வாசுவின் இரு சக்கர வாகனம் மற்றும் மேலும் சில முக்கிய பொருட்களும் ஆருத்ராவின் கெஸ்ட் ஹவுஸிற்கு வந்து சேர்ந்தது.
மூவருக்கும் உணவை தயார் செய்து வைத்தவள், அனுவை குளிக்க வைத்து, தலைப்பின்னி விட்டு அவளை சரியான நேரத்திற்கு பள்ளிக்குத் தயார் செய்து வைத்தாள்.
அனுவிற்கு முதலில் ஒரு மாதிரியாக இருந்தாலும் ஆருத்ரா வின் கலகலப்பான பேச்சு அனுவின் தயக்கத்தை மெல்ல மெல்ல களைந்து இயல்பாக ஒன்ற வைத்து கொண்டிருந்தது.
அனுவிடம் பேச்சுக் கொடுத்து கொண்டே அவளை பள்ளிக்கு அனுப்ப வாசல் வரை வந்து நின்றாள் ஆருத்ரா.
மறுப்பேதும் கூறாமல் அவளது சேவைகளை ஏற்றுக் கொண்ட வாசுவை பார்த்தாள்.
அவனது முகம் இறுகியிருந்தாலும் அதில் ஏதோ யோசனைகள் ஓடிக்கொண்டே இருந்ததை உணர முடிந்தது அவளால்.
அனுவிற்கு பள்ளியில் எட்டு மணிக்கு இருக்க வேண்டும் என்பதினால் அவளுன் சேர்ந்து வாசுவும் தயராகி விட்டான்
அனுவின் உணவு பையையும் தனக்காக ஆருத்ரா தயார் செய்து வைத்திருந்த உணவு பையையும் எடுத்துக் கொண்டவன், அவளை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு வெளியேறினாள்.
வீட்டு வெளிப்புற கதவில் சாய்ந்து கொண்டு, “ஹலோ…! மிஸ்டர் வாசுதேவன்…ஆஃபிஸ் டைம் பத்து மணி தானே…! அனுவை விட்டுட்டு வீட்டுக்கு வந்துட்டு போகலாமே…!” என்றாள்.
அனுவை பைக்கில் உட்கார வைத்து விட்டு ஆருத்ராவிடம் வந்தவன், “ உனக்கு என்ன வேணும்? இப்படியெல்லாம் பண்ணி திரும்பவும் எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வரணும் ட்ரை பண்ணாத…அவளுக்கு அம்மா தான் இல்லை…அப்பா நான் இருக்கேன். இனியும் அப்பா மட்டுந்தான் அவளுக்கு. பொண்டாட்டி மாதிரி உரிமை கொண்டாடிட்டு வராத…அது தான் உனக்கு நல்லது…” என அழுத்தமாக கூறியவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் விடுவிடுவென சென்று இருசக்கர வாகனத்தை எடுத்தான்.
அனுவைத் தூக்கி முன்பக்கமாக அமர வைத்து விட்டு பைகளை ஒன்றன்பின் ஒன்றாக தொங்க விட்டு ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான்.
கதவருகே நின்றிருந்தவளின் விழிகள் ரசனையோடு இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தது.
இரும்பு கேட்டை தாண்டும் போது வாசுவின் கைப்புறத்திலிருந்து மெல்ல எட்டிப் பார்த்த அனு ஆருத்ராவை பார்த்து கையசைத்தாள்.
வாசலையே பார்த்துக் கொண்டிருந்தவள் அனுவின் செய்கையால் முதலில் திடுக்கிட்டவள் பின்னர் சின்னச் சிரிப்புடன் கையசைததாள்.
இத்தனை நாட்களாக வாசுவின் அருகாமை வேண்டும். அவனது அன்பு மீண்டும் வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்தவளுக்கு வாசுவிற்கும் அனுவிற்கும் செய்வதற்கு எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை.
இயல்பாகவே தோன்றிய தாய்மையுணர்வில் செய்தாள். ஆனால் வாசுவோ அதையும் தவறாகவே நினைத்தான்.
யோசனையுடன் கதவில் சாய்ந்து நின்றிருந்தவளின் கவனத்தை ராகவனது குரல் கலைத்தது.
“ ஆருத்ரா என்ன பண்ணிட்டு இருக்க? நீ பண்றது சரியில்லை…அவனுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்குது. அவனை ஏன் இங்க கூட்டிட்டு வந்து வச்சிருக்க? உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சிக்காம இப்படி பண்ணிட்டு இருக்க. நாங்க சொல்றதை எதையும் கேக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா? “ என படபடத்தார்
வீட்டின் வாசலில் நின்றிருந்த தந்தையை உள்ளே அழைக்கக் கூட தோன்றாமல் அழுத்தமாக அவரைப் பார்த்தவள்,” நான் அவரை ஒண்ணும் உங்க வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்து வைக்கலையே? இங்க கெஸ்ட் ஹவுஸ்ல தான் தங்க வச்சிருக்கேன். அதுல உங்களுக்கு என்ன ப்ரச்சனை?எனக்கு இனி வாழ்க்கைன்னு எதுவும் இல்லை. நான் எதுக்கு அவரை கூட்டிட்டு வந்து இங்க தங்க வச்சிருக்கேன்னு உங்க கிட்ட சொல்ல அவசியம் இல்லை….அவரை நீங்க வீட்டுக்குள்ள கூட கூப்பிட்டு உக்கார வைக்காம அவமானப்படுத்தி அனுப்பினதுக்கு தான் இவ்ளவு நாளா நான் வீட்டுக்குள்ள வராம இங்க தங்கியிருக்கேன். இந்த விஷயத்தில நீங்க தலையிடாம இருக்கறதே நல்லது. எனக்கு எது பண்ணனும் எதைப் பண்ணக்கூடாதுங்கறது நல்லாவேத் தெரியும். ப்ளீஸ்…நீங்க உங்க பங்களாவுக்கு கிளம்புங்க…நான் ஆஃபிஸ்க்கு கிளம்பணும் நேரமாச்சு.” என்றாள்.
மகளிடம் மேலும் வாதிட விரும்பாத ராகவன் அவளை முறைத்துவிட்டு வெளியேறினார்.
ஒரு பெருமூச்சுடன் கதவை அடைத்தவள் , குளித்து தயாராகி வந்தாள்.
காலை உணவு எடுத்துக் கொள்ளாமலேயே வாசு கிளம்பியது நினைவிற்கு வந்தது. மேலும் அவனை தொந்தரவு செய்ய விரும்பாதவள் தான் மட்டும் காலை உணவை முடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பி விட்டாள்.
அலுவலகத்திற்கு முன்னமே வந்து விட்ட வாசுவிற்கு சந்தியா எடுத்த தனிநபர் கடனிற்கான வட்டிப்பணத்துடன் கூடிய அசலை எவ்வாறு கட்டுவது என்று குழப்பமாக இருந்தது.
பதினைந்து லட்சம் என்பது சிறிய தொகை அல்லவே…!
நாட்கள் நகரந்தது.
இரண்டு நாட்களாக அசலுடன் கடனை செலுத்துமாறு அந்த வங்கியிலிருந்து அழுத்தம் வந்து கொண்டிருந்தது.
அவன் வங்கி மேலாளரிடம் பேசியதை ஆருத்ரா கேட்டு விட்டாள்.
வேறு வழியின்றி தாயின் இரட்டை வட சங்கிலியை விற்றுவிட்டு வீட்டுத் தவணையில் பாதி பணத்தையாவது கட்டி விடலாம் என எண்ணியவன் அதை எடுத்து தன் பையினுள் வைத்துக் கொண்டான். அதை விற்றாலுமே போதிய அளவு பணம் கிடைக்குமா என்பது சந்தேகமே…! எனவே யோசனையுடன் மீண்டும் சங்கிலியை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தவனருகே வந்து நின்றாள் ஆருத்ரா
“ என்ன உங்கம்மாவோட சங்கிலியை விக்கப் போறீங்களா?”
அவனிடம் பதிலில்லை.
“ பேச மாட்டீங்களா? சரி நான் ஒரு யோசனை சொல்லவா… வீட்டுத்தவணை பணத்தையும் அப்பறம் உங்க வொய்ஃப் வாங்கின கடனையும் அசலோட வட்டியை நானே கட்டிடுறேன்…அதுக்காக தொகையை உங்க சம்பளத்துல இருந்து நான் கழிச்சிக்குறேன்…உங்கள் அம்மா நியாபகமா இருக்கறது அது ஒண்ணு தான். அது இருந்துட்டு போகட்டும். நாளைக்கு அனுவுக்கு உதவும். இதை நான் சுயநலத்துக்காக சொல்ல…இவ்வளவு பெரிய தொகையை வெளியே எங்கேயும் கடன் வாங்க முடியாது…அதனால வட்டியில்லாத கடனா வாங்கிக்கோங்க…அசலுக்கான தொகையை மட்டும் உங்க சம்பளத்துல இருந்து பிடிச்சுக்குறேன்…ஆனா எனக்கு ஒரே ஒரு கண்டிஷன் தான். இந்த கடன் மொத்தமும் கழிஞ்சதுக்கு அப்பறமா நீங்க இங்க இருந்து தாராளமா கிளம்பிடலாம் . எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. இதுக்கும் ஏதாவது ஹார்ஷா பேசி கஷ்டப்படுத்திடாதீங்க…” என்றாள் முன்கூட்டியே.
விரக்தியாக சிரித்தவன், “எவ்வளவோ கஷ்டத்தை பாத்துட்டேன் மேடம். இது மட்டும் என்ன எனக்கு புதுசா…உங்க ஆஃபரை ஏத்துக்குறேன் மேடம். எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கறப்ப நீங்க தான் எனக்கும் என்னோட குழந்தைக்கும் தங்குறதுக்கு இடமும் குடுத்து, வேளை வேளைக்கு சாப்பாடும் கொடுத்து நல்லா பாத்துக்கிறீங்க. உங்க உதவிக்கு நான் ரொம்பவே நன்றிக்கடன் பட்டுருக்கேன். ஆனா ஒரு விஷயம்…இந்த நாலு வருஷத்துல என்னோட உழைப்புக்குண்டான முன்னேற்றத்தை நீங்க தேக்கி வைக்காம இருந்திருந்தாலே…என்னோட பணத்தேவை கொஞ்சமாவது குறைஞ்சிருக்கும். முடிஞ்சதை பத்தி பேசி பிரயோஜனம் இல்லை…மாசா மாசம் என்னோட சம்பளத்துல இருந்து கடனுக்கான தொகையை கழிச்சிட்டு மீதி சம்பளத்தை கொடுங்க…என்னோட கடனை அடைச்சிட்டு நான் இங்கயிருந்து கிளம்புறேன்”என்று கூறிவிட்டு தனதறைக்குள் சென்று முடங்கினான்.
அவனது ஒவ்வொரு வார்த்தைகளிலும் அத்தனை வலி தெரிந்தது. கலங்கத் தொடங்கிய கண்களை துடைத்துக் கொண்டு தனதறைக்குள் நுழைந்தாள்.
அவனை தன்னுடனே தங்க வைப்பதற்கான காரணத்தை அவள் மட்டுமே அறிவாள்.
சொன்னது போலவே நான்கு மாத வீட்டுத்தவணைக்கான பணத்தையும் , சந்தியா பெற்றிருந்த கடனிற்கான அசல் மற்றும் வட்டித் தொகை பதினைந்து லட்சத்தையும் ஆருத்ரா கட்டியிருந்தாள்.
வாசுவின் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்துக் கொண்டு மீதியை அவனது வங்கிக் கணக்கில் வரவு வைத்தாள்.
தினமும் இரவு அனுவிடம் பேசிக்கொண்டே அவளது வீட்டுப் பாடங்களை முடிப்பதற்கு ஆருத்ரா உதவினாள்.
அன்று இரவு உணவை முடித்துக் கொண்டு அனுவும் ஆருத்ராவும் பேசிக் கொண்டு இருந்தனர்
அவளுக்கு புதுப்புது கதைகளை கூறி சிரிக்க வைத்துக் கொண்டு இருந்தாள்.
“ அந்த சிங்கம் தொபுகடீர்னு தண்ணில விழுந்தவுடனே…எல்லா அனிமல்ஸூம் முயலை தூக்கி வைச்சு டான்ஸ் பண்ணினாங்க…”
“ ஹே…சூப்பர்…சூப்பர்…ஆன்ட்டி…” என்று கூறி கைத்தட்டி சிரித்தாள் அனு.
மகளது கள்ளங்கபடமில்லாத சிரிப்பு வாசுவின் மனதிற்கு இதமாக இருந்தது.
“அனு குட்டி டைம் ஆச்சு…ரூமுக்கு போங்க…அப்பா இப்ப வந்துடுறேன். அப்பறம் காலையில எழுந்துக்க மாட்டீங்க…போங்க…போங்க…” என்றான்.
“ அப்பா…இன்னொரு கதை ..”
“ வாங்க தங்கம் அப்பறமா கேட்டுக்கலாம்… போய் தூங்குங்க” என்றவுடன் ,” சரி அப்பா…” என்றவள் ஆருத்ராவின் புறம் திரும்பி,” குட் நைட் ஆன்ட்டி…” என்று கூறி விட்டு அறைக்குள் ஓடி விட்டாள்.
சிரித்தபடி அனுவை பார்த்துக் கொண்டிருந்தவள் முன்பு சில ரூபாய் நோட்டுகளை வைத்தான் வாசு.
என்னவென்பது போல ஆருத்ரா நிமிர்ந்து பார்த்தாள்.
“ இந்த வீட்டுல தங்கறதுக்கு, எனக்கும் அனுவுக்கும் சமைக்கறதுக்கும் தான் இந்த பணம். இலவசமா ஒரு இடத்துல தங்க அளவுக்கு நான் கீழறங்கிப் போகலை…இவ்வளவு பெரிய வீட்டுக்கும் நேரா நேரத்துக்கு வகையான சமையலுக்கும் இது பத்தாதுன்னு தெரியும். ஆனா என்னால இப்போதைக்கு இவ்வளவு தான் மேடம் கொடுக்க முடியும்…ப்ளீஸ…வாங்கிக்கோங்க…” என்றான் அமைதியான முகத்துடன்.
இதயத்தில் சுரீரென்று வலி தோன்ற அவனை நிமிர்ந்து பார்த்தவள்,” உங்களுக்கும் குழந்தைக்கும் செய்யறதுக்கு பணம் கொடுத்து என்னை கொச்சைப்படுத்துறீங்களே…தேவ்..இது நல்லா இல்ல…ப்ளீஸ் இந்த விஷயத்துக்கு பணம் கொடுக்காதீங்க.நான் மனசார செய்யற விஷயம் தாங்க…” என்றவளை இடை மறித்து , “நீங்க மனசார செய்யுற அளவுக்கு உங்களுக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தம் இல்லை . நீங்க என்னோட மேனேஜர் நான் உங்களுக்கு கீழே வேலை செய்யுற எம்ப்ளாயி…. அவ்வளவு தான்…ப்ளீஸ் வாங்கிக்கோங்க…” என்றவன் அவளது கையைப் பிடித்து அதில் வைத்து விட்டு அறைக்குள் சென்றான்.
‘ சிறிது கூட நெருங்க முயற்சிக்காதே…!’ என்பது போல இருந்தது அவனது பேச்சும் நடவடிக்கையும்.
தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள் ஆருத்ரா.