பிழை-12

தனது காரில் ஏறி அமர்ந்தவள் பூந்துவாலையை எடுத்து தலையையும் உடலையும் துடைத்துக் கொண்டு ஸ்டீயரிங்கில் தலை கவிழ்ந்து படுத்திருந்தாள். 

உடலாலும் மனதாலும் என்றுமில்லாத பலவீனத்தை உண்ர்ந்தாள் .

இருசக்கர வாகனத்தை எடுக்க வந்த வாசுவின் விழிகள் அவள் மீது படிந்தது.

ஏனோ அவள் அமர்ந்திருந்த கோலம் இதயத்தை பிசைந்தது. 

காலம் தந்த வலியை ஏற்க முடியாத பேதையவள் அவன் மீது கொண்ட கண்மூடித்தனமான காதலால் உடலையும் உள்ளத்தையும் வருத்திக் கொண்டிருந்தாள்.

அவனையும் சேர்த்தே வதைத்தாள். 

விலகிச் செல்ல விடாமல் அவனது அருகாமையை மட்டுமே காலம் முழுவதும் ரசித்திருக்க விரும்பினாள். 

ஆனால் அவளையும் மீறி அவளது கோபம் வன்மமாக அவனிடம் வெளிப்ட்டது. 

அதன் விளைவு அவனது முன்னேற்றத்தை தடை செய்து பொருளாதார ரீதியாக அவனை முடக்கி வைப்பது.

காரருகில் வந்து நின்றவன் சுற்றும் பார்த்தான்.

அவளது காரியதரிசி தூரமாக நின்றிருந்தாள். 

வேகமாக அவளருகே சென்று ,  “லீலா..” என்றழைத்தான்.

அவளோ திரும்பி,” சொல்லுங்க சார்..என்ன விஷயம்?” என்றாள்.

சிறிது தயக்கத்துடன், “ ஆருத்ரா மேடத்துக்கு உடம்புக்கு முடியலைன்னு நினைக்கிறேன். ட்ரைவ் பண்ண முடியாது. நீங்க அவங்களை ட்ராப் பண்ணிடுறீங்களா?” என்றான்.

“ ஓ…ஓகே சார். இப்ப மேடம் எங்கயிருக்காங்க?” 

“அவங்க கார்ல் தான் உக்காந்துருக்காங்க. நீங்க ட்ரைவ் பண்ணிடுங்க” என்றான்.

“ ஓ…ஷுயர் சார்..” என்றவள் தாமதிக்கமல் ஆருத்ராவின் காரருகில் வேகமாக சென்றாள்.

அதற்குள் ஆருத்ரா சற்று தெளிந்திருந்தாள். 

பார்வையை வெளிப்புறமாக பதித்திருந்தவளருகே வந்தவள், ”மேடம்…நான் வேணா ட்ரைவ் பண்ணவா?” என்றாள் அவசரமாக.

நிதானமாக  அவளைப் பார்த்துவிட்டு அவள் பின்னால் நின்றிருந்த வாசுவையும் அழுத்தமாக பார்த்தாள.

“ இல்ல…மேடம்…அது வந்து உங்களுக்கு முடியலைன்னு வாசு…சார் தான் சொன்னாரு.‌ அதான் நான் ட்ரைவ் பண்ணவான்னு…” என இழுத்தாள்.

“ தேவையில்ல நீ போ…நான் பாத்துக்குறேன்‌” என்றாள் அழுத்தமாக.

“ இல்ல பரவாயில்ல மேடம்…” என்றவளை பளாரென்று அறைந்தாள்‌.

“அதான்  போன்னு சொல்றேன்ல…கண்ணு முன்னாடி நின்னு உயிரை வாங்காத…போய் தொலை…!” என்றவள் வேகமாக காரை எடுத்தாள்‌.

ரிவர்ஸில் வேகமாக திருப்பிய வளை கண்டு பதறி விலகினாள் லீலா.

‘ ஆத்தாடி…விட்டா எனக்கு காரியம் பண்ணிருப்பாங்களே…!’ என நொந்து கொண்டவள் வாசுவை பார்த்தாள்.

அவனோ ஆருத்ராவின் வேகத்தை கண்டு மூச்செடுக்க மறந்தான்.

அந்த சிறிய இடத்தில் காரினை திருப்புவது கடினமான ஒன்றாகும். 

ஆனால் ஆருத்ராவோ அநாயாசமாக மட்டுமின்றி ஆவேசமாகவும் காரினை திருப்பிக் கொண்டு வந்தவள் அவனருகே வந்து நிறுத்தி,”அவ்வளவு சீக்கிரம் எல்லாம் செத்துகித்து போயிட மாட்டேன். அவ்ளவு  ஈசியாவும் உங்களை விட்டுட மாட்டேன்.”என்றவளின் கைகளில் கார் சீறிப் பாய்ந்தது.

லீலாவை ஒரு பார்வை பார்த்தவன் பெருமூச்சுடன் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

அதி வேகமாக காரை ஒட்டிக்கொண்டு வந்தவள் சிறிது பொறுமையின்றி அதே வேகத்தில் வந்து நின்று வீட்டின் இரும்பு கேட்டின் முன்பு ஒலிப்பானை அலற விட்டாள் .

காவலாளியோ  பதறியடித்து கொண்டு கேட்டினை வேக வேகமாக திறந்து விட்டார். 

அவரை முறைத்து விட்டு உள்ளே நுழைந்தாள்.

“ காரை கேரேஜ்ல விட்டுடுங்க” என்று சாவியை அவரிடம் தூக்கிப்‌ போட்டுவிட்டு தனதறைக்குள் நுழைந்தாள். 

உடையை மாற்றிக் கொண்டு வந்தவள் மெத்தையில் விழுந்தாள். 

தலையணையை எடுத்தவள் உறையினை பிரித்து அதனுள்ளே இருந்த சற்று பெரிய வரைபடத்தை எடுத்துப் பார்த்தாள்.

வாசுவின் கன்னம் இரண்டையும் பிடித்து அழுத்தமாக முத்தம் கொடுப்பது போல இருந்தது . 

அவளது கண்களில் அத்தனை ஆசையும் காதலும் என்றால் அவனது வதனத்தில் அத்தனை கூச்சமும் குழந்தைத்தனமும். 

பெண்ணின் ஆளுமை… காதலில் சற்று அதிகம் இருந்தாலும் அதுவும் ஒரு வகை சுகமே..! அமிர்துமும் நஞ்சாகாத வரை.

எட்டாண்டுகளுக்கு முன்பு…

இரு பாலார் படிக்கும் அந்த பிரம்மாண்டமான கல்லூரி  வளாகத்தில் இருபுறமும் ஓங்கி வளர்ந்திருந்த பன்னீர் புஷ்ப மரங்கள் பாதையெங்கும் பூக்களை தூவியிருந்தது. 

ஆங்காங்கே மாணவ மாணவிகள் நின்று பேசிக்  கொண்டிருந்தனர் .

அங்கு படிக்கும் பெரும்பலான மாணவ மாணவிகள் செல்வந்தர்களின் வீட்டுப்பிள்ளைகள் மட்டுமே.

அக்கல்லூரி வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, மேலாண்மை கல்லூரி என அனைத்தும் இருந்தது. 

ஒருங்கிணைந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக திகழ்ந்தது. 

சுமார் இருநூற்றி ஐம்பது ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக பரந்து விரிந்திருந்தது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் பொறியியல் கல்லூரியும் சற்று அருகருகே அமைந்திருந்தது.

“ நூறு தோப்புக்கரணம் போட்டுட்டு உன் க்ளாஸ்க்கு போ தம்பி…இல்லன்னா எவ்வளவு நேரமானாலும் இன்னைக்கு இங்கயே தான் நின்னுட்டு இருக்கணும். எப்படி வசதி?” என்றா எதிரில் நின்றிருந்தவனை மிரட்டிக் கொண்டு இருந்தாள் ஆருத்ரா.

“அக்கா விட்டுருங்க க்கா..நான் க்ளாஸ்க்கு போயிடுறேன். டைம் ஆச்சுக்கா…” என மன்றாடிக் கொண்டிருந்தான் முதலாம் ஆண்டு படிக்கும் அம்மாணவன்.

“ ஏய்.. ஆரு..! ஏன்டி ஆர்ட்ஸ் காலேஜ் பசங்களை பிடிச்சி வம்பிளுத்துட்டு இருக்க? இன்ஞ்சினிரீங் பசங்களை ராக் பண்ணிணா தான் கிக்கா இருக்கும். இவங்கெல்லாம் பயந்தாங்கொளிங்க டி…” என் நக்கலாக கூறினாள் அவளது தோழியொருத்தி.

“ சும்மா இரு மாது…நம்ப டிபார்ட்மெண்ட் பசங்கயெல்லாம் இப்ப ரொம்பவே விவரமாகிட்டாங்க. சிக்க மாட்டேன்றாங்க. நம்ம நட்புணர்வை கொஞ்சம் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜூலையும் வளர்த்துக்கலாமே!” என்றவள் அம்மாணவனை தோப்புக்கரணம் போட வைத்துவிட்டு தான்‌ அனுப்பினாள்.

அடர் பச்சை நிற குர்தியும் ஜீன்ஸூம் அணிந்து ,அடர்த்தியான குட்டை முடியை தூக்கி போனி டெயில் போட்டிருந்தாள். நெற்றியில் சிறிய கருப்புப் பொட்டு. கையில்   கைக்கடிகாரம் என எளிமையான தோற்றத்தில் தான் இருந்தாள்.

அவள்  அணிந்திருப்பது அனைத்தும் விலையுயரந்த பொருட்க்ளாக இருந்தாலும் அதில் நேர்த்தியுடன் கூடிய எளிமை இருக்கும். 

அவளது பால் வண்ண நிறத்திற்கு அடர் பச்சை நிறம் இன்னும் எடுப்பாக காட்டியது. நீண்ட முகம், கூரிய எடுப்பான நாசி, மெலிதாக உதட்டுச்சாயம் பூசப்பட்ட செம்பவள உதடுகள், சங்கு கழுத்து, சிறுத்த இடை என பிரம்மன்‌ பார்த்துப் பார்த்து செதுக்கிய அழகிய சிற்பம் போயிருந்தாள். 

உதட்டிற்கு கீழிருந்த மச்சம் அவளது அழகிற்கு வைக்கும் திருஷ்டி பொட்டைத் போல அமைந்திருந்தது. 

“ஹய்…ஆரு..! அங்கப் பாரு டி. பாக்க சாதாரணமா இருந்தாலும் ஹேண்டசம்மா…களையா ஒரு பையன். பார்த்தா ஆர்ட்ஸ் காலேஜ் மாதிரி தான் தெரியுது. ஆனாலும் கையில் கருப்பு கயிறு, சாதாரண ஸ்லிப்பர். ம்ம்…இதுவரை நம்ப‌ கண்ணுல படவே இல்லையே டி. யாரு இது?” என்றாள் அவளது தோழி மாதங்கி.

மாதங்கி சொன்னதைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் விழுந்தான் வாசுதேவன்.‌ 

விழிகளை சுருக்கி அவனைப் பார்த்தாள்.

ஆகாய நீல நிற முழுக்கை சட்டையும் கருப்பு நிற ஜீன்ஸூம் அணிந்திருந்தான் . 

அங்கு பயிலும் செல்வந்தர்களின் வீட்டுப் பிள்ளைகள் போல நவ நாகரீக உடையில் இல்லாமல் சாதாரணமாக இருந்தான். 

கையில் இரண்டு பெரிய அளவு நோட்டுகளுடன் வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

பட்டென்று தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தவள் அவன் முன்னே வந்து நின்று கை நீட்டி அவனை நிறுத்தினாள்.

சுற்றிலும் பார்வையை சுழல விட்டபடியே வந்தவன் திடுமென்று தன் முன்னே கைநீட்டி நின்றிருந்தவளை  கண்டு திகைத்தான்.

அவனை தலை முதல் கால் வரை அலசியவள் , “ காலேஜூக்கு புதுசா? பேர் என்ன?” என்றாள்.

அவனோ ,” வாசுதேவன். எம்.காம் ஃபர்ஸ்ட் இயர் சிஸ்டர்.” என்றான் அவளை பார்த்தபடி.

‘சுளுக்’கென்று சிரித்து விட்டாள் மாதங்கி.

அவளை கொலைவெறியுடன் திரும்பி முறைத்து விட்டு , “ஹலோ..! என்ன‌ நக்கலா? என்னைய பார்த்தா உனக்கு அக்கா மாதிரி இருக்கா? இல்ல தங்கச்சி மாதிரி இருக்கா? சிஸ்டர்ன்னு கூப்பிடாத. ஏதோ ஹாஸ்பிட்டல்ல நர்ஸை கூப்பிடுற மாதிரி இருக்குது. கால் மீ ஆருத்ரா.‌ இல்ல ஆரு.‌ ஆமா நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லவே இல்லையே? காலேஜூகக்கு புதுசா ?” என்றாள் அவனை கூர்ந்து பார்த்துக் கொண்டே.

அவனோ தேவையில்லாத வழிசலோ கூச்சமோ பயமோ இன்றி சாதாரணமாகவே  நின்றிருந்தான்.

“ஆமா புதுசு தான் . ஆனா இப்ப நான் பழசு ஆகியாச்சு. அதாங்க சேர்ந்து ஆறு மாசமாச்சே..! அதைச் சொன்னேன்.” என்றான் சின்னச் சிரிப்புடன்.

“ இங்க பாருடா…ஜோக்கடிச்சிட்டாராம். எல்லாரும் சிரிங்க டி. ஷப்பா…முடியல. நாங்க உன்னை கலாயக்கறோமா இல்ல நீ எங்களை கலாய்க்கிறியான்னு தெரியல. ஆமா இங்க இருக்குற எல்லா பசங்களும் ரொம்ப ஸ்மார்ட்டா  டிரெண்டியா ட்ரெஸ்ல வராங்க‌. ஆனா‌ நீ மட்டும் இன்னும் முப்பது வருஷம் பேக்ல இருக்கியே..! பேருக்கு ஜீன்ஸ் அதுவும் ஹைதர் காலத்து மாடல். சாதாரண காட்டன் சர்ட். கால்லயும் ரொம்பவே சாதாரண ஸ்லிப்பர். கொஞ்சம் நீட்டா ட்ரெஸ் பண்ணுன இன்னும் ஹேண்ட்சம்மா இருப்ப மேன்.” என்றாள் ஆருத்ரா.

அவனது தோற்றத்தை பற்றி அவள் விமர்சித்ததை கண்டு அவன் கோபம் கொள்ளவில்லை மாறாக புன்னகை முகமாக நின்றிருந்தான்.

“ ஹலோ..! நான் உன்னை காலாயச்சிட்டு இருக்கேன் நீ என்னடான்னா சிரிச்சிட்டு இருக்க?” என்றாள் சிறு எரிச்சலுடன்.

மெல்ல அவளருகே வந்தவன் அவளைப் பார்த்து கொண்டே,  “ஏன் இந்த ட்ரெஸ்க்கு என்ன குறைச்சல்?. இதுல நிஜமாவே நான் நல்லா இல்லையா?” என்றான் எதார்த்தமாக.

அதுவரை அவனை கேலி செய்து கொண்டிருந்தவள் அவனது குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்து சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.

சீராக வெட்டிய தலைமுடி,  படிய மறுக்கும் கேசம், கூரிய நாசி.  இறுகிய தாடை, கல்மிஷமில்லாத நிமிர்ந்த பார்வை. புன்னகை தவழும் முகம் என்றிருந்தவனின் தோற்றம் முதல்ல பார்வையிலேயே ஆழமாக அவளிதயத்தில் பதிந்து போனது.

அவனது கேள்வியில் ஒரு கணம் திகைத்தவள, “ ஹலோ….! மிஸ்டர் என்ன போட்டுப்‌பாக்குறீங்களா? நீங்க ஹேண்டசமா இருக்கீங்கன்னு எங்க வாயால் சொல்லணும்னு ரொம்ப ஆசைப்படுறீங்க போலவே?” என்று அலட்சியமாக அவனைப் பார்த்தாள்.

தலையை இருபுறமும் ஆட்டிவிட்டு சிரித்தவனின் கன்னத்தில் குழி விழுந்ததை கவனித்தவளுக்கு அதனை தொட்டும் பார்க்க ஆசை வந்ததை எண்ணி திடுக்கிட்டாள்.

எத்தனை வசீகரம் அவனது புன்னகையில் என அவளால் நினையாமல் இருக்க முடியவில்லை.

பதிலுக்கு பதில் வாய் ஓயாமல் பேசபவள் அமைதியாக நின்றிருப்பதை பார்த்த மாதங்கி அவளது தோளில் இடிக்க சட்டென்று சுதாரித்தாள்.

“எதுக்கு சிரிக்குறீங்க?” என்று திடீரென அவளது அழைப்பு பன்மையில் மாறியிருந்ததை கண்டு கொண்டார்கள்‌ மாதங்கியும் வாசுவும். 

சிறு எரிச்சல் மண்டியிருந்தது அவளது குரலில். அது தன்னுடைய தடுமாற்றத்தை மறைக்கவே என்பது அவள் மட்டுமே அறிந்த ரகசியம் .

அவளை தீர்க்கமாக பார்த்தவன் ,  “என்னோட ட்ரெஸ்ல என்ன குறைச்சல்? ட்ரெஸ் பண்றது என்னோட இஷ்டம். ட்ரெஸ்ல பெருசா ஆடம்பரம் இருக்குற மாதிரி எனக்குத் தெரியலை‌‌ . எனக்கு இது தான் கம்ஃபர்ட்டஃபிலா இருக்கு. முப்பது வருஷம் பேக்ல இருந்தா தப்பு கிடையாது . ஆடை சுதந்திரம்ங்கற பேர்ல  அரைகுறையா ட்ரெஸ் போடுட்டு ரொம்பவே முன்னோடியா போறதை விட இது பரவாயில்ல தானே?” என்றான் அழுத்தமாக.

“ரொம்பவே பேசறாப்பலயே?” என மாதங்கி ஆருத்ராவின் காதினை கடித்தாள்.

“ ம்ம்…” என்றவள் அவனை பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள். 

“ எப்பா சாமி…நீங்க எங்க கிட்ட மாட்டல. நாங்க தான்‌ உங்க கிட்ட மாட்டிருக்கோம். இனி ட்ரெஸ்ஸை பத்தி எதுவும் கமெண்ட் பண்ணல. சரி.. சரி..  இதோ எங்க ஆருத்ராவை இம்ப்ரஸ் பண்ற மாதிரி ஒரு பாட்டு பாடி லவ் புரஃபோஸல் ஒண்ணு போட்டுட்டு போங்க…” என்றாள் மாதங்கி.

அதில் திடுக்கிட்ட ஆருத்ரா,” ஏன் டி..? நீ சும்மாவே இருக்க மாட்டியா?” என காய்ந்தாள்.

“ இந்த பாரு…நானும் அப்பவே இருந்து பாக்குறேன். நீ  பேச்சு வார்த்தை தான் நடத்திட்டு இருக்க. ஒண்ணும் பண்ண‌மாட்டேங்கற.. அதான் நானே டைரக்டா கோதால இறங்கிட்டேன்..ம்ம்…சீக்கிரம் மிஸ்டர் வாசுதேவன். ஒரே ஒரு பாட்டு பாடிட்டு ரொமேண்டிக்கா ஆருத்ராக்கு ஒரு புரஃபோசல் போட்டுட்டு போங்க. இன்னைக்கு யாரையும் வம்பிளுக்காம பொழுதே போகலை.” என சலித்துக் கொண்டாள்.

வாசதேவனுக்கு சற்று பதட்டமாக இருந்தது. இரு பாலர் படிக்கும் கல்லூரியில் தான் அவன் தனது இளநிலை படிப்பினை முடித்திருந்தான். 

அக்கல்லூரியில் கட்டுப்பாடுகள் அதிகம் என்பதால் மறைமுகமாக மட்டுமே அங்கு கேலி கிண்டல் இருந்தது.

இங்கோ அனைத்தும் அளவுக்கு அதிகமாக இருந்தது.

தடுமாற்றத்துடன் தான் ஆறு மாதங்களை முடித்திருந்தான். பல மாதங்களாக இது போன்று வம்பிளுக்கும் கூட்டத்திடமிருந்து தப்பியவன் அன்று வசமாக மாட்டிக் கொண்டான்.

அவன் தயக்கத்துடன், “ பாட்டு மட்டும் பாடுறேனே..! ப்ரஃபோசல் வேண்டாமே..!” என்று ஆருத்ராவின் முகம் பார்த்து நின்றான்.

அவனது தயக்கம் ஆருத்ராவிற்கு சுவாரஸ்யமாக இருந்தது.

“இப்ப மாதங்கி சொன்னதை செஞ்சிட்டு தான் இந்த இடத்தை விட்டு நகரணும். ம்ம்.கமான்.. உங்களுடைய பாட்டை கேட்க ஓடோடி வந்த எங்களை ஏமாற்றி விடாதே வாசுதேவ்..ஏமாற்றி விடாதே…!” என்று கூறி சிரித்தவளோடு சேர்ந்து சிரித்தனர்  அவளுடன் இருக்கும் வானரக் கூட்டம்.

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top