அத்தியாயம்-3

அத்தியாயம் – 3

நீலாம்பரியை பற்றிய யோசனையுடனேயே அமர்ந்திருந்தார் சதாசிவம். 

“இன்னைக்கு நீலா நடந்து கொண்டது எதுவும் சரியில்லையே… அவ ஒரு நாளும் இப்படி தடுமாறினது இல்லையே. இன்னைக்கு அந்த பையன் வந்ததுல இருந்து அவளது பார்வை அந்த பையனை விட்டு இம்மியளவும் அசையவே இல்லையே.” என்று நினைத்து கொண்டார்.

நீலா நினைத்தது சரி தான் அந்த அனுபவமிக்க முதியவர் கண்ணசைவிலேயே அவர்களின் மனவோட்டத்தை அறிந்து கொண்டார். ஆனால் அறிந்து கொண்ட நபர் நீலா நினைத்தது போல் ஆதீரனை அல்ல நீலாம்பரியை தான். 

ஆதீரன் உள்ளே நுழைந்ததும் ஏதோ கேட்பதற்காக நீலாம்பரியை ஏறெடுத்து பார்த்தவர் முதலில் அவளது கண்களில் ஆச்சர்யத்தையும் அடுத்து சாதாரணமாக ஆனதையும் உணர்ந்தவர் அதன் பின்னே இருவரையும் கவனிக்க தொடங்கினார். 

நீலாம்பரியின் கண்களில் என்றுமில்லாத ஒரு ஏக்கத்தை அவர் கண்டு கொண்டார். எப்பொழுதும் அவளது கண்களில் ஒரு சோகம் இழைந்தோடும். ஆனால் இன்று அதனோடு ஒரு ஏக்கத்தையும் கண்டு கொண்டார். 

அவர் வேண்டுமென்றே தான் ஆதீரனுக்கு வேலை கொடுக்க தயங்கினார். தனது செயலுக்கு நீலா எப்படி எதிர்வினையாற்றுகிறாள் என்று தெரிந்து கொள்வதற்காக. 

அவர் நினைத்தது போலவே தான் அவளும் தனது எதிர்ப்பினை தெரிவித்து அவனை வேலைக்கு எடுத்து கொள்ளுமாறு கூறினாள். 

அதன் பின்பு ஆதிரனை வெளியேற்றி விட்டு தன்னிடம் ஏதாவது கூறுவாளா என்று எதிர்பார்த்தார். ஆனால் அவள் உண்மையை கூறாமல் மழுப்பியது அவரது சந்தேகத்தை உறுதி படுத்தியது. 

அவள் வெளியேறியதும் ஆதீரனின் சுய விவர படிவத்தை எடுத்து ஆராய்ந்தார். ஆனாலும் எந்த விதத்திலும் அவனுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை அவரால் அறிய முடியவில்லை. 

இவரின் எண்ணவோட்டத்தை களைப்பதற்காகவே நீலாம்பரியின் காரியதரிசி உள்ளே நுழைந்தாள்.

அவர் என்னவென்று கேட்டதற்கு இன்று வேலைக்கு எடுத்தவர்களில் ஒருவருக்கு மட்டும் நீலாம்பரியே வேலைக்கான அனுமதி கடிதத்தை தயாரித்து கொடுத்து அனுப்பியதாக கூறினாள். 

“எப்பவும் வேலைல வந்து ஜாயின் பண்ணின பின்னாடி தானே கொடுப்போம் இன்னைக்கு என்ன புதுசா?” என்றார். 

“இல்ல சார்… புதுசா ஜாயின் பண்ணுறவங்களுக்கு ரூல்ஸ் எல்லாம் புதுசா போட்டு இருக்காங்களாம். அதனால கடைசியா தேர்ந்தெடுத்த மிஸ்டர் ஆதீரனுக்கு மேடமே அப்பாய்ன்மென்ட் ஆர்டர் அடிச்சுட்டாங்க. இது படியே மத்தவங்களுக்கு நீங்களே அடிச்சுடுவீங்களாம்…” என்றவள் அந்த கடிதத்தை நீட்டினாள்.

அதை வாங்கி படித்து பார்த்தவருக்கோ பழைய நிபந்தனைகளுக்கும் புதுசிற்கும் ஏதும் பெரிய வித்தியாசம் இருப்பதாய் தெரியவில்லை.

“நீலா அப்பாய்ன்மென்ட் ஆர்டர்ல எந்த வித்தியாசமும் இல்ல. ஆனா உங்கிட்ட ரொம்ப வித்தியாசம் இருக்கு… பார்க்கலாம் எது வரைக்கும் நீ போறேனு…” என்றவர் சிரித்து கொண்டே அதை வாங்கி வெளியில் அமர்ந்திருக்கும் ஆதீரனை உள்ளே அழைத்தார். 

வெளியே அமர்ந்திருந்த ஆதீரனை மாதேஷ் படுத்தி எடுத்து கொண்டிருந்தான் வேலை கிடைக்குமா கிடைக்காதா என்று…

ஒருவர் வந்து ஆதீரனை மட்டும் உள்ளே அழைத்து சென்றார்.

உள்ளே நுழைந்தவனை அங்கே இருந்த இருக்கையில் அமருமாறு கூறினார் சதாசிவம். 

“உங்களுக்கு வேலை கன்ஃபார்ம் ஆதீரன். என்ன வேலைக்கு உங்கள எடுக்க போறோம்னு தெரியுமா?”

“அக்கவுன்டன்ட்.. தானே சார்.”

“நோ… அது மத்தவங்களை… உங்களை தேர்ந்தெடுத்துருக்கறது என்னோட போஸ்ட்க்கு…”

“புரியல சார்…”

“ஆதீ…” என்று சுருக்கமாக அழைத்தவர் ஒரு நிமிடம் அவனை நோக்கி “உங்கள ஆதீனு கூப்பிடலாமல்ல…” என்றார்.

“ஸ்யூர் சார்… அதோட சின்ன திருத்தம் வாங்க போங்கன்றதுல அந்த ங்க மட்டும் கட் பண்ணிட்டு வா போனு கூப்பிட்டீங்கனா இன்னும் ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்றான். 

அதற்கு சிரித்து கொண்டே… “சரி ஆதீ… எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை… வயசாகிடுச்சு. அதனால் வீட்டுல ரெஸ்ட் எடுங்கனு என் மனைவியும் பையனும் ரொம்ப டார்ச்சர் பண்றாங்க… அதான் வேலைய விட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதோட நீலாவுக்கு நான் போறது எந்த விதத்திலும் பாதிக்க கூடாது. அவ கஷ்டப்பட கூடாது… அதனால தான் உங்கள வேலைக்கு எடுத்திருக்கேன்.” என்றார். 

“யார் சார் அந்த நீலா?”

“ஓ… சாரி உங்களுக்கு தெரியாதல்ல… நம்ம மேடம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட உங்களுக்கு வேலை போட்டு தர சொல்லி சொன்னாங்கல்ல அவங்க தான் பேர் நீலாம்பரி… அதான் சுருக்கமா நீலானு சொன்னேன்… ரொம்ப நல்ல பொண்ணு. வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டு தனி ஆளா நின்னு இந்த இடத்துக்கு வந்திருக்கா… இந்த கம்பெனியோட வளர்ச்சிக்கு முழு பங்கும் அவ தான் காரணம்… ரொம்ப புத்திசாலி…” என்று நீலாவை புகழ்ந்து தள்ளினார்.

தன்னவளின் பெயர் நீலாம்பரி என்று கூறிய உடனேயே முருங்கை மரத்தில் மறுபடியும் வேதாளம் ஏறியது போல் அவளின் நினைவுகளில் மூழ்கி போனான் ஆதீரன்.

“ஓ… ஒகே சார்…” 

“ம்… முக்கியமான போஸ்டிங்க்… சோ கண்டிப்பா நல்லா நீங்க வொர்க் பண்ணனும் சரியா?” 

“கண்டிப்பா சார்… இனி இந்த கம்பெனியோட வளர்ச்சிக்கு நானும் உதவியா இருப்பேன்…”

“ம்… குட்… இது ஒரு ஆடிட்டிங்க் கம்பெனி. நிறைய கம்பெனிஸ்க்கு  நாம ஆடிட்டிங்க் கன்சல்டிங்க் பண்ணிட்டு இருக்கோம். இப்ப ஒரு பெரிய கம்பெனி நமக்கு கிளைன்ட்டா வர போறாங்க… அதுக்கு தான் புதுசா ஆறு பேரை எடுத்திருக்கோம். இங்கேயும் வேலை இருக்கும் கிளைண்ட ஆஃபிஸ்லயும் வேலை இருக்கும். சோ… உங்க வேலை எல்லாருக்கும் வேலை அலக்கேட் பண்றது. கிளைண்ட் கிட்ட இருந்து  ஏதாவது கொரிஸ் வந்தா அத ஹேண்டில் பண்ணனும். இன்னும் நிறைய இருக்கு நீங்க ஜாயின் பண்ணின பின்னாடி கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் தெரிஞ்சுக்கலாம்… சரியா…”

“ஒகே சார்…”

“ம்… இந்தாங்க உங்க அப்பாய்ண்மென்ட் ஆர்டர். என்னவோ நீலாவுக்கு உங்கள ரொம்ப பிடிச்சு போச்சு போல… அதான் எல்லாம் அவளே உங்களுக்கு செஞ்சு கொடுத்துட்டு போய்ட்டா…”

“போய்ட்டாங்களா? அதுக்குள்ளயா?” என்று மனதில் உள்ள ஏக்கத்தை வெளிப்படையாக காட்டி கொண்டே…

“ஆமா சீக்கிரம் போனா தானே அவங்க பொண்ண ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு போக முடியும்…”

“பொண்ணா… ஸ்கூலுக்கு போகுதா?” என்று மறுபடியும் ஆச்சர்யத்துடன் வாயை பிளந்து கொண்டு கேட்டான். 

“எதுக்கு இப்படி எல்லாத்துக்கும் ஷாக் ஆகுறீங்க?”

“ஹான்… ஒன்னுமில்ல… அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” 

“ஆதீ… ஒரே நாள்ல எல்லாம் தெரிஞ்சுக்கனும்னு நினைக்க கூடாது. ஒகேவா… கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் தெரிஞ்சுக்கலாம்… நாளைக்கே நீங்க வந்து ஜாயின் பண்ணிக்கலாம்… இப்ப நீங்க கிளம்பலாம்…” என்று கூறியவரை வெறுமையான ஒரு பார்வை பார்த்து தலையசைத்து அந்த அறையை விட்டு கிளம்பினான்.

அவனுடைய மனமோ உள்ளுக்குள் சுக்கு நூறாக வெடித்து சிதறி கொண்டிருந்தது. தன்னவள் என்று நினைத்தவன் வேறு ஒருவரின் சொந்தமோ… அப்பொழுது… அப்பொழுது… அவள் என்னவள் இல்லையா? என்று தன் மனதிடமே ஆயிரம் கேள்விகளை கேட்டு கொண்டிருந்தான். 

மற்றவரின் துணையையா நான் வெறிக்க வெறிக்க பார்த்தேன்… ஏன்.. ஏன் இப்படி… இது நாள் வரை எந்த பெண்ணின் மீதும் காதல் என்பதை உணராதவன் முதல் காதல் இப்படி ஒரு தோல்வியிலா முடிய வேண்டும்.. ஐயோ.. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு முதல் காதல்…” என்று பல விடையறியா கேள்விகளை தனக்குள் கேட்டு கொண்டே வெளியே வந்தான்.

 வந்தவனின் முகம் சரியில்லை என்பதை உணர்ந்து கொண்டு அவன் நண்பனோ வேலை கிடைக்கவில்லை அதனால் தான் இவ்வாறு சோகமாக இருக்க்கின்றான் என்று நினைத்து கொண்டு “சரி விடுடா… இந்த கம்பெனி இல்லைனா வேற ஏதாவது பார்த்துக்கலாம் விடு…” என்று தனது நண்பனின் தோள்களை தட்டி கொடுத்து ஆறுதல் கூறினான். 

அவனின் ஆறுதல் அவனது செவிதனில் விழுந்த பின்பே.. அவனது கைகளில் இருந்த அப்பாய்ன்மென்ட் ஆர்டரை தனது நண்பனிடம் நீட்டினான்.

அதைபிரித்து பார்த்த பின்பு “ஹூரே…” என்று தனது கைகளை மேலே உயர்த்தி கத்தினான்.

“டேய்… இப்ப எதுக்கு இப்படி கத்துற?”

“ம்… உனக்கு வேலை கிடைச்சுருச்சுல்ல… “

“அதுக்கு ஏன்டா இப்படி சந்தோஷப்படுற?”

“டேய்… என்ன இப்படி சொல்ற?”

“எனக்கு வேலை கிடைச்சத விட உனக்கு கிடைச்சது தான் ரொம்ப சந்தோசமா இருக்குடா… இவ்வளவு நாள் நீ காத்திருந்ததுக்கான பலன்டா இது.”

ஏனோ அதைக் கேட்டவனின் நினைவுகளில் அடுத்த நிமிடம் வந்தாள் அவனது தேவதை. 

“ஆமா இவ்வளவு நாள் காத்திருப்பின் பலன். ஆனா அது எனக்கு கிடைக்கலையே…” என்று விரக்தியாக சிரித்து கொண்டே கூறினான்.

அதை கேட்ட மாதேஷோ “டேய்… என்ன சொல்ற? புரியல…” என்றான்.

“அதெல்லாம் ஒன்னுமில்ல…”என்றவன் அவளை பற்றிய நினைவுகளையும், கவலையையும் தனக்குள்ளே மறைத்து கொண்டு அடுத்த நிமிடம் தனது நண்பனிடம் சகஜமாக இருந்தான். 

அனைவரையும் அடுத்த நாளே வந்து வேலையில் சேருமாறு கூறினர்.

மாதேஷும், ஆதீரனும் வெளியே வரவே “டேய் கண்டிப்பா எனக்கு ட்ரீட் வேணும்… அதுவும் நைட் சரக்கு…” என்றான்.

ஆதீரனோ சிரித்து கொண்டே “சரி…” என்றான்.

இருவரும் வெளியே வந்து மாதேஷின் பைக்கில் ஏறி கிளம்பி செல்ல அதற்குள் ஆதீரனின் கைப்பேசி ஒலித்தது. 

அதை எடுத்து பார்த்தவன் “கரெக்டா கால் பண்ணிட்டா அனிதா…” என்றான்.

“ம்… எடுத்து பேசு… எப்படியும் இண்டர்வியூ எப்படி நடந்துச்சுனு கேட்க தான் போன் பண்ணி இருப்பா…” என்றான் மாதேஷ்.

“ம்…” என்று அவனுக்கு பதில் கூறி கொண்டே தொலைபேசியின் இணைப்பை எடுத்தவன் “சொல்லு அனி…” என்றான்.

“என்ன இந்த வேலையாவது கிடைச்சுதா… இல்ல புட்டுகிச்சா?” என்றான் ஏளனமாக.

அதைக்கேட்டு ஒரு நொடி அமைதிகாத்தவன் “ம்… வேலை கிடைச்சுருச்சு…” என்றான்.

“ஐ… வேலை கிடைச்சுருச்சா… எப்பவும் போல இதுவும் கிடைக்காதுனு நினைச்சேன்.. நல்ல வேளை கிடைச்சுருச்சு… இனி என் கல்யாணத்தை பத்தி கவலைப்பட வேண்டாம் தானே… உன் ஹாஸ்பிட்டல் செலவுக்காக வித்த என்னோட நகையை  எல்லாம் திருப்பிடலாம் தானே…” என்றாள் சுயநலத்தோடு.

அவளின் பேச்சில் விரக்தியான ஒரு சிரிப்பை உதிர்த்தவன் “கண்டிப்பா… அதுக்கு மேலயே செஞ்சுடலாம் கவலைப்படாதே…” என்றான்.

“ம்… ரொம்ப சந்தோஷம்… அப்புறம் வரும் போது எனக்கு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வா…” என்று விலையுயர்ந்த ஐஸ்கீரிம் ஒன்றின் பெயரை கூறி வைத்து விட்டாள்.

அதன் பிறகு ஏதோ ஒரு நினைவில் அமைதியாக வந்தவனை வண்டி ஓட்டி கொண்டே கவனித்த மாதேஷோ “டேய்… என்ன ஆச்சு… என்ன சொன்னா உன் தொங்கச்சி அனித்த்தா……” என்று இழுத்தான்.

அவனது பேச்சில் நினைவு களைந்தவன் “டேய்… ஏண்டா இப்படி சொல்ற?” என்றான்.

“உன் வீட்டுல இருக்கற எல்லாருமே சுயநலவாதிகள் தானே… அப்புறம் என்ன? விடு அவ என்ன சொன்னா? அத மட்டும் சொல்லு…”

“ம்… வேலை கிடைச்சுருச்சானு கேட்டா… கிடைச்சுருச்சுனு சொன்னேன்… ரொம்ப  சந்தோஷப்பட்ட தெரியுமா? அப்புறம் ஐஸ்கீரிம் வாங்கிட்டு வர சொன்னா…”

“சந்தோஷப்படாமயா இருப்பா.. உனக்கு வேலை கிடைச்சா தானே உன் மூலமா அவளுக்கு கல்யாண சீர்வரிசை எல்லாம் சேர்க்க முடியும் அதுக்கு தான் சந்தோஷப்பட்டு இருப்பா…” என்றான் மாதேஷ் சலிப்பாக.

அவன் கூறியது மறுக்க முடியாத உண்மை என்பதால் ஏனோ அமைதியாக இருந்தான் ஆதீரன். 

சில நிமிடங்கள் மௌனம் காத்தவன் “விடுடா சின்ன பொண்ணு தானே… அவளுக்கும் கல்யாண கனவுகள்னு இருக்கும் இல்ல…” என்றான் தங்கைக்கு ஆதரவாக ஆதீரன்.

“ம்… இருக்கலாம் தான்… அதுக்காக பிறந்த வீட்டுல இருந்து எல்லாத்தையும் சுருட்டிட்டு போக பார்க்க கூடாது . அப்பா, அம்மா, கூட பொறந்தவங்கனு எல்லாரும் கஷ்டப்படுறதையும் பார்க்கனும். அவ புகுந்த வீட்டுல போய் நிம்மதியா இருக்கனும் அப்படீங்கறதுக்காக பொறந்த வீட்டுல இருக்கறவங்கள் மொட்டை அடிக்க கூடாது…” என்றான் சற்றே பொறுமை இழந்தவனாக.

“டேய்.. ரொம்ப டென்ஷன் ஆகாத… விடு… பாரு அங்க ஒரு ஐஸ்கீரிம் பார்லர் இருக்கு அங்க நிறுத்து வாங்கிட்டு போய்டலாம்… இல்லனா அதுக்கு ஒரு பஞ்சாயத்து வைப்பா வீட்டுல…”

“அதுவும் சரிதான்…” என்றவன் வண்டியை அந்த கடையின் முன்பு நிறுத்தினான். 

உள்ளே நுழைந்தவனை  ஆங்காங்கே அமர்ந்து இருந்த இளவயது பெண்கள் பார்த்து கொண்டிருந்தனர். அவனின் அலை அலையான கேசம் முதல் அவனுடைய கால் பாத்தில் அவன் அணிந்திருந்த ஷீ வரை அனைத்தையும் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். 

“ச்சே… எவ்வளவு ஹேண்ட்ஷம்மா இருக்கான். இவன் எல்லாம் பாய் ஃப்ரண்டா கிடைச்சா எப்படி இருக்கும்…” என்று அங்கிருந்த பெண்களில் ஒருத்தி தன்னுடன் வந்திருந்த மற்றொரு பெண்ணிடம் கூறி கொண்டிருந்தாள்.

அதைக்கேட்ட அவளின் தோழியோ “ஏன்… நாங்க எல்லாம் எந்த விதத்துல உங்களுக்கு குறைஞ்சு போய்ட்டோம்… எனக்கு இவன் தான் பாய் ஃப்ரண்டா வேணும்… நான் இப்பவே போய் அவன் கிட்ட என் லவ்வ சொல்ல போறேன்…” என்றாள்.

“ஏய்… ரொம்ப அலையாதடி… நீயெல்லாம் உன் முகத்தை கண்ணாடில பார்க்கறது இல்லையா? உன்னை எல்லாம் அவன் ஒகே சொல்ல மாட்டான்…” என்றாள் முதலாவது பேசியவள்.

இவர்கள் இவ்வாறு சண்டை பிடித்து கொண்டிருக்க அதற்கு காரணமானவனொ கூலாக அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து ஐஸ்கீரீம் சாப்பிட்டு கொண்டிருந்தான். 

“டேய்…  பரவாயில்ல கேட்காமயே ஐஸ்கீரிம் வாங்கி தர்ற… தேங்க்ஸ் டா” என்றான் மாதேஷ்.

“உனக்கு பாசத்துல எல்லாம் ஒன்னும் வாங்கி தரல…” என்றான் தான் வாங்கிய கோன் ஐஸ்கீரிமின் கவரை பிரித்து கொண்டே…

அவனுடைய கோனை பிரித்து கொண்டிருந்தவன் கைகள் ஒருநிமிடம் நின்று “பின்ன..” என்றான் கேள்வியாக தனது நண்பனை நோக்கி…

“அது.. நாம உள்ள நுழைஞ்சதுல இருந்து இங்க இருக்கற எல்லா பொண்ணுகளும் நம்மளை தான் பார்த்து சைட் அடிச்சுட்டு இருக்காங்க… அதுவும் முக்கியமா என்னை… அதான் அழகு வேஸ்ட் ஆக கூடாதல்ல… அவங்களாவது பார்த்து கொஞ்சம் ரசிச்சுகிட்டுமேனு இன்னும் கொஞ்ச நேரம் இங்க டைம் ஸ்பெண்ட் பண்ண ஐஸ்கீரிம் வாங்கி வந்தேன்.” என்றான் இடையிடையே தனது ஐஸ்கீரிமை ருசி பார்த்து கொண்டே.

அப்பொழுது தான் அந்த கடைய சுற்றி பார்த்தான் மாதேஷ். அவன் கூறியது போலவே அங்கே இருந்த அனைத்து பெண்களும் இவர்களை தான் பார்த்து கொண்டும் தங்களுக்குள்ளே பேசி சிரித்து கொண்டும் இருந்தனர்.

“விடு.. விடு… அழகா பொறந்தது என் தப்பா… ஏதோ என் கூட வந்தததுனால தான் இங்க இருக்கற எல்லா பொண்ணுகளும் உன்னையும் பார்க்கறாங்க…” என்றான் மாதேஷ். 

“அப்படிங்கற… சரி… அப்ப நாம இங்க இருந்து போறதுக்குள்ள யாராவது ஒரு பொண்ணு வந்து ப்ரபோஸ் பண்ணினும். அது உனக்கா இல்ல எனக்கானு பார்க்கலாமா?”

“ம்.. பார்க்கலாம் டா… அப்படி யாருமே வந்து ப்ரபோஸ் பண்ணலைனா நம்ம ரெண்டு பேருமே வேஸ்ட்னு ஓத்துக்கனும் ஒகேயா…”

“ஓகே…” என்றான் ஆதீரனும் தனது தோள்களை குலுக்கி கொண்டே. 

ஆதீரனும், மாதேஷும் பேசி கொண்டிருக்கும் பொழுதே முதலில் தங்களுக்குள் சண்டை போட்டு கொண்டிருந்த இரு பெண்களும் இவர்கள் அமர்ந்திருந்த இருக்கைகளை நோக்கி வந்து கொண்டிருந்தனர். 

“வந்துட்டாங்க பாரு…” என்ற ஆதீரன் தலை நிமிர்ந்து பார்க்காமலேயே கூறினான்.  மாதேஷ் நிமிர்ந்து பார்க்க அவர்கள் இருந்த மேசையை நெருங்கி இருந்தனர் இருவரும்.

 “ஹலோ… எக்ஸ்கியூஸ்மீ…” என்றாள் வந்திருந்த இரு பெண்களில் ஒருத்தி…

“எஸ்… சொல்லுங்க…” என்றான் ஆதீரன்.

“நாங்க ரெண்டு பேரும் உங்கள விரும்பறோம்… எங்கள்ள யாரை உங்களுக்கு பிடிச்சுருக்கோ அவங்களுக்கு ஒகே சொல்லிட்டீங்கனா ஒருத்தர் டீஸன்டா விலகிக்குவோம்…” என்றாள்.

அவள் கூறியதை கேட்டு உதட்டில் புன்னகையும் “சொல்லிடலாமே… முதல்ல உட்காருங்க…” என்று நக்கல் கலந்த தோனியில் கூறினான்.

இருவரையும் மாறி மாறி பார்த்த ஆதீரனோ “ம்… ரெண்டு பேருமே அழகா தான் இருக்கீங்க… ஆனா ரெண்டு பேரையுமே என்னால கல்யாணம் செஞ்சுக்க முடியாது. அதனால நான் சொல்ற கன்டிஷனுக்கு யார் ஒத்துக்கறீங்களோ அவங்களுக்கு நான் ஒகே சொல்றேன்… சம்மதமா?” என்றான்.

“ரொம்ப சந்தோஷம்… முதல்ல என்ன கண்டிஷன்னு சொல்லுங்க… உங்கள மாதிரி ஹேன்ட்சம்மான ஒரு பையனுக்காக எதுவாயிருந்தாலும் ஒத்துக்கலாம்…” என்றாள் மற்றொருத்தி ஆர்வக்கோளாறில்.

“ஆஹான்… எனக்கு ஒரு தங்கச்சி, ஒரு தம்பி. நான் எந்த வேலைக்கும் போறது இல்ல… அதனால கல்யாணத்துக்கு பின்னாடி நீங்க வேலைக்கு போய் சம்பாரிச்சு அந்த பணத்தை எங்கிட்ட கொடுக்கனும் அத வச்சு தான் என் தங்கச்சிக்கு நகை, சீர்வரிசை எல்லாம் சேர்த்து கல்யாணம் செஞ்சு வைக்கனும். இது தான் என் கண்டிஷன்… இதுக்கு சம்மதமா…” 

“ஓரு தங்கச்சி… ஒரு தம்பியா? இவங்களுக்கு எல்லாம் நாங்க எதுக்கு செய்யனும்…” என்றாள் அந்த ஆர்வக்கோளாறான பெண்.

“ஆமா கல்யாணத்துக்கு பின்னாடி என் குடும்பம் தானே உங்க குடும்பம்… அப்ப அவங்களுக்கும் சேர்த்து சம்பாதிக்கறதுல என்ன தப்பு இருக்கு…”

“இதெல்லாம் சரிப்பட்டு வராது சாரி…” என்றவள் எழுந்து மற்றொருத்தியையும் எழுப்பி கூட்டி கொண்டு சென்றிருந்தாள். 

இவ்வளவு நேரம் திறந்த வாய் மூடாமல் அவர்கள் பேசி கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருந்த மாதேஷிடம்  “டேய்… ஐஸ்கிரீம் மெல்ட் ஆகுது… சாப்பிடு…” என்றான் ஆதீரன்.

“டேய் எப்படிடா… இந்த கடைக்குள்ள நுழைஞ்சதுல இருந்து பொண்ணுகளும் நம்மள தான் பார்க்குறாங்கனு சொன்ன… ப்ரபோஸ் பண்ணுவாங்கனு சொன்ன… அடுத்த நிமிடம் ரெண்டு பேர் வர்றாங்க… அதையும் குனிஞ்ச தலை நிமிராம சொல்ற… எப்படி மச்சான்… இதெல்லாம்… உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடா… ஒத்துக்கறேன் டா.. இங்க இருக்கற எல்லா பொண்ணுகளும் உன்ன தான் பார்க்கறாங்க…” 

அதற்கு வாய் விட்டு சிரித்தான் ஆதீரனோ “பொண்ணுக எப்படி அவளுகளோட பார்வை அர்த்ததை எல்லாம் படிச்சவண்டா நான். என்ன தான் கோமாக்கு போய் அஞ்சு வருஷம் படுக்கையில விழுந்திருந்தாலும் இந்த பொண்ணுக மட்டும் மாறவேயில்ல…” என்றான்.

“உன் கணிப்புக்கு அப்பாற்பட்ட பொண்ணுகளும் இருக்காங்க ஆதீ… இன்னைக்கு கூட நாம் இண்டர்வியூ போன இடத்துல அந்த முதலாளி அவங்க பேர் கூட… ஹா… நீலாம்பரி… அவங்க எப்படி இருந்தாங்க… அவங்கள உன்னால ஜட்ஜ் பண்ண முடிஞ்சுதா இல்லையில்ல…” என்றான்.

அவனின் நீலாம்பரி என்ற பெயரிலேயே அவனது மனதில் ஆழத்தில் இருந்த அவளது நினைவுகள் நீர்க்குமிழி போல் மேலெழும்பியது. 

“நூறாயிசு டா இவங்களுக்கு… இப்ப தான் பேசிட்டு இருந்தோம் அதுக்குள்ள அவங்களே வந்துட்டாங்க…”என்று மாதேஷ் கூற சடாரென்று வாயிலை பார்த்தான் ஆதீரன். 

ஒரு ஆடவனுடன் சிரித்து பேசியபடியே உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள் நீலா. அந்த ஆடவனின் கைகள் ஆதீனி இருந்தாள். 

“அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா… அழகான கப்பிள்ஸ்… பாரு…” என்றான் மாதேஷ். 

அவனின் வார்த்தைகளில் ஒரு எரிச்சல் ஏற்பட்டது ஆதீரனுக்கு. அவனால் அந்த காட்சியை ரசிக்க முடியவில்லை. 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top