தனது தந்தையின் காரினை எடுத்துக் கொண்டு தோழியின் பிறந்தநாளிற்காக கிளம்பிக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.
“ பத்திரமா போயிட்டு வா..நைட் வரும் போது பாத்து வா. உன் கூட உன்னோட ஃப்ரெண்ட்ஸ் யாராவது வர்றாங்களா? சாவியை எடுத்துட்டு போ. நான் அத்தை வீட்டு விசேஷத்துக்குப் போறேன்..“ என்றார் பிரேமா.
காலையிலிருந்தே அவரது புலம்பல்களை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு ஒரு கட்டத்தில் கோபம் வந்துவிட, “ம்மா…போதும் கொஞ்சம் நிறுத்து. நான் என்ன சின்னக் குழந்தையா? யாரும் கடத்திட்டு போக. காலையிலயிருந்து எத்தனை தடவை இதே வார்த்தையை மாத்தி மாத்தி சொல்லிட்டு இருக்க. சாவி எடுத்துகிட்டேன் . நான் கிளம்புறேன் நேரமாச்சு…” என்றவள் ராகவனை ஐஸ் வைத்து அவரது கார் சாவியை வாங்கி வைத்திருந்தாள்.
ராகவன் பெரிதாக மறுப்பேதும் கூறாமல் அவளிடம் சாவியை குடுத்து விட்டார்.
ஆனால் அவளது தாய் பிரேமா தான் பல ஆயிரம் ஜாக்கிரதைகளையும் புத்திமதிகளையும் கூறிக் கொண்டே இருந்தார்.
கிட்டத்தட்ட செங்கல்பட்டிற்கு அருகில் அமைந்திருந்தது அவளது தோழியின் வீடு.
இவர்களது வீடு இருப்பது அண்ணாநகரில். அறுபது கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும் .
அவள் தனியாக காரை எடுத்துக் கொண்டு செல்வது தான் அவருக்கு சற்று கலக்கமாக இருந்தது.
ஆனால் அவளோ அதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கிளம்பி விட்டாள்.
ஆகாய நீல நிறத்தில் கற்கள் பதித்த டிசைனர் புடவையை உடுத்தி தலைப்பினை ஒரு புறமாக புடவையை வழிய விட்டிருந்தாள் . மிதமான ஒப்பனையில் தன்னை அலங்கரித்து கொண்டவள் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
“ ம்மா…நான் கொஞ்சம் நேரம் கிரிக்கெட் ப்ராக்டீஸ் பண்ணிட்டு அப்படியே பெட்ரோல் பஃங்க் போறேன்…” என தாயிடம் கூறி விட்டு சட்டையை மாட்டக்கொண்டு வெளியே கிளம்பினான் வாசு .
“ அண்ணா…இந்த செமெஸ்ட்ர் ஃபீஸ் நம்மதாண்ணா கட்டணும். ஸ்பான்சர் பண்றவருக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம சீரியஸாகிட்டாரு. சோ இந்த முறை அவங்க கிட்ட இருந்து பணம் வர்றது கொஞ்சம் கஷ்டம்தான். அடுத்த செமஸ்டர்க்கு தான் கேட்கணும்” என்று தயக்கத்துடன் கூறினாள் திவ்யா..
“ம்ம்…சரிடா…எவ்வளவு நாள்ல கட்டணும்?”
“ இன்னும் இருபது நாள்லண்ணே…”
“சரி.. ஏற்பாடு பண்ணுறேன் மா..” என்றபடியே அவளது தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்துவிட்டு சென்றான்.
தாயின் சுமையை குறைக்க அவன் பகுதி நேரமாக சற்று தொலைவில் உள்ள ஒரு பெட்ரேல் பஃங்கில் வேலை பார்க்கின்றான்.
மாதக் கடைசியில் பணம் கையைக் கடிக்காத அளவிற்கு வீட்டுச் செலவுகளை சமாளிக்க முடிந்தது அவனது பகுதி நேர வருமானத்தால்.
கல்லூரியில் கிரிக்கெட் டீம் பயிற்சியாளராக இருக்கின்றான். சிறு வயது முதலே கிரிக்கெட் என்றால் உயிர்.
தெரிந்தவர்கள், நண்பர்களின் தந்தை போன்றோரின் சிபாரிசில் தனியார் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்ந்து முறையாக விளையாடக் கற்றுக் கொண்டான்.
தொடர்ந்து சிறப்பாகவே விளையாடி வந்தான்.
கிரிக்கெட்டில் மேலும் மேலும் சாதித்து தேசிய அளவிலான அணியில் சேர எவ்வளவோ முயற்சித்தான்.
ஆனால் ஓரளவிற்கு மேல் அவனை கைத்தூக்கி விட ஆளில்லாமலும் பொருளாதார நெருக்கடியாலும் அந்த ஆசையும் நிராசையாகப் போனது.
நல்வாய்ப்பாக கல்லூரியில் அவனது திறமை அங்கீகரிக்கப்பட்டு அவனை கிரிக்கெட் பயிற்சியாளராக தேரந்தெடுத்தனர் கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வர்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்ல பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் சிறந்த முறையில் பயற்சி அளித்துக் கொண்டு வருகிறான்.
திவ்யாவிற்கு பணம் கட்டுவதை பற்றி யோசித்து கொண்டே பெட்ரோல் பஃங்கிற்கு வந்து விட்டான்.
தோழியின் பிறந்தநாள் விழாவை முடித்துக் கொண்டு வந்தவள் காரின் பெட்ரோல் தீர்ந்து விடும் நிலையில் இருந்ததால் பெட்ரேல் பஃங்கிற்குள் நுழைந்தாள்.
“ ஐந்நூறு ரூபாய்க்கு போடுங்க..” என்று கூறி விட்டு நிமிர்ந்தவளின் பார்வை வாசுவைத் தொட்டுச் சென்றது.
அவனும் பெட்ரோலை நிரப்பி விட்டு பணத்தை வாங்குவதற்காக கைகளை நீட்டும் போது தான் ஆருத்ராவைப் பார்த்தான்.
“ என்ன… நீங்க இங்க?” என இழுத்தாள்.
“ நான் இங்க பார்ட் டைம்மா வொர்க் பண்ணுறேன்..” என்றான் சின்னச் சிரிப்புடன் .
‘எதற்காக..?” என கேட்க துடித்த நாவை அடக்கிக் கொண்டவள் அவனை மேலிருந்து கீழாக ஒருமுறை பார்த்தாள்.
அலையலையான கேசம், அகன்ற நெற்றி , கூரிய நாசி, சிரிக்கும் விழிகள், இறுகிய தாடை, கட்டுக்கோப்பான உடல்வாகு , சிவந்த நிறத்துடன் இருந்தவனின் தோற்றம் அந்த இடத்திற்கு சிறிதும் சம்பந்தமில்லாமல் இருந்தது.
“ஹலோ…!” என அவள் முன்பு கை ஆட்டியவன்,”இந்தாங்க மீதி சேன்ஜ்..” என அவளிடம் மீதி பணத்தை அவளிடம் கொடுத்தான்.
சிரிப்புடன் அதனை வாங்கிக் கொண்டு வாகனத்தை எடுத்தாள்.
நேரம் இரவு பதினோரு மணியை தாண்டியிருந்தது.
சிறிது தூரம் சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் யாரோ பின் தொடர்ந்து வருவது போல் தோன்றியது.
வேகமாக ஒட்ட நினைக்கும் போதே இரு சக்கர வாகனம் ஒன்று அவளது காரின் முன்பு நிற்க, சடேன் ப்ரேக் அடித்து நிறுத்தினாள்.
வாகனத்திலிருந்து இருந்து இறங்கிய ஒருவன் அவளது காரினை நோக்கி வேகமாக நடந்து வந்து அவள் சுதாரிக்கும் முன்பே காரி கதவினை திறந்து அவளை வெளியே பிடித்திளுத்தான்.
மற்றொருவனும் சேர்ந்து கொண்டு அவளது வாயை துணியால் மூடி ஆள் அரவமற்ற இடத்திற்கு தூக்கிச் சென்றார்கள்.
கை கால்களை உதைத்து அவர்களிடமிருந்து தப்ப முயன்றாள். அவர்களின் பிடி இறுக்கமானதாக இருக்கவே அவளால் முடியவில்லை.
அவளை மெல்ல இறக்கி விட்டுட்டு சுற்றிலும் பார்த்தார்கள்.
யாருமின்றி வெறிச்சோடி இருந்தது சாலை.
சற்று நேரத்தில் மற்றொரு இரு சக்கர வாகனம் வந்து அவர்களருகில் நின்றது.
அதிலிருந்து இறங்கினான் ஷிவா. கல்லூரியில் ஆருத்ரா அறைந்து அவமானப்படுத்திய அமைச்சருடைய காரியதரிசியின் மகன்.
நக்கலாக அவளைப் பார்த்தபடியே வந்தவன்.
“ என்னமா கண்ணு..? எப்படியிருக்க?ஷப்பா…சும்மா சொல்லக்கூடாது இந்த புடவையில செம்ம ஃபிகரா இருக்க. புடவையே இல்லைன்னாலும் இன்னும் செம்மையாக இருப்ப. டேய்…மச்சான் அவளோட காரை இங்க கொண்டு வாங்க டா. கார்லயே மஜா பண்ணுவோம்..”என்றவன் அவளருகே நெருங்கி வந்து அவளது கன்னத்தை வருடியவனின் வயற்றில் ஓங்கி ஒரு எத்து எத்தினாள் ஆருத்ரா.
மூவரையும் தள்ளி விட்டு ஓட ஆரம்பித்தாள்.
“ டேய்…எருமைங்களா…! என்னடா பாத்துட்டு இருக்கீங்க..போய் பிடிங்கடா…” என வயிற்றைப் பிடித்துக் கொண்டு எழுந்தவன் அவள் பின்னால் ஓடத் தொடங்கினான்.
கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு விரைந்தவளை நெருங்கிய ஷிவா அவளைப் பிடிப்பதற்காக முடியை பிடிக்க நினைத்து இழுத்தவனது கையில் மெல்லிய இரவிக்கையின் பின்புறம் கிழிந்து கொண்டு வந்துவிட.
வன்மச் சிரிப்புடன் அவளைப் பிடித்து விட்டான்.
பின்பக்க இரவிக்கை கிழித்தவுடன் அதிர்ந்து போய் நின்று விட்டாள்.
“ ஏன் பாதி பாதியா பிய்க்கணும். முழுசாவே ….” என்றவன் அவள் சுதாரித்தும் முன்பே தோள்பட்டையிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த மீதி இரவிக்கையை கிழிந்தவன் அவளை தன்னுடன் இறுக்கிக்கொண்டு இரு கைகளையும் பின்னால் சேர்த்துப் பிடித்துக்கொண்டான்.
திமிராக பார்வையுடன் அவளது அதிர்ந்த முகத்திற்கு நேராக குனிய முரட்டுக் கரம் ஒன்று நீண்டு அவனது முகத்தை அழுத்தமாக பிடித்துத் தள்ளியது .
“ஏய்…” ஆத்திரத்துடன் திரும்பிய வனின் கைகளை முறுக்கி கீழே தள்ளினான் வாசு..
முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டு அவனை அடிக்க வந்த மற்ற இருவரையுமே அடித்து வீழ்த்தி விட்டான்.
அதற்குள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலருடன் மேலும் சிலர் சூழ்ந்து கொண்டு அவர்களை அடிக்கத் துவங்கி விட அப்போது தான் ஆருத்ராவை பார்த்தான் வாசு.
புடவை தலைப்பினை தோளைச் சுற்றி போர்த்திக் கொண்டு நின்றிருந்தாள்.
ஷிவாவின் கீழ்த்தரமான செயலில் சற்று திகைத்து தான் போயிருந்தாள்.
“ருத்ரா…” என்றழைத்தவளின் குரல் கேட்டு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“ ஒ…ஒண்ணும் பிரச்சினை இல்லையே?” என்றான் தடுமாற்றத்துடன் .
“ இல்ல…தேவ்…ரொம்ப தேங்க்ஸ்..நான் கிளம்புறேன்..” என்றவள் தனது கார் கதவை திறந்து கொண்டு ஏறி அமர்ந்தாள்.
அவனும் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அவளது காதருகே நிறுத்தினான்.
ஸ்டீயரிங்கை பிடித்திருந்தவளின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்ததை பார்த்தான்.
புடவை வேறு தோளிலிருந்து நழுவி நழுவி கீழே விழ, அதை ஒரு கையில் பிடிக்கவும் மறு கையில் ஸ்டீயரிங்கைப் பிடித்தவளுக்கு எரிச்சலாகிப் போனது.
கோபத்துடன் ஸ்டீயரிங்கை வேகமாக தட்டியவளை கண்டு லேசாக சிரித்தவன் தனது இரு சக்கர வாகனத்தை பெட்ரோல் பஃங்க்கின் ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு அவளது கார் கண்ணாடியை தட்டினான்.
நிமிர்ந்து பார்த்தவள் வாசு நின்றிருப்பதைக் கண்டு கார் கண்ணாடியை இறக்கி விட்டாள்.
“ உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா நான் வேணா ட்ரைவ் பண்ணிட்டு வரவா?” என்றான்.
“ பரவாயில்ல நானே..” என்று ஆரம்பித்தவளுக்கு என்ன தோன்றியதோ “ம்ம்..சரி” என்று கூறி விட்டு இருக்கையில் மாறி அமர்ந்தாள்.
சுற்றி வந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவன் ஸ்டீயரிங்கை ஒரு பெருமூச்சுடன் வருடிக் கொடுத்தான்.
அவனது செய்கையை அவளும் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
“நல்ல கார்…நல்ல மைலேஜ் கொடுக்கும்” என்றவன் ஆசையுடன் காரினை கிளப்பினான்..
“ ம்ம்…அப்பாவோடது. வாங்கி மூணு வருஷம் தான் ஆகுது. இன்னைக்கு தான் வம்படியா நின்று நான் ஓட்டணும்னு வாங்கிட்டு வந்தேன். உங்களுக்கு கார்ன்னா ரொம்ப பிடிக்குமா?” என்றாள் .
“ ம்ம்…ரொம்பவே..எனக்கு கார்னா ரொம்பவே க்ரேஸ்…ப்ரெண்ட்ஸோட காரை வச்சே ட்ரைவிங் கத்துக்கிட்டேன். அல்மோஸ்ட் எல்லா காரையும் ஓட்ட கத்துக்கிட்டேன்” என்றான்.
இயலாமையை கூட ஒரு குறையாக கூறி பரிதாபத்தை தேடிக் கொள்ளாமல் அதில் கூட தன்னால் முயன்றதை செய்து பெருமிதம் கொள்ளும் குணத்தை கண்டு மெச்சும் பார்வை பார்த்தாள்.
“ என்ன அப்படி பாக்குறீங்க?”
“ம்ம்ச்.. ஒண்ணுமில்லை நல்லா ட்ரைவ் பண்ணுறீங்க? “ என்றாள்.
“ தேங்க்ஸ்..” என்றான் சிரிப்புடன்.
சிரிக்கும் போது விழும் கன்னக்குழி அத்தனை அழகாக இருந்தது அவனுக்கு.
அதனைப் பார்த்து கொண்டே வந்தவளை ,” என்ன திடீர் திடீர்னு ஃப்ரீஸ் ஆகுறீங்க?” என்றாள்.
“இ..இல்ல எப்படி அந்த இடத்துக்கு சரியா வந்தீங்க?”
“ என்னோட ட்யூட்டி டைம் முடிஞ்சது. எப்பவும் வர்ற வழி தான். உங்க கார் நடுவுல நின்னுட்டு இருந்தது. கார்ல நீங்களும் இல்லை. தேடிப் பார்த்தேன் . ஏதோ தப்பா இருந்தது. அதான் பேட்ரோல் போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிட்டு வந்தேன். அதுக்குள்ள…அவங்க உங்க கிட்ட மிஸ்பிஹேவ் எதாவது…?” என்ற கேள்வியோடு நிறுத்தினான்.
“இல்லை …ஆனா..ப்ளவுஸை கிழிச்சிட்டாங்க. எங்கம்மா கிளம்பும் போதே ஜாக்கிரதை , பத்திரம்ன்னு ஆயிரத்தெட்டு தடவை அட்வைஸ் பண்ணுனாஙக. அதே மாதிரி நடந்துடுச்சு. இப்ப எங்க அம்மா மட்டும் இப்படியே என்னைய பாத்தாங்க… நான் தொலைஞ்சேன். அப்பறம் ஜென்மத்துக்கு நான் காரை எடுக்கவே முடியாது…ம்ம்..காரை பார்க் பண்ணிட்டு பைப் ஏறி தான் என்னோட ரூமுக்கு போகணும்” என்றாள் நன்றாகவே இருக்கையில் சாய்ந்து கொண்டே..
“ஆனா நீங்க ரொம்பவே ப்ரேவ்..இந்த மாதிரி சூழ்நிலையை இவ்வளவு கூலா ஹேண்டில் பண்ணிட்டிங்க..”
“ஏன் பதறி அழுதிருக்கணும்னு நினைச்சீங்களா? கொஞ்சம் பயந்துட்டேன் தான் . ஆனா ஒரு வேளை நீங்க வராம இருந்திருந்தாலும் என்னால இந்த மாதிரி சூழ்நிலையை ஹேண்டில் பண்ணிருப்பேன்.” என்றாள்.
“ எப்படி?”
“ ம்ம்…இதோ இந்த பெப்பர் ஸ்பிரே வச்சு தான். முதல்ல பதட்டத்துல மறந்து போச்சு…ரெண்டாவது தடவை அவன் என் ப்ளவுஸை கிழிக்கும் போதே ஸ்ப்ரேயை கையில எடுத்துட்டேன். அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க. பட் ரொம்ப தேங்க்ஸ்.. கொஞ்சம் நெர்வஸ் ஆனதுனால என்னால காரை ஓட்ட முடியல..” என உண்மையை ஒத்துக் கொண்டாள்.
இருவரும் தங்களுடைய விருப்பு வெறுப்புகளை பகிர்ந்து கொண்டனர்.
ஒருவரை பற்றி மற்றொருவர் அறிந்து கொள்ள சிறந்த வாய்ப்பாக அமைந்தது அந்த சிறிய பயணம்.
அவளது வீடு வந்துவிடவே , காவலாளி காரைத் திறக்க உள்ளே ஓட்டிச் சென்று நிறுத்தினான் வாசு.
காரை விட்டு இருவரும் இறங்கினார்கள்.
அவள் நினைத்ததைப் போலவே ஹாலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
பிரேமா மகளின் வருகைக்காக காத்திருந்தார்.
“ போச்சு டா….அம்மா ஹாலிலேயே உக்காந்துருக்காங்க…இந்த கோலத்துல போனேன்னா அழுது ஒப்பாரி வச்சிருவாங்க…நான் பைப் பிடிச்சி மேல என் ரூமுக்குப் போறேன்..பை…அண்ட் லாட் ஆஃப் தேங்க்ஸ்…” என்றவள் புடவையை நன்றாக இழுத்துச் சொருகிக் கொண்டாள்.
இரவிக்கை கிழித்திருந்த தோள் பகுதி ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸ் போன்று காட்சியளிக்க, அவளது தோள்பட்டையில் ஷிவாவின் நகம் பட்டு இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
அதை உணரும் நிலையில் அவளில்லை. ஆனால் வாசு அதனைப் பார்த்துவிட்டான்.
பைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறிக்கொண்டு இருந்தவளைப் பார்த்து , “ருத்ரா…” என்றழைத்தான்.
என்னவென்பது போல அவள் மேலிருந்து கீழே பார்க்க, அவளது இடப் புற தோளை சுட்டிக் காட்டி, “ஃப்ளட் வருது…க்ளீன் பண்ணிடுங்க..”என்றான்.
அவன் கூறிய பின்னர் தான் அவள் அதை கவனித்தாள்.
“ ப்ளடி…பி****” என வண்ணமயமான வார்த்தைகளால் அவனை திட்டி முணுமுணுத்தாள்.
ஷிவா மிருகத்தனமாக அவளது தோளைப் பற்றி இழுத்ததால் காயம் சற்று ஆழமாகவே ஏற்பட்டிருந்தது.
பைப்பை பிடித்து ஒரு வழியாக ஏறி தனது அறையின் பால்கனியில் ஏறிக் குதித்தவள் கீழே பார்த்தாள்.
வாசு அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
புடவையை தூக்கி சொருகிக் கொண்டு குரங்கு போல் ஏறியவளைக் கண்டு சிரிப்பு தான் வந்தது.
இடுப்பில் இருகைகளையும் வைத்துக் கொண்டு வசீகர புன்னகையுடன் நின்றிருந்தவனை பார்த்தவளின் இதயம் ஒரு கணம் சுருதி தப்பி துடித்தது.
எத்தனை வசீகரமான முகம்? கூரிய விழிகளை பார்த்துக் கொண்டே இருந்தால் பசி தாகம் தோன்றாது போல.. கருகருவென வளர்ந்திருந்த அடர்ந்த மீசையை பிடித்திழுத்து வம்பு செய்ய அவளது கைகள் பரபரத்தது.
எப்போதும் புன்னகை சிந்தும் உதடுகளை தன்னுதட்டிற்குள் அடக்கிக் கொள்ள விழையும் மனதினை எண்ணித் திடுக்கிட்டுப் போனாள்.
விழியகற்றாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனிற்கும் பௌர்ணமி பால் நிலவிற்கு நிகராக அவளது முகம் பரிபூரண நிலவாக காட்சியளித்தது.
கீழிருந்து அண்ணாந்து பார்த்தவனுக்கு இரு நிலவு வானத்தில் தோன்றியிருப்பது போன்றதொரு பிரமை.
கள்ளங்கபடமில்லா அவளது பூரண சந்திர பால் முகம் அவனது இதயத்தை துளைத்து உள்ளே குடி புக துடித்தது.
முயன்று அதை விலக்கியவன் அவளை நோக்கி கையசைத்து விட்டு வெளியேறினான்.
அவனைப் பார்த்தபடியே தனதறைக்குள் நுழைந்தவளுக்கு மனம் முழுவதும் அவனது நினைவே.