பிழை -24

அலுவலகத்திற்கு வந்தவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை ‌‌. 

இதுவரை எவரிடமும் கடன் என்று போய் நின்றதில்லை. முயன்ற வரை கடனில்லாமல் வாழ வேண்டும் என்று குறிக்கோளை உடையவன். எனவே யாரிடம் சென்று கேட்பது? எவ்வாறு கேட்பது? என மிகுந்த தடுமாற்றம் அவனுள்.

ப்ரகாஷிடம் எதற்கும் கேட்டுப் பார்க்கலாம் என நினைத்தவன் அவனுக்கு அழைப்பு விடுத்தான்.

அவனது அழைப்பை ஏற்ற ப்ரகாஷ், “ சொல்லுங்க வாசு…எப்படியிருக்கீங்க?அனு எப்படி இருக்கா?” என்றான்.

“ ம்ம் நல்லா இருக்காங்க ப்ரகாஷ்…ஒரு சின்ன ஹெல்ப் தேவைப்படுது…”

“சொல்லுங்க வாசு…என்ன பண்ணனும்?”

“எனக்கு…எனக்கு‌ கடனா அவசரமா ‌ஒரு ஒன்றரை லட்சம் பணம் தேவைப்படுது…யாருக்கிட்டயாவது ஏற்பாடு‌ செய்ய முடியுமா?” என்றான் தயங்கியபடி.

அவனுக்கோ அதிர்ச்சியாக இருந்தது. 

வாசு அவ்வளவு இலகுவில் கடன் கேட்பவன் அல்ல என நன்கு தெரியும். 

அப்படியிருப்பவன் திடீரென ஒன்றரை லட்ச ரூபாய்க்கான தேவை என்ன என்பது அவனது தலையை குடைந்தது.

“வட்டிக்கு தான் கேட்கணும் வாசு…ஆனா அசலுக்கான வட்ியே அதிகமாகுமே… உங்களுக்கு அது சரி வருமா?”

“இல்ல…இல்ல…அதெல்லாம் வேணாம்..வேற‌ ஏதாவது யார் மூலமாவது…எப்படியாவது ஏற்பாடு செய்ய முடியுமா?” என்றான்.

“ கேட்டுப் பாக்குறேன்…குறைஞ்ச‌ வட்டிக்கு தான் குடுப்பாங்க…நான் பேசிட்டு உங்களுக்கு சொல்றேன்…” என்றான்.

“ சரி ப்ரகாஷ்‌.. ரொம்பவே தேங்க்ஸ்..”

“ வாசு.. நாளை கழிச்சு அம்மாவோட அறுபதாவது பிறந்தநாள்.கண்டிப்பா சந்தியாவையும் அனுவையும் அழைச்சிட்டு வந்துடுங்க…” என்றான்.

“ ம்ம்..சரி.. ப்ரகாஷ்…வச்சிடுறேன்…” என்று ‌அலைப்பேசியை வைத்துவிட்டான்.

நட்சத்திர விடுதியில் நடந்த கேளிக்கை விருந்திற்கு பிறகு ஆருத்ரா வாசுவை அதிகம் தொந்திரவு செய்யவில்லை. 

அவள் வழக்கம் போல தனது வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

வாசு அவளது உடல்நலம் பற்றிக் கேட்டுக்கொள்ள நினைத்தான். 

ஆயினும் அது தேவையில்லாத உரையாடலுக்கோ வாக்குவாதத்திற்கோ வழி வகுக்கும் என்று அமைதியாக இருந்து விட்டான்.

சாந்தியின்‌ அறுபதாவது பிறந்தாநாளிற்கு குடும்பத்துடன்‌ கிளம்பினான் வாசு. 

அரசியையும் அழைத்துக் கொண்டு செல்லலாம் என நினைத்தவனின் எதிரே வந்து நின்றாள் சந்தியா.

பளபளவென்று மிவும் விலையுயர்ந்த பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள். 

புடவை எடுத்ததையும் வாசுவிற்கு தெரிவிக்கவில்லை. அவனிடம் காண்பிக்க வேண்டும் என்று குறைந்த பட்சம் எண்ணம் கூட இல்லாமல் வெகு இயல்பாக அவனிடம் வந்தவள், “ நீங்க அனுவையும் உங்க அம்மாவையும கூட்டிட்டு ஒரு ஆட்டோ பிடிச்சு வந்துடுங்க. நான் எங்க அம்மாவுக்கு சின்னதா ஒரு இரண்டு பவுன்ல செயின் வாங்கிட்டு வந்துடுறேன்…பாவம் அவங்களுக்குன்னு இதுவரைக்கும் எதுவும் செஞ்சுகிட்டதே இல்லை. எங்க அண்ணனும் செய்ய மாட்டான். கேட்டா உங்களை மாதிரியே தான் பஞ்சப் பாட்டு பாடுவான்.இதுல பொண்டாட்டிக்கு மட்டும் செய்ய எங்க இருந்து தான் காசு வருமோ.‌..? சரி சரி‌ எனக்கு எதுக்கு ஊர் பொல்லாப்பு…நான் கிளம்புறேன்..நீங்க சீக்கிரம் வந்து சேருங்க…அனுவுக்கு தலைப் பின்னி விட்டுட்டேன்…. நீங்க அவளுக்கு ஃப்ராக் போட்டு ரெடி பண்ணி அழைச்சிட்டு வாங்க…” என அவன் பேசுவதற்கு கூட இடமளிக்காமல் கைப்பையை தூக்கிக் கொண்டு ஒய்யாரமாக கிளம்பிவிட்டாள்.

வழக்கம் போல அவளிடம் கேட்பதற்கு ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் ஒரு பெருமூச்சுடன் அனுவை தயார் செய்து தாயையும் அழைத்துக் கொண்டு சாந்தியின் வீட்டிற்குச் சென்றான்.

ப்ரகாஷோ திவ்யாவிடம், “ உங்க அண்ணனுக்கு என்ன பிரச்சினை னு தெரியல திவி.. திடீர்னு வந்து ஒன்றரை லட்ச ரூபாய் கடனா வேணும் யார் கிட்டயாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு கேட்டார்.  நல்ல கம்பெனில நல்ல வேலையில் தானே இருக்காரு…அப்பறம் ஏன்..? கடன் வாங்குற அளவுக்கு அவரக்கு  என்ன பிரச்சினை? நீ தான் கொஞ்சம் அவர் கிட்ட பேசி என்னன்னு கேளேன்…” என்றான்.

திவ்யாவிற்கும் இந்த விடயம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. 

அவள் ஏதோ கூற வாயெடுப்பதற்கு முன் சாந்தி அவளை அழைக்கவே வேகமாகச் சென்றாள்.

“ எல்லாரும் வர்ற நேரமாச்சு. நீயென்னடானா ஆடி அசைஞ்சு வர்ற…பலகாரம் எல்லாம் சரியா இருக்கான்னு  பார்த்து எடுத்து வை…என் பொண்ணுக்கு தனியா பெரிய டப்பால போட்டு வச்சிடு…ஆரோன்க்கு புது துணி போட்டு விட்டுடல்ல…எல்லார் முன்னாடியும் இப்படி அழுது வடிஞ்சிட்டு இருக்காத.. புரியுதா..? நல்ல புடவையா கட்டு… கௌரவமா இருக்கணும். என்னோட அக்கா அவங்க வீட்டுக்காரர் எல்லாரும் வர்றாங்க…நல்லா கவனிச்சு அனுப்பணும்.இப்படியே மசமசன்னு நிக்காத..” என விரட்டினார்.

பலகாரம் வீட்டிலேயே செய்ய வேண்டும் என்று சாந்தி கூறிவிட்டார்.

மூன்று வகை இனிப்பு  மற்றும் காரத்தை செய்து விடுமாறு திவ்யாவிடம்  கறாராக கூறியிருந்தார் சாந்தி. 

காலை நான்கு மணியிலிருந்தே அடுப்படியில் குடியிருந்தவளுக்கு மாலை மூன்று மணி அளவில் தான் வேலை ‌முடிந்தது. காலை உணவு, தேநீர் ,மதிய உணவு என அனைத்தையும் ஒரே நேரத்தில் சமாளித்தாள் திவ்யா.


சற்று நேரத்தில் அனைவரும் வந்து விட பிறந்தநாள் விழா இனிதே ஆரம்பம் ஆனது.

ப்ரகாஷ் தனது தாயிற்கு சற்று விலையுயர்ந்த பட்டுப்புடவையும் கால் கிராம் அளவில் தங்க மோதிரமும் வாங்கியிருந்தான். 

விருந்தினர் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறிவிட்டு பரிசளித்தனர்.

சந்தியா திவ்யாவை எகத்தாளமாக பார்த்தபடி விலையுயர்ந்த புடவை மற்றும் இரண்டு சவரனில் தங்க சங்கிலியை கர்வத்துடன் அணிவித்தாள். 

தங்கையின் செயலைக் கண்ட ப்ராகாஷ் யோசனையுடன் வாசுவின் புறம் திரும்பினான். 

அவனது முகமோ உணர்வுகளை தொலைத்து நிர்மலமாக இருந்தது. 

இது நாள் வரை இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு எங்கோ தவறு நடப்பது போலிருந்தது.

 தங்கையிடம் கேட்டால் எகிறிக் கொண்டு வருவாள் என நினைத்து அமைதியாக இருந்து விட்டான்.


வாசுவிற்குமே சந்தியாவின் செயல் வருத்தத்தை அளித்தது.

 வயதில் மூத்தவருக்கு ஆசையாக செய்கிறாள் என தன்னை தேற்றிக் கொண்டான்.

அனைவரும் இரவு உணவை முடித்துக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தார்கள்.

“ அம்மா…அடுத்த மாசம் குலு மணாலிக்கு போகப்‌போறேன்…எங்க ஸ்டாப்ஃஸ் எல்லாரும் போறாங்க…ஒரு வாரம் நிம்மதியா இருப்பேன்…” என்றாள் திவ்யாவை பார்த்துக் கொண்டே பெருமையாக.

‘ இப்பவும் நீ நிம்மதியா தான்டி இருக்க….’ என  மனதினுள் நினைத்துக் கொண்டாள் திவ்யா.

“ இதை பத்தி எங்கிட்ட ஒரு வார்த்தை கூட‌ சொல்லல சந்தியா.” என்றான் வாசு சற்று காட்டமாகவே.

“ அதான் இப்ப சொல்றேன் ல…நான் அடுத்த வாரம் குலு மணாலிக்கு டூர் போறேன்…போதுமா…? நான் போகவான்னு உங்க கிட்ட பெர்மிஷன் கேக்கல… போகப் ‌போறேன்னு இன்பர்மேஷன் தான் சொல்லுறேன்..” என்றாள் முகத்தை திருப்பிக் கொண்டு.

“சந்தியா நீ பண்ணறது எல்லாம் நியாயமே இல்லை சொல்லிட்டேன் . வீட்டு நிலைமை தெரிஞ்சும் நீ அகலக் கால் வைக்குற.  வர வர நீ செய்றது எதுவும் சரியா இல்ல சொல்லிட்டேன்…” என்றான் கடுப்புடன்.

குறைந்த பட்சம் தன்னிடம் கூறியிருந்திருக்கலாமே என்ற ஆதங்கம். ஒரு சாராசரி கணவன் எதிர்பார்ப்பு.

அவன் குரல் உயர்த்தி பேசியவுடன் கோபம் வந்துவிட்டது சந்தியாவிற்கு.

“பாத்தியா ம்மா…இது அந்த வீட்டுல என்னோட நிலமை. எல்லா விஷயத்தையும் அவங்க கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு தான் செய்யணுமாம் . உழைச்சி கொட்டுறவளுக்கு இந்த சுதந்திரம் கூட இல்ல அந்த வீட்டுல. சமைக்கணும், குழந்தையை பாத்துக்கணும்…வீட்டு வேலை செய்யணும்…இதே தான்‌ திரும்ப திரும்ப செஞ்சிட்டு மாடு‌ மாதிரி சுத்தி வரணும். ஆனா எனக்கானதை மட்டும் தான் செஞ்சிக்கக் கூடாது.. “ என்றவளுக்கு தான் கட்டியிருந்த முப்பதாயிரம்  ரூபாய் பட்டுப் புடவை மறந்து தான் போனது போல…

“ சந்தியா…தேவையில்லாம பேசாத… எல்லாத்தையும் நீ சொல்லிட்டு  தான் செய்யுறியா? உன்னிஷ்டத்துக்கு தான் செய்ற “ என வாசுவும் பதிலுக்கு எகிறினான்.


அவனது கூற்றில் இருந்த உண்மை அவளைச் சுட்டதில் இன்னும் ஆத்திரம் அதிகமானது அவளுக்கு. 

எப்படியாவது வாசுவை மட்டம் தட்டிவிட வேண்டும் என்ற முனைப்பில் வார்த்தைகளை சிதற விட்டாள்.

“ இப்ப என்ன தான் பிரச்சினை உங்களுக்கு? என்ன மதிரியான பொழப்பு இது.? உண்மையான ஆம்பிளைன்னா பொண்டாட்டிய கண் கலங்க  மாட்டான்…. நீங்க தான் ஆம்பிளையே இல்ல…” என்பதற்குள் அறைந்து விட்டான் வாசு…

அனைவரும் அதிர்ந்து போயினர்.

“ போதும்…பேசாத…இப்ப என்ன நீ குலு மணாலிக்கு போகணும்…அதானே…தாராளமா போயிட்டு வா…தேவையில்லாம ட்ராமா பண்ணாத…”என ஆத்திரத்துடன் கூறி விட்டு ‌தாயையும் அனுவையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டான்.

சாந்தியோ ஒரு படி மேலாக,” நீ இங்கேயே இரு மா சந்தியா…அப்பதான் அவங்களுக்கு புத்தி வரும்.பொண்டாட்டியை கை நீட்டி அடிக்கிறானே…தப்புன்னு உங்க மாமியார்காரி எடுத்துச் சொல்ல வேணாம்.. அப்படியே பிடிச்சி வச்ச பிள்ளையார் மாதிரி உக்காந்துருக்காங்க…என்ன குடும்பமோ…” என திவ்யாவை பார்த்து கோபமாக கூற அவளுக்கோ கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

ஆத்திரத்துடன்  சாந்தியிடம் ஏதோ கூறப் போனவளின் கைப்பற்றி நிறுத்தி விட்டான் ப்ரகாஷ்.

அவளின் மொத்த கோபமும் கணவன் மீது திரும்பியது. 

ப்ரகாஷிற்கோ மனைவியை சமாதானம் செய்வதா அல்லது தாயை கடிந்து கொள்வதா என்ற‌ குழப்பம்.. தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான்.

சந்தியாவை கை  நீட்டி அடித்த்தற்கு வாசுவை கடிந்து கொண்டார் அரசி.

அவனுக்கோ இயலாமையுடன் கூடிய கோபம்.

 நாட்கள் வேகமாக நகரந்தது. 

சந்தியா ஒரு மாதமாக தாய் வீட்டிலேயே தங்கி விட்டாள்

வாசு துபாய் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான்.

குலு மணாலிக்கு கிளம்பும் முன்பு வீட்டிற்கு வந்தவள் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு கைச்செலவிற்கு அவனிடம் சற்று பெரிய தொகையையும் சண்டையிட்டு வாங்கிக் கொண்டு தான் சென்றாள்.

செலவுகள் அதிகமாக அதிகமாக வாசுவால் சமாளிக்க முடியாத நிலை…அந்த மாதத்திற்கான வீட்டுத்தவணையையும் அவனால் செலுத்த முடியவில்லை… மிகவும் திணறிப் போனான்.

குலு மணாலிக்குச் சென்றவள் வாசுவை அழைத்து பேசவே இல்லை. அவனது அழைப்பையும் ஏற்கவில்லை

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top