அன்று கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சி! சிறப்பு விருந்தினர் இருக்கையில் இளம் தொழிலதிபர் ஆர்யன் நடுநாயகமாக வீற்றிருக்க கல்லூரி முதல்வர் அவனுக்கு வரவேற்புரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்
ஆர்யனின் பாக்கெட்டில் இருந்த கைபேசி அதிரவும் அதை எடுத்து பார்த்தான். யுகேந்திரனின் பெயர் திரையில் தெரியவும் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
“சொல்லுடா” என்று மெல்லிய குரலில் கேட்க
“டேய் ஆர்யா! எங்கடா இருக்க? இங்க போர்டு மீட்டிங் ஆரம்பிச்சிடுச்சு. உன் அப்பா நீ எங்கன்னு கேட்டுட்டே இருக்காரு”
“நான் வர ஒன் ஹவர் ஆகும் அதுவரைக்கும் கொஞ்சம் சமாளி”
“என்ன? ஒன் அவர் ஆகுமா! இப்பவே அவர் நெற்றிக்கண்ணை திறந்து முறைக்க ஆரம்பிச்சிட்டாரு. என்னால முடியாதுப்பா”
“அப்போ எனக்கு தெரியாதுன்னு சொல்லிடு”
“பேக்ரவுண்ட்ல யாரோ மைக்ல பேசுற மாதிரி இருக்கு? காலேஜ் ஃபங்ஷன் போயிருக்கியா என்ன?” யூகியின் கேள்விக்கு பதில் சொல்லாமல் போனை வைத்துவிட்டு முதல்வரின் அழைப்பை ஏற்று சிறப்புரையாற்ற சென்றான்.
கண்கள் கீழே அமர்ந்திருக்கும் பெண்கள் கூட்டத்தில் தன்னவளைத் தேடி அலைபாய்ந்தது எங்கும் அவளை காணாமல் பேச்சை சீக்கிரமே முடித்துக் கொண்டான். தந்தையிடமிருந்து அழைப்பு வரவும் கிளம்ப எத்தனித்தான். அதற்குள் கல்லூரி முதல்வர் இடையிட்டு “சார் ஸ்டுடென்ட்ஸ்க்கு உங்க கையால ப்ரைஸ் கொடுக்கணும்” என்றார்
“இல்ல சார். முக்கியமான மீட்டிங் ஒன்னு இருக்கு அப்பா வேற போன் பண்ணிட்டு இருக்காரு”
“ஆதிசங்கரன் சார் தானே? அவர்கிட்ட நான் பேசுறன் இருங்க” என்றவர் சட்டென தன் கைபேசியை எடுத்து ஆர்யனின் தந்தைக்கு அழைத்து விட மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.
“ஆதிசங்கரன் சார் உங்களுக்கு பதிலா உங்க மகனை சீப் கெஸ்ட்டா அனுப்பி வச்சதுல ரொம்ப சந்தோஷம்”
“ஆர்யன் உங்க காலேஜ்லயா இருக்கான்?” அதிர்ச்சியாக கேட்ட ஆதிசங்கரன் எதிரே இருந்த யுகேந்திரனை கண்களால் பஸ்பம் ஆக்கி விடுவது போல முறைத்துக் கொண்டிருந்தார்.
“ஆமா சார். உங்களுக்கு பதிலா உங்க மகன் வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். உங்கள மாதிரியே ரொம்ப அழகா பேசினாரு, உடனே கிளம்பணும்னு சொல்றாரு. எங்க ஸ்டுடென்ட்ஸ்க்கு பிரைஸ் கொடுத்துட்டு கிளம்பினா எங்களுக்கு மரியாதையா இருக்கும். சீக்கிரம் அனுப்பி விடுறேன் சார்”
அவரிடம் மறுக்க வழியின்றி, “சரி” என்று பதில் சொல்லிவிட்டு போனை அணைத்த ஆதிசங்கரன் யுகேந்திரனை முறைத்தார்
“என்னை சீப் கெஸ்ட் கூப்பிட்ட காலேஜுக்கு எனக்கே தெரியாம அவன் ஏன் போனான்?”
“ஹவ் டு ஐ நோ சார்?” யுகி பாவமாக கேட்க
“உனக்கு தெரியாம போக வாய்ப்பு இல்லையே. இவ்வளவு முக்கியமான மீட்டிங் இருக்கும் போது காலேஜுக்கு சீப் கெஸ்ட்டா போறது தான் முக்கியமா? அப்படி அந்த காலேஜ் மேல அவனுக்கு என்ன அக்கறை?”
“ஹவ் டு ஐ நோ சார்” என்ற யுகியின் அதே பதிலில் கடுப்பானார் ஆதிசங்கரன்.
“யூ ஒன்லி நோ எவ்ரிதிங்” என்று அடிக்குரலில் சீறியவர் “உன்ன அப்புறம் கவனிச்சிக்கிறேன்” என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டே மீட்டிங் ஹாலுக்குள் நுழைந்தார்.
கல்லூரியின் ஆண்டு விழாவில் மேடையில் தன்னிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த முதல்வரை கடிந்து கொள்ள முடியாமல் அமர்ந்திருந்தான் ஆர்யன்.
“சிலம்பம் சுற்றுதலில் முதல் பரிசு பெற்ற மாணவிக்கு பரிசு வழங்க ஆர்யனை அன்புடன் அழைக்கிறோம்” என்று பேராசிரியை அவனுக்கு அழைப்பு விடுக்க கடனே என்று அவர் அருகில் சென்றவன் அவர் கொடுத்த கேடயத்தை வாங்கி தன் அருகே வந்து நின்ற பெண்ணின் முகத்தை கூட பார்க்காமல் கொடுத்தான்.
சிலம்பாட்டத்தில் முதல் பரிசு பெற்ற வளர்மதிக்கு வாழ்த்துக்கள் என்று பேராசிரியை சொன்ன பின்பு தான் சட்டென திரும்பி அவளை பார்த்தான்.
அவளோ கரகோஷத்திற்கு தலைவணங்கும் விதமாக தலையை குனிந்து அனைவரையும் வணங்கினாள். அவள் முகத்தைப் பார்ப்பதற்குள் இரண்டாவது பரிசு அறிவித்து விட அவனால் அவள் முதுகை தான் பார்க்க முடிந்தது. அவளோ மேடைக்கு பின்னால் சென்று விட்டாள்.
நீண்ட பெருமூச்சுடன் தன்னையே நொந்து கொண்டு எதிலும் பற்று இல்லாமல் பேராசிரியை கொடுத்த பரிசை அனைவருக்கும் கொடுத்தான். அடுத்து நடன நிகழ்ச்சியில் சிறப்பாக ஆடியவர்களுக்கு பரிசு வழங்கப்போவதாக அறிவித்தார்கள். இப்போது யுகேந்திரன் கைபேசியில் அழைத்துக் கொண்டே இருந்ததால் அருகில் இருந்த முதல்வரிடம் “சார் நேரமாச்சு” என்றான்.
“சரிங்க ஆர்யன் சார். இனிமேலும் உங்களை தொல்லை பண்ண விரும்பல” என்று அவர் சொல்லிக் கொண்டே இருக்கும் போது “சிலம்பத்தில் பரிசு பெற்ற அதே வளர்மதி நடனத்திலும் முதல் பரிசு பெற்றிருக்கிறார்” என்று சொன்னதும் சட்டென திரும்பி பார்த்தான்.
அவன் எதிர்பார்த்த முழுமதி வளர்மதி என்ற பெயரைத் தாங்கி அவன் முன்னே வந்து கொண்டிருந்தது. செழியன் வீட்டில் அவன் அவளை முதன்முறையாக பார்த்தபோது குழந்தையோடு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்தாள். இப்போது முகத்தில் குழந்தைதனம் மறைந்திருந்தது. முகத்தில் தெளிவும் சற்றே கடினமும் கூடி போயிருந்தது. நடையில் நிமிர்வுடன் வந்தவளை கண்இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். பேராசிரியை அவன் கையில் கேடயத்தை கொடுக்க முயன்று கொண்டிருப்பதை கூட அவன் கவனிக்கவில்லை.
“அந்த கேடயத்தை என் கையில கொடுங்க. ஆர்யன் சாருக்கு வேலை இருக்குதாம்” என்று முதல்வர் கூறவும் தான் சுயநினைவிற்கு வந்தான்.
“இட்ஸ் ஓகே சார்! நீங்க இவ்ளோ கம்பெல் பண்ணி என்னை இருக்க சொல்றப்போ நான் முடியாதுன்னு கிளம்பினா அவ்வளவு மரியாதையா இருக்காது. நான் பங்க்ஷன் முடிஞ்ச பின்னாடி கிளம்பறேன்” என்றான் அவசரமாக.
“நான் எப்போ இவரை கம்பெல் பண்ணேன்?” என்று யோசித்த முதல்வரால் அதை அவனிடம் கேட்க முடியவில்லை.
ஆர்யன் அவசரமாக கேடயத்தை வாங்கி வளர்மதியிடம் நீட்டினான். அவளும் புன்முறுவலோடு அதை வாங்கிக் கொண்டாள்.
அவள் புன்னகைத்ததும் சற்றும் தாமதிக்காமல் “கங்கிராட்ஸ்” என்று அவன் கையை நீட்ட ஒரு கணம் தயங்கி மேடை நாகரிகம் கருதி தன் கரத்தை நீட்டினாள்.
அவனும் அவள் கரத்தை மென்மையாக பற்றி உடனே விடுவித்தான். “சிலம்பம் டான்ஸ் ரெண்டுலயும் முதல் பரிசு வாங்கி இருக்கீங்க. வெரிகுட். உங்க அனுபவத்தை பத்தி ஏதாவது பேசுறீங்களா?” என்று கேட்டவன், பேராசிரியையை பார்த்து மைக் தரும்படி சைகை செய்தான்.
“இல்ல வேணாம்” என்று அவசரமாக மறுத்தவள் இரு கரம் கூப்பி நன்றி சொல்லிவிட்டு கீழே இறங்கினாள்.
முதல்வரிடம் விழா முடியும் வரை இருப்பதாக சொல்லி விட்டதால் ஆர்யன் வேறுவழி இன்றி மற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கினான். அருகில் இருந்த முதல்வரிடம் “இந்த சிலம்பம் டான்ஸ் ப்ரோக்ராம் எல்லாம் எப்போ நடந்துச்சு?” என்று விசாரித்தான்
“லாஸ்ட் வீக் இன்டர் காலேஜ் காம்படிஷன் நடந்துச்சு. அதுல நம்ம காலேஜ் ஸ்டுடென்ட் தான் நிறைய வின் பண்ணாங்க. அங்கே அவங்க ப்ரைஸ் கொடுத்தாலும் நம்ம பசங்களுக்கு நாமளும் கொடுக்கணும்னு நினைச்சேன். அதை ஆண்டுவிழாவான இன்னைக்கு நிறைவேத்திட்டேன்” என்றார் அவர்.
“அந்த ப்ரோக்ராமுக்கு ஏன் எங்களை இன்வைட் பண்ணல?” என்று வளர்மதியின் ஆட்டத்தை பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் ஆர்யன் யோசிக்காமல் கேட்டுவிட்டு பின்பு நாக்கை கடித்துக் கொண்டான்.
“நீங்க எங்கள மாதிரியா? உங்கப்பா பெரிய தொழிலதிபர். நீங்க அவர்கிட்ட கத்துக்கிட்டு தனியா கம்பெனி ஆரம்பிச்சு முன்னேறிட்டு வர்றீங்க. இந்த பங்கஷனுக்கே வர மாட்டீங்க நினைச்சேன். நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா கூப்பிடுறேன் சார்” என்றார் முதல்வர்.
அடுத்து சென்ற ஆண்டு நடந்த செமஸ்டர் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு என்றதும் ஆர்யன் ஆவலுடன் வளர்மதியை எதிர்பார்க்க அகல்விழி வந்து கொண்டிருந்தாள்.
அவனைக் கண்டதும் சினேகமாய் முறுவலித்தாள்
“வெரி குட் அகல்விழி! அதானே பேரு!” என்றபடி கேடயத்தை நீட்டினான்
“பரவாயில்லையே! என் பெயர் கூட ஞாபகம் வச்சிருக்கீங்க? எங்க அண்ணாவோட பிரெண்டு தானே நீங்க?”
“ஆமா!”
“அப்புறம் நான் இதுக்கு முன்னாடி பிரைஸ் வாங்கினப்போ ஏன் எனக்கு விஷ் பண்ணல? ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கினா தான் விஷ் பண்ணுவீங்களா?” அப்பாவியாக கேட்ட அகல்விழியை கண்டு புன்னகைத்தான்.
“அப்படியெல்லாம் இல்லையே! நீ எப்ப பிரைஸ் வாங்கினே?”
“சரியா போச்சு. சிலம்பம் டான்ஸ்னு எல்லாத்துக்கும் செகண்ட் பிரைஸ் வாங்கினேனே. உங்க கிட்ட பேசலாம்னு நினைச்சா நீங்க தெரியாத மாதிரி வேற எங்கேயோ பார்த்துட்டு இருந்தீங்க. சரி சிறப்பு விருந்தினர் நம்மகிட்ட பேசமாட்டார் போலனு நானும் நெனச்சுக்கிட்டேன்”
“அச்சோ அப்படி எல்லாம் இல்லம்மா. நான் கவனிக்கல” என்றான் ஆர்யன்
சிறப்பு விருந்தினனாக வந்திருக்கும் ஆர்யனை பெண்கள் கூட்டம் கண்களால் விழுங்கிக் கொண்டு இருக்க அவன் அகழ்விழியிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதை கண்டு வாயை பிளந்தனர்.
அகல்விழியை தொடர்ந்து இரண்டாவது பரிசை பெற வளர்மதி வரவும் “அக்கா தங்கச்சி இரண்டு பேரும் மொத்த பரிசும் ஜெயிச்சுட்டீங்க போல” என்று புன்னகைத்தபடி வளர்மதியின் கையில் பரிசு வழங்கினான்.
வளர்மதி பதிலேதும் சொல்லாமல் அகல்விழியை அழைத்துக்கொண்டு மேடையில் இருந்து இறங்கினாள்.
வளர்மதியை கண்டு விட்ட திருப்தியோடு விழா முடிந்து ஆர்யன் காரை நோக்கி செல்லும் போது அகல்விழி கண்ணில் பட ஒற்றை விரலை நீட்டி அவளை அழைத்தான்.
அவளுடன் இருந்த பெண்கள் கூட்டம் “ஹே” என்று கோரஸாக அவளை கிண்டல் செய்ய “வாயை மூடுங்கடி, அவர் என் அண்ணாவோட ஃப்ரெண்ட். எனக்கும் அண்ணா மாதிரி தான்” என்று விட்டு ஆர்யனிடம் சென்றாள்
“அகல்விழி உங்க அண்ணன் செழியன் ஃபங்ஷனுக்கு வரலையா?”
“இல்ல, வயல்ல அறுவடை நடந்துட்டு இருக்கு. அதுல அண்ணன் வேலையா இருக்கு. பெரிய அண்ணியும் அம்மாவும் பாண்டி அண்ணனோட இங்கே வரலாம்னு கிளம்பின நேரம், சின்ன அண்ணி மல்லிக்கு பிரசவ வலி வந்திருச்சாம், அதனால எல்லாரும் ஆஸ்பத்திரிக்கு போயிருக்காங்க”
“ஓ அப்படியா!” என்றவன் வளர்மதி பற்றி அவளிடம் ஏதாவது விசாரிக்கலாமா? என்ற யோசனையில் இருந்தான்
அதற்குள் அகல்விழியிடம் பேசிக் கொண்டிருந்த தோழிகள் அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டு, “அகல் உங்க அண்ணாவுக்கு எங்கள அறிமுகம் செஞ்சு வைக்க மாட்டியா?” என்று கேட்க
“அண்ணாவா?” என்று ஆர்யன் வெளிப்படையாகவே திகைத்தான்
“நீங்க அகல்விழி அண்ணனோட பிரண்டாமே. அண்ணன் பிரண்டு எனக்கும் அண்ணன்னு சொன்னா” என்று அந்தப் பெண்கள் விளக்கம் கொடுக்க
‘ஐயோ! இவளுக்கு அண்ணன்னா? வளர்மதிக்கும் நான் அண்ணன் ஆயிடுவேனே! நாசமா போச்சு!’ என்று மனதிற்குள் பதறியவன்
“அண்ணாவோட பிரெண்டு, அண்ணனா தான் இருக்கணுமா? ஏன் மாமாவா இருக்கக் கூடாதா?” என்றபடி தூரத்தில் நின்றிருந்த வளர்மதி தன்னை கவனிக்கிறாளா என்று பார்த்தான்.
“ஏய் இவரு உனக்கு மாமாவாமே! சொல்லவே இல்ல!” என்று பெண்கள் வம்பிழுக்க அகல்விழியின் முகம் சட்டென சிவந்து போனது
வளர்மதியின் மீது பார்வையை பதித்தவாறு “அகல்விழி, செழியனை கேட்டதா சொல்லு. இப்போ லேட்டாயிடுச்சு. நான் நாளைக்கு அவர்கிட்ட பேசுறேன்” என்று அவன் சொல்ல அவளோ புதிதாக தோன்றிய வெட்கத்தில் தலைகுனிந்து தலையை மட்டும் அசைத்தாள்
ஆர்யன் எண்ணிற்கு ஆதிசங்கரன் அழைப்பு விடுத்திருக்க அவன் அகல்விழியை சரியாக கவனிக்கவில்லை. தந்தையின் அழைப்பை துண்டித்து, “ஐயம் ஆன் தி வே” என்று தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டான்.
அவசரமாக தன் பாக்கெட்டில் இருந்த கார்டை எடுத்து அவளிடம் கொடுத்து, “ஏதாச்சும் ஹெல்ப் தேவைனா தயங்காம எனக்கு கால் பண்ணு! ஓகேவா?” என்று சொல்லிவிட்டு அவள் பதிலுக்காக காத்திருக்காமல் காரில் ஏறினான்.
“என்னடி நடக்குது உங்களுக்குள்ள?” என்று அங்கிருந்த பெண்கள் அகல்விழியை சீண்ட ஆரம்பிக்க வளர்மதி இப்போது அவர்களை நோக்கி வேகமாக வந்து தங்கையின் கரம் பற்றி இழுத்தாள்.
“அண்ணாவோட பிரண்டா இருந்தாலும் அண்ணா இல்லாத நேரத்துல அவர்கிட்ட உனக்கு என்ன பேச்சு? என்று தமக்கையாய் தங்கை அதட்டி தன்னுடன் அழைத்துச் சென்றாள் வளர்மதி!
(தொடரும்)