வேங்குழல் 34

யாதவ் புலம்பிக் கொண்டே போனை எடுக்க, வெகுநேரம் போன் இணைப்பு கிடைக்காததால் மறுமுனையில் போன் கட் செய்யப்பட்டது. “சாரி கால் யு மார்னிங்” என்று முரளியிடமிருந்து மெசேஜ் வர, “ப்பூ” என்று பெருமூச்சு விட்டான்.

 

“என்னாச்சு யாதவ், எடுத்து பேச வேண்டியது தானே” என்ற மனைவியை முறைத்தான். “இப்போ பேசினா மூட் ஸ்பாயில் பண்ணிடுவான்டி, என்ன ஏழரையை கூட்ட போறானோ தெரியல. நாளைக்கு பேசறதா மெசேஜ் பண்ணியிருக்கான், சோ காலையில் பாத்துக்கலாம் விடு” என்றவன் போனை வைத்து விட்டு, “என்ன ராதி எல்லாத்தையும் முதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று மனைவியை ஒரு மார்க்கமாக பார்க்க அவள் வெட்கத்தோடு இரு கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள்.

 

“என்னடி புதுசா வெட்கப்படுற, புல்லாங்குழல் வாசிச்சா போதும், அதை பிடுங்கிட்டு உன் லிப்ஸ் காட்டுவ, இன்னைக்கு என்னாச்சு” என்றான் சிரித்துக் கொண்டே.

 

“எல்லாம் மறந்துடுச்சு புதுசா ஸ்டார்ட் பண்ணலாம்னு சொன்னே. இதெல்லாம் எப்புடி நியாபகம் இருக்கு?” என்றாள் அவனை சந்தேகமாக பார்த்து.

 

“ஏய் ஒரு சிலது கனவு மாதிரி நியாபகம் இருக்குடி” என்றான் சமாளிப்பாக. “எனக்கு தெரியாதா உன் கள்ளத்தனம்?” என்று கண்களை உருட்டி பொய்யாக அவனை முறைத்து விட்டு திரும்பி படுத்து கொண்டாள். 

 

பெண்ணவளின் பின்னால் படர்ந்தவன், அவள் காது மடலில் மீசை உரச, இதழால் வருடினான். “ராதி வேங்குழலை ரொம்ப மிஸ் பண்றேன்டி. என்னவோ தோணும் போதெல்லாம் வாசிச்சுட்டு, அது இல்லாம கை உடைஞ்ச போல இருக்கு” என்றான்.

 

சட்டென அவன் புறம் திரும்பியவள், “இப்போ இப்படி சொன்னா எப்படி யாதவ்? கொடுத்திடலாம்னு நீ தானே முடிவெடுத்தே. மறுபடியும் போய் கேட்டா நல்லா இருக்காது. சோ அது இல்லாம இருக்க பழகிக்க” என்றாள்

 

“அது ரொம்ப கஷ்டம் ராதி” என்றான் பெருமூச்சுடன் 

 

“இப்போ என்ன பண்ண முடியும் யாதவ்?”

 

“எனக்கு வேங்குழல் வாசிக்க தோணும் போதெல்லாம் வேங்குழலி வேணும்” என்றபடி அவள் எதிர்பாராத நேரத்தில் அவள் இதழ்களை கவ்வி இருந்தான்.

 

ஒரு கணம் அதிர்ந்து விழித்தவள், தன்னை அவன் பக்கம் திரும்ப செய்வதற்கே இப்படி பேசி இருக்கிறான் என்று புரிய தன் இருகரங்களால் அவன் முதுகில் அடித்தாள். “திருடா திருடா” என்று அவள் அவன் இதழ்களுக்குள் முனக, அந்த கள்வனோ அவள் இதழில் தேன் திருடும் வண்டாகி போனான். அவன் முதுகை அடித்து கொண்டு இருந்த செந்தாழியின் கரங்கள் இப்போது தன்னவன் முதுகை வருடி கொடுத்து கொண்டிருந்தது. யாதவன் மெல்ல மெல்ல அவளுக்குள் மூழ்கி கொண்டிருந்தான். அதற்கு மேல் அவனும் பேசவில்லை அவளையும் பேச விடவில்லை. பெண்ணவளின் மொத்த உடலையும் வேங்குழலாக நினைத்து இதழ்களாலும் விரல்களாலும் இசை மீட்ட தொடங்கிவிட்டான். பெண்ணவளின் வளையல் ஓசையும் கால் கொலுசின் சிணுங்கல்களும் சிருங்கார கீதமாக அந்த அறையெங்கும் ஒலிக்க தொடங்கியது.

 

********

முரளி கிருஷ்ணா தன் தந்தையிடம் பேசியதையும், யாதவிடம் பேச முயற்சி செய்ததையும் பார்த்த அருவி, அவன் போனை வைத்து விட்டு திரும்பும் முன் அவன் பின்னால் நின்றபடி அவனை கட்டிக் கொண்டாள், “மாமா, நான் சொன்னதுக்காக ஒரே நாள்ல இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கீங்க, தேங்கஸ் மாமா” என்றாள் உணர்ச்சி மிகுந்த குரலில்

 

“வெறும் தேங்க்ஸ் மட்டும் தானா” என்றபடி தன் வயிற்றில் கரம் கோர்த்திருந்தவளை பிடித்து இழுத்து தன் முன்னால் நிற்க வைத்தான். வெட்கத்துடன் தலை கவிழ்ந்து “வேறென்ன வேணும்?” என்றாள் மெல்லிய குரலில்.

 

“என் செல்வி அம்மா என்கூட இல்லாத குறையை நீதான் தீர்க்கணும்” என்றவனை விழிவிரித்து பார்த்தாள். கணவனாக எதையோ கேட்க போகிறான் என்று அவள் நினைத்திருக்க, சிறுவனாக தாய்மையை அல்லவா கேட்கிறான்? மனம் நெகிழ்ந்தவளாக, “கண்டிப்பா உங்களுக்கு தாயா இருந்து பாத்துப்பேன் மாமா” என்றவளின் நெற்றியில் செல்லமாக முட்டியவன் “தாரமாவும் இருக்கணும், அது ரொம்ப முக்கியம் அருவி” என்று அவளை சிவக்க வைத்தான்.

 

நாணம் தாங்காமல் அவன் மார்பில் சாய்ந்தவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் முரளி கிருஷ்ணா

 

******

 

மறுநாள் காலை வெற்றியும் முரளியும் ஹாலில் சாப்பிட அமர, செல்வியும் அருவியும் அவர்களுக்கு உணவு பரிமாறினார்கள். சாப்பிட்டுக் கொண்டிருந்த முரளி, “வேலு மாமா, உங்க சின்ன மருமகனுக்கு போன் பண்ணி ஸ்பீக்கர்ல போடுங்க, நான் எல்லார்கிட்டயும் ஒரு விஷயம் சொல்லணும்” என்ற படி தன் போனை எடுத்து வேலுவிடம் கொடுத்தான்.

 

அனைவரும் கேள்வியாக அவனை பார்க்க அவன் கண்டுகொள்ளாமல் சாப்பிட்டு முடித்தான். வேலுவும் போன் செய்து “யாதவா” என்றுவிட்டு போனை சாப்பாட்டு மேஜையில் வைத்ததும், “சொல்லுங்க மாமா” என்று யாதவ்வின் குரல் கேட்டது.

 

அவர் பதில் சொல்லும் முன், முரளி கிருஷ்ணா பேச தொடங்கினான். “மாமா, நான் துவாரகாவுல தொல்லியல் ஆராய்ச்சி பண்றதா சொன்ன பிராஜெக்ட் அப்படியே பாதியில நிக்குது, அதனால நானும் அருவியும் குஜராத் போகலாம்னு இருக்கோம். அப்பாவால தனியா பிசினஸை பாத்துக்க முடியாது. அப்பாவுக்கு கண்டிப்பா ஓய்வு தேவை. அதனால யாதவ் இங்கே வந்து பிசினசையும் அப்பா அம்மாவையும் பாத்துக்கிட்டா நான் நிம்மதியா என்னோட ஆராய்ச்சியை கன்டினியூ பண்ணுவேன்” என்றான்.

 

“மாமா எப்பவும் அவரோட நிம்மதி தான் முக்கியமா? மத்தவங்களை பத்தி கவல படமாட்டாராமா? நான் மில்க் பிராடெக்ட் எக்ஸ்போர்ட் பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன். என்னால அங்கெல்லாம் வர முடியாது, என்னோட பிசினசை பார்த்துக்கவே எனக்கு டைம் போதாது. யாரும் எனக்கு ஆர்டர் போட தேவையில்லனு சொல்லுங்க மாமா” என்று எகிறினான் யாதவ்

 

“நான் யாருக்கும் ஆர்டர் எல்லாம் போடல, மில்க் பிராடெக்ட் பிசினசை எங்கே இருந்தாலும் செய்யலாம். ஆனா என்னோட ஆராய்ச்சிக்கு நான் துவாரகா போய் தான் ஆகணும். என்னோட முடிவை சொல்லிட்டேன். நாளைக்கே நான் டெல்லி போய் ஆபிசில் ஜாய்ன் பண்ண போறேன். அப்பா அம்மா மேல உண்மையாவே அக்கறையும் பாசமும் இருந்தா வந்து பாத்துக்க சொல்லுங்க, இல்லனா அங்கேயே இருக்கட்டும், எனக்கு பிரச்சனை இல்ல” என்றபடி இருக்கையிலிருந்து எழுந்தான்.

 

“ஏன் அந்த பாசம் அவருக்கு இல்லையாமா?” என்றான் யாதவ் எள்ளலாக

 

“இல்லைனே வச்சுக்க சொல்லுங்க” என்றவன் மனைவியிடம் திரும்பி, “என்ன பாத்துட்டு இருக்கே, வா எல்லாத்தையும் இன்னைக்கே பேக் பண்ணனும்” என்றான் அருவியை பார்த்து.

 

யாதவ் பற்களை கடித்தான், “இன்னும் இந்த திமிர் மட்டும் இவனை விட்டு போகலயே மாமா?” என்றான் ஆத்திரமாக

 

“யாதவ் உங்க இரண்டு பேருக்குள்ள இருக்கற சண்டையால செல்வியும் வெற்றி ஐயாவும் தான் பாதிக்கப்படுவாங்க. இரண்டு புள்ளைங்க இருந்தும் வயசான காலத்துல அவங்களை தனியா விட்டா நல்லாவா இருக்கும்? நீயாவாது வீம்பு பண்ணாம ஊருக்கு வந்து சேருய்யா” என்றார் வேலு ஆற்றாமையுடன்.

 

“அவன் கிளம்பினதும் சொல்லுங்க, வர்றேன்” என்று போனை வைத்துவிட்டான் யாதவ் கிருஷ்ணா.

 

செல்வி கண்களில் கண்ணீருடன் கணவரை பார்க்க, “அழாதே செல்வி, முரளி வேலையா தானே போறான், போகட்டும். யாதவ் தான் நம்மோட இருக்கறதுக்கு சம்மதிச்சுட்டானே. உனக்கு முரளியை பாக்கணும்னா யாதவ்கிட்ட தயங்காம சொல்லிட்டு போய் பார்த்துட்டு வரலாம். யாதவ் நம்மளை புரிஞ்சுப்பான்” என்றார் கனிவான குரலில்.

 

முந்தைய நாள் இரவே முரளிகிருஷ்ணா தன் முடிவை வெற்றியிடம் சொல்லி இருந்ததால் அவர் மனைவியை சமாதானம் செய்துக் கொண்டிருந்தார்.

 

இந்த பக்கம் யாதவ் கடுப்புடன் இருந்தான். “யாதவ் டோன்ட் கெட் ஆங்கிரி. எப்படினாலும் நாம தமிழ்நாடு போறதா தானே பிளான். என்ன மதுரைக்கு போகலாம்னு இருந்தோம். இப்போ சென்னைக்கு போக போறோம். சோ கூல்” என்றாள் அவன் தோளை தட்டி

 

“இல்ல ராதி, இன்னமும் அவன் நினைக்கிறத தான் என்னைய செய்ய வைக்கிறான், அதான் எரிச்சலா இருக்கு” என்றான் யாதவ் கோபம் தணியாமல்.

 

“எனக்கு என்ன தோணுதுன்னா, இதுவும் அவரோட பிளானா இருக்க சான்ஸ் இருக்கு. அதாவது உங்களை அப்பா அம்மாவோட சேர்த்து வைக்கணும்ங்கிறது தான் அது. அவரோட குணத்துக்கு அதை தன்மையா சொன்னா செட் ஆகாது, அப்படியே பொறுமையா சொன்னாலும் நீங்க கேட்க மாட்டீங்க, அதான் இப்படி பேசறார்னு நினைக்கறேன்” என்றாள் யோசனையாக

 

“ராதி உண்மையாவே நீ பிரில்லியண்ட் தான்டி, எனக்கும் அப்படி தான் தோணுது. ஆனா இவன் சொல்லி நாம செய்யணுமானு தான் கடுப்பா இருக்கு” என்றான் மனதை மறைக்காமல்

 

“யாதவ், அவரை விடுங்க. நீங்க உங்க அப்பாவை எவ்வளவு மிஸ் பண்ணி இருப்பீங்க, அவரும் உங்களை மிஸ் பண்ணியிருப்பாரு தானே. நாம போய் அவங்களோடவே இருக்கலாம்”

 

“ராதி உன்னோட வேலையும் துவாரகால தானேடி, அதுக்கு தான் யோசிக்கிறேன்”

 

“பரவால்ல, நான் யஷ்வந்த் சார் கிட்ட பேசி என்னோட ஆராய்ச்சியை கீழடியில மாத்திக்கறேன். அங்கேயும் சிந்து சமவெளி நாகரீகத்தை விட பழமையான பொருட்கள் கிடைக்கிறதா கேள்விப்பட்டேன். எனக்கு அங்கே போகவும் விருப்பம் தான். வீக் எண்ட்ல சென்னை வந்திடுறேன். நீங்க உங்களோட மில்க் பிராடெக்ட்ஸ் அன்ட் மாமாவோட பிசினசையும் சேர்த்து பாத்ததுக்கோங்க”

 

“எல்லாம் ஓகே தான், ஆனா வீக்லி ஒன் டைம் தான் என்னோட வேங்குழலியை வாசிக்க முடியுமா?” என்றான் பாவமாக

 

“உங்களுக்கு எப்போ வேணும்னு தோணுது, அப்போ எல்லாம் வேங்குழலி உங்களோட தான் இருப்பா” என்றாள் அவன் தோள்களில் தன் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டு

 

“அப்படியா, இப்போ வாசிக்கலாமா?” என்றபடி அவள் இதழ்களை சிறைப்பிடித்தான்.

 

*******

 

முரளிகிருஷ்ணாவும் அருவியும் பெற்றவர்களிடமும் வேலுவிடமும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு கிளம்ப தயாராகினர்.

 

“வேலு, நீயும் முரளிகிருஷ்ணா அருவியோட கிளம்பு” என்றார் வெற்றி

 

“நான் எதுக்கு ஐயா, சின்னஞ்சிறுசுங்களுக்கு இடையில” என்று மறுத்தார் வேலு

 

“இல்ல வேலு, உன்னோட வாழ்க்கை மொத்தம் எங்களோட சந்தோஷத்துக்காகவே போயிடுச்சு. அருவி கூட இருந்தா உனக்கு உன்னோட சொந்த பொண்ணு கூட இருக்கறது போல பீல் ஆகும், அதே சமயம் மொழி தெரியாத ஊருல முரளி ஆராய்ச்சினு போய்ட்டா அருவிக்கு துணையா ஒரு ஆள் வேணும், அதனால தான் சொல்றேன், நீயும் அவங்களோட கிளம்பு” என்று வெற்றிவேந்தன் தீர்மானமாக சொல்லவும் வேலு தயக்கத்துடன் முரளியை பார்த்தான்.

 

“மாமா ஆக்சுவலா எனக்கும் இதே எண்ணம் தான் இருந்தது. நீங்க அப்பா கூட தான் இருக்கணும்னு விரும்புவீங்க, உங்களை கூப்பிட்டா வர்றதுக்கு சங்கடப்படுவீங்கனு தான் நான் உங்களை கூப்பிடல. அருவிக்கு சின்ன வயசுல இருந்து அப்பா பாசம் கிடைக்கலனு ரொம்ப வருத்தப்பட்டா. நீங்க வந்தா அவளுக்கும் சந்தோஷமா இருக்கும், எங்களோடவே வந்திடுங்க மாமா. நாம அடிக்கடி சென்னைக்கு வரலாம், என்னால வரமுடியாத சமயத்துல நீங்க அருவியை அழைச்சிட்டு இங்கே வந்து தங்கிட்டு வாங்க” என்றான், கணவனை தொடர்ந்து அருவியும், “அப்பா நீங்க வந்தா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும், வாங்கப்பா” என்றாள் கண்கலங்க. அதற்கு மேல் யோசிக்காமல் வேலு அவர்களுடன் கிளம்ப தயாரானார்.

 

செல்வி கண்ணீருடன் நிற்பதை பார்த்த முரளி அவர் அருகில் சென்று அவர் தோளை அணைத்தபடி, “செல்விம்மா, நான் வேலைக்காக தான் வடக்கு பக்கம் போறேனே தவிர மொத்தமா இந்த வீட்டை விட்டு போகல. கண்டிப்பா அடிக்கடி வருவேன், நீங்களும் வாங்க, அங்கே இருக்கிற கோயிலுக்கெல்லாம் உங்களை கூட்டிட்டு போறேன். யாதவ் அப்பா கூட இருக்கணும்னு தாம்மா கிளம்பறேன், எங்க இரண்டு பேருக்கும் இடையில மனக்கசப்பு எல்லாம் இல்ல, தயக்கம் மட்டும் தான் இருக்கு. சீக்கிரம் அதுவும் சரியாயிடும்” என்று அவர் உச்சந்தலையில் முத்தமிட்டான்.

 

செல்வி மகனை கட்டிக் கொண்டு கதறி அழுதுவிட்டார், “நீங்க இரண்டு பேரும் ஒண்ணா சேர்ந்துட்டா எனக்கு அதுவே போதும். கிருஷ்ணன் கிட்ட வேண்டியிருக்கேன். வர்ற போற கிருஷ்ண ஜெயந்திக்குள்ள நீங்க சேர்ந்துடுவீங்க, எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று அழுதவரை சமாதானம் செய்து விட்டு, “அவ்வளவு தான் எல்லாம் கிருஷ்ணார்ப்பனம்னு இருங்க, நல்லதே நடக்கும்” என்று விட்டு வேலுவையும் அழைத்துக் கொண்டு சென்னை விமான நிலையம் சென்றான்.

 

அவர்கள் டெல்லிக்கு போக விமானம் ஏறியதும், யாதவ் கிருஷ்ணா செந்தாழினி இருவரும் டெல்லியில் இருந்து சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கினார்கள். மகனையும் மருமகளையும் அழைத்துக் கொண்டு வெற்றி தன் வீட்டிற்கு சென்றார்.

 

யாதவ் வெற்றியிடம் நிறைய நேரம் செலவழித்து, அவருடைய தொழில்களை பற்றி கற்றுக் கொண்டான். வெற்றிக்கு யாதவனை பார்க்கும் போது பெருமையாக தோன்றியது, காரணம் அவனுக்கும் அவரை போலவே தொழிலதிபதராக வேண்டும் என்ற வேட்கை இருந்தது. தனக்கு இணையான துணை கிடைத்துவிட்டதில் வெற்றியும் யாதவனும் நேரம் காலம் மறந்து தங்களுக்குள் பேசி மகிழ்ந்தனர்.

 

*******

 

சில மாதங்களுக்கு பிறகு,

 

முரளி கிருஷ்ணா தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டு காரில் தனக்கு கொடுக்கப்பட்ட குவாட்டர்சிற்குள்  நுழைந்தான். வேலு தான் இரவு உணவுக்காக சமையல் செய்து கொண்டிருந்தார். 

 

“மாமா நீங்க ஏன் சமைச்சிட்டு இருக்கீங்க? அருவி என்ன பண்றா?” என்றபடி உள்ளே வந்தான் முரளி கிருஷ்ணா

 

“என்னவோ தலை சுத்துதுனு படுத்திருக்காப்பா, ஹாஸ்பிட்டல் போகலாம்னு சொன்னா அதெல்லாம் வேணாம் கொஞ்ச நேரம் படுக்கறேன்னுட்டா, அதான் நானே சமைச்சிட்டு இருக்கேன்” என்றார் வேலு.

 

மனைவிக்கு என்ன ஆச்சோ என்று பதட்டதுடன் உள்ள வந்தவன், அவள் பென்சிலின் முனையை கடித்து தின்று கொண்டிருப்பதை பார்த்து அதை அவசரமாக பிடுங்கி எறிந்தான், “ஏன்டி உனக்கு தின்றதுக்கு பென்சில் தான் கிடைச்சதா? ஏதாவது வேணும்னா என்கிட்ட சொல்ல வேண்டியது தானே? சின்ன புள்ள மாதிரி பென்சில்ல  தின்னுட்டு இருக்க? தலைசுத்துதுனு பொய் சொல்லி மறைஞ்சுனு தின்றியா?” என்று அதட்டினான்.

 

“இல்ல மாமா உண்மையாவே தலைசுத்தறமாதிரி தான் இருந்துச்சு, இப்போ தான் எதாவது தின்னனும் போல இருந்துச்சு. அதுக்கு தான் நீங்க சார்ட் வரைய வச்சிருந்த பென்சிலை எடுத்து தின்னேன்” என்றாள் மாட்டிக் கொண்ட சிறு பெண்போல

 

“அதுக்கு பென்சிலை தின்னுவியா நீ? சரி சாப்பிடறதுக்கு என்ன வேணும்னு சொல்லு, நான் போய் இப்பவே வாங்கிட்டு வரேன்”

 

“எனக்கு எதுவும் சாப்பிட புடிக்கல, இன்னும் இரண்டு பென்சில் வாங்கி தர்றீங்களா?” என்றவளை முறைத்தான். “இதெல்லாம் சாப்பிட தோணுதுனா எதாவது விட்டமின் குறைபாடா இருக்கும் கிளம்பு, ஹாஸ்பிட்டல் போகலாம்” என்று அவளை விடாப்பிடியாக அழைத்து சென்றான்.

 

மருத்துவர் அருவியை செக் செய்துவிட்டு, “கன்கிராட்ஸ் முரளி, நீங்க அப்பாவாக போறீங்க” என்றார். சந்தோஷத்தில் பேச்சற்று போனவன் எதுவும் பேசாமல் தன் பேக்கட்டில் இருந்த மொத்த பணத்தையும் எடுத்து டேபிள் மீது வைத்து விட்டு, மனைவியை அலேக்காக தூக்கிக் கொண்டு காரில் ஏற்றினான்.

 

வீட்டிற்கு வந்ததும் வேலுவிடம் விஷயத்தை சொல்ல அவர் சந்தோஷத்தில் கூப்பாடு போடாத குறையாக போன் செய்து வெற்றிக்கும் செல்விக்கும் விஷயத்தை கூறினார். “முரளி, அருவி மாசமா இருக்கும் போது அவளுக்கு பிடிச்சதை எல்லாம் செஞ்சு போடணும், அவளை இங்கே கொண்டு வந்து விடுப்பா. வேலு மாமாவுக்கு இதை பத்தி எல்லாம் விவரம் பத்தாது. நான் வரலாம்னு பாத்தா சின்ன மருமகளால வீட்டை பாத்துக்க முடியாது. பாவம் அவளும் உன்னை மாதிரியே ஆராய்ச்சினு வீட்டுக்கும் கீழடிக்கும் அலையறா. அதனால அருவியை கூட்டிட்டு வந்து விட்டுட்டு போப்பா” என்றார் செல்வி முரளியிடம்.

 

அவனுக்கும் அதுவே சரி என்று தோன்ற, “அருவி, எனக்கு இரண்டு நாள் சேர்ந்தாப்புல லீவு வந்தா கட்டாயம் சென்னைக்கு வரேன். நீ அம்மா கூட இருக்கறீயா?” என்று கேட்டான்.

 

“இல்ல மாமா, எனக்கு அஞ்சாம் மாசம் வரும் போது போகலாம். இப்போ நானே சமாளிச்சிக்கறேன். அதான் வேலுப்பா இருக்கார் இல்ல”

 

“அதென்னடி அஞ்சாம் மாசம் கணக்கு?” என்றான் புருவம் உயர்த்தி

 

“அஞ்சாம் மாசம் வளைகாப்பு பண்ணுவாங்க, அதுமட்டுமில்லாம அப்போ தான் பொங்கல் வருது, எங்க ஊர்ல ஜல்லிக்கட்டு வைப்பாங்க, அப்படியே அதையும் பாக்கலாம் இல்ல?” என்றாள் கண்களில் ஆசை மின்ன

 

“ஏன் அருவி, அதென்ன கிரிக்கெட் மாதிரி அவ்வளவு இன்ட்ஸ்ரட்டாவா இருக்கும்? அடிபடுமே, அதுவா உனக்கு புடிக்கும்?”

 

“என்னங்க இப்படி சொல்லிட்டீங்க, அந்த காலத்துல எல்லாம் மாட்டை அடக்கறவனுக்கு தான் பொண்ணே கொடுப்பாங்க, அது ஒரு வீர விளையாட்டுங்க, எனக்கு ரொம்ப புடிக்கும். வருஷா வருஷம் நம்ம யாதவ் தான் கலந்துகிட்டு, முதல் பரிசை வாங்குவான். அது ஓடுற வேகத்துக்கு யாதவ் ஓடி, அதுக்கு முன்னாடி போய் நிக்கறத பாக்கணுமே நீங்க? அப்படி இருக்கும், விசிலடிக்க வராத எனக்கே விசிலடிக்க தோணும்” என்றாள் அருவி, அந்த காட்சியில் மனம் லயித்தவளாக.

 

மனைவியை ஆச்சரியத்துடனும் ரசனையுடனும் பார்த்தவன், “சரி அருவி, நாம ஜல்லிக்கட்டு அப்போ நேரா அலங்காநல்லூர் போய்ட்டு, அப்புறமா சென்னைக்கு போய் உன்னோட சீமந்ததை முடிச்சிடலாம். நான் அப்பா அம்மாவுக்கு சொல்லிடுறேன்” என்றான்.

 

அதற்குபின் மனைவியை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டான். வேலுவுக்கோ முரளியை நினைத்து வியப்பாக இருந்தது, “எப்படி இருந்தவரு, இப்போ பொட்டி பாம்பா கிடக்கறாரே, அருவி கொடுத்து வச்சவ” என்று நினைத்துக் கொண்டு அங்கே முரளி அருவியை பார்த்துக் கொள்ளும் விதத்தை செல்விக்கு போன் செய்து சொல்வார். “சரிண்ணா, அப்போ அவங்க தை மாசமே வரட்டும்” என்று விட்டார்.

 

வீட்டிற்கு வந்த யாதவனிடம் விஷயத்தை சொன்னவர், “யாதவா நம்ம செந்தாழினியும் கர்ப்பமாயிட்டா சந்தோஷப்படுவேன்” என்றவரை முறைத்தான்.

 

“அம்மா நீயும் சராசரி மாமியார் போல ஆரம்பிக்காதே. ஒரு மருமக மசக்கை ஆயிட்டா, இன்னொருத்தியையும் டார்ச்சர் பண்ணனுமா? ராதிக்கு ஏற்கனவே அலைச்சல் அதிகம். இப்போ குழந்தையை பத்தி எல்லாம் யோசிக்க முடியாது. இதைப்பத்தி எல்லாம் அவகிட்ட கேட்டு வைக்காதே” என்று சொல்லிவிட்டு சென்றான். கணவனின் பேச்சை கேட்ட ராதிக்கு மிகவும் கர்வமாக இருந்தது. ஆனாலும் போய் கொண்டிருக்கும் பிராஜெக்டை முடித்துவிட்டு இதைப்பற்றி யோசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

 

*******

 

அன்று தை மாதம், மாட்டு பொங்கல்

 

யாதவ் கிருஷ்ணா, “ராதி எந்த வேலை இருந்தாலும் லீவு போட்டுட்டு வா, நாம அலங்காநல்லூர் கிளம்பணும்” என்று சொல்லி மனைவியையும் பெற்றோரையும் அழைத்துக் கொண்டு அலங்காநல்லூர் சென்றான். 

 

முரளி ஏற்கனவே நேரடியாக மதுரைக்கு பிளைட்டில் வந்து அலங்காநல்லூர் வந்து விடுவதாக கூறியிருந்தான். அனைவரும் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு ஒரே நேரத்தில் போய் சேர்ந்தனர்.

 

யாதவ் கையில்லாத பனியனை போட்டுக் கொண்டு, வேஷ்டியை இருகால்களுக்கு இடையே இறுக்கமாக சுற்றிக் கொண்டு வாடிவாசலை நோக்கி ஓடினான். வெற்றிவேந்தன், செல்வி, செந்தாழினி, அருவி நால்வரும் சேரில் அமர்ந்திருக்க, அவர்களின் இருபுறமும் முரளிகிருஷ்ணாவும் வேலுவும் அரணாக நின்றிருந்தனர்.

 

வெளியூர் முரட்டுக்காளை ஒன்று களத்தில் இறக்கப்பட்டது. “இதுவரைக்கும் இந்த காளையை யாராலும் அடக்க முடியல, முதன் முதலாக நம்ம அலங்காநல்லூர் களத்துல தரை இறங்கி இருக்கு, யாரால அடக்க முடியுதுனு பாப்போம்” என்றபடி காளையை வாடிவாசலின் வழியாக அனுப்பினார்கள். யாதவனுக்கு முன்னால் பல வீரர்கள் அந்த காளையை அடக்க முயன்று தோற்றனர். கடைசியாக யாதவ் திடலுக்குள் சென்று கீழே இருந்த மணலை எடுத்து இரு கைகளில் தேய்த்துக் கொண்டான். அந்த காளை ஓடும் வேகத்துக்கு பக்கவாட்டாக ஓடியவன், பின்பு வேகத்தை மேலும் அதிகப்படுத்தினான். காளையை விட பத்து அடிக்கும் மேல் முன்னால் சென்றபின், பாதையை மாற்றி அதன் எதிரில் குதித்துக் கொண்டு நின்றான்.

 

மாடு தன் கூரிய கொம்பால் அவன் வயிற்றை கிழிப்பது போல சீறிக் கொண்டு வர, முரளி பதைபதைத்து விட்டான். “அய்யோ அவனுக்கு எதாவது ஆகிடப்போது, முதல்ல நிறுத்துங்க” என்று கத்தினான். அருவி கணவனின் கரத்தை அழுத்தி, “மாமா யாதவ் இதை விட முரட்டு காளையெல்லாம் அடக்கி இருக்கான். டென்ஷனாகாம நடக்கறதை மட்டும் பாருங்க” என்று கூலாக சொன்னாள்.

 

செந்தாழினிக்கும் இது தான் முதல் முறை என்பதால் அடிவயிற்றில் ஏதோ சில்லிட மருண்ட விழிகளுடன் மாமியாரை பார்த்தாள், “அத்தை என் புருஷனை வர சொல்லுங்க, எனக்கு பயமா இருக்கு” என்றாள்.

 

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது ஆத்தா, உன் புருஷனோட வீரம் என்னனு பாத்து தெரிஞ்சுக்க” என்றார் செல்வி. அன்னையே பயப்படாமல் அமர்ந்திருக்கும் தோரணையை பார்த்து, அருவியை பார்த்தாள். “ராதி, யாதவ் ஜெயிச்சிட்டு தான் வரும், அதை பாக்க தானே நான் ஆசையோட வந்திருக்கேன். நீ பாரு, அது தான் கப்பு ஜெயிக்கும், என்னா எல்லா பொண்ணுங்களும் மாலையோட அத துரத்துவாங்க. அதை பாக்கறதுக்கு தான் நீ உன் மனசை தேத்திக்கணும்” என்று சிரித்தாள் அருவி.

 

“வயித்துல புள்ளைய வச்சிட்டு ஜல்லிக்கட்டு பாக்கறதுமில்லாம எனக்கே அட்வைஸ் பண்றே, ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் தான் அருவி” என்றாள் செந்தாழினி

 

“என் மூத்த மருமவ அருவி தைரியசாலி, இரண்டாவது மருமவ செந்தாழினி புத்திசாலி” என்றார் வெற்றி பெருமையுடன் மீசையை முறுக்கி கொண்டே

 

அதே நேரம் யாதவ் அந்த முரட்டுக் காளையின் கொம்பை இருகரங்களால் பற்றி தன் முழுபலத்தை திரட்டி அதை நிறுத்த முயன்றான். அது தலையை வேகமாக சுழற்றி அவனை விட்டு விலகி ஓட பார்க்க, பாய்ந்து சென்று அதன் திமிலை பிடித்தபடி ஓடினான். அவன் அதன் திமிலில் தன் இறுக்கத்தை அதிகரிக்க அதிகரிக்க, அது வலி தாங்காமல் தன் ஓட்டத்தை தளர்த்தியது. பின்பு அதன் நிலையை உணர்ந்த யாதவ் தன் பிடியை மெதுவாக தளர்த்தி அதன் முதுகில் வருடி விட்டான். அவ்வளவு தான் அமைதியாக நின்றுவிட்டது. யாதவ் அதன் நெற்றியில் முத்தமிட, மொத்த கூட்டமும் ஆரவாரத்துடன் கூச்சலிட்டனர்.

 

எல்லா பெண்களும் வழக்கம் போல மாலையுடன் ஓடி வர, அவன் மனைவியை பார்த்தான். அவளோ முறைப்பது போல தோன்றவும், அந்த வாடிவாசல் முழுவதும் அவர்கள் கைகளில் சிக்காமல் ஓடினான், “அடியே எனக்கு கல்யாணம் ஆகிருச்சுடி, என்னைய ஆளை விடுங்க”

 

“ஆனா என்ன யாதவா, பரவாயில்லை எங்களையும் கட்டிக்க” என்று அவர்கள் துரத்த அவனோ மனைவியின் பின்னால் வந்து நின்றுக் கொண்டான். செந்தாழினியின் முகம் செங்கொழுந்தாய் மாறி அந்த பெண்களை முறைக்க, அவளிடமே அந்த மாலைகளை கொடுத்து விட்டு, “எங்க சார்பா நீங்களே அவருக்கு போட்டுங்க கா” என்று விட்டு தப்பித்து ஓடி விட்டனர்.

 

யாதவ் தலை குனிந்து மாலையை வாங்க எத்தனிக்க, செந்தாழினி அவன் தலைமுடியை பிடித்து ஆட்டினாள். “அவளுங்க சார்பா நான் இந்த மாலையை போடணுமா? முடியாது, வேணும்னா நான் கொண்டு வந்திருக்கிற மாலையை போடறேன்” என்று விட்டு தன்னுடைய பேகிலிருந்த சந்தன மாலையை எடுத்து கணவனுக்கு அணிவித்தாள்.

 

முரளி கிருஷ்ணா இதையெல்லாம் சிரித்துக் கொண்டே பார்த்து விட்டு, அருவியை கவனித்தான். அருவி ஒரு வித சந்தோஷத்துடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தான். அதே நேரம், வாடிவாசலில் மறுஒளிபரப்பு செய்யப்பட்டது. “இப்போ நம்ம ஊர் முரட்டு காளை முத்துகருப்பன் களம் இறங்க போகுது, யாரெல்லாம் அதை அடக்க தயாரா இருக்கீங்க?” என்ற குரல் வர, முத்துகருப்பனும் வாடிவாசல் வழியே உறுமிக்கொண்டு சிங்கமென கர்ஜித்தது.

 

“அருவி, உங்க பெரியப்பா முத்துகருப்பனை ரொம்ப முரடனா மாத்திட்டு இருக்காரு போல, வெறித்தனமா நிக்கிறானே” என்றான் யாதவ்.

 

“ஆமா யாதவ், இந்த சுத்துப்பட்டு கிராமத்துல யாராலயும் அடக்க முடியாதபடி கருப்பனை வளக்க போறேன்னு  பெரியப்பா ஏற்கனவே சொல்லிச்சு” என்றாள் அருவி குஷியாக.

 

“அப்படியா? இதோ நான் மறுபடியும் களம் இறங்கி அடக்கி காட்டட்டா” என்றான் யாதவ்

 

“ஐயே, நீ வளர்த்த மாடை உன்னையவே அடக்க விடுவாங்களா? முத்துகருப்பன் என்ன தான் முரடனா இருந்தாலும், உன்னை பாத்ததும் பொட்டி பாம்பா அடங்கிடுவான்னு இந்த ஊருக்கே தெரியும், அதனால உன்னை உள்ளாற விட மாட்டாங்க” என்றாள் அருவி

 

“இப்போ யார் அவனை அடக்க போறாங்க தெரியலயே” என்றபடி மைதானத்தை பார்த்தான். அது உறுமிக் கொண்டு நிற்கும் தோரணையை பார்க்கும் போதே அனைவருக்கும் கிலி பிடித்துக் கொள்ள, யாருமே வாடிவாசல் வழியாக செல்லவில்லை.

 

“என்னடா இது நம்ம ஊருக்கு வந்த சோதனை, நம்ம ஊரு மாட்டை அடக்க உள்ளூர்லயே ஆள் இல்லயா? அட வெளியூர்ல கூட யாருமே ஆம்பளைங்க இல்லயா?” என்று மைக்கில் யாரோ கிண்டல் அடிக்க, முரளி சற்றும் யோசிக்காமல் தடுப்பு பலகையை மீறி எகிறி மைதானத்திற்குள் குதித்தான்.

 

சிரித்துக் கொண்டு இருந்த அருவி, முரளியின் இந்த செய்கையை பார்த்து கத்தி விட்டாள், “அய்யோ மாமா, நீங்க எதுக்கு உள்ளார குதிச்சீங்க, முதல்ல வெளியே வாங்க” அரற்றினாள்.

 

ஆழம் தெரியாமல் காலை விட்ட மாதிரி இந்த முரளி வாடிவாசலுக்குள் இறங்கியது யாதவ் உட்பட அனைவருக்குமே கிலியை கொடுத்தது

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top