கீதாஞ்சலியின் பேச்சைக் கேட்டுக் கொண்டே வந்த ஆதவ் ,” கீதுக்கா…இவ்வளவு தானா உன்னோட கண்டிஷன்ஸ்? இல்ல இன்னும் இருக்கா? நல்லா யோசிச்சு இன்னும் ஏதாவது பாக்கியிருந்தா அதையும் சொல்லிடு. எல்லாத்தையும் கேட்டுட்டு இந்த கல்யாணத்தை அவசியம் நடத்தியே தான் ஆகணுமாங்கற டிசிஷனுக்கு வந்துடுவாங்க.” என நக்கலடித்தவனை கீதாஞ்சலி முறைத்தாள் என்றால் , ஜானகியோ , “ஏன்டா நீ வேற..வாய்லயிருந்து நோக்கு நல்ல வார்த்தையே வராதா? எப்பப்பாரு அபசகுணமாவே பேசிண்டிருக்க . அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கறதுக்கே நேக்கு போதும் போதும்னாயிடுத்து…நீ வேற சும்மாவே இருக்க மாட்டேங்குற..” என சலித்துக் கொண்டாள்.
உண்மையில் ஜானகிக்கு தான் விழி பிதுங்கி போனது. ‘எப்படி திருமணத்தை நல்லபடியாக நடத்தப் போகிறோம் ?’ என ஆயாசமாக இருந்தது.
கீதாஞ்சலியிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்கியதே மலையை பிளக்கும் வேலையை போலிருந்தது.
இதில் ,’ இவள் இவ்வளவு நிபந்தனைகளை போட்டால் என்ன செய்வது ?’என்ற யோசனை மனதினை அலைக்கழித்தது.
யோசனையுடன் அமர்ந்திருந்தவளின் கவனத்தை மகனது பேச்சு கலைத்தது.
ஜானகி யோசனையுடன் அமர்ந்திருக்கவே, “ஜானு டார்லிங்…” என்று அவளது தோளைப் படித்து ஆதவ் உலுக்க , “ஹான்..”என விழித்தாள் ஜானகி.
அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது ஆதவ்விற்கு.
ஆனால் கீதாஞ்சலிக்கு அப்படியொன்றும் தோன்றவில்லை போலும் .
மிகச் சாதாரணமாக இருந்தாள்.
“ என்ன யோசனை?”
“ஒண்ணுமில்ல ஆதவ் “
“ ம்மா..இதுக்கே இப்படின்னா இன்னும் கல்யாண பண்ணிக்க போறவருக்கு எத்தனை கண்டிஷன் போடப் போறான்னு தெரியலை…” என தமக்கையைப் பற்றி நன்கு அறிந்தவனாக கூறினான்.
“ அது வேற இருக்குதா…” என முணுமுணுத்துக் கொண்டே மகளைப் பார்த்தான் ருத்ரன்.
அவளோ சுவரஸ்யமாக அலைப்பேசியில் கேண்டி க்ரிஷ் விளையாடிக் கொண்டிருந்தாள்.
ஒரு வாரம் சென்றிருந்தது.
அன்று மாலை கீதாஞ்சலியை பெண் பார்க்க அருகிலுள்ள கோவிலுக்கு வருவதாக கூறியிருந்தனர் வளவன் மற்றும் அவரது மனைவி நித்யா.
“ கீது…இன்னைக்கு ஒரு நாள் மட்டும் புடவை உடுத்திக்கோ டி. ப்ளீஸ்…” என மகளிடம் மல்லுக் கட்டிக் கொண்டு இருந்தாள் ஜானகி.
“ ம்மா…ஏன் மா இப்படி படுத்துற? எந்த ட்ரெஸ் போட்டுட்டு வந்தா என்ன? எனக்கு எது கம்ஃபர்டபிளா இருக்கோ அதை தான் நான் போட்டுட்டு வருவேன்…புடவை கட்டிட்டு வரலைன்னா கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்களா? ரொம்ப இம்மெச்சியூர்டடா இருக்க ம்மா…நீ..” என தாயிடம் வாதம் செய்து கொண்டிருந்தாள் கீதாஞ்சலி.
“ பரவாயில்ல நான் இம்மெச்சியூர்டடாவே இருந்துட்டு போறேன். புடவை கட்டினா தான் கல்யாணம் நடக்கும் னு பத்தாம்பசலித்தனமா நான் சொல்லல. உனக்கே ஒரு சேன்ஜ் தெரியும். கொஞ்சம் டிப்ரண்ட்டா டிரஸ் பண்ணி தான் பாரேன். ஒரே மாதிரி போயிட்டு இருக்குற லைஃப்ல எதோ புதுசா இருக்குற மாதிரி இருக்கும். உனக்கான ஒரு ஸ்பெஷல் அக்கேஷனா இதை நினைச்சுக்கோ. எல்லாத்துக்கும் ஆர்க்யூ பண்ணாம கொஞ்சம் உனக்கான டிரஸ் கோட் ட மாத்திப் பாரு. சில நேரம் ஏன் வாழ்க்கையே சலிப்பா தெரியறது தெரியுமா? ஒரே மாதிரியான லைஃப் ஸ்டைலை நாம வாழறதுனால தான். இந்த மாதிரி சின்ன சின்ன விஷயம் கூட நம்மளோட மைண்ட் செட்டை மாத்தும்…”என்றாள் .
கீதாஞ்சலிக்கு தாய் சொல்வது சரியென்று பட்டது.
ஜானகியை கூர்ந்து பார்த்த கீதாஞ்சலி, “ ரொம்ப நல்லா பேசறம்மா நீ. ஆக மொத்தம் இன்னைக்கு மட்டுமாவது பொண்ணு மாதிரி இருங்கறதை இன்டைரக்டா சொல்ற..ம்ம்..என்னைய கன்வின்ஸ் பண்ணிட்டோம்னு ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத…எனக்கு மனசுக்கு சரின்னு பட்டா தான் அதை செய்வேன். இல்லன்னா திரும்பி கூட பாக்க மாட்டேன்…இன்னைக்கு ஒரு நாள் புடவை கட்டிக்குறேன்.” என்று கூறி விட்டு தனதறைக்குள் நுழைந்து கொண்டாள்.
“ ஷப்பா…இப்பவே கண்ணைக் கட்டிண்டு வர்றதே நேக்கு…” என சோர்வுடன் தொப்பென்று சோஃபாவில் அமர்ந்தாள் ஜானகி.
அவள் முன்பு வலிய கரம் ஒன்று தண்ணிர் போத்தலை நீட்ட அதனை வாங்கி மடக் மடக்கென்று குடித்தாள்.
“ பாத்து..பாத்து…”. அவளது தலையை தட்டினான் ருத்ரேந்திரன்.
கணவனை நிமிர்ந்து பார்த்தாள் ஜானகி.
“ இதுக்கே டயர்ட்டானா எப்படி?” என்றான் உதட்டில் சிரிப்பினை ஒளித்துக் கொண்டு.
“ என் பாடு உங்கெளுக்கெல்லாம் சிரிப்பா இருக்கா? உங்களுக்கென்ன நீங்க பாட்டுக்கு பிசினஸ் பிசினஸ் னு போயிடுறேள். இங்க உங்க பொண்ணு கிட்ட நாந்தான் கிடந்து அல்லாடுறேன்.” என்றாள் சலிப்புடன்.
” எல்லா விஷயங்களையும் கீதாஞ்சலி பண்ணனும்னு அழுத்தம் குடுக்காத. அவளை நீ எந்த விஷயத்துக்கும் ஃபோர்ஸ் பண்ணாம இருக்குறதே நல்லது. பிடிக்கலன்னா விட்டுடு.”என்றான் ருத்ரன்.
“புடவை கட்டுன்னு சொன்னது ஒரு குத்தமா? ஒரே மாதிரி இருந்தா நமக்கும் லைஃப் சீக்கிரம் சலிச்சு போயிடும்ன்னா. அவளை கம்பெல் பண்ணினா என்ன நடக்கும்னு நேக்கு தெரியும். நீங்க அதைப் பத்தியெல்லாம் கவலைப்படாதீங்கோ..” என்று கூறக் கொண்டிருக்கும் போதே கீதாஞ்சலி தனது அறைக்கதவை திறந்து கொண்டு வந்தாள்.
அடர் நீல நிற புடவை அவளது அழகை சற்று தூக்கி காட்டியது.
காக்கி சீருடையில் மறைந்திருந்த அவளது அழகு புடவையில் பாந்தமாக வெளிப்பட்டது.
புடவை மடிப்புகளை சரி செய்து கொண்டே வந்தவளை இமைக்காமல் பார்த்து ரசித்திருந்தனர் ருத்ரனும் ஜானகியும்.
இருவரது விழிகளும் சற்றே கலங்கிப் போனது.
கைப்பிடித்த நடைப்பழகிய செல்வ மகள், பேசிப் பழகி , வளர்ந்த இடத்தை விட்டு வேறொரு வீட்டிற்கு திருமணமாகி செல்லப் போகின்றாள் என்ற எண்ணமே மனதை அழுத்தியது இருவருக்கும்.
இருவரும் அவளை பார்த்தபடி சிலையென நின்றிருந்தனர்.
ஜானகியின் அருகே வந்த கீதாஞ்சலி, “ என்ன ஓகே வா.? ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி கட்டிருக்கேன். இது தான் லாஸ்ட். இனி இந்த மாதிரி கட்டிட்டு ஷோ கேஸ் பொம்மை மாதிரி நிக்க வைக்காதீங்க” என்றாள் அழுத்தமாக.
“ ஒரு நிமிஷம் இரு டி…” என்றள் குளிர்சாதன பெட்டியை திறந்து நெருக்கிக் கட்டிய மல்லிகை சரத்தை அவளது தலையில் வைத்து நெட்டி முறித்தாள்.
“ என் கண்ணே பட்டுடும் போல டி கீது… கோவிலுக்கு போயிட்டு வந்து திருஷ்டி சுத்தி போடணும்…”என்றாள்.
நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஆதவ் .
“ சரி கிளம்பலாமா? “ என்றான் ருத்ரன்.
“ கீதுக்கா..இப்ப தான் நீ பாக்க பொண்ணு மாதிரி இருக்க. காக்கி யூனிபாஃர்மை விட இது தான் உனக்கு நல்லா செட்டாகுது… பேசாம முழு நேர குடும்ப இஸ்திரியா மாறிடு …” என்றவனை முறைத்தாள் கீதாஞ்சலி.
“ சும்மா இரேன்டா ஆதவ். நீ கோவிலுக்கு வரலையா டா” என்றான் ருத்ரன்.
“இல்லப்பா எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்குது. நீங்க போயிட்டு வாங்க…” என்றவன் தனது பைக் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
ருத்ரன் ஜானகி மற்றும் கீதாஞ்சலி மூவரும் கோவிலுக்கு கிளம்பினர்.
“ சார்…வஜ்ரவேல் அய்யா காமாக்ஷி அம்மன் கோவில்ல பூஜைக்கு குடுத்திருக்காரு. உங்களை போயிட்டு வர சொன்னாரு “ என்றான் மதன்.
கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்த மிருகேந்திரன், “ம்ம்…சரி சீக்கிரம் போயிட்டு வந்துடலாம்.” என்றவன் சாம்பல் நிற முழுக்கை சட்டையை மடித்து விட்டுக் கொண்டான்.
கண்ணாடியில் ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தவன் மீசையை நீவி முறுக்கி விட்டுக் கொண்டான்.
கோவிலுக்குள் நுழைந்த ருத்ரன் ஜானகியை வளவன் குடும்பத்தினர் வரவேற்றனர்.
“ வாங்க ருத்ரன் சார்..முதல்ல போய் சாமி கும்பிட்டுட்டு அப்பறமா மத்ததெல்லம் பேசலாம்.” என்றார் வளவன்.
“ நான் உள்ள வரல இங்கயே நிக்குறேன் ம்மா…நீங்க போயிட்டு வாங்க…” என்று தாயிடம் கிசுகிசுத்தாள் கீதாஞ்சலி.
“ டி கீது…படுத்தாத…உள்ள வா..” என்று பல்லைக் கடித்தாள் ஜானகி.
தாயும் மகளும் முறைத்துக் கொண்டே சன்னிதானத்திற்குள் நுழைந்தனர்.
வளவனுடன் ருத்ரன் பேசிக் கொண்டே வர விதேஷ் மட்டும் தனியாக நடந்து வந்தான்.
அவ்வப்போது ஓர விழியால் கீதாஞ்சலியை பார்த்துக் கொண்டான்.
அவளோ அவன் புறம் சிறிதும் திரும்பவில்லை
உள்ளே சற்று கூட்டமாக இருந்தது.
இவர்கள் வெளியே நின்றிருந்தனர்.
சற்று நேரத்தில் உள்ளிருந்த கூட்டம் வெளியே வந்து விட, இவர்கள் அனைவரும் உள்ளே சென்றனர்.
“ ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்கோ. சிறப்பு பூஜைக்கு ஒருத்தர் கொடுத்துருக்கார். அந்த பூஜை முடிச்ச கையோட உங்களுக்கும் தீபாராதனை காட்டிடுறேன். சுவாமியை கும்பிட்டுவிட்டு நீங்க போகலாம்.” என்றார்.
கீதாஞ்சலிக்கோ பொறுமை காற்றில் பறக்க ஆரம்பித்தது.
கிட்டத்தட்ட பதினைந்து நிமிடமாகியும் யாரும் வராததால் ருத்ரன், “ நீங்கள் தீபாராதனை மட்டும் காமிங்க . நாங்க சாமியை கும்பிட்டுவிட்டு கிளம்பிடுறோம்.” என்றான்.
அதற்குள் கீதாஞ்சலி ,” நா வெளியே வெயிட் பண்ணுறேன்…ம்மா..” என்றவள் ஜானகியின் முறைப்பை கண்டுகொள்ளாமல் வேகமாக வெளியேற முயன்றாள்.
அந்நேரம் வெளியே இருந்து உள்ளே வேகமாக வந்தவன் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழ முயன்றவளின் இடையை வளைத்துப் பிடித்து கொண்டது மிருகேந்திரனின் இரும்பினை ஒத்த கரங்கள்.
ஒரே ஒரு கணம் இருவரின் விழிகளும் உரசிச் சென்றது.
அவளது இடையில் அவனது கரங்கள் அழுத்தத்தை கூட்டியது போன்றதொரு பிரமை.
“கீதும்மா..பாத்து டி..” என்று மிருகேந்திரன் அருகில் சென்றாள் ஜானகி.
மிருகேந்திரனின் கை வளைவிலிருந்து விலகி நின்றாள் கீதாஞ்சலி.
“ சார் வந்துட்டேளா…! உங்களுக்காக தான் வெய்ட்டிங். பூஜையை ஆரம்பிச்சுடலாமா?” என்றார் அய்யர்
“ ஆரம்பிச்சிடலாமே..”என்றவனின் பார்வை வளவன் மற்றும் ருத்ரனின் குடும்பத்தை அளவெடுத்தது.
“ ரெண்டு பேரும் உள்ளே வாங்கோங்கம்மா..பூஜையை முடிச்சிண்டு போகலாம்..” என்றவுடன் வேறு வழியின்றி கீதாஞ்சலி ஜானகியுடன் சன்னிதானத்தில் நிற்க வேண்டியதாயிற்று.
அவளுக்கு நேரெதிராக மிருகேந்திரன் கம்பீரமாக நின்றிருந்தான்.
விழிகள் மூடி அம்மனை மனமுருக வேண்டிக் கொண்டிருந்தவனை இமைக்காமல் பார்த்தாள் கீதாஞ்சலி.
அவளது இதழ்கள் ஏளனமாக வளைந்தது.
அவளோ சுவற்றையும் சிற்பங்களையும் பார்த்துக் கொண்டிருந்தாளே ஒழிய அம்மன் சன்னிதியின் புறம் அவளது பார்வை திரும்பவேயில்லை.
தீபாராதனை காட்டும் போதும் அவள் கைகூப்பி வணங்க வில்லை.
அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தான் மிருகேந்திரன்.
பூஜை பிரசாதத்தை மிருகேந்திரனிடம் கொடுத்தவர், “ உங்களுக்கும் வஜ்ரவேல் அய்யாவுக்கும் ரொம்ப நன்றி சார். கோவில் கும்பாபிஷேகத்துக்கு நிறைய நன்கொடை கொடுத்து உதவி பண்ணிருக்கேள். தீர்க்க ஆயுசா சீக்கிரம் கல்யாணம் ஆகி குழந்தை குட்டியோட க்ஷேமமா இருக்கணும்…” என்று வாழ்த்தி குங்குமத்தை கொடுத்தார்.
புன்னகையுடன் பிரசாத்தை எடுத்துக் கொண்டவன், “ ரொம்ப வித்தியாசமா வாழ்த்துறீங்க சாமி..நமக்கு கல்யாணமெல்லாம் செட்டாகாது…” என்றவனின் பார்வை ஒரு கணம் கீதாஞ்சலியை தொட்டு மீண்டது.
ஜானகியின் புறம் திரும்பிய அய்யர் , “பொண்ணுக்கு கல்யாண விஷயம் பேச வந்துருக்கேள்னு சொன்னேள்..எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு அம்பாளை வேண்டிண்டு பிரசாதத்தை வாங்கிக்கோங்கோ..” என்றவர் பூவையும் குங்குமத்தையும் அவள் புறம் நீட்டினார்.
“ ரொம்ப நன்றி மாமா..” என பயபக்தியுடன் அதனை வாங்கிக் கொண்டாள் ஜானகி.
“ நீயும் வாங்கிக்கோடாம்மா குழந்தை..”என கீதாஞ்சிலியிடம் நீட்டினார் அய்யர்.
அவர் கீதாஞ்சலியை குழந்தை என்றதும் சட்டென்று சிரிப்பு வந்து விட்டது மிருகேனுக்கு.
குங்குமத்தை வைத்துக் கொண்டே அவளை பார்த்து நக்கல் சிரிப்பை உதிர்த்தான்.
ருத்ரன் விதேஷ் மற்றும் வளவனுடனும் , ஜானகி விதேஷின் தாய் விமலாவுடனும் பேசிக் கொண்டிருந்ததால் மிருகேன் மற்றும் கீதாஞ்சலியை யாரும் கவனிக்கவில்லை.
அவனை முறைத்துக் கொண்டே குங்குமத்தையும் பூவையும் வாங்கிக் கொண்டவள் அதை வைத்துக் கொள்ளவில்லை. சிறிய தாளில் மடித்து ஜானகியின் கையில் கொடுத்து விட்டாள்.
விதேஷின் பார்வை அடிக்கடி கீதாஞ்சலியை வருடியதையும் அவனது மனம் குறித்துக் கொண்டது.
மதனுடன் வெளியே வந்து விட்டான் மிருகேந்திரன்.
வெளி பிரகாரத்தை சுற்றிக் கொண்டிருந்தான்.
“ சார்…சீக்கிரமா கிளம்பணும்னு சொன்னீங்க.” என இழுத்தான் மதன்.
“ போகலாம் மதன்..என்ன அவசரம் இப்ப? மெதுவா போகலாம்…” என நிதானமாக கூறியவன் சற்று தொலைவில் ருத்ரன் மற்றும் வளவனின் குடும்பம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததை கவனித்தான்.
“ சார் ரசீதை ஆஃபிஸ்ல வாங்கிக்க சொன்னாங்க. லெஃப்ட் சைட்ல ஆஃபிஸ் இருக்கு. நான் போய் வாங்கிட்டு வந்துடவா?” என்றான் மதன்.
“ நானும் வர்றேன் ..மதன்” என்றவன் அவனுடன் இணைந்து நடந்தான்.
அவனது அலைப்பேசிக்கு ஏதோ அழைப்பு வந்து விட பேசிக் கொண்டே அங்கருந்த தூணருகே தங்கி விட்டான் மிருகேந்திரன்.
அலைப்பேசியை துண்டித்து விட்டு சுற்றிலும் பார்த்தவனின் செவியில் கீதாஞ்சலியும் விதேஷூம் பேசிக் கொண்டிருந்தது தெளிவாக விழுந்தது.
பெரிய தூண் என்பதினால் மறுபக்கம் நின்று கொண்டிருந்த மிருகேனை இருவரும் கவனிக்கவில்லை.
“ ஹாய் கீதாஞ்சலி…ஐ யம் விதேஷ். நைஸ் டூ மீட் யூ” என்றான்.
“ ஓ…ஹாய்..” என்பதோடு நிறுத்திக் கொண்டாள்..
“ நீங்க யூனிஃபார்மை விட புடவையில ரொம்பவே அழகா இருக்கீங்க”
“ ம்ம்..ஓகே..” என்றாள் ஒற்றை வரியில்
அவனுக்கு தான் சப்பென்று ஆனது.
இது என்ன மாதிரியான பதில் என யோசித்தான்.
திருதிருவென விழித்துக் கொண்டிருந்தான்.
இப்படி வெட்டிப் பேசுபவளிடம் என்ன பேசுவது என்பது சில கணங்கள் புரியாமல் நின்றவன் சமாளித்துக் கொண்டு, ” எனக்கு நிறைய பிசினஸ் இருக்கு. நீங்க வேலைக்கு போயே ஆக ஆகணும்ங்கற அவசியம் இல்ல. என்னோட பிசினஸை கூட நீங்க பாத்துக்கலாம். இந்த துப்பாக்கி, சேஸிங், கிரிமினல்ஸ், இரத்தம் இதெல்லாம் பார்த்தாலே எனக்கு ரொம்ப அலர்ஜி. நீங்களும் வெயில் மழைன்னு குளிர்ன்னு அலையாம ஏசி ல ஹாயாக உக்காந்து எனக்கு ஹெல்ப் பண்ணலாம். பிசினஸை நெக்ஸ்ட் லெவலுக்கு கொண்டு போகலாம். ரிலாக்ஸ்டா டென்ஷன் இல்லாம பிரஷர் இல்லாம இருக்கலாம். என்ன சொல்றீங்க?” என்றே கூறி விட்டு அவளது பதிலுக்காக முகம் பார்த்து நின்றான்.
கீதாஞ்சலியின் அழுத்தமான பார்வையில் வெலவெலத்து போனான் விதேஷ்.
“ எ…என்ன ? எ..எதுவா..இரு.. இருந்தாலும் உங்க விருப்பந்தான்..” என்றான் தடுமாற்றமாக.
மிருகேந்திரனுக்கு ஒரு வித சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது .
நன்றாக தூணில் சாய்ந்து கொண்டவன் பிரசாதத் தேங்காயை சிறு துண்டாக உடைத்து வாயில் போட்டுக் கொண்டே அவளது பதிலுக்காக செவியை தீட்டிக் கொண்டு நின்றான்.
“ லுக் மிஸ்டர் விதேஷ்.. நான் என்ன பண்ணனும்னு ஏது பண்ணனும்னு நீங்க எனக்கு சொல்லாதீங்க. ஐ மீன் முக்கியமா ஆர்டர் போடாதீங்க. என்னோட வேலை தான் எனக்கு முக்கியம். இந்த கல்யாணம் காது குத்து, ப்ளா…ப்ளா..எல்லாம் எனக்கு அடுத்தது தான். இன்ஃபாக்ட்..எனக்கு இந்த கல்யாணத்துல பெருசா நம்பிக்கையும் இல்லை. விருப்பமும் இல்லை. எங்க அம்மாவுக்காக தான் இந்த கல்யாணத்துக்கு ஓகே செல்லிருக்கேன். இந்த கல்யாணம் தேவைதானான்னு திரும்பவும் யோசிக்க வச்சிடாதீங்க. என்ன புரியுதா?” என்றான் அதட்டலாக.
“ ம்ம்..” என்று பாவமாக தலையாட்டினான்.
“ ம்ம்…அது சரி… இதுக்கு முன்னாடி யாரையாவது லவ் பண்ணிருககீங்களா? இல்ல லவ் பண்ணி பிரேக் அப் ஆகிருக்கா?” என்றாள்.
“ ரெண்டு பிரேக் அப் ஆகியிருக்குங்க..” என்றான்.
“ அதானே பாத்தேன். நீங்க பேசுற பேச்சுக்கு பிரேக் அப் ஆகலைன்னா தான் அதிசயம் .முதல் முதல்ல பாக்குற பொண்ணு கிட்ட இப்படி தான் பேசுவீங்களா? பிடிச்சது பிடிக்காதது, கல்யாணத்துக்கு ஓகே வா? இப்படி எவ்வளவோ இருக்கு. நீங்க என்னடான்னா வேலை விட்டுட்டு வீட்டுல உக்காரு… போனா போகுதேன்னு உனக்கு சோறு போடுறேன்ங்கற மாதிரி பேசிட்டு இருக்கீங்க. உங்களுக்கு போலீஸ் வேலை பிடிக்கலன்னா அது எனக்கு பிரச்சினை இல்லை.அது உங்க பிரச்சினை. என்ன ஆனாலும் என்னோட வேலையை விடமாட்டேன். அண்ட் எனக்குன்னு சில கண்டிஷன்கள் இருக்கு. அதுக்கு ஓகேன்னா மேற்கொண்டு பேசலாம். இல்லன்னா இப்படியே நீங்க உங்க வேலையை பாத்துட்டு போங்க . நான் என் வேலையை பாத்துட்டு போறேன். அநாவசியமா டைம் வேஸ்ட் பண்ணுறது எனக்கு பிடிக்காது.” என்றாள் கறாராக.
சற்று நேரத்திற்கு முன்பு வரை அவள் தன்னுடன் பேச மாட்டாளா என நினைத்தவன் தற்போது அவளது அதிரடி பேச்சில் ஊமையாகி நின்றிருந்தான்..
அவன் யோசனையாக நிற்பதை பார்த்தவள் ,“ ஹலோ…மிஸ்டர்..” என அவன் முன்பு கையை ஆட்டினாள்.
“ ஹான்…சொல்லுங்க கீதாஞ்சலி..” என்றான் பவ்யமாக.
“ இங்க பாருங்க எனக்கு கொஞ்சி கெஞ்சி பேசத் தெரியாது. கண் அண்ட் ரைட்டா தான் இருப்பேன். லவ் ரொமான்ஸ் இதெல்லாம் என் கிட்ட எதிர்பார்த்து ஏமாந்து போகாதீங்க. அதெல்லாம் சுட்டுப் போட்டாலும் எனக்கு வராது. நிச்சயதார்த்தம் வேணாம். நேரா மேரேஜ் தான். தேவைக்கு தான் பேசுவேன். அதுவும் முக்கியமானதா இருந்தா தான் பேசுவேன். தினமும் நைட் பேசுவேன்னு எதிர்பார்க்காதீங்க. அநாவசியமான லவ் புரோபசல் மெசேஜ், டபுள் மீனீங் ஜோக்ஸ்.. இதெல்லாம் அவாய்ட் பண்ணுறது நல்லது. இந்த கண்டிஷென்ஸ்யெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி அப்ளிகபில். கல்யாணத்துக்கு அப்புறமும் கூட இதெல்லாம் என் கிட்ட எதிர்பார்க்க கூடாது. டைரக்டா கல்யாணத்துக்கு அன்னைக்கு தான் நான் மணமேடையில் வந்து உக்காருவேன். அதுக்கு முன்னாடி இங்க வா அங்க வா…போட்டோஷூட், இதெல்லாம் கண்டிப்பா கிடையாது. ஹனிமூன் ஓகே. வேலை தான் ஃபர்ஸ்ட். அதுக்கப்பறம் தான் மத்ததெல்லாம். கோவிலுக்கு வர மாட்டேன். பெருசா கடவுள் நம்பிக்கை இல்லை…அதனால கோவிலுக்கு வா ன்னு கம்பெல் பண்ணக் கூடாது. இதெல்லாம் தான் என்னோட கண்டிஷன்ஸ். இதுக்கு ஓகேன்னா மேற்கொண்டு பேசலாம்.இல்லன்னா பை சொல்லிட்டு போயிட்டே இருக்கலாம்.யோசிச்சி கூட சொல்லுங்க. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.” என்றாள் .
விதேஷோ மனதினுள், ‘இவ்வளவு கண்டிஷன்ஸ் போட்டா இந்த ஜென்மத்தில் இவளுக்கு கல்யாணம் நடக்காது. முதல்ல கல்யாணம் ஆகி வீட்டுக்கு வரட்டும். அப்பறம் பாத்துக்கலாம் ‘ என நினைத்தவன், “எனக்கு உங்க கண்டிஷன்ஸ்கெல்லாம் ஓகேங்க. மேற்கொண்டு கல்யாண ஏற்பாடுகளை பார்க்கச் சொல்லலாம். உங்க விருப்பத்துக்கு மாறா எதுவும் நடக்காது. ஐ ப்ராமிஸ்.. போகலாமா? ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கோம். தேடி வந்துட போறாங்க” என்றான் இலகுவாக.
மெல்லிய சிரிப்பினை உதிர்த்தவள் , “நீங்க போங்க…நான் வர்றேன்..” என்று கூறி விடடு சுவற்றில் இருந்த கல்வெட்டை ஆராய ஆரம்பித்தாள்.
சிறு வயதில் ஜானகி பழக்கியிருந்த பழக்கம்.
அத்தி பூத்தார் போல் கோவிலுக்கு வரும் போதெல்லாம் கோவில் சுவற்றில் பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு எழுத்துக்களை எழுத்துக் கூட்டி படிப்பதில் ஒரு ஆர்வம்.
இப்போதும் அது போல ஆர்வத்துடன் எழுத்துக்களை கூட்டி படித்துக் கொண்டிருந்தவளருகே வந்து நின்றான் மிருகேந்திரன்.
“ வாழ்த்துக்கள் கமிஷ்னர் மேடம். கல்யாணம் பிக்ஸ் ஆகியிருக்கு போலவே..! சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டு புருஷன் வீட்டுக்கு போயிடுவீங்க” என்றான் சிரித்துக் கொண்டே.
“ அதுல உங்களுக்கு ஏதும் பிரச்சனையா?” என்றாள் கைகளை கட்டிக்கொண்டு.
“ எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை மேடம். பாவம் உங்களை கட்டிக்க போறவருக்கு தான் பிரச்சினை. இவ்வளவு கண்டிஷன்ஸ் போட்டு அவரை தெறிக்க விட்டுட்டீங்களே …! கொஞ்சம் பாவம் தான் அவரு..” என்றான் இதழ் வளைத்து.
“ ஒட்டுக் கேட்டீங்களா? இதென்ன பழக்கம்? அடுத்தவங்கள ஓட பர்சனலை ஒட்டுக் கேக்குறது..? ஹான்” என்றாள் கோபத்துடன்.
“ ஹலோ…மேடம் நான் ஒட்டுக்கேக்கல. நீங்க தான் உங்க பர்சனல் விஷயத்தை சத்தமா பேசிட்டு இருந்தீங்க. ஆனா நீங்க சொன்ன கண்டிஷன்ஸூக்கு எல்லாம் மறுக்காம ஏன் ஓகே சொன்னாருன்னு கொஞ்சமாவது யோசிச்சு பாத்தீங்களா?”என்றான்.
“ உலகத்துல இருக்குற எல்லா தப்பையும் பண்ணிட்டு ஜாலியா வெளியே சுத்திட்டு இருக்கீங்களே. உங்களை விட அவர் எவ்வளவோ பெட்டர் தான்…” என்றவளை புருவம் உயர்த்தி பார்த்தான் மிருகேன்..