பிழை-29

 

சந்தியாவின் செயலை எண்ணி மறுகி தான் போனார் சாந்தி. அவள் மீது கண்மூடித்தனமான பாசத்தை வைத்திருந்தவருக்கு மகளது செயல் சொல்லொண்ணா வேதனையை கொடுத்தது. 

சந்தியாவின் விஷயம் அரசல் புரசலாக சொந்த பந்தங்களிடையே பரவ தொடங்கியிருந்தது‌ .

வெளியே தலை காட்ட முடியவில்லை . அத்தனை அவமானமாக இருந்தது சாந்திக்கு.

திவ்யாவிற்கும் சந்தியா மீது அத்தனை கோபம். ‘ எத்தனை கேவலமான பிறவி..’ என மனதிற்குள் கறுவினாள்.

கூடுதலாக வாசுவின் சூழ்நிலை வேறு அவளுக்கு கவலையளித்தது.

வாசுவிடம் “ எங்க வீட்டுல வந்து தங்கிக்கோண்ணா…என்னோட சேவிங்ஸ்ல இருந்து கொஞ்சம் பணம் தர்றேன்.. அதை வச்சி ஏதாவது சமாளிக்க முடியுமான்னு பாரு…” என்றதற்கு , “ பரவாயில்ல திவி…நான் மேனேஜ் பண்ணிக்குறேன்…ஒண்ணும் பிரச்சினை இல்லை. கண்டிப்பா வீட்டுக்கான பணத்தை அவங்க கிட்ட செட்டில் பண்ணிட்டு வீட்டை விட்டு வெளியே   வந்துடுவேன்…நீ என்னை நினைச்சு கவலைப்படாதே… டா..! உன் குடும்பத்தை பாரு முதல்ல..” என அவளது உதவியை மறுத்துவிட்டான்.

அவனை மேலும் சங்கடப்படுத்த விரும்பாதவள்  அவ்வப்போது வாசுவோடும் அனுவோடும் அலைப்பேசியில் பேசுவாள்.. 

அவனும் ஓரிரு வார்த்தைகள் சாதாரணமாக பேசி வைத்து விடுவான். 

சந்தியாவின் துரோகத்தை மன்னிக்க அங்கு யாரும் தயாராக இல்லை. ப்ரகாஷிற்கு அவளை நேரில் கண்டால் கொன்று விடும் ஆத்திரம் கழுத்து வரை இருந்தது. 

குருவிக்கூட்டைப் போன்ற அழகான சிறிய குடும்பத்தின் மகிழ்ச்சியை சிதைத்து விட்டு போனவளின்‌ மீது கொலை வெறியில் இருந்தான் அவன்.

மாதங்கள் கடந்தன…

சந்தியாவின் துரோகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அனைவரும் வெளி வந்து கொண்டிருந்தனர்.

ஆரோனை பள்ளிக்கு அனுப்பி விட்டு , வீட்டு வேலைகளை மளமளவென்று செய்து கொண்டே சாந்திக்கும் ப்ரகாஷிற்கும் காலை உணவிற்காக தட்டை எடுத்து வைத்தாள் திவ்யா.

ப்ரகாஷ் உணவு மேசையில் வந்து அமர்ந்தான். 

அவனுக்கு தட்டை எடுத்து வைத்து விட்டு, “ அத்தை சாப்பிட வர்றீங்களா..” என்று கூறியபடி முகத்தில் படர்ந்திருந்த வியர்வை துளிகளை துடைத்துக் கொண்டாள் திவ்யா.

மேசையில் அமர்ந்தவர் திவ்யாவை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தார்.

காலை ஐந்து மணிக்கு எழுந்திருப்பவளுக்கு இரவு பதினோரு மணி வரை ஏதாவது வேலை இருந்து கொண்டேயிருக்கும். காலை உணவு உண்பதற்கே பத்து மணிக்கு மேல் ஆகிவிடும்..

மதிய உணவு மூன்று‌ மணிக்கு .அதன் பிறகு ஒருமணி நேரம் தான் ஓய்வு நான்கு மணிக்கு ஆரோனை பள்ளியிலிருந்து அழைத்து வந்து  பலகாரம் ஏதேனும் செய்து கொடுத்து விட்டு  அவனுடன் வீட்டுப் பாடம் செய்வதற்கு அமர்ந்து விடுவாள். மீண்டும் ஏழு மணிக்கு இரவு உணவை தயார் செய்ய ஆரம்பித்து அனைவரும் உண்டு முடித்த பிறகு சமயலைறயை சுத்தம் செய்து விட்டு உறங்கச் செல்வதற்கு மணி பத்தரை ஆகிவிடும்.

தினசரி ஓய்வின்றி உழைக்கும் திவ்யாவை பார்க்கும் போது ப்ரகாஷிற்கு பாவமாக தான் இருக்கும். ஆனால் சாந்தியிடம் எதிர்த்து பேச தைரியம் இல்லாததால் அமைதியாக சென்று விடுவான்.

வழக்கம் போல இருவருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தாள்

 அருகிலிருந்த மற்றொரு தட்டை எடுத்து வைத்த சாந்தி,” திவ்யா நீயும் முதல்ல உக்காந்து சாப்பிடு…அப்பறம் மெதுவா வேலை செஞ்சி முடிச்சிக்கலாம்.” என்றார்.

அவளோ திகைப்புடன் ப்ரகாஷைப் பார்க்க அவனும் வாயில் வைத்திருந்த பணியாரத்துடன் மனைவியை பார்த்து திகைத்தான்.

“ என்னடா அங்க பார்வை? வாய்ல வச்சிருக்குறதை முதல்ல முழுங்கு டா..” என சாந்தி அதட்ட வேகமாக உணவை முழுங்கினான்.

தன் காதில் தான் ஏதோ தவறாக கேட்டிருக்க வேண்டும் என நினைத்த திவ்யா‌ நாற்காலியில் அமராமல் நின்று கொண்டேயிருக்க, “ உன் கிட்ட தான் சொன்னேன். சாப்ட்டுட்டு வேலையைப் பாருன்னு… காது கேக்கலையா..?” என்றார் சற்று அழுத்தமாக.

“ இல்ல பரவாயில்ல அத்த…இருக்கட்டும்…நீங்க சாப்பிட்டு முடிச்சதுக்கப்பறம் நான் சாப்டுக்கிறேன்…”

“ஏன் திடீர்னு யாராவது வீட்டுக்கு வந்து பாத்துட்டு நான் உன்னை கொடுமைப்படுத்துறேன்னு சொல்றதுக்கா…அதெல்லாம் வேண்டாம் ஒழுங்கா உக்காந்து சாப்டுட்டு அப்பறமா வேலையை பாரு…” என அதட்டி உக்கார வைத்தார் திவ்யாவை…

திவ்யாவிற்கும்‌ ப்ரகாஷிற்கும் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. ஒரு நாள் கூட திவ்யா சாப்பிட்டாளா இல்லயா? என்று கவலைப்படாதவர் இன்று தானே முன் வந்து அவளை அதட்டி அமர வைத்து உண்ணச் சொன்னது வியப்பை தந்தது.

அதே போல் இரவு உணவை தயார் செய்ய அவளுக்கு உதவி செய்தார்.

திவ்யா வேண்டாம் என்று மறுத்த போதும் , ‘ ஏன் செஞ்சு குடுத்தா சாப்பிட மாட்டீங்களோ…’ என கடிந்து கொண்டார்.

காலையில் இருந்து சாந்தி திவ்யாவை ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருந்தார்.

இரவு கதவை தாழ் போட்டுவிட்டு அறைக்குள் வந்தாள் திவ்யா.

“ஆரோன் அதுக்குள்ள தூங்கிட்டானா..?” என்ற படி ப்ரகாஷின் அருகில் வந்தமர்ந்தாள்.

அவளை இழுத்து தன் மார்பில் சாய்த்துக் கொண்டவன் , “ ஆமா…நமக்கு ப்ரைவசி கொடுக்குறதுக்காக தான் அவன் சீக்கிரம் தூங்கிட்டான். குட் பாய்..” என்றவன் அவளை தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான்.

“ உங்கம்மா என்ன திடீர்னு இப்படி எனக்கு ஷாக்கா தர்றாங்க” என்றாள் அவனது மார்பில் தலை பதித்தபடியே.

அவளது தலையை வருடியபடியே, “ஆமா திவ்யா…நானும் கவனிச்சேன்.‌‌..அவங்க சந்தியாவோட விஷயத்துல ரொம்பவே நொந்து போயிருக்காங்க. சொந்த பந்தமெல்லாம் ரொம்ப கேவலமா பேச ஆரம்பிச்சிட்டாங்க. அம்மா வெளியே போறதையும் ரொம்பவே குறைச்சிக்கிட்டாங்க…மே பீ அவங்களுக்கு இன்செக்யூரிட்டி வந்துருக்கலாம்…எதுவா இருந்தாலும் மாற்றம் நல்லது தானே…” என அவளது நெற்றியில் முட்டினான்‌

“ஏன் நான் அவங்களை கவனிச்சு மாட்டேனா..”

“ ம்ம்ச்…திவி…அது‌ உனக்கும் எனக்கும் புரியுது…ஆனா அவங்க மனசுல என்ன நினைக்குறாங்கன்னு தெரியலையே…சரி விடு..இது நமக்கான நேரம்..டைம் வேஸ்ட் பண்ணாம நம்ம வேலையை ஆரம்பிக்கலாம் …” என்றவன் விளக்கை அணைத்து விட்டு அவளோடு மஞ்சத்தில் சரிந்தான்.

அனு மெல்ல மெல்ல ஆருத்ராவிடம் நெருங்கியிருந்தாள்.

அலுவலக விஷயமாக நான்கு நாட்களுக்கு வாசு மும்பைக்குச் செல்ல நேர்ந்தது.

“ நான் அனுவை ரெடி பண்ணி ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டுடுறேன்…நீங்க வேலையை முடிச்சிட்டு வாங்க. இந்த புது அக்ரிமெண்ட்டையும் கொட்டேஷனையும்  ஆர். எஸ் கார்மெண்ட்ஸோட டைரக்டர் கிட்ட டிஸ்கஸ் பண்ணி ஓகே பண்ணிட்டு வந்துடுங்க. எனக்கு இங்க நிறைய வேலை இருக்கு..”

“ ஆனா..இது நீங்க செய்யற வேலை மேடம். ஆஃப்ட்ரால் சாதாரண எம்ப்ளாயி என் கூட டைரக்டர் ஜெனரல் எப்படி பேசுவாரு…?”

“ அது தான் உங்க சாமர்த்தியம். நான் ஆல்ரெடி அவங்களுக்கு மெயில் பண்ணிருககேன். நீங்க ஆர்டரை ஓகே பண்ணிட்டு வந்துடுங்க. வேலை முடிஞ்சிடுச்சின்னா சீக்கிரமே கூட நீங்க வந்துடலாம்..” என்றாள்.

அவனோ யோசனையுடன் அனுவைப் பார்க்க, “கவலைப்படாதீங்க…அனு என் பொறுப்பு..அவளை கரெக்டா ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டுட்டு கூட்டிட்டு வந்துடுவேன்…நீங்க கிளம்புங்க..” என கறாராக கூறி விட்டாள்.

வேறு வழியின்றி மும்பைக்கு கிளம்பினான் வாசு

முதல் நாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்த அனு அடுத்த நாள் சரியாகி விட்டாள்..

இருப்பினும் தந்தை இல்லாத ஏக்கம் அவளது முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.

அன்று சனிக்கிழமை. அரைநாள் தான் அனுவிற்கு பள்ளி.

மதியம் அழைத்துக் கொண்டு வந்த ஆருத்ரா அவளுக்கு மதிய உணவை கொடுத்து விட்டு சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருந்தாள்

“ அனு பேபி…நாம் ஸ்விம் பண்ணலாமா?”

“ நிஜமாவே வா…”என விழி விரிய கேட்டாள்.

“ எஸ்…நிஜம்மாவே..தான்..வா…வா..நாம பூல்க்கு போகலாம்…” என்றவள் அவளுக்கு நீச்சலுடை ஒன்றை அணிவித்து விட்டு தானும் நீச்சலுடை அணிந்து கொண்டு தண்ணீரில் இறங்கினாள்.

காற்றடைத்த வட்ட பலூனை அவளுக்கு ஒன்றை கொடுத்து தானும் ஒன்றை வைத்துக் கொண்டு நீச்சல் குளத்தில் விளையாடினாள்.

அவளை தன் கையில் வைத்துக் கொண்டு நீச்சல் பழகிக் கொடுத்தாள்.

“ ஐ..ஜாலி….ஜாலி…ஜாலியா இருக்கு ஆன்ட்டி…எங்க மம்மி கூட என் கூட இப்படி விளையாட மாட்டாங்க. நீங்க சோ க்யூட் ஆன்ட்டி..” என்றவள் ஆருத்ரா வின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டாள்.

குழந்தையின் பேச்சில் முகம் சுணங்கியவள் அவளது திடீர் முத்தத்தில் திணறி போனாள்‌.

பதிலுக்கு அனுவின் கன்னத்தில் முத்தமிட்டு திரும்பியவள் வாசுவைப் பார்த்து திகைத்தாள்.

ஏனெனில் ஞாயிறன்று காலை தான் வருவான் என்று கூறியிருந்தான். ஆனால்   சனிக்கிழமை மதியமே அவன் வந்ததை அவள் எதிர்பார்க்கவில்லை.

அனுவின் பேச்சை வாசுவும் கேட்டு விட்டான்.

வாசுவை பார்த்து விட்ட அனு, “ அய்…அப்பா இங்க வாங்க நீங்களும் ஸ்விம் பண்ணுங்க …ஜாலியா இருக்கு…ஹா..ஹா..அய்..ஜாலி ஜாலி…” என நீரில் நின்று ஆர்ப்பரித்தாள் அனு.

ஆருத்ரா சங்கடத்துடன் நீரில் நின்றிருந்தாள்.

“ மெல்ல மேல ஏறி அப்பா  கிட்ட போ..அனு…ஆன்ட்டி ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வர்றேன்…”

“ நீங்களும் மேல வாங்க…நான் விழுந்திடுவேன்…கையை பிடிச்சிட்டு வாங்க வாங்க..” என அவளது கைப்பிடித்து நீச்சல் குளத்தில் இருந்து மேலே வந்தாள்.

கையில்லாத தொடைவரை மட்டுமே இருந்த நீச்சலுடை அவளது அழகினை வரிவடிவமாக எடுத்துக்காட்டியது. உடலில் ஒட்டியிருந்த நீர்த்துளிகள் வைரமாக மின்னயது.. 

அவளுக்கு வாசுவின் முன்பு அப்படி நிற்க சங்கோஜமாகிப் போனது.

வாசுவோ பார்வை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.

அவன் முன்னே வந்து நின்ற அனு, “அப்பா…டெய்லி நான் ஸ்விம் பண்ணலமா?”என்றாள் .

“ இல்லடா தங்கம்…டெய்லி ஸ்விம் பண்ணுனா பீவர் வந்துடும் டா…செல்லம். நீ கொஞ்சம் பிக் கேர்ள் ஆனதுக்கு அப்பறம் ஸ்விம்மிங் க்ளாஸ்ல அப்பா உன்னை சேர்த்துவிடுறேன்…ஓகே வா..” என்றபடி பூந்துவாலையை எடுத்து துடைத்து விட்டு அவளைத் தூக்கிக் கொண்டான்.

“ ஆன்ட்டி நல்லா ஸ்விம்மிங் சொல்லித் தர்றாங்க…நானும் ஆன்ட்டியும் ரொம்ப நேரம் ஜாலியா விளையாடினோம். குட் ஆன்ட்டி ப்பா…ஐ லவ் ஆருத்ரா ஆன்ட்டி* என இருகைகளையும் விரித்து அவளைப் பற்றி சிலாகித்து கூறினாள்.

மகளது கடைசி வாக்கியத்தில் அவனது நடை சட்டென்று நின்றது.

பின்னால் திரும்பி ஆருத்ராவை பார்த்தான். அவளும் அவர்களை தான் ‌பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அனு குட்டி ஒரு நிமிஷம் இருங்க…” என்றவன் மகளை கீழே இறக்கி விட்டு அவளருகே வந்தான்.

“ நாங்க இங்க இருக்கப்‌ போறது கொஞ்ச நாள். இந்த மாதிரி விஷயத்துல அவளுக்கு ஆசை காட்டாதீங்க. எல்லா நேரமும் எல்லா விஷயங்களையும் அவளுக்கு நான் செஞ்சி கொடுக்க முடியாது..”என்று கூறியவன் கையில் வைத்திருந்த பூந்துவாலையை அவள் மீது போட்டுவிட்டு சென்றான்.

பூந்துவாலையை தோளோடு சேர்த்து நன்கு போர்த்திக் கொண்டு தனதறைக்குள் நுழைந்தாள்.

அன்று ஞாயற்றுக்கிழமை .. 

காலையிலேயே வாசுவின் அலைப்பேசிக்கு அழைப்பு வர ஸ்பீக்கரில் போட்டுக் கொண்டே பேசி னான்.

எதிர் முனையில் இருந்தவர் வாசுவிற்கு பிறந்தநாள் வாழ்த்தைக் கூற புன்னகையுடன் நன்றி தெரிவித்து விட்டு, அனுவின் சீருடையை அயர்ன் செய்து கொண்டிருந்தான்.

அலைப்பேசி உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த அனு வாசுவின் முன்பு வந்து “ அப்பா இன்னைக்கு உங்க ஃபர்த்டே வா?” என்றாள் .

“ ஆமாம் டா தங்கம்..” என்று கூறி விட்டு சீருடையை தனியாக எடுத்து வைத்தான்.

கன்னத்தில் ஒரு விரல் வைத்து எதையோ யோசித்தவள் குடுகுடுவென அறைக்குள் சென்று வெள்ளத் தாள் மற்றும் சில பொருட்களையும் எடுத்து வந்தாள்.

சோஃபாவில் அமர்ந்துகொண்டு  எதையோ வெள்ளத் தாளில் எழுத ஆரம்பித்தாள்.

“ என்ன குட்டிம்மா எழுதுறீங்க?”

“ம்ம்ச்..டோண்ட் சீ அப்பா..” என்று கூறி தாளை தன் பின்னால் ஒளிந்து வைத்துக் கொண்டாள்.

“ சரி..சரி…அப்பா..பாக்கல…நீ எழுது…” என திரும்பி அமர்ந்து கொண்டான்.

சிறிது நேரத்தில் அவனது தோளைத் தட்டி,“ ஹேப்பி ஃபர்த்டே அப்பா…” என்று கூறி தந்தையை இறுகக் கட்டிக் கொண்டாள் அனு.

“ தேங்க் யூ அனு குட்டி…” என்றவன் அவளது பட்டுக்கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

“ அப்பா உங்களுக்கு ஒரு கிப்ட்..” என்றவள் தன் பிஞ்சு கைகளுக்கு பின்னால் மறைத்து வைத்திருந்த வரைபடத்தை அவனிடம் நீட்டினாள்.

அதில் தனக்குத் தெரிந்த அளவில் தந்தையின் கிறுக்கலான உருவத்தையம் அதற்கு பக்கத்தில் சிறிய உருவத்தையும் குச்சி குச்சியாக வரைந்து அதற்கு வண்ணம் தீட்டியிருந்தாள்..

இருவரையும் சுற்றி வண்ணப் பூக்கள் சிதறுவது போல வரைந்திருந்தாள்.

“ ரொம்ப அழகா இருக்கு தங்கம்…வாங்க கோவிலுக்கு போயிட்டு அப்படியே ஜாலி பைக் ரைட் போயிட்டு ஹோட்டல்ல சாப்டு வரலாம்…” என்றான்.

“ ஓகே அப்பா…” என்று கூறியவள் தான் வரைந்த தாளை அப்படியே பறக்கவிட்டு விட்டு உடை மாற்றச் சென்றாள்.

இவையனைத்தையும் சுவற்றில் சாய்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஆருத்ராவின் காலருகே வந்து விழுந்தது அனு வரைந்திருந்த ஓவியம்.

அதில் ஒரு பெரிய உருவம் மற்றும் சிறிய உருவம் வரையப்பட்டிருந்தது. சற்று உற்றுப் பார்த்ததில்…சிறிய உருவத்திற்கு வலப்புறமாக ஏதோ  ஒன்றை கிறுக்கி பின் அழித்திருந்தாள்.

கசப்பான புன்னகை தோன்றியது ஆருத்ராவின் முகத்தில்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

     ‌

 

 

 

 

 

 

 

 ‌

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top