அத்தியாயம் -27

 

“ ஐ யம் பிரக்னென்ட்…” என்றாள் கீதாஞ்சலி.

முதலில் அவள் கூறியது எதுவுமே அவனது மூளைக்குள் உரைக்கவில்லை.

மீண்டும் தனது செவியில் விழுந்தது உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில்  அவளிடம், “ என்ன சொன்ன?  எனக்கு காதுல வேற எதுவோ மாதிரி விழுந்துச்சு”என்றான்.

அவன் புறம் நன்றாக திரும்பி அமர்ந்தவள் அவனது கரங்களை பிடித்து தனது வயிற்றில் வைத்தாள்.

“உங்களுக்கு என்ன கேட்டுச்சோ…அதான் உண்மை. எஸ்.. நீங்க அப்பா ஆகப்போறீங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பிரெக்னென்ஸி ஸ்டிக் வச்சு செக் பண்ணுனேன். கன்ஃபார்ம் ஆயிடுச்சு…ஐ யம் ஹேப்பி மிருகேன்…உங்களுக்கும் சந்தோஷம் தானே..?” என்றாள் அவனது கரங்களுக்கு அழுத்தம்‌ கொடுத்தபடி.

அவளது வயிற்றில் அவனது கரங்கள் படித்திருக்க, யோசனையுடன் அவளைப் பார்த்தான்.

“என்ன மிருகேன்? எவ்வளவு ஹேப்பியான‌ நியூஸ் சொல்லியிருக்கேன். உங்க முகத்துல ஒரு ரியாக்ஷனும் இல்ல. உங்களுக்கு சந்தோஷம் இல்லாயா?” என்றாள் ஏமாற்றத்துடன்.

சட்டென்று சுதாரித்தவன் அவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு உச்சந்தலையில் அழுந்த முத்தமிட்டான்.

“ சே..சே…அப்படியில்லை டா. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் தான். நீ தான் இப்போதைக்கு குழந்தை வேண்டாம்‌, கேரியர் முக்கியம் னு சொல்லிட்டு இருந்த. அதுக்காக கான்ட்ரசெப்டிவ்ஸூம் யூஸ் பண்ணினோம் தானே? அப்பறம் எப்படி ?  கன்சீவ் ஆகிட்டா உனக்கு வேலைக்கு போறதுக்கு கஷ்டமா இருக்குமேன்னு யோசிச்சேன். அதுவுமில்லாம நம்ம கல்யாணத்தை முறைப்படி இன்னும் பதிவு பண்ணல. யாருக்கும் தெரியாது. முக்கியமா உங்க அம்மா அப்பாவுக்கு தெரியாது. இப்ப திடீர்னு போய் கர்ப்பமா இருக்கேன்னு சொன்னா வருத்தப்படுவாங்க தானே…? அதான் தயக்கமா இருந்தது. இப்ப கூட சரின்னு நீ  சொல்லு… உங்க அப்பா அம்மா கிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணிடலாம். நான் நேர்லயே போய் பேசி முறைப்படி கல்யாணத்தை நடத்த ஏற்பாடு பண்ணிட்டு வந்துடுறேன். இனிமேலும் தள்ளிப் போடறது ரொம்பவே தப்பா போயிடும் கீது..” என்று கூறி விட்டு சோஃபாவிலிருந்து எழுந்தவனின் கையைப்பிடித்து அமர வைத்தாள்.

“ ப்ளீஸ் …!மிருகேன்…இப்ப வேண்டாம். கொஞ்ச நாள் கழிச்சு நானே அவங்க கிட்ட பேசுறேனே. எனக்கு அவங்க கிட்ட சொல்றதுக்கு ஒரு மாதிரி இருக்கு. இப்போதைக்கு எனக்கு நீங்க மட்டும் போதும். நீங்க என் கூடவே இருங்க. எங்கயும் போகாதீங்க. நான், நீங்க, அப்பறம் நம்ம குழந்தை. இதுவே நல்லா தான் இருக்கு . விஷயம் தெரிஞ்சா அப்பா ரொம்ப கோபப்படுவாரு. கொஞ்ச நாள் போகட்டும் மிருகேன். நேரம் பாத்து நானே சொல்லிடுறேன். நீங்க என்னைய மட்டும் கவனிச்சுக்கோங்க ப்ளீஸ்…எனக்கு அது போதும்” என்று அவனது மீசையை பிடித்து முறுக்கி விட்டாள்.

அவளை‌ தன் மடி‌ மீது அமர வைத்தவன் அவளது தோள் வளைவில் தாடையை‌ப் பதித்துக் கொண்டு, “எனக்கு என்னவோ விஷயத்தை தள்ளி போடுற மாதிரி தெரியுது. சீக்கிரமா எல்லாத்தையும் சொல்லி உங்க அம்மாவைக் கூட நாம‌ உதவிக்கு கூப்ட்டுக்கலாமே…” என்றான்.

அவனது முகத்தை கையில் ஏந்தியவள், “ ஏன் நீங்க என்னைய பாத்துக்க மாட்டீங்களா?” என்றாள்.

அவளது நெற்றியை முட்டியவன், “லூசு…நான் அப்படியா சொன்னேன். கவலைப்படாதே….நான் உன்‌ கூடவே இருக்கேன். நாளைக்கே போய்‌ நாம டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு வந்துடலாம் “ என்றான்.

ஒரு கணம் அவனது பேச்சில் திகைத்தவள்,” நாளைக்கு வேணாம்‌ மிருகேன்…கொஞ்சம் வெயிட் பண்ணி ஒரு வாரம் கழிச்சு போய்‌ பாத்துக்கலாம். என் ப்ரெண்டு ஒருத்தவங்க கைனகாலஜிஸ்ட்டா இருக்காங்க. அவங்க கிட்டயே கன்சல்ட் பண்ணலாம்” என்றவள் அவனது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்.

அந்த மருத்துவமனை வளாகத்தில் அமரந்திருந்தனர் கீதாஞ்சலி மற்றும் மிருகேன்.

அவனது தோளில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் கீதாஞ்சலி.

அவளது மனதில் ஆயிரம் யோசனைகள். கிட்டத்தட்ட இந்த ஒரு வாரமாக மிருகேன் கீதாஞ்சலியுடனே இருந்து அவளை கண்ணுங் கருத்துமாக பார்த்துக் கொண்டான்.

வஜ்ரவேலிடம் மிருகேன் பேசியே ஒரு வாரம் ஆகியிருந்தது.

மிருகேனை எவ்வளவு நாள் கட்டுப்படுத்த முடியும் ? தான் வேலைக்கு சென்று விட்டால் நீச்சயமாக அடுத்து அவன் செல்லும் இடம் வஜ்ரவேலின் இல்லம் தான்‌. அதற்காக தன்னுடைய வேலையை விடவும் அவளுக்கு மனமில்லை.

மனம் முழுவதும் குழப்ப மேகங்கள் சூழ அமர்ந்திருந்தாள். அவளது நெருங்கிய தோழி பிருந்தா தான் மகப்பேறு மருத்துவராக இருந்தாள். அவளிடம் தான் முதற்கட்ட மருத்துவ பரிசோதனைக்காக அமர்ந்திருந்தாள்.

அவளுடைய முறை வரவே மிருகேந்திரனுடன் எழுந்து உள்ளே சென்றாள்.

“ஹாய்…கீது…எப்படியிருக்க டி? வா வந்து உக்காரு. இது…சாரி…இவர் தான்‌ உன்னோட ஹஸ்பண்டா? வாங்க சார் உக்காருங்க”என்றாள்.

அவளிடம் விபரங்களை கேட்டறிந்த பிருந்தா கீதாஞ்சலியை  பச்சை நிறத் திரைசீலைக்கு  பின்னால் அழைத்துச் சென்று பரிசோதனை செய்தாள்.

அவளிடம் ஏதோ பேசிக் கொண்டே வெளியே வந்தவள் மிருகேனிடம்,  “எல்லாமே நார்மலா இருக்கு. அடுத்த மாசம் ஸ்கேன் பண்ணிக்கலாம்.  இப்போதைக்கு டேப்லட்ஸ் எழுதி தர்றேன். கொஞ்சம் சத்தான ஆகாரம் எடுத்துக்கணும். அவங்க கூடவே இருந்து அவங்களுக்குத் தேவையானதை கவனிச்சுக்கோங்க. ஒன்‌ மன்த் ரெஸ்ட்ல இரு கீது…அதுக்கப்புறம் உன்னால் முடிஞ்சா ஜாஃபை கன்டின்யூ பண்ணு இல்லன்னா…” என்றவளை தீயாக முறைத்தாள் கீதாஞ்சலி.

“ம்ம்கூம்…” என்றத் தொண்டையை சரி   கொண்டவள், “கொஞ்சம் கவனமா இருக்கணும்” என்றவள் கீதாஞ்சலியை சற்று பயத்துடன் பார்த்தாள்.

அவளோ விழிகளை மூடி திறந்தாள்.

சலிப்புடன் தலையை ஆட்டி விட்டு பிரிஸ்கிரிப்ஷனை எழுத ஆரம்பித்தாள்.

பிருந்தாவை கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்து விட்டான் மிருகேன்.

அவனது கேள்விக்களுக்கு பதில் அளிப்பதற்குள் திணறி தான் போனாள் பிருந்தா.

பாவமாக கீதாஞ்சலியை பிருந்தா பார்க்க அவளோ, “ போதும் மிருகேன் . அடுத்த தடவை வரும்‌ போது மீதியை கேட்டுத் தெரிஞ்சிக்கோங்க. வெளியே பேஷண்ட்ஸ் வெயிட் பணணிட்டு இருக்காங்க. நாம உள்ள வந்து இருபத்தஞ்சு நிமிஷமாச்சு. போலாம் வாங்க…”என்று அவனை இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள் கீதாஞ்சலி.

“ ஒண்ணே ஒண்ணு மட்டும் கேட்டுக்குறேன் டி. அப்பறம் மறந்துடுவேன்…”என்றவனை முறைத்தவள் வம்படியாக இழுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

நாட்கள் அதன் போக்கில் சென்றது.

 ஒரு மாதம் விடுப்பு எடுத்திருந்தாள் கீதாஞ்சலி. அவளருகே இருந்து அவளை நன்றாக கவனித்துக் கொண்டான் மிருகேந்திரன்.

அன்றைய தினம் மருத்துவமனைக்கு ஸ்கேன் செய்ய செல்ல வேண்டும். 

நகத்தை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் கீதாஞ்சலி.

உள்ளறையிலிருந்து வந்த மிருகேன் பட்டென்று அவளது கையில் அடித்தான். 

“என்னப் பழக்கம் இது? எப்பப்‌பாரு நகத்தை கடிச்சிட்டே இருக்க? ஸ்கேன் எடுக்கப் போகணும் தானே? கிளம்பாம அப்படியே உக்காந்திருக்க?” என்றபடி  அவளருகே அமர்ந்தான்.

“இல்ல மிருகேன்…பிருந்தா கால் பண்ணியிருந்தா. இன்னைக்கு அவ ஹாஸ்பிட்டல்க்கு வர மாட்டாளாம் …அதனால நம்மளை சனிக்கிழமை வரச் சொல்லியிருக்கா..”என்றாள்.

“சனிக்கிழமை யா?” என்றபடி நெற்றியை நீவி விட்டுக் கொண்டான்.

ஏனெனில் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை மட்டுமே வஜ்ரவேலை சந்திக்க அனுமதியளித்திருந்தாள் (அவ்வாறு ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தாள்) கீதாஞ்சலி.

அவன்‌ யோசிப்பதைப் பார்த்தவள், ”என்ன யோசிக்கிறீங்க மிருகேன்?” என்றாள்.

“இல்ல கீது…அது வந்து வஜ்ரவேல் அய்யாவையும் சனிக்கிழமை செக்கப்பு க்கு கூட்டிட்டுப் போகணும்..அதான்…வேற ஒண்ணுமில்லை. சரி  எத்தனை மணிக்கு  ஸ்கேன் பண்ணி போகணும்னு சொல்லு…அங்க முடிச்சிட்டு உடனே நான் நேரா ஹாஸ்பிட்டலுக்கு வந்துடுறேன்…”என்றான்.

“பரவாயில்ல மிருகேன்…நீங்க உங்க வேலையைப் பாருங்க. நாளை கழிச்சு பிருந்தாவே இ்ங்க வந்து என்னைய பிக்கப் பண்ணிட்டு ஹோஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போயிடுவா? பதினோரு மணிக்கு தான் அப்பாயிண்ட்மெண்ட். . நான்‌ பாத்துக்குறேன் பா.” என்று அவனது கேசத்தை வருடிக்கொடுத்தாள்.

“இல்ல கீது. திங்கக்கிழமை வேணா அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுப் பாரேன். நானும் வர்றேன். இல்ல சனிக்கிழமை ஈவினிங் டைம்னாலும் கட  ஓகே தான். பட் நானும் உன் பக்கத்துல இருக்கணும்.” என்றான்.

“ப்ளீஸ்…!வேணாம் பா. நான் பார்த்துக்கறேன் . பிருந்தாவே இங்க வந்து என்னை பிக்கப் பண்ணிட்டு போயிடுவா. ஸ்கேன் எடுத்துட்டு நான்‌ வெயிட் பண்ணுறேன்.  நீங்க வேணா வந்து பிக்கப் பண்ணிக்கோங்க. அப்பறம் திங்கட்கிழமை ல இருந்து நான் ஜாப்க்கு போகலாம்னு நினைக்குறேன். பிருந்தா கிட்ட‌ கன்சல்ட் பண்ணிட்டு டிசைட் பண்ணிக்குறேன். இப்ப உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்குறேன் வந்து சாப்பிடுங்க…எனக்கும்‌ ரொம்பவே பசிக்குது பா.” என்றவள் அவன் ஏதோ பேச வர அவனை பேச விடாமல் அவனது கையைப் பிடித்தக்கொண்டு உணவு மேசைக்கு இழுத்துச் சென்றாள்.

மிருகேனுக்கு ஏனோ அவனைத் தனியே அனுப்ப‌ மனமில்லை. அதே சமயம்  வஜ்ரவேலின் மருத்துவ பரிசோதனையையும்  தவிர்க்க முடியாத சூழ்நிலை.

யோசனையுடன் நின்றிருந்தவனை தனது பேச்சுத் திறமையால் கிளம்ப வைத்திருந்தாள் கீதாஞ்சலி.

மனச்சஞ்சலத்துடன் கிளம்பிச் சென்றான் மிருகேன் .

அவன் சென்றவுடன் தொப்பென்று சோஃபாவில் அமர்ந்து தலையைப் பிடித்துக் கொண்டாள். தலை விண் விண்ணென்று வலித்தது. 

தலையை உலுக்கிக் கொண்டவள் பிருந்தாவை அழைத்து பேசினாள். 

சிறிது நேரத்தில் அவளும் தனது காரை எடுத்துக் கொண்டு அவளது வீட்டிற்கு வந்துவிட அவளிடம் சிறிது‌ நேரம் பேசிக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி. 

சனிக்கிழமை அன்று பிருந்தாவே நேரில் வந்து கீதாஞ்சலியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.

 வழியெங்கும்‌ கீதாஞ்சலியின் செவி கிழிந்து போகும் அளவிற்கு அறிவுரை கூறிக் கொண்டே வந்தாள் பிருந்தா. *ப்ளீஸ்… பிருந்தா போதும் நிறுத்து. எனக்கு என்ன பண்ணணும்னு தெரியும் . நான் பாத்துக்குறேன். நீ வேற எதையாவது பேசி என்னை டென்ஷன் பண்ணாத..” என்றவள் முகத்தை வெளிப்புறமாக திருப்பிக் கொண்டாள்.

மருத்துவ பரிசோதனை முடித்துக் கொண்டவன் வஜ்ரவேலை வீட்டில் விட்டுவிட்டு பிருந்தாவின் மருத்துவமனைக்கும் சென்றான் மிருகேன். பிருந்தாவோ கீதாஞ்சலி விரைவாகவே சென்று விட்டாள் என்று கூறினாள்.

வியர்க்க விறுவிறுக்க வீட்டினுள் நுழைந்தான் மிருகேன்.

கீதாஞ்சலியோ கால் மேல் கால் போட்டுக் கொண்டு எண்ணை பலகாரத்தை கொறித்துக் கொண்டிருந்தாள்.

“ ம்ம்ச்…எவ்வளவு சொன்னாலும் கேக்கவே மாட்டா…” என்று முணுமுணுத்தவன் வேகமாக அவளருகே சென்று அவளது கையிலிருந்து பஜ்ஜியை வெடுக்கென்று பிடுங்கினான்.

“ ம்ம்ச்….என்ன…” என்று கோபமாக எழுந்தவள் மிருகேனைக் கண்டு ஒரு கணம் நிதானித்தாள்.

“எவ்வளவு சொன்னாலும் கேக்கவே மாடாடியா? இந்த மாதிரி நேரத்துல இப்படி சாப்பிடக்கூடாதுன்னு உனக்குக் தெரியாதா? பழம், ட்ரை ப்ரூட்ஸ், எல்லாம் வாங்கி வச்சிருக்குல்ல… அப்பறம் எதுக்கு எப்ப பார்த்தாலும் இதையே அடிக்கடி சாப்பிடுற.. தயவு செஞ்சு இந்த ஒரு விஷயத்துலயாவது என் பேச்சைக் கேளு…. உடம்புக்கு இதெல்லாம் நல்லதில்லை கண்ணம்மா…உன்னோட ஹெல்த்தும் முக்கியம் வயித்துல வளர்ற குழந்தையோட ஆரோக்கியமும் முக்கியம் டா..” என்று அவளது முகத்தை தாங்கி நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.

சாப்பிட்டுக் கொண்டிருந்த பஜ்ஜி புரையேறி விட இருமல் வந்துவிட்டது. 

கண்கள் கலங்கி சிவந்தே விட்டது.

“ஹேய்….! பாத்து பாத்து…டி…அதுக்குத்தான் இதையெல்லாம் திங்காதன்னு சொல்றது…இப்பக்கூட ஒண்ணும் கெட்டுப் போகல கீது…உங்க அம்மா அப்பாவுக்கு இன்பாஃர்ம் பண்ணிடலாம். அவங்க என்னை தப்பா நினைச்சா கூட பரவாயில்லை ஆனா‌…நீ இப்படி ஏதாவது ஏடாகூடமா பண்ணி சிக்கலை இழுத்து விட்டுடாதே. அதை விட  உங்கம்மா உன் கூடவேயிருந்து உனக்கு ஹெல்த்தியா சமைச்சு கொடுத்து உன்னைப் பாத்துப்பாங்கல்ல..என்ன சொல்ற? நான் போய் அவங்க கிட்ட பேசிப் பாக்கவா?” என்றான் கண்களில் தவிப்புடன்….

இம்மாதிரியான சமயங்களில் அவள் ஆரோக்கியமாகவும்  நல்ல மனநிலையிலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். 

என்ன தான் தான் இருந்து அவளை கவனித்துக் கொண்டாலும் கூட தாயின் அரவணைப்பும் அக்கறையும் அவளுக்கு முக்கியம் என்று நினைத்தான்..

அவனது கேள்விக்கு பதலிளிக்காமல் அமர்ந்திருந்தாள்.

“ கீது…உன் கிட்ட தான் நான் சொல்லுறேன்….காதுல விழலையா?”

“ம்ம்ச்….எத்தனை தடவை இப்ப சொல்ல வேணாம்னு‌ சொல்றது மிரு…இந்த பேச்சை இத்தோட விட்டுடுங்க…”என்று எரிச்சலாக மொழிந்தவள் அவ்விடத்தை விட்டு எழுந்து சென்றாள்

“அப்படி என்ன தான் பிடிவாதமோ…? சொல்ற பேச்சை மட்டும் கேக்கவே மாட்டா…”என்று சலித்துக் கொண்டான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top