மாதேஷின் வார்த்தைகளில் மறந்திருந்தேன் என்று நினைத்து கொண்டிருந்தவளை கண் முன்னே கண்டான் ஆதீரன். ஒரு அழகான வாலிபனுடன் உதடுகள் மட்டுமல்ல கண்களும் புன்னகையில் விரிய ஏதேதோ பேசி கொண்டு வந்தாள். அந்த வாலிபனின் கைகளில் நான்கு வயது பெண் குழந்தை ஒன்று. அதுவும் அழகாக அவனுடன் ஒட்டி கொண்டு வந்தது. இந்த காட்சியை யார் பார்த்திருந்தாலும் அவர்களின் பார்வைக்கு இவர்கள் மூவரும் ஒரு அழகான குடும்பமாக தான் தெரிவார்கள்.
வேறு யாராவதாக இருந்திருந்தால் மாதேஷைப் போல் அதீரனும் இவர்களை பார்த்து அவ்வாறே நினைத்திருந்திருப்பான். ஆனால் நீலாம்பரியை அவனால் அவ்வாறு நினைக்க முடியவில்லை. அவளுக்காக படைக்கப்பட்டவன் அவன். அவனுக்காக படைக்கப்பட்டவன் அவள் என்று தான் இன்னமும் நினைக்க தோன்றுகிறது அவனது மனதால். ஏனோ கறபனையில் கூட இன்னொருவனுடன் சேர்த்து வைத்து பார்க்க அவனால் முடியவில்லை. நவீன ராவணனாகவே தன்னை நினைத்து கொண்டான். நேரமும் காலமும் கூடி வந்தால் எப்படியாவது அவளை அவனை விட்டு பிரித்து கண் காணாத தேசத்திற்கு கூட்டி செல்ல வேண்டும் என்று வெறியே அவனுள் உருவாகி கொண்டு உள்ளது.
ஐஸ்கிரீமை சாப்பிட்டு முடித்த மாதேஷோ “டேய் போலாமா… அங்க உன் தொங்கச்சி ஐஸ்கிரீமுக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பா..” என்றான்.
அவன் எங்கே இவன் கூறுவதை கவனித்து கொண்டிருந்தான். அவனது பார்வை, எண்ணம் முழுவதும் அவளது ஒருத்தியிடமே இருந்தது. எங்கே கண்ணை சிமிட்டினால் கூட அவள் முழுவதுமாக மறைந்து விடுவாளோ என்ற நினைப்பில் இமைக்க மறந்து அவளை பார்த்து கொண்டிருந்தான்.
“டேய்… என்னடா நான் சொல்லிட்டே இருக்கேன். நீ பேசாமா இருக்க? எங்க இருக்கு உன் நினைவு?” என்று அவனது பார்வை போகும் இடத்தை மாதேஷும் பார்த்தான்.
“ஆதி… ஆதி… என்று இரண்டு முறை தோள்களை குலுக்கியும் அவனது பார்வை அவளை விட்டு விலகவில்லை.
அதற்கு பின்பு தோள்களில் ஒரு அடி அடித்தான். அந்த அடியில் சுயநினைவு கொண்டவன் “எதுக்குடா இப்ப அடிச்ச என்னைய?” என்றான்.
“அப்புறம் அடிக்காம எத்தனை தடவை கூப்பிடறது… அத விடு… இப்ப எதுக்கு அந்த மேடத்தையை பார்த்துகிட்டு இருக்க…”
“அழகா இருக்காங்க… அதான் பார்த்துட்டு இருக்கேன்…”
“டேய்… அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு…”
“அதுக்கு நான் என்ன செய்யட்டும்…”
அவனது பேச்சில் பற்களை கடித்த மாதேஷோ “டேய்… நான் சொல்றது புரியதா? இல்லையா? அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு… சோ அவங்கள அப்படி பார்க்கறது எல்லாம் தப்பு…” என்றான்.
அவனது பேச்சில் தற்பொழுது எரிச்சலடைந்தான் ஆதீரன்.
“கல்யாணம் ஆன பொண்ணுகளை பார்க்க கூடாதுனு யார் சொன்னாங்க?”
“டேய் ஏண்டா இப்படி எல்லாம் பேசுற? நீ அப்படி பட்டவன் இல்லையேடா…”
“நான் என்ன பண்ணிட்டேனு இப்படி நீ ஓவரா ரியாக்ட் பண்ற?”
“நீ என்ன பண்ணிகிட்டு இருக்கேனு உனக்கு தெரியாதா?”
“ஏன் தெரியாம என்ன? நல்லா தெரியும்… சோ நீ அதை பத்தி கவலைப்பட வேண்டாம். முதல்ல என்ன பொறுக்கி மாதிரி பார்க்கறத நிறுத்து… பொண்ணுக கிட்ட கொஞ்சம் சிரிச்சு பேசி பழகுனா எல்லாரும் பொறுக்கினு நினைச்சுக்குவீங்களா?” என்று சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசினான்.
“அடச்சீ… நிறுத்து… இப்ப எதுக்கு ஒவரா ரியாக்ட் பண்னி ஏதேதோ பேசிகிட்டு இருக்க? நான் எப்படா உன்ன பொறுக்கினு சொன்னேன்…” என்று ஆதீரனுக்கு குறைவில்லாது மாதேஷூம் கத்தினான்.
இருவரின் சாதாரண பேச்சு கொஞ்சம் முற்றி வாக்குவாதமாக மாறியது.
அவர்களின் சப்தத்தில் அருகில் இருந்தவர்கள் தங்களை பார்ப்பதை உணர்ந்த ஆதீரனோ எழுந்து “வா… போகலாம்…” என்று கூறிவிட்டு மறுபடியும் நீலாம்பரியை முழுவதுமாக தன் கண்களுக்குள் நிரப்பி கொண்டு வெளியேறினான்.
அவனை தொடர்ந்து மாதேஷும் வெளியேறினான்.
அவன் வெளியேறியதை ஓர கண்ணால் பார்த்து கொண்டிருந்த நீலாம்பரியின் விழிகளிலும் ஏக்கம் நிறைந்து காணப்பட்டது. ஏனோ அவளால் எந்த உண்மையையும் விளக்கி கூற முடியவில்லை.
பல வருடங்களுக்கு பிறகு அவனை பார்த்த அவளுக்கு மனதிற்குள் மத்தாப்பு பூத்த உணர்வு. ஆனாலும் நான்கு வருடங்களுக்கு முன்பு அவன் தனக்கு செய்த துரோகம் நினைவு வர அந்த உணர்வுகளை உள்ளுக்குள் மறித்து விட்டாள் மறுபடியும்.
முதலில் அவனை கண்டவுடன் அவனுக்கு வேலை கொடுக்க கூடாது என்று தான் நினைத்து கொண்டிருந்தாள். ஆனால் அவனுக்கு ஏற்பட்ட விபத்து இத்தனை வருடங்கள் அவன் கோமாவில் இருந்தான் என்ற விசயங்கள் அவனுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற உணர்வை தூண்டியது. ஆனாலும் சில விசயங்கள் அவளுக்கு தெளிவு கொடுக்காமல் இருக்க அதை தெளிவு படுத்தி கொள்ள வேண்டும் அதுவரைக்கும் அவன் தனக்கு அருகிலேயே இருக்க வேண்டும். அதுவும் பழிவாங்குவதற்காக என்று நினைத்து கொண்டிருந்தாள்.
இவ்வளவு நாட்கள் ஒரே ஊரில் இருந்தும் அவனை அவள் கண்டதில்லை. இன்று ஒரே நாளில் மறுபடியும் அவனை இரண்டாம் முறையாக ஐஸ்கிரீம் கடையில் கண்டவுடன் அவளிடமிருந்து ஒரு பார்வை ஆர்வத்துடன் வெளிப்பட்டது ஆனால் அதை அவளால் தவிர்க்க முடியவில்லை. மறுநிமிடமே அவளது பார்வையை அவனிடமிருந்து விலக்கி கொண்டு சாதாரணமாக காணப்பட்டாள்.
ஆனால் அவனின் பார்வை முழுவதும் அவளை முழுங்குவது போல் இருந்ததை அவள் உள்ளுணர்வு எடுத்து சொல்லியது. இருந்தாலும் சில நிமிடங்கள் அவன் பார்க்காத சமயம் அவளுடைய பார்வையும் அவனை தாக்கியது. ஆனால் அதை எவரும் பார்க்க முடியவில்லை.
இவ்வாறு அவனை கண்டும் காணாமல் இருந்தவள் நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றுவதையும் கவனித்து கொண்டு இருந்தாள். அதன் பிறகு அவர்கள் வெளியேறுவதை பார்த்தாள்.
அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவு என்னவோ ஏன் அவனை கண்டவுடன் அவளது பார்வை ஆர்வமாக அவன் மேல் விழுகின்றது. இதற்கு விடை அவர்கள் இருவருக்கும் மட்டுமே தெரியும். சொல்ல வேண்டிய இருவரின் ஒருவள் வெளிப்படுத்த விரும்பவில்லை என்றால் அவனுக்கோ அவளை பற்றிய நினைவுகள் முற்றிலுமாக மறந்து இருந்தான்.
கடையை விட்டு வெளியே வந்த இருவரும் முதலில் ஆதீரனின் வீட்டிற்கு தான் சென்றனர்.
உள்ளே நுழையும் முன்பே “ஆதி… வேலை கிடைச்சுருச்சா… இப்ப தான் அனிதா சொன்னா… ரொம்ப சந்தோஷம் பா… எப்படியோ இன்னொரு வருமானமும் நம்ம வீட்டுக்கு கிடைக்க போகுது. இவளுக்கு சீக்கிரமே நகை எல்லாம் எடுத்து கல்யாணம் பண்ணி வச்சிரலாம் இல்லையா?” என்று முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாட கேட்டாள் ஆதீரனின் தாயும் அந்த வீட்டின் குடும்ப தலைவியுமான சாரதா…
“அண்ணா வந்துட்டயா? எங்கே நான் கேட்ட ஐஸ்கிரீம்?” என்றாள் அனிதா ஆதீரனின் அருகே அமர்ந்தபடி.
“இதோ..” என்றவன் தான் வாங்கி வந்ததை அவளுக்கு கொடுத்தான்.
“தேங்க்ஸ் அண்ணா…” என்றவள் அவன் வாங்கி கொடுத்ததை அமர்ந்து உண்ண ஆரம்பித்திருந்தாள்.
அதே சமயம் ஆதீரனின் கடைசி தம்பியும் அந்த வீட்டின் கடைக்குட்டி வாரிசான அபினவ்வும் உள்ளே நுழைந்தான்.
“என்ன எல்லார் முகத்திலயும் மகிழ்ச்சி தாண்டவமாடுது…” என்று நக்கலாக கேட்டு கொண்டே அமர்ந்தான்.
“நம்ம ஆதீக்கு வேலை கிடைச்சுருச்சுடா… மாசம் முப்பதாயிரம் சம்பளம்…” என்றார் சாரதா.
“அட பரவாயில்லையே… உனக்கெல்லாம் யாரு வேலை கொடுத்தது. உண்மைய சொல்லி தான் வேலை வாங்கினயா? இல்ல முதல்ல மாதிரி அங்க ஏதாவது ஒரு பொண்ண கரெக்ட் பண்ணி பேசியே மயக்கி வேலை வாங்கிட்டயா? அதுவும் உனக்கு முப்பதாயிரம் சம்பளம்…” என்று எகத்தாளமாக கேட்டான்.
உண்மையில் அதை கேட்ட ஆதீரனிற்கு கோபம் வர வேண்டும் தன் தம்பியின் மேல் ஆனால் கோபப்பட்டால் அவன் ஆதீரன் இல்லையே. அதே சமயம் தன் நண்பனை நக்கலடித்தற்கு அவன் மேல் ஏகப்பட்ட கடுப்பில் இருந்தது மாதேஷ் தான். அவனுக்கு தக்க பதிலடி கொடுக்க அவன் வாயெடுத்த பொழுது அதை தடுத்து தன் கைகளால் அவனது கைகளை அழுத்தி அவனை அமைதிப்படுத்திய ஆதீரன் தனது தம்பிக்கு பதிலளித்தான்.
“எஞ்சினியரிங்க்ல நாலு அரியர் வச்ச உனக்கெல்லாம் ஒருத்தன் வேலை கொடுக்கும் பொழுது சி ஏ படிச்ச எனக்கு கொடுக்க மாட்டாங்களா என்ன? அப்புறம் என்ன சொன்ன பொண்ணுகளை பேசி கரெக்ட் பண்ணி வாங்கிட்டனா? அப்படியும் வச்சுக்க… எனக்கு அந்த திறமை இருக்கு… ஏன் உனக்கு எந்த பொண்ணையும் பேசி கரெக்ட் பண்ன தெரியலையா அதுக்கு வேணா நான் உனக்கு தனியா ட்யூசன் சொல்லி தரட்டுமா? ஆனா அதுக்கும் கொஞ்சம் செலவாகும் தம்பி…” என்று தனது தாடையை நீவிக் கொண்டே தனது தம்பியை விட நக்கலாக அவன் கூறினான்.
அதை கேட்ட அபினவ்வின் தாடைகள் இறுகியது. அங்கே இருந்த மூவரில் மாதேஷிற்கு மட்டுமே அப்பேச்சு சுவாரஸ்யத்தை கொடுத்தது. ஆனால் மற்ற இருவருக்கும் பதற்றமே தொற்றியது.
“ஆதி.. என்ன பேச்சு இது… அவன் தான் சின்ன பையன் ஏதோ துடுக்குத்தனமா பேசுறானா நீயும் அவனை மாதிரியே பேசுற… அவன் உன் தம்பிடா… அவன் ஏதோ பேசினா நீ அவனை கொஞ்சம் பொறுத்து போ… நீ படிச்சு முடிக்கற வரைக்கும் ஏதோ உங்க அப்பா பென்ஷன்ல இந்த குடும்பத்தை ஒட்டிட்டு இருந்தேன். நீ படிச்சு முடிச்சு இந்த குடும்பத்தை காப்பத்துவேனு நினைச்சா உனக்கு விபத்து நடந்து கோமாக்கு போய்ட்ட… அப்ப உன் தங்கச்சியோட நகையை எல்லாம் வித்து தான் உனக்கு வைத்தியமே பாத்துது. அதே சமயம் ஓரு ஆம்பளையா இந்த குடும்பத்தை தாங்கி நிறுத்தினது இவன் தான் அதை மறந்துடாதா…” என்று எப்பொழுதும் போல் தனது மூத்த பையனுக்கு அறிவுரை கூறினார் சாரதா.
“அண்ணா… அவன் சம்பாரிச்சு கொண்டு வர்றதுல தான் இப்ப நாம எல்லாம் சாப்பிட்டு இருக்கோம் அதை நியாபகம் வச்சுக்கோ…” என்று அனிதாவும் அவள் பங்கிற்கு அவனது மனதில் மெல்ல ஊசியை இறக்கினாள்.
அதை கேட்ட ஆதிக்கு வேதனையாக இருந்தது. அவன் கோமாவிலுருந்து எழுந்த இந்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட ஓராயிரம் முறை இது போன்ற வார்த்தைகளை கேட்டு விட்டான். இவர்கள் பேசிய பேச்சிற்கு பேசாமல் அந்த விபத்தில் இறந்து போயிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணுமளவிற்கு இருந்தது.
தனது வேதனைகளை மனதிற்குள் புதைத்து கொண்டவன் ஏதும் பேசாமல் வெளியேறி இருந்தான். அவன் பின்னே மாதேஷும் வெளியே வந்தான்.
வெளியே வந்து வண்டியின் அருகிலேயே நின்று கொண்டு ஏதோ ஓர் இடத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் ஆதி.
அவனின் தோளை அழுத்தி “டேய் விடுடா… அவன் தான் ஏதோ சின்ன பையன் பேசிட்டான். அதுக்காக அதையே மனசுக்குள்ள போட்டு அழுத்திகிட்டு இருக்காத… ஃப்ரியா விடு… பார்த்துக்கலாம்..” என்று ஆறுதல் கூறினான்.
அவனது சொற்களை ஆதியின் மனம் ஏற்று கொள்ள மறுத்தது. அமைதியாக இருந்தான்.
“சரி வா… வீட்டுக்கு போகலாம்…” என்றான் மாதேஷ்.
“இல்ல… நீ போ…”
“டேய் பிகு பண்ணாம வாடா… நமக்கு வேலை கிடைச்ச விசயத்த ஜோகிட்ட சொல்லலாம் எனக்காக சந்தோஷப்படுதோ இல்லையோ உனக்காக கண்டிப்பா சந்தோஷப்படும். ஏதாவது ஸ்வீட் செய்யும் வா…” என்று அவனது கைகளை இழுத்தான்.
ஆதிக்கும் இப்பொழுது இருக்கும் மனநிலையை மாற்றினால் தான் தன்னை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என்று நினைத்து அவனது வீட்டிற்கு சென்றான்.
இங்கே சாரதாவோ “அவனுக்கு வேலை கிடைச்சுருச்சுனு எவ்வளவு சந்தோஷப்பட்டுட்டு வந்தான். நீ ஏண்டா அவங்கிட்ட அப்படி பேசுன? இத்தனை நாள் படுத்த படுக்கையா இருந்தவன் இப்ப தான் கொஞ்சம் நல்லா இருக்கான். அவனை மறுபடியும் ஏதாவது பேசி படுக்க வச்சுடாத… நீ தான் இந்த மூணு வருசமா வேலைக்கு போய் இந்த குடும்பத்தை தாங்குன நான் இல்லைனு சொல்லல… அதுக்காக எதுக்கெடுத்தாலும் அவனை குத்தி காட்டுற மாதிரி பேசாத… அவன் சம்பாதிச்சா மட்டும் தான் இதோ வளர்ந்து நிக்கறாளே அவளை நான் இன்னொரு வீட்டுக்கு அனுப்ப முடியும் அத புரிஞ்சுக்கோ…” என்று தனது இளைய மகனுக்கு அறிவுரை கூரி கொண்டிருந்தார் சாரதா.
“ம்மா… நான் ஏதோ கிண்டலா பேசினா அதுக்கு அவன் கோபப்பட்டு பேசினா நான் என்ன பண்றது? டீ கொஞ்சம் எடுத்துட்டு வாங்க… தலை வலிக்குது…” என்று கூறிவிட்டு அவனது அறைக்குள் சென்று விட்டான்.
வெளியே சென்று பார்த்த சாரதாவோ தனது மூத்த மகன் அங்கே இல்லாதது கண்டு “இந்த மாதேஷ் பையன் வந்தாலே இப்படி தான் எங்காவது இழுத்துட்டு போய்டுவான்…” என்று கூறிக்கொண்டே தனது சின்ன மகனுக்கு சேவகம் செய்ய சென்று விட்டார்.
அனிதாவோ ஆதி வாங்கி கொடுத்த ஐஸ்கிரீமை சாப்பிட்டு கொண்டு தொலைக்காட்சி பார்த்து கொண்டே அமர்ந்திருந்தார்.
சாரதா ஆனந்திற்கு மூன்று மகவுகள்… முதலாமவன் ஆதீரன், இரண்டாமவள் அனிதா அதற்கு பிறகே அபினவ்.
ஆனந்த் ஒரு தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். சொற்ப வருமானம் தான் இருந்தாலும் வாடகை வீடுகளில் இருந்து வந்த வருமானத்துடன் சேர்ந்து தான் மூன்று பிள்ளைகளை வளர்ப்பது முதல் அவர்களை ஆளாக்கி படிக்க வைப்பது என்று அவர்களின் குடும்ப பொருளாதார நிலைமை சீராக சென்று கொண்டிருந்தது .
ஆதீரன் கலகலப்பான பேர்வழி. அவன் இருக்குமிடம் எங்கும் சிரிப்பலையும், கேலியும் கிண்டலுமாக இருக்கும். அதனால் அவனை எல்லாருக்கும் மிகவும் பிடிக்கும். அதற்கு நேர்மாறான குணமுடையவன் அபினவ். யாரிடமும் அவ்வளவாக பழகாதவன். சொந்தங்கள் நிறைந்த இடத்தில் எப்பொழுதும் அவன் மட்டும் தனித்தே காணப்படுபவன். ஏனோ அவனே அனைவரிடமும் ஒதுங்கி இருப்பதால் மற்றவர்களும் அப்படியே இருந்து விட்டனர்.
ஆதீரனை அனைவருக்கும் பிடிக்கும் என்பதால் சிறு வயதிலிருந்தே அபினவ்விற்கு அவனின் மேல் ஒரு பொறாமை குணம் உண்டு. வீட்டில் வயதில் சிறியவனே பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது இயல்பு. ஆனால் இங்கே அதற்கு எதிர்பதம். அபினவ்வின் அமைதியை கண்ட அனைவரும் நல்லவன் பொறுப்பானவன் என்று கூற அவனுக்கும் அதற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ள நினைப்பான்.
ஆதீரனின் குறும்புத்தனமும், அவனின் கேலி கிண்டல்கள் எல்லாம் அவனை சின்னவனாகவும், அபினவ்வின் பொறுப்பான நடவடிக்கைகள் எல்லாம் அவனை பெரியவனாகவும் காட்டியது. என்ன தான் விளையாட்டு தனமாக ஆதீரன் இருந்தாலும் படிப்பில் மிக கெட்டிக்காரன்.
ஆதீரன் இளநிலை படிக்கும் பொழுதே அவனுடைய தந்தை இறந்துவிட்டார். அதனால் மூத்தவனாக முன்நின்று குடும்பத்தை நடத்தும் பொறுப்பு அவனுக்கு இருந்தது.
அவனின் ஆசையே சிறந்த கணக்காளராக வர வேண்டும் என்பது தான். எங்கே தன்னால் படிக்க முடியாதோ என்று நினைத்தவன் தனது அன்னையிடம் மன்றாடி இரு வருடங்களில் எப்படியும் இந்த படிப்பு முடித்து விட்டால் அதன் பிறகு நமது நிலைமை கண்டிப்பாக மாறிவிடும். இது முடித்தவுடன் நல்ல வேலைக்கு நான் சென்றுவிடுவேன். என்றெல்லாம் கூறி அவனது அன்னையை சம்மதிக்க வைத்தான்.
அவன் கூறியபடியே அதற்காகவே மெனக்கெட்டு படித்து கொண்டிருந்தான். அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று அவன் வேலைக்கு செல்ல இருந்த நிலையில் தான் ஆதீரனுக்கு விபத்து ஏற்பட்டு தலையில் அடிபட்டு கோமா நிலைக்கு தள்ளப்பட்டான்.
அவனின் மருத்துவ செலவிற்கு தனது மகளின் திருமணத்திற்கென்று சேர்த்து வைத்திருந்த நகைகளை எல்லாம் விற்று விட்டார்கள். அத்தோடு மேலும் சில இடங்களில் கடன் வாங்கியே அவனுக்கு மருத்துவம் பார்த்தனர். அதற்கு பிறகும் அவன் குணமாகாமல் கோமா நிலைக்கு சென்றது வீட்டினர் அனைவருக்கும் வருத்தமாக தான் இருந்தது. என்றாவது தனது மகன் எழுந்து வருவான். தனது குடும்பத்தை தாங்குவான் என்று நினைத்து கொண்டிருந்தார் சாரதா. என்ன தான் அபினவ்வை அவருக்கு பிடிக்கும் என்றாலும் அதற்காக ஆதீரனை வெறுத்து ஒதுக்குபவர் இல்லையே.