பிழை-30

அனு வரைந்திருந்த காகிதத்தை கையில் வைத்திருந்தாள் ஆருத்ரா .

சிறிது நேரத்தில் அவளருகே வந்த வாசு கையை நீட்டினான்.

என்னவென்பது போல அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

“அனுவோட ட்ராயிங்…” என்றான் மொட்டையாக.

தன் கையிலிருப்பதை தான் கேட்கிறான் என புரிந்தது.

அவனிடம் நீட்டினாள்.

வரை படத்தை வாங்கியவன் அறையை நோக்கி நடந்தான்.

அறையிலிருந்து ஓடி வந்த அனு அவளிடம்  ,” ஆன்ட்டி எனக்குத் தலையை பின்னி விடுறீங்களா..?பைக் ரைட் போகணும்..” என்றாள்.

அவள் முன்பு குனிந்தவள், “ ம்ம்…ஒகே உனக்கு சூப்பரா ஒரு ஹர் ஸ்டைல் பண்ணவா..?”என்றாள் விழிகளை  விரித்து.

“ ம்ம்…ஓகே..ஆன்ட்டி” என்றாள் உற்சாகமாக.

அழகாக ஃபிரஞ்ச் ஃப்ளாட் போட்டுவிட்டாள் அனுவிற்கு. மிதமான ஒப்பனை செய்து விட்டு அழகிய நீண்ட ஃப்ராக்கை அணிவித்து விட்டாள்.

 ஃப்ராக்கை அணிந்து ஒரு முறை சுற்றி பார்த்துக் கொண்டாள்.

கன்னத்தில் கை வைத்து அனுவை ரசித்திருந்தாள் ஆருத்ரா.  

“ ஹய்…சூப்பர்…!” என வாய் விட்டு அனு சிரிக்க , அவளது கன்னத்தில் விழுந்த குழி வாசுவை நினைவு படுத்தியது.

ஏதோ ஒரு ஏக்கம் மனதினுள் சூழ்வதை அவளால் தடுக்க முடியவில்லை ‌.

“ அனு..கிளம்பலாமா…” என கட்டம் போட்ட முழுக்கை சட்டையினை மடித்துக் கொண்டே வந்தான்.

“ ஓ…போலாம்…ப்பா…” என்றபடி அவனது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டாள்

குட்டி தேவதை போலிருந்த மகளின் அழகை காணத் தெவிட்டவில்லை வாசுவிற்கு. புத்தம் புதிய மலர் மலர்ந்து மணம் பரப்பியதை போல உணர்ந்தான்.

“ ரொம்ப அழகா இருக்கீங்க குட்டிம்மா..” என்றவன் அவளது பட்டுக்கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

“ ஆன்ட்டி தான் ட்ரெஸ் பண்ணி விட்டாங்க..” என்றாள்.

அவளை தூக்கிக்கொண்டு ஆருத்ராவின் அருகில் வந்தவன் ,  “ரொம்ப தேங்க்ஸ் மேடம்…” என்றான்.

“ தட்ஸ் ஓகே..” என்று கூறி புன்னகைத்தாள்.

“ வாங்க தங்கம்…போகலாம்…” என மகளை அழைத்துக் கொண்டு நடந்தவன் வாசலை தாண்ட எத்தனித்த போது  திடீரென அவனது கைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வந்த அனு, “நீங்களும் எங்க கூட வாங்க ஆன்ட்டி போகலாம்…” என்றாள்.

“ இல்ல டா..நீங்க போயிட்டு வாங்க…ஆன்ட்டிக்கு வேலை இருக்கு..” என நாசூக்காக மறுத்தாள்.

“ம்ம்க்கூம்…நீங்களும் எங்க கூட வாங்க…” என அடம் பிடித்தாள்.

“ அனு…ஆன்ட்டிக்கு தான்‌ வேலை‌யிருக்குன்னு சொல்றாங்கல்ல…வா நம்ம போகலாம்.. அவங்கள டிஸ்டர்ப் பண்ணாத…” என்றான் ஒருவித அழுத்தத்துடன்.

ஆருத்ராவிற்கும் அவனது எண்ணம் புரிந்தது.‌ முகம் வாடி தான் போனாள்.

“ ம்ம்கூம்…ஆன்ட்டி நம்ம கூட பைக்ல வந்தா தான் நான்‌ வருவேன்…இல்லன்னா நான் வர‌ மாட்டேன்…உங்க கூட டூ அப்பா..” என‌ முகத்தை திருப்பிக் கொண்டாள் அனு.

“ அனு..” என்று அவளை தொட அவனது கரங்களை தட்டி விட்டாள். கோபத்தில் ஜிவுஜிவுவென அனுவின் முகம் சிவந்திருந்தது.

“ அடம் பிடிக்காத அனு…” என்றவனின் குரல் உயர்ந்தது.

“ முடியாது…முடியாது…முடியாது…ஆன்ட்டி நம்ம கூட  இப்பவே வரணும்…” என காலை தரையில் உதைத்து தான் கோபத்தை காட்டினாள்.

“ அடிங்… சொல் பேச்சு கேக்க மாட்ட…என்ன‌ அவ்வளவு அடம் உனக்கு?” என குழந்தையை அடிப்பதற்கு கையை ஓங்கி விட்டான். அவனது கையை பிடித்துக் கொண்டாள் ஆருத்ரா.

“குழந்தை‌ அவ…உங்க கோபத்தை அவ கிட்ட காட்டாதீங்க..” என்றவள் , “இப்ப என்ன நான் உன் கூட வரணும் அவ்வளவு தானே…?” என்றாள் தலையை சரித்து.

“ ஆமா…” என தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.

அவளது கன்னத்தில் முத்தமிட்டு ,” சரி நானும் வர்றேன்…ஆனா பைக்ல இல்ல…கார்ல்.. ஓகே வா. அப்பா ட்ரைவ் பண்ணட்டும்…நாம் ஜாலியா பேசிட்டே வரலாம். என்ன ஓகே வா…டீலா…?” என்று கட்டை விரலை காட்ட தந்தையை ஒரு முறை திரும்பி  பார்த்துவிட்டு ,   “ஓகே டீல்…” என்றாள் தனது பிஞ்சு விரலை அவளின் விரலோடு முட்டிய படி.

“டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. ஆன்ட்டி ரெடி ஆகிட்டு வந்துடுறேன்…” என்று கூறி விட்டு தனது அறைக்குள் நுழைந்தாள்.

வாசுவோ பல்லைக் கடித்து கொண்டு நின்றிருந்தான்.

பெரிதாக ஒப்பனை ஏதுமன்றி  சாதாரண உடையில் தயாராகி வந்தவள் கார் சாவியை அவனிடம் கொடுத்து, “ பிறந்தநாளானாலூம் பரவாயில்ல…நீங்களே கார் ஓட்டிட்டு வாங்க…” என்று கூறி விட்டு அனுவுடன் முன்னால் நடந்தாள்.

வாசு காரை எடுத்துக் கொண்டு வர , வீட்டை பூட்டி கொண்டு வந்தவள் கார் கதவினை திறந்து பின்னிருக்கையில் அனுவுடன் அமர்ந்தாள்.

கண்ணாடியூடே இருவரையும் பார்த்தபடி காரை ஓட்டினான்.

இருவரும் ஏதோ ஆர்வமாக பேசியபடி வந்தார்கள். ஆருத்ரா ஏதோ கையை ஆட்டி ஆட்டி பேச அதனைப் பார்த்து குலுங்கி குலுங்கி சிரித்தாள் அனு.

அதனைப் பார்த்த வாசுவின் முகத்திலும் மெலிதாக புன்னகை அரும்பியது.

முதலில் கோவிலுக்குச் சென்றவர்கள் அதனை தொடர்ந்து கடைக்குச் சென்று அனுவிற்கு சில உடைகளை வாங்கினார்கள். பின்னர் மதிய உணவை முடித்துக் கொண்டு மாலில் சிறிது நேரம் கழித்தனர்.

மாலையில் கடற்கரைக்குச் சென்றார்கள் .

அனுவுடன் ஆருத்ராவும் ஒரு குழந்தை போல மாறி மணலில் வீடு கட்டி மகிழ்ந்தாள். கடல் அலையில் கால்  நனைத்து விளையாடி மகிழ்ந்தாள்.

கையைக் கட்டிக்கொண்டு அவர்களை பார்த்திருந்தான் வாசு.

நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியாக இருந்தாள் ஆருத்ரா. வாசுவின் மனமும் லேசனாது போல இருந்தது. ஓடி  ஆடி இருவரும் களைத்து போயினர்.

இரவு உணவை வெளியே முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பினர். வரும் வழியிலேயே அனு ஆருத்ராவின் மடியிலேயே உறங்கி விட்டாள். அவளது தலை முடியை கோதியவாறு அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.

“ நீங்க காரை பார்க் பண்ணிட்டு வாங்க. அவளை நான் படுக்க வச்சிடுறேன்..” என்றவள் அவனது பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே நுழைந்து அவனறையில் அனுவை சரியாக படுக்க வைத்து போர்த்தி விட்டாள்.

தானும் தனது அறைக்குள் சென்று சுத்தம் செய்து கொண்டு இரவு  உடையணிந்து வெளியே வந்தாள்.

வாசுவும் அப்போது தான் முகத்தை துடைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

“ ரொம்ப தேங்க்ஸ்…அனு இவ்வளவு சந்தோஷமா இருந்து நான் பார்த்ததேயில்ல…உங்களால தான் அவ இன்னைக்கு நாள் முழுவதும் சந்தோஷமா இருந்தா…எனக்கும் சந்தோஷமா இருந்தது…ரொம்பவே என்னை கடன் பட வைக்கிறீங்க..” என்றான்.

“ அதெல்லாம் ஒன்னும் இல்லை…அவ குழந்தை. அவளுக்கு என்ன தேவைங்கறது எனக்குப்‌ புரியுது…ஆனா…எனக்கு என்னைத் தேவைங்கறதை யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க..” என்று கூறிவிட்டு  அவனது முகத்தை பார்த்தாள்.

அவள் கூற வருவது புரிந்தாலும் அதை மேலும் தொடர விரும்பாமல் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.

அவனருகே வந்தவள் அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, “ ஹேப்பி ஃபர்த்டே தேவ்..” என்று கூறி கைக் கொடுத்தாள்.

அவனும் பதிலுக்கு கைக்கொடுத்தான்.

விலக முயன்ற அவனது கரங்களை இறுகப்‌ பற்றிக் கொண்டாள்.

தனது கரத்திலிருந்த சிறிய மோதிரத்தை அவனது விரலில் அணிவித்தாள்.

அவனோ கோபமாக அவளை முறைத்து விட்டு மோதிரத்தை கழற்றி அவளது கையில் திணித்து விட்டு வேகமாக தனதறைக்குள் நுழைந்து கொண்டான்.

ஒரு கணம் அவனது அறையை வெறித்துப் பார்த்து விட்டு தனதறைக்குள் நுழைந்தாள் ஆருத்ரா. நாள் முழுவதும் நிறைந்திருந்த இனிமை தன்னால் கெட்டு விட்டதோ என மறுகினாள்.

அதற்கு நேர்மாறாக இருந்தது வாசுவின் மனம். ஆருத்ராவின் செயல் கோபத்தை வரவழைத்திருந்தாலும் அன்றைய நாளின் இனிமையை அசைப்பேட்டுக் கொண்டே உதட்டில் உறைந்த புன்னகையுடன் உறங்கிப் போனான்.

நாட்கள் அதன் போக்கில் நகர, ஆருத்ராவிடம் நன்றாக ஒட்டிக் கொண்டாள் அனு.

எதையோ எடுத்துக் கொண்டு அனு ஓட அவளை பிடிக்க ஆருத்ரா, அவளை பின் தொடர்ந்து ஓடி வந்தாள்.

அனு வாசுவின் பின்னால் ஒளிந்து கொண்டு  ,” இப்ப பிடிங்க பாப்போம்…ஹா..ஹா..பிடிங்க…பிடிங்க” என்று கூறி சிரிக்க.

“ இதோ பாரு..உன்னை எப்படி பிடிக்குறேன்னு..” என்றவள் அவனை தாண்டி சென்று அனுவை பிடிக்க முயன்றவள் நிலைதடுமாறி அவனுடன் சேர்ந்து  பின்னால் இருந்த சோஃபாவில் விழுந்தாள். வாசு சோஃபாவின் மீது விழுந்திருக்க அவன்  மீது விழுந்திருந்தாள் ஆருத்ரா.

சிறிதும் எதிர்பாராத  அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க ,அவனும் திகைத்தான். அவளை முறைக்கும் முன்பே அனு , “ ஹய்…நானும்…நானும்…” ஒன்று கூறிக்கொண்டே இருவருக்கும் இடையே தொப்பென்று குதித்து அமர்ந்தவள் வாசுவின் கழுத்தை இழுத்துக் கட்டிக் கொண்டாள்.

அவள் இழுத்த வேகத்தில் ஆருத்ராவின் முகத்திற்கு அருகில் இன்னும் நெருங்கியிருந்தது   அவனது முகம்

பல வருடங்களுக்கு பிறகு அவளது நீண்ட விழிகளை மிக அருகில் பார்த்தவனின் மனம் அதில் சிக்கித் தொலைய முனைந்தது.

நா உலர்ந்து தடுமாற்றத்துடன் அவனது தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

உள்ளே மறைந்திருந்த ஞாபகங்கள் எல்லாம் முட்டி மோதிக் கொண்டு வெளிவரத் துடித்தது.. மெல்லிய மயக்கம் இருவருக்கு இடையே திரையிட்டது. பார்வையை விலக்கிக் கொள்ள தோன்றாமல் அனுவை அணைத்துக் கொண்டு அவளை பார்த்தபடியே  சாய்ந்து அமர்ந்திருந்தான்.

“ ஆன்ட்டி…ஆன்ட்டி…” என அனு அவளை உலுக்கிய பின் தான் சுய நினைவிற்கு வந்தாள்.

“என்னடா தங்கம்..?”

“ பெல் அடிக்குது..₹

சுதாரித்துக் கொண்டு கதவைத் திறந்தாள் ஆருத்ரா. வாசுவின் பெயருக்கு பதிவுத் தபால் வந்திருந்தது. அவனது பழைய வீட்டிற்கு சென்று அங்கிருந்து ஆருத்ராவின் வீட்டிற்கு வந்திருந்தது.

யோசனையுடன் வாசுவின் அருகில் வந்தவள்,” உங்களுக்கு தான் ரிஜிஸ்டர் போஸ்ட்..” என நீட்டினாள்.

“எனக்கு யாரு இங்க அனுப்பப் போறது?” என முணுமுணுத்துக் கொண்டே பிரித்துப் பார்த்தான்‌

சந்தியா தான் விவாகரத்து பத்திரம் அனுப்பியிருந்தாள்.

வாசுவை விவாகரத்துக்கு ஏற்பாடு செய்ய சொல்லியிருந்தவள் அவனிடமிருந்து எந்த ஏதிர்வினையும் இல்லாததால் தானே தெரிந்த  வக்கீல்  மூலம்  விவாகரத்து பத்திரத்தை அனுப்பியிருந்தாள்.

முகம் இறுகிப் போய் நின்றிருந்தான்.

இத்தனைக்கும் நடுவில் ஒன்றை மறந்திருந்தானோ அல்லது அவனது மனம் உள்வாங்கிக் கொள்ள மறந்ததோ தெரியவில்லை அவன் இருக்கும் இடம்  எப்படி சந்தியாவிற்குத் தெரியும் என்ற கேள்வி அவனுக்கு எழாமல் போனது. 

ஆனால் அந்த கேள்வி தவறான நேரத்தில் எழுந்து அவனது கோபத்தை அதிகரிக்க காத்திருந்தது. 

அவனது பழைய வீட்டிற்கு சென்ற பதிவுத் தபாலை வாங்கியிருந்தார் சுந்தரி அக்கா.  வாசு ஆருத்ராவின் வீட்டில் இருப்பதால் அவர் ஆருத்ரா வின் வீட்டு முகவரிக்கு  தபாலை அனுப்பி வைத்தார்.

 

“ என்னாச்சு தேவ்..?” என்றபடி அவனருகே வந்து நின்றாள் ஆருத்ரா.

ஒன்றும் பேசாமல் அவளிடம் பத்திரத்தை நீட்டினான்.

ஒரு பெருமூச்சுடன் ,” என்ன முடிவு பண்ணிருக்கீங்க?” என்றாள்..

அவளை ஒரு வெற்றுப் பார்வை பார்த்து விட்டு வெளியே சென்றான். 

அடுத்த சில நாட்களில் அவர்களின் விவாகரத்து வழக்கு ஆரம்பமானது.

நீதிமன்றதிற்கு மாதேஷூடன்  வந்திருந்தாள் சந்தியா. வாசுவின் முகம் அவளைக் கண்டு பாறையென இறுகியிருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top