பிழை-32

கட்டிலில் இருந்து எழுந்தவன் வேகமாக தனது சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு ஆடையை திருத்திக் கொண்டான்.

சிதறிக் கிடந்த அவளது ஆடைகளை அள்ளிக் கொண்டு அவளருகே வந்து அவளை எழுப்பி அமர  வைக்க முயன்றான்.

அவன் கைகளிலிருந்து தனது ஆடைகளை வெடுக்கென்று பிடிங்கிக் கொண்டாள்.

 “ என்ன செய்யுது ருத்ரா..?” என்றபடி அவளது தோளினைத் தொட முயன்றவனது கைகளை தட்டிவிட்டு,  “என்னைத் தொடாதே…!  தயவு செஞ்சு என்னைத்  தொடாதே…! “ என முகம் சிவக்க கத்தினாள்.

மூச்சு வாங்க அமர்ந்த வாக்கிலேயே தனது ஆடையை அணிந்து கொண்டவள் மெத்தையில் இருந்து தடுமாறியபடி எழுந்து வந்தாள்

மூச்சிரைக்க ஆரம்பித்தது அவளுக்கு. 

அவளருகே வர முயன்றவனை கைக்கொண்டு தடுத்து நிறுத்தியவள் , “ போயிடு தேவ்…இங்கிருந்து போயிடு… நா…நா…உன்னை பிடிச்சி வைச்சிக்க …விரும்பல…இதோ…உன் வீட்டை நான் வாங்கின டாக்குமெண்ட்…ஒரு நிமிஷம் இரு…” என்றவள் தனது கஃப்போர்ட்டை திறந்து மற்றொரு கோப்பினை எடுத்து அவனிடம் கொடுத்தாள்.

“ பிரிச்சு பாருங்க.. மிஸ்டர் வாசுதேவன்..” என்றாள் அழுத்தமாக.

அவள் பெயரில் இருந்த பத்திரத்தை மீண்டும் வாசுவின் பெயருக்கு மாற்றியிருந்தாள்

“ இ…இது…ஏன்..? எதுக்கு?”

வழிகள் கலங்கி கண்ணீரை சொரிய தயாராகி நின்றது அவளுக்கு.

முயன்று இமைகளை சிமிட்டிக் கொண்டவள் பழைய கம்பீரத்துடன், “இந்த மூணு வருஷமா உங்களோட முன்னேற்றத்தை தடை செஞ்சு வாழ்கையில அடுத்த நிலைக்கு முன்னேற விடாம செஞ்சதுக்கான பிராயசித்தம் தான் உங்க வீட்டை உங்களுக்குத் திருப்பித் தர்ற முடிவு. நியாயமா உங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை தட்டிப் பறிச்சதுனால வந்த குற்றவுணர்வு. மறுக்காம இந்த பத்திரத்தை எடுத்துக்கோங்க மிஸ்டர் வாசுதேவன். இனி நீங்க வீட்டுத் தவணை கட்ட வேண்டிய அவசியமில்லை. உங்க மனைவி வாங்கின கடனுக்கான பணத்தை மட்டும் மாசா மாசம் கட்டிடுங்க. அது போதும். அப்பறம் நீங்க விரும்பியபடி நீங்க சுதந்திரமா எந்த கம்பெனிக்கு வேணாலும் மாறிக்கலாம். இனி உங்களை இந்த ஆருத்ரா எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய மாட்டா. தாராளாமா இப்பவே கூட நீங்க உங்க வீட்டுக்கு போகலாம்…” என்று கூறியவள்  தனது பையிலிருந்த மன அழுத்ததிற்கான மாத்திரையை எடுத்து விழுங்கினாள்

அவளை பார்க்க பாவமாக இருந்தது. வேகமாக வந்தவன் அவளருகே முட்டி போட்டு அமர்ந்தான்.

நாற்காலியில் அமர்ந்திருந்தவள் சட்டென்று தனது கால்களை விலக்கிக் கொள்ள , அவளது மென் பஞ்சு பாதங்களை முன்னுக்கு இழுத்துப் பிடித்து இழுத்தவன் , “ சாரின்னு சொன்னா மட்டும் உன்னோட மனவலி தீராதுன்னு தெரியும் ருத்ரா…ஆனாலும் கேக்குறேன் என்னை மன்னிச்சிடு…அப்பவும் சரி இப்பவும் சரி…உன்னோட…ம்ம்கூம்..இந்த வாசு உன் கிட்ட ஈகோ பாக்க மாட்டான்…நீ சொன்ன காரணங்கள் ஓரளவுக்கு உண்மை தான். ஆனா அதையும் தாண்டி நீ இப்படி நடந்து கிட்டதுக்கு வேற காரணமும் இருக்கலாம்னு நினைக்குறேன் . என்னோட தப்புக்கு எந்த ஒரு சப்பைக்கட்டு கட்டப் போறதில்லை . என்னோட நிதானம் தவறி முதன்முதலாக உன்கிட்ட மட்டும் தான் மிருகத்தனமா நடந்துருக்கேன். மன்னிச்சிடு..நீ சொன்ன மாதிரியே உன்னோட கடனை அடைச்சிட்டே நான் வேற கம்பெனிக்கு போறேன்…நா…நானும்…அனு.. அனுவும் கிளம்புறோம்…” என்றபடி அவளது பாதங்களை பிடித்துக் கொண்டே கூறினான்.

எத்தனை வருடங்கள் ஆனாலும் முதல் காதலின் சுவடுகள் மனதினோரம் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டு தான் இருக்கும்‌. அவளைப்‌ பற்றி ஆதி முதல் அந்தம் அறிந்தவனால் அவளது நுண்ணிய உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது. உடலளவை விட தனது செயலை எண்ணி மனதளவில் தான் அவள் அதிகம் காயப்பட்டிருப்பாள் என நினைத்தவன்  தனது செயலை எண்ணி வெட்கினான். மேலும் அவள் கண்முன் நின்று அவளை வருந்தச் செய்யாமல் வெளியேற முடிவு செய்தான்.

அவளது பார்வை சுவற்றை வெறித்தபடி இருந்தது

எண்ணங்களுக்கு வார்த்தை வடிவம் கொடுக்க முயன்றான்.  ஆனால் தொண்டைக்குழியிலேயே வார்த்தைகள்  தடைப்பட்டு நின்றது. அவளை பார்த்துக் கொண்டே நின்றிருந்தவனின் சிந்தனை கதவு தட்டும் ஓசையில் தடைப்பட்டது.

அனு மீண்டும் கதவை தட்டவே வேகமாக சென்று கதவைத் திறந்தான்.

கை நிறைய பொம்மைகளை வைத்துக் கொண்டிருந்தவள், “அப்பா…ஆரூ ஆன்ட்டியையும் நம்ம கூட பீச்சுக்கு கூட்டிட்டு போகலாமா?” என்றாள்.

அமைதியாக நின்றிருந்தான் வாசு.

“ அப்பா….சொல்லுங்கப்பா…” என்று அவனது கரங்களைப் பிடித்து இழுத்தாள் அனு‌

அனுவின் முகத்தருகே குனிந்தவன் , “அனு குட்டி நாம நம்ம பழைய வீட்டுக்கு போகலாம். நீ உன்னோட திங்கஸ்யெல்லாம் எடுத்து ரெடியா வச்சுக்க…” என்றான்.

அவளோ புரியாமல் வாசுவையும் ஆருத்ராவையும் பார்த்தாள்.

குழந்தை தன் மனதின் ஏக்கங்களை வெளிப்படுத்த தெரியாமல் திகைத்து நின்றாள்.

“ அப்பா..ஏன் ப்பா..நாம இங்கேயே இருக்கலாமே..! ஆரு ஆன்ட்டி கூட இருந்தா ஜாலியா இருக்கு…என்னை சிரிக்க சிரிக்க வைக்குறாங்க. ஐ லவ் ஆரு ஆன்ட்டி ப்பா…”

“ மீ டூ டா…செல்லம்…” என்ற வார்த்தையை அவனால் மனதில் மட்டுமே கூறிக் கொள்ள‌ முடிந்தது.

அவளையே பார்த்தபடி வாசு நின்றிருக்க, “ அப்பா… இல்லைன்னா ஆன்ட்டியை நம்ம கூட அழைச்சிட்டு போகலாமா…! அங்க பப்ளி, ப்ரவீன் இவங்க கூட ஆன்ட்டியையும் விளையாட்டுக்கு சேர்த்துக்கலாம் பா…” என்றாள் வெகுளியாக.

கண்கள் சிவந்து கலங்கியது வாசுவிற்கு . தொண்டையை சரி செய்து கொண்டவன் , “ இல்லடா குட்டி ஆன்ட்டிக்கு இங்க நிறைய வேலை இருக்கு..அவங்க அதையெல்லாம் முடிக்கணும். உன்னை உன்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கேட்டாங்க.. சீக்கிரமா போய் அவங்க கூட நீ விளையாடணும் ல..வா…நாம கிளம்பலாம்…பீ ரெடி…” என்றான்.

சோகமான முகத்துடன் அவனது கைகளை தன்னிடமிருந்து விலக்கிக் கொண்டவள் வேக வேகமாக தனதறைக்குள் நுழைந்து தனது பொருட்களை சிறிய பையில் அடுக்கி வைத்தாள்.

வாசுவும் அனைத்துப் பொருட்களயும் எடுத்து வைத்தான்.

எல்லாவற்றையும் ஒற்றையாளாக எடுத்துச் செல்ல முடியாது என்பதினால் கேப்பிற்கு கூறிவிட்டு அனுவுடன் ஹாலிற்கு வந்தான்.

இரு கரங்கைளையும் கோர்த்து கொண்டு குனிந்து அமர்ந்திருந்தாள் ஆரு்ரா . வாசு மற்றும் அனு நிற்பதை உணர்ந்து கொண்டாலும் இருவரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை  

“ வர்றேன் ஆருத்ரா…”

அவளிடம் பதிலில்லை.

“ ஆன்ட்டி பை…ஆன்ட்டி…” என்றாள்‌ அனு.

அதற்கும் அவளிடமிருந்து எந்த ஒரு எதிர்வினையும் இல்லை.

ஒரு பெருமூச்சுடன்,” வா..அனு போகலாம்…” என்று அவளது கைகளை பிடித்துக் கொண்டு வாசல் வரை அழைத்துச் சென்றான்.

வாசலருகே சென்று திரும்பிப் பார்த்த அனு அவளைத் திரும்பிப் பார்த்தாள். 

ஆருத்ரா அசையாமல் அமரந்திருக்கவே  அவனது கையில் இருந்து தனது பிஞ்சுகள் கரங்களை விடுவித்துக் கொண்டு ஆருத்ராவிடம் ஓடினாள்.

அவளருகே சென்று  ஒரு கணம் தேங்கி நின்று அவளைப் பார்த்து விட்டு  பாய்ந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

இதனை சற்றும் எதிர்பாராத ஆருத்ரா நிலைதடுமாறி நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள்.

அனுவின் கைகள் ஆருத்ராவின் கழுத்தை இறுகப்‌பற்றியிருந்தது. அதில்  இருந்தது என்ன உணர்வு என்று  பிரித்தறிய முடியவில்லை.

ஆருத்ராவின் கைகள் இப்போது தாரளாமாக அனுவை தன்னுடன் இறுக்கிக் கொண்டது.

மடி தேடிய கன்றாய் அனு. கன்றை வாஞ்சையுடன் தடவிக் கொடுக்கும் தாய்ப்பசுவாக ஆருத்ரா.

வாசுவின் பிரிவிற்கு பிறகு எதற்காகவும் அழாதவள் பிஞ்சுக் கைகளின் அணைப்பில் உடைந்து அழுதாள்.

கண்ணீர் கன்னம் தாண்டி வழிந்தது. மீண்டும் ஏதோ நெஞ்சை அடைக்கத் தொடங்கியது.

“ ஆன்ட்டி நீங்க சேடா இருக்கீங்களா..? நான் உங்களுக்கு முயல் குட்டி ஜோக் சொல்லவா…? அழாதீங்க ஆன்ட்டி…அப்பறம் அனுவும் அழுவா…” என்றாள் உதட்டை பிதுக்கியபடி.

கண்களை துடைத்துக் கொண்டவள்‌, “இல்லடா தங்கம்…நீ…நீங்க போயிட்டு வாங்க…. அப்புறமா நான் வர்றேன்…நான் சேட்…இல்…இல்ல…பாரு…ஆன்ட்டி ஹேப்பி….பா..பாரு…சிரிக்கிறேன்….” என்றவள் சிரிக்க முயன்றாள்…அழுகை தான் வந்தது. அழுது கொண்டே சிரித்தாள்.

அவளது முகத்தை மலங்க மலங்க பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள் அனு.

“ தயவு செஞ்சு அவளை கூட்டிட்டு போயிடுங்க….போங்க…ப்ளீஸ்…” என்றவள் அனுவின் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு எழ முயன்றவளின் கைகளை பிடித்து இழுத்து அவளது கன்னத்தில் மாறி‌ மாறி முத்தமிட்டுவிட்டு ,” பை…ஆன்ட்டி…சீக்கிரம் வாங்க….” என்று கத்திக் கொண்டே தந்தையிடம் ஓடினாள் அனு.

ஆருத்ராவைப் பார்த்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியேறினான் வாசு.

யாருமின்றி வெறிச்சோடி இருந்த வீட்டை பார்த்தவளுக்கு அழுத்தம் அதிகமாகி மூச்செடுக்க மிகுந்த சிரமப்பட்டாள்.

தங்களுடைய வீட்டில் இருந்து வெளியே வந்த ராகவன் அனுவும் வாசுவும் வெளியேறியதை பார்த்து நிம்மதியடைந்தார்.

மனத் திருப்தியுடன் மகளை காண உள்ளே வந்தவருக்கு மகள் இருந்த கோலம்  பயமுறுத்தியது…

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top