இணை 2

“‌அகல்விழி நீ ஒன்னும் சின்ன பொண்ணு இல்ல, பழக்கமில்லாதவங்க கிட்ட உனக்கு என்ன பேச்சு?” வளர்மதி தன் அதிருப்தியைக் காட்ட 

 

“அக்கா அவர் தான் கூப்பிட்டு அண்ணாவ பத்தி விசாரிச்சாரு” என்றாள் தங்கை 

 

“உன் பிரெண்ட்ஸ்ங்க எதுக்கு நீ அவரோட பேசிட்டு இருக்கும்போது கிண்டல் பண்ணி சிரிக்கிறாளுங்க?” 

 

“நான் அவளுங்ககிட்ட அவர அண்ணன் மாதிரினு சொல்லியிருந்தேன். ஆனா அவரு அண்ணாவோட ஃப்ரெண்டு அண்ணாவா தான் இருக்கணும்னு அவசியம் இல்ல, ஏன் மாமாவா இருக்கக் கூடாதான்னு கேட்டாரு”  என்றதும் வளர்மதிக்கு புசுபுசுவென்று கோபம் வந்துவிட்டது.

 

“அப்படியா கேட்டார் அந்த ஆளு? கேட்டதும் கன்னத்துல ஒரு அறை விடாம சிரிச்சுட்டு இருந்தியா?” கோபமாக முறைத்தாள் 

 

“அண்ணாவோட ஃப்ரெண்ட் ஆச்சே? அவர போய் அடிக்க சொல்றியே! அதுவும் அவர் என்கிட்ட எந்த வம்பும் பண்ணலையே! பாசமா தானே பேசிட்டு இருந்தாரு”

 

“அகல் பொண்ணுங்கள சீரழிக்க முடிவு பண்ணிட்டா, நேரடியா யாரும் மோத  மாட்டாங்க. இப்படித்தான் பாசமா உரிமையா பேசி நம்மள புதை குழியில தள்ளிடுவாங்க. ஒருத்தன் வெளிப்படையா தப்பா அணுகுனா நம்மகிட்ட இருக்கிற தற்காப்பு கலைய வச்சு நம்மள நாம காப்பாத்திக்கலாம். ஆனா உரிமை பாசம் அன்பு காதல்னு முகமூடி போட்டு ஏமாத்தற குள்ளநரிங்க தான் மலிஞ்சு கிடக்குறாங்க. அவங்க கிட்ட இருந்து நம்மள காப்பாத்திக்கிறது தான் ரொம்ப சவாலான விஷயம். யாரையும் சுலபமா நம்பிடக்கூடாது”

 

“நீ சொல்றது சரிதான் அக்கா. ஆனால் ஆர்யன் சார் அப்படிப்பட்டவர் இல்லைனு தோணுது” என்றாள் அகல்விழி 

 

“அந்த ஆர்யா உன் கிட்ட சொன்னத அப்படியே நம்ம செழியன் அண்ணா எதிர்ல சொல்ல சொல்லேன் பார்ப்போம்” என்றாள் வளர்மதி சவாலாக 

 

அகல்விழி திருதிருவென்று விழிக்கவும், “இத அப்படியே சும்மாவிட கூடாது. அண்ணாவுக்கு இப்பவே இந்த விஷயத்தை சொல்லிடனும். அப்பதான் அந்த ஆளு உன் கிட்ட நெருங்க மாட்டாரு” என்றாள் ஒரு முடிவுடன்

 

“வேணாம் அக்கா. பாவம்! அண்ணனுக்கு தெரிஞ்சா உடனே கிளம்பி வந்துடும். அவர் பெரிய இடத்து ஆளுனு கூட பாக்காம அவரை அடிச்சுடும். நான் இனிமே அவர்கிட்ட பேசமாட்டேன். அவரே என்கிட்ட பேசினா கூட நான் பேசமாட்டேன். போதுமா? இத்தோட இந்த விஷயத்த விட்டுடு” என்றாள் அகல்விழி கெஞ்சலாக

 

வளர்மதி தங்கையின் பேச்சை காதில் வாங்காமல் செங்கதிர்செழியனுக்கு அழைத்தாள் 

 

“வளர் பாப்பா பங்க்ஷன் முடிஞ்சிடுச்சாடா?” அண்ணனின் பாசக்குரலில் பாகாய் உள்ளம் உருக, “முடிஞ்சிருச்சு அண்ணா” என்றாள்

 

“அறுவடை முடிஞ்சதும் விழா முடியறதுக்குள்ள எப்படியாவது உங்கள நேர்ல பாக்க சென்னை கிளம்பி வந்துடலாம்னு இருந்தேன். அதுக்குள்ளார அம்மாவும், உன் பெரிய அண்ணியும் போன் பண்ணி வீரமல்லிக்கு பெண் குழந்தை பிறந்திருக்குனு சொன்னாங்க. விஷயம் கேள்விபட்டதும் குழந்தைய ஒரு எட்டு போய் பாத்துட்டு வாரதுக்கு நேரம் ஆயிடுச்சு.‌ இனி பிளைட்டை புடிச்சு வந்தாலும் மேடையில பரிசு வாங்கறத நேர்ல பாக்க முடியாதே, கிளம்பலாமா வேணாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்”

 

“பரவால்லண்ணா, ரொம்ப நேரமாயிடுச்சு. நீ வராத. ‌ அங்கன இருக்கிற வேலைய பாரு. கடைசி பரீட்சை இன்னும் கொஞ்ச நாள்ல ஆரம்பிச்சுடும் அது முடிஞ்சதும் வந்து எங்களை அழைச்சிட்டு போக வருவ தானே?” 

 

“ஆமாம்மா.‌ இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் மேடைல பரிசு வாங்கினத நேர்ல பாக்க முடியலயேனு மனசு சங்கடமா போயிடுச்சு.‌ பரிசு வாங்கின போட்டோ இருந்தா அனுப்பு அதையாவது பார்க்கறேன்” 

 

“சரி அனுப்பறேன். உன்கிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் சொல்லணும், கேட்டதும் கோபப்படாதே, உடனே கிளம்பி வந்துடாதே, உன்கிட்ட சொல்லி வைக்கணும்னு தான் இந்த விஷயத்தை சொல்றேன்”

 

வளர்மதியின் பீடிகையான பேச்சு அகல்விழியின் அடிவயிற்றை கலக்கி விட்டது. அந்த பக்கம் செழியனின் அழுத்தமான குரல் தெளிவாக கேட்டது. 

 

“என்னாச்சு பாப்பா? ஏதாச்சும் பிரச்சனையா? என்னால உடனே வரமுடியலனாலும் இங்கன இருந்தே நான் சொன்னா பிரச்சனைய சரிசெய்யக்கூடிய சரியான ஆள் சென்னையில இருக்காரு, நீ பயப்படாம சொல்லு” என்றான் ஆர்யனை மனதில் வைத்துக் கொண்டு

 

“பெரிசா எதுவும் இல்லண்ணா” என்று ஆரம்பித்தவள் ‌செழியனின் மனதில் இருந்தவனையே குறை கூற ஆரம்பித்தாள்.

ஆர்யன் சிறப்பு விருந்தினராக வந்தது முதல் அகல்வியிடம் தன்னை மாமா என்று சொன்னது வரை அனைத்தையும் அண்ணனிடம் ஒரு வரி விடாமல் ஒப்பித்தாள்.

 

அகல்விழியோ செழியனை எண்ணி உள்ளுக்குள் நடுங்கி கொண்டிருந்தாள். அவள் பயந்தது போலவே, “போனை அகல் கிட்ட கொடு. நான் என்னன்னு விசாரிக்கிறேன்” என்ற செழியனின் குரலில் சர்வமும் நடுங்க எச்சிலை விழுங்கியபடி தமக்கையை பாவமாக பார்த்தாள்.

 

அவளோ சிறிதும் இளகாமல் கைபேசியை தங்கையிடம் கொடுத்துவிட்டு தன் வேலை முடிந்தது என்று ஓய்வறைக்குள் புகுந்து கொண்டாள். 

 

அகல்விழியை இதுநாள் வரை செழியன் எதற்காகவும் அதட்டி பேசியதில்லை. இன்று அண்ணன் என்ன பேசப்போகுதோ? என்ற திகிலுடன் கைபேசியை காதில் வைத்தாள். 

 

“அண்ணா” 

 

“அகலு, வளர்மதி பக்கத்துல இருந்தா கொஞ்சம் தனியா வந்து பேசு” என்றான் செழியன். 

 

“ஏன்?”

 

“சொல்றத மட்டும் செய்! ஊடால கேள்வி கேட்காதே!” 

 

“அக்கா பாத்ரூமுக்கு போயிருச்சு அண்ணே” 

 

“ஆர்யன் விருந்தாளியா உங்க காலேஜுக்கு வந்தாராமே! வளர்பாப்பா கிட்ட ஏதாச்சும் பேசினாரா? அவரை எடுத்தெறிஞ்சு ஏதாச்சும் பேசிப்புட்டாளா அவ?” 

 

அண்ணனிடம் எதிர்பார்த்த சரவெடி புஸ்வானம் ஆகிவிட்டதில் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், ‘ஏன் கோபப்படாம வேற என்னென்னவோ கேக்கறாரு’,  என்ற குழப்பமும் தொக்கி நின்றது.

 

“இல்லண்ணே அவர் அக்கா கிட்ட எதுவுமே பேசல. என்கிட்ட தான் உங்களை விசாரிச்சாரு. காலையில அவரே உங்க கிட்ட பேசுறேன்னு சொன்னாரு”

 

“ஆர்யன் உங்க காலேஜுக்கு வந்தது இதுதான் முதல் தடவையா? இதுக்கு முன்னாடி வந்திருக்காரா?”  

 

“ஏன் கேக்குறீங்க?” 

 

“கேட்டதுக்கு பதில மட்டும் சொல்லு, எதிர் கேள்வி கேட்காத” ‌அண்ணனின் அழுத்தமான வார்த்தைகளில் தன் ஆர்வத்தை அடக்கி கொண்டாள் 

 

“நீங்க காலேஜ் சேர்ந்து இது மூணாவது வருஷம். இந்த மூணு வருஷத்துல அவர காலேஜ் பக்கத்துல பார்த்து இருக்கியா? வளர்மதி கிட்ட பேச ஏதாச்சும் முயற்சி பண்ணாரா?” 

 

“அவரை நிஷா அக்கா கல்யாணத்துல பார்த்ததோடு சரி. இன்னைக்கு தான் பார்த்தேன்.‌ அவர்தான் பரிசு கொடுத்தார் ரெண்டு தடவை அவர்கிட்ட பரிசு வாங்கினப்போ கூட என்னை அவருக்கு அடையாளமே தெரியல. மூணாவது தடவை தான் ஞாபகம் வந்து என்கிட்ட பேசினாரு”

 

“அப்போ வளர்கிட்ட அவர் இந்த மூணு வருஷமா ஆர்யன் பேச முயற்சி செய்யல அப்படித்தானே?”  

 

‘அவர் ஏன் வளர் அக்கா கிட்ட பேச போறாரு? அப்படியே பேசிட்டாலும்! அவ மூஞ்சில அடிச்ச மாதிரி பேசி இருப்பா. இப்போ எல்லாம் சிடுமூஞ்சி கணக்கா சுத்திட்டு கிடக்கா’ என்று மனதில் நினைத்தவள் அண்ணனிடம் அதை சொல்லாமல், “இல்லண்ணே, அவர் அக்கா கிட்ட எனக்கு தெரிஞ்சவரைக்கும் பேசினதில்ல”

 

“நல்லது ஆர்யன் நல்ல மனுஷன்னு நிரூபிச்சிட்டாரு. நான் அவர்கிட்ட பேசிக்கிறேன். நான் இப்போ பேசுனத வளர்கிட்ட உளறிட்டு இருக்காத புரியுதா?”

 

‘நான் உளரணும்னா முதல்ல என்ன விஷயம்னு எனக்கு புரியனுமுல்ல’ மனதிற்குள் நினைத்தவள் “சரிண்ணே” என்றாள் நல்ல பிள்ளையாக.

 

“அகலு! கடைசி பரிட்சையையும் நல்லபடியா எழுதிடணும் சரியா? நீ நல்லா எழுதுவேன்னு எனக்கு தெரியும். எப்பவும் போல வளர்பாப்பாவுக்கு தெரியாதத நல்லா சொல்லிக் கொடுத்து உன்னைய மாதிரி அவளையும் பாஸாக்கிடணும்” 

 

“அதுக்கு அவசியமே இல்ல. இப்போ எல்லாம் அக்காவே நல்லா படிக்குது. சமயத்துல அவங்கதான் எனக்கு சொல்லிக் கொடுக்குறாங்க” 

 

“சந்தோஷம். ஆர்யன் வேற ஏதாச்சும் சொன்னாரா உன்கிட்ட?” என்று மீண்டும் செழியன் ஆர்யனை பற்றி விசாரித்தான். 

 

“அவரோட கார்டு கொடுத்து ஏதாவது உதவி தேவைன்னா போன் போட சொன்னாரு”

 

“சரி! என்னால சென்னை வரமுடியாத சமயத்துல ரொம்ப அவசியமா இருந்தா மட்டும் அவருக்கு போன் பண்ணி உதவி கேளு.‌ வளர் பாப்பாக்கு தெரிய வேணாம்” என்று செழியன் மீண்டும் வளர்மதியை பற்றியே குறிப்பாய் பேசிவிட்டு அழைப்பை துண்டித்து இருந்தான் 

 

அகல்விக்கு எதுவும் விளங்காவிட்டாலும் செழியன், ஆர்யன், வளர்மதி மூவருக்கும் இடையே ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது என்று உணர்ந்து கொண்டாள்.

 

ஆர்யன் தன்னை மாமா என்று அழைக்க சொன்னதன் காரணம் ஒருவேளை வளர்மதியாக இருக்குமோ? அவர் பார்வை கூட அடிக்கடி வளர்மதி பக்கம் சென்று வந்த மாதிரி இருந்ததே ‌ என்று பலத்த யோசனையில் இருந்தாள். 

 

ஓய்வறையில் இருந்து வெளியே வந்த வளர்மதி தங்கையின் மௌனத்தை கண்டு, “அகல், அண்ணன் உன்னை ரொம்ப திட்டிருச்சா? சாரிடி” என்று தங்கையின் தலையை வருடினாள் வளர்மதி. 

 

“அதெல்லாம் இல்லக்கா. நான் வேற யோசிச்சிட்டு இருந்தேன்” 

 

“சரி வா சாப்பிட போகலாம்”

 

அகல்விழியும் மற்றதை மறந்து அன்று ஆண்டு விழா நிகழ்ச்சிக்காக கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரியாணி ஐஸ்கிரீம் இவற்றை நினைவு கூர்ந்து ‘நமக்கு சோறு தான் முக்கியம்’ என்று நினைத்து வளர்மதியுடன் நடந்தாள்.

 

ஆர்யன் அவசரமாக மீட்டிங் ஹாலுக்குள் நுழையும்போது அனைவரும் கிட்டத்தட்ட கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தனர்.‌ ஆதிசங்கரன் முகம் கடினமாக இருந்தது. 

 

தந்தையின் முகத்தை பார்க்காமல் மற்றவர்களை பார்த்து ஆர்யன் பேச தொடங்கினான்.‌ “சாரி ஜென்டில்மென்! உங்கள காக்க வைக்கணும்ங்கிறது என்னோட நோக்கமில்லை. நீங்க கேட்ட மாதிரியான பிராஜெக்ட்டை நாங்க ஆல்மோஸ்ட் முடிச்சிட்டோம். ஆனாலும் ப்ராஜெக்ட்ல இன்னும் கொஞ்சம் இம்ப்ரவைஸ் பண்ணினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. எனக்கு திருப்தி ஆகாத ஒரு விஷயத்தை உங்களுக்கு பிரசன்டேஷனா காட்ட விரும்பல.‌ அதே சமயம் வேலை முடியலனு சொல்லி உங்கள மூட்அவுட் பண்ண வேணாம்னு நினைச்சேன். அதனால தான் நான் லேட்டா வந்தேன். பிராஜெக்ட்டும் ரெடியாயிடுச்சு. நாங்க பண்ணின இம்ப்ரவைஸ்க்காக உங்களுக்கு எந்த சார்ஜ்ம் இல்ல” 

 

“வாவ், யு ஆர் கிரேட் ஆர்யன். பேசின அமெளன்ட்க்கு வேலை செஞ்சா போதும்னு நினைக்காம உங்களோட பெஸ்ட் கொடுக்கணும்னு நினைச்சு இருக்கீங்க பாருங்க. ஆதிசங்கரன் சாரோட வாரிசுனு நிருபிச்சிட்டீங்க! எங்கே? உங்க பிரசன்டேஷன காட்டுங்க பாக்கலாம்”

 

‘இது எப்ப நடந்துச்சு’ என்ற கேள்வியுடன் நண்பனை ஆச்சரியமாக பார்த்திருந்த யுகியை கண்களால் அழைத்தான். “யுகி நிஷாகிட்ட இருக்கிற டாக்குமெண்ட்ட காப்பி எடுத்துட்டு வா” என்று பென்டிரைவை நீட்டினான் 

 

அவனும் ஓடிச்சென்று தன் மனைவி நிஷாவிடம், “ப்ராஜெக்டை இம்ப்ரூவைஸ் பண்ண சொன்னனா ஆர்யன்” என்று கேட்டான். 

 

“ஆமா”

 

“எப்போ சொன்னான்?”

 

“காலேஜ் ஃபங்ஷன் போகும்போது என்கிட்ட கோடிங் எழுதி கொடுத்துட்டு வரதுக்குள்ள முடிச்சு வைக்க சொன்னாரு. நானும் அவர் வரும்போது கரெக்டா முடிச்சுட்டேன்” என்றபடி யுகியின் கையில் இருந்த பென்டிரைவில் டாக்குமென்டை பதிவேற்றம் செய்து கொடுத்தாள். 

 

“இதை ஏன் முன்கூட்டியே என்கிட்ட சொல்லல? சொல்லியிருந்தா ஆதிசங்கரன் சாரோட நெற்றிக் கண் பார்வையில இருந்து தப்பியிருப்பேன் இல்ல?” என்று முறைத்தான் 

 

“கமான் யுகி. இது ஆபீஸ் வொர்க்! எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு செய்ய முடியுமா? இல்ல நீ தான் என்கிட்ட சொல்லிட்டு செய்றியா? அதுக்கெல்லாம் நேரம் தான் இருக்கா?” என்றாள் நிஷா கடுப்புடன் 

 

“நீ சொல்றதும் பாயிண்ட் தான்.‌ சாரி நிஷா குட்டி, கோச்சுக்காத!” என்று மனைவியின் கன்னத்தை யாரும் அறியாமல் கிள்ளிவிட்டு பென்ரைவ்வுடன் மீட்டிங் ஹாலுக்கு சென்றான்

 

ஆர்யன் அதை வாங்கி பிரசன்டேஷனை விளக்க ஆரம்பித்தான்.‌ வந்திருந்தவர்கள் தாமதமாவதை பொருட்படுத்தாமல் அவன் பேச்சை ஆர்வமாக கேட்க ஆரம்பித்தனர்.‌ இடையிடையே அவர்கள் கேட்ட சந்தேகத்திற்கு அவன் புன்முறுவலுடன் பதில் சொல்வதும் அவர்கள் கைதட்டுவதும் ஆதிசங்கரனுக்கு பெருமையாக இருந்தது 

 

‘என் மகன்’ என்று பெருமையுடன் மீசையை தடவிக்கொண்டவர் இனி அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் வெளியே செல்ல எத்தனித்தார்.‌ எதிரே தென்பட்ட யுகியை தன்னுடன் வரும்படி கண்களால் அழைக்க அவனும் அவர் பின்னால் சென்றான். 

 

வெளியே சென்றதும், “ஏன்டா யுகி, ப்ராஜெக்ட்டை இம்ப்பரைவைஸ் பண்றதுக்காக தான் ஆர்யன் மீட்டிங் வர லேட் பண்றான்னு எனக்கு முன்னாடியே சொல்லியிருக்கலாம் இல்ல? நானும் டென்ஷன் இல்லாம கூலா இருந்திருப்பேனே”

 

“ஐ ஆல்சோ டோன்ட் நோ சார்”

 

“உன் பொண்டாட்டி நிஷா தான் ப்ராஜெக்ட் இம்ப்ரவைஸ் பண்ணியிருக்கா. தெரியாதுனு சொல்றீயே”

 

“அவ வேற கேபின், நான் வேற கேபின், ஹவ் டு ஐ நோ சார்?” 

 

அவர் அவனை ஒரு மாதிரி பார்த்து முறைக்கவும் “சார் சத்தியமா இந்த விஷயம் எனக்கு தெரியாது. என்னை நம்புங்க” என்றான் அவசரமாக 

 

“இந்த விஷயம் உனக்கு தெரியாதுன்னா வேற எந்த விஷயம் உனக்கு தெரியும்?” என்றார் அவன் கண்களை கூர்மையாக பார்த்து.‌

 

யுகி அவர் கேள்வியில் அதிர்ந்து விழித்தவன், அவர் கண்களை நேராக பார்க்க முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டான். 

“நீ மட்டும் கல்யாணமாகி குழந்தை பெத்து அதுக்கு பர்த்டேவும் கொண்டாடிட்டே. ஆர்யனை கல்யாணம் பண்ணிக்க சொன்னா இப்போதைக்கு கல்யாணம் வேணாம், நேரம் வரட்டும் நானே சொல்றேன்னு சொல்றான். அந்த நேரம் எப்போ வரும்னு கேட்டா பதில் சொல்ல மாட்டேங்கிறான். யாரையாச்சும் லவ் பண்றானானு பார்த்தா அப்படியும் யார் பின்னாலயும் சுத்தின மாதிரி தெரியல. இன்னைக்கு தான் திடீர்னு காலேஜ்க்கு சீஃப் கெஸ்ட்டா போயிருக்கான். அந்த காலேஜ் மேல அவனுக்கு என்ன அக்கறை? அங்கே யார் இருக்கா?”

 

பதில் சொல்ல முடியாமல் திணறிய யுகியின் கண்கள் அலைப்புறவும் புருவம் உயர்த்தி என்னவென்று கேட்க, “ஐ டோன்ட் நோ சார்” என்றான் கிளி பிள்ளையாக ‌

 

“அப்ப சரி! இனிமே உனக்கு நைட் ஷிப்ட். நிஷாக்கு டே ஷிப்ட்! போய் வேலையை பாரு” 

 

“சார் மேரேஜ்க்கு அப்புறம் ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி ஷிப்ட் வேணும்னு கேட்டு இருந்தேனே. நீங்களும் இந்த மூணு வருஷமா எங்களுக்கு டே ஷிப்ட் தானே கொடுத்தீங்க. இப்ப ஏன் திடீர்னு எங்களுக்கு ஷிப்ட் மாத்துறீங்க” அலறினான் யுகேந்திரன் 

 

“You don’t know anything. From now on, you have to know everything. எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும்னா நீ நைட் ஷிப்ட் வேலை செஞ்சா தான் தெரிஞ்சுக்க முடியும்” என்று விட்டு அவர் முன்னால் செல்ல அவர் பின்னாலே ஓடினான்.

 

மறுநாள் காலை ஆர்யன் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த வேளையில் செழியனிடமிருந்து அழைப்பு வந்தது.

 

“ஹாய் செழியன்! எப்படி இருக்கீங்க?”

 

“நல்லா இருக்கேன் ஆர்யன். நீங்க எப்படி இருக்கீங்க? நேத்து பாப்பா படிக்கிற காலேஜ்ல சீஃப் கெஸ்ட்டா போயிருந்தீங்களாமே” 

 

“அந்த காலேஜோட ஓனர் எங்க அப்பாவோட பெஸ்ட் பிரண்ட்.‌ அப்பாவை கண்டிப்பா வரணும்னு சொல்லி இன்வைட் பண்ணி இருந்தாரு.‌ அப்பாவால போக முடியல. அவர் என்னை போக சொல்லி கம்பல் பண்ணதால தான் போனேன் செழியன். நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க”

 

செழியன் அடக்கமாட்டாமல் சிரித்தான்.

 

“ஏன் சிரிக்கறீங்க செழியன்?”

 

“உங்கப்பா கட்டயாப்படுத்தினதால போனவர் தான், அண்ணனோட பிரெண்ட் அண்ணனா தான் இருக்கணுமா? மாமாவா இருக்க கூடாதானு சொன்னீங்களாமே கேள்விப்பட்டேன்”

 

“யார், யார் சொன்னது? அது சும்மா” ஆர்யன் திணற, “பதட்டப்படாதீங்க, நான் தப்பா எடுத்துக்கல. நான் கேட்டுக்கிட்ட மாதிரி நீங்க என் தங்கச்சிய மூணுவருஷமா நெருங்காம இருந்தீங்க. கடைசி பரிட்சைக்கு அப்புறம் ஊருக்கு போயிருவாங்கனு கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்தி பார்க்க போயிருக்கீங்க”

 

தன் மனதை கண்ணாடி போல எடுத்துரைத்த செழியனை நினைத்து ஆர்யனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அண்ணனை போல தங்கையும் அவன் மனதை புரிந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

 

(தொடரும்) 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top