அத்தனை கடுப்பாக இருந்தது ஆதவ்விற்கு. தன்னை நம்பாமல் மோகனாவின் பொய்யான குற்றச்சாட்டை நம்பி அவளது கழுத்தில் தாலி கட்ட வைத்த ஜானகியின் மீது கோபமாக வந்தது ஆதவ்விற்கு.
மோகனாவை தங்களுடைய அறைக்குள் அமர வைத்திருந்தாள் ஜானகி.
“ உன்னோட தங்கச்சி பேர் என்ன?” என்றாள் ஜானகி. “ எந்த தங்கச்சியை கேக்குறீங்க?” என்றாள் திருதிருவென விழித்துக் கொண்டே.
“ என்னம்மா நீ தானே சொன்ன. நோக்கு தங்கச்சி இருக்கா. அவளை படிக்க வச்சிட்டு இருக்கேன்னு. அவளுக்காக தான் வேலைக்குப் போறேன்னு சொன்ன. அந்த தங்கச்சியை தான் கேட்டுண்டிருக்கேன். அந்தப் பொண்ணை இங்க அழைச்சிண்டு வந்துடலாம் வா. ” பகீரென்றது மேகனாவிற்கு. “ மேடம்…சாரி..அத்தை அவ கொடைக்கானல் ஐ ஹாஸ்ட்டல் ஐ படிச்சிட்டு இருக்கா. அங்க சீட் கிடைக்குறதே பெரிய விஷயம். அவ பண்ணிரெண்டாம் க்ளாஸ் வரைக்கும் அங்கேயே தங்கி படிக்கட்டும். அப்ப திறன் அவளோட வாழ்க்கையும் நல்லா இருக்கும்” என்று கூறி சமாளித்தார் மோகனா.
அப்போது கதவை படீரென்று திறந்து கொண்டு உள்ளே நுழைந்த ஆதவ்வை கண்டு மிரண்டு தான் போனாள் மோகனா.
ஆனால் ஜானகியோ,’ இதெல்லாம் ஒரு விடயமேயில்லை என்பதை போல நிதானமாக அவனைப் பார்த்து, “ இப்ப ஏன் நீ கதவை உடைச்சிண்டு உள்ள வர்ற? “ என்றாள்.
“ நான் உன் கூட கொஞ்சம் பேசணும் ஜானு..”
“ பரவாயில்ல இவ என் மருமக தானே…இவளும் இங்கயே இருக்கட்டும்…நீ பேச வந்ததை பேசு.” என்றாள்.
நெற்றியை நீவி விட்டவன், மோகனாவின் முன்பு சொடக்கிட்டு, “ஏய்…! எழுந்திரு…முதல்ல வெளியே போ…” என்று வாசலை நோக்கி விரலசைத்தான்.
எச்சிலை விழுங்கிக் கொண்டு ஜானகியின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவளின் கையைப் பிடித்து கொண்டு தரதரவென இழுத்துச் சென்று அறையை விட்டு வெளியேத் தள்ளி கதவை அடித்து சாற்றினான்.
“ ஆதவ்…ஏன் டா நோக்கு இவ்வளவு கோபம் வர்றது? யார் மேலயோ இருக்குற கோபத்துல கதவை ஏன்டா உடைச்சிண்டு இருக்க…நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாவே இல்லை…”என்றாள் ஜானகி.
“ அப்ப நீ பண்றது மட்டும் நல்லா இருக்காம்மா.. நீ என்ன காரியம் பண்ணி வச்சிருக்க தெரியுமா? அவ ஒரு ஃப்ராடு ம்மா..ஏன் நீயும் அப்பாவும் அதை புரிஞ்சிக்க மாட்டேன்றீங்க? தமிழ் ட்ராமாவை பாத்து பாத்து உன்னோட மூளையெவ்லாம் மழுங்கி தான் போச்சு… கொஞ்சமாவது புத்தியிருந்தா இப்படி முட்டாள்தனமா பண்ணிருப்பியா..?” என்றவனை “போதும் நிறுத்து..! ” என்று ருத்ரனின் குரல் சற்று கட்டுப்படுத்தியது.
திமிறிக்கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு காளையின் மூக்கணாங்கயிறு அதனை வளர்ப்பவனிடம் இருப்பது போல.. ஆத்திரத்தில் கண்மண் தெரியாமல் குதித்துக் கொண்டிருக்கும் ஆதவ்வை ருத்ரனின் கர்ஜனையான குரல் சற்று நிதானிக்க வைத்தது.
குளித்து விட்டு தலையை துவட்டிக் கொண்டே வெளியை வந்த ருத்ரனை பார்த்து ,” நீயும் இங்க தான் இருக்கியா?” சரியா போச்சு…” என்று முணுமுணுத்தான்.
“ என்ன ஆத்வ்? என்ன முணுமுணுக்குற? ஏன் இவ்வளவு கோபம்? மரியாதை இல்லாத பேச்செல்லாம் வருது? “ என்றான் அழுத்தத்துடன்.
“ டாட் கொஞ்சமாவது யோசிக்க மாட்டீங்களா? நான் போய் இப்படி பிஹேவ் பண்ணுவேன்னு நீங்களும் நம்புறீங்களா?”என்றான் கோபமாக
“லிசன் ஆதவ்…உன்னோட இர்ரெஸ்பான்சிபில் பிகேவியர்னால தான் இவ்வளவு பிரச்சனை. இதோட எத்தனாவது சஸ்பென்ஷன் வாங்கியிருக்க?. இனியாவது கொஞ்சம் ஒழுக்கமா நடந்துக்கோ. அந்தப் பொண்ணு கிட்ட ஹார்ஷா நடந்துக்குறதை விடு. வேற ஏதாவது பண்ணி உன்னோட வாழ்க்கையை சிக்கலாக்கிக்காதே…!” என்றவனை உறுத்து விழித்த ஆதவ் “ சரியான லூசு குடும்பத்துல வந்து பொறந்து தொலைச்சிட்டேன். ஆக மொத்தத்துல என்னோட வாழ்க்கையை காலி பண்ணியாச்சு..” என்று வாய்க்க்குள் முணுமுணுத்தவன் தந்தையிடம் , “உங்க அட்வைஸூக்கு ரொம்ப நன்றி. விசாரணை பண்ணாமலேயே போலீஸ்காரனுக்கு தண்டனை கொடுத்துட்டீங்க. உங்க கிட்ட பேசி புரிய வைக்க முடியாது…என் வாழ்க்கையில நீங்க தலையிடுறது இது தான் கடைசியா இருக்கணும். இனி நான் என்ன பண்ணனும் எனக்குத் தெரியும். பெட்டர் இனி வாழ்க்கையில உங்க தலையீடு இல்லாமயிருந்தா நல்லா இருக்கும்…” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பியவன் கதவை திறந்து கொண்டு வெளியேறினான்.
வெளியே இருந்த சோஃபாவில் ஒரு ஓரமாக மலங்க மலங்க விழித்தபடி அமர்ந்திருந்தாள் மோகனா.
“ கடவுளே இப்படி வந்து தொக்கா சிக்கிட்டேனே..! இப்ப என்ன பண்றது? அடியே…! மோகனா தப்பிக்குறதா நினைச்சு போலீஸ்காரன் கிட்டயே மொத்தமா சிக்கிட்டியே…அந்த பனைமரம் கிட்ட நீ தனியா மாட்டின சட்டினி தான்…ம்ம்கூம்…இந்த வீட்டுல நம்மளால ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது…இங்கயிருந்து எப்படியாவது தப்பிச்சு ஓடிடணும். ஏதாவது கண்ணுக்குத் தெரியாத ஊருக்கு பொட்டிய கட்டி எஸ்கேப் ஆகிடணும் “ என முணுமுணுத்து கொண்டே ருத்ரனின் அறையை எட்டிப் பார்த்தாள்.
உள்பக்கமாக தாளிட்டிருந்தது.
“ உள்ள தான் இருக்காங்க… இது தான் சரியான சான்ஸ். அப்படியே கிளம்பி ஓடிடு டி மோகி…” என்றவள் சோஃபாவிலிருந்து பாய்ந்தெழுந்து வெளி வாசலை தாண்டி வேகமாக திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே நடந்தாள்.
பின்பக்கமாக திரும்பிப் பார்த்துக் கொண்டே வாசலை நோக்கி நடத்தவள் எதிரே வந்த நபரை கவனியாமல் அவர் மீது மோதி நின்றாள்.
திரும்பி பார்த்தவளின் விழிகள் அச்சத்தில் விரிந்தது.
கீதாஞ்சலி தான் அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்
“ அ…அது ஒண்ணுமில்லை…வீட்டுல அப்படியே போட்டது போட்டபடி வந்துட்டேன்…அதான் அதையெல்லாம் போய் எடுத்துட்டு வரலாம்னு..” என்றாள் வாயெல்லாம் பல்லாக.
கீதாஞ்சலி அப்போது தான் நிதானமாக மோகனாவைப் பார்த்தாள்.
அவளது கழுத்தில் புது மஞ்சள் சரடு தொங்கிக் கொண்டிருந்தது.
“ என்னது இது?” என்றாள் அழுத்தமாக.
திடீரென்று மொட்டையாக கீதாஞ்சலி கேட்டது மோகனாவிற்குப் புரியவில்லை.
“ எ..எது…என்னது..?” என்றாள் தடுமாற்றமாக.
“உஃப் ” என்று இடுப்பில் கை வைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டே சுற்றிலும் பார்வையை சுழல விட்டவள் “ உன்னோட கழுத்துல தொங்குதே அதைக் கேட்டேன்.” என்று திருமாங்கல்யத்தை சுட்டிக் காட்டினாள்.
“என்னங்க இது கூட தெரியாதா? இது தாங்க தாலி…” என்றாள் நக்கலாக.
“ என்ன நக்கலா?அது எனக்குத் தெரியுது. காலையில் பாக்குறப்ப இது இல்லையே…இப்ப தானே இருக்குது. என்ன நடந்தது? “என்றவள் அவள் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டே வர அதற்குள் வெளியே வந்த ஆதவ் மோகனாவை முறைத்துக் கொண்டே , “ கீதுக்கா இந்த ஜானுவும் அப்பாவும் படிச்சவங்க தானான்னு எனக்கு சந்தேகமா இருக்குது…”என்றான்.
“ ஏன் டா என்னாச்சு?”
“ இந்த ஃப்ராடு கழுத்துல வலுக்கட்டாயமா தாலி கட்ட வச்சிட்டாங்க ரெண்டு பேரும் “ என்றவனை கண்டு லேசாக சிரிப்பு வந்துவிட்டது கீதாஞ்சலிக்கு.
“ஹலோ..! யார் சார் ஃப்ராடு…? சும்மா சும்மா ப்ராடுன்னு சொல்லாதீங்க…நான் ஃப்ராடு பண்ணுனதை நீங்க பாத்தீங்களா?” என்று மோகனா கடுப்புடன் கூற ,” அடிங்க…என்ன தைரியம் உனக்கு? “ என்று எகிறி கொண்டு அவளை அடிக்க பாய, அவனை தடுத்து நிறுத்தினாள் கீதாஞ்சலி.
“ ம்ம்ச்…ஆதவ்…கொஞ்சம் சும்மா இரு..” என்றவள் மோகனாவின் புறம் திரும்பி, “ உன்னோட லட்சணம் என்னன்னு தெரிய வரட்டும் அன்னைக்கு இருக்கு உனக்கு . இப்ப உள்ள போ..”என்றாள் அழுத்தமாக.
அவளது பேச்சில் நா வற்றி தான் போனது மோகனாவிற்கு.
தடுமாற்றததுடன் , “ அது…என்னோட திங்க்ஸ், ட்ரெஸ்…எல்லாமே வீட்டுல இருக்கு. எடுக்கணும்..” என்றாள்.
“ அப்பறம் அதைப் பாத்துக்கலாம்…இப்ப நீ உள்ள போ…” என்று அதட்டியவளின் பேச்சை மீற முடியாமல் மீணடும் வீட்டினுள் நுழைந்தாள் மோகனா.
அந்த மிகப்பெரிய நீள் மேசையில் கால் மீது கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான் பத்ரன்.
“ அய்யா…நம்ப பசுபதி அய்யாவை போலீஸ் பிடிச்சிட்டு போயிடுச்சு. பெயில்ல கூட எடுக்க முடியாத நிலைமை. எல்லாம் அந்த மிருகேனோட வேலை தானுங்க. இப்ப என்ன பண்றது?” என்றுத் தலையை சொறிந்தான் அடியாள் ஒருவன்.
“ இந்த மிருகேன் இருக்குற வரைக்கும் நமக்கு பிரச்சினை தான். அவனை இப்ப போடக் கூடாது. முதல்ல அந்த வஜ்ரவேலை போட்டுட்டு அதுக்கப்பறம் தான் அவனை போடணும். அவனுக்குன்னு ஒரு வீக்னெஸ் கூடவா இல்லை? ஏதாவது வீக்னெஸ் இருக்குமான்னு பாக்கலாம் ல?” என்றான் தாடையை தடவியபடி.
“ அவன் ஒரு ஒண்டிக்கட்டைங்கய்யா…குடும்பம் குட்டின்னு எதுவும் கிடையாது. அந்தப் தைரியத்துல தான் நம்ம கிட்ட வாலாட்டிட்டு இருக்கான். “ என்றான் மற்றொருவன்.
“அப்படி ஒருத்தனால இருக்கவே முடியாது. நிச்சயமா அவனுக்கு ஒரு வீக் பாயிண்ட் இருக்கும். அதை கண்டு பிடிச்சு அவன் மேல கையை வைக்கணும். அது மட்டுமல்ல இப்ப நமக்கு கிடைச்சிருக்குற புராஜெக்ட்டோட தொகை ரொம்ப பெருசு. ரொம்ப கவனமா இதை செய்யணும்..இப்போதைக்கு அவனை உள்ள தள்ள முடியுமான் னு பாரு. அவன் வெளியே இருந்தா இந்த ப்ராஜெக்ட்டையும் முடிச்சு விட்டுட்டு போயிட்டே இருப்பான்”
“ அப்படியென்னண்ணே ப்ராஜெக்ட்?” என்றான் ஒருவன்.
“ வேற என்ன போதைப்பொருளும் பொண்ணுங்களும் தான்”என்றவன் நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்தான்.
“ கவலைப்படாதீங்கண்ணே….இது ரெண்டையும் அந்த மிருகேன் எப்பவுமே பண்ணுறது இல்ல. அதனால நமக்கு கவலையில்லை. “ என்று இளித்தவனை அருகில் வருமாறு அழைத்தான் பத்ரன்.
“ அண்ணே…!” என்று வந்து நின்றவனை ஓங்கி நெஞ்சில் மிதித்தான் .
“ கூமுட்டைகளை வச்சிருந்தா இப்படி தான் பேசத் தோணும்…ஏன்டா அதெல்லாம் யோசிக்காமலா இருப்பேன் நான். உனக்கு இன்னும் அந்த மிருகேனைப் பத்தி தெரியல… அவனுக்கு போட்டியா இருக்குறதை நாம பண்ணுனாலும் நம்மை எதிர்த்து நிப்பான். அவனுக்கு பிடிக்காததை நாம பண்ணுனாலும் நம்மளை எதிர்த்து நிப்பான். கண்டிப்பா நம்மளை மாட்டி விட எப்படியாவது ட்ரை பண்ணுவான். அதுக்குள்ள நாம ஏதாவது அவனுக்கு செஞ்சாகணும். அவனை தொடர்ந்து கண்காணிச்சிக்கிட்டே இருங்க.. கொஞ்சம் அசந்து இருக்குற நேரம் அவனை வச்சு செஞ்சிடலாம்..” என்றவனின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.
மோகனாவை யாரும் பெரிதாக கொண்டாடவும் இல்லை அதே சமயம் விலக்கி வைக்கவும் இல்லை.
அவளுக்குத்தான் அங்கிருப்பது ஏதோ பிடிக்காத விருந்தாளியின் வீட்டில் இருப்பது போலிருந்தது.
ஆதவ்வின் கோபம் பற்றி நன்கு அறிந்திருந்த ஜானகி அவனிடமிருந்து பாதுகாக்க மோகனாவை தனி அறையில் தங்க வைத்தாள்.
இருவரின் திருமணத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாத நிலை.
கீதாஞ்சலியின் திருமணத்தோடு ஆதவ்வின் திருமணத்தையும் முறைப்படி நடத்தி விடலாம் என்று எண்ணியிருந்தார்கள் ருத்ரனும் ஜானகியும்.
நாட்கள் நகர்ந்தன…
அன்று கீதாஞ்சலியை வற்புறுத்தி முகூர்த்தப் புடவை எடுக்க அழைத்து வந்திருந்தார்கள்.
சிடுசிடுத்துக் கொண்டே வந்தாள் கீதாஞ்சலி..
“கொஞ்சமாவது முகத்தை சிரிச்ச மாதிரி வச்சிக்கோ டி…”
“என்னோட மொகறையே இப்படித்தான். அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது… “என்று தாயிடம் காய்ந்தாள்.
“ இங்க வந்தும் அம்மாவுக்கும் பொண்ணுக்கும் பஞ்சாயத்து தானா?” என்றான் ருத்ரன்.
வாய்க்குள் ஏதோ முணுமுணுத்து கொண்டே தனியாக சென்று அமர்ந்து விட்டாள் கீதாஞ்சலி.
மாப்பிள்ளை வீட்டார் வராததால் அங்கிருந்த நீள்விரிக்கையில் சாய்ந்தமர்ந்து அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி.
அவளை ரசனையோடு தழுவி நின்றது மிருகேனுடைய தீட்சண்யமான கூரிய விழிகள்.
ஊதா நிற டிசைனர் அனார்கலி சுடிதார் அணிந்திருந்தவள், இரு பக்கங்களிலும் முடி எடுத்து சிறிய கிளிப் போட்டு விரித்து விட்டிருந்தாள். நெற்றியில் சிறிய கருப்பு பொட்டு, கையில் ஸ்மார்ட் வாட்ச்.
அலைப்பேசியை பிடித்திருந்த நீண்ட விரல்களில் இரு மோதிரங்கள்.
விரல்களில் பாந்தமாக பொருந்தியிருந்தது கல் வைத்த மோதிரங்கள்.
முகத்திற்கு நேராக அலைப்பேசியை தூக்கிப் பிடித்திருந்தாள் கீதாஞ்சலி.
உச்சி முதல் பாதம் வரை அவளை நிதானமாக அலசி ஆராய்ந்து முடித்தவன் சுற்றிலும் பார்த்தான். ஜானகி மற்றும் ருத்ரன் சற்று தொலைவில் இருப்பதை உறுதி செய்து கொண்டு அவளருகே வந்தமர்ந்தான் .
திடீரென்று இருக்கை திம்மென்று அதிர தலையை லேசாக திருப்பிப் பார்த்தாள்.
சட்டையை முழங்கைக்கு மேலே ஏற்றி விட்டுக்கொண்டே , “ என்ன கமிஷ்னர் மேடம் கல்யாண பர்சேஸா?”” என்றான் நக்கலாக.
அவனுக்கு பதிலேதும் கூறாமல் அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி.
“ பதில் சொல்ல மாட்டீங்களா…தட்ஸ் ஓகே. யூனிபாஃர்மை விட புடவையிலயும் இந்த அனார்கலி சுடிதார்லயும் தான் செம்ம அழகா இருக்கீங்க. அதுவும் இந்த லேவெண்டர் பெர்பியூம் …ம்ம்…ஜஸ்ட் ஆவ்சம்.. எனக்கு அப்படியே….” என்றவனது வார்த்தை அவளது முறைப்பில் அடங்கிப் போனது .
அடங்கிப் போனதாக காட்டிக் கொண்டான்.
“ அன்னைக்கு கோவில்ல பாத்த அதே மாப்பிள்ளை தானா? இல்ல வேற… யாராவதா?”
“ ஜஸ்ட் ஷட்டப்…” என்று பல்லிடுக்கில் சீறினாள்.
“ கூல் மேடம்…ஏன் இவ்வளவு டென்ஷன்? ஆதவ் ப்ரோ வரலையா? பொண்ணு விஷயத்துல மாட்டி மறுபடியும் சஸ்பென்ஷனா? பேசாம சஸ்பென்ஷன் மன்னன் னு பேர் வச்சிடலாம் ஏபிசி சார்க்கு. சளைக்காம அவ்வளவு சஸ்பென்ஷன் வாங்கியிருக்காரு. நானே உங்க ப்ரதரை அன்னைக்கு பஃப்புல பாத்தேன். அந்த பொண்ணோட நெருக்கமா பேசிட்டு இருந்தாப்ல. என்ன லவ்ஸா? பேப்பர்ல , சோஷியல் மீடியா போட்டு ஃப்ரை பண்ணிட்டான் போல…” என்று பேசிக்கொண்டே போனவனின் சட்டையை,” ஏய்…!” என்ற கர்ஜனையோடு பிடித்திருந்தாள் கீதாஞ்சலி..
அவனோ அசராமல் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அக்னியை கக்கும் அவளது விழிகள் அவனது விழிகளை ஆழ்ந்து பார்த்தது.
“ என்ன வேணும் உனக்கு? எதுக்கு இப்படி பண்ணுற? நீதானே நியூஸ் சேனல்ஸூக்கும் சோஷியல் மீடியாவுக்கும் போட்டோஸ் அண்ட் வீடியோஸ் அனுப்பி ஆதவ்வை அசிங்கப்பட வச்ச? இப்ப திருப்தியா? எதுக்கு இவ்வளவு சீப்பா பிகேவ் பண்ணுற?” என்றாள் கோபமாக.
அத்தனை ஆத்திரம் அவளுள்.ஏற்கனவே மிருகேந்திரன் மீது கொலைவெறியில் இருப்பவளுக்கு அவனது பேச்சு இன்னமும் தீமூட்டியிருந்தது.
‘எதற்காக ஆதவ்வின் மீது இத்தனை வன்மம் இவனுக்கு? ‘என்ற எண்ணமே கீதாஞ்சலியை கொதித்தெழ செய்தது.
அவளைப் பார்த்து கொண்டே நிதானமாக அவளது கையை தனது சட்டையிலிருந்து விலக்கியவன், “உங்களுக்கு அனுப்ப ரெண்டு போட்டோ மட்டுந்தான் நான் எடுத்தது. மத்தபடி பேப்பர் அண்ட் சோஷியல் மீடியாவும் வந்த போட்டோஸ் அண்ட் வீடியோஸை நான் எடுக்கல. எதுவா நேருக்கு நேரா நின்று தான் இந்த மிருகேனுக்கு பழக்கம் . ஒரு சிலர் மாதிரி முதுகுல குத்தத் தெரியாது…” என்றவன் அவளை கோபமாக உறுத்து விழித்து விட்டு , “ என்ன கேட்டீங்க? எனக்கு என வேணும்னா…? ம்ம்ச்..எனக்கு வேணுங்கறதை உங்களால் மட்டுந்தான் கொடுக்க முடியும்.. உங்களால அதை கொடுக்க முடியுமா? இல்லையில்ல. அப்ப விடுங்க.” என்று கடுமையாக கூறியவன் குரலை தாழ்த்திக் கொண்டு , “ எனிவே ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் மேரேஜ் லைஃப்…மிஸ் கீதாஞ்சலி…” என்று அவளது கரங்களை பிடித்து குலுக்கியவனின் கரங்கள் அத்தனை அழுத்தத்தை அவளது கரங்களுக்குள் கடத்தியிருந்தது.
கைக்குலுக்கி விட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்து விட்டான்.
செல்லும் அவனையே விழியகற்றாமல் பார்த்திருந்தாள் கீதாஞ்சலி.
ஜானகி அவளது தோளினைத் தட்டி அவளது சிந்தனையை கலைத்தாள்.
“ கீது வா டி. அவா எல்லாம் வந்துட்டா..பர்சேஸை சீக்கிரம் முடிச்சிடலாம் “ என்று அவளது கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.
ஆதவ் விஷயம் விதேஷின் வீட்டில் சிறிய சலசலப்ப்பை உண்டு பண்ணியிருந்தது.
ருத்ரன் தான் ஏதோ கூறி விதேஷ் வீட்டை சமாளித்து வைத்திருந்தான். இருந்தாலும் சிறு முணுமுணுப்பு இருந்து கொண்டு தான் இருந்தது.
மோகனாவையும் அழைத்துக் கொண்டு தான் வந்திருந்தனர்.
ஆதவ்வோ மோகனா வந்தால் தான் வரமாட்டேன் என்று உறுதியாக கூறி விட்டான். வீட்டில் இருவரையும் விட்டுவிட்டு வந்தால் அவனிருக்கும் மனநிலையில் மோகனாவை ஏதேனும் காயப்படுத்தி விடுவான் என்று எண்ணி அவளையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தனர்.
பெரிதாக அவளை கொண்டாடவில்லை என்றாலும் கூட அவளது தேவை என்னவென்று கேட்டறிந்து அவளுக்கு வேண்டிய உடைகளையும் உடைமைகளையும் வாங்கிக் கொண்டிருந்தனர்.
கீதாஞ்சலி தனியாக தான் அமர்ந்திருந்தாள்.
ஏதேச்சையாக அங்கு வந்த மிருகேந்திரனின் கண்ணில் பட்டுத் தொலைத்தாள் கீதாஞ்சலி.
ஏனோ அவளைப் பார்ததாலே மிருகேனுக்கு சீண்டி வம்பிளுக்கத் தோன்றி விடுகிறது. பெண்ணின் மனநிலை அறியாமல் அவளை சீண்டிக் கொண்டிருந்தான்.
சற்று தாமதமாகவே வந்த விதேஷ் குடுமபத்தினரிடம் பெயருக்கு பேசி விட்டு தனக்கு புடவையை தேர்வு செய்ய ஆரம்பித்தாள்.
மனம் ஏனோ சோர்வாகவே இருந்தது.
விதேஷ் வேறு அவளை ஒட்டி உரசிக் கொண்டு அமர்ந்திருந்தான்.
சராசரி ஆண்மகனின் எதிர்பார்ப்பு. திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் கையை பிடித்துக் கொள்ள வேண்டும், தோளோடு தோள் உரச பேசிக் கொண்டே இருக்க வேண்டும், மணிக்கணக்கில் ஸ்வீட் நத்திங்ஸை அலைப்பேசியில் பேசி மகிழ வேண்டும் என்பது.
ஆனால் இவையெல்லாம் கண்டிப்பாக தன்னிடம் எதிர்பார்க்கக்கூடாது என்று ஆரம்பத்திலேயே கீதாஞ்சலி விதேஷிடம் கூறி விட்டாள்.
ஆனாலும் வெகு நாட்களுக்கு பிறகு அவளை சந்தித்ததால் மனதிற்குள் ஏனோ ஒரு குறுகுறுப்பு.
அதனால் அவளிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க அவளது சிந்தனையோ வேறொரு திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. அதனை அறியவில்லை பாவம் அவன்..
“ ப்ளீஸ்..! கொஞ்ச நேரம் உரசாம தள்ளி இருக்கீங்களா? எனக்கு அன்கம்பர்ட்டபிளா இருக்கு”என்று முகத்திலடித்தாற் போல கூறி நகர்ந்து அமர்ந்தாள்.
விதேஷூக்கு தான் முகம் கருத்து விட்டது. அதற்கு பிறகு பெரிதாக அவன் அவளிடம் பேச்சுக் கொடுக்கவில்லை.
இதனை வெளியே ஏதோ வாங்கிக் கொண்டிருந்த மிருகேன் கவனித்து விட்டான். அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஜவுளிகளை முடித்துக் கொண்டு அனைவரும் வெளியே வர, விதேஷ் சற்று இடைவெளி விட்டே கீதாஞ்சலியுடன் இணைந்து நடந்து வந்து கொண்டிருந்தான்.
அவளுக்கு சற்று தொலைவில் இருந்த கடையில் கையில் பெரிய பெரிய பைகளை கீழே வைத்து விட்டு தேநீர் அருந்திக் கொண்டிருந்தான் மிருகேன்.
இருவரும் இடைவெளி விட்டு இணைந்து வந்து கொண்டிருக்க கீதாஞ்சலியும் மிருகேனைப் பார்த்து விட்டாள்.
‘ இவன் இன்னும் போகலையா?’ என்று கடுப்பாக நினைத்துக் கொண்டாள்.
இருவரது இடைவெளியைக் கண்டு அவனது விழிகள் சிரிக்க வேகமாக நகர்ந்து விதேஷூனுடைய கரங்களை இறுகப் பிடித்துக் கொண்டு தோளில் சாய்ந்தாள்.
விதேஷூக்கு தான் அவளது செய்கை அதிர்ச்சியாக இருந்தது.
மிருகேனை கடந்து செல்லும் போது, “இன்னைக்கு நைட் மறக்காம கால் பண்ணுங்க விது….உங்க கால்க்கு வெயிட் பண்ணிட்டு இருப்பேன். நேத்து நைட் இன்னும் கொஞ்ச நேரம் பேசியிருந்திருக்கலாம். நீங்க தான் தூக்கம் வருதுன்னு சொல்லி தூங்கிட்டீங்க… தட்ஸ் ஓகே… இன்னைக்கு நைட்டு மறக்காம கால் பண்ணுங்க “ என்றவள் விதேஷூனுடைய கரங்களை தன்னுடைய கரங்களுக்குள் பொத்தி வைத்துக் கொண்டாள்.
தேநீர் அருந்திக் கொண்டிருந்த மிருகேனுக்கு வெடிச் சிரிப்பு வந்துவிட இருமலுடன் புரையேறி விட்டது அவனுக்கு.
அவனை கடந்து சென்றவள் அவனது இருமலுடன் கூடிய சிரிப்பில் திரும்பிப் பார்த்தாள்.
அவனோ தேநீர் கோப்பையை கீழே வைத்து விட்டு தலையை தட்டிக் கொடுத்து கொண்டே சிரித்துக் கொண்டிருந்தான்.
இருமி முடித்தவன் தலையை தட்டிக் கொண்டே நிமிர்ந்து அவளைப் பார்த்தான். சிரிப்பும் நிற்கவில்லை இருமலும் நிற்கவில்லை .
அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது பார்வை மாற்றத்தை உணர்ந்தவன் தன்னை சமாளித்துக் கொண்டு அவளை ஆழ்ந்து பார்த்தான்.
“இப்படி இருமினா என்ன பண்ணனும்ன்னு தெரியுமா?” என்ற குரல் இருவரின் மனதிலும் ஒலித்தது.