இணை 4

ஒரு வாரத்திற்கு பிறகு,

 

அலுவலகத்தில் வேலையில் மூழ்கியிருந்த ஆர்யனின் கைப்பேசி அலறியது. எடுத்து பார்த்தபோது புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது.

 

“ஹலோ, ஆர்யன் ஸ்பீக்கீங்” என்றான் சுவாரசியமின்றி

 

எதிர்புறம், “ஹலோ நான் அகல்விழி, செழியனோட தங்கச்சி”

 

புருவமுடிச்சுடன், “யெஸ், சொல்லுங்க”

 

அவனை என்னவென்று அழைப்பது என்று ஒரு நிமிடம் குழம்பியவள், “சார் எதாச்சும் உதவி தேவைப்பட்டா போன் பண்ண சொன்னீங்களே”

 

“ஆமா, என்ன உதவி தேவைனு தயங்காம சொல்லுமா” என்றான் மென்மையான குரலில் 

 

“எங்க காலேஜ்ல ஒரு பிரச்சனை ஆயிடுச்சு.‌ அண்ணனுக்கு சொன்னா உடனே வந்துரும். ஆனா அண்ணாவ எல்லாரும் நிக்க வச்சு கேள்வி கேப்பாங்களேனு யோசனையா இருக்கு. அதான் என்ன பண்றதுன்னு தெரியாம உங்களுக்கு போன் பண்ணேன்” 

 

“அவரை ஏன் நிக்க வச்சு கேள்வி கேட்க போறாங்க?” என்றான் ஆர்யன் குழப்பமாக 

 

“தப்பு எங்க பேர்ல இருந்தா, எங்க அண்ணனை தானே கேள்வி கேப்பாங்க?” 

 

“அப்படி என்ன தப்பு பண்றீங்க?” 

 

“நேர்ல வந்தா விவரமா சொல்றேன். உடனே கிளம்பி காலேஜ்க்கு வர முடியுமா சார்? வீட்ல இருக்குற பெரியவங்கள உடனே வர சொல்லுனு பிரின்சிபால் சொல்லிட்டே இருக்காங்க.‌ நான் சென்னையில் மாமா இருக்கிறதா சொல்லி இருக்கேன். நீங்க அதையே ஃபாலோ பண்ணிக்கோங்க”

 

“சரி உடனே வரேன்” என்று போனை வைத்தவன் உடனே கல்லூரிக்கு கிளம்பினான். 

 

அடுத்த பத்தாவது நிமிடத்தில் கல்லூரி முதல்வர் அறையை நோக்கி வந்து கொண்டிருந்த ஆர்யனை கண்டதும் அறையின் வாசல் அருகே நின்றிருந்த அகல்விழி உள்ளே சென்று, “எங்க மாமா வந்துட்டார் சார்” என்றாள் முதல்வரிடம். 

 

அறைக்குள் நுழைந்த ஆர்யனை கண்டதும், “ஆர்யன்! நீங்களா? நீங்களா இந்த பொண்ணுங்களுக்கு மாமா?” என்று ஆச்சரியமாக கேட்டார் கல்லூரி முதல்வர்.

 

“எஸ் சார்? என்ன விஷயம்?” என்றபடி வளர்மதியை பார்த்தான்.  அவளோ கைகளை கட்டிக்கொண்டு இறுக்கமான முகத்துடன் நின்று இருந்தாள். 

 

“என்ன விஷயமா? பொண்ணுங்க தற்காப்புக்காக சிலம்பம் சண்டை எல்லாம் கத்துக்கிறது நல்ல விஷயம் தான்.‌ தன்னோட திறமையை காட்டி போட்டியில பரிசு வாங்கறதோட நிறுத்திக்கணும்.‌ அத விட்டுட்டு எனக்கும் சண்டை போடத் தெரியும்னு காலேஜுக்கு வர போற பசங்கள அடிச்சு இப்படி மண்டைய உடைச்சா எப்படி சார்?” என்று அவர் காண்பித்த திசையில் பார்த்தான். 

 

ஒரு இளைஞன் தலையில் கட்டு போடப்பட்டிருந்தது.‌ கண்களைச் சுற்றி வீக்கம் கன்னத்தின் ஒரு பக்கம் வேறு நன்றாக வீங்கி இருந்தது. வலக்கையில் கட்டும் போடப்பட்டிருந்தது. 

 

“அச்சோ” ஆர்யன் உண்மையாகவே பதறினான். 

 

“பாக்குற உங்களுக்கே இவ்ளோ பதட்டமா இருக்கே? இவனை பெத்தவ எனக்கு எவ்வளவு பதட்டமா இருந்திருக்கும்? தலையில அஞ்சு தையல் போட்டு இருக்கு.‌ இன்னும் விஷயம் அவனோட அப்பாவுக்கு தெரியாது. தெரிஞ்சா என்ன நடக்கும்னு தெரியாது. கொலை முயற்சினு கேஸ் கொடுக்கப் போறேன்னு பிரின்ஸ்பால்கிட்ட சொன்னா அவர் காலேஜ் prestige போயிரும் அது இதுன்னு சொல்லி எங்களை காம்ப்ரமைஸ்க்கு கூட்டிட்டு வந்து உட்கார வைச்சிருக்காரு” என்று பொறுமினார் அவனின் தாய்.

 

ஆர்யன் வளர்மதியின் அருகில் வந்து, “அவன் எந்த தப்பும் பண்ணாம நீங்க அடிச்சிருக்க மாட்டீங்கன்னு தெரியும். என்ன பண்ணான்னு தைரியமா சொல்லுங்க. நான் பேசிக்கிறேன்” என்றான் ஆர்யன்.

 

அவளோ தயக்கத்துடன் அகல்விழியை பார்க்க, அவள் வளர்மதியை முறைத்து, “அவர் மேல எந்த தப்பும் இல்லைனு தான் எனக்கு தோணுது. என்ன ஏதுனு விசாரிக்கறதுக்குள்ள அக்கா தான் அவசரப்பட்டு அவர அடி வெளுத்துட்டா”

 

“என்ன நடந்துச்சுன்னு புரியிற மாதிரி சொல்லுங்க” 

 

“அவர் இந்த காலேஜோட பழைய ஸ்டுடென்ட் போல. நேத்து நடந்த அலுமினி டேக்கு (Alumni Day) பிரெண்ட்ஸோட வந்திருக்காரு.‌ ஈவ்னிங் அவரோட ஃப்ரெண்ட்ஸ்ங்களோட வந்து காலேஜ் கிரவுண்ட்ல போட்டோ எடுத்துட்டு இருந்தாரு. நானும் அக்காவும் அந்தப்பக்கமா வந்தப்போ கிரவுண்ட்ல விளையாடிட்டு இருக்குற பொண்ணுங்கள தப்பா போட்டோ எடுக்குற மாதிரி தெரியுதுனு அக்கா சொல்லுச்சு.‌ விசாரிக்கலாம்னு தான் போனோம். அக்கா அவர் கிட்ட கேமராவை கொடுக்க சொல்லி கேட்டா.‌ அவர் நான் ஏன் உன்கிட்ட கேமராவ கொடுக்கணும்னு இவகிட்ட தகராறு பண்ணாரு. அதுல இவளுக்கு சந்தேகமாயிருச்சு. பேசிட்டு இருக்கும் போதே அடி வெளுத்துட்டா.‌ இவங்க சண்டைக்கு நடுவுல நான் அவர் கையில் இருக்கிற கேமராவை வாங்கி பார்த்தேன். அதே கிரவுண்ட்ல மரத்தடியில நின்னுட்டு இருந்த அவரோட ஃப்ரெண்ட்ஸுங்கள தான் போட்டோ எடுத்து இருக்காரு.‌ வேறந்த போட்டோவும் அதில இல்ல. நானும் அவரோட ஃப்ரெண்ட்ஸும் சுதாரிச்சு அக்காவ தடுக்குறதுக்குள்ள அவர் மண்டைய பொளந்துட்டா”

 

அவள் சொன்ன விதத்தில் ஆர்யனுக்கு சிரிப்பு வந்தாலும் நிலைமையை கருத்தில் கொண்டு தன் சிரிப்பை அடக்கியபடி வளர்மதியை பார்த்தான் 

 

அத்தனை நேரம் அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் போலும்.‌ அவன் திரும்பி அவளை பார்க்கவும் சட்டென பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

 

“ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது தான். அதுக்காக அப்பாவி பையன போட்டு அடிச்சா எப்படி ஆர்யன்? இப்ப அவங்க பேரண்ட்ஸ்க்கு நான் என்ன பதில் சொல்றது? கம்ப்ளைன்ட் கொடுக்க போறோம்னு நிக்கிறாங்க.‌ அதான் இவங்களோட பேரண்ட்ஸ் வர சொன்னேன் அவங்க உங்களை வர வச்சிருக்காங்க” என்றார் கல்லூரி முதல்வர் 

 

“சார் அவங்களுக்கு பதிலா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.‌ ட்ரீட்மென்ட்க்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அவங்க கேக்குற தொகைக்கு மேலேயே கொடுத்துடறேன்” 

 

“பணத்தை கொடுத்து சரி கட்டலாம்னு பாக்குறீங்களா? எங்களை ஒன்னும் இல்லாதவங்க நினைச்சீங்களா?” தலையில் அடி வாங்கியவனிடமிருந்து சீறிக்கொண்டு வந்தன வார்த்தைகள். 

 

“சாரி மிஸ்டர். நான் அப்படி சொல்ல வரல.‌ பிரச்சனையை சுமுகமா முடிக்கணும்னு யோசிச்சு தான் அப்படி சொன்னேன்.‌ நீங்களே என்ன பண்ணலாம்னு சொல்லுங்க” என்றான் ஆர்யன் சமாதானமாக 

 

“தப்பே பண்ணாத எனக்கு, தண்டனை கொடுத்த அவங்களுக்கு கண்டிப்பா தண்டனை கிடைக்கணும்” என்றான் அவன்

 

“புரியல. என்ன பண்ண சொல்றீங்க?” 

 

“நேத்து இவங்க என்னை அடிக்கும் போது எத்தனை பேரு பார்த்தாங்களோ அவங்க எல்லாரையும் வரச்சொல்லி அவங்க முன்னாடி என் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணும்” 

 

“அது முடியாது” என்று ஆத்திரத்துடன் நாற்காலியிலிருந்து எழுந்து விட்டான் ஆர்யன்

 

“ஆர்யன் நானே என்ன ஆகப்போகுதோன்னு பயந்துட்டு இருந்தேன்.‌ அவரே மன்னிப்போட பிரச்சினை முடிச்சுக்கலாம்னு சொல்றாரு. நீங்க முடியாதுன்னு சொல்றீங்க” என்றார் கல்லூரி முதல்வர் அதிருப்தியுடன். 

 

“சார், பங்கஷன் முடிஞ்சதும் கிளம்பாம பொண்ணுங்க விளையாடற இடத்துல அவர் ஏன் அவரோட ஃப்ரெண்ட்ஸ நிக்க வச்சு போட்டோ எடுக்கணும்.? காலேஜ்ல வேற இடமா இல்ல.? கேமராவுல ப்ரூஃப் இல்லைங்கிறதுக்காக இவரை உத்தமன்னு முடிவு பண்ணிட முடியுமா?” என்று ஆத்திரத்துடன் கேட்ட ஆர்யனை வளர்மதி நிமிர்ந்து முதன்முறையாக கவனித்து பார்த்தாள்.

 

மாநிறம், நல்ல உயரம், உடற்பயிற்சியில் மெருகேறியிருந்த உடற்கட்டுடன் இருந்தவனின் கையிலிருந்த ஒற்றை கைக்கடிகாரமே அவனின் வசதியை எடுத்துரைத்தது. கோபத்தில் முறுக்கேறியிருந்த கைகளின் நரம்புகளை பார்த்தவள் நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள். அவன் முகத்திலிருந்த கடுமையில் அவளுக்கே சற்று பயமாக தான் இருந்தது. கண்கள் சிவந்து போயிருந்தது. மன்னிப்பு கேட்க முடியாது என்று அவள் சொல்வதற்குள் அவன் சொல்லியிருந்தானே! 

 

அந்த இளைஞனின் பெண்களின் மீதான தவறான பார்வையும் கையில் இருந்த கேமராவும் தானே அவளுக்கு சந்தேகத்தை வரவழைத்தது.‌ கேமராவில் புகைப்படம் இல்லாவிட்டாலும் தவறான அவன் பார்வை இல்லை என்று ஆகிவிடுமா? 

 

வளர்மதியின் மனதை படித்தவன் போல ஆர்யனும் அதையேதான் சொல்லிக் கொண்டிருந்தான் 

 

“ஒரு ஆம்பள தன்னை எப்படி பாக்கிறான்னு ஒரு பொண்ணுக்கு தான் தெரியும்.‌ எது சரியான பார்வை? எது தப்பான பார்வைனும் அவங்களுக்கு நல்லாவே புரியும்.‌ அவன அடிச்சுட்டு இப்படி தைரியமா வளர்மதி நிக்கும் போதே தெரியலையா.? அவங்க செஞ்சது கரெக்ட்னு இப்போவும் நம்புறாங்க.‌ எல்லார் மாதிரியும் வளர்மதியும் கவனிக்காம போயிருந்தா இவன் கண்டிப்பா தப்பா போட்டோ எடுத்து இருக்க வாய்ப்பு இருக்கு.‌ அவனோட சேப்டிக்கு தான் அவன் பிரண்ட்ஸ அங்க நிக்க வச்சிருக்கணும்” என்றான் ஆர்யன் தெளிவாக 

 

வளர்மதி மெச்சுதலாக ஆர்யனை பார்த்துவிட்டு, பின்பு அடி வாங்கியவனை நேருக்கு நேர் அழுத்தமாக பார்த்தாள். அவனால் அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை.‌ அதே சமயம் இப்போது இறங்கிப் போனால் அவன் மீது தான் தவறு என்பது ஊர்ஜிதம் ஆகிவிடும் என்றும் நினைத்தான் 

 

“உங்ககிட்ட எனக்கு என்ன பேச்சு? காலேஜ்ல ரவுடித்தனம் செய்யும் பெண்கள்னு நியூஸ் கொடுக்கிறேன். மத்ததை என் அப்பா பார்த்துப்பாரு, நீ வாம்மா போகலாம்” என்று அன்னையின் கைப்பற்றி வெளியேற முயன்றான். 

 

“ஐயோ அப்படி பண்ணிடாதீங்க! உங்களுக்கு என்ன? உங்கள அடிச்சவங்களுக்கு தண்டனை கிடைக்கணும் அவ்ளோ தானே? இவங்க ரெண்டு பேருக்கும் இப்பவே டிசி கொடுத்து வெளியே அனுப்புறேன்” என்று பதட்டத்துடன் ஓடி சென்று அவர்களை பிடித்து நிறுத்தினார் கல்லூரி முதல்வர்.

 

“அவ்வளவு ஈசியா டிசி கொடுத்து அவங்கள அனுப்பிட்டு காலேஜை நடத்திடுவீங்களா சார்?” என்ற ஆர்யனின் ஆழ்ந்த குரலில் ஆடிப்போனார் அவர்.

 

“என்ன பண்ண சொல்றீங்க ஆர்யன்? எனக்கு காலேஜோட மரியாதை தான் முக்கியம்.‌ இந்த பையன் சாதாரண ஆள் இல்ல. எம்பியோட மகன்.‌ அவர் வரைக்கும் இன்னும் விஷயம் போகல.‌ அவருக்கு மட்டும் தெரிஞ்சா ஏதாச்சும் காரணம் சொல்லி காலேஜுக்கு சீல் வைச்சாலும் வச்சிடுவாரு”

 

“இவங்க ரெண்டு பேரையும் வெளியே அனுப்பினாலும் அதான் நடக்க போகுது சார். அடுத்த வாரம் செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்சதும் அவங்களே போக தானே போறாங்க”

 

“நோ அவங்க ரெண்டு பேரும் எக்ஸாம் எழுதக் கூடாது” என்றான் அந்த இளைஞன்.

 

“இத்தோட நீ போயிட்டா உனக்கு நல்லது. இல்லனா இன்னொரு கையையும் உடைக்க வேண்டி வரும். எப்படி வசதி?” என்றபடி கைச்சட்டையை மடித்து விட்டபடி அந்த இளைஞனை நேருக்கு நேர் இடிக்கும்படி சென்றான்.

 

“ராகேஷ், இந்த பொண்ணுங்க மட்டுமில்ல, குடும்பமே ரவுடி குடும்பம் போலருக்கு, வா நாம அப்பாகிட்ட பேசிக்கலாம்” என்று அவனின் அன்னை தன் மகனை அழைத்துக் கொண்டு சென்றார். அவனோ ஆர்யனையும் வளர்மதியையும் முறைத்துவிட்டு அன்னையுடன் சென்றான்.

 

கல்லூரி முதல்வர் அவர்களை சமாதானம் செய்ய முனைய, அவரை தடுத்து நிறுத்தியவன், “இவங்க ரெண்டு பேரும் செமஸ்டர் எக்ஸாம் நல்லபடியா எழுதிட்டு தான் காலேஜ் விட்டு போகணும்.‌ இல்லன்னா நீங்க ஆர்யனோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி இருக்கும், ஜாக்கிரதை” என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தான் ஆர்யன். 

 

அவரோ தலையில் கைவைத்துக் கொண்டு இரு பெண்களையும் முறைத்தார் 

 

“அகல்விழி உன் அக்காவை கூட்டிட்டு கிளாசுக்கு போ.‌ யார் என்ன பண்றாங்கன்னு நானும் பாக்குறேன்” என்று நாற்காலியை இழுத்து போட்டு அதில் தோரணையாய் கால் மீது கால் போட்டு அமர்ந்தவன், கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

 

வளர்மதி ஆர்யனை பிரமிப்புடன் பார்த்தவாறு நின்றிருந்தாள்.

 

(தொடரும்)

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top