பிழை-19

வாசு சொன்னதை போலவே தன் பின்னால் சுற்றி வரும் ஆருத்ராவை தவிர்க்க ஆரம்பித்தான்.

அவனது செய்கையை பார்த்த ஆருத்ராவிற்கு கோபம் தான்‌ வந்தது. 

‘காதலிக்கவில்லை என்றால் என்ன? சாதாரண நட்புணர்வுடனாவது பேசிப் பழகலாமே..! இதென்ன பேயை கண்டது போல் பதறியடித்து கொண்டு ஓடுவது…’ என ஆதங்கப்பட்டாள்.

அக்கல்லூரி வளாகத்தில் இருந்த மிகப்பெரிய மைதானத்தில் மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியளித்துக் கொண்டிருந்தான்‌ வாசு.

லேப்பிற்கு சென்று விட்டு மாதங்கியுடன் திரும்பிக் கொண்டிருந்தாள் ஆருத்ரா. 

வாசு மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருப்பதை பார்த்த மாதங்கி,  “ஏய்…ஆரு..அங்கப் பாரு‌ டி உன் ஆளு தான் நம்ப பசங்களுக்கு கிரிக்கெட் ட்ரெயின் பண்றாப்ல போல‌வே . “ என்று கூறி அவளது தோளை இடித்தாள்.

“ ஏய்..அடி வாங்கப் போற‌ நீ. தேவ்வை என்னோட ஆளுன்னு நான் சொன்னேனா? சும்மாவே இருக்க மாட்டியா..” என கடுகடுத்தாள்.

“ ஏய் சும்மா சொல்லாத நீ. காலையில் நீ அவரைப் பாக்கறதுக்காக காலேஜ் வாசல்ல நிக்கறதும். அவர் உன்னை கண்டுக்காம போறதும்…நீ பின்னாடியே போய் பேச ட்ரை பண்ணுறதும்.. எல்லாத்தையும் நான் பாத்துட்டே தான் இருக்கேன். என்னாச்சு ஆரு? ஏதாவது பிரச்சனையா? கொஞ்ச நாளா ரெண்டு பேரும் சரியாகவே பேசிக்கறது இல்லையே?. முன்னெல்லாம் மரத்துக்கு மரம் உக்காந்து அரட்டை அடிச்சிட்டு இருந்தீங்க? இப்ப‌ என்ன ஆச்சு?”என்றாள் மாதங்கி.

தன்னுடைய அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஒரே தோழி மாதங்கி என்பதனால் நடந்ததைக் கூறினாள்.

“ சோ…நீ வசதியான குடும்பத்து பொண்ணுங்கறது தான் பிரச்சனையா? ம்ம்…” என யோசித்தவள், “ வாசு சொல்றதுலயும் நியாயம் இருக்கு தானே ஆரூ. படிச்சு முடிச்சு வேலைக்கு போய் சம்பாதிச்சு தங்கைக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டு தான் உங்க கல்யாணத்தை பத்தியே யோசிக்க முடியும். அதுவரைக்கும் உங்க வீட்ல வெயிட் பண்ணுவாங்களா? முதல்ல உங்க அப்பா அம்மா கல்யாணத்துக்கு ஒத்துக்குவாங்களா?.‌மிடில் கிளாஸ் வாழ்க்கை அவ்வளவு சாதாரணமானது இல்ல. ஒண்ணு செய்றதுக்கு முன்னாடி அவ்வளவு தடவை யோசிக்கணும் ஆரு. இல்லன்னா எல்லாரும்  கஷ்டப்படணும். அதனால தான் வாசுவும் பயப்படுறாப்ல.” எனத் தெளிவாக கூறினாள் மாதங்கி.

ஆனால் காதல் கொண்ட மனதிற்கு அதெ்லாம்  புரியவில்லை. அவனையே சுற்றிக் கொண்டிருந்தது அவளது மனம்.

வாசு பயிற்சியளித்து விட்டு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விட்டு பூந்துவாலையை எடுத்துக் கொடுக்குமாறு நண்பனிடம் கேட்டுக் கொண்டிருந்தான். 

அதற்குள் ஆருத்ரா தான்‌ கழுத்தில் சுற்றியிருந்த ஸ்டோலை எடுத்து அவன் புறம் நீட்டியிருந்தாள். 

பக்கவாட்டாக நின்று அவள் நீட்டிக் கொண்டிருந்ததால் யாரென கவனிக்காமல் அதனை வாங்கி முகத்தை துடைத்துவனுக்கு நன்றாக பழகியிருந்த வாசனை நாசியில் ஏறவே சட்டென்று கையிலிருந்த ஸ்டோலைப் பார்த்து விட்டு திரும்பினான்.

ஆருத்ரா தான் அவனை ரசித்துப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள்.

அவளை முறைத்து விட்டு ஸ்டோலை அவளிடம் நீட்டினான். 

அவளோ வாங்காமல் கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தாள்.

சுற்றிலும் இருந்த மாணவர்கள் அவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

“ இந்தாங்க வாங்கிக்கோங்க…எல்லாரும் பாக்குறாங்க..” என்றான் பல்லைக் கடித்து கொண்டே.

“முடியாது..நீங்க என் கிட்ட பேசுறேன்னு சொல்லுங்க வாங்கிக்குறேன்.”என்றாள் அழுத்தமாக.

வாசு ஆருத்ராவை முறைக்க..

அவளோ அளவில்லா காதலுடன் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ ம்ம்ச்..” என தலையை இருபுறமும் ஆட்டி சலித்துக் கொண்டவன் ஸ்டோலை அவளது தோளில் போட்டுவிட்டு விறுவிறுவென நடந்தான்.

“ ஹலோ..! ஹலோ…! “என்று கத்திக் கொண்டே அவன் பின்னால் ஓடி வந்தாள்..

அவன் சட்டென்று நிற்பான் என எதிர்பாராதவள் அவன்  பின்னால் மோதி நிலை தடுமாறி கீழே விழப் போனாள். அவளது கைகளை பிடித்து நேராக நிற்க வைத்தான்.

பிடித்திருந்த கரங்களை விட மனமில்லாமல் நின்றிருந்தாள் ஆருத்ரா.

“ ம்ம்ச்..கையை விடுங்க ஆருத்ரா..” என கையை விடுவித்துக் கொள்ள முயல அவளோ அவனது கரங்களை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டாள்.

“இங்க பாருங்க தேவ். நீங்க என்னை காதலிக்கலைன்னா கூட பரவாயில்லை . முன்ன மாதிரி ஒரு ப்ரெண்ட்லியாவாது பேசலாம் ல. என்னைப் பாத்து ஏன் இப்படி தெறிச்சி ஒடுறீங்க?” என்றாள்.

“ லவ் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டு ப்ரெண்ட்லியாவாது பேசுங்கன்னு  சொன்னா அது எதுல போய் முடியும்ன்னு  எனக்கும் தெரியும். அதுக்காக தான் விலகிப் போறேன். பயந்தெல்லாம் ஓடல.” என்று கூறி விட்டு நடக்க ஆரம்பித்தான்.

அவனுடனே இணைந்து நடந்தவள், “ சரி நீங்க என் கூட பேச வேண்டாம். நானே உங்களுக்கு பதிலாக பேசுறேன். நான் கேக்குற ஒரேயொரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. நான் போயிடுறேன். என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா? இல்லையா? அவ்வளவு தான் என்னோட கேள்வி .இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க…ஹப்பா.. என்ன ஸ்பீடா நடக்குறீங்க. கொஞ்சம் மெதுவா தான் நடங்களேன்.” என்றவள் அவனது வேக நடைக்கு ஈடு கொடுத்தபடியே 

ஒவ்வொரு அடியையும் அவன் எடுத்து வைக்கும் போது அவனது நீண்ட கால்களை பார்த்துக் கொண்டே நடந்தாள்.

“என்ன வேணும் உங்களுக்கு?” என்ற படி நின்றான் சலிப்புடன்.

“ நான் கேட்ட கேள்விக்கு பதில்?” என்றாள் அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே.

அவளது நீண்ட விழிகளில் தொலைந்து போக விழைந்த மனதை அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தான்.

“ சொல்லுங்க பா…ஏன் அமைதியா இருக்கீங்க?”என்றாள் மென்மையான குரலில் .

இடுப்பில் இருகைகளையும் ஊன்றியவன் ஒரு பெருமூச்சுடன், “ இங்க பாருங்க…நாம் பாத்து பேசி என்ன ஒரு ரெண்டு மூணு மாசம் இருக்குமா? அதுக்குள்ள எதை வச்சி என்னை விரும்புறேன்னு சொல்றீங்க? இது சினிமா இல்லை. வாழ்க்கை. எதையும் ப்ராக்டிக்கலா யோசிச்சு செய்யணும். ப்ளீஸ் உங்க அழகுக்கும் திறமைக்கும் என்னை விட நல்ல லைஃப் பார்ட்னர் உங்களுக்கு கிடைப்பாங்க. திரும்ப திரும்ப என் பின்னாடியே வந்து எல்லாரோட பார்வைக்கும் பேச்சுக்கும் அவலாகிடாதீங்க. நான் என்னவோ உங்களை என் பின்னாடி சுத்தி வைச்சு பந்தா  மாதிரி தான் எல்லாரும் நினைப்பாங்க. போங்க ப்ளீஸ்…எல்லாரும் நம்மளை தான் பாக்குறாங்க. “ என்றவன்

விடுவிடுவென நடந்து சென்றான்.

“அய்யோ…! ஓவரா தத்துவம் பேசுறாப்லயே…முடியல டி ஆரு. இவரை எப்படி கரெக்ட் பண்ணி எப்படி லவ் பண்ணி எப்படி கல்யாணம் பண்ணி…. ம்ம்ம்..ஷப்பா கண்ணைக் கட்டுது டா சாமி.” என முணுமுணுத்துக் கொண்டே வகுப்பறைக்குச் சென்றாள்.

தினமும் அவனை பின் தொடருவது, கிரிக்கெட் பயிற்சி நடக்கும் இடத்திற்கு சென்றமரந்து அவன் விளையாடும் அழகை ரசிப்பது என்றிருந்தாள். 

தினமும் காலையில் அவனிடம் ஏதாவது ஓரிரண்டு வார்த்தைகள் பேசி வம்பிழுத்து விட்டு வகுப்பிற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தாள். 

விக்ரமாதித்தினின் முதுகின் மீது தொங்கும் வேதாளம் போன்று அவனது முதுகில் தொங்கிக்கொள்ளாதது ஒன்று தான் குறை. 

அவனுக்கே ஒரு கட்டத்தில் ஒரு மாதிரியாக ஆகி விட்டது. மனம் நிறைகுடம் போல தளும்பி வழிய ஆரம்பித்தது.

முதல் வருடம் முடிந்தது.

வாசுவிற்கு முதுகலை படிப்பு இரண்டாம் ஆண்டு ஆரம்பித்தது. ஆருத்ராவிற்கு பொறியியல் நான்காம் ஆண்டு தொடங்கியது.

வாசுவின் மனதிலும் அவள் மீதான ஈர்ப்பு தொடங்கி மனம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எப்போதும் போலவே விலகிச் சென்றான்.‌ 

கண்களில் அளவில்லா காதலுடன் தன்னைச் சுற்றி சுற்றி வரும் பெண்ணவளின் பால் மனம் சாய ஆரம்பித்தது . அவள் பார்க்காத  போது அவளை மெல்ல ரசிக்க ஆரம்பித்திருந்தான். 

அவளது உயரம் கண்டு சற்று பயமாக தான் இருந்தது. எனவே தயக்கத்துடனே எட்டி நின்று பார்த்து ரசித்துக் கொண்டான்.

கல்லுரி நூலகத்தில் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்து கொண்டிருந்தவன் செவியில் இரு பெண்கள் பதட்டத்துடன் பேசியது காதில் விழுந்தது.

“ ஏய்‌.. நம்ம ஆரூ கையில ஆசிட் பட்டுடுச்சு . ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயிருக்காங்க. கான்சென்ட்ரேட்ட் ஆசிட்‌ வேற….தோலே உரிஞ்சு வந்துடுச்சு. பாவம் துடிச்சி போயிட்டா.” 

“நான் போய் பார்க்கப் போறேன். நீ வரியா டி?” என்றாள்

“ இப்ப க்ளாஸ் இருக்கே டி” 

“ பரவாயில்ல வா..பின்பக்க கேட்ல இப்ப வாட்ச்மேன் இருக்க மாட்டாரு. எஸ்கேப் ஆகிடலாம்..” என்று கூறியபடி இருவரும் வேகமாக பின்பக்க வாசலுக்கு விரைந்தனர்.

‘ ஆரு’ என்ற வார்த்தையை கேட்டவுடன் வாசுவிற்கு இதயம் எக்குத்தப்பாக துடிக்க ஆரம்பித்தது. 

நெஞ்சை நீவி விட்டுக் கொண்டே ஆருத்ராவின் வகுப்பறை இருக்கும் வளாகத்தினுள்ளே நுழைந்தான்.

யாரிடம் விவரம் கேட்பது என்று தவிப்புடன் நின்றிருந்தவனின் பார்வையில்  ஆருத்ராவின் தோழிகள் மாதங்கியும் ராதிகாவும் பதட்டத்துடன் வருவது தெரிந்தது.

உலரத் துவங்கிய தொண்டையை சரி செய்து கொண்டு அவர்களின் அருகில் சென்றவன் , “ ஆருக்கு…என்.. என்னாச்சு?” என்றான் திணறிய குரலில்.

அவர்களோ அவனை கண்டு கொள்ளும் நிலையில்லை‌.

“ அய்யோ..! கொஞ்சம் வழியௌ விடுங்க. ஆரு கையில ஆசிட்‌ பட்டுடுச்சு.  முழங்கைக்கு கீழே தோல் உரிஞ்சிடுச்சு. ஹாஸ்பிட்டலுக்கு போகணும்…” என்று கூறி விட்டு நகர்ந்தாள் மாதங்கி.

“ ஓ..ஒரு நிமிஷம்..எந்த ஹாஸ்பிடல்?” என்றான் நடுக்கத்துடன்.

அவர்கள் இருந்த மனநிலையில் வாசு எதறகாக கேட்கிறான் என்று ஆராயாமல், “எஸ்.எம் ஹாஸ்பிடல்” என்று மொட்டையாக கூறி விட்டு ஓடினர்.

கால்கள் வேறோடிப் போய் அருகிலிருந்த தூணில் சாய்ந்து ஒரு கணம் நின்றவன். முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு பறந்தான்.

சுற்றுப் புறம்  எதுவும் உரைக்காமல் பதட்டத்துடன் வாகனத்தை நிறுத்தி விட்டு மருத்துவமனைக்குள் நுழைந்தான்.

வரவேற்பில் அவளது பெயரைக் கூறி அனுமதிக்கப்பட்டிருக்கும் அறையை கேட்க கூட பொறுமையின்றி ஓடினான்.. 

அங்கிருந்த செவிலியர் ஒருவர் அவன் நின்றிருந்த கோலத்தை பார்த்து விட்டு,”என்ன வேணும்? எதுக்கு இங்க நின்னுட்டு இருக்கீங்க?” என்றார். 

அவன் பதில் சொல்வதற்கு முன் 

மாதங்கி, ராதிகா மற்றும் மேலும் இரு தோழிகள் வந்துவிட . அவர்களை பின் தொடர்ந்து சென்றான் வாசு.…

முதல் தளத்திற்கு சென்றவர்கள் அங்குள்ள அறைக்குள் நுழைந்தனர். 

அவனும் பதட்டத்துடன் அவர்களின் பின்னோடு வந்தவன் ராகவன் மற்றும் பிரேமா உள்ளே இருக்கவும் அறையின் வாசலிலே நின்று விட்டான்..

கையில் ஏதோ களிம்பினை தடவி முதலுதவி செய்து இருக்க கண் மூடி படுத்திருந்தாள் ஆருத்ரா.

கள்ளங்கபடமில்லா அழகிய வதனத்தை அவனது பார்வை வாஞ்சையுடன் தொட்டுச் சென்றது.

ஆருத்ராவின் தோழிகளைப் பார்த்த ராகவன், “ஆருத்ரா… உன்னோட ஃப்ரெண்ட்ஸ் வந்துருக்காங்க பாரு…எழுந்துக்கோ மா..” என்றார்

” பரவாயில்ல அங்கிள்..அவ தூங்கட்டும்…” என்று மாதங்கி கூறிக் கொண்டு இருக்கும்‌ போதே கண் விழித்து விட்டாள்‌ ஆருத்ரா.

” நீங்க பேசிட்டு இருங்க….மா..” என்று கூறி விட்டு ராகவன் வெளியேற‌..பிரேமாவும் ஏதோ மருந்து வாங்குவதற்கு கீழே சென்று விட்டார்.

சுவற்றின் ஓரம் நின்றிருந்தவன் ஆருத்ராவின் பெற்றோர் வெளியே சென்ற பிறகு அறையினுள்ளே எட்டிப் பார்த்தான்.

மாதங்கியுடனும் ராதிகாவுடனும் ஏதோ பேசிக்கொண்டே திரும்பியவளின் பார்வை வாசலில் நின்று கொண்டிருந்த வாசுவின் மீது படிந்தது.

விழிகள் விரிய அவனை ஆச்சர்யமாக பார்த்தவள், “ஹாய்..தேவ்..! என்ன இந்த பக்கம்? தெரிஞ்சவங்க யாராவது இங்க அட்மிட் ஆகிருக்காங்களா?” என்றாள்.

“ இல்ல…”

” பின்ன நீங்க எங்க இங்க?”என்றாள் சிரிப்புடன்.

அப்போது தான் மாதங்கியும் திரும்பி அவனைப் பார்த்தாள்.

” ஓ…நீங்க தான் ஆருவுக்கு என்ன ஆச்சுன்னு கேட்டீங்கல்ல….ஏய்..ஆரூ எனக்கு இப்ப தான் டி ஞாபகம் வருது..நாங்க உன்னை பாக்க கிளம்பிட்டு இருக்குறப்ப தான் இவர் வந்து  உனக்கு என்ன ஆச்சுன்னு கேட்டாரு..உன்னை பாக்க தான் வந்துருக்காரு டி…” என்றாள் அவனைப் பார்த்துக் கொண்டே.

மாதங்கியின் பேச்சு வாசுவிற்கு சிறிது சங்கடத்தை ஏற்படுத்தியது. 

அவனது மனதின் படபடப்பு அடங்கவில்லை. ஏனோ இதயத்துடிப்பு ஏகத்துக்கும் எகிறியது.

தயக்கத்துடனே ஆருத்ராவை அவன் பார்க்க அவளது கூரிய  பார்வை பதட்டத்துடன் நின்றிருந்தவனை துளைத்தெடுத்தது.

மாதங்கியின் புறம் திரும்பியவள், “நீங்க கொஞ்சம் வெளியே போனீங்கன்னா நாங்க கொஞ்சம் பர்சனலா பேச பேச முடியும்… அப்படியே அம்மா கொஞ்ச நேரத்துக்கு உள்ள வராம பாத்துக்குங்க டி ” என்றாள் கிசுகிசுப்பான குரலில்.

“இதுக்கு பேரு என்ன தெரியுமா? ” என்றாள்  ராதிகா நக்கலாக.

” ப்ளீஸ் டி தங்கம்…உனக்கு நான் டபுள்‌ ட்ரீட் தர்றேன்..தயவு செஞ்சு வெளியே போறீங்களா…நா இந்த சான்ஸை மிஸ் பண்ண விரும்பல. போகும்  போது கொஞ்சம் கதவை மட்டும் சாத்திட்டு போங்க டி…” என முணுமுணுத்து விட்டு,” வாங்க தேவ்…ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்கீங்க? உக்காருங்க” என்றாள்.

உள்ளே நுழைந்த வாசு நாற்காலியை அவளருகே இழுத்துப் போட்டு அமர்ந்தான். 

சிவந்திருந்த அவளது காயத்தை பார்வையினாலேயே ஆராய்ந்தான்.

ஆருத்ராவை முறைத்தபடி  அவளது தோழியர் வெளியே சென்று விட ,அவள்  அமைதியாக அமர்ந்திருந்தாள்.

அவளது முகத்தை நிமிர்ந்து பார்க்காமலேயே, ” லேப் எக்யூப்மெண்ட்ஸ் யூஸ் பண்ணணும் போது பாத்து யூஸ் பண்ண மாட்டியா.. தோல் முழுசா உரிஞ்சி வந்துருக்கு..” என்றான் .

” எப்பவும் கவனமா தான் இருப்பேன்.‌ க்ளவுஸ் போட்டுட்டு தான் ஆசிட்டை ஹேண்டில் பண்ணுவேன். இன்னைக்கு அப்ப தான் கசகசன்னு இருக்குன்னு கழட்டி வச்சிட்டு ஆசிட்டை நகர்த்தி வச்சேன். கை தவறி  எப்படியோ விழுந்துடுச்சு.”என்றாள்.

அவளது கைகளை பிடித்து பார்க்க விழைந்த மனதினை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“ஏன் முகம் இவ்வளவு டென்ஷனா இருக்கு? இவ்வளவு வேர்த்து வேற வழியுது. ஏன்?

” ஒண்ணுமில்லை…”என்றான் எங்கோ பார்த்தபடி.

தனது கைக்குட்டையை நீட்டினாள். 

மறுக்காமல் அதை வாங்கியவன் அவளது முகத்தை பார்த்துக் கொண்டே துடைத்துக் கொண்டான்

“ எனக்காக பதறுனீங்களா?”

” தெரியலை…”என்றான் அவளது கரங்களிலிருந்து பார்வையை அகற்றாமலேயே.

“ ம்ம்ச்..என் கையில என்ன எழுதி வச்சிருக்கு? என்னோட முகத்தை பார்த்து பேசுங்க…”

மெல்ல நிமிர்ந்து அவளை பார்த்தான்.  

சுழல் போல உள்ளிழுத்துக் கொள்ளும் அவளது நீண்ட நயனங்கள் இப்போதும் அவனுக்கான காதலைக் கொட்டிக் கொண்டிருந்தது..

அவனுள் இருந்தும் வெடித்து சிதறி வெளி வர தயாராகி நின்ற காதலை முழுங்கி விட முயற்சித்துக் கொண்டிருந்தான்.

“ என்னாச்சு தேவ்…? ஏன் பேச மாட்டேங்குறீங்க?”

” நா..நான் கிளம்புறேன்..”என தடுமாறியபடி எழுந்து நின்றான்.

“சரி..” என்றாள்‌ இறுகிய முகத்துடன்.

மெல்ல வாசல் புறம் திரும்பி நடக்க ஆரம்பித்தவனை தடை செய்தது அவளது வார்த்தைகள்.

” இப்ப…கூட‌…உங்க மனசுல இருக்குற லவ்வை என் கிட்ட சொல்லணும்னு தோணலை ல உங்களுக்கு? நிஜமாவே நான் அனலக்கி தான். கையில ஆசிட் கொட்டுனதுனால என்னை வந்து பாக்க வந்துருக்கீங்க.. ஒருவேளை உயிரை விட்டா தான் உங்களோட காதலை என் கிட்ட சொல்லுவீங்களோ..” என்னவளின் வாயை வேகமாக வந்து மூடியவன், அவள் முன்பு குனிந்து அவளது  விழிகளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, “உளறாத ருத்ரா…இப்ப‌ என்ன நான் உண்மையை ஒத்துக்கணும். அவ்வளவு தானே…?யெஸ்…நான் உன்னை மனப்பூர்வமா விரும்புறேன்.. எப்பவோ நீ என் மனசுக்குள்ள வந்துட்ட..நீ மட்டுந்தான் என் மனசுல இருக்க… எப்பவும் இருப்ப…லவ் யூ ஆருத்ரா..!” என்றான்.

அவனை ரசனையாக பார்த்தவள்,  “நிஜமாவா?” என்றாள்.

வசீகரிக்கும் சிரிப்புடன் அவளை பார்த்தவன், ” இந்த மாதிரி தேவதைப் பொண்ணை நான் மிஸ் பண்ணினா…என்னை மாதிரி முட்டாள் யாருமில்லை. ஐ லவ் யூ மேட்லி…” என்றபடி அவளது நெற்றியை லேசாக முட்டினான்.

ஆசை தீர அவனை அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று துள்ளிய‌ மனதினை முயன்று அடக்கினாள்‌ ஆருத்ரா..

நான்கு விழிகளும் காதலை  பரிமாற்றம் செய்து கொண்டிருக்க ,  “எம்மா… ஆருத்ரா…உங்க ரொமேன்ஸ் முடிஞ்சதுன்னா சீக்கிரம் அவரை கிளம்பச் சொல்லு.. ரொம்ப நேரமா உங்க அம்மாவை சமாளிச்சிட்டு இருக்கா ராதிகா… இன்னும் கொஞ்ச நேரம் ஆனா…உன் பெட்டுக்கு பக்கத்துலயே இன்னொரு பெட் போட வேண்டியது வரும்…” என்றபடி உள்ளே நுழைந்தாள் மாதங்கி.

இருவரும் சற்று விலகிக் கொண்டனர். 

அதன் பிறகு வந்த நாட்கள் அனைத்துமே செர்க்கமாக தான் இருந்தது இருவருக்கும்.

அரசியின் அறையில் தரையில் படுத்துக் கொண்டு விட்டத்தை பார்த்து கொண்டிருந்தவனுக்கும் அதே பழைய நினைவுகள் தான். 

எத்தனை காதலுடனும் ஆசையுடனும் தன்னைச் சுற்றி சுற்றி வந்தவள் இன்றும் அதே ஆசையுடனும் காதலுடனும்  உக்கிரமாகி  த்ன்னை சுற்றி வருகின்றாள் ஆனால் வேறு பரிணாமத்தில் சற்றே மாறுபட்ட சூழலில். 

கரை தொடாத அலைகளாய் அவளது நேசம் நடுக்கடலில் உள்ள சுழலில் சிக்குண்டு தத்தளிக்கிறது.‌ 

கரை சேரும் மார்க்கம் தெரியாமல்.

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top