தந்தையின் பேச்சைக் கேட்ட அனுவின் முகமோ சுருங்கிப் போனது.
ஆசையாக நூடில்ஸ் சாப்பிடலாம் என்றிருந்தவளுக்கு தந்தையின் பேச்சு முகத்தை சுருங்க வைத்தது.
“அப்பா…அப்பா.. ப்ளீஸ் அப்பா..யம்மி நூடில்ஸ் வேணும் பா. தோசை வேணாம்.” என்றாள் அழும் குரலில்.
முகத்தை தூககி வத்துக் கொண்டு நிற்கும் குழந்தையினருகே மண்டியிட்டு அமர்ந்தவன் ,” அனு குட்டி…அப்பா சொன்னா கேப்பீங்க தானே?” என்றவன் அவளது முகத்தை தன் புறம் திருப்பினான்.
அனுவோட அவனது கைகளை தட்டிவிட்டு விட்டு திரும்பி நின்று கொண்டாள்.
மகளின் கோபத்தை பார்த்தவனுக்கு இதழில் புன்னகை தோன்றியது..
“ சரிப்பா…யாரும் என் கூட பேச வேண்டாம். இந்த சண்டே நானும் அம்மாவும் மட்டும் போட்டிங் போகப் போறோம். அப்பறம் ஹார்ஸ் ரைடிங் போயிட்டு அப்படியே பார்ஃபி டால் வாங்கப் போறோம். அதுவும் பிங்க் கலர் பிக் பார்ஃபி கேர்ள் வாங்கப் போறோம் பா. என் மேல கோபமா இருக்குறவங்க வர வேண்டாம். அவங்க நூடில்ஸே சாப்பிடட்டும் தோசை வேணாம். ஜாலியா பைக் ரைட் கூட போகப் போறோம் பா.” என்றான்.
அவன் பட்டியலிட்ட விஷயங்கள் அனைத்தும் அனுவிற்கு மிகவும் பிடித்தவை. தந்தை பேசப் பேச அனுவின் கண்கள் விரிந்து கொண்டது.
வெடுக்கென்று தன் தாயின் புறம் திரும்பியவள் , “ நானு தோசையே சாப்பிடுறேன். நீங்க நூடில்ஸ் சாப்பிடுங்க.” என அவசரமாக கூறியவள் தந்தையின் அருகில் சென்று,” சீக்கிரம் தோசை ஊத்தி தாங்கப்பா…பசிக்குது.” என வயிற்றைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.
சந்தியாவோ ,“ ம்ம்கூம்…இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை” என நொடித்துக் கொண்டே தனக்கான ஆர்டரை ஸ்விஃக்கியில் போட்டு விட்டாள்.
அதுவோ வந்து சேர நாற்பதைந்து நிமிடங்கள் என காட்டியது.
அதைப் பார்த்தவளுக்கு சலிப்பாக இருந்தது. அலைப்பேசியை வைத்துவிட்டு உடை மாற்றிக் கொண்டு வந்தவள் அலைப்பேசியை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்று விட்டாள்.
வாசுவோ தோசை ஊற்றி அனுவிற்கும் தாயிற்கும் கொடுத்து விட்டு தானும் உண்டு விட்டு சமையலறையை சுத்தம் செய்து விட்டு வந்தான்.
சோஃபாவில் அமர்ந்திருந்த அனுவோ தந்தையுடன் ஞாயிற்றுக்கிழமை வெளியே செல்வதைப் பற்றி விவாதிக்க தொடங்கினாள்.
வாசுவும் மகளுடன் பேசிக் கொண்டு இருந்தான்.
சிறிது நேரத்தில் சந்தியா ஆர்டர் செய்திருந்த உணவு வந்து விட அதனை வாங்கி உணவு மேசையில் வைத்து விட்டு மகளுடன் பேசிக் கொண்டிருந்தான்.
கீழே இறங்கி வந்த சந்தியா, “வந்துடுச்சுன்னு ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல…நீங்க மட்டும் நல்லா மூக்கு முட்ட சாப்பிட்டீங்க. நான் சாப்பிட்டா என்ன சாப்பிடலைன்னா உங்களுக்கென்ன. உங்க வேலை முடிஞ்சதுல்ல. அதான் அமுக்குணி மாதிரி உக்காந்துட்டு இருக்கீங்க.” என்றபடி உணவை பிரித்து வேக வேகமாக உண்ணத் துவங்கினாள்.
வாசுவோ அவளை ஒரு வெற்று பார்வை பார்த்தானே ஒழிய பதிலேதும் பேசவில்லை.
சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் வாசு எதுவும் பதில் கூறாததால் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவனோ அனுவின் தலையை வருடிக் கொண்டிருந்தான்.
மடியில் தலை வைத்தபடியே தாயை பார்த்தாள் அனு.
“ என்ன டி வேணுமா? “ என்றாள்.
“ ம்கூம்..” எனத் தலையாட்டியவள் தந்தையின் மடியில் நன்றாக தலை வத்து படுத்துக் கொண்டாள் சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டாள்.
அவளை மெதுவாக தூக்கிக் கொண்டு தங்களுடைய அறைக்குள் சென்று படுக்க வைத்தான்..
விளக்கை அணைத்து விட்டு உள்ளே நுழைந்தாள் சந்தியா.
“ ஒரு நிமிஷம் சந்தியா. உன் கிட்ட பேசணும்.”என்றான்.
“ ம்ம்ச்…ஆரம்பிச்சிட்டீங்களா? என்னன்னு சீக்கிரம் சொல்லுங்க. எனக்குத் தூக்கம் வருது.” என்றாள்
“ ஆர் யூ ஓகே?”
“புரியலை?”
“ நீ நல்லா தானே இருக்க? “
“ ஏன் என்னைப் பார்த்தா எப்படி இருக்குது?. இல்ல புரியல.. உங்களுக்கு என்ன வேணும்?எதுவா இருந்தாலும் நேரா பேசுங்க”
‘ஊப்..’ என பெருமூச்சு விட்டவன், “இன்னைக்கு காலையில வேலை விஷயமா உங்க ஆஃபிஸ் பக்கமா வந்துருந்தேன். ஆனா ஆஃபிஸ்ல நீ இல்ல. ஏதோ உடம்பு சரியில்லைன்னு லீவ் போட்டுட்டு போயிருக்கன்னு சொன்னாங்க. அதான் உடம்பு ஏதாவது முடியலையான்னு கேட்டேன்.” என முடிப்பதற்குள்,” என்னை சந்தேகப்படுறீங்களா?” என்றாள் அழுத்தமாக.
“ ம்ம்ச்…கொஞ்சம் என்னை பேச விடேன். நா அந்த அர்த்தத்துல கேக்கல. உனக்கு உடம்பு முடியலைன்னதும் என்ன ஏதுன்னு கேக்கதான் ஃபோன் பண்ணுனேன். நீ ஃபோனையும் எடுக்கல வீட்டுக்கும் வரலையேன்னு தான் கேட்டேன்.” என்றான் ஆதங்கத்துடன்.
“ ம்ம்ச்…நீங்க அப்படி கேட்ட மாதிரி தெரியலையே? என்கொய்ரி பண்ணுற மாதிரில்ல விசாரிக்குறீங்க..இப்படி தான் நைட் பத்து மணிக்கு விசாரணை பண்ணிட்டு இருப்பீங்களா?”
“ ம்ம்ச்…இங்க பாரு சந்தியா. எல்லாத்தையும் தப்பான கோணத்துலயே பாக்காத. மாசாமாசம் உடம்பு சரியில்லைன்னு லீவ் போட்டுட்டு போயிடறன்னு உங்க ஆஃபிஸ்ல உள்ளவங்க தான் சொன்னாங்க. அதைப் பத்தி நீ என்கிட்ட ஒரு வார்த்தை பேசுறது இல்லை. உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா இருந்தா டாக்டரை போய் பார்க்கலாமே..! அதுக்குத்தான் கேட்டேன். உன் மேல உள்ள அக்கறையில கேட்டது குத்தமா?” என்றான்.
“ அடாடா…என்னமா பேசுறீங்க? இப்ப என்ன …இன்னைக்கு நா லீவ் போட்டுட்டு எங்க ஊர் சுத்த போறேன்னு உங்களுக்கு தெரியணும் அதானே? அதுக்குத்தான் இப்படி தலையை சுத்தி மூக்கைத் தொடுறீங்க? எனக்கு பீரியட்ஸ் ஆகிடுச்சு.வயித்து வலி தாங்க முடியல. அதான் லீவ் போட்டுட்டு எங்கம்மா வீட்டுக்கு போயிட்டு வந்தேன். சந்தேகமா இருந்தா போன் பண்ணி கேட்டுக்கோங்க. மாசா மாசம் அங்க தான் போறேன். இங்க வந்தா ரெஸ்ட் எடுக்க முடியாது அதான் அம்மா வீட்டுக்கு போனேன். உங்களுக்கு இந்த விளக்கம் போதுமா? ஷ்ஷ்ப்பா …சத்தியமா என்னால முடியல. எவ்வளவு வருஷம் ஆனாலும் இந்த ஆம்பிளைக்கு சந்தேகப் புத்தி மட்டும் போகவே போகாது. ச்சை..நகருங்க நான் தூங்கணும்” என்றவள் கட்டிலின் மறுபுறம் வந்து படுத்துக் கொண்டாள்.
விளக்கை அணைத்தவன் அனுவின் அருகில் படுத்துக் கொண்டான்.
வழக்கம் போல அவன் மீது காலைப் போட்டுட்டு கொண்டாள் அனு.
அவளது பிஞ்சு பாதங்களை பிடித்து விட்டுக் கொண்டே உறங்கிக் போனான் வாசு.
வாசுவின் தங்கை திவ்யா தனது மகன் ஆரோனை பள்ளிக்கு கிளப்பிக் கொண்டிருந்தாள்.
“இங்க பாரு இன்னைக்கு எங்கக்காவோட பேத்தி வளைகாப்புக்கு போறேன். ராத்திரி வர்றதுக்கு நேரமாகும் . மதியத்துக்கும் ராவுக்கும் எனக்கு எதுவும் சமைக்க வேணாம். நாளை காலையில புட்டுக்கு மாவை சரி பண்ணி வச்சிடு. நாளைக்கு காலையிலக்கு புட்டும் கடலைக் கறியும் பண்ணிடு. நாளைக்கு ராவுக்கு சப்பாத்தியும் சிக்கன் குருமாவும் பண்ணிடு. எம் பொண்ணு வருவா நாளைக்கு.” என்ற படியே சோஃபாவில் அமர்ந்தார்.
“அத்தை நாளைக்கு ஆரோன் ஸ்கூலுக்கு சீக்கிரம் போகணும். காலையிலக்கு இட்லி வச்சிடுறேன். நைட்டுக்கு வேணா கடலைக் கறியும் புட்டும் பண்ணிடுறேன்” என்றாள்.
“ ஏன் காலையில் கொஞ்சம் சீக்கிரமா எழுந்து பண்ண வலிக்குதா உனக்கு. அதெல்லாம் எனக்குத் தெரியாது. நைட்டுக்கு சப்பாத்தியும் சிக்கன் குருமாவும் தான் வைக்கணும். காலையில நான் சொன்னதை பண்ணிட்டு நீ எங்க வேணாலும் போயிக்க” என்று கூறி விட்டு விசேஷ வீட்டிற்கு கிளம்பி விட்டார்.
ஒரு பெருமூச்சுடன் ஆரேனை கிளப்பியவள் கணவனைப் பார்த்தாள்.
பிரகாஷ் ஆரோனை தூக்கிக் கொண்டு, “ ஆரோனை விட்டுட்டு வந்துடுறேன். ரெடியா இரு. வெளியே போகலாம்.” என்றான்.
கண்கள் மின்ன, “ நிஜமாவா? அப்ப ஆஃபிஸ்க்கு?” என்றாள்.
“இன்னைக்கு உன்னோட பிறந்தநாள் ஆச்சே. அதான் லீவ் போட்ருக்கேன். இன்னைக்குன்னு அம்மாவும் வெளியே போகணும்னு சொல்லிட்டு இருந்தாங்க அதான்… நல்லதா போச்சு. நீ புடவை கட்டாத . நான் ஆரோனை விட்டுட்டு வந்து உனக்கு கட்டிவிடுறேன்.” என கண் சிமிட்டி விட்டுச் சென்றான்.