பிழை-23

ஓய்ந்த தோற்றத்துடனும் தளர்ந்த நடையுடன் தனது வீட்டிற்கு‌ வந்தாள் ஆருத்ரா.

மண்டபத்திலிருந்து எவ்வாறு அவ்வளவு தூரம் நடந்தே தனது வீட்டிற்கு வந்தாள் என்றே தெரியவில்லை. மனதினை போன்று கால்களும் மரத்து தான் போனது.

ஒற்றைப் பையுடன் வீட்டின் இரும்பு கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் ஆருத்ரா.

“ வணக்கம் மேடம்… சொல்லிருந்தா கார் எடுத்துட்டு வந்துருப்பேனுங்களே..‌நடந்தா வந்தீங்க? ஏன் மேடம் மொகமெல்லாம் வாடிப் போயிருக்கு..?” என கவலையுடன் கேட்ட காவலாளியை பார்த்து விரக்தியான புன்னகை சிந்தினாள்.‌ 

மனம் முழுவதும் அத்தனை வேதனை. 

“பரவாயில்லாங்க.” என்று கூறி விட்டு நகர முயன்றவளை காவலாளியின் குரல் தடுத்து நிறுத்தியது.

“அம்மா…ஒரு ரெண்டு‌ மாசத்துக்கு முன்ன‌ வாசுங்கறவரு அய்யாவை பாக்க வந்துருந்தாங்க…” எனக் கூறி விட்டு நிறுத்தினார்.

யோசனையுடன் புருவத்தை சுருக்கி அவரைப்‌பார்த்தாள்.

“ எப்ப?  வாசு அப்பாவை பாக்க வந்திருந்தாரா?என்ன பேசினாங்கன்னு ஏதாவது தெரியுமா?” என்றாள்.

“ அது…அது..வந்து..மா..” என இழுத்தார்.

“ என்னன்னு தயங்காம சொல்லுங்க சங்கரன்.” என்றாள் அழுத்தமாக

“ அய்யா..அவரை தோட்ட்த்துல உட்கார வச்சி பேசினாரு. வீட்டுக்குள்ள கூப்பிடல. அப்பறம் அவரு… அதான்..வாசு. உங்களை விரும்புறதாகவும் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறதாகவும் சொன்னார். ஆனா அய்யா…தான் அந்தஸ்து அது இதுன்னு ரொம்ப கேவலமா அவரை பேசிட்டாரு ம்மா. அவரோட முகம் ரொம்பவே வாடி போச்சு…இதெல்லாம் தெரிஞ்சா உங்க பொண்ணு உங்களை மன்னிக்காது கஷ்டம்..வேற புதுசா ட்ரை பண்ணுங்கனுட்டு போயிட்டாரு ம்மமா..நான்‌ தோட்டத்துக்கு தண்ணீ ஊத்திட்டு இருந்தேன்…எதேச்சையா அவங்க ரெண்டு பேரும் பேசுவதை கேக்குற‌ மாதிரி ஆயிடுச்சு. தப்பா‌ எடுத்துக்காதீங்க மா.. அய்யோ கிட்ட சொல்லிட்டாதீங்க…தெரிஞ்சா என்னைய வேலையை விட்டே தூக்கிடுவாரு…” என்றார் பரிதாபமாக.

ஏற்கனவே மனமுடைந்து வந்திருந்தவளுக்கு இந்த செய்தி இன்னும் உஷ்ணத்தை ஏற்றியது. 

அவளுள் கனன்று கொண்டிருந்த நெருப்பு இன்னுமின்னும் தீப்பிழம்பாக கொழுந்துவிட்டு எறிய ஆரம்பித்தது. தன்னை சுற்றியுள்ள அனைவரும் சுயநலத்தின் மொத்த உருவங்களாக மாறிப் போனதாக தோன்றியது. ஆக மொத்தத்தில் அனைவரும் தனது காதலை புரிந்து கொள்ளாமல் போனதில் ஆத்திரம் அதிகரித்தது.

தளர்ந்த நடையுடன் வீட்டுனுள் நுழைந்தவளை கண்டு திகைத்தார் ராகவன்.

“ அடடே..! ஆரும்மா…என்னடா இது..? சொல்லாம கொள்ளாம‌ வந்துருக்க? என்னடா கோலம் இது..? எப்படி வந்த? ரொம்ப டயர்டா இருக்க போலவே.. ப்ரேமா…எங்க இருக்க ? இங்க வா…ஆரு வந்திருக்கா பாரு…அவளுக்கு ஏதாவது சாப்பிட கொண்டு வா…” என முடிப்பதற்குள்,’ சிலீர்…’ என கண்ணாடி மேசை உடையும் சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்த்தவரின் விழிகள் அதிர்ச்சியை பிரதிபலித்தது.

“ ஆரும்மா…என்ன பண்ணிட்டு…ஐய்யோ..! ரத்தம்…”

“ போதும்…நிறுத்துங்க….” என வீடே அதிரும் படி கத்தினாள்.

அப்போது தான் நன்றாக தனது மகளை ஊன்றி கவனித்தார். ஏதோ சரியில்லாதது போல தோன்றியது.

“ ஆரும்மா…என்னாச்சு டா…ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்றவரை இடைமறித்து, “நா கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” என்றாள் பல்லைக் கடித்து கொண்டு.

அவர் அமைதியாக நின்றிருந்தார்‌

“ வாசு உங்களை பாக்க‌ வந்திருந்தாரா? அவரை எங்க உக்கார வச்சி பேசினீங்க? என்ன சொன்னீங்க? உண்மை மட்டும் தான் எனக்கு வேணும்..”என்றாள் கடினமான முகத்துடன்

மக்களது பேச்சிலிருந்து ஏதோ புரிவது போல் இருந்தது ராகவனுக்கு.

ஒரு பெருமூச்சுடன்,* ஆமாம் மா…வாசு நான் தான் கூப்பிட்டேன். ரொம்ப நாளாவே உன் மேல கொஞ்சம் சந்தேகம் இருந்தது. விசாரிச்சு பார்த்ததுல வாசுவும் நீயும் விரும்பறது தெரிஞ்சது. நம்ப அந்தஸ்துக்கு போயும் போயும் ஒரு சாதாரண மிடில் க்ளாஸ் பையனை நீ கல்யாண பண்ணிக்கலாமான்னு நினைச்சு தான் அவனை கூப்பிட்டு… ” என்றவரால் மேற்கொண்டு பேச முடியவில்லை. 

மகளின் இந்த புதிய அவதாரம் அவரை பேச்சிளக்க வைத்தது.

“ போதும்…இனி உங்க கிட்ட பேசுற துக்கு எனக்கு எதுவும் இல்லை.. உங்களுக்கு உங்களோட கௌரவம்…அவனுக்கு அவனோட தேவை…ம்ம்.. எல்லாரும் எவ்வளவு சுயநலமாக இருந்துகிட்டீங்க…நான் தான் பைத்தியம் மாதிரி எல்லாரையும் நம்புனேன்‌‌.. ஆனா..கடைசில எல்லாருக்கும் தேவையானது நடந்துடுச்சு ல…ஆனா எனக்குத் தான..நா ஆசைப்பட்டது கிடைக்கல. எந்த கௌரவத்துக்காக பொண்ணை வசதியான இடத்துல கல்யாணம் பண்ணி வைக்கணும் னு ஆசைப்பட்டு வாசுவை விரட்டி அடிச்சீங்களோ…இனி அந்த பொண்ணு காலம் முழுசும் கல்யாணம் ஆகாமலேயே இருக்கப் போறா. என் வாழ்க்கையில நான் ஆசைப்பட்ட ஒரே ஆள் வாசு மட்டும்தான். அவரைத் தவிர வேற யாரையும் ஏத்துக்க என் மனசு பக்குவப்படல. என்னோட கடைசி மூச்சு கூட அவரோட பேரை தான் சொல்லும். சத்தியமா இங்க இருந்தா எனக்குப் பைத்தியம் தான் பிடிக்கும். உங்களை பார்த்தா அதுக்கு மேல கோவம் வருது. நான் லண்டன்லயே மேற் கொண்டு படிச்சிட்டு என்னோட ஃப்ரெண்ட் கம்பெனில வெர்க் பண்ணிக்குறேன். பை….” என்றவள் தனது அறைக்குள் சென்று முடிங்கிக் கொண்டாள்.

ராகவனும்‌ பிரேமாவும் எவ்வளவோ மன்றாடிப்‌பார்த்து விட்டனர். அவளோ அதையல்லாம் செவி மடுக்காமல் அடுத்த ஒரு வாரத்தில் லண்டனுக்கு பறந்து விட்டாள்.

அன்று சென்றவள் மூன்றாண்டுகளுக்கு முன்பு தான் இந்தியா வந்திருந்தாள்.

தந்தையின் கிளை நிறுவனத்தில் பொறுப்பேற்றவள் அங்கு வாசு பணிபுரிவதைக் கண்டு திகைத்து போனாள். அமிழ்ந்திருந்த கோபமெல்லாம் நீர்குமிழியை போல வெளி வந்தது.

இவற்றையெல்லாம் யோசித்துக் கொண்டே இருந்தவள்  எப்போது உறங்கினாளோ அவளுக்கே வெளிச்சம்.

இங்கு தனது தாயின் அறையில் படுத்திருந்த வாசுவிற்கும் கடந்த கால நினைவுகள் தான். 

திருமணத்திற்குப் பிறகு தன்னை நம்பி வந்த பெண்ணிற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவனுடைய மனதில் இருந்தது. எனவே வெடிக்க காத்திருக்கும் ஆருத்ரா வின் நினைவுகளை வலுக்கட்டாயமாக ஒதுக்கி வைத்து விட்டு அவளுடன் வாழ்க்கையை தொடங்கினான்.

சந்தியாவுடனான திருமணம் முடிந்து சில நாட்களுக்கு பிறகு தான் திவ்யாவின் கோபம் அவனுக்கு உரைத்தது. 

எத்தனையோ முறை மன்னிப்பு கேட்டு விட்டான். ஆனால் திவ்யாவின் மனம் தான் இறங்கவில்லை. 

வாசுவிடமிருந்து முற்றிலும் பேச்சுவார்த்தையை தவிர்த்து விட்டாள்.

ஒரு பெருமூச்சுடன் இறங்கிப் போனவன் மறுநாள் காலையில் ப்ரகாஷின் வீட்டிற்கு சென்று மனைவியையும் மகளையும் அழைக்கச் சென்றிருந்தான்.

“ திவ்யா…அந்த வடாமெல்லாம் எடுத்து அந்த பெரிய டப்பாக்குள்ள போட்டு சந்தியா கிட்ட குடு.. ரசப்பொடி, குழம்பு பொடி எல்லாம் செஞ்சிட்ட தானே? அதையெல்லாம் தனித்தனி டப்பால போட்டுக் கொடுத்துடு…எல்லாத்தையும் மறக்காம எடுத்து வச்சிடு. அப்பறம் என்ன பொண்ணு அங்க போய் அது இல்லை இது இல்லன்னு கஷ்டப்படக்கூடாது..” என்றவர் தேநீரை கலந்து வாசுவிற்கு கொடுத்தார்.

பம்பரமாக சுழன்று வேலை செய்யும் தனது தங்கையை பார்த்தவனுக்கு ஒருபுறம் பெருமையாக இருந்தாலும்…மறுபுறம் இடுப்பொடிய வேலை செய்யும் போது சிறிது கஷ்டமாக தான் இருந்தது.

சந்தியாவோ ஒரு சுடிதாரை கையில் வைத்துக் கொண்டு, “இந்த சுடிதார் எப்ப வாங்கினீங்க அண்ணி. புதுசா இருக்கே…என் கிட்ட நீங்க காட்டவே இல்லை. அண்ண வாங்கிக் கொடுத்துச்சா… நல்லா இருக்கு..நான் வேணா எடுத்துக்கவா?”என்றாள்.

திவ்யாவோ ப்ரகாஷைப் பார்த்தாள். 

அவளது. பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன், ” நான் உனக்கு வேற வாங்கித் தர்றேன் சந்தியா…இது கல்யாண நாளுக்குன்னு எடுத்தது. இது அவ கிட்ட இருக்கட்டுமே..” என்றான் தன்மையாக.

“அடேயப்பா…இப்ப நான் என்ன கேட்டுட்டேன். ஆஃப்ட்ரால் ஒரு சுரிதார் அதைக்கூட உன் பொண்டாட்டியால கொடுக்க முடியாதா..? இதுக்கு நீ சப்போர்ட் வேற.. கல்யாணம் பண்ணிட்டு போனா எனக்கு இந்த வீட்டுல எந்த உரிமையும் இல்லையா? பாருங்க உன் பிள்ளையை.. கல்யாணத்துக்கு அப்புறம் மாறி போயாச்சு…ம்ம்…” என நொடித்துக் கொண்டாள்.

அவ்வளவு தான் சாந்தி தையா தக்காவென்று குதிக்க ஆரம்பித்து விட்டார்.

கடைசியில் திவ்யாதான் கண்ணைக் சிக்கிக் கொண்டு போக வேண்டியதாயிற்று. 

ஒவ்வொரு முறையும் சந்தியா தாய் வீட்டிற்கு வரும் போது திவ்யாவை ஏதேனும் சொல்லி அழ வைத்து விட்டு தான் கிளம்புவாள். 

திவ்யாவின் அழகும் சிவந்த நிறமும் அடர்ந்த முடியும் அவளுள் பொறாமைத் தீயை உண்டு பண்ணியிருந்ததே இதற்கு காரணம்.

ஒருவழியாக மகளையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவன் வேக வேகமாக அலுவலகத்திற்கு கிளம்பிக் தயாரானான்.

வாசலில் யாரோ அழைப்பு மணியை அடிக்க சந்தியா தான் திறந்தாள்.

”யார் நீங்க?என்ன வேணும்?”

“ மேடம் நான் ஹெச்.எஸ்.சி பேங்க்ல இருந்து வந்துருக்கோம். மூணு மாசமா வீட்டுக்கு இ.எம்.ஐ கட்டல. எப்ப தான் கட்டுவீங்க? ரெண்டு மாசமா ரிமைண்டர் பண்ணிட்டு இருங்கோம். ஒரு ரெஸ்பான்ஸூம் இல்லை. அடுத்த மாசம் கட்டலன்னா ஒண்ணா ஜெயிலுக்கு போக‌ வேண்டி வரும். இல்லன்னா வீட்டை விட்டு வெளியே போகணும். எப்படி வசதி? சீக்கிரம் கட்டச் சொல்லுங்க? மூணு மாசம் பணம் ஒரு லட்சம் அதோட வட்டியும் சேர்த்து ஒரு லட்சத்து நாப்பத்தஞ்சாயிறம் கட்டணும். “ என  எச்சரித்து விட்டுச் சென்றனர்.

சந்தியாவோ திகைத்து போய் நின்றிருந்தாள்.

“ யாரு சந்தியா?” என்றபடியே வந்தான்‌ வாசு.

“ கொஞ்சமாவது அறிவிருக்கா உங்களுக்கு? மூணு மாசமா வீட்டுக்கு இ.எம்.ஐ கட்டாம இருக்கீங்க? அடுத்த மாசம் கட்டலன்னா ஜெயிலுக்கு தான் போகணுமாம். என்ன பண்ணப் போறீங்க? பணத்தை கட்டாம என்ன பண்ணுறீங்க நீங்க? நடுத்தெருவுல நிக்கப் போறோம்.” என படபடவென பொரிந்தாள்.

நெற்றியை நீவி விட்டவன், “ஏற்பாடு பண்ணுறேன்…நீ கவலைப்படாதே..” என்று கூறி விட்டு அலுவலகத்திற்கு சென்றான்.

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top