“ஆர்யன் நீங்க இந்த மூணு வருஷமா வளர்மதியை பார்க்கவோ பேசுவோ முயற்சி செய்யலையாமே. அகல்விழி சொன்னா. எனக்கு கொடுத்த வாக்கை காப்பாத்தியிருக்கீங்க. உங்களை நினைச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றான் செழியன்
“செழியன் உண்மையை சொல்லனும்னா எனக்கு மதிகிட்ட பேசி பழகணும்னு ஆசையா தான் இருந்துச்சு. ஆனா உங்களுக்கு வாக்கு கொடுத்ததால அதை மீற மனசு வரல. ஆனா ஒரு விஷயத்தை மட்டும் உங்ககிட்ட மறைச்சிட்டேன்” என்றான் மெல்லிய குரலில்
“என்ன அது?”
“என்னோட ஆளுங்க எப்பவும் வளர்மதிக்கும் அகல்விழிக்கும் அவங்களுக்கு தெரியாமலே காலேஜ்லயும் அவங்க போற இடத்துலயும் பாதுகாப்பு கொடுத்துட்டு தான் இருந்தாங்க”
“அதுதான் விஷயமா? வளர்மதி பலமுறை என்கிட்ட சொல்லி இருக்கா. சீனியர் பசங்க ராகிங் அது இதுன்னு வம்பு பண்ண வருவாங்க. திடீர்னு எங்கிருந்தோ சில பேர் வந்து அவங்கள அதட்டி கிளாஸ்க்கு போக செய்வாங்கன்னு சொல்லுவா. எனக்கு அப்பவே யோசனையா இருந்துச்சு. இது உங்க வேலைனு இப்பதானே புரியுது” என்றான் செழியன் சிரிப்புடன்
“ஆனா ரெண்டு வருஷம் தான் அவங்களுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டுச்சு. ஒரு நாள் நான் வேலைக்கு வச்ச ஆளுங்க வந்து ‘பாஸ் இனிமேல் அவங்களுக்கு நாங்க தேவைப்பட மாட்டோம் அவங்களை கிண்டல் பண்ண பசங்கள அவங்களே அடிச்சு பந்தாடிட்டாங்க’ன்னு சொன்னாங்க. அத கேட்டதிலிருந்து வளர்மதிக்குள்ள இவ்வளவு மாற்றமானு எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. அப்போ இருந்தே மதியை பாக்கணும் நினைப்புல இருந்தேன். அதான் காலேஜ் ஃபங்ஷனை காரணமா வச்சு அவங்கள பாக்க போனேன்.
உங்க தங்கச்சிங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி டான்ஸ் சிலம்பம்னு போட்டி போட்டு பிரைஸ் வாங்கினப்ப தான் இது உங்க வேலைன்னு புரிஞ்சது. நானாச்சும் அவங்க பாதுகாப்புக்கு ஆளுங்களை ஏற்பாடு பண்ணி அனுப்பி வச்சேன். ஆனா நீங்க தற்காப்பு கலைய கத்துக் கொடுத்து அவங்களே அவங்களை பாதுகாத்துக்கிற மாதிரி செஞ்சு இருக்கீங்க. ரியலி யூ ஆர் கிரேட் செழியன். உங்கள மாதிரியே எல்லாரும் அவங்கவங்க வீட்டு பெண்களுக்கு தற்காப்பு கலையை சொல்லிக் கொடுத்தா, யாரோட உதவியும் அவங்களுக்கு தேவைப்படாது” என்று மனம் திறந்து பாராட்டினான்.
“இதுல என்னோட பங்கு கொஞ்சம்தான் ஆர்யன். என் மனைவி கனி நல்லா டான்ஸ் ஆடுவாங்க. என் தம்பி பாண்டியோட மனைவி சிலம்பம் குஸ்தி எல்லாம் கத்துக்கிட்டு போட்டியில ஜெயிச்சிருக்காங்க. வீட்ல சோறு பொங்கி போடுற வேலைய கொடுத்து இவங்க ரெண்டு பேரையும் முடக்கிட கூடாதுன்னு யோசிச்சு சின்னதா ஒரு கலைக்கூடம் கட்டினேன். அங்கே கனி எல்லாருக்கும் டான்ஸ் கிளாஸ் எடுக்குறா. வீரமல்லி சிலம்பம் சொல்லி தர்றா.. வெளி ஆளுங்களுக்கு சொல்லித் தர்றத்துக்கு முன்னாடி நம்ம வீட்டு பொண்ணுங்களும் கத்துக்க வேணாமான்னு வளருக்கும் அகலுக்கும் கத்துக் கொடுக்க சொன்னேன். தங்கச்சிங்க லீவுக்கு ஊருக்கு வாறப்போ கத்துக்கிட்டாங்க. நீங்க பாராட்டணும்னா அவங்களோட அண்ணிங்களை தான் பாராட்டணும்”
“நான் பாராட்டினதா என் சார்பா நீங்களே அவங்ககிட்ட சொல்லிடுங்க. ஆனா ஒரு விஷயம் செழியன், நல்ல வேளையா உங்க பேச்சுக்கு மரியாதை கொடுத்து நான் காலேஜ் பக்கம் போகல. இல்லன்னா உங்க தங்கச்சி என்னை அடி பின்னி இருப்பாங்க போல” என்று சிரித்தான் ஆர்யன்
“அப்படி நடந்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?”
“கல்யாணத்துக்கு அப்புறம் பொண்டாட்டிகிட்ட வாங்க வேண்டியத முன்னாடியே வாங்கினதா நினைச்சுக்க வேண்டியது தான்” என்றான் ஆர்யன் இலகுவான குரலில்
“ஆர்யன் உங்கள நினைச்சா எனக்கு ஆச்சர்யமா இருக்கு. இன்னுமா வளர்மதி விஷயத்துல உங்க முடிவுல உறுதியா இருக்கீங்க?” செழியன் கேட்க
“அதுல என்ன சந்தேகம் செழியன்?”
“என் தங்கச்சிய நேர்ல மூணு முறை பார்த்திருப்பீங்களா? அவ உங்ககிட்ட சரியா பேசினது கூட இல்லை. அவளுக்காக மூணு வருஷமா காத்திருக்கீங்களே ஏன்? என்ன காரணம்?”
“எனக்கு உங்க தங்கச்சிய பிடிச்சிருக்கு, இதுக்கு மேல என்ன காரணம் எதிர்பார்க்கிறீங்க?” என்றவனின் மனதில் ஆணித்தரமான இன்னொரு காரணமும் இருந்தது.
ஆர்யனின் பதிலில் அசந்து போனான் செழியன்.
“நீங்க அவ கிட்ட சகஜமா பேசினதே இல்ல. நீங்க அவளை விரும்பறது கூட அவளுக்கு தெரியாது. இருந்தாலும் அவளுக்காக காத்திருக்கீங்க. உங்களுடைய காத்திருப்புக்கு நான் நிச்சயம் நியாயம் செய்வேன் ஆர்யன்” என்றான் நெகிழ்ச்சியாக
“தேங்க்ஸ் எ லாட் செழியன்”
“வளரு பாப்பா படிப்பு முடிஞ்சு வூட்டுக்கு வரட்டும். உங்களுக்கு நல்ல செய்தி சொல்றேன்” என்று செழியன் போனை வைத்ததும் ஆர்யனின் முகம் பளிச்சென்று மலர்ந்தது.
விசில் அடித்தபடி மாடியிலிருந்து கீழே இறங்கியவன் ஹாலில் அமர்ந்திருந்த ஆதிசங்கரனிடம் வந்தான்.
அவர் ஏதோ தீவிர யோசனையில் இருப்பதை கண்டதும், “என்னாச்சு டாட்? என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க?” என்றபடி அவர் எதிரே அமர்ந்தான்.
அவரோ ஆர்யனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்து, “நீ யாரோ செழியனோட தங்கச்சிய லவ் பண்றியாமே? அத யாரோ சொல்லித்தான் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு இல்ல?”
“அந்த யாரோ யுகி ராஸ்கல் தானே! அவன” என்று பற்களை கடித்தபடி கைபேசியை எடுத்தான்.
“உன் நண்பன திட்டறத அப்புறமா வச்சிக்க, முதல்ல எனக்கு பதில் சொல்லு. நீ காதலிக்கற விஷயத்தை என்கிட்ட சொன்னா, நான் என்ன வேணாம்னா சொல்ல போறேன்? ஏன் என்கிட்ட இருந்து மறைக்க நினைக்கிற ஆர்யா? அந்த பொண்ணுக்காக மூணு வருஷமா காத்திருக்கியாமே? என்கிட்ட சொல்லி இருந்தா மூணே நாள்ல கல்யாணத்தை முடிச்சு வச்சி இருப்பேனே! ஏன் என்கிட்ட சொல்லல”
“இதோ இப்படி அவசரப்படுவீங்கன்னு தான் சொல்லல” என்றான் அழுத்தமான குரலில்
“உன் அம்மா தான் இப்போ நம்ம கூட இல்லை, நான் இருக்கும் போதே உனக்கு ஒரு கல்யாணத்தை முடிச்சிட்டா நிம்மதியா இருப்பேன் இல்ல” என்று அவர் புலம்ப ஆரம்பிக்க, அன்னையின் நினைவில் ஆர்யனுக்கு மனம் கனத்துப் போனது. இருந்தாலும் தனிமையில் வாடும் தந்தையின் துயரத்தை மதித்து அவர் அருகில் அமர்ந்து அவரின் கரத்தை அழுத்தமாய் பற்றிக் கொண்டான் மகன்.
“கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க அப்பா. நானே உங்களுக்கு நல்ல செய்தி சொல்றேன்” என்றான் நம்பிக்கையுடன்
“ஆர்யா என் மருமகளை எனக்கு காட்ட மாட்டியாடா?” என்றார் ஆதிசங்கரன் ஆர்வத்துடன்
“நீங்க ஏற்கனவே பார்த்து இருக்கீங்கப்பா”
“என்னடா சொல்ற? யாரு? யாரச் சொல்ற? எங்கே பார்த்தேன்? எப்போ பார்த்தேன்?” ஆதிசங்கரன் ஆச்சரியத்துடன் கேள்விக்கணைகளை தொடுத்தார்.
“அது சஸ்பென்ஸ்”
தந்தையின் முகம் வாடவும், “எல்லாம் கரெக்ட்டா நடக்கட்டும், உங்களுக்கு சொல்லாம யாருக்கு சொல்ல போறேன்?” என்றபடி அவரின் கைப்பற்றி எழுந்து அவரையும் எழ வைத்தான்.
கேள்வியாக பார்த்தவரை கண்டு புன்னகைத்து, “வாங்க என் கார்ல ஒன்னாவே ஆபீஸ்க்கு போகலாம்” என்று அவரை கிளப்பிக்கொண்டு அலுவலகம் கிளம்பினான்.
கடைசியாக அவர்கள் இருவரும் ஒன்றாக அலுவலகம் கிளம்பிய நாளை எண்ணி இருவரும் மனதிற்குள் கலங்கி, தங்கள் கலக்கத்தை மற்றவர் அறியாதபடி முகத்தை மறைத்து புன்னகைக்க முயன்றனர்.
இருவரும் அலுவலகத்திற்குள் நுழைந்த போது யுகேந்திரன் எதிரில் தென்பட்டான்.
ஆர்யனுக்கு அவனைக் கண்டதும் கோபத்தில் மூக்கு விடைக்க, “டேய் யுகி வாடா இங்க” என்றான் கோபமாக
ஆர்யன் கோபமாக இருப்பதையும் அவன் அருகே ஆதிசங்கரன் இருப்பதையும் கண்ட யுகேந்திரன், ‘மனுஷன் ஒரே நாள்ல போட்டு கொடுத்துட்டாரு போலயே’ என்று மனதிற்குள் புலம்பியபடி ஆர்யன் எதிரே வந்து நின்றான்.
ஆதிசங்கரன் மகனின் கோபத்திற்கு நேர்மாறாக விரிந்த புன்னகையுடன் யுகியின் தோளில் தட்டினார். “யுகி நல்ல செய்தி சொல்லி இருக்கே. உனக்கு இந்த மாசம் இன்கிரிமென்ட் பண்ண சொல்லி இருக்கேன். சீக்கிரம் ஆர்யனுக்கு கல்யாணத்தையும் முடிச்சுட்டா, உன்னை கம்பெனியோட ஜிஎம்மா ப்ரொமோட் பண்ணிடறேன்” என்று பாராட்டி விட்டு அவரின் அறைக்கு சென்றார்.
‘இதை இப்பதான் சொல்லணுமா?’ என்று யுகேந்திரன் மனதிற்குள் புகைந்தபடி திரும்பி நண்பனை மிரட்சியுடன் பார்க்க அவனோ முறைத்துக் கொண்டிருந்தான்.
“அப்பாக்கிட்ட சொல்லக்கூடாதுனு நான் சொன்ன விஷயத்தை என் பேச்சை மீறி சொல்லியிருக்க. இதுக்கு உனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் யுகி?” என்று கைகளை கட்டிக்கொண்டு தீவிரமாக யோசித்த நண்பனை பார்த்து பதறினான் யுகேந்திரன்.
“உண்மைய சொல்லலனா அவரு தண்டனை கொடுக்குறேனு சொல்றாரு. சொன்னா நீ தண்டனை குடுக்குறன்னு சொல்றே. நான் என்னடா பண்ணட்டும்.? உன் அப்பா துருவித்துருவி கேள்வி மேல கேள்வியா கேட்டுட்டே இருக்காரு” என்றான் பாவமாக
“அவர் என்ன கேட்டாலும் எனக்கு தெரியாதுனு தானே உன்னை சொல்ல சொன்னேன்” என்றான் ஆர்யன் பற்களை நறநறத்தபடி
“தெரிஞ்ச விஷயத்தை தெரியாதுன்னு சொல்றது எவ்வளவு கஷ்டமனு உனக்கு தெரியாதுடா. அப்பவும் உனக்காக உன் அப்பா என்ன கேள்வி கேட்டாலும் ஐ டோன்ட் நோ னு தான் சொன்னேன். அதுக்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?”
“என்ன சொன்னாரு?”
“எதைக் கேட்டாலும் தெரியாதுன்னு சொல்றே. எல்லாமே தெரிஞ்சுகிட்டு என்கிட்ட சொல்ற வரைக்கும் உனக்கு நைட் ஷிஃப்ட்னு சொல்லிட்டார்டா. நிஷாவுக்கு மட்டும் டே ஷிப்டாம். அவ ராத்திரில வீட்ல தனியா தூங்குறது, நான் இங்க வேலை செய்யறதுனு இருந்தா எப்படிடா நான் குடும்பம் நடத்தறது?”
“உன் ரொமான்ஸ் கெட கூடாதுன்னு என்னை போட்டு கொடுத்துட்டியாடா?” என்றான் ஆர்யன் இன்னும் கோபமாக
“எதுக்குடா இவ்ளோ கோபப்படுற? என்னைக்கி இருந்தாலும் தெரிய தானே போகுது? வளர்மதி படிப்பு முடிஞ்சதும், செழியன் உனக்கு அவர் தங்கச்சியை கொடுக்காம போயிடுவாரா என்ன?”
“செழியன் சம்மதிச்சா போதுமா? வளர்மதி சம்மதிக்க வேண்டாமா? ஒருவேளை அவ சம்மதிக்கலைன்னா? கல்யாணம் நடக்காம போயிட்டா? அப்பாவுக்கு நம்பிக்கை கொடுத்து அது இல்லாம போன மாதிரி ஆயிடாதா?”
“அது எப்படி கல்யாணம் நடக்காம போயிரும்? அப்புறம் நானும் நிஷாவும் எதுக்கு இருக்கோம்? செழியன் அவர் தங்கச்சியை எப்படியாவது கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிடுவாரு, நீ வேணா பாரு”
“அது அவ்வளவு சுலபமா நடக்கும்னு எனக்கு தோணல. பாக்கலாம்” என்றவன் விரல் நீட்டி எச்சரிக்கும் விதமாக, “யுகி இந்த விஷயத்துல நான் உன்னை மன்னிச்சு விடுறேன் ஆனா மதியோட பர்சனல் விஷயம் எதுவும் அப்பாவுக்கு தெரிய கூடாது” என்றான் அழுத்தமாக
“அத என் உயிரே போனாலும் நானா சொல்ல மாட்டேன்டா. ஆனா உன் அப்பாவுக்கு தெரிஞ்சாலும் தப்பா நினைக்கிற ஆள் இல்லை”
“எனக்கும் தெரியும்டா. இருந்தாலும் மதியோட சுயமரியாதையை காப்பாத்தறது என்னோட கடமை. ஒரு நொடி கூட அவளை யாரும் கீழா நினைக்கறத நான் விரும்பல”
“புரியுதுடா ஆர்யா. உன் மனசுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று ஆருடம் சொன்னான் யுகேந்திரன்.
(தொடரும்)