ஆர்யனின் கைப்பேசி ஒலிக்கவும் தூக்கம் கலைந்து புரண்டவன், மேஜையிலிருந்து அதை ஏற்று காதில் வைத்தான்.
“ஆர்யா இன்னும் தூங்கிட்டு இருக்கியா? இல்ல அப்புறமா பேசட்டுமா?” என்றார் ஆதிசங்கரன்
“இல்லப்பா, பேசுங்க ஆபிஸ் கிளம்பிட்டிங்களா?” என்றான் கொட்டாவி விட்டபடி
“ஆபிஸ்க்கா? நான் செழியன் கூட அவங்க ஊருக்கு கிளம்பி போயிட்டு இருக்கேன்”
“என்னப்பா சொல்றீங்க? அவங்க எப்போ கிளம்பினாங்க? என்னை ஏன் எழுப்பல?”
“பத்து மணி வரைக்கும் வெயிட் பண்ணோம்டா, நீங்க கீழே வரவே இல்ல. சரி தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும், நாம கிளம்பலாம், போற வழியில உனக்கு போன் பண்ணி சொல்லிக்கலாம்னு செழியன் சொன்னாரு. சரினு நானும் கிளம்பிட்டேன். யுகிக்கு போன் பண்ணி ஆபிஸை பார்த்துக்க சொல்லிட்டேன். முக்கியமான மீட்டிங், கையெழுத்து போடணும்னா மட்டும் உன்னை கூப்பிட சொல்லி இருக்கேன். சோ ஆபிஸ்ல உனக்கு பெரிசா வேலை இருக்காது.
செக்யூரிட்டி தவிர வீட்டு வேலை, சமையல் வேலை செய்யறவங்களுக்கு லீவு கொடுத்து அனுப்பிட்டேன். சாப்பிடறதுக்கு ஏதாச்சும் ஆர்டர் பண்ணி சாப்பிட்டுக்கோங்க. இல்லைனா எங்காச்சும் ஹனிமூன் போயிட்டு வாங்க”
“ப்ச், நேத்து நான் ஆபிஸ்ல உங்க கிட்ட சொல்லாம மதியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு இப்போ பழி வாங்கறீங்களா?” என்றான் நெற்றியை தேய்த்துக் கொண்டு.
“சேச்சே, அப்படியெல்லாம் இல்ல. நிஜமாவே பேரன் பேத்தியை சீக்கிரம் பாக்கணும்ங்கிற ஆசையால தான் உங்களுக்கு தனிமையை ஏற்படுத்தி கொடுத்திருக்கேன். அதுமட்டுமில்லாம எனக்கும் ஒரு சேஞ்ச் தேவை. எப்பவும் பிசினஸ்னு ஒரு மிஷின் மாதிரியே வாழ்க்கை போயிட்டு இருக்கு. கொஞ்ச நாள் இதையெல்லாம் மறந்துட்டு கிராமத்துல நடக்குற திருவிழாவை பாத்து என்ஜாய் பண்ண போறேன்”
“ம், சரிப்பா” என்றவன் செழியன் மற்றும் கனிஇதழியிடம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தான். வளர்மதி குளியலறைக்குள் இருப்பாள் என்று கதவை தட்ட அது திறந்து கொண்டது. ஏற்கனவே குளித்துவிட்டு கீழே சென்று விட்டிருக்கிறாள் என்று புரிய, அவசரமாக முகம் கழுவி கீழே சென்றான்.
வளர்மதி தலையில் ஈரடவலோடு சமையலறைக்குள் வேலையாக இருந்தாள். ஆர்யன் சத்தமில்லாமல் பின்னால் இருந்து அவளை அணைத்தான். வெற்று உடலுடன் இருந்தவனின் தேகம் பட்டதும் வளர்மதியின் உடல் சிலிர்த்து அடங்கியது.
“டீயா? காபியா? என்ன குடிக்கறீங்க?” அவள் குரல் நலிந்து ஒலித்தது.
“உன்னை குடிக்கிறேன்” என்றவன் அவள் இடையை சுற்றி வளைத்து முதுகில் விழுந்திருந்த நீர் துளிகளில் இதழ் ஒற்றினான்.
கணவனின் செயலில் கையில் இருந்த டம்ளரை நழுவ விட்டாள். அதை பின்னால் இருந்து பிடித்தான். அவன் கையில் இருந்த டம்ளரில் தேநீரை ஊற்றினாள்.
அவன் அதை எடுத்து வளர்மதியின் வாயருகே வைக்க, “நான் குடிச்சிட்டேன், நீங்க குடிங்க” என்றாலும் அவன் அப்படியே இருக்க, மெல்ல தேநீரை உறிஞ்சினாள். ஒற்றைக் கையால் அவள் முகத்தை சட்டென அவன் பக்கம் திருப்பி அவள் இதழ்களில் இதழ் பதித்தான்.
அவள் அதிர்ந்து விழிவிரிக்க, ஒற்றைக் கண்ணை அடித்தவாறு, அவள் இதழோரம் வடிந்த தேநீருடன் இதழ்நீரையும் உறிஞ்சினான். மீண்டும் டம்ளரை அவளின் உதட்டோரம் வைக்க, கணவனின் கள்ளத்தனம் புரிந்து அவள் மறுத்தாலும் அவன் விடுவதாக இல்லை.
மிச்சமிருந்த தேநீரை மொத்தமாக அவளுடன் பருகியவன் அவளின் இடையை பிடித்து தூக்கி கொண்டு படுக்கை அறை நோக்கி செல்ல
“பாதி சமையல் முடிஞ்சிருச்சு, இறக்கி விடுங்க, சமைச்சிட்டு வரேன்” என்று சிணுங்கினாள்.
“எதுக்கு சமைச்சிட்டு இருக்கே, ஆர்டர் பண்ணிக்கலாம்”
“உங்க தங்கச்சி இதுவரைக்கும் எனக்கு எதுவும் சமைச்சு தரலைன்னு அண்ணன் கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணீங்களா? மாப்பிள்ளைக்கு சமைச்சு போடுனு அண்ணன் போன்ல சொல்லுச்சு”
“போற போக்குல மாட்டி விட்டு போய்ட்டாரா?”
“மாட்டிவிடல, மாப்பிள்ளைக்கு உன் கையால சமைச்சு போடுனு சொல்லுச்சு, அவ்வளவு தான்”
ஆர்யன் அவளுடன் சேர்ந்து உதவி செய்வதாக சொல்ல, “நீங்க முதல்ல குளிச்சுட்டு வாங்க” என்று அவனை அனுப்பி வைத்தாள்.
அவன் குளித்து தயாராகி வந்த போது சாப்பாட்டு மேஜையில் உணவுகளை வைத்துக் கொண்டிருந்தாள். ஆர்யன் அமர்ந்ததும் சாப்பாடு பரிமாறினாள்.
ஆர்யனோ சாப்பிடாமல் வளர்மதியையே பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்கு என்ன புரிந்ததோ உணவை பிசைந்து அவனுக்கு ஊட்டிவிட்டாள். சிறுவயதில் பார்வதி சாப்பிட சொன்னால் ஆர்யன் அமைதியாக அன்னையை பார்ப்பான். அவரும் இப்படி தான் ஊட்டி விடுவார். வளர்மதியும் அவன் சொல்லாமே புரிந்து கொண்டு உணவை வாயில் வைத்ததும் ஆர்யனின் கண்கள் லேசாக கலங்கியது.
திரும்பி பூஜையறையை பார்த்தான். எப்போதும் மூடியிருக்கும் பூஜை அறை திறந்து வைக்கப்பட்டிருந்தது. பார்வதியின் புகைப்படத்திற்கு பூ வைத்து இரு பக்கத்திலும் குத்துவிளக்கு ஏற்ற பட்டிருந்தது.
ஆச்சர்யத்துடன் மனைவியை பார்த்தான், அவள் புன்னகையுடன் உணவை அவன் வாயில் திணிக்க, அவளை இழுத்து அவன் மடியில் அமர்த்திக் கொண்டான். அவன் உணவை அவளுக்கு ஊட்டி விட இருவரும் உண்டு முடித்தனர்.
யுகியுடன் அலுவலக வேலைகளை கைப்பேசியிலேயே பேசி முடித்து விட்டு, “மதி வெளியே போகப் போறோம், கிளம்பு” என்றான்.
“எங்கே?”
“அப்பாவும் ஊர்ல இல்ல. வெளியூருக்கு போனா உடனே வர முடியாது, அதனால ஈசிஆர்ல பீச் அவுஸ் புக் பண்ண சொல்லி இருக்கேன். அங்கே நாலு நாள் இருந்துட்டு அப்புறம் உங்க ஊருக்கு போகலாம்” என்றான்.
இருவரும் காரில் கிளம்பி ஈசிஆர் பீச் ரிசார்ட்டை அடைந்தனர். உள்ளே உடைமைகளை வைத்து விட்டு மனைவியை வெளியே அழைத்து சென்று அவளுக்கு ஆடைகளை வாங்கினான். அவர்களின் அறைக்கு சென்றதும் வெண்ணிறத்தில் முட்டி வரை இருந்த கையில்லாத உடையை அவளிடம் கொடுத்து அணிந்து வரச்சொன்னான்.
அதை அணிந்து வந்த வளர்மதி வெண்மதியாக ஜொலித்தாள். அவள் முகத்தில் இருந்த பருக்கள் கூட அவனுக்கு அழகாக தெரிந்தது. அவளை மேலிருந்து கீழாக பார்த்தவன், “தேவதை மாதிரி இருக்கே மதி” என்றான்.
கணவனின் புகழ்ச்சியில் முகம் சிவந்தவள், “நான் தேவதை இல்ல, நீங்க தான் எனக்கு கிடைச்ச ஆண் தேவதை” என்றாள்.
“தேவதைனு சொல்லி வரம் எல்லாம் கேட்க கூடாது” என்று சிரித்தான்.
“நீங்க கிடைச்சதே எனக்கு வரம் தான், அதனால வேற வரம் கேட்க மாட்டேன் பயப்படாதீங்க”
“அடேங்கப்பா! ஆனா நான் உன்கிட்ட இருக்கற மொத்த பொக்கிஷத்தையும் வரமா கேட்பேன்” என்றான் குறும்புடன்
“என்கிட்ட என்ன பொக்கிஷம் இருக்கு?” என்றவளை அழுத்தமாக அவன் பார்த்த பார்வையில் உடல் மொத்தமும் உஷ்ணத்தில் தகிக்க தொடங்கியது.
“என்ன மதி இப்படி கேட்டுட்டே” என்றவன் முன்தினம் இரவில் அவள் அங்கங்களை பொக்கிஷங்களாக எண்ணி ரசித்ததை பற்றி வர்ணிக்க தொடங்கினான்.
“போதும், நீங்க பிசினஸ் மேன் தான் ஒத்துக்கறேன்” என்றவள் எட்டி அவன் இதழ்களை தன் விரல்களால் மூட, அவனோ அவளின் விரல்களை சுவைக்க தொடங்கவும் சிணுங்கினாள்.
மதி மயங்கி நின்ற வேளையில் அவள் கரத்தை தன் தோளில் வைத்து இடையை பற்றி அணைத்தவாறு அவளை தூக்கி கொண்டு வெளியே நடந்தான். வெளியே இருட்ட தொடங்கி இருந்தது.
சமுத்திர தேவன் தன்னில் முழு மதியை ஏந்தியிருக்க, ஆர்யன் வளர்மதியை ஏந்தி இருந்தான். வளர்மதி நிலவின் அழகை ரசித்திருக்க, அவள் கணவனோ அவளை ரசித்திருந்தான். மனநிறைவினாலும் புதுமண பெண்ணுக்கான பூரிப்பிலும் அவள் முகம் பொலிவுடன் விகசித்தது.
அங்கே இருந்த பெரிய குடைக்கு கீழ் இருந்த நாற்காலியில் மனைவியை அமர வைத்து, “முன்னாடியே சொல்லி இருக்கணும், சொல்றதுக்கான சந்தர்ப்பம் கிடைக்கல” என்றவன் தன் பாக்கெட்டில் இருந்த ஒற்றை சிவப்பு ரோஜாவை அவளிடம் நீட்டி, “ஐ லவ் யூ மதி ” என்றான்.
“ஐ மேட்லி லவ் வித் யூ ஆரி” என்று அவன் கொடுத்த ரோஜாவை வாங்கி தலையில் வைத்துக் கொண்டாள். அவளின் வெண்ணிற ஆடைக்கு அந்த ஒற்றை ரோஜா மேலும் அழகு சேர்த்தது. மனைவியின் இதழ்களில் ஆழமாக இதழ் பதித்தான். அவன் தோள்களை அவள் இறுக்கமாக பற்றிக் கொண்டதும் கணவனின் இதழ் முத்தம் இடைவிடாது அவள் முகமெங்கும் தொடர்ந்தது. அவர்களின் மோகம் பொறாமையை கிளப்பியதோ என்னவோ கடல் அலை மிகுந்த சத்தத்துடன் ஆர்ப்பரிக்க இருவரும் திரும்பி பார்த்தனர்.
பெளர்ணமி நிலவினால் கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் ஆர்ப்பரித்தது. நிலவின் மீது ஏற்பட்ட மோகத்தால் சமுத்திர தேவன் நிலைக்கொள்ளாமல் ஆர்ப்பரிக்கிறானோ? ஆர்யனுக்குள்ளும் அதே ஆர்ப்பரிப்பு தான். பெண்ணவளை ஆட்கொள்ள வேண்டும் என்ற வேட்கை ஆரவாரிக்க, அவளை தூக்கி கொண்டு அவர்களுக்கான அறைக்குள் சென்று தாளிட்டான்.
ஆர்யனின் தீண்டலில் பெண்ணவளின் அங்கங்கள் தங்கமென உருகி குழைய, தீரா மோகத்தை தீர்க்க பெண்மையின் சாகரத்துக்குள் மூழ்கி தன் தேடலை தொடங்கினான். தேடி கரை காண முடியாமல் தன் தேடலை இரவு பகல் பாராது நாட்கள் கடந்தும் தொடர்ந்து கொண்டே இருந்தான்.
ஒரு வாரத்திற்கு பின்பு
ஆர்யன் வளர்மதியுடன் சென்ற கார் செழியனின் வீட்டு முன்பு நின்றது.
கார் சத்தம் கேட்டு ஓடி வந்த இலக்கியாவை ஆர்யன் தூக்கி கொள்ள, வெளியே வந்த கனிஇதழி இருவரையும் வரவேற்றாள்.
கனி கொடுத்த மோரை இருவரும் குடித்ததும், “வீட்ல யாருமில்லையா?” என்றான் ஆர்யன்
“பெரிய மாமாங்க ரெண்டு பேரும் திருவிழா வேலையில பிசியா இருக்காங்க, ஆதிசங்கரன் அப்பாவும் அவங்களோட போய் இருக்காரு. என் மாமா வேலுவும் சேர்ந்து திருவிழாவுக்கு பட்டாசு வாங்கிட்டு வர டவுனுக்கு போய் இருக்காங்க. அத்தைங்களும் அகல்விழியும் கல்யாண பொண்ணுக்கு சீர் சாமானம் வாங்க போய் இருக்காங்க, கையில ஒண்ணு வயித்துல ஒண்ணு இருக்கறதால என்னைய வீட்டுலயே விட்டுட்டு போயிட்டாங்க, மாமா கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க” என்றாள்
“கல்யாண பொண்ணுக்கு சீர் சாமானமா? யாருக்கு கல்யாணம்? அகல்விழிக்கு சம்பந்தம் பேசியாச்சா?” என்றான் ஆர்யன் கேள்வியுடன்.
“கல்யாணம் அகல்விழிக்கு இல்ல, திரெளபதிக்கு” என்ற கனிஇதழி அவர்களுக்கு சாப்பாடு கொண்டு வர சமையல் அறைக்கு சென்றாள்.
ஆர்யன் குழப்பத்துடன் மனைவியை பார்க்க, “எங்க ஊர்ல இருக்கற திரெளபதி அம்மனுக்கு ஏழு வருஷத்துக்கு ஒரு முறை பெரிசா திருவிழா கொண்டாடுவோம். திருவிழா தொடங்கறதுக்கு 48 நாளுக்கு முன்னாடியே பாரதம் பாடறவங்க மகாபாரத கதையை சொல்ல ஆரம்பிச்சிடுவாங்க. கதையில பஞ்சபாண்டவர்கள் பாஞ்சால தேசத்து திரெளபதியை கல்யாணம் பண்ணிக்கிற காட்சி வரும் போது, இங்கே அவங்களுக்கு கல்யாண ஏற்பாடு நடக்கும்.
எங்களோட முன்னோர்கள் திரெளபதியோட வம்சம்னு நம்பறாங்க. அதனால திரெளபதியை எங்க வீட்டு பொண்ணா நினைச்சு, நாங்க பொண்ணுக்கு சீர் செய்வோம், திரெளபதி அம்மனோட சிலையை எங்க வீட்ல இருந்து அலங்காரம் பண்ணி எடுத்துட்டு, தட்டு வரிசையோட கோயிலுக்கு போவோம்.
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க, அதாவது பாண்டவர் வம்சம்னு நம்பறவங்க, அர்ஜூனனோட சிலையை அவங்க வீட்ல வச்சு அலங்காரம் பண்ணி, முகூர்த்த புடவை, தாலியோட கோயிலுக்கு வருவாங்க. அங்கே ஊர்காரங்க முன்னிலையில ரெண்டு பேருக்கும் கோயில் ஐயரை வச்சு கல்யாணம் பண்ணுவாங்க. கல்யாணத்துக்கு வந்த பக்தர்கள் மொய் பணம்னு சொல்லி கோயிலுக்கு காணிக்கை செலுத்துவாங்க. வந்தவங்க எல்லாருக்கும் கல்யாண விருந்துனு அன்னதானம் நடக்கும், இந்த திருவிழா முடிஞ்சதும் கட்டாயம் மழை வரும்னு ஐதீகம். அந்த காலத்துல மழையே வராம வறட்சி அதிகமாகும் போது இந்த மாதிரி பாரதம் வச்சு திரெளபதி கல்யாணத்தை செஞ்சா மழை வரும்னு நம்பி இருக்காங்க. இப்பவும் ஏழு வருஷத்துக்கு ஒரு முறை இந்த திருவிழா நடக்கும்”
“இன்ட்ரஸ்டிங், இந்த மாதிரி திருவிழாவை நான் கேள்வி பட்டதே இல்லை. இதுக்கு தான் திருவிழாவுக்கு முன்னாடியே ஊருக்கு போகலாம்னு சொல்லிட்டே இருந்தியா?” என்றான் ஆர்யன்
“ஆமாங்க, போன தடவை இந்த திருவிழா நடக்கும் போது எங்க தாத்தா உயிரோட இருந்தாரு. திருவிழா ரொம்ப சிறப்பா நடந்து முடிஞ்ச கொஞ்ச நாள்ல தான் தாத்தா இறந்துட்டாரு. அதுக்கப்புறம் எங்க குடும்பமே சொத்து பிரச்சனைனால பிரிஞ்சு போச்சு. எல்லைல இருக்கற அம்மன் கோயில் திருவிழாவே என் அப்பா, பாண்டி அண்ணனால ரெண்டு முறை நடக்கற மாதிரி ஆயிடுச்சு. திரெளபதி அம்மன் திருவிழா நடக்கறதுக்குள்ளவாவது குடும்பம் சேர்ந்திடணும்னு நான் வேண்டிக்கிட்டேன். அதே மாதிரி பெரியப்பாவும் என் அப்பாவும் சேர்ந்து திருவிழாவை நடத்தறது எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்றாள் வளர்மதி மலர்ந்த சிரிப்புடன்.
(தொடரும்)