இணை 28

மனைவியின் மகிழ்ச்சியை பார்த்த ஆர்யன், “ஊர்திருவிழானு சொன்னதும் நான் சாதாரணமா நினைச்சிட்டேன். இந்த திருவிழாவுல உனக்கு இவ்வளவு சந்தோஷம் இருக்கும்னு முன்னாடியே சொல்லி இருந்தா, அப்பா செழியனோட வந்தப்பவே, நாமளும் வந்து இருக்கலாம் இல்ல” என்றான்.

 

“சொல்லி இருந்தா நான் மட்டும் தான் சந்தோஷமா இருந்திருப்பேன். சொல்லாததால தான் இந்த ஒரு வாரம் உங்களை சந்தோஷமா வச்சுக்க முடிஞ்சது” என்றாள் மெல்லிய குரலில்

 

அவள் மீதான அவன் வேட்கை புரிந்து, அவனுக்காக அவள் ஆசையை புறந்தள்ளி, அவனோடு ஒரு வாரமாக ஒன்றி கலந்திருக்கிறாள். அள்ள அள்ள குறையாமல் பெண் இன்பத்தை பேரின்பமாக அவனுக்கு வழங்கி இருக்கிறாள் என்று ஆர்யனுக்கு புரிந்தாலும் அவள் சந்தோஷத்தை அவனுக்காக விட்டுக் கொடுத்துவிட்டாளே என்று நினைத்தான்.

 

கணவனின் எண்ணத்தை உணர்ந்தவள், “உங்களோட இருக்கறது எல்லாத்தையும் விட எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் நாணத்துடன்

 

“உண்மையாவா மதி” என்றான் அவள் காதருகே குனிந்து

 

“ம்”

 

“என் கூட இருக்கும் போது எது உனக்கு ரொம்ப பிடிச்சது” என்று அவன் ரகசியமாக கேட்க, “அச்சோ, என்ன இப்படியெல்லாம் பேசறீங்க?” சிணுங்கினாள். அவன் மேலும் விளக்கத்துடன் பேசி கொண்டே போக, செல்லமாக அவன் தோளில் தட்டினாள்.

 

அதேசமயம் உள்ளே வந்த முத்து பாண்டி, தொண்டையை செருமவும் இருவரும் விலகி அமர்ந்தார்கள்.

 

“வளரு, உன்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கேன். வாய் பேச்சு வாய்ப்பேச்சாட தான் இருக்கணும். கைய நீட்டுறது என்ன பழக்கம்? ஆம்பளைங்கனா உங்களுக்கு கிள்ளு கீரையா போயிடுச்சா? என் முன்னாடியே மாப்பிள்ளையை கை நீட்றே? இதெல்லாம் நல்லதுக்கில்ல பாத்துக்க. வீட்டுக்கு வந்த விருந்தாளி கணக்கா உட்கார்ந்துட்டு கிடக்கே, உள்ளாற போய் மாப்பிள்ளைக்கு சாப்பிட ஏதாச்சும் எடுத்துக்கிட்டு வா” என்றான் முத்துபாண்டி கோபமாக

 

வந்ததும் ஆசையாக ஒரு வார்த்தை கூட விசாரிக்காமல் திட்டும் சின்ன அண்ணனை பார்த்து முறைத்து, “நீ இன்னும் திருந்தலயா?” என்றாள்.

 

“உன் அண்ணிக்காரி திருத்தி முடிச்சுட்டா, நீ தான் பாக்கி என்னைய திருத்தறதுக்கு. போ, சொன்ன வேலையை செய்” என்று விரட்டினான்.

 

வளர்மதி பாண்டிக்கு அழகு காட்டி விட்டு உள்ளே செல்ல ஆர்யனுக்கு அண்ணன் தங்கையின் இந்த சண்டையும் பார்க்க சுவாரசியமாகவே இருந்தது.

 

“மாப்ள எப்படி இருக்கீங்க? எப்போ வந்தீங்க?” என்று நலம் விசாரித்தபடி ஆர்யனின் எதிரே அமர்ந்தான் முத்துபாண்டி

 

“நான் நல்லா இருக்கேன் மச்சான். நீங்க எப்படி இருக்கீங்க?”

 

“ஏதோ இருக்கேன் மாப்ள” என்றான் சோகமாக

 

“ஏன் விரக்தியா பேசுறீங்க?”

 

“நான் திருந்தினது ஒரு குத்தமா மாப்ள?” என்றான்

 

“புரியல” 

 

“கல்யாணத்துக்கு முன்னாடி நான் ஜாலியா குடிச்சுட்டு இருந்தேன் மாப்ள. மொட்ட பய மாதிரி சுத்திட்டு இருக்கேன்னு சொல்லி கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க. இன்னும் ஜாலியா இருக்கலாம்னு நினைச்சு நானும் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டேன்.

 

இதுல உங்க பொண்டாட்டியோட மூத்த அண்ணன் பெரிய சதியே செஞ்சிருக்கான் மாப்ள, சமீபமா தான் எனக்கே தெரிஞ்சது” என்றான் ரகசியமான குரலில்

 

“என் பொண்டாட்டியோட மூத்த அண்ணனா? செழியனையா சொல்றீங்க? அவர் உங்களுக்கும் அண்ணன் தானே?”

 

“நான் அவனை அண்ணன்னு சொன்னதே இல்ல, அவனும் என்னை தம்பினு சொல்ல மாட்டான். அதை விடுங்க. அவன் என்ன செஞ்சிருக்கான் தெரியுமா? என் பொண்டாட்டி மல்லிகிட்ட இந்த பாண்டி பய யாருக்கும் அடங்காதவன், குடிகாரன், இவனை உன்னால தான் அடக்க முடியும். அவனை நீதான் திருத்தணும்னு சொல்லி இருக்கான் மாப்ள. ஏன் மாப்ள என்னை திருத்தறதுக்கு நான் என்ன பரிட்சை பேப்பரா?” என்று முத்துபாண்டி கேட்டதும் ஆர்யனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

 

முத்துபாண்டி முகம் சீரியசாக இருக்கவும் சிரித்தால் தப்பாக எடுத்துக் கொள்வான் என்று நினைத்து ஆர்யன் சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கி பாண்டி பேசுவதை கவனித்தான்.

 

“என் பொண்டாட்டி மல்லிக்கு நான் குடிச்சா புடிக்காதுனு நான் குடிக்கறதையே விட்டுட்டேன். அவ சொல்றதை கேட்டு நடந்துக்கிட்டேன். திருவிழாவுக்கு சாட்டு வைக்க மோளம் அடிக்கும் போது என்கிட்ட மல்லி என்ன சொன்னா தெரியுமா?”

 

“என்ன சொன்னாங்க?”

 

“செழியன் மாமா என் கிட்ட கேட்டுக்கிட்ட மாதிரி நான் உங்களை திருத்திட்டேன். நீங்களும் திருந்திட்டீங்க. இது நடந்ததுக்கு திரெளபதி அம்மனுக்கு நான் நேர்ந்துக்கிட்டதும் ஒரு காரணம், அதனால அந்த நேர்த்தி கடனை நீங்க தான் நிறைவேத்தணும்னு சொல்றா மாப்ள.

 

அந்த வளர்ந்தவன் சொன்னதுக்காக இவ என்னை திருத்தினாளாம், நானும் திருந்திட்டேனாம். நான் திருந்தினதுக்கு காரணம் என் வீரமல்லி மேல வச்ச பாசம், அதுக்கு எதுக்கு நேர்த்தி கடனை நான் செலுத்தணும்?”

 

“முடியாதுனு சொல்லிட வேண்டியது தானே?”

 

“என் மேல பாசத்தோட எனக்காக வேண்டிக்கிட்டேன்னு சொல்றப்போ முடியாதுனு சொல்ல முடியல மாப்ளே”

 

“சரி, கடவுளுக்கு செய்யறது தானே, என்ன செய்யணுமா செஞ்சுடுங்க”

 

“அதை நினைச்சா தான் மாப்ள தலை சுத்துது”

 

“ஏன்?”

 

“என் தலைல எட்டு தேங்காய் உடைக்கிறதா வேண்டி இருக்காளாம். வேண்டுதல் முடியறதுக்குள்ள தேங்காய் உடைய போகுதா என் மண்டை உடைய போகுதானு தான் தெரியல. கேட்டா, கடவுளுக்கு வேண்டிட்டு செஞ்சா வலிக்காதுனு சொல்றா மாப்ளே” என்றான் சோகமான முகத்துடன்

 

ஆர்யனுக்கு முத்துபாண்டியை பார்க்கவே பாவமாக இருந்தது.

 

“அச்சோ இப்படிக்கூடவா யாராவது வேண்டிப்பாங்க? முடியாதுனு சொல்லிடுங்க. நான் வேணும்னா மல்லிக்கிட்ட பேசறேன்” என்றான் ஆர்யன்.

 

“வேணாம் மாப்ள, எனக்காக அவ பூ மிதிக்கிறேன்னு வேண்டிட்டு விரதம் இருக்கா. நான் முடியாதுனு சொன்னா நல்லா இருக்காது”

 

“பூ மிதிக்கிறதுனா தீ மிதிக்கிறது தானே?” 

 

“ஆமா மாப்ள, அவளுக்கும் சேர்த்து தான் கவலப்படறேன். வேணாம்டினு சொன்னா தெய்வ குத்தமாயிடும்னு சொல்றா” என்றான்.

 

முத்துபாண்டி பேசுவது வேடிக்கையாக இருந்தாலும் அவன் பேச்சில் தன் மனைவியின் மீது இருக்கும் பாசத்தை உணர முடிந்தது. அவர்கள் நம்பிக்கையை தடுத்து பேசவும் ஆர்யனுக்கு தயக்கமாக இருந்தது.

 

“நீங்க எனக்காக வருத்தப்படாதீங்க மாப்ள, என் தலை பாறாங்கல்லு மாதிரி, எத்தனை தேங்கா உடைச்சாலும் தாங்கும்” என்றான் பாண்டி

 

பாண்டியின் பேச்சு அப்போது தான் உள்ளே வந்த செழியனின் காதுகளில் விழ, “வேலு, எட்டு தேங்காய் போதாதுனு நினைக்கிறேன், நூத்தியெட்டு தேங்காயை உரிச்சு வை” என்றான் சத்தமாக

 

முத்துபாண்டி செழியனை முறைக்க, “என்னைய ஏன்டா முறைக்கிற? உன் பொண்டாட்டிக்கிட்ட உன்னை நல்லபடியா கவனிச்சுக்க சொன்னேன். அவ இப்படியெல்லாம் வேண்டிப்பானு எனக்கென்ன ஜோசியமா தெரியும்? கேள்விப்பட்டதும் நானும் மல்லிய திட்டிட்டு தான் வந்தேன்”

 

“என்ன சொன்னா?” என்றான் பாண்டி ஆர்வமாக

 

“அவர் தலையில தேங்கா உடைக்கலனா பரவால்ல, அதுக்கு பதிலா என் தலையில உடைச்சுக்கறேன்னு சொல்றா. இதுல பூவும் மிதிக்க போறாளாம். நான் வேணாம்னு புத்தி சொன்னா, உங்கம்மா வேற என்கிட்ட சண்டைக்கு வராங்க. இப்போ தான் நீ திருந்தி இருக்கியாம், நேர்த்திக்கடனை நிறைவேத்தலைனா மறுபடியும் நீ தறுதலையா போயிடுவியாம்” என்றான்.

 

“பாத்தீங்களா மாப்ள? எனக்கு எதிரிங்கனு வெளியே யாருமே இல்ல. என்னை பெத்ததும், கட்டினதும், கூட பொறந்ததும் தான் எனக்கு எதிரிங்க” என்றான் முத்துபாண்டி கோபமாக

 

“இதுல நான் என்னடா பண்ணேன்?” என்று செழியன் அதட்டவும், முத்துபாண்டி அமைதியாகி விட்டான்.

 

“நல்லதே நடக்கும், போய் வேலையை பாரு” என்றான் செழியன்

 

“யாருக்கு நல்லது நடக்கும்?” முனகினான் பாண்டி

 

செழியன் கை சட்டையை மடித்து கொண்டே தம்பியை முறைக்க, அவனோ ஆர்யனிடம் பேச்சை மாற்றினான்.

 

“மாப்ள, பெரியம்மா வேற வீட்ல இல்ல. இவன் பொண்டாட்டிக்கு சமைக்கவே தெரியாது. சாப்பாடு சுமாரா தான் இருக்கும். கொஞ்சமா சாப்பிட்டு நம்ம வூட்டுக்கு வாங்க. மல்லி கறிகொழம்பு நல்லா வைப்பா. அங்கே சாப்பிட்டுக்கோங்க” என்றான்

 

“யார் நல்லா சமைப்பாங்கனு உன்னய கேட்டாங்களா?” என்றான் செழியன் 

 

“சமைக்க தெரியாத பொண்டாட்டிய வச்சுக்கிட்டே இம்புட்டு பம்மாத்து காட்றீயா? இன்னும் என் மல்லி மாதிரி சமைச்சு போட்டா என்னவெல்லாம் பண்ணுவ?” என்று அண்ணனிடம் மல்லுக்கு நின்றான்.

 

“இப்போ அடிவாங்காம நீ போக மாட்டே” என்று செழியன் அவனை நெருங்க முத்துபாண்டி வேகமாக வெளியே ஓடினான்.

 

“மாப்ள,  நம்ம சங்கத்துல உறுப்பினரா சேர்ந்துக்கறாரானு உங்க மச்சானை கேளுங்க, ராத்திரிக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து அவருக்கு என்ன பொறுப்பு கொடுக்கலாம்னு யோசிச்சு முடிவு செய்வோம்” என்று சொல்லிக் கொண்டே தன் இருசக்கர வாகனத்தில் கிளம்பினான்.

 

செழியனுக்கு எதுவும் புரியாமல் ஆர்யனை பார்க்க, அவனோ கண்ணில் நீர் வர சிரித்துக் கொண்டிருந்தான்.

 

கனிஇதழியும் வளர்மதியும் சமைத்த பதார்த்தங்களை எடுத்துக் காெண்டு கூடத்திற்கு வர, ஆர்யன் சிரித்துக் கொண்டிருப்பதை வியப்புடன் பார்த்து அப்படியே நின்று விட்டனர்.

 

“ஏதோ சங்கம்னு சொல்லிட்டு போறான்? என்ன சங்கம்? உங்களுக்கு தெரியுமா மாப்ள?” செழியன் ஆர்யனிடம் விளக்கம் கேட்டான்.

 

ஆர்யன் சிரித்துக் கொண்டே “பாவப்பட்ட கணவர்கள் சங்கம், அதுல உறுப்பினர் தலைவர் எல்லாம் ஒரே ஆளு தான், அவர் தான் முத்துப்பாண்டி. என்னையும் துணைத் தலைவரா ஆக்கிட்டதா வளர்மதியை பொண்ணு பாக்க வரப்போ சொன்னாரு. இப்போ உங்களுக்கும் ஏதோ பொறுப்பு கொடுக்க போறாருனு நினைக்கிறேன்” என்று சிரித்தான் ஆர்யன்.

 

“கோமாளி பய, இப்படித்தான் ஏதாச்சும் பேசிட்டு கிடப்பான். நீங்க வாங்க சாப்பிடறதுக்கு, கனி சாப்பாடு போடு” என்றான்.

 

“இல்ல, நான் அப்புறமா சாப்பிட்டுக்கறேன்” என்றான் ஆர்யன்

 

“அண்ணா, பாண்டி மாமா சொன்னதை கேட்டு பயந்துட்டீங்களா? முன்னாடி ஒரு நாள் அத்தை இல்லாதப்போ சமைச்சேன், அன்னைக்குனு பாத்து பாண்டி மாமா பசிக்குதுனு சாெல்லுச்சு. சாப்பாடு போட்டேன். நல்லா சாப்புட்டு, சாப்பாடு நல்லா இல்லனு சொல்லுது. நீங்க நம்பாதீங்க” என்றாள் கனிஇதழி

 

செழியன் ஆர்யனின் அருகே அமர்ந்தபடி “ஆமா மாப்ள நம்பாதீங்க, சாப்பாடு நல்லா இருக்கும்னு நம்பாதீங்க” என்று சத்தமாக ஆரம்பித்து மெல்லிய குரலில் முடித்தான்.

 

ஆர்யன் திகைப்புடன் செழியனை பார்க்க, அவன் கண்சிமிட்டி விட்டு, “சாப்பிட முடியாத அளவுக்கு இருக்காது. டிரை பண்ணுங்க” என்றான் மெல்லிய குரலில்

 

மரணபயத்துடன் ஆர்யன் உணவை வாயில் வைத்தபோது ருசி நன்றாகவே இருந்தது. அவன் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்த கனிஇதழி, “அண்ணா, நல்லா தானே இருக்கு?”

 

“ம், நல்லா இருக்குமா” என்ற ஆர்யன், மனைவியை பார்த்து, “மதி உன்னோட சமையல் மாதிரி இருக்கு” என்றான்.

 

“அதானே பாத்தேன்” என்ற செழியனை பார்த்து முறைத்தாள் கனிஇதழி

 

“மாமா நான் தான் சமைச்சேன், வளரு கொஞ்சம் தான் ஹெல்ப் பண்ணா” என்று சிணுங்கினாள்.

 

“நானும் அதை தான் சொன்னேன் ப்ரூட்டி. நீயே சமைச்சிருந்தா ருசி வேற மாதிரி சூப்பரா இருந்திருக்கும். பாப்பா சமைச்சதால இது வேற ருசியா இருக்கு” என்றான் சமாதானமாக

 

ஆர்யன் செழியனை திகைப்புடன் பார்த்து “ரெண்டு மச்சான் கிட்டயும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு போலயே” என்று சிரித்தான்.

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
1 Comment
error: Content is protected !!
Scroll to Top