“யாருக்கு போன் பண்றீங்க ஆர்யன்?” கல்லூரி முதல்வர் கேட்க,
“காலேஜ்க்கு சீல் வச்சிடுவாரோனு பயப்படறீங்களே அந்த எம்பிக்கு தான் போன் பண்றேன். அவர் மகன் செஞ்ச காரியத்தை அவர் தெரிஞ்சுக்க வேணாமா?”
“ஆர்யன்!” என்று பதறியவர் வளர்மதியிடம் திரும்பி, “ஏம்மா வளர்மதி உன் மாமாவ கொஞ்சம் பொறுமையா இருக்க சொல்லேன்மா. இவர் தான் உன் மாமானு முன்னாடியே சொல்லியிருந்தா நான் இந்த பிரச்சனைய வேற மாதிரி டீல் பண்ணியிருப்பேன் இல்ல?” என்றார் ஆதங்கத்துடன்
“அவர் ஒன்னும் எங்க மாமா இல்ல” என்றவள் அகல்விழியின் கரத்தை அழுந்தப்பற்றி இழுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.
“ஆர்யன், என்ன இது? அந்த பொண்ணு உங்கள மாமா இல்லனு சொல்லுது”
“இனிமே தான் மாமாவாக போறேன்” என்றான் ஆர்யன்
கல்லூரி முதல்வர் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க, அவனோ அழைப்பை ஏற்றிருந்த எம்பியிடம் பேசினான்.
அங்கே நடந்த பிரச்சனையை பற்றி சுருக்கமாக கூறியவன், “இந்த பிரச்சனைய இத்தோட விட்டுட்டா உங்களோட அரசியல் வாழ்க்கைக்கும் உங்க மகனோட எதிர்காலத்துக்கும் நல்லதுனு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?”
“சரிங்க ஆர்யன், பிரச்சனைய சுமுகமா முடிச்சுக்கலாம். நான் என் மகனை அடக்கி வைக்கிறேன்” என்று எம்பி பதில் கூறியதை கல்லூரி முதல்வரும் கேட்டுக் கொண்டு தான் இருந்தார்.
அவரை நிமிர்ந்து பார்த்த ஆர்யன், “பிரச்சனை சால்வ் ஆயிடுச்சு. இப்போ ஓகே தானே?” என்று கேட்டான்.
“நான் எம்பி-யை நினைச்சு தான் பயந்தேன். அவரே சுமுகமா முடிச்சுக்கலாம்னு சொல்லிட்டாரே, எனக்கு டபுள் ஓகே”
“சரி நான் கிளம்பறேன்” என்று எழுந்தான் ஆர்யன்
“ஆர்யன், நிஜமாவே வளர்மதி உங்க சொந்தக்கார பொண்ணா?”
“சொந்தமாகப் போற பொண்ணு” என்றான் மென்புன்னகையுடன்
“ஓ அப்படியா சேதி, ஆதிசங்கரன் சாரோட மருமகனு தெரியாம போச்சே” என்று சத்தமாக சிரித்தார்.
“சார், அப்பாகிட்ட இங்கே நான் வந்து போன விஷயத்தை…” அவன் முடிக்காமல் பேச்சை நிறுத்தவும், “சொல்லமாட்டேன்” என்று உறுதியளித்தார் கல்லூரி முதல்வர் புன்னகையுடன்
“தேங்க் யூ, பாத்துக்கோங்க” என்றவன் அவரின் குறும்பு புன்னகையை எதிர்கொள்ள முடியாமல் தலையை கோதி தன் வெட்கத்தை மறைத்தபடி கிளம்பினான்.
வகுப்பிற்கு வெளியே நின்று தங்கைக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தாள் வளர்மதி.
“அகல், நீ செய்யறது எதுவும் சரியில்ல. அண்ணனுக்கு தானே உன்னை போன் பண்ண சொன்னேன். நீ எதுக்கு அவருக்கு போன் பண்ணி வரவழைச்சிருக்கே? பிரின்சிபால் கிட்ட அவரை மாமானு வேற அறிமுகப்படுத்தறே? உன் மனசுல தேவையில்லாத கற்பனையை வளர்த்துக்காதே, இது நல்லதுக்கு இல்ல”
“நான் எந்த கற்பனையையும் வளர்த்துக்கல, தெளிவா யோசிச்சு தான் ஆர்யன் சாருக்கு போன் பண்ணேன். அந்த ராகேஷ் தப்பு பண்ணதுக்கு எந்த சாட்சியும் நம்ம கிட்ட இல்ல. அண்ணன் வந்திருந்தா இவங்க எல்லாரும் சேர்ந்து அவரை கேள்வி கேட்டு இருப்பாங்க. நமக்காக அண்ணன் தலை குனிஞ்சு நிக்க வேணாம்னு தான் ஆர்யன் சாரை வரச்சொன்னேன். பாத்தேயில்ல, எவிடன்ஸே இல்லனாலும் அவன் மேல தான் தப்பு இருக்குங்கிற மாதிரி அவர் அடிச்சு பேசினதுல அடிவாங்கினவன் ஆடியே போயிட்டான்” என்றாள் பெருமையாக
“இருந்தாலும் அந்த ஆர்யன் தன்னை மாமானு பதிவு பண்ற மாதிரி தானே நடந்துக்கறாரு? எந்த உள்நோக்கமும் இல்லாமலா நமக்கு உதவி செய்யவார்னு யோசிக்கணும் அகல். அவரோட வலைல மயங்கிடாதே”
“நான் ஏன் மயங்க போறேன்? அவர் விரிக்கிற வலை எனக்கில்ல” என்றாள் அகல்விழி
“உனக்கு வலை விரிக்காம தான் நீ போன் போட்டதும் உடனே ஓடி வர்றாரா?”
“எனக்கு அப்படி தோணல. ஒரு வேளை உனக்காக ஓடி வந்திருக்கலாம்”
“ச்சீ வாயை மூடு, காலேஜ்க்கு வந்து நீ ரொம்ப கெட்டு போயிட்டே. பெரிய பேச்செல்லாம் பேச ஆரம்பிச்சுட்டே. அண்ணன்கிட்ட சொல்லி முதல்ல உனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ண சொல்லணும்”
“நீ இருக்கும் போது எனக்கு மொதல்ல கல்யாணம் ஏற்பாடு பண்ண சொல்லுவியா? அண்ணன் அத கேட்டுக்கும்னு நினைக்கிறியா?” என்றாள் கிண்டலாக
வளர்மதிக்கு இப்போது அண்ணனிடம் கொடுத்த வாக்கு நினைவிற்கு வந்தது. மூன்று ஆண்டு படிப்பு முடிந்ததும் அண்ணன் சொல்பவரை திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்திருக்கிறாளே! இன்னும் பதினைந்து நாட்களில் படிப்பு முடிந்து விடுமே!
அக்காவின் முகம் சட்டென வாடி விட்டதை கண்டு, “ஐயோ அக்கா, மாப்பிள்ளை ரெடியா இருக்கற மாதிரி நீ ஏன் இப்பவே கவலை படறே. முதல்ல நல்லா படிச்சு எக்ஸாம் எழுதலாம் வா” என்று அவளின் கையை பற்றி இழுத்துக் கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்தாள்.
மறுநாளில் இருந்து கல்லூரியில் அவர்களை காணும் போதெல்லாம் நலம் விசாரித்தார் கல்லூரி முதல்வர். பேராசிரியர்களிடம் அவர்களை நன்றாக கவனித்துக் கொள்ளும்படி கட்டளை வேறு. வளர்மதிக்கு அவரின் மாற்றத்திற்கான காரணம் என்ன என்ற கேள்வி இருந்தாலும் அதை பற்றி யோசிக்க இடமில்லாமல் தேர்வு நெருங்கி விட்டதால் படிப்பதில் கவனம் செலுத்தினாள்.
ஒரு வழியாக தேர்வு முடிந்ததும் தங்கைகளை அழைத்துச் செல்ல செங்கதிர் செழியன் தன்னுடைய ஜீப்பில் சென்னை வந்திருந்தான்.
கல்லூரி வாசலில் உடைமைகளுடன் அவனுக்காக தயாராக நின்றிருந்த தங்கைகள் இருவரும் அண்ணனின் ஜீப்பை கண்டதும் புன்னகையுடன் கையை ஆட்ட, கதவை திறந்து கொண்டு ஆஜானுபாகுவாக இறங்கிய செழியனின் மீசை இப்போது இன்னும் பெரிதாக இருந்தது, அதை முறுக்கி விட்டவன் ஒற்றைக் கையால் வெண்ணிற வேட்டியின் ஒற்றை முனையை லாவகமாக பற்றியபடி அவர்கள் முன்னால் வேக நடையிட்டு வந்தான்.
அவர்களுக்கு அருகே இருந்த பெண்கள், “யாருடி இந்த மீசைக்கார மச்சான். பாக்கவே ஜம்முனு இருக்காரு” என்று வாயை பிளக்க, “ஏய் அது என் அண்ணன்டி. நீங்க பேசினது அண்ணன் காதுல விழுந்துச்சு, என்னை வகுந்துபுடும். கொஞ்சம் வாய மூடிட்டு இருங்கடி” அடிக்குரலில் கீறிச்சிட்டாள் அகல்விழி
“உங்கண்ணனுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?” ஒருத்தி ஆசையோடு கேட்க
“ம், ஆயிடுச்சு”
“ஏய் பொய் சொல்லாதடி. நான் நம்ப மாட்டேன்” என்று அவள் சொல்ல, ஜீப்பின் மற்றொரு கதவை திறந்துக் கொண்டு கனிஇதழி இறங்க, அவளை முந்திக் கொண்டு ஒரு பெண்குழந்தை தத்தி நடந்தபடி மழலையில் அவனை “ப்பா” என அழைக்கவும் புன்னகையுடன் திரும்பி சென்றான்.
“அப்பா” என்ற அக்குழந்தையின் ஒற்றை அழைப்பில் அங்கிருந்த பெண்களின் மனம் அப்பளமாய் நொறுங்கி போனது.
“இலக்கியா” என்ற அழைப்புடன் கனிஇதழி அவள் பின்னால் வந்துக் கொண்டிருந்தாள்.
செழியன் சட்டென குழந்தையை வாரியெடுத்து அதன் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதிக்க, “மீசை குத்துப்பா” என்று சிணுங்கினாள் மகள். அதை கண்ட அகல்விழியின் அருகில் இருந்த பெண்களோ ஏக்க பெருமூச்சு விட்டனர். கனிஇதழியின் கண்களில் அது தப்பாமல் விழுந்து விட அவள் அவர்களை எரித்து விடுபவள் போல முறைத்தாள்.
கணவனை முந்திக் கொண்டு வளர்மதியின் அருகில் வேகமாக சென்றாள். “இதழி மெதுவா நட” அதட்டினான் செழியன்
இப்போது இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதாக கனிஇதழி வளர்மதியிடம் சொன்னது நினைவில் வர, அவளும் வேகமாக சென்று தன் சிறுவயது தோழியை அணைத்துக் கொண்டாள்.
“கனி, இந்த நிலைமையில ஏன் இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வந்தே?”
“டான்ஸ் கிளாஸ் ஆரம்பிச்சதுல இருந்து மாமா கூட இருக்கற நேரம் ரொம்பவே குறைஞ்சிடுச்சு வளர். நான் கர்ப்பமா இருக்கறதால மாமாவும் அத்தையும் தான் சென்னைக்கு வர்றதா இருந்தாங்க. நான் தான் அடம் பிடிச்சு அவர் கூட வந்தேன்”
“மாமா கூட இருக்கற நேரம் குறைஞ்சிடுச்சுனு சொல்றாங்க, அப்புறம் எப்படி கர்ப்பம்? சும்மா தானே சொல்றாங்க” என்றாள் அகல்விழியின் அருகில் இருந்தவள்.
கனிஇதழி அந்த பெண்ணை முறைத்துவிட்டு, “மாமா, நீங்க இலக்கியாவ தூக்கிட்டு போய் ஜீப்ல உட்காருங்க” என்றாள் சத்தமாக
“நான் உன்னை ஜீப்லயே உட்கார சொல்லிட்டு வந்தா, என்னை போய் ஜீப்ல உட்கார சொல்றீயா?” என்றான் அவன்.
திரும்பி உதட்டை சுழித்து “சொன்னா கேளுங்க மாமா” என்றாள் மெல்லிய குரலில். அந்த குரலில் சொக்கியவன் குழந்தையை எடுத்துக் கொண்டு ஜீப்பிற்கு சென்றான்.
“வளர், இவளுங்க உன் பிரெண்ட்ஸா? என் மாமாவ கண்ணாலயே தின்னுடுவாளுங்க போலருக்கு. நான் பொல்லாதவனு இவளுங்களுக்கு சொல்லி வை” என்று மிரட்டலாக அந்த பெண்களை பார்த்தாள்.
“இவங்க எல்லாம் அகல்விழியோட பிரெண்ட்ஸ்ங்க. எல்லாம் அவ கொடுக்கற இடம்” என்றாள் வளர்மதியும் எரிச்சலாக.
அவளுக்கு இந்த பெண்கள் பேசும் தொணியே பிடிக்காது. அவர்களோட அகல்விழி பழகுவதையும் அவள் விரும்பவில்லை. தங்கைக்கு ஓரளவுக்கு புத்தி சொல்ல முடியுமே தவிர கட்டுபடுத்த முடியாதே! இந்த வயது கட்டுக்குள் அடங்க கூடியதா என்ன? அவளும் மூன்று வருடத்திற்கு முன் இப்படித்தானே இருந்தாள்?
அனுபவத்தால் அவளுடைய புத்தி தெளிந்தது போல, அகல்விழிக்கும் அப்படிப்பட்ட தவறான அனுபவம் நேரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பாள். அதனாலேயே அகல்விழியை அவ்வப்போது திட்டுவதும் அண்ணனிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுவதுமாக இருப்பாள்.
அகல்விழிக்கும் வளர்மதியின் மனநிலை புரியாமல் இல்லை. இளம்பெண்களுக்கே உரித்தான கேலி கிண்டல்களில் தோழிகளுடன் கலந்து கொள்வாளே தவிர, மற்றபடி தன் எல்லையில் உறுதியாக இருப்பாள். அதனால் வளர்மதியின் குற்றச்சாட்டை தவறாக நினைக்காமல் தன்னுடன் இருந்த தோழிகளை கண்களால் அடக்கினாள்.
ஜீப்பில் மகளை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த செழியன் ஹாரனை அடிக்கவும் அகல்விழி தோழிகளிடம் பிரியாவிடைப்பெற்று வந்த பின் மூவரும் கிளம்பி ஜீப்பில் ஏறிக் கொண்டனர்.
வளர்மதி அண்ணன் மகளை மடியில் வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டே வந்தாள். திடீரென ஜீப் ஒரு பெரிய பங்களாவின் முன்பு நிற்கவும், “யார் வீடு அண்ணா இது?” என்றாள்.
“ஆர்யனோட வீடு” என்றான் செழியன்
“இங்கே எதுக்கு வந்திருக்கோம்?”
“எதுக்கா? நீங்க ரெண்டு பேருமா சேர்ந்து எம்பி பையனை அடிச்சு தலைய உடைச்சிருக்கீங்க. அவங்க உங்க ரெண்டு பேரையும் காலேஜ்ஜ விட்டு வெளியே அனுப்ப முயற்சி பண்ணியிருக்காங்க. ஆர்யன் தானே உங்களுக்காக பேசி எல்லாத்தையும் சரி பண்ணதா சொன்னே. அவருக்கு நேர்ல பார்த்து நன்றி சொல்ல வேணாமா? அது தானே முறை?”
“நடந்தத எதுக்காக உன்கிட்ட சொன்னேன்னு புரியலையா அண்ணா? அன்னைக்கு அகல்விழிக்கிட்ட உனக்கு போன் பண்ணி வரசொல்ல சொன்னேன். ஆனா அவ அவருக்கு போன் பண்ணி வரவழைச்சிருக்கா. அவரை மாமானு வேற பிரின்சிபால் கிட்ட அறிமுகப்படுத்துறா. இந்த விஷயத்தை சொன்னா நீ அவளை கண்டிச்சு வைப்பேனு தான் உன்கிட்ட சொன்னேன். நீ என்னடான்னா நன்றி சொல்றதுக்கு அவங்க வீட்டுக்கே வந்து நிக்கிறே. போண்ணா” என்றாள் வளர்மதி ஆற்றாமையோடு
“எல்லாம் எனக்கு நல்லாவே புரியுது பாப்பா. இருந்தாலும் அவர் செஞ்ச உதவிக்கு நன்றி சொல்லிட்டு போறது தான் நல்லது. கீழே இறங்கு” என்றான்.
“நான் வரல, நீங்க போயிட்டு வாங்க”
“அவர் உதவி செஞ்சது எனக்கில்ல. உனக்கு தான். நீதான் அவருக்கு நன்றி சொல்லணும்”
வளர்மதி அசையாமல் அமர்ந்திருக்கவும், “வளர்மதி” என்ற செழியனின் அழுத்தமான அழைப்பில் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இறங்கினாள்.
குளித்துவிட்டு வந்த ஆர்யன், இன்டர்காம் ஒலிக்கவும் அதை எடுத்து காதில் வைத்தான்.
“சார், யாரோ பேமலியோட வந்திருக்காங்க” என்றான் காவலாளி
ஆர்யன் சிசிடிவி திரையின் வழியே வந்திருப்பவர்கள் யாரென்று பார்க்க, அங்கே செழியன் தன் மனைவி, குழந்தை மற்றும் தங்கைகளுடன் வாசலில் நின்றிருப்பதை பார்த்து இன்பமாக அதிர்ந்தான்.
“வாவ், வாட் எ சர்ப்ரைஸ், அவங்கள உடனே உள்ளே அனுப்புங்க” என்றவன் ஓட்டமும் நடையுமாக மாடியிலிருந்து கீழே இறங்கினான்.
“ஆர்யா எதுக்குடா இவ்வளவு அவசரமா படியிறங்கற?” தன்னுடைய அறையிலிருந்து எட்டிப்பார்த்த ஆதிசங்கரன் கேட்க, “அப்பா வெளியே முக்கியமான கெஸ்ட் வந்திருக்காங்க, அவங்களை இன்வைட் பண்ணனும்” என்று வாசல் நோக்கி செல்ல எத்தனித்தான்.
“இடுப்புல டவலோட ஓடிப்போய் இன்வைட் பண்ற அளவுக்கு முக்கியமான கெஸ்ட்டா?” என்ற தந்தையின் கேள்வியில் தான் தன்னையே குனிந்து பார்த்தான்.
“ஓ, ஷிட்” என்று தலையில் கைவைத்துக் கொண்டு மீண்டும் குதித்து மாடி ஏறினான். அடுத்த இரண்டு நிமிடத்தில் இலகுவான உடையை அணிந்தபடி கீழே இறங்கி வாசலுக்கு ஓடினான்.
“வாங்க செழியன், எப்படியிருக்கீங்க?” என்றபடி செழியனின் கரம் பற்றி குலுக்கினான் ஆர்யன்.
“நல்லா இருக்கேன் ஆர்யன், நீங்க இன்னும் ஸ்மார்ட் ஆயிட்டீங்க?” என்றான் செழியன் புன்னகையுடன்
“நீங்க கூட தான் முன்னாடி பாத்தத விட இன்னும் ஆளு அம்சா இருக்கீங்க. ஜிம் போறீங்களா?”
“விவசாயம் செய்யறதே பெரிய உடற்பயிற்சி தான் ஆர்யன், ஜிம் போறதுக்கு எல்லாம் நேரம் எங்கே இருக்கு?” என்றான் செழியன்
“நீங்க சொல்றது கரெக்ட் தான், உங்கள மாதிரி விவசாயிங்களுக்கு ஜிம்ல போய் வொர்க்அவுட் பண்ணனும்ங்கிற அவசியமே இல்ல. உள்ளே வாங்க, வீட்டுக்கு வரப்போறதா சொல்லியிருந்தா வரவேற்பை வேறமாதிரி நடத்தியிருப்பேன்”
“அதனால தான் சொல்லாம வந்தேன்” என்ற செழியனின் கரத்தை பற்றி அழுத்திய ஆர்யன், “மிஸஸ். செழியன் எப்படி இருக்கீங்க?” என்று பொதுவாக கனியை நலம் விசாரித்துவிட்டு, “மதி எக்ஸாம் நல்லா எழுதினீங்களா?” என்று அவளை நேராக பார்த்து விசாரிக்கவும், அவனின் நேரடியான கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மலங்க விழித்தாள்.
அதற்குள் வீட்டின் வாசல் வந்து விட, அனைவரும் உள்ளே நுழைந்தனர். மகன் அத்தனை ஆர்பாட்டத்தோடு யாரையோ வரவேற்க செல்கிறானே, அப்படி யார் வரப்போகிறார்கள் என்ற ஆர்வத்தோடு இருந்த ஆதிசங்கரன் வந்திருந்த புதியவர்களை ஒவ்வொருவராக வரவேற்றார்.
இறுதியாக வளர்மதியின் மீது அவரின் பார்வை படிந்தது!
திடுக்கிடலோடு திரும்பி ஆர்யனை கேள்வியாக பார்த்தார். அவன் இமைகளை மூடி திறந்து அவரின் கேள்வி சரி என்பதாக பதிலளித்தான்.
ஆதிசங்கரனின் கேள்வி என்ன? அதற்கு ஆர்யனின் பதில் என்ன என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
(தொடரும்)