Ep 16

அத்தியாயம் 16

சர்ஜரியை முடித்து விட்டு அப்போது தான் தனது கேபினுக்கு செல்ல வேண்டி லிப்ட்டில் ஏறி இருந்தான் சிம்ம விஷ்ணு.

அவனது தளத்துக்கு வந்ததும் லிப்ட் கதவு திறக்கப்பட, அங்கே சாய்ந்த படி நின்றிருந்தவன் கண்களில் பட்டாள் விஷ்வஜித்தின் பக்கத்தில் உரசிய படி நின்றிருந்த பிருந்தா.

அவனை அங்கே கொஞ்சமும் எதிர் பாராத பெண்ணவளின் விழிகளோ அப்படியே அதிர்ச்சியில் விரிந்து கொள்ள, சிம்மனுக்குமே அவளை ஒரு ஆணோடு அதுவும் இவ்வளவு நெருக்கமாக பார்த்தது சற்று அதிர்ச்சியை தான் கொடுத்தது. 

அதுவும் அவர்கள் இருவரும் இப்படி கை கோர்த்த படி நின்றதை பார்த்தவனுக்கோ உள்ளுக்குள் அவ்வளவு கோபம் வந்தது. 

ஆனால் அவன் முகமோ எந்த உணர்வையும் வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. 

அவனது கூரிய விழிகளோ விஷ்வஜித்தின் மீது அழுத்தமாகப் பதிய, 

அவன் பார்வையும் சிம்ம விஷ்ணு மீதே விழுந்தது. 

சற்று நேரத்துக்கு முன்னால் இருந்த மென்மை மறைந்து இப்போது அவன் முகமோ அவ்வளவு இறுக்கமாக மாறி இருந்தது. 

ஆனால் பிருந்தாவோ அதை எல்லாம் கொஞ்சமும் கவனிக்கவில்லை. 

சிம்மனை கண்ட அதிர்ச்சியில் தலை குனிந்த படி அப்படியே நின்றிருக்க, 

அவளை துளைத்தெடுக்கும் பார்வையில் பார்த்தவன் அங்கிருந்து விறு விறுவென வெளியேறி இருந்தான்.

பிருந்தாவோ மூச்சை பிடித்து கொண்டு பயத்தில் நின்றிருந்தாள். 

யாருக்கு தெரியவே கூடாது என்று நினைத்தாளோ விதி அவன் முன்னாலேயே வந்து நிற்க வைத்து விட்டதே! நினைக்கும் போது கை, கால்கள் இரண்டும் உதறியது அவளுக்கு.

விஷ்வாவோ அதற்கு மேல் அங்கே நிற்காமல், “பிந்து வா போலாம்” என்று அவளை சற்று இழுத்த படி லிப்டில் ஏறிக் கொள்ள, 

அவளும் அமைதியாக அவனோடு சென்றாள்.

இருவரும் காரில் சென்று கொண்டிருக்க, 

பிருந்தாவின் எண்ணம் முழுக்கவே சிம்மனை பற்றியதாக தான் இருந்தது. 

தான் சொன்ன பொய்யை அவன் கண்டு பிடித்து இருப்பானோ என்றே யோசித்து கொண்டிருந்தாள்.

ஆனால் அவர்கள் இருவரும் அண்ணன், தங்கை என்று அவன் எண்ணியிருக்கவும் வாய்ப்பு இருக்கலாமே! என்று யோசித்தவளுக்கு தெரியவில்லை, சிம்மனுக்கும், விஷ்வாவுக்கும் ஏற்கனவே ஒருவரை ஒருவர் தெரியும் என்பது.

‘அந்த சனியன் புடிச்சவனுக்கு உண்மை தெரிஞ்சதுன்னா என் கிட்டயே பொய் சொல்லிட்டன்னு என் கழுத்தை நெரிச்சே கொன்னுடுவானே!’ நினைக்கும் போதே உள்ளுக்குள் பக்கு பக்கென்று இருந்தது.

விஷ்வாவோ வண்டியை சற்று வேகமாக ஓட்டிக் கொண்டு இருந்தான். 

பிருந்தாவை பார்க்க எவ்வளவு சந்தோஷமாக அங்கு வந்தானோ இப்போது அந்த அளவுக்கு எரிச்சல் தான் அவனுக்குள் தோன்றியது. 

தான் எப்போதுமே பார்க்க கூடாது என்று நினைக்கும் அவன் முகத்தை இன்று கண்டது அவனுக்கு கோபத்தை தான் கொடுத்தது.

அந்த கடுப்பை தான் இப்போது கார் ஓட்டும் வேகத்தில் காட்டிக் கொண்டிருந்தான்.

ஆனால் பிருந்தாவுக்கு அது கொஞ்சமும் விளங்கவில்லை. 

சிம்மனது சிந்தனையில் மூழ்கி இருந்தவளோ, அந்த சடன் பிரேக்கிலேயே சட்டென தன்னிலை உணர்ந்து, பதட்டமாக  திரும்பி விஷ்வஜித்தை பார்த்தாள்.

அவனோ நேராக அவளை ஒரு உணவகத்துக்கு தான் அழைத்து வந்திருந்தான். 

இவ்வளவு நேரமும் சற்று கோபமாக இருந்தவன், இப்போது அதை மறைத்த படி, 

அவளுக்காக புன்னகையை வரவழைத்துக் கொண்டான்.

அவனுக்கு பிடித்த பெண்ணோடு முதல் முறை தனியாக வெளியில் வந்திருக்கிறான். 

இந் நொடியை அவன் தேவையில்லாத கசப்பான நினைவுகளால் வீணடிக்க விரும்பவில்லை. 

அவள் புறம் திரும்பியவன், 

“வா உள்ள போலாம்” என்று சொல்லி விட்டு இறங்க, அவளும் பெரு மூச்சு ஒன்றை விட்டுக் கொண்டே இறங்கி அவன் பின்னால் சென்றாள்.

இருவரும் உணவகத்திற்குள் நுழைய, அங்கே நிலவிய அந்த இதமான சூழலும், மெல்லிசையும் பிருந்தாவின் படபடப்பை சற்றே குறைத்தது. 

“உனக்கு என்ன பிடிக்குமோ ஆர்டர் பண்ணு” என்று மெனு கார்டை அவளிடம் நீட்ட, அவளும் லேசாக புன்னகைத்த படி வாங்கி அவளுக்கு பிடித்த சில உணவுகளை ஆர்டர் செய்தாள். 

இருவரும் உணவு வரும் வரை காத்துக் கொண்டிருக்க, 

பிருந்தாவோ என்ன பேசுவது என்றே புரியாமல் சற்று பதட்டமாகவே இருந்தாள்.

அதை உணர்ந்த விஷ்வா “பிந்து எதுக்கு இவ்ளோ நர்வஸா இருக்க?” என்று கேட்க, 

அவளோ சட்டென அவன் கேள்வியில் நிமிர்ந்து பார்த்தவள்,

“அ…  அதெல்லாம் ஒன்னும் இல்லை விஷ்வா. இதுக்கு முன்னாடி நான் இப்படி தெரியாதவங்க கூட….” என்றவள் சட்டென தன் நாக்கை கடித்துக் கொள்ள, 

அவனோ புருவங்களை உயர்த்தி அவளை பார்த்தவன், “தெரியாதவங்க கூடவா? சோ நான் உனக்கு தெரியாதவனா?” என்று கிண்டலாக கேட்டாலும், அதில் சற்று கோபமும் இருக்கவே செய்தது. 

பிருந்தாவோ “ஐயோ… அது இல்ல விஷ்வா. நான் என்ன சொல்ல வந்தேன்னா… பழக்கம் இல்லாதவங்க கூட, ஐ மீன் வீட்ல இருக்குறவங்களைத் தவிர வேற யார்கூடவும் இப்படித் தனியா ரெஸ்டாரண்ட் வந்தது இல்ல… அதான் ஒரு மாதிரி தயக்கமா இருக்கு” என்று ஒரு வழியாகச் சமாளிக்க, 

அவனோ புன்னகையை உதிர்த்த படி, “சோ இதுக்கு முன்னாடி நீ எந்த பையன் கூடயும் இப்படி தனியா வந்தது இல்லை?” என்று கேட்க, 

அவளோ “ஐயோ இல்லை” என்றாள் அவசரமாக. 

அவள் பதட்டத்தை பார்த்து புன்னகைத்தவன் அவள் கரங்களை மென்மையாக பற்ற, அவளோ சற்று திணறி தான் போனாள்.

ஆனாலும் ஒரேயடியாக இழுக்க முடியாதே! 

அவளின் அங்குமிங்கும் சுழலும் விழிகளை பார்த்தவன், “இந்த ட்ரெஸ்ல நீ ரொம்ப அழகா இருக்க பிந்து” என்று காதல் கலந்த குரலில் சொல்ல, 

அவளுக்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது.

ஏனோ அவன் நெருக்கம் அவளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. 

அவன் கண்கள் காதலோடு அவளைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும், அவள் மனக்கண்ணில் வந்து நின்றது என்னவோ  அவளை எப்போதுமே தொந்தரவு செய்யும் சிம்மனின் முகம் மட்டும் தான்.

விஷ்வா அவளது கைகளைப் பற்றிப் பிணைத்திருக்கும் அந்த மென்மையான ஸ்பரிசம் கூட, அவளுக்கு ஒருவித நெருடலையே கொடுத்தது.

நிச்சயிக்கப்பட்டவன் தானே, நம்மிடம் அன்பு காட்டுகிறான் என்று அவளது அறிவு சொன்னாலும், அவளது ஆழ்மனமோ அதை ஏற்க மறுத்தது.

தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்றே புரியவில்லை அவளுக்கு.

ஒரு பெண் தன் வாழ்க்கைத் துணையிடம் எதிர்பார்க்கும் அத்தனை மென்மையையும், அன்பையும் வாரி வழங்கும் அவனின் தீண்டலும், அன்பும் அவளுக்கு இதத்தைத் தருவதற்குப் பதிலாக ஒருவிதச் சுமையைத் தான் தருகிறது.

ஆனால், அவளை முரட்டு தனமாக தீண்டி, அவளின் மனதை எப்போதுமே காயப்படுத்தும் அந்த முரடன் மீது மட்டும் ஈர்ப்பு வருகிறதா? 

நினைக்கும் போது அவள் மீது அவளுக்கே கோபம் தான் வந்தது. 

ஆனாலும் அதை தடுக்கவும் முடியவில்லையே! 

அதே சமயம் அவர்கள் ஆர்டர் செய்த உணவும் வந்து விட, அதை பயன் படுத்தி மெதுவாக அவள் கைகளை அவனிடம் இருந்து உருவிக் கொண்டாள் பாவை. 

இருவரும் ஒரு வழியாக சாப்பிட்டு முடிய, விஷ்வாவும் அவளிடம் சகஜமாகப் பேசினாலும், அவள் வெறும் ஒற்றைச் சொல்லில் பதில்களை முடித்துக் கொண்டாள்.

அவனும் அவளின் குணம் அறிந்து அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தான்.

****

சிம்மனோ கடுப்பாக தனது இருக்கையில் அமர்ந்து இருந்தான். 

ஸ்ட்ரெஸ் பந்தை அழுத்திய படி இருந்தவனுக்கோ கோபம் கூடியதே தவிர, கொஞ்சமும் தணியவில்லை. 

எப்படி தணியும்?

அவள் உண்மையை மறைத்தால் என்பதை விட, தனக்கு பிடிக்காத அவனோடு இருந்ததை தான் சிம்மனால் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இது வரையில் அவன் இந்த அளவுக்கு கோபப் பட்டது இல்லை. ஆனால் இன்று அவனால் தன்னை கட்டுப்படுத்தவே முடியாமல் போனது.

அதே சமயம் அவனது கேபினை தட்டி அனுமதி கேட்ட படி உள்ளே வந்தாள் நர்ஸ் மாலதி.

சிம்மனோ இருக்கையில் கண்களை மூடிய படி சாய்ந்து அமர்ந்திருக்க, கோப்புகளை எடுத்து கொண்டு உள்ளே வந்தவள், 

“சார்” என்று மெல்லிய குரலில் அழைக்க, 

அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. 

‘ஒரு வேளை தூங்கிட்டாரோ!’ என்று யோசித்தவள், 

மீண்டும் தொண்டையை செறுமிய படி, “சார்” என்று சற்றே சத்தமாக அழைத்து விட 

அவனோ அவள் குரலில் சட்டென விழிகளை திறந்து “வாட்?” என்றான் கறாரான குரலில்.

அவன் குரலில் சற்று பயந்தவளோ “சார் இந்த ரிப்போர்ட்ல சைன் பண்ணனும்” என்று திக்கி திணறிய படி சொல்ல,

அவளை மேலிருந்து கீழ் அளந்தவன், “இங்க வா” என்று இரு விரல்களை உயர்த்தி அழைக்க, 

அவளோ பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கிய படி மெல்ல அருகில் வர, 

“ப்ச்… பக்கத்துல வான்னு சொன்னேன்” என்று அதட்டலாக அவன் குரல் ஒலிக்க, 

பெண்ணவளும் நடுங்கிய படியே அவனை நெருங்கி வந்து நின்றாள். 

சட்டென தன் இருக்கையில் இருந்து எழுந்தவன், அவள் இடையை பற்றி தன்னிடம் இழுக்க, 

அவளோ அவனது அகன்ற மார்பில் மோதிய படி நின்றிருந்தாள்.

அவள் இதழ்களை தன் விரல் கொண்டு அவன் வருட, அந்த ஸ்பரிசத்தில் மோகமாக கண்களை மூடிக் கொண்டாள் பாவை.

அவள் காதோரம் இதழ் உரசிய படி குனிந்தவன் “ஆர் யூ ஓகே வித் திஸ்?” என்று கிசு கிசுப்பான குரலில் கேட்க, 

அவன் கேள்வியில் அவள் கன்னங்களோ மேலும் சிவந்து போனது.

மெதுவாக விழிகளை திறந்து அவனை பார்த்தவள், “ம்ம்” என்று தன் சம்மதத்தை வெளிப்படுத்த, 

அவள் இடையை பற்றி மேலும் தன்னிடம் நெருக்கியவன், அடுத்த நொடி அவள் இதழ்களை தன் வசப்படுத்தி இருந்தான்.

தன் கோபத்தை தணிக்க, அவனுக்கு  இப்போது ஒரு வடிகால் மட்டும் தான் தேவைப்பட்டது. 

அதை தாண்டி வேறு எதை பற்றியுமே அவன் சிந்திக்கவில்லை. 

*****

இரவு கட்டிலில் புரண்டு கொண்டிருந்த பிருந்தாவுக்கு தூக்கமே வரவில்லை. 

அவள் சிந்தனை முழுக்க விஷ்வா இன்று அவளிடம் சொன்ன விடயத்தை பற்றி தான் ஓடிக்கொண்டு இருந்தது.

வீட்டுக்கு வந்து அவளை இறக்கி விட்டவனோ, “பிந்து நான் உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றான். 

அவளோ என்ன என்பது போல பார்க்க, 

நெற்றியை நீவிய படியே, “இன்னக்கி நம்ம ஹாஸ்பிடல்ல இருந்து வரும் போது லிப்ட்ல ஒருத்தன் இருந்தானே!” என்க, 

அதிர்ந்து போய் அவனை பார்த்தவளுக்கு அவன் சிம்மனை பற்றி தான் கூறுகிறான் என்று புரிந்தது.

“ஆமா” என்று அவள் தலையாட்ட, 

விஷ்வாவோ “அவன் கிட்ட கொஞ்சம் கேர் புல்லா இரு. அவன் அவ்ளோ நல்லவன் கிடையாது.” என்று எச்சரிக்கையாக சொல்ல,

அவளோ “உங்களுக்கு அவரை தெரியுமா விஷ்வா?” என்று அதிர்ச்சி மாறாமல் கேட்க, 

அவன் முகமோ சற்று மாறியது. ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல், 

“ம்ம்” என்றவன், “அவன் கிட்ட எப்பவும் ஜாக்கிரதையா இரு.” என்று அழுத்தமாக சொல்லி விட்டு அங்கிருந்து சென்றிருந்தான். 

இதை பற்றி யோசித்தவளுக்கு இப்போது ஒன்று மட்டும் புரிந்தது. விஷ்வாவுக்கு சிம்மனை ஏற்கனவே தெரியும் என்று.

அப்படி என்றால் சிம்மனுக்கும் உண்மை தெரிந்திருக்குமே! 

அவள் அண்ணன் என்று கூறியதால் இன்று விஷ்வாவை கண்டு ஒரு வேளை அப்படி நினைத்து இருக்கலாம் என்று தப்பு கணக்கு போட்டிருந்தாள். 

ஆனால் எப்போது விஷ்வா சிம்மனை பற்றி சொன்னானோ அந் நொடியே அவளுக்கு புரிந்து விட்டது. 

தான் சொன்னது பொய் என்று சிம்மனுக்கு தெரிந்திருக்கும் என்று. 

இப்போது அதை நினைக்கையில் தான் பயமாக இருந்தது. 

அவனது குணம் அறிந்து தான் அந்த பொய்யை சொல்லி இருந்தாள். 

ஆனால் இவ்வளவு சீக்கிரம் உண்மை தெரிந்து விடும் என்று அவள் நினைத்தும் பார்க்கவில்லை.

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top