அத்தியாயம் – 2
யோசித்து சொல்கிறேன் என்று சதாசிவம் கூறியதுமே எப்படியும் இந்த வேலை தனக்கு கிடைக்க போவது இல்லை என்று நினைத்து கொண்டு “ஓகே சார்…” என்று கூறியவன் அந்த இருக்கையில் இருந்து எழுந்திருக்கும் முன்பே “யூ ஆர் அப்பாய்ண்ட்டு…” என்று அந்த அறையின் நிசப்தத்தை கிழித்து கொண்டு ஒலித்தது கணீரென்று அழகிய பெண் குரல்.
அப்பொழுது தான் அந்த சிலைக்கு உயிர் வந்தது போல் பேசியது.
உள்ளே நுழைந்த பொழுதே அவளது அழகிய வதனத்தை பார்த்து இமைக்க மறந்து அவளை பார்க்க தேன்றினாலும் சதாசிவம் இவனிடம் கேள்வி கேட்டு அவனின் சிந்தனையையும், கவனத்தையும் திசை திருப்பி இருந்தார்.
இப்பொழுது தான் அந்த அழகிய சிலையை மீண்டும் கண் கொண்டு பார்த்தான் ஆதீரன்.
சில நிமிடங்கள் அவளது பார்வையை பார்த்தவன் அவளது விழி வீச்சில் கட்டுண்டு மெய் மறந்து இருந்தான்.
“நீலா… என்னமா சட்டுனு ஒகேனு சொல்லிட்ட… எதுக்கும் கொஞ்சம் யோசிக்கலாமே…” என்றார் சதாசிவம்.
“இல்ல அங்கிள் ஒருத்தர பார்த்தா ஜட்ஜ் பண்ணிடலாம். இவர் இந்த வேலைக்கு ஆப்டா இருப்பார். நீங்க தான் இவருக்கு எல்லாம் கத்து கொடுக்கனும்…” என்று பேச்சு அவரிடம் இருந்தாலும் பார்வை என்னவோ ஆதிரனிடம் மட்டும் தான் இருந்தது.
அதை கேட்ட ஆதிரனின் புருவங்கள் ஏறி இறங்கி அவனது விழிகள் ஆச்சர்யத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.
பின்னர் சதாசிவம் உடனே சுதாரித்து கொண்டு “ஆதிரன்… கொஞ்சம் வெளிய இருங்க நான் கூப்பிடுறேன்…” என்று கூறினார்.
அவனும் தலையசைத்து கொண்டே வெளியேறினான்.
அவன் வெளியேறிய பின்பு… “என்ன நீலா இது… அவன் எப்படி இந்த வேலைக்கு பொருத்தமா இருப்பானு உனக்கு தோணுச்சு… மூணு வருஷம் கோமால இருந்துருக்கான். அவன் எப்படி பர்ஃபார்ம் பண்ணுவானு தெரியல…” என்று கூறினார்.
“அங்கிள் வேலை கொடுத்து பார்த்தா தானே தெரியும் நல்ல வொர்க் பண்றானா இல்லையானு… என்னை நம்பி கொடுங்க அங்கிள்… ஒரு மாசம் பாருங்க பர்பார்மென்ஸ் நல்லா இல்லைனா தூக்கிடுங்க… என்னை எதுவும் கேட்க வேண்டாம்…”
அவள் இதுவரை யாருக்கும் இப்படி ஒரு கேரண்டி கொடுத்தது இல்லை. இன்று அவளது பேச்சு புதிதாக இருக்க அவளை கூர்மையாக பார்த்தவர் “உனக்கு இந்த பையனை முன்னமே தெரியுமாமா?” என்று வினவினார்.
அவரின் கேள்வியில் ஒரு நிமிடமேனும் அவளது முகம் அவளது மனதின் படபடப்பை அப்பட்டமாக காட்டியது. ஆனால் அடுத்த நிமிடமே அதை மறைத்தவள், “இவ்வளவு படிச்சு எங்கேயும் வேலை கிடைக்கலைனு ஒரு பரிதாபத்தில் சொன்னேன்… மத்தபடி வேறு எதுவும் இல்ல…” என்று அவரை சமாதானப் படுத்தும் விதமாக கூறி முடித்தவள், “ஓகே அங்கிள்… எல்லாம் ஓவர் தானே… நான் ரூமுக்கு கிளம்புறேன்…” என்றவள் அவளது அறைக்கு சென்றாள்.
வெளியே வந்த ஆதீரனை பார்த்த மாதேஷோ கண்களில் ஒளி மின்ன “என்னடா இந்த வேலையாவது கிடைக்குமா? கிடைக்காதா?” என்று வினவினான்.
அவன் கேள்வி எல்லாம் எங்கே அவனது காதில் விழுந்தது. அவனது எண்ணம் முழுவதும் ஆக்ரமித்து இருந்தவள் நீலாம்பரி தானே.
அவனின் இயல்பே பார்க்கும் அனைத்து பெண்களிடமும் சட்டென பேசி எளிதில் அவர்களின் கனவு நாயகனாகி விடுவான். ஆனால் இதுவரை எந்த பெண்களிடமும் எல்லை மீறி பழகியதில்லை பார்க்கும் பெண்களிடம் எல்லாம் சகஜமாக பேசி பழகி விடுபவனால் ஏனோ நீலாம்பரியிடம் மட்டும் அப்படி இருக்க முடியவில்லை. ஏதோ பல நாள் பழகிய உறவு, ஜென்ம ஜென்மமாய் அவளுடன் உயிரும் மெய்யுமாய் கலந்த உணர்வு அவளைப் பார்த்தவுடன் அவனுக்கு ஏற்பட்டது. மற்ற பெண்களைப் போல் அவ்வளவு சுலபமாக அவளை கடந்து போக முடியவில்லை. இவளைப் பார்த்த உடன் மட்டும் அவள் தனக்கே உரியவள் என்கின்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. அதுவும் உள்ளே நுழைந்த உடன் அவனின் கண்கள் முதலில் பார்த்தது அவளை மட்டும் தான்.
அவளின் கண்கள் நடுக்கடலில் ஏற்படும் சுழி ஆழ் கடலுக்கு ஒருவரை இழுத்துச் செல்வது போல் இருந்தது. தான் எங்கிருக்கிறோம் எதற்காக வந்தோம் என்பதைக் கூட உணராமல் கால்கள் அவன் பாட்டிற்கு அவளை நோக்கி அவனை நடத்திக் கொண்டு சென்றது. இவ்வாறு இருந்தவனின் நிலையை சதாசிவத்தின் பேச்சு மட்டுமே நிலைக்குக் கொண்டு வந்தது. அதன் பிறகு அவருடைய கேள்விகள் அவள் பக்கத்திற்கு திரும்பாமல் இருக்க உதவியது. தனது நிலையை பற்றி கூறிக் கொண்டிருந்ததால் அவளைப் பற்றி மறந்திருந்தான் சில நிமிடங்கள். அதன் பிறகு அவளின் பேச்சு குரலில் மறுபடியும் அவளை கவனிக்க ஆரம்பித்திருந்தான்.
ஆனால் இம்முறை அவனது பார்வை அவளை முழுவதும் அளந்தது. அவளின் கண்களை பார்ப்பதை தவிர்த்து விட்டு மற்ற இடங்களை ஆராயத் தொடங்கி இருந்தான். ஆம் அவளின் நெற்றி தொடங்கி கூர் நாசி, கன்னம், அந்த ஸ்ட்ராபெரி நிற இதழ்கள், சங்கு கழுத்து, கடவுள் படைத்த இளமை பொக்கிஷங்கள் என்று அனைத்தையும் அவனுடைய பார்வை லஜ்ஜையின்றி அளந்தது. இவ்வளவு நாட்கள் எத்தனையோ பெண்களிடம் பேசி பழகி இருக்கிறான். எந்தப் பெண்ணிடமும் கண்கள் தாண்டி அவனுடைய பார்வை சென்றது இல்லை. ஆனால் இவளிடம் மட்டும் எந்தவிதமான தயக்கமும் இன்றி உரிமையோடு அவனது கண்கள் அவளை தலை முதல் கால் வரை தழுவிச் சென்றது. அது ஏன் என்று அவனுக்கு புரியவில்லை. ஆனால் அவனது பார்வையின் அர்த்தம் அவளுக்கு புரிந்தது போலவோ என்னவோ???
“எப்படி பார்க்கிறான் பாரு ராஸ்கல்… ஏதோ போனா போகுதுனு வேலை போட்டு கொடுத்தா அவன் பண்ணுற வேலை எரிச்சலை கொடுக்குது… லூசு… அங்கிள் அவனது பார்வையை புரிஞ்சுருப்பாரோ… ஐயோ என்ன நினைச்சுருப்பாருனு தெரியல… தப்பா ஏதும் நினைப்பாரா…” என்று அவளது எண்ண ஓட்டங்கள் ஓடி கொண்டிருந்தன.
“அப்ப அவன் உன்ன அப்படியே முழுங்கர மாதிரி பார்த்தானே… அது தப்பு இல்ல… அதுக்காக நீ வருத்தப்படல… அங்கிள் எங்க அவனை தப்பா நினைச்சுடுவாரோனு நினைச்சு தான் நீ பயப்படுற அப்படி தானே…” என்று அவளது மனசாட்சி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் அவளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. அதனால் அதை ஒரம் கட்டி விட்டாள் பெண்ணவள்.
இவ்வாறு தனக்குள் பெரிய விவாதத்தை நடத்தி கொண்டே வந்தவளின் கைகள் காரினை இயக்க அது வந்து சேர்ந்த இடம் என்னவோ மழலையர்களுக்கான தொடக்க பள்ளி…
பள்ளியின் முன்பு காரினை நிறுத்தியவள் அதிலிருந்து இறங்கி உள்ளே சென்றாள். அங்கே அழகிய பூங்கொத்து போல சின்னஞ்சிறு சிட்டு ஒன்றை ஒரு பெண் அதட்டி கொண்டிருந்தார். அந்த சின்னவளின் முகமோ வாடிய ரோஜா பூப்போல் முகத்தை வைத்து கொண்டு கண்களிலிருந்து கண்ணீர் இருக்கவா விழவா என்ற நிலைமையில் இருந்தது.
அதை பார்த்த நீலாவோ “அம்மு…” என்று அழைத்திருக்க அவளின் வார்த்தையில் வில்லிருந்து புறப்பட்ட அம்பு போல் ஓடி சென்று அவளது கால்களை கட்டி கொண்டது.
“ஏய் பட்டுக்குட்டி என்ன இப்படி ஓடி வர்றீங்க? எங்காவது விழுந்துட போறீங்க… என்னடாமா ஆச்சு?” என்றவள் அந்த சின்னசிட்டை அப்படியே தூக்கி கொண்டாள்.
சிறு பிள்ளையிலுருந்தே வார்த்தைகள் சரியாக உச்சரிக்க முடியாத அந்த நான்கு வயது பிள்ளையால் என்ன கூறிவிட முடியும்… ஆனாலும் முயன்று தன்னை மிரட்டிய அந்த பெண்மணியை காட்டி ஏதோ கூற முயன்றது.
அதைக் கண்ட பெண்ணவளுக்கோ கண்களில் நீர் நிரம்பியது. ஏனோ அந்த குழந்தையை அவளது உயிருக்கும் மேலாக நேசித்தாள். எப்பொழுதும் சிரித்து கொண்டே இருக்க வேண்டும் அவளுக்கு. சிறு துரும்பும் அந்த சிட்டின் மேல் படவிட மாட்டாள். யாரும் அவளை ஒரு சொல் கூற கூடாது. அவளது கண்களில் கண்ணீரே எட்டி பார்க்க கூடாது என்பதில் உறுதி கொண்டிருந்தவளின் முன்பே அவளை அழுவது போல் செய்தாள் சும்மா விடுவாளா அதற்கு காரணமானவர்களை. பொங்கி எழுந்தாள் நீலாம்பரி.
“இந்த மாதிரி இருக்கற பிள்ளைகளை கவனிக்கறதுக்கு தானே நீங்க ஸ்கூல் நடத்துறீங்க… மாசா மாசம் கரெக்டா அமவுன்ட் எல்லாம் வாங்கிட்டு தானே இருக்கீங்க… இப்ப என்ன இப்படி மிரட்டிட்டு இருக்கீங்க… உங்கனால இப்படி மிரட்டி அடிச்சு தான் பார்த்துக்க முடியும்னா சொல்லிடுங்க… நாங்க வேற ஸ்கூல் பார்த்துக்கறோம்.” என்று பொறிந்து விழுந்தாள் நீலாம்பரி…
அவளின் சப்தம் கேட்டு அந்த நேரம் அங்கே வந்த அந்த பள்ளியின் முதலாளி, “மேடம் என்ன ஆச்சு??? ஏதாவது பிரச்சனையா?” என்றாள் அவசரமாக.
“என் பொண்ணுக்கு சரியா பேச்சு வராது அதோட அவ கொஞ்சம் ஓவரா துறுதுறுனு இருப்பா… இந்த பிரச்சனை எல்லாம் தீர்ப்பதுக்கு தானே நான் இங்க வந்து சேர்த்துருக்கேன் ஆனா உங்க ஸ்டாஃப் என் பொண்ண மிரட்டி அடிக்க போறாங்க… இவங்கனால ஒரு குழந்தையை கட்டுப்படுத்த தெரியலைனா அப்புறம் எதுக்கு இங்க வேலைக்கு வர்ராங்க?? கொஞ்சம் சொல்லி வைங்க… இல்ல நடக்கறதே வேற… நான் வேற ஸ்கூல பார்த்துகறேன்.” என்று சரமாரியாக பட்டாசு போல் வெடித்தாள் நீலாம்பரி.
அதைக் கேட்ட அந்த நிறுவனத்தின் முதலாளியே “ஐயோ மேடம் அப்படி ஏதும் பண்ணிடாதீங்க… நான் வேணா உங்க பொண்ண பார்த்துக்கறதுக்கு வேற டீச்சரை ஏற்பாடு பண்றேன். ப்ளீஸ் உங்க பொண்ண பேச வச்சு அனுப்பறது மட்டும் தான் எனக்கு வேலையே…” என்று எங்கே தனது விஐபி கஸ்டமர் தங்களது கை நழுவி விடுவாரோ என்று பரபரத்து அவசரமாக பேசினாள்.
அதுவரை அவர்களது சம்பாஷணைகளை கேட்டு கொண்டிருந்த அந்த ஆசிரியை எங்கே தனது வேலை பறிபோய் விடுமோ என்ற நினைப்பில் அவளும் நீலாம்பரியிடம் கெஞ்ச ஆரம்பித்திருந்தாள்.
“மேடம் மன்னிச்சுடுங்க… இனிமே இந்த மாதிரி பண்ண மாட்டேன். இன்னைக்கு கொஞ்சம் அதிகமா அடம்பிடிச்சு குறும்பு பண்ணி பிரச்சனை பண்ணிட்டா… அதனால தான் இப்படி மிரட்டினேன். மிரட்ட மட்டும் தான் செஞ்சேன். அடிக்கவெல்லாம் இல்ல… வேணும்னா உங்க பொண்ணையே கேட்டு பாருங்க… உங்க பொண்ண நல்லா தான் பார்த்துக்கறேன்… இனிமேல் இந்த மாதிரி நடக்கது என்னை நம்புங்க… நீங்க வேற ஸ்கூல் எல்லாம் சேர்க்க வேண்டாம்…” என்று அவளும் தன் பங்கிற்கு நீலாம்பரியிடம் கெஞ்சி கொண்டிருந்தாள்.
இருவரது பேச்சிலும் சற்றே சமாதானம் அடைந்திருந்தாலும் “என் மகளை நானே மிரட்டி இருக்காதிருக்கும் பொழுது எப்படி இவர்கள் மிரட்டலாம்…” என்ற எண்ணம் அவளுள்ளே இருந்து கொண்டிருந்தது.
“மேம்… ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க… உங்க பொண்ணு இங்க எதுக்கு விட்டுருக்கீங்க அவளுக்கு நல்லா வார்த்தைகளை தெளிவா உச்சரிக்கறதுக்கும் அவளோட துறுதுறுப்பை கொஞ்சமா கன்ட்ரோல் பண்றதுக்கும் தானே. கொஞ்சம் யோசிச்சு பாருங்க நீங்க அவளோட அம்மா… அவ மேல இருக்க பாசத்துல அக்கறையில் சொல்றீங்க. எங்களுக்கும் அந்த குழந்தை மேல அக்கறை இருக்கு… அவ ஏதாவது தப்பு செய்யும் பொழுது நாம அவ செய்யறதுக்கு எல்லாம் சப்போர்ட் பண்ணிட்டே இருந்தா அவளோட பிடிவாதத்தை எப்படி சரி செய்யறது சொல்லுங்க… நாங்களும் குழந்தை பெத்தவங்க தான். அப்படி எல்லாம் உங்க பொண்ண அடிச்சு கொடுமை படுத்த மாட்டோம். அதுவும் உங்க பொண்ணு ஆதீனி ரொம்ப க்யூட்… அதோட ஷார்ப்… எந்த விசயமா இருந்தாலும் டக்குனு புரிஞ்சுக்குவா… சோ… ப்ளீஸ் உங்க பொண்ணு சீக்கிரமா குணமாகனும்னா நீங்களும் கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுக்கனும்…” என்று தங்கள் பக்கமும் எந்த தவறுமில்லை எங்கிற தோணியில் அவர்களது பேச்சும் இருந்தது.
அவ்வளவு நேரம் அந்த நிறுவனத்தை நடத்தும் பெண் கூறுவதை காது கொடுத்து பொறுமையாக கேட்ட பெண்ணவளோ அவர்களின் கூற்றை புரிந்து கொண்டு “ப்ளீஸ் இனி ஏதுன்னாலும் அவளுக்கு கொஞ்சம் புரியும் படியா பொறுமையாவே சொல்லுங்க… இப்படி மிரட்டாதீங்க… அவ ரொம்ப பயந்துக்க போறா…” என்று சற்றே அமைதியான குரலில் கூறியதும் அதை கேட்ட அந்த பெண்மணிக்கும் அந்த ஆசிரியைக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
அந்த ஆசிரியையோ “கண்டிப்பா மேடம்… இனி மேல் ஆதினி கண் கலங்குற மாதிரி இருக்க விடமாட்டோம்…” என்று நீலாவிடம் கூறியவர் திரும்பு ஆதினியிடம் “என்ன ஆதினி குட்டி குட் கேர்ள் தானே நீங்க… இனி டீச்சர் சொல்றபடி கேட்பீங்க தானே…” என்று பாசமாக ஆதினியின் கன்னத்தை தடவி கொண்டே கேட்டார்.
“இதுவரை சிடுசிடுவென்று தன்னிடம் இருந்த அந்த ஆசிரியை சிரித்த முகத்துடன் பரிவாக கேட்கவுமே குழந்தையின் முகம் பிரகாசமடைந்து சரி எனும் விதமாக தலையை அசைத்து காட்டினாள்.
அவளின் தலையசைப்பில் மயங்கிய நீலாவோ “செல்லகுட்டி…” என்று கூறி ஆதீனியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
பின்பு இருவரிடமும் விடை பெற்று காரின் அருகில் சென்று காரின் கதவை திறந்து குழந்தையை உள்ளே அமர்த்தி அந்த குட்டிக்கு இருக்கை பட்டையை போட்டு விட்டவள் ஓட்டுனர் இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
காரினை மெதுவாக ஓட்டி கொண்டே, “அம்மு ரொம்ப பயந்துட்டீங்களா??” என்று கேட்டாள்.
அதுவோ “ஆம்…” என்று தலையாட்டியது.
“அச்சோ… நான் தான் அவங்களை எல்லாம் திட்டிட்டேனே… இனி யாரும் என் அம்முவை திட்ட மாட்டாங்க… அதேசமயம் நீயும் அடம் பிடிக்க கூடாது. டீச்சர் உங்க நல்லதுக்கு தானே சொல்லுவாங்க. அடம் பிடிக்காம இருந்து அந்த டீச்சர்கிட்ட ஆதினி ரொம்ப சமத்து பிள்ளைனு பேர் வாங்கனும் ஒகே வா…” என்று காரை லாவகமாக ஓட்டி கொண்டே கூறினாள்.
அவள் கூறியதை அனைத்தும் உள்வாங்கி அந்த குழந்தை “சரி…” என்று தத்தி பேசியது. வயது என்ன தான் நான்கு ஆகி இருந்தாலும் வார்த்தைகள் தெளிவாக வராமல் இருந்தது.
போகும் வழியில் ஐஸ்கீரிம் கடையை பார்த்ததும் வேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டது. அவளும் வேறு வழி இல்லாமல் வாங்கி கொடுக்க கடையின் அருகே வண்டியை நிறுத்தினாள்.
இங்கே அந்த அறையை விட்டு வெளியே வந்த ஆதீரனிடம் “டேய் இப்ப சொல்ல போறீயா? இல்லையா? இதோட எத்தனை தடவ கேட்டுட்டேன். பதில் சொல்லவே மாட்டீங்குற? இண்டர்வியூக்கு தானே உள்ளே போன? இல்ல காத்து ஏதாவது அடிச்சுருச்சா? இல்ல மோகினி ஏதாவது பார்த்தயா?” என்றான் அவனது தோள்களை குலுக்கி கொண்டே.
இதுவரை அவனது புலம்பல்களை கேட்டறியாதவன் போல் கடைசி வார்த்தைகள் மட்டும் அவனது செவிகளில் விழுந்து பதிலளித்தான்.
“ஆமாண்டா… மோகினியை தான் பார்த்தேன்… என்னா கண்ணு… என்னா மூக்கு… என்னா கன்னம்… என்னா உதடு… அச்சோ… அவளோட பார்வை இருக்கே பார்வை அப்படியே காந்தம் போல இழுத்துருச்சுடா… விழுந்துட்டேன்…”
“அச்சோ… விழுந்திட்டியா? எங்கடா விழுந்த? மறுபடியும் அடி ஏதாவது பட்டுருச்சா? மண்டைல ஏதாவது அடி பட்டுருக்கா?” என்று அவனது தலையின் முடிகளை களைந்து ஆராய்ந்தான்.
அவனது கைகளை தட்டி விட்டவனோ “அடச்சீ… கையை எடுடா… இப்ப எதுக்கு தலையை களைச்சிட்டு இருக்க?” என்றான் தலை முடியை கோதி கொண்டே.
“நீ தாண்டா விழுந்துட்டேனு சொன்ன?”
“டேய் லூசு… அவளோட பார்வையில அப்படியே விழுந்துட்டேனு சொன்னேன்டா எரும…” என்று மீண்டும் கனவுலகத்திற்கு சென்றான்.
“டேய்… நீ எந்த பொண்ண பார்த்தாலும் இப்படி தானேடா சொல்லுவ? இதுல என்ன இருக்கு? என்ன வெளியே ரிஷப்ஷனிஸ்ட்டுகிட்ட வழிஞ்ச மாதிரி உள்ள அந்த பொண்ணுகிட்டயும் நல்லா வழிஞ்சு பேசுனயா? பொண்ணுகளை எப்படி பேசி கவுக்கறதுனு உனக்கு சொல்லியா தரணும்… அப்ப இந்த வேலை உனக்கு கண்டிப்பா கிடைச்சுடும் தானே…”
“டேய்… நான் பொண்ணுககிட்ட க்ளோஸா பேசுவேன் தான்… ஆனா அது வேற இது வேறடா… அத எப்படி சொல்றது… சொன்னா உனக்கு புரியாது போடா…” என்றான் மேலே பார்த்து கொண்டே.
“டேய்… எனக்கு புரியாம போனாலும் பரவாயில்ல… முதல்ல உனக்கு வேலை கிடச்சுருச்சா இல்லையா அத சொல்லு??”
“கிடைச்ச மாதிரி தான்…”
“கிடைச்ச மாதிரியா புரியற மாதிரி சொல்லி தொலைடா…”
“அந்த பொண்ணு தான் முதலாளியாமே அவ ஒகே சொல்லிட்டாடா… ஆனா சாமி வரம் கொடுத்தாலும் அதை பூசாரி தடுக்கற மாதிரி அந்த ஆள் தான் தர வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தார். எப்படியும் கிடைச்சுடும்னு தான் நினைக்குறேன்..”
“அது சரி… அப்ப கன்ஃபார்ம் ஆகலயா?” என்று தனது தலையை தாங்கி கொண்டு அமர்ந்தான்.
ஆதீரனோ அவனை கண்டு கொள்ளாமல் நீலாம்பரியை பற்றிய சிந்தனையுடனேயே அமர்ந்திருந்தான்.
அவளுடனான தன்னுடைய வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்தான். அவனது கனவுகளின் நாயகியோ தனது மகளுடன் அமர்ந்து ஐஸ்கீரிம் சாப்பிட்டு கொண்டிருந்தாள். அவனது நினைவுகள் நிஜமாகுமோ… அதற்கு அவள் சம்மதிப்பாளா?