“ரக்கிட ரக்கிட…ரக்கிட ஹூ…
ரக்கிட ரக்கிட …ரக்கிட ஹூ…
என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன்…
உசுரிருக்கு வேறென்ன வேணும்
நான் உல்லாசமா இருப்பேன்..”
எனத் திரைப்பட பாடல் நான்கு புறமும் சுற்றி அமைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த மியூசிக் சிஸ்டத்தில் அதிர்ந்து கொண்டிருக்க, இடுப்பை வளைத்து நெளித்து ஆடியபடி ரூபாய் நோட்டுக்களை எண்ணிக்கொண்டு இருந்தாள் மோகனா.
இருபது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இளநங்கை.
ஆனால் வயதிற்கு மீறிய வளர்ச்சி அவளை இருபத்தைந்து வயது பெண் போல காட்டிக் கொண்டிருந்தது.
ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஸ்விஸ் கைக்கடிகாரத்தை கையில் அணிந்து கொண்டு அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள் மோகனா…
“பாக்க தான் கஞ்சூஸ் மாதிரி இருந்தான். பரவாயில்ல. நல்ல வெயிட்டான பார்ட்டி தான். இந்த மாதிரி ஆட்கள் இருக்குற வரை கவலையேது…என்ஜாய்…யுவர் லைஃப் மோகனா…” என்றவள் தனக்குத்தானே சபாஷ் போட்டுக் கொண்டு ,
“ வசீகரா…என் நெஞ்சனிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதுமதே.. கணம்…
என் கண்ணுறங்கா…முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்…
நான் நேசிப்பதும்….சுவாசிப்பதும்…உன் தயவால் தானே….
ஏங்குகிறேன்..தேங்குகிறேன்…உன் நினைவால் நானே….”
என்று பாடிக் கொண்டே ஒரு கையில் கொழுத்த பர்ஸையும் மறுகையில் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தையும் வைத்துக் கொண்டு ஆடிக் கொண்டிருந்தாள்.
வேக எட்டுக்களால் அந்த காவல் நிலையத்தினுள்ளே அதிரடியாக நுழைந்தான் ஆதவ்.
தாடி மீசை மழிக்கப்பட்டு க்ளீன் ஷேவ் செய்திருந்தான். தந்தையின் உயரத்திற்கு சிறிதும் குறைவின்றி ஆறடி இரண்டு அங்குலத்திற்கு வஞ்சனையின்றி வளர்ந்திருந்தான்.
நரம்போடிய கைகளில் அணிந்திருந்த கைக்காப்பினை மேலே ஏற்றி விட்டவன், “என்ன ரத்னவேல் தங்க பிஸ்கட் வெற்றிகரமா கைமாத்தி விட்டுட்டாங்க போல..வழக்கம் போல இந்த தடவையும் வெறுங்கையை வீசிட்டு வந்தாச்சு ல. “ என்றவன் அங்கிருந்த அனைத்து காவலரையும் ஒரு பார்வை பார்த்தான்.
“ சார்…நாங்க கம்ப்ளீட்டா செக் பண்ணிட்டோம் சார் ..ஒண்ணும் உருப்படியா இல்லை. எல்லாமே காண்டம்ஸ, மூலிகை சாக்லேட், அந்த மாதிரி விஷயத்துக்கு பயன்படுத்துற ஐட்டமா இருந்தது.. ஆனாலும் செக்கிங் மிஷன் வச்சி எல்லாத்தையும் செக் பண்ணினோம் சார்…தங்கம் கடத்துறத்துக்கான எந்த அறிகுறியும் இல்லை …இந்த தடவை கமிஷனர் மேடம் கூட வந்தாங்க சார்…அவங்களால கூட ஸ்மெல் பண்ண முடியலை..” என்றார்.
“ ம்ம்…” என்று தாடையை தடவியபடி யோசித்தவன், “ சாக்லேட் இருந்த அலுமினிய பாக்ஸை செக் பண்ணுனீங்களா? “
“ இ…இல்ல…சார்…”
“கான்ட்ரசெப்டிவ்ஸ் கவரை ஸ்மோக் டெஸ்ட் பண்ணுனீங்களா?”
“ இ…இல்ல சார்…”
“ எல்லா சாக்லேட்டையும் உடைச்சு பாத்தீங்களா?”
“சார்…அவரு எல்லா ப்ராடெக்ஸையும் தாய்லாந்துல இருக்குற , ‘மேமாஸ்..ப்ளஷர்ஸ்’ங்கற கம்பெனிக்கு இங்கயிருந்து எக்ஸ்போர்ட் பண்ணுறார். அதுக்கான டாக்குமெண்ட்ஸ் எல்லாம் பக்காவா வச்சிருந்தார் சார். செக்கிங் ல ஏதாவது பொருள் டேமேஜ் ஆனா சம்பந்தபட்டவங்க மூணு மடங்கா காம்பென்சேஷன் தரணும்னு ஆர்டர் காப்பி வேற வச்சிருந்தார் சார்…அதனால எல்லா சாக்லேட்டையும் எங்களல உடைச்சு பாக்க முடியல ..” என்று தயக்கத்துடன் கூறினார் தலைமை காவலர்.
“ம்ம்…நல்லாவே கதை சொல்லுறீங்க ரத்னவேல்..அவனே ஒரு ஃப்ராடு …கடத்துறதுக்கு என்ன வேணாலும் செய்வான். அதை நம்பிட்டு நீங்களும் வேடிக்கை பாத்துட்டு வந்துருக்கீங்க…”
“ இல்ல சார் கமிஷனர் மேடம் கூட டீப் சர்ச் பண்ணுனாங்க..ஆனா ஒண்ணும் கிடைக்கல…” என்றே கூறும் போதே அவர் கவனிக்கத் தவறிய விஷயங்கள் ஆதவ் நினைவு கூர்ந்து எடுத்துக்காட்டியது அவருக்கு குற்றவுணர்வைத் தர அவரது குரல் இறங்கியே ஒலித்தது.
அவரை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினான்.
இரவு உணவை உண்ண அனைவரும் உணவு மேசையில் குழுமியிருந்தனர்.
சாப்பாத்தி மற்றும் குருமாவை பரிமாறி விட்டு அமர்ந்தாள் ஜானகி.
அமைதியாக ஆதவ்வும் கீதாஞ்சலியும் உண்டு கொண்டிருநதனர்.
“ கீதும்மா…” என்றாள் ஜானகி.
நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் எதுவும் பேசாமல் தட்டில் கவனத்தை செலுத்தினாள்.
சலிப்புடன் ருத்ரனின் புறம் திரும்பினாள் ஜானகி.
‘பேசு..’ என்பது போல சைகை செய்தான் ருத்ரன்.
“கீதும்மா வரன் ஒன்னு தகைஞ்சு வந்திருக்கு…நீ சரின்னு சொன்னா மேற் கொண்டு பேசலாம்…என்ன சொல்ற?” என்றாள் ஜானகி.
அவள் அமைதியாக இருக்க, “ கீதுக்கா …உன் கிட்ட தான் அம்மா கேக்குறாங்க. பதிலே சொல்லாம நீ பாட்டுக்கு அமைதியா இருந்தா என்ன அர்த்தம்.?” என்றான் ஆதவ்.
நிமிர்ந்து அவனை முறைத்தவள், “இதுக்கான பதிலை நான் ஏற்கனவே சொல்லிட்டேன். எனக்கு இந்த கல்யாணம் காது குத்துலயெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லன்னு…திரும்பவும் வந்து கேட்டா நான் என்ன சொல்றது?”என்றாள் .
“ கல்யாணம் சரி…காது தான் உனக்கு ஏற்கனவே குத்தியிருக்குல…” என்று கீதாஞ்சலியை வம்பிளுத்தான் ஆதவ்.
அவனை முறைத்து விட்டு உணவை உண்டு கொண்டிருந்தாள்.
ஜானகி ருத்ரனைப் பார்க்க , ‘கொஞ்சம் பொறு ‘ என்பது போல தலையசைத்தான்.
அனைவரும் உண்டு முடித்து விட , கீதாஞ்சலியின் அருகில் வந்த ருத்ரன், “ ஏன் கீதும்மா கல்யாணம் வேணாம்ங்கற? ஏதாவது காரணம் இருக்கா?” என்றான் ஆராய்ச்சியாக.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ டேட் எதுவா இருந்தாலும் நேரடியா கேளுங்க. எனக்கு காதல் கீதல்ன்னுயெல்லாம் ஒண்ணுமில்லை.. கல்யாணம் பண்ணிக்க பிடிக்கலை அவ்வளவு தான். ரொம்ப யோசிக்காதீங்க.” என்றாள்.
“ உனக்கும் வயாசாகிண்டே போறது டி கீது…உனக்கு ஒரு நல்லதைப் பண்ணி பாக்கணும்னு எங்களுக்கு ஆசையிருக்காதா எங்களுக்கு. ஏற்கனவே உன்னோட ஜாதகத்துல தோஷம் இருக்கறதுனால கல்யாணம் தள்ளிப் போயிண்டே இருக்கு . ஜாதகத்தை பாக்கறவாயெல்லாம் தோஷ ஜாதகம்னு விலக்கி வச்சிடுறா. ம்ம்ச் ..இந்த வரன் தான் ஓரளவுக்கு சரி வந்துருக்கு. இது மாதிரி ஜாதகம் கிடைக்கறது கஷ்டம் கீது…இங்க பாரு…இவ்வளவு நாள் உன்னோட ஆசைக்கு மதிப்பு கொடுத்து வாங்க அமைதியா இருந்தோம்யில்லையா…இந்த ஒரு தடவை நீ எங்க பேச்சைக் கேளு டி. நீ இப்படியே யாரோ மாதிரி வீட்டுக்கு வர்றதும் போறதும்.. ரொம்ப கஷ்டமா இருக்கு கீது. கொஞ்சம் கூட எதுலயுமே பிடிப்பில்லாம இருக்குறது தான் நேக்கு பயமா இருக்கு. சரின்னு சொல்லு கீது…” என்றாள் ஜானகி.
அவளை நக்கலாக பார்த்தவள், “தோஷ ஜாதகம்ன்னு சொன்னியேம்மா..இந்த மாப்பிள்ளைக்கு என்னால ஆபத்து ஏதும் வராதுன்னு ஏதும் இருக்கா என்ன? வர்றவன் ஏதானும் மன்னிக்க முடியாத அளவுக்கு தப்பு செஞ்சா …கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன் ..சுட்டுக் தள்ளிட்டு போயிட்டே இருப்பேனாக்கும். அவன் தப்பு பண்ண மாட்டான்னு உங்களால் கியாரண்டி தர முடியுமா?”என்றாள் கைகளை கட்டிக் கொண்டு.
அவளது பேச்சில் ஜானகியும் ருத்ரனும் அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.
இருவருக்கும் அதற்கு மேல் அவளிடம் என்ன பேசுவது என்று புரியவில்லை.
“ அடிப்பாவி கட்டின புருஷனயே போட்டுத் தள்ளுவியா?’ என்று முணுமுணுத்தவனது பேச்சு கீதாஞ்சலியின் காதில் கேட்டு விட்டது போலும் ஆதவைத் தீயென முறைத்தாள்.
“ சரி தான்..” என்றான் தாடையை தடவியபடி.
“ கீது என்ன பேச்சு பேசுற? உனக்கு இருக்குறது தோஷ ஜாதகம் . இப்ப பாத்துருக்குற பையனுக்கும் தோஷ ஜாதகம் தான். அதனால கல்யாணம் பண்ணிக்க போறவனுக்கு உன்னால எந்த அசம்பாவிதமும் நடக்காதுன்னு ஜோசியர் சொல்லிருக்கார்..” என்றாள் ஜானகி.
அதைக் கேட்ட ஆதவும் ருத்ரனும் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக ஜானகியை முறைத்தனர்.
அவர்களின் பார்வை வைத்தே அவர்களின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை உண்ர்ந்து கொண்ட ஜானகி, “நீங்க என்ன நினைக்குறேள்னு எனக்கு புரியறது. இஷ்டத்துக்கு ஜாதகத்தை பார்த்து கண்டதை நம்பிண்டு அதையெல்லாம் பண்ண மாட்டேன். ஆனா ஒரு நல்லது பண்றச்ச கண்டிப்பா ஜாதகம் பாக்கணும். கீதாஞ்சலியோட வாழ்க்கை எந்தத் தடங்கலும் இல்லாம நல்லபடியா தொடங்கணும் . எங்களோட வாழ்க்கை மாதிரி தடுமாறாம நீயாவது சிக்கலில்லாத நல்ல வாழ்க்கையை வாழணும்னு தான் சில விஷயங்களை யோசிச்சு பண்ணுறேன்.அது தப்பில்லையே..” என்றாள் மகளைப் பார்த்து.
ஒரு பெருமூச்சுடன் ஜானகியின் அருகில் வந்தவள், “ இப்ப ஏன் இப்படி சென்டிமெண்ட் டா பேசிட்டு இருக்குறீங்க? என்ன இப்ப கல்யாணத்துக்கு ஓகே சொல்லணும் அவ்வளவு தானே…சரி ஏற்பாடு பண்ணுங்க. ஆனா ஒண்ணு…நீங்க சொன்ன மத்தது கூட ஓகே தான். ஆனா கட்டிக்கப்போறவனுக்கு என்னால கண்டம்னு சொன்னீங்க பாருங்க…அது தான் சுத்த பேத்தலா இருக்கு.” என்று முகத்தை சுளித்தாள்
“கீதுக்கா…ஜாதகத்துல என்ன சொல்றது…நானே சொல்றேன்.. உன்னைய யாரு கல்யாணம் பண்ணுனாலும் அவனுக்கு உன்னால கண்டம் தான்…இதை வேற ஜானு டார்லிங் ஜோசியர் கிட்ட போய் கேட்டுட்டு வந்துருக்காங்க..” என்று கூறி விட்டு சிரித்தவனின் கைகளை பிடித்து பின்னால் முறுக்கினாள் கீதாஞ்சலி.
“ ஆ….அய்யோ…வலிக்குது கீதுக்கா…கையை விடு…ஆ..விடுக்கா” என அலறினான் ஆதவ்.
“அய்யா…! அடிக்காதீங்கய்யா..! ஆ..வலிக்குது. அங்க போலீஸ் இப்படி திடீர்னு வருவாங்கன்னு எதிர்பார்க்கலய்யா…ஆ… வலிக்குது…” என்று வலியில் அலறிக் கொண்டிருந்தான் ஒருவன்.
அவனது கரங்களை பின் புறமாக முறுக்கிய படி,
“அதெப்படி டா… இந்தப் பக்கம் என் கிட்ட சரக்கையும் வாங்கிட்டு அந்தப் பக்கம் போலீஸூக்கும் இன்ஃபார்ம் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்குற? இத்தனை வருஷமா தொழில் பண்றவனுக்கு உன்னை மாதிரி ஆளுங்களை பத்தி தெரியாதா? உன்னை மாதிரி எத்தனை ஆட்களை நான் பாத்துருப்பேன்..என் கூட விளையாட நினைச்சா…என்ன நடக்கும்னு தெரிய வேணாம்…” என்று கூறிக் கொண்டே அவனது கழுத்தில் சிறு கத்தியை சொருகி எடுத்தான் மிருகேந்திரன்.
சரிந்து விழுந்தவனை அப்புறப்படுத்த கூறி விட்டு இரத்தம் சொட்டிக் கொண்டிருந்த கத்தியை நன்றாக கழுவி வைத்தான். தனது கை கால்களை நன்றாக கழுவினான்.
“மதன் இன்னைக்கு இராமேஸ்வரம் போகணும் நியாபகம் இருக்குல்ல… ஹோமத்துக்கு தாத்தா கொடுத்திருக்காரு. முடிச்சிட்டு நாளைக்கு உடனே திரும்பிடலாம்.” என்றான்.
“சரிங்கய்யா..வண்டியை ரெடி பண்ணிடுறேன்..” என்று கூறி நகர்ந்தான் மதன்.