. நீயும் நல்லா படிச்சிருக்க. அந்த படிப்பை வீணாக்காம நல்ல வேலை கிடைச்சா போ…நான் வீட்டு வேலையையும் ஆரோனையும் பாத்துக்குறேன். எல்லாம் உன்னிஷ்டம் தான். நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. ” என்று கூறி விட்டு எழுந்து சென்றார்.
திவ்யாவிற்கு தனது காதுகளையே நம்ப முடியவில்லை. ப்ரகாஷின் அருகில் சென்றவள் ,” ஒரு நிமிஷம் என்னோட கையை கிள்ளுங்களேன்..” என்றாள்.
அவனோ சும்மா இருக்காமல் அவளது வெண்ணிற இடுப்பினை நறுக்கென்று கிள்ள, “ஆ…அய்யோ..!” என அலறினாள் திவ்யா..
“ என்னாச்சு..என்ன சத்தம் அங்க?” என்றார் சாந்தி.
“ கர..கரப்பான் பூச்சி அத்தை…மேல விழுந்துடுச்சு…” என்றாள் கணவனை முறைத்துக் கொண்டே.
“அதை முதல்ல விளக்குமாத்தால அடிச்சி வீட்டை விட்டு வெளியே தூக்கிப் போடு திவ்யா…திரும்பவும் வந்துடப் போவுது…” என்றபடி தனதறைக்குள் நுழைந்து கொண்டார்.
திவ்யா அவனைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
.