நாட்கள் உருண்டோடியது.
திவ்யாவிற்கு அந்த பருவத்தின் கட்டணத் தொகையை எப்படியோ செலுத்தி விட்டான் வாசு.
திவ்யாவும் ப்ரகாஷூம் கடற்கரை மணலில் அமர்ந்திருந்தனர்.
“ இந்த செமஸ்டர் ஃபீஸ் கட்டியாச்சா திவ்யா?” என்றான் ப்ரகாஷ்.
“ம்ம்…அண்ணே நேத்து தான் கட்டினாரு. அவரைப் பார்த்தாலும் பாவமா தான் இருக்கு. பார்ட் டைம் மா வேலைக்கு போயிட்டுருக்காரு. அதை வச்சி தான் என்னோட ஃபீஸை கட்டினாரு. அவ்வளவு பெரிய தொகையை கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் கட்டியிருக்கணும்” என்றாள் கவலையாக.
“ ம்ம்ச்…கவலைப்படாதே திவ்யா.. எல்லாம் ஒரு நாள் சரியாகும் . உங்க அண்ணன் நல்ல நிலைமைக்கு வருவாரு நீ வேணாப் பாரேன்.” என்றான் ப்ரகாஷ்.
“ என்னை சமாதனாப்படுத்த சொல்லாதீங்க ப்ரகாஷ்… ஒரு சிலருக்கு மட்டுந்தான் அப்படியெல்லாம் நடக்கும் .ஆனா நிஜத்துல ஒரு சாதாரண குடும்பம் பொழப்பை ஓட்டுறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?உங்க வீட்டுல நம்ப லவ்வை ஏத்துப்பாங்களோ.. இல்லையோன்னு எனக்கு இப்பவே பயம் வருது. படிச்சி முடிச்சதுக்கு அப்பறம் தான் நானும் அண்ணனும் வேலைக்குப் போய் நகையும் பணமும் சேர்த்து வைக்கணும். அது வரைக்கும் உங்க வீட்ல வெயிட் பண்ணுவாங்களா? நகை நட்டு, பணம்னு உங்க வீட்ல அதிகமா எதிர்பார்த்தா என்ன பண்றது?” என்றாள் கவலையாக.
அவளது கைகளை பிடித்து தனது கரங்களில் வைத்துக் கொண்டவன், “பணம் நகையை பத்தி யோசிக்காதே எங்க அம்மா கிட்ட அதைப்பத்தி பேச வேண்டாம்னு சொல்லிடுவேன் திவ்யா. யார் என்ன சொன்னாலும் இந்த ஜென்மத்துல நீ எனக்கு தான். நீயும் படிச்சு முடிச்சுட்டு வேலைக்கு போ…நானும் இந்த வருஷம் கேம்பஸ்ல செலக்ட் ஆகிருவேன். சோ..இந்த குட்டி மைண்ட்ல ரொம்ப எதையும் ஏத்திக்காத…என்னைய பத்தி மட்டும் யோசனை பண்ணு. அது போதும்…” என்றவனின் தோளில் சாய்ந்து கொண்டாள் திவ்யா.
இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்துக் கொண்டிருந்தார்கள்.
இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்திருந்தனர்.
திவ்யாவிற்கு படிப்பு முடிய இன்னும் ஒரு வருடம் இருந்தது. அவள் படித்து வேலைக்குச் சென்று திருமணத்திற்காக சிறிது சேர்த்து வைத்த பின்பு திருமணம் செய்து கெள்ளலாம் என முடிவு செய்து வைத்திருந்தனர்.
அண்ணனின் பாரத்தை சற்றேனும் குறைக்க எண்ணினாள் திவ்யா.
ஆருத்ரா மற்றும் வாசுவின் இருவரது கல்லூரி நேரமும் ஒன்றே என்பதால் வகுப்பிற்கு செல்லும் முன்னர் தினமும் காலையில் இருவரும் பேசிக் கொண்டனர்.
அவர்களுக்குள் மெல்லிய நட்புறவு தோன்றியது.
வாசுவிற்கு மதியம் கல்லூரி முடிந்து விடும் .
ஆருத்ராவிற்கு மாலை வரை வகுப்புகள் இருக்கும்.
அன்று வாசு தனது வகுப்புகளை முடித்துவிட்டு கிளம்பிக் கொண்டிருந்தான்.
நூலகத்திற்கு சென்று குறிப்புகள் எடுக்க வேண்டி இருந்ததால் எடுத்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தான்.
ஆருத்ரா தனியாக மரத்தடியில் அமர்ந்திருந்தாள்.
‘ இந்நேரம் க்ளாஸ் இருக்குமே ..? இங்க உக்காந்துருக்கா..’ என எண்ணியபடி அவளருகே சென்று அமர்ந்தான்.
தன்னருகே யாரோ அமர்வது போலிருக்க நிமிர்ந்து பார்த்தாள். வாசு தான் சிரிப்புடன் அமர்ந்திருந்தான்.
“ க்ளாஸ் இல்லையா?” என்றான்.
“ ம்மச்..! அசைன்மெண்ட்டுக்கு இன்னைக்கு தான் லாஸ்ட் டேட். முடிக்கல. அதான் அந்த மேடம் வெளியே அனுப்பிட்டாங்க.”என்றாள் சோகமாக.
“ ஏன் முன்னாடியே எக்ஸ்கியூஸ் கேட்டுருக்கலாமே? இப்படி ஸ்கூல் மாதிரியா ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்க?” என்றான் புரியாமல்.
“ஹலோ…பாஸ். அதெல்லாம் ரெண்டு மூணு தடவை எக்ஸ்கியூஸ் கேட்டுட்டேன். இது நாலாவது தடவை. அதான் கடுப்பாகி வெளியே அனுப்பிட்டாங்க. அது மட்டுமில்ல ஏற்கனவே எனக்கும் அந்தம்மாவுக்கும் எனக்கு ஒத்து போகாது. எப்படா டைம் கிடைக்கும் வெளியே அனுப்பலாம்னு நினைச்சிட்டு இருப்பாங்க போல. அசைன்மெண்ட் முடிக்கலன்னவுடனே கெட் அவுட்ன்னு கத்திட்டாங்க. நானும் சும்மா ஏன் அவங்கள டென்ஷன் பண்ணனும்னு நல்ல புள்ளையா வெளியே வந்துட்டேன். பாவம் சுகர் பேஷன்ட் வேற..”என்றவளைப் பார்த்து சிரித்தபடியே தலை இருபக்கமும் ஆட்டினான்.
“ ஏன் சிரிக்குறீங்க? ரொம்ப ஒழுங்கீனம்னு நினைக்கிறீங்களா? அதெல்லாம் இல்லை. படிப்புல சும்மா கில்லியாக்கும் நானு. என்ன அப்பப்ப கொஞ்சம் கோவம் வரும். டக்குன்னு கை நீட்டிடுவேன். கொஞ்சம் வால்தனமும், வாயும் அதிகம்…மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட மணிக்கணக்குல வளவளன்னு பேசிட்டே இருப்பேன். அவங்கள பேசவே விட மாட்டேன். இதோ இப்ப உங்களை பேச விடாம நானே பேசிட்டு இருக்கேனே அது மாதிரி…” எனப் பேசிக் கொண்டே போனவள் சட்டென்று பேச்சை நிறுத்தி விட்டு அவனைப் பார்த்தாள்.
அவனும் திடுக்கிட்டு அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
‘மனதிற்கு பிடித்தவர்கள் ‘என உரிமையாய் அவனையும் சேர்த்து அவள் கூறியது சற்று நெருடலாக இருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தான்.
அவனது முகபாவத்தை அவளும் அவதானித்துக் கொண்டு தான் இருந்தாள்.
தான் பேசியதைக் கேட்டு முதலில் அவன் திடுக்கிட்டதும் பின்னர் இயல்பாக இருக்க முயற்சி செய்ததையும் நொடியில் அவள் கண்டு கொண்டாள்.
“வாங்களேன் கேண்டீன் போகலாம்…” என்றாள்.
“இல்லங்க பரவாயில்ல நான் கிளம்பணும்…இன்னோரு நாள்…பாக்கலாம்” என்றான்.
“ இல்ல பசிக்குது…கம்பெனி குடுக்குறதுக்கு யாருமில்லை..அதான் நீங்க கம்பெனி குடுப்பீங்கன்னு நினைச்சேன். தட்ஸ் ஓகே..தனியா போய்க்கிறேன்..” என எழுந்தாள்.
என்ன நினைத்தானோ, “சரி வாங்க போகலாம்…” என்றான்.
“கிளம்பணும்னு சொன்னீங்க..?” குறும்புடன் தலை சரித்து கேட்டவளை ஒரு கணம் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.
“ போனாப் போகுதேன்னு கம்பெனி குடுக்கலாம்னு நினைச்சேன்..” என்றான்.
“அடேயப்பா…! என்ன தாராள மனசு உங்களுக்கு.?இப்படி தான் தாராள மனசோட எல்லா கேர்ள்ஸ்க்கும் கம்பெனி குடுக்குறீங்களோ..?” என்னவளின் கேள்வியில் சிறிது பொறாமை இருந்ததோ என்னவோ..!
“ அய்யோ..! ஆளை விடுங்க…ரொம்பவே ஓட்டுறீங்க. இப்ப நான் உங்களுக்கு கம்பெனி குடுக்கவா? இல்ல கிளம்பவா?” என்றான்.
“பரவாயில்ல வாங்க…” என்றவள் அவனுடன் கேண்ட்டினுக்கு சென்று அமர்ந்தாள்…
அவளோ பஃப்ஸ் மற்றும் குளிர்பானத்தை வாங்கிக் கொண்டாள்.
எதுவும் வேண்டாம் அவனை வற்புறுத்தி குளிர்பானம் அருந்த வைத்தாள்.
ஏதேதோ அர்த்தமில்லாமல் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அவனது பேச்சிலிருந்த தெளிவு, நிதானம், கண்ணியம், ஆகியவை அவளை கட்டி இழுத்தது என்றே கூறலாம்.
காற்றில் அசைந்தாடும் அவனது கேசம், சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழி, உயரத்திற்கேற்ற கட்டுக்கோப்பான உடல்வாகு. என அவளையறியாமல் அவனை அணுஅணுவாக கன்னத்தில் கை வைத்துக் கொண்டு ரசிக்க ஆரம்பித்துவிட்டாள்.
நாட்கள் செல்லச் செல்ல ஆங்காங்கே அமர்ந்து பேச ஆரம்பித்து விட்டனர்.
அவனிடம் பேசினால் தான் அன்றைய தினம் முழுமை பெறும் என்றளவிற்கு நெருக்கம் அதிகரித்தது.
தங்கையை பற்றி அதிகம் அவளிடம் பகிர்ந்து கொண்டான்.
கொஞ்சம் கொஞ்சமாக அவளது மனதில் ஆழப்பதிந்து போனாள் வாசு.
இரவில் அவனது முகமே கண்முன்னே வந்து இம்சித்தது.
“டேய்…! நம்ப காலேஜ்ல இருக்குற எல்லா மரத்தையும் ஒரு ஜோடி தடவிக் கொடுத்து தண்ணீர் வார்த்து வளர்க்குறாங்க டா..” என மாதங்கியும் அவளது வகுப்புத் தோழர்களுமே அவளை வம்பிளுக்கவே ஆரம்பித்துவிட்டனர்.
அவர்களை முறைத்து விட்டு வெளியே வந்தவளுக்குமே சிரிப்பு தான் வந்தது.
எதையும் மனதில் மறைத்து வைத்து பழக்கமில்லாதவள் ஒரு நாள் வாசுவிடம் தன் காதலை கூறிவிட்டாள்.
முதலில் அவன் திடுக்கிட்டாலும் கூட , “ வேண்டாங்க…இதெல்லாம் ஒத்து வராது…எனக்கு கடமைகள் நிறைய இருக்கு. காதலை பத்தி யோசிக்குற அளவுக்கு எனக்கு நேரமும் இல்ல உங்க அளவுக்கு எனக்கு தகுதியும் இல்லை. நான் ரொம்பவே சாதாரண ஆள். உங்களால நார்மல் மிடில் க்ளாஸ் லைஃப் வாழ முடியாது. உங்களுக்கு ஏத்த மாதிரி லைஃப்பை உங்க அப்பா அம்மா தேடித் தருவாங்க. உங்களுக்கானவன் நானில்லை. படிக்குற காலத்துல காதல் கண்றாவியெல்லாம் தேவையில்லாத ஒண்ணு. நீங்களும் நல்லா படிச்சு…நல்ல வேலைக்கு போங்க..” என நீண்ட விளக்கத்தை கொடுத்துவிட்டு அவளது முகத்தை பார்த்தான்
அவளோ அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள்.
“ என்னங்க? ஏன் அப்படி முறைக்குறீங்க?”
“ உங்களை எனக்கு பிடிச்சிருக்கு. என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கான்னு தான் கேட்டேன். அதுக்கு ஏன் இவ்வளவு லெக்சர் எடுக்குறீங்க? கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க “ என்றாள் அழுத்தமாக.
அவளது கேள்வியில் ஒரு கணம் தடுமாறியவன் அவளது முகத்தை நிமிர்ந்து பார்க்காமலேயே , “உங்களை பிடிக்கல…இனி தேவையில்லாம ரெண்டு பேரும் பேச வேண்டாம் “ என கூறி விட்டு விறுவிறுவென சென்று விட்டான்..
அவன் செல்லும் திசையை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் ஆருத்ரா.