பிழை-10

கணவன் கூறியதைக் கேட்ட திவ்யாவிற்கு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபுறம் அவனது தாயின் முன்பு தைரியமாக தன்னை வெளியில் அழைத்துச் செல்ல தயங்கும் கணவனைப் பார்த்து சற்று கடுப்பாக தான் இருந்தது.

திருமணம் ஆனதிலிருந்து இதுவரை இருவரும் தனியாக எங்குமே வெளியில் சென்றதில்லை.

மீறி ஏதாவது கேட்டால்,” அதான் கல்யாணத்துக்கு முன்னாடி இஷ்டத்துக்கு ஊர் சுத்தி வயித்துல பிள்ளையை வாங்கிட்டு வந்தாச்சுல? இன்னும் அப்படியே சுத்தணும்னா என்ன? குடும்பம்னு வந்தாச்சு. போதும் …போதும்.. ரெண்டு பேரும் ஊர் சுத்துனது. போறதா இருந்தா மூணு பேரும் சேர்ந்தே போகலாம். என் பொண்ணு வந்தா அவளையும் அழைச்சிட்டு தான் எங்கனாலும் போகணும். “ என உறுதியாக கூறி விட்டார். 

தேனிலவுக்கு கூட இருவரையும் தனியாக அனுப்ப மனமில்லாமல் ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி தன்னுடனே இருக்க வைத்து விட்டார்.

தாயை எதிர்த்து பேசி பழக்கமில்லாத ப்ரகஷூம் அமைதியாக இருந்தான். 

மசக்கையுடன் திருமணம், வாசுவுடன் மனஸ்தாபம் என பல்வேறு அழுத்தங்கள் சேர்ந்து கொண்டதால் அவளுக்கும் எங்கும் செல்ல விருப்பமில்லை. 

அதன் பின்னர் ஆரோன் பிறந்த பிறகு இன்னமும் மோசம் தான். 

எங்கு சென்றாலும் ப்ரகாஷின் அன்னையும் அவர்களுடனே வந்துவிடுவார்.

இன்று திவ்யாவின் பிறந்தநாள். 

தனது பெரிய மாமியாரின் பேத்தியின் வளைகாப்பிற்கு அவள் செல்ல முடியாத சூழ்நிலை. 

ஆரேனை பள்ளியில் இருந்து அழைத்து வர வேண்டும் என்பதால் அடித்துப் பிடித்து வீட்டிற்கு திரும்ப முடியாது என்பதால் வரவில்லை என்று கூறி விட்டாள். 

பிரகாஷின் தாயாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

அங்கு சென்றாலும் ஏதாவது வம்பிளுக்கும் கூட்டம் ஒன்று இருந்து கொண்டே இருக்கும்.

காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதால் ஏதேனும் ஒன்றைக் கூறி சாந்தியை ஏற்றி விடும் கூட்டம் ஒன்று இருக்கும். 

ஏற்கனவே இரண்டு மூன்று முறை அவர்களிடம் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாகி நின்றதெல்லாம் தனிக்கதை.

கணவன்  பிரகாஷ் தான் அந்த சமயத்திலெல்லாம் ஆறுதலாக இருந்தவன்.

“ பேசறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க திவ்யா. அவங்க பேசுனதை பத்தியே யோசிச்சு நிம்மதியை கெடுத்துக்காத. இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுடு. இன்னைக்கு ஒரு நாள் தானே விட்டுத் தள்ளு . சீக்கிரம் கிளம்பிடலாம்”என்று கூறி அவளை அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றி தனியே அழைத்துச் சென்று விடுவான்

கன்னங்கள் சூடேற கணவனின் வருகையை எண்ணி துணியை மடித்து வைத்து கொண்டிருந்தாள்.

ஆரோனை பள்ளியில் விட்டுவிட்டு திரும்பியவன் கதவினை தாழ் போட்டுவிட்டு வந்தவன் தங்களுடைய அறையினுள் நின்றிருந்த மனைவியை பின்னிருந்து அணைத்துக் கொண்டான். 

“அதுக்குள்ள வந்துட்டீங்க?”

“ ஆமா…இது போல பகல் நேரத்துல  உங்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணி எவ்வளவு நாளாச்சு. கொஞ்சம் நேரம் கழிச்சு வெளியே கிளம்பலாம். இப்ப உனக்கு பர்த்டே கிஃப்ட் தரவா?” என்றான்  மோகமாக.

“ ம்ம்..” என்றாள் கூச்சத்தடன்.

அவளது முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டவன் தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்து சிறிய பெட்டியை எடுத்து திறந்தான். 

கால் கிராமில் அழகிய தங்க மோதிரம் இருந்தது. அதை எடுத்து அவளது விரலில் அணிவித்து  முத்தமிட்டான்.

“ என்ன அய்யா இன்னைக்கு ஒரே ரொமேண்ட்டிக் மூட்ல இருக்கீங்க போல? ஆனாலும் எனக்கு ஒரு சின்ன வருத்தம்.  என்னைக்கு என்னைய உரிமையா உங்க அம்மா முன்னாடியே வெளியே கூட்டிட்டு போகப் போறீங்க? இப்படி திருட்டுத்தனமா பண்றது ஒரு மாதிரி இருக்கு பா” என்றபடி அவனது தோளில் சாய்ந்தாள்.

அவளை அணைத்துக் கொண்டே, “ கவலைப்படாதே…திவ்யா! எல்லாமே ஒரு நாள் மாறும். அம்மாவும் மாறுவாங்க. நாம கல்யாணத்துக்கு முன்னாடியே அவசரப்பட்டதை அவங்களால ஏத்துக்க முடியல.  அவங்க கூட போராடி  உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதை அவங்களால ஜீரணிக்க முடியல. கொஞ்ச நாள் எனக்காக பொறுத்துக்க திவ்யா. அம்மா உன்னை புரிஞ்சிப்பாங்க” என்றான் .

ஒரு பெருமூச்சுடன் “ ம்ம்…” என்று கூறினாள்.

“சரி சீக்கிரம் புதுப்புடவையை உடுத்து. வெளியே கிளம்பலாம்.” என்று கூறி விட்டு கட்டிலில் சட்டமாக அமர்ந்து கொண்டான்.

“ நீங்க வெளியே போங்க பா. அப்ப தான் நான் புடவை உடுத்த முடியும்” என்றாள் கணவனின் கள்ளத்தனத்தை அறிந்து கொண்டே.

அவனோ அவளை முறைத்து விட்டு “ பேர்த் டே பேபி….பேபி ட்ரெஸ்ல தான் இன்னும் அழகா இருப்ப. அதனால…” என்று கூறிக்கொண்டே அவளை நெருங்கியவன் அவளுடன் கட்டிலில் சரிந்தான்.

மோகத்துடன் அவளது முகத்தை தாங்கி இதழ்களை முற்றுகையிட்டான். 

அவள் அணிந்திருந்த ஆடைகளுக்கு விடுதலை அளித்து அழகினை விழிகளால் பருகி அவளை வெட்கப்பட வைத்தான். 

கைக்கொண்டு பெண்மை அழகினை மறைக்க முயன்று தோற்றாள்.

காதலுடன் மோகமும் கூடிய அழகிய தாம்பத்தியம் அங்கே அரங்கேறியது.

இருவரும் மீண்டும் ஒன்றாக குளித்து முடித்து விட்டு சில பல சில்மிஷங்களுடன் வெளியே வந்தனர்.

கண்ணாடி முன்பு நின்று தலையை துவட்டி கொண்டிருந்தாள்.

புதுப் புடவையை உடுத்திக் கொண்டு கூந்தலை விரித்துவிட்டிருந்தாள். 

அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டே சில்மிஷங்கள் செய்து கொண்டிருந்தான்.

மெத்தை மீது இருந்த அவளது அலைப்பேசி ஒலிக்கவே  ப்ரகாஷ் கை நீட்டி எடுத்துப் பார்த்தான். 

வாசு‌தான் அழைத்திருந்தான் .

“வாசுண்ணா தான் டி…பேசு…” என்று அலைப்பேசியை அவளிடம் கெடுத்தான்.

“ம்ம்ச்…வேண்டாம். கட் பண்ணிடுங்க” என்றாள் இறுகிய முகத்துடன்.

“ஆனாலும் ரொம்ப பிடிவாதம் திவ்யா உனக்கு. எங்கம்மாவோட கடுகடுப்பெல்லாம் சாதாரணமா கடந்து போயிடுற . கல்யாணத்துக்கு முன்னாடி உங்கண்ணன் ஏதோ சொல்லிட்டாருன்னு இவ்வளவு வருஷமா பேசாம இருக்க நீ . நீ பேசுனது தப்பு தானே? அவர் பேசுனது தப்புன்னா நீ பேசுனதும் தப்பு தான் திவ்யா”. என்றான்.

“போதும் அவருக்கு சப்போர்ட் பண்ணுறதை நிறுத்துறீங்களா கொஞ்சம்?. நான் ஒண்ணும் தப்பா கேட்கல. அதுக்கு அவர் சொன்ன  வார்த்தை அப்படி. என்னால அதை தாங்கிக்கவே முடியல. அவரு எனக்கு எவ்வளவோ நல்லது பண்ணிருக்காரு. ஆனா அவரு சொன்ன ஒத்த வார்த்தை என்னோட பாசத்தையே கேள்விக்குறியாக்கின மாதிரி இருந்தது. ப்ளீஸ்…வேற எது வேணாலும் சொல்லுங்க நான் கேட்கிறேன். ஆனா…இந்த விஷயத்துல என்னை கம்பெல் பண்ணாதீங்க . விட்டுடுங்க.” என்றவள் தலையை பின்ன ஆரம்பித்தாள்.

அவளது அலைப்பேசி அடித்து ஓய்ந்து முடித்ததும் ப்ரகாஷின் அலைப்பேசி அலறியது.

எடுத்துப் பார்த்தான் வாசு தான் அழைத்திருந்தான்.

ஒரு பெருமூச்சுடன் எடுத்து காதில் வைத்தவன், “ சொல்லுங்க வாசு…எப்படியிருக்கீங்க? சந்தியாவும் அனுவும் எப்படி இருக்காங்க ?” என்றான்.

“ ம்ம்…நல்லா இருக்காங்க ப்ரகாஷ். எப்பவும் போல திவ்யாக்கு ஃபோன் அடிச்சேன். ‌எடுக்கவேயில்ல. என்னோட விஷ்ஷஸை அவளுக்கு சொல்லிடுங்க. ரொம்ப கஷ்டமாக இருக்கு ப்ரகாஷ். இன்னும் எவ்வளவு வருஷம் என்மேல கோவத்தை இழுத்து வச்சிட்டு இருக்கப்போறா? ஒவ்வொரு பிறந்தநாளைக்கும் அவளுக்கு ஏதாவது சர்ப்ரைஸா கிஃப்ட் அனுப்புவேன். அதுவும் வேண்டாம்னு திருப்பி அனுப்பிச்சிடுறா. அவ பழைய திவ்யாவா என் கூட பேச மாட்டாளா? உரிமையா சண்டை‌ அது வேணும் இது வேணும்ன்னு கேக்க மாட்டாளான்னு ஆசையா இருக்கு.” என வருத்தத்துடன் கூறினான்‌.

“கவலைப்படாதீங்க வாசு. நிச்சயமா அவ உங்களை ஒரு நாள் புரிஞ்சிப்பா…” என்று கூறி கொண்டிருக்கும் போதே, “கோவிலுக்கு போலாமா? நேரமாச்சு.” என்றாள் திவ்யா.

மறுபுறம் இருந்த வாசுவிற்கும் திவ்யாவின் குரல் கேட்டது.

“ஓ…வீட்டுல தான் இருக்கீங்களா? சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்றான் வாசு.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. அம்மா வெளியே போயிருக்காங்க. நானும் இன்னொரு லீவு போட்டுருக்கேன். அதான் வெளியே போகலாம்னு …” என்று‌ இழுத்தான்.

ஒரு சின்ன சிரிப்புடன், “ ஓகே ஓகே…நீங்க கோவிலுக்கு கிளம்புங்க. நான் அப்புறமா பேசுறேன் “ என வைத்து விட்டான்.

திவ்யாவை அழைத்துக் கொண்டு ப்ரகாஷ் வெளியே கிளம்பி விட்டான்.

முதலில்  இருவரும் இணைந்து கோவிலுக்கு சென்றனர்.

மல்லிகை பூ என்றால் அவளுக்கு கொள்ளை இஷ்டம். தலை முடியும் அடர்த்தியாக இடை தாண்டி இருக்கும் .

நன்றாக நெருங்கிக் கட்டிய மல்லிகை சரத்தை வாங்கி வைத்து விட்டான் அவளுக்கு.

இருவரும் கைகளை கோர்த்து கொண்டு வெளியே வந்தனர்.

மனம் நிறைவாக இருந்து திவ்யாவிற்கு. 

மேலும் கடைக்கு அழைத்துச் சென்று அவள் மறுக்க மறுக்க புதிய புடவைகளும் , சுடிதாரும் எடுத்துக் கொடுத்தான். 

“ வெஸ்டர்ன் வியர் எடுத்துக்கோ திவ்யா “ என்றான்.

அதனைக் கேட்ட அவளது முகம் சுருங்கியது.

“ இவ்வளவு வாங்கித் தர்றீங்க. ஆனா இதையெல்லாம் நான் உங்கம்மா முன்னாடியோ இல்லை உங்க தங்கச்சி முன்னாடியோ தைரியமா போட்டுட்டு வர முடியுமா? இல்ல உங்களால தான் ‘என் பொண்டாட்டி புதுசு போட்டா உங்களுக்கென்னன்னு’ கேக்க முடியுமா? இதெல்லாம் நடக்காதப்ப நான் இவ்வளவு ட்ரெஸ் வாங்கி என்ன பண்ணுறது? உங்கம்மா சொல்லுற மாதிரி நான் வீட்டுல தானே இருக்கேன். வீட்டுல இருக்குறவளுக்கு எதுக்கு இவ்வளவு ட்ரெஸ்? அதுவும் தேவையில்லாம வெஸ்டர்ன் வியர் வேற. வேண்டாம் ப்ரகாஷ். எனக்கு ரெண்டு ட்ரெஸ் மட்டும் போதும். வேற எதுவும் வேணாம்” என்று கூறி பேக் செய்ய சொன்னாள்.

அவளது வார்த்தைகளில் அத்தனை வலி இருந்தது.‌ 

ப்ரகாஷிடம் அவளின் கேள்விகளுக்கு பதில் இல்லை. 

தாயை எதிர்த்து பேச மாட்டான்.. 

திவ்யா ஏதேனும் புதிதாக அணிந்து விட்டாள் ப்ரகாஷின் தாயார் வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடுவார்.

“ என் பையன் சம்பாதிக்கற பணத்தையெல்லாம் இப்படி துணிவு போட்டா எப்படி வீடு உருப்படும்? பையனை பெத்து வச்சிருக்க . அவனுக்கு நாளைக்கு படிப்பு செலவு மற்ற செலவெல்லாம் இருக்குல்ல..? இப்படி பொறுப்பில்லாம செலவு பண்ணச் சொல்லி தான் உங்க வீட்ல வளர்த்து வச்சிருக்காங்களா? அதுவும் வீட்டுல சும்மாயிருக்கறவளுக்கு எதுக்கு புதுசு? “ என்று கூறுவார்.

சந்தியாவோ மாதத்திற்கு ஏழெட்டுப் புடவை, சுரிதார், வெஸ்டர்ன் வியர் டாப்ஸ் என வாங்கிக் குவிப்பாள். 

ஆனால் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பார்.

மனம் தாளாமல் கேட்டுவிட்டால், “அவ வேலைக்குப் போறா. நாலு பேர் கூட பேசிப் பழகும் இடம். அந்த இடத்துக்கு தகுந்த மாதிரி தான் அவ உடுப்பு உடுத்தணும். எல்லாத்தையும் என் பொண்ணு கூட போட்டி போடாத சரியா? அதுக்கு ஒரு தகுதி வேணும். என் பொண்ணை நான் அப்படி வளர்த்து வச்சிருக்கேன். உன்னை மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடியே புள்ளைய வாங்கிட்டு வரல அவ.” என குத்திக் கிழிப்பார் அவளது மனதை.

காதலிக்கும் போதே இருவரும் வரம்பு மீறி விட்டனர் தான். 

தவறு தான். ஆனால் அதையே வாழ்நாள் முழுவதும் குத்திக் கொண்டிருந்தால் என்ன செய்வது?. 

தவறு இருவரின் மீதிருந்தாலும் அதிகம் காயப்பட்டு போவது பெண் தான். அவளது நடத்தையையே கேள்விக்குறியாக்கி விடுகின்றனர். 

இவற்றை எண்ணிதான் திவ்யா அவனிடம் எதுவும் வேண்டாம் என மறுத்துவிட்டாள். 

மதிய உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டனர்.

சிறிது நேரம் உறங்கி எழூந்தவள் கணவன் அணிவித்த மோதிரத்தை கழற்றி உள்ளே வைத்துவிட்டாள்

“ ஏன் அதுக்குள்ள கழட்டிட்ட?” 

“ வேஷத்தை கலைச்சிடணும்ங்க. இல்லன்னா அத்தை வந்து அது ஏது? இது ஏதுன்னு கேப்பாங்கயில்லையா? அதுக்குத்தான் . நீங்க ஆரோனை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வந்துடுங்க. நான் புடடுக்கு மாவு ரெடி பண்ணுறேன். வந்து டீ குடிக்கிறீங்களா?” என்றாள்.

சாதாரணமாக பேசினாலும் அவளது உள்ளம் எந்தளவிற்கு கொந்தளித்துக் கொண்டிருக்கின்றது என்பதை உணர முடிந்தது அவனால். 

அவளது இயல்பே சண்டைக் கோழியாக சிலிர்த்துக் கொண்டு நிற்பது தான். 

இன்று அவளது நிலை தலைகீழாக இருந்ததையெண்ணி அவனுக்கு வருத்தமாக தான் இருந்தது.

ஒரு சில வருத்தங்கள் இருந்தாலும் அன்றைய தினம் இருவருக்கும் இனிமையை கொடுத்தது என்பது உண்மையே. நீண்ட நாட்களுக்கு பிறகு இருவருக்கான தனிமை மனதில் இதத்தை பரப்பியிருந்தது.

இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்துக் கொண்டவன்,“ ம்ம்…நான் ஆரேனை கூட்டிட்டு வந்து டீ குடிச்சிக்குறேன் “ என்று கூறி விட்டுச் சென்றான்.

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top