அத்தியாயம் -5

தனது கருப்பு நிற தார் ஜீப்பில் ஏறிய மிருகேந்திரன் வாகனத்தை ஓட்ட ஆரம்பித்தான்.

அருகே அமர்ந்திருந்த அவனது வலது கையான மதன்  அலைப்பேசியில் ஏதோ பேசிக் கொண்டே வந்தான்.

அவன் பேசி முடிக்கும் வரை அமைதி காத்தான் மிருகேந்திரன்.

“ஓகே…ஓகே…” என்றபடி அலைப்பேசியை வைத்து விட்டு மிருகேந்திரனை பார்த்தான்.

மதிய வேளை உச்சி எதிர் வெயில் கண்களை கூசச் செய்யாமாலிருக்க குளிர் கண்ணாடியை அணிந்திருந்தான்.

“என்ன மதன்…எல்லா பாக்ஸூம் சேஃபா போய் சேந்துடுச்சு தானே…? பிரச்சினை எதுவும் இல்லையே..?” என்றான் சாலையில் பார்வை பதித்த படி.

“ எப்படி சார்??” என்றான் ஆச்சர்யமாக.

அவனைப் பார்த்து அழகாக சிரித்தவன்,  “எந்நேரமும் தலையில ஓடிக்கிட்டு இருக்குற விஷயம் தானே‌‌..இப்ப என்ன புதுசா..? மேல விவரத்தை சொல்லு…” என்றான்.

“ சார்…மேமாஸ் பிளஷர்ஸ் ல எல்லா சரக்கையும் இறக்கிருக்காங்க. பாக்ஸையெல்லாம் அப்படியே வச்சிட்டு  வொர்க்ர்ஸ்யெல்லாம் வீட்டுக்கு போனதுக்கு அப்பறமா பாக்ஸ் எல்லாத்தையும் கம்ப்ளீட்டா‌ மாத்தி சேஃபா பார்ட்டி கிட்ட ஒப்படைச்சாச்சு.‌ தங்கத்தை பிரிச்சி எடுக்குற ப்ராசஸை ஆரம்பிச்சிட்டாங்களாம். இன்னும் ஒரு வாரத்துல நமக்கு பேமெண்ட் வந்துடும்னாங்க. நம்ம பார்ஃமா கம்பெனி பேர்லயும் , ட்ரஸ்ட் பேர்லையும் ,கொஞ்ச அமௌண்ட்டை டெபாசிட் பண்ணிடச் சொல்லிட்டேன். அப்பறம் கொஞ்ச அமௌண்ட்டை உங்க பேர்ல் டெபாசிட் பண்ணச் சொல்லி வஜ்ரவேல் அய்யா சொன்னாரு.”என்றான்.

“ம்ம்கூம்…அதெல்லாம் ஒன்னும் வேணாம்.  தனிக்கட்டையான எனக்கு எதுக்கு இவ்வளவு பணம்? வர்ற பணத்தை நம்ம ஆட்களுக்கு பிரிச்சி கொடுத்துடு. போன வருஷம் என்கவுண்டர் ல இறந்து போனானே பரமன்  அவனோட குடும்பத்துக்கு தனியா ஒரு தொகையை எடுத்து வச்சிடு. அவனோட பொண்ணு காலேஜூக்கு போறாங்க போல. நாலு வருஷத்துக்கான பணத்தையும் நாமளே கட்டிடலாம்…வீட்டு செலவுக்கு மாசா மாசம் பணத்தை அனுப்பிடுற தானே?” என்றான்.

“ அதெல்லாம் சரியா போட்டு விட்டுடுறேன் சார். அடுத்த மாசம் அந்தப் பொண்ணு காலேஜ்க்கு போகணும். கவுன்சிலிங் முடிஞ்சவுடனே பணத்தை கட்டிடுறேன். ஆனா வஜ்ரவேல் அய்யா கி்ட என்ன சொல்றது ? இந்த தடவையும் நீங்க பணத்தை வாங்கலன்னா அய்யா ரொம்பவே  வருத்தப்படுவாரே..” என இழுத்தான்.

“ அதை நான்‌ பாத்துக்குறேன்…”

“போலீஸ் செக்கிங்கெல்லாம் ரொம்ப பலமா இருக்கே சார். அதுவும் இந்த தடவை கமிஷ்னரே நேரடியா வந்துட்டாங்க.. நல்லவேளை இந்த தடவை ஏபிசி சார் இல்லை. இருந்திருந்தா கண்டிப்பா மாட்டிருப்போம்.”என்ற மதனைப் பார்த்து சிரித்தவன்  , “ இப்ப மட்டும் கமிஷ்னர் அம்மாவுக்கு  எதுவும் தெரியாதுன்னு நினைக்குறியா?” என்றவனை அதிர்ந்து போய் பார்த்தான் மதன்.

“சார்..ஆனா தெரிஞ்சும் ஏன்?” என்றான் கேள்வியாக.

“ கூல் மதன் …எனக்கும் காரணம் சரியா தெரியல…ம்ம்.. ஆனா …என்னோட கெஸ் சரின்னா..நம்மளோட அடுத்த ப்ராஜெக்ட்டும் ஈசியா கை மாறிடும். என்ன ஆதவ் சார் தான் கொஞ்சம் பிரிச்சனை பிடிச்சவரு.. சமாளிச்சுக்கலாம்.  ம்ம்.. பாப்போம்…” என்றவனின்  முகம் தீவிர யோசனையை தத்தெடுத்தது.. மீசை முறுக்கி விட்டுக் கொண்டான்.

சிறிது நேரம் மொளனத்திற்கு பின் மதனே பேச்சைத் தொடங்கினான்.

“ சார்… நிஜமாவே இராமேஸ்வரத்துக்கு ஹோமத்துக்கு மட்டுந்தான் போறோமா? இல்ல தனுஷ்கோடிக்கு போய் ஒரு ரவுண்ட் பாத்துட்டு வரணுமா?” என்றான் மதன்.

கண்களிலிருந்து தனது குளிர் கண்ணாடியை கழற்றியவன் அவனது தோளில் தட்டிக் கொடுத்து ,  “குட்…நல்ல பார்ஃம் ல  தான் இருக்க. இதுக்கு தான் நீ வேணும்ங்கறது. ம்ம்…ஹோமத்துக்கும் போறோம்…வழியையும் கண்டுபிடிக்கவும் போறோம். ஹோமத்தை முடிச்சிட்டு ‌ அங்கேயிருந்து தனுஷ்கோடிக்கு போய்டலாம். படகை எடுத்துட்டு ஒரு ரவுண்ட் போயிட்டு வரணும் மதன்.” என்றான்.

“ ஓகே சார் பண்ணிடலாம்…அடுத்த தடவையும் கடல் வழியாக தானா? “

“ சரக்கை பொறுத்து…” என்றவனது கைகளில் வாகனம்‌ சீறிப்‌ பாய்ந்தது.

கமிஷனர் அலுவலகத்தில் கீதாஞ்சலியின்‌ முன்பு நின்றிருந்தான் ஆதவ்.

அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் , “ சொல்லுங்க ஆதவ்..என்ன விஷயம்?” என்றாள்.

“ மேடம்…போன வாரம் மிருகேந்திரன்  ஐம்பது கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்டை சேஃபா கைமாத்தி விட்டுருக்கான். எனக்கு என்னமோ நம்ம சைட் ல இருக்குற செக்கிங் மேல தான்‌  சந்தேகமா இருக்கு. இந்த தடவையும் அவனை பிடிக்க முடியல ‌.. இப்படியே போயிட்டு  இருந்ததுன்னா அவனை பிடிக்கவே முடியாது. நீங்க எனக்கும் என் டீமுக்கும் ஸ்பெஷல் பர்மிஷன் கொடுங்க”என்றான் ஆதவ்.

நாற்காலியை முன்னிழுத்து கைகளிரண்டையும் கோர்த்துக் கொண்டவள்,   “எதுக்கு?” என்றாள் நிதானமாக.

அவளது கேள்வி எரிச்சலை மூட்டியது ஆதவிற்கு.

“ வேற எதுக்கு அவனையும் வஜ்ரவேலயும் பிடிக்க தான்.”என்றான் அவளை நேராகப் பார்த்து.

“அப்ப நானே நேரா போய் செக் பண்ணுனதைக் கூட நீங்க நம்பலையா?  என் மேலேயே சந்தேகப்படுறீங்களா?” என்றாள்.

தலையை கோதி நிதானப் படுத்திக் கொண்டவன்,” நான் சொன்னதை நீங்க வேற‌ மாதிரி புரிஞ்சிக்குறீங்க மேடம். நான் அந்த அர்த்ததுல சொல்ல வரல. “

“ பின்ன எந்த அர்த்ததுல சொல்ல வர்றீங்க மிஸ்டர் ஆதவ். நாங்கெல்லாம் கையாலாகாதத்தனமா  சும்மா வேடிக்கை பாத்துட்டு இருக்கோம். நீங்க மட்டுந்தான் பொறுப்பா நடந்துக்குற மாதிரி இருக்கு நீங்க‌ பேசுறது. இந்த கேஸை எப்படி டீல் பண்ணும்ங்கறது எனக்கு நல்லா தெரியும். முதல்ல பெண்டிங் கேஸை‌ முடிச்சி விடுங்க. மிஸ்டர் பசுபதியோட கல் குவாரில வெடி வெடிச்சு முப்பது பேர் இறந்தாங்களே அந்த கேஸ் எந்த அளவுல இருக்கு?” என்றாள்.

தமக்கை விருகேந்திரன் வழக்கில் தன்னை தலையிட விடாமல் செய்கிறாள் என்று ஆதவ்விற்கு நன்கு புரிந்தது.

ஒரு பெருமூச்சுடன், “ என்கொய்ரி பண்ணச் சொல்லிருக்கேன் மேடம்…இன்னைக்கு சைட்ல போய் நேரா பாத்துட்டு ஃப்ரதரா புரோசீட் பண்ணுறேன்.” என்று கூறி விட்டு வெளியேறினான்.

நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவள் அன்றைய கோப்புகளை பார்க்க ஆரம்பித்தாள்.

கோபத்துடன் அவளது அறையிலிருந்து வெளியேறியவன் தனது உதவியாளர் பாபுவிடம் ,  “பசுபதியோட குவாரிக்கு சீல் வச்சாச்சா? ”என்றான்.

“வச்சாச்சு…சார்…ஆனா பசுபதி தான் எங்கயோ எஸ்கேப் ஆகிட்டாரு. தேடிட்டு இருக்கோம். மே பீ அவரோட சொந்த ஊரான ஆந்திராவுக்கு போயிருக்கலாம். அங்கயும் ஆட்களை அனுப்பி தேடச் சொல்லிருக்கேன். “ என்றார்.

“ ம்ம்…சரி.” என்றவன் போலீஸ் வாகனத்தில் ஏறி அமர்ந்தான்.

நெற்றியை நீவி விட்டவன் , “ ம்ம்…பாபு அந்த வஜ்ரவேல் இங்க தானே இருக்காரு? அந்த மிருகேன் இங்க இருக்கானா? இல்ல வெளியூர் எங்கயும் போயிருக்கானா? “என்றான்

“ சார் வஜ்ரவேல் இங்க தான் இருக்காரு. மிருகேன் சார்…” என்றவன் ஆதவ்வின் முறைப்பில் , “மிருகேந்திரன் ராமேஸ்வரத்துக்கு போயிருக்கறதா கேள்விப்பட்டேன்..” என்றார்.

“ ரெண்டு பேரும் என்ன பண்றாங்கன்னு  அப்பப்ப இன்பர்மேஷன் கொடுத்திட்டே இருங்க. “ என்று கூறி விட்டு வாகனத்தை எடுத்தான்.

ஜானகியுடன் கோவிலுக்கு வந்திருந்தான் ஆதவ். மிகவும் கூட்டமாக இருந்தது.  வரிசையில் தாயும் மகனும் நின்றிருந்தனர். 

ருத்ரனுக்கும் கீதாஞ்சலிக்கும் பெரிதாக கடவுள் நம்பிக்கை இல்லையென்பதினால் அவர்கள் இருவரும் கோவிலுக்கு வரவில்லை.

ஜானகிக்கு பின்னால் நின்றிருந்தான் ஆதவ். பிரதோஷம் என்பதால் கூட்டம் அலைமோதியது. ஆதவ்விற்கு பின்னால் நின்றிருந்தாள் மோகனா. 

பாவாடை தாவணி அணிந்து இறுகப் பின்னி மல்லிகை சரத்தை சூடி. நெற்றியில் கீற்றாக விபூதியும் குங்குமமும் வைத்திருந்தாள்.

 கண்களை மூடி கொண்டு மனமுருக இறைவனை வேண்டிக் கொண்டிருந்தாள்.

திடீரென வரிசை வேகமாக செல்லவே, மோகனாவிற்கு பின்னால் நின்றிருந்தவர்கள் அவளை இடிக்க அவள் தனக்கு முன்னால் நின்றிருந்த ஆதவ் மீது விழுந்தாள்.

வேகமாக திரும்பி அவளைப் முறைக்க,   “ சாரி சார் மன்னிச்சிக்கோங்க. பின்னாடி இருந்தவங்க தள்ளிட்டாங்க. அதனால் தான் உங்க மேல மோதிட்டேன். தவறா எடுத்துக்காதீங்க சார்..” என்றாள் பாவமான குரலில்.

அவள் மன்னிப்பு கேட்டதும் அவனது கோபம் இறஙகி விட்டது.

“ இட்ஸ் ஓகே..” என்று கூறி விட்டு ஜானகியின் தோள் மீது கையை வைத்தபடி நகர தொடங்கினான்.

அதிக கூட்டம் காரணமாக அவன் நின்றிருந்த வரிசைக்கருகே மற்றொரு வரிசை வந்து விடவே அதற்கு தாவினாள் மோகனா.

கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கு பிறகு சன்னிதானத்திற்குள் நுழைந்தனர் தாயும் மகனும்.

இறைவனுக்கு வழிபாடு நடத்தி ஆர்த்தி காண்பிக்க இருவரும் இறைவனை பிராத்தித்தனர்.

“ஆதவ் சேன்ஜ் இருந்தா கொடு . தட்டுல போடணும்.  நான் சேன்ஜ் கொண்டு வரலப்பா..” என்றாள் ஜானகி.

“இருங்க மா..தர்றேன்..” என்றவன் பின்புற பேன்ட் பாக்கெட்டில் கை நுழைத்து பர்ஸை எடுக்க முயன்றான்.

அந்தோ பரிதாபம் அவனது பின்புற பாக்கெட் மட்டும் அழகாக வெட்டியெடுக்கப்பட்டிருந்தது.

அதிர்ந்து போனான். தனக்கு தான் அப்படித் தோன்றுகிறதோ என்று மறுபக்க பாக்கெட்டில் கை நுழைந்தான். அது கிழியாமல் சரியாக இருந்தது.

மறுபடியும் தனக்கு தான் பிரமையாக தோன்றுகிறதோ என பரிசோதித்தான். 

நன்றாக பர்ஸ் வைக்கப்பட்டிருந்த இடம் மட்டும் கிழிந்து பர்ஸ் எடுக்கப்பட்டிருந்தது…. 

இல்லையில்லை பிக்பாக்கெட் அடிக்கப்பட்டிருந்தது.

அவன் அதிர்வுடன் ஜீன்ஸை துழாவிக்  கொண்டிருப்பதை கவனித்த ஜானகி , “ ஆதவ்..சேன்ஜ் கொடு டா…ஆர்த்தி காமிச்சி  கொண்டு வந்துண்டிருக்கார். தட்டுல போடணும்.” என அவசரப்படுத்தினாள் .

“ ம்ம்…பர்ஸை காணோம் ம்மா..”

“  என்ன சொல்ற ஆதவ்? ஆத்துல இருந்து எடுத்துட்டு தானே வந்த  ? இல்லை ஆத்துலயே மறந்து வச்சிட்டு வந்துடுட்டியா?” “ என்றாள் யோசனையாக.

“ இல்ல ம்மா.. எடுத்துட்டு தான் வந்தேன். யாரோ ஃப்ளேடு போட்டுட்டாங்க ..”என்றான் எரிச்சலுடன்.

அவன் கூறிய திருப்பித் ஜானகிக்கு சட்டென்று  சிரிப்பு வந்து விட்டது , சிரிப்பினை அடக்கிக் கொண்டு, “ சாரி டா ஆதவ்…நேக்கு சிரிக்காம இருக்க முடியலை டா…ஆனாளப்பட்ட ஏபிசி ஆதவ் ஆத்ரேயன் கிட்டயே ஒருத்தன் பிக்பாக்கெட் அடிச்சிருக்கான்னா…. அவன் ஜெகஜாலக்கில்லாடியா தான் இருக்கணும். எப்பவும் அலார்டடா இருக்குற உன் கிட்டயே திருடியிருக்கான் பாரு…சும்மா சொல்லக்கூடாது டா..சாரி..ஆதவ்.. என்னால சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியல..” என்றவள் வாய் மூடி சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

“ ம்மா….சும்மா இரேன் ” என்று பல்லைக் கடித்தான் ஆதவ்.

“ சா…சாரி…டா..ஆதவ்..” என்று முயன்று சிரிப்பை அடக்கியவள், ” சரி சரி தீபாராதனையை கண்ணுல ஒத்திக்கோ ‌…அப்பறம் பேசிக்கலாம். வா..” என்றவள் அவனை இழுத்துக் கொண்டு நகர்ந்தாள்.

‘யாரது நம்ம கிட்டயே கைவரிசையை காட்டிருக்கறது? மாட்டட்டும் அன்னைக்கு இருக்கு கச்சேரி ‘ என பல்லைக்கடித்தவனுக்கு திடீரென வரிசையில் நிற்கும் போது யாரோ முகம் தெரியாத ஒரு பெண் தன் மீது வந்து  மோதியது நினைவிற்கு வந்தது.

‘ஓ…காட்…பிக்பாக்கெட் அடிச்சது ஒரு பொண்ணா?’என் கண நேரத்தில் கண்டு கொண்டது அவனது போலீஸ் மூளை.

“ச்சை.. மிஸ் பண்ணிட்டேன்..” என முணுமுணுத்து கொண்டே நெற்றியை நீவி விட்டான்.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் நுழைந்து சாவியை கொண்டு  தனது வீட்டைத் திறந்தாள் மோகனா.

“ ச்சே…ச்சே….ச்சே..இந்த தாவணியை  கட்டிட்டு வெளியில போயிட்டு வர்றது எவ்வளவு கஷ்டமா இருக்கு…அதுவும் இந்த வெயில்ல…ஷ்ஷ்.ஷப்பா…”என அலுத்துக் கொண்டே தாவணியை கழற்றி எறிந்துவிட்டு இடுப்பினை சுற்றி கட்டிருந்த தோல் நிறத்தில் இருந்த மீள் தன்மை கொண்ட பட்டையை( skin colour elastic belt) கழற்றினாள். 

பின்னர் இலகுவான ஆடைக்கு மாறியிருந்தாள்.

 பட்டையை சுற்றி  நெகிழி போன்ற உறையிருந்தது. அதனை எடுத்துவிட்டு பட்டையை கவிழ்த்தாள். கிட்டத்தட்ட இருபதிற்கும் மேற்பட்ட பர்ஸூகள் இருந்தது.

“ஆண்டவா…நான் பண்ணுறது தப்பு தான்…மன்னிச்சுக்க…பாவ‌த்துக்கு பரிகாரமா இந்த பர்ஸூ காசு பூராவும் உண்டியல்ல போட்டுடுறேன்.. நன்றி கடவுளே…எல்லா மக்களும் இப்படி சீரும் சிறப்புமா இருந்தா தான் என்னை மாதிரி ஆட்களுக்கு பொழப்பு ஓடும்…” என்றவள் ஒரு பர்ஸை மட்டும் எடுத்து தனியே வைத்து விட்டு மற்றதை ஆராய்ந்தாள் ‌.

ஏதோ தோன்ற தனியே எடுத்து வைத்த பர்ஸை மீண்டும் எடுத்துப்‌பார்த்தாள்.

உள்ளே பணமேதும் இல்லாமல் ரசீதுகளாக இருந்தது.

நிமிர்ந்து தனக்கெதிரேயிருந்த முருகன் படத்தை பார்த்தாள்.

முருகன் சிரிப்பது போல தோன்ற , “ஹீ..ஹீ. சாரி…சாரி கடவுளே…எவனோ நம்மளை நல்லா ஏமாத்திட்டான். டோண்ட் வொர்ரி முருகா இதோ இந்த   ஃபர்ஸ் உங்களுக்கு தான்..” என்றவள் மற்றொரு பர்ஸை திறந்து பார்க்க அதில்   பத்து ரூபாய் மட்டுமே இருக்க அதனை எடுத்து கடவுளின்‌ படத்தருகே வைத்து மனமுருக வேண்டிக் கொண்டாள்.

மெத்தையில் அமர்ந்தவள் மீதமிருந்த பர்ஸூகளில் இருந்த பணத்தை எடுத்து தனியே வைத்தாள்.

இறுதியாக ஆதவ்வின் பர்ஸை எடுத்துப் பார்த்தாள். அதில் அவனது முகவரி அட்டை இருந்தது . எடுத்துப் பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது.  “ ஆதவ் ஆத்ரேயன் , அசிஸ்டன்ட் கமிஷ்னர் ஆஃப் போலீஸ்” என்று அச்சிடப்பட்டிருந்தது.

“ ஆத்தாடி ஏபிசி கிட்டயே போய் பிக்பாக்கெட் அடிச்சிட்டு வந்துருக்கேனே… ! கொஞ்சம் மிஸ்ஸாகிருந்தா கம்பி எண்ணியிருப்பேன்…அடியே மோகனா…பர்ஸை பாத்ததும் ஆஆன்னு வாயைப் பொளக்காம கொஞ்சம் சூதானமா யார் எவருன்னு பார்த்து கையை வைக்கணும் டி…முருகா…நீ தான் ப்பா எப்படியோ என்னைய காப்பாத்திட்ட …” என் பெருமூச்சு விட்டவள் , ‘”சரி இந்த ஆஃபிஸர் எவ்வளவு காசு வச்சிருக்காரு ன்னு  பாப்போம் “ என்று முணுமுணுத்துக் கொண்டே  பர்ஸை திறந்தாள் .

பதினோரு ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் மற்றும் சில நூறு ரூபாய் தாள்கள் இருந்தன.  சில நாணயங்களும் இருந்தன.

“ ம்ம்…. ஐயாயிரம்…இது ஒரு ஐந்நூறு…இது…நூறு‌ ரூபாய் நோட்டு ஒரு ஐந்நூறு..ம்ம்…ஓகே ஓகே..ஆறாயிரம் இருக்குது…பரவாயில்ல சமாளிச்சுக்கலாம்.. நல்லவேளை விசிட்டிங் கார்ட் மட்டும்தான் இருக்குது. ஐடி கார்ட் இல்ல…தப்பிச்சேன்…” என்றவள் பர்ஸூகளையெல்லாம் ஒரு நெகிழிப்பையில் போட்டு பரண் மேல் வைத்துவிட்டு ரூபாய் நோட்டுகளை பத்திரப்படுத்தினாள்.

மோகனா தங்கியிருப்பது மூன்று படுக்கையறை கொண்ட விசாலமான நவநாகரீக அடுக்குமாடி குடியிருப்பு .  வார இறுதி நாட்களில் மட்டுமே அவளுக்கு வேலை  நாட்கள் , பண்டிகை காலங்களில் மிகவும் பரபரப்பாக இருப்பாள். 

அவளை தட்டிக் கேட்கவோ செய்வது தவறு என்று கூறி வழிக்காட்டவோ யாருமில்லை. தனக்கு சரியென்று தோன்றியதை மட்டுமே செய்வாள். எதற்காகவும் அஞ்ச மாட்டாள். 

மாட்டிக் கொள்ளாத அளவிற்கு தவறுகளை திட்டுமிட்டு செய்வாள்.  

சற்றே ஆடம்பர ப்ரியை. எப்பொழுதாவது சமைப்பாள். மற்ற நேரமெல்லாம் ஸ்விக்கி , சோமேட்டோ தான் அவளுக்கு வீடு தேடி உணவை கொண்டு வந்து கொடுக்கும் அட்சய பாத்திரம். 

இருபது வயதை நெருங்கிக் கொண்டிருப்பவளுக்கு ஐம்பதை நெருங்கும் அல்லது ஐம்பதை தாண்டிய பணத்திற்கு குறைவில்லாத இளைஞர்கள் (?) தான் குறி.

இணையத்தில் உள்ள ஆஃப் மூலம் நைச்சியமாக பேசி பஃப்புகளுக்கு வரவழைத்து  அளவுக்கு அதிகமாக மது அருந்த வைத்து தன்னிலையிழந்து அவர்கள் இருக்கும் போது  அவர்களிடமிருந்து விலையுயர்ந்த பொருட்களை எடுத்து கொண்டு விடுவாள். 

ஏதேனும் ஒரு காரணத்தை கூறி அவர்களிடமிருந்து பணத்தையும் கறந்து விடுவாள்.

விலையுயர்ந்த வாட்ச் , தங்க மோதிரம் , தங்கச் சங்கிலி என கிடைப்பதனைத்தையும் எடுத்துக் கொண்டு வந்த சுவடு தெரியாமல் சென்றுவிடுவாள். 

அதிகக் கூட்டமிருக்கும் இடங்களையே தேர்ந்தெடுப்பாள். 

பணத்தை இழந்தவர்கள் அவளை தொடர்பு கொள்ள முயன்றால் அவளுடன் அவர்களுடன்  சேட் செய்ததையும்,  குடித்து கும்மாளமிட்ட காணொளியையும் சமூக வலைதளங்களில்  வெளியிட்டு விடுவேன் என மிரட்டி விடுவாள்.

சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், பெரிய பதவிகளில் இருப்பவர்களை மட்டும் தான் தனது திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்வாள். மனைவிக்கு தெரியாமல் அவளுடன் பேசிப் பழகுபவர்கள் அவளது மிரட்டலுக்கு பயந்து பேசாமல் சென்று விடுவார்கள். காவல் நிலையத்திற்குச் சென்று  புகாரளிக்க முடியாத நிலையை ஏற்படுத்தி விடுவாள்.

இள வயது இளைஞர்களை தவிர்த்து விடுவாள். ஏனெனில் அவர்களிடம் மாட்டிக் கொண்டால் தப்பிக்க முடியாது என்று நன்கு அறிவாள்.

வீட்டிற்கு வந்த ஆதவ்விற்கு ஆத்திரமாக வந்தது . அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான்.

அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்த கீதாஞ்சலியினருகே வந்த ஜானகி, “ கீதும்மா…அடுத்த வாரம் பொண்ணு பார்க்க வர்றேன்னு சொல்லிருக்கா…எப்ப‌ வரச் சொல்ல? நீ எப்ப ஃப்ரீயா இருப்ப?” என்றாள் .

ஜானகியை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் அலைப்பேசியை நோண்ட ஆரம்பித்தாள்.

“ ம்ம்ச்…உன் கிட்ட தான் கீது கேட்டுண்டு இருக்கேன். பதிலே பேசாம நீ பாட்டுக்கு ஃபோனை நோண்டிண்டே இருந்தன்னா என்ன அர்த்தம்? ஏதாவது சொல்லு டி. முறைப்படி வந்து அவா பொண்ணு பாத்தா தானே…மேற்கொண்டு ஏற்பாட்டை செய்ய முடியும்?” என படபடத்தாள்.

“ ம்ம்ச்…என்ன வேணும் ம்மா…உனக்கு? கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுன்னுட்டேன்…திரும்பவும் வந்து ஏதானும் சொல்லிட்டே இருக்க..” என எரிச்சல்பட்டாள்.

“ ம்ம்ச்…இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி எடுத்தெறிஞ்சு பேசுற கீது…? நீ எப்ப வீட்டுல இருப்பியோ அப்ப அவங்களை வரச்சொல்லி மேற்கொண்டு பேசலாம்னா .. எல்லாத்துக்கும் விதண்டாவாதம் பண்ணிண்டு இருக்க?” என பதிலுக்கு  ஜானகியும் மகளிடம் காய்ந்தாள்.

“அடடா…என்ன அம்மாவுக்கும் பொண்ணுக்கும் இங்க பஞ்சாயத்து?”என்றபடி.ஜானகியினருகே வந்தமர்ந்தான் ருத்ரன்.

“காலையில பையனோட ஆத்துல இருந்து ஃபோன் பண்ணினா. அடுத்த வாரம் கீதுவை பொண்ணு பார்க்க வர்றாளாம். எந்த நாள் தோது படும்ன்னு கேட்டா. அதை தான் இவ கிட்ட கேட்டுண்டு இருந்தேன். ஒழுங்கா பதில் சொல்லாம என் தலையை பிச்சிக்க வச்சிண்டிருக்கா உங்க பொண்ணு..நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்கோ…நான் ‌போறேன்.” என கோபமாக எழுந்தவளை கைப்பிடித்து தன்னருகே அமர்ந்துக் கொண்டான் ருத்ரன்.

கீதாஞ்சலியின் கையிலிருந்த அலைப்பேசியை எடுத்து கீழே வைத்தான் .

“ ப்பா…” என‌ முறைத்தவளை சட்டை செய்யாமல், “கீதும்மா…முதல்ல கேக்குற கேள்விக்கு சரியான பதில் சொல்லு…”என்றான் அழுத்தமாக.

அவனது அழுத்தம் அவளை நிமிர்ந்து அமர வைத்தது.

“ சொல்லுங்கோ ப்பா..” எனறு கூறி நாக்கை கடித்துக் கொண்டவள் உடனே திருத்திக் கொண்டு,  “சொல்லுங்கப்பா” என்றாள்.

சின்னச் சிரிப்புடன், “ உனக்கு கல்யாணத்துக்கு ஓகே தானே? எந்தப் பிரச்சினையும் இல்லை தானே..? உம் மனசுல வேற யாரும் இருக்காங்களா? நல்லா யோசிச்சு சொல்லு. உனக்கு விருப்பமில்லாத எதையும் நாங்க பண்ண  மாட்டோம்.” என்றான்.

“ அதெல்லாம் ஒரு மண்ணுமில்லை. கல்யாணத்துக்கு எனக்கு ஓகே தான். திரும்பத் திரும்ப ஏதானும் கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணாதீங்க.  அவங்களை பக்கத்தில இருக்கிற கோவிலுக்கு வரச்சொல்லுங்க. பாத்து பேசிட்டு போகட்டும். பிராகரத்துல பாத்து பேசிட்டு போகட்டும் ‌.அப்பறம் எனக்கு சில கண்டிஷன்கள் இருக்கு.”என நிறுத்தினாள்

ஜானகி மற்றும் ருத்ரன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

“ இங்க பாருங்க. அடுத்த வாரம் பொண்ணு பாத்துட்டு போறதோட சரி. நிச்சயதார்த்தம் எல்லாம் வேணாம். டைரக்டா கல்யாணம் தான். அப்பறம் புடவை வாங்குறதுக்கு  வான்னு கூப்பிடறது, நகை வாங்குறதுக்கு கூப்பிடறது, இன்விடேஷன் அடிக்குறதுக்கு கூப்பிடற வேலையெல்லாம் வேணாம். நீங்களே பாத்து எல்லாத்தையும் ரெடி பண்ணிடுங்க. நான் நேரா கல்யாண நாள் அன்னைக்கு மேடையில் வந்து உக்காருவேன் . அதோட என்னோட வேலை அவ்வளவு தான் முடிஞ்சது. கல்யாணத்துக்கு அன்னைக்கு ஒருநாள் மட்டுந்தான் லீவு போடுவேன். மறு வீடு, விருந்து , குலதெய்வ கோவில் வழிபாடு..அது இதுன்னு என்னை கம்பெல் பண்ணக்கூடாது. ஹான்…அப்பறம் வரதட்சணைங்கற பேர்ல நகைக்கடை விளம்பரம் மாதிரி சவரன் சவரான கொடுத்து விடுறது, புடவை விளம்பரம் மாதிரி ஏகப்பட்ட புடவையை தலையில கட்டுற வேலையெல்லாம் வேணாம். கல்யாணம் மட்டும் நல்ல மண்டபத்துல பிக்ஸ் பண்ணிடுங்க. வேற ஏதானும் செலவை அவங்க இழுத்து விட்டாங்கன்னா ஸ்டிரிக்ட்டா கல்யாணத்தை அப்படியே கேன்சல் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன். இதெல்லாத்தையும் இப்பவே உங்க கிட்ட நான் சொல்லிடுறேன். அப்பறம் வந்து நொய்யு நொய்யுங்காதீங்க. ஏகப்பட்ட பெண்டிங் கேஸ் இருக்கு. எல்லாத்தையும் முடிக்கணும். உங்க கிட்ட ஒவ்வொரு விஷயத்துக்கும் விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது..* என்று கூறி விட்டு இருவரையும் பார்த்தாள்.

மகளது அதிரடியில் இருவரும் பேச்சிழந்து அமரந்திருந்தனர்.

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top