பிழை-11

ஹாலில் அமர்ந்து தன்னுடைய ஐம்பத்தி மூன்று இன்ச் தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.

அவளது கெஸ்ட் ஹவுஸிற்கு வந்த ராகவன் அவளருகே வந்து அமர்ந்தார்.

அவரை கண்டு கொள்ளாமல் செய்திகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள்.

“ஆரும்மா…!” என்றழைத்தார் தயக்கத்துடன்.

அவரை கண்டு கொள்ளாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

அவள் பேசமாட்டாள் என்று தெரியும் அவருக்கு. எனவே அவள் கவனிக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை என்று பேச்சை ஆரம்பித்தார்.

“ ஆரும்மா…! ஏன் இப்படி பண்ணுற? நான்‌ உன்னோட நல்லதுக்கு தானே எல்லாம் பண்ணுறேன். இன்னும் அந்த பாழாப்போன காதலை நினைச்சிட்டே இருந்தன்னா உன்னோட வாழ்க்கை கேள்விக்குறியாகிடுமே? உனக்கும் ஒரு நல்லதைப் பண்ணிப்‌ பாக்கணும்னு எங்களுக்கு ஆசையிருக்காதா? சொன்னா கேளு டா. எவ்வளவோ கோடீஸ்வர சம்பந்தமெல்லாம் வருது. நீ தான் பிடிவாதமா கல்யாணமே வேண்டாம்னு இருக்குற. எங்களுக்கும் வயசாகிட்டே போகுது மா.  இதுல மன அழுத்தத்துக்கு மாத்திரை போடுற அளவுக்கு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்குற?” என் வாஞ்சையுடன் அவளது தலையை தடவிக் கொடுத்தார்.

பட்டென்று அவரது கையை தட்டி விட்டுவிட்டு, “ உங்க வேலை என்னவோ அதை‌ மட்டும் பாருங்க. என்‌ வாழ்க்கையை பாத்துக்க எனக்குத் தெரியும்  இனி ஒரு தடவை என் வாழ்க்கைக்குள்ள நுழையணும்ன்னு நினைச்சீங்க….வேற மாதிரி ஆருத்ராவை தான் நீங்க பாப்பீங்க.. ஒரு தடவை….ஒரே ஒரு தடவை உங்களை நம்புனதுக்கு உங்களால முடிஞ்சதை சிறப்பாக செஞ்சிட்டீங்க. இனி கல்யாணம் காது குத்துன்னு பேசிட்டு வாரதீங்க. நீங்க திருந்தவே மாட்டீங்க. இன்னமும் பணம்…பணம்ன்னு ‌பேயா‌ தான் ‌அலையிறீங்க. என் வாழ்க்கையை கைல எடுத்துக்குற ரைட்ஸ் உங்க யாருக்கும் இல்ல. பை…”என ஆத்திரத்துடன் கூறி விட்டு வெளியேறினாள்.

தளர்ந்து போய் அமர்ந்திருந்தார் ராகவன். “ டாடி…டாடி….”என‌ச் சுற்றி சுற்றி வந்தவள் இன்று‌ எதிரியை‌ விட மோசமாக தன்னை‌ப் ‌பார்க்கின்றாள் என்பதே வருத்தமாக இருந்தது. 

எனினும் தனது கௌரவத்தையும் விட மனமில்லை அவருக்கு.

ஆருத்ரா கூறிய கேளிக்கை விருந்திற்கு மறுநாள் மாலை செல்ல வேண்டும். 

மாலை சென்றால் இரவு வர தாமதமாகிவிடும் என்பதால் சந்தியாவிடம் பேச வேண்டும் என நினைத்தான் வாசு.

அனுவின் பாடப்புத்தகங்களை எடுத்து பையில் வைத்துக் கொண்டிருந்தாள் சந்தியா.

“ சந்தியா…நாளைக்கு சாயந்திரம் நீ கொஞ்சம் சீக்கிரமா வர முடியுமா?” என்றான்.

“ ஏன்? எதுக்கு?” என்றாள் நிமிர்ந்து பாராமலேயே.

“ பர்பிள் ரிசார்ட்ல பார்ட்டி அரேன்ஜ் பண்ணிருக்காங்க .‌ போகணும். அதான் ” என்றான்.

அவனை நேராக பார்த்தவள், “அவசியம் போயே ஆகணுமா? இந்த பார்டிக்கு போகலைன்னா தலையை சீவிடுவாளா உங்க மேனேஜர்?” என்றாள்.

“ ம்ம்ச்…அப்படியெல்லாம் இல்லை மா. எல்லாரும் போறாங்க. நான் மட்டும் போகலைன்னா‌ நல்லா இருக்காது. புது ஆர்டர் வந்துருக்கு. அதுக்கான செலிப்ரேஷன் தான். நீ  கொஞ்சம் ஆஃபிஸ்ல இருந்து சீக்கிரமா வந்து அனுவை பாத்துக்கோ. நாளைக்கு ஒரு நாள் மட்டும் ப்ளீஸ்…!” என்றான்.

என்ன நினைத்தாளோ ,” சரி…நாளைக்கு அனுவை அழைச்சிட்டு நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன். காலையில சீக்கிரம் வந்து என்னை பிக்கப் பண்ணிக்கோங்க…” என்றாள்.

“அ…ஆனா…அம்மா தனியா இருப்பாங்களே…சந்தியா?” என்றான்.

“ இவ்வளவு தூரம் உங்களை பார்டிக்கு போக விடுறதே பெருசு. இதுல உங்கம்மாவுக்கெல்லாம் என்னால சேவகம் செய்ய முடியாது. அதுக்கான வழியை நீங்க பாத்துக்கோங்க…” எனக் கறாராக கூறி விட்டாள்.

யோசனையுடன் தாயின் அறைக்குள் நுழைந்தான்.

“அம்மா நாளைக்கு நைட் நான் வர லேட்டாகும். நீங்க கொஞ்சம் நேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறீங்களா? சாயந்திரம் அனுவும் சந்தியாவும் அவங்க அம்மா வீட்டுக்கு போயிடுவாங்க. நாளை கழிச்சு காலையில நான் போய் கூட்டிட்டு வந்துடுறேன். நைட் சாப்பாடுக்கு மட்டும் சுந்தரி அக்காட்ட சொல்லிட்டு போயிடுறேன் ‌மா.” என்றான்‌ தயக்கத்துடன்.

“ பரவாயில்ல வாசு…நீ போயிட்டு வா. நான் பாத்துக்குறேன். கொஞ்ச நேரம் தானே? நான் தனியா இருந்துக்குவேன் பா.” என்றார் கனிவுடன்.

“தேங்க்ஸ் மா…” என்றவன் அவரது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டான்.

உழைத்து உழைத்து உரமேறிய கைகள் இன்று வலுவிழந்து நரம்புகள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு தளர்ந்து போயிருந்தன. 

தனி ஆளாக நின்று அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி இரு பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். 

வாசுதேவனும் சரி திவ்யாவும் சரி இருவருமே படிப்பில் கெட்டி. 

சிறுவயதிலிருந்தே இருவரும் போட்டி போட்டுக் கொண்டு படித்தனர்.‌

அரசாங்கப் பள்ளியில் அரசாங்கம் அளிக்கும் சலுகைகளை உபயோகித்து நன்றாகவே படித்தனர். 

முக்கியமாக வீட்டின் நிலையறிந்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினர்.

கல்லூரியில் கூட தனியார் நிறுவனத்தின் ட்ரஸ்ட் அளித்த ஸ்காலர்ஷிப்பில் படித்து முடித்தனர். 

எவ்வளவோ ஆசைகள் இருந்தும் வீட்டின் சூழ்நிலை‌  காரணமாக அவை நிறைவேறாமல் தான் போனது.

ஆனால் அதை நினைத்து என்றுமே வருத்தப்பட்டதில்லை.

மறுநாள் மாலையில் பர்பிள் கேளிக்கை விடுதியில் அனைவரும் குழுமியிருந்தனர்.

அனைத்து ஏற்பாடுகளையும் சரி பார்த்துக் கொண்டிருந்தான் வாசு.

கருப்பு நிற முழுக்கை சட்டையும் கருப்பு நிற ஜீன்ஸூம் அணிந்திருந்தான் . 

ஆயிரம் பிரச்சனைகள் அவனை சுற்றி இருந்தாலும் முகத்தில் எப்போதும் ஒருவித சாந்தம் குடியிருக்கும். 

தனது விலையுயர்ந்த மெக்லரென் 765LT  ஸ்பைடரில் வந்திறங்கினாள் ஆருத்ரா.

காரின் சாவியை அங்கிருந்த பணியாளரிடம் கொடுத்து விட்டு சுற்றிலும் பார்வையை சுழல விட்டபடியே வந்தாள்.

விருந்து திறந்தவெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அலங்கார விளக்குகளால் அவ்விடமே ஒளிர்ந்தது. அனைத்தும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. இடைவெளி விட்டு இருக்கைகள்  போடப்பட்டிருந்தன.

அனைத்தையும் பார்த்தவளின் முகம் திருப்தியை காட்டியது.

ஏதோ எடுத்துக்கொண்டிருந்த வாசுவின் பார்வை ஏதேச்சையாக ஆருத்ரா மீது படிந்தது.

கருப்பு நிற ஜார்ஜெட்‌ புடவையில் வெள்ளை நிற கற்கள் இருபுறமும் பதிக்கப்பட்டிருந்தது. கையில்லா ரவிக்கை அணிந்திருந்தாள். 

ப்ரத்யேகமான கண்ணை உறுத்தாத வகையில் அவளது அலங்காரம் இருந்தது.

“ எனக்கு பிடிக்காத கலர் என்னத் தெரியுமோ வாசு?”

“ என்ன கலர்?”

“ கருப்பு தான். என்னோட ட்ரெஸ்ல கொஞ்சம் கருப்பு கலர் கலந்திருந்தாலும் அதை தூக்கி போட்டுடுவேன்”

“ ஏன்? அப்படி என்ன அந்த கலர் மேல வெறுப்பு?”

“ அது என்னவோ அந்த கலர் போட்டிருந்தாலே மனசு ஏதோ துக்கமாவோ இல்லை கஷ்டமாவோ…இருக்குற மாதிரி தோணும். சரியா சொல்லத் தெரியல…ஆனா கலர்ஃபுல்லா ட்ரெஸ் போட்டா மனசு ஹேப்பியா…ஜாலியா…இருக்கும்..மே பீ அது என்னோட இல்யூஷனா கூட இருக்கலாம். நான் எனக்கு ஃபீல் ஆகுறதை தான் சொன்னேன்…” என்று தோளைக் குலுக்கி ஒருநாள் அவள் கூறியது செவியில் வந்து மோதியது.

‘கருப்பு கலர்னாலே அவ்வளவு வெறுப்பா இருந்தவ. இப்ப அந்த கலரே கதியா கிடைக்குறா. ம்ம்ச்..மத்தவங்களையும் கஷ்டப்படுத்தி தன்னையும் கஷ்டப்படுத்திக்குறாளே…!’ என அவளுக்காக பரிதாபப்பட்டான்.

அனைவரும் ஆட்டம் பாட்டம் என்றிருந்தனர்.

வாசுவோ ஒரு இருக்கையில் அமர்ந்து நடப்பதனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“ வாசு…ப்ரோ! என்ன அங்க மூலையில போய் உக்காந்துட்டீங்க? வந்து எங்க கூட டான்ஸ் பண்ணுங்க.” என்றான் கூட பணிபுரியும் இளைஞன் ஒருவன்.

“பரவாயில்ல டேவிட்…நீங்க ஆடுங்க.” என்று கூறினான்.

“ அட ப்ரோ…! ஆடலன்னாலும் பரவாயில்ல. ஏதாவது பாட்டாவது பாடுங்க” என்றான் விடாமல்.

வாசுவோ சிரித்தபடி, “ நா பாடுனா எல்லாரும் எழுந்து ஓடிடுவாங்க…பரவாயில்லையா?” என்றான்.

“ ப்ரோ…!” என்றவனது தோளினை தட்டிவிட்டு ,” என்ஜாய் பண்ணுங்க டேவிட்” என்று கூறி வெளியே சென்றான்.

ஆருத்ரா வாசுவை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

சிறிது நேரம் உள்ளே இருந்தவள் வெளியே வந்து நின்றாள்.

சில்லென்று கடற்கரை காற்று முகத்தில் வந்து மோதியது.

முகத்தில் வந்து விழுந்த முடியை ஒதுக்கி வைத்துவிட்டு பார்வையை சுழல விட்டாள்.

சற்று தூரத்தில் ஜீன்ஸ் பேன்டை கணுக்காலுக்கு மேல் சற்று தூக்கி விட்டுக்கொண்டு கடற்கரையில் நின்றிருந்தான் வாசு.

அலைகள் அவனது பாதங்களைத் தொட்டுச் செல்வதை பார்த்துக் கொண்டே அவனருகே சென்று நின்றாள்.

அவனது பார்வை பௌர்ணமி நிலவை வெறித்திருத்திருந்தது. 

கைகளை கட்டிக்கொண்டு நிலவை பார்த்தபடி நின்றிருந்தவனை விழிகளால் ஆராயந்தாள்.

எட்டு வருடங்களுக்கு முன்பிருந்த குழந்தைத்தனமும் வெள்ளந்திச் சிரிப்பும் மறைந்து போய் எப்போதும் ஒரு வித சிந்தனையும் ஆயாசமும் அவனது முகத்தில் குடிகொண்டிருப்பதை அவளால் உணர முடிந்தது. 

அதுவும் யாரேனும் அவனை உற்று பார்த்தால் தான் தெரியும். தனது நெருக்கடிகளையும் இயலாமையை எல்லாம் அவ்வளவு எளிதில் காட்டி விட மாட்டான்.

ஆனால் அவனது நிதானமும் , சகிப்புத்தன்மையும்‌ அமைதியும் அப்படியே தான் இருந்தது. 

பொறுப்புகளும், கடமைகளின் சிந்தனையும் கூட அவனுடைய ஆண்மைக்கு தனி அழகை காட்டியது.

அதனை ரசித்துக்கொண்டே அவனருகே வந்து நின்றவள், “ வர வர பொய்யும் நல்லாவே சொல்றீங்க மிஸ்டர் வாசுதேவன்” என்றாள் அவனை பார்த்துக் கொண்டே .

அவனோ அவளைத் திரும்பியும் பாராமல், “ நீங்க சொல்றது எனக்கு புரியல மேடம்” என்றான் நிலவை பார்த்தபடி.

“ திரும்பி பார்க்க மாட்டீங்களோ?” 

“ என்ன வேணும் மேடம் உங்களுக்கு?” என்று இடைவெட்டினான்.

“ அது சரி…உங்களுக்கு புரிஞ்சாலும் புரியாத மாதிரி தான் பேசுவீங்க. இதோ இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்ன சொன்ன மாதிரி. உங்களுக்கா பாட வராது? ஆனா பாடத் தெரியாதுன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகி இங்க வந்து நின்னுட்டு இருக்கீங்களே…! அதைச் சொன்னேன்.” என்றாள் காற்றில் பறந்த புடவையின் தலைப்பை பிடித்துக் கொண்டே.

அவளை ஒரு கணம் திரும்பி பார்த்தவன் மீண்டும் நிலவை வெறிக்கத் தொடங்கினான். 

தனது ஜீன்ஸ் பேன்டில் இரு கைகளையும் நுழைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

“ ம்ம்ச்…என்ன அமைதியா இருக்கீங்க? கேட்டதுக்கு பதில் வரலையே?”

“ பாடுறத்துக்கு இஷ்டமில்லை…” என்றான் எதையோ நினைத்துக் கொண்டு.

சின்னச் சிரிப்புடன் அவனைப் பார்த்தவள், “ பாடறதுக்கு இஷ்டமில்லையா? நம்புற‌ மாதிரி இல்லையே?”

“ ம்ம்ச்…என்னத் தெரியணும் உங்களுக்கு? கொஞ்ச நேரம் கூட தனியா விட மாட்டீங்களா? எதைப் பத்தி உங்களுக்கு இப்பத் தெரியணும்?” என்றான் கடுப்புடன்.

அவனருகே இன்னும் நெருங்கி வந்து நின்றவள் அவனது கைகளை பிடித்து கொண்டு, “ ஏன் தேவ்? விட்டுட்டு போனீங்க?எவ்வளவு கெஞ்சினேன். கொஞ்சம் வெயிட் பண்ணிருக்கலாமே? உங்களுக்கா பாட வராது. உயிரை உள்ள இருந்து எடுத்து வெளியே போடுற மாதிரி குரல் வளம் உங்களுக்கு. உங்க குரலுக்கு எப்போதும் நான்‌ அடிமை தான்? காலேஜ் டேஸ்லயும் உங்களை நாய் மாதிரி சுத்தி வந்தேன். இதோ…இப்பவும் உங்களையே தான் சுத்தி வர்றேன். நானா வர்றதுனால தான் அவ்வளவு இளக்காராமா போச்சு உங்களுக்கு? இதோ…இதோ…இந்த மாதிரி பௌர்ணமி நிலாவை‌ பாத்துக்கிட்டே எவ்வளவு நாள் அலையில கால் புதைய நின்னுருக்குறோம்? ப்ளீஸ் எனக்காக ஒரே ஒரு பாட்டு மட்டும் பாடுங்களேன்.” என்றவள் அவனது தோளில் சாய‌ முற்பட்டாள்.

சட்டென்று அவளை விட்டு  நகர்ந்தவன் திரும்பி செல்ல எத்தனித்தான். 

அவனது கைகளை பிடித்து தன் புறமாக இழுத்து நிறுத்தினாள். 

அத்தனை வலிமை அவளது கரங்களில். நிலை தடுமாறியவன் கிட்டத்தட்ட அவளை மோதும் அளவிற்கு நெருங்கி நின்றான்.

“ப்ளீஸ் தேவ்…உங்களை ஒரே ஒரு தடவை தொட்டுப் பாத்துக்கிறேனே!” என்றவள் அவனை அணைத்துக் கொள்ள முற்பட்ட போது சடாரென்று அவளை பிடித்து தள்ளி விட்டான்.

நிலைதடுமாறி அலையில் பொத்தென்று விழுந்தாள்.

கடுமையான முகத்துடன், “வேண்டாம் ஆருத்ரா…! என்னை நெருங்க முயற்சி பண்ணாத..! நீ என்னோட கடந்த காலம். அது அப்படியே இருக்கட்டும். இனி என் வாழ்க்கையில நீ எப்பவுமே கிடையாது. எத்தனை தடவை சொல்றது எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கான்னு.நீ இதெல்லாம் புரிஞ்சி பண்ணுறியா? இல்ல புரியாம பண்ணுறியான்னு தெரியலை…என் வாழ்க்கை இனி சந்தியாவோடவும் அனுவோடவும் தான்  பெட்டர் யூ ஸ்டே அவே…! ச்சீ….பொண்ணா டி நீ? போய் உங்கப்பா சொல்ற பையனை பாத்து கல்யாணம் பண்ணிட்டு லைஃப்ல செட்டில் ஆகு. அதை விட்டுட்டு கல்யாணம் ஆனவன் பின்னாடி சுத்திட்டு இருக்க. ச்சை…!” என்று கோபத்தில் தாடை இறுக அவளிடம் கத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

தண்ணீரில் விழுந்தவள் அப்படியே அமர்ந்திருந்தாள். அலைகள் முன்னும் பின்னும் அவளை தள்ளிக்கொண்டே இருந்தது. 

முழுவதுமாக நனைந்து விட்டாள்.

செல்லும் அவனையே ஏக்கத்துடன் பார்த்தாள். 

அழுத்தம் அதிகரித்தது அவளுக்கு. ‘பாழாய் போன காதல் ஏன் தான் இப்படி பைத்தியகாரத்தனமாக வந்து சேர்ந்தது..?’ என ஆயாசமாக இருந்தது.

காலை உதறி விட்டு மணலில் நடந்து சென்றவன் சிறது  தூரம் சென்று திரும்பிப் பார்த்தான்.

தலைமுடி கலைந்து , புடவை கணுக்காலிற்கு மேலேறி  அவன் உதறி விட்ட போது எப்படி விழுந்தாளோ அதே போல் அமர்ந்திருந்தாள். 

நெஞ்சை நீவியபடி அமரந்திருந்தவளின் தோற்றம் அவனை ஏதோ செய்ய வேகமாக அவளருகே வந்தவன் எதைப் பற்றியும் யோசிக்காமல் அவளது கைப்பற்றி தரதரவென இழுத்துக் கொண்டு அவளது கார் நின்றிருந்த இடத்திற்கு வந்தான்.

அவள் இன்னும் அழுத்தமாக நெஞ்சைப் பிடித்துக் கொள்ள அவனது முகம் மாறியது.

“ருத்ரா….என்ன செய்யுது?” என்றான் பதட்டமாக.

‘ஒன்றுமில்லை’ என்பது போல தலையாட்டியவள் ஈரத்துடனே தடுமாறியபடி விடுதியில்  நுழைந்து வேகமாக தனது கைப்பையையும் தண்ணீர் போத்தலையும் எடுத்தாள்.

அவள் பின்னோடு சென்றவன் அவள் என்ன செய்கிறாள் என்று பார்த்தான்.

தனது கைப்பையில் இருந்த மாத்திரையை எடுத்தவள் நடுங்கும் கரங்களால் வாயில் போட்டுக்கொண்டு நாற்காலியில் அமர்ந்து விட்டாள். 

சாய்ந்து அமர்ந்தவள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டே சிறிது நேரம் இருந்தாள்.

அவளருகே வந்து நின்றவன் , ”என்னாச்சு மேடம். உடம்புக்கு எதுவும் சரியில்லையா? டாக்டர் கிட்ட போகலாமா?”என்றான் மிருதுவான குரலில்.

அவனை சலனமற்ற ஒரு பார்வை பார்த்தவள் எதுவும் பேசாமல் எழுந்து சென்றாள்.

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top