விண்கல்லால் எந்த பிரச்சனையும் இல்லை என்ற செய்தி கேட்டதும் தான் முரளியும் அவன் குடும்பத்தாரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
“ஐயா இனி மேலாவது நம்ம இரண்டு புள்ளைங்க, யாதவ்வும் முரளியும் ஒரே வீட்டில் ஒண்ணா இருப்பாங்களா?” என்றார் செல்வி கணவரிடம்
“தெரியல செல்வி, நீ அவங்க ஒண்ணா இருக்கறத பத்தி கவல படறே, நான் அவங்க சண்ட போடாம இருந்தா அதுவே போதும்னு நினைக்கறேன். எனக்கு தெரிஞ்சு யாதவ் திரும்பி வந்தாலும் நிச்சயமா சென்னைக்கு வரமாட்டான். என்னதான் அவங்க பெருந்தன்மையோட முரளியை மன்னிச்சாலும், அதோட வடு லேசா ஒரு ஓரத்துல இருக்க தானே செய்யும், அத்தோடு முரளி மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுவானோனு நாமளுமே பயத்தோடு தான் இருக்கணும், இரண்டு பேருக்கும் எதாவது சண்டை முட்டிக்கிச்சினா என்ன பண்றது சொல்லு? இனி அவங்க ஒரே வீட்ல வாழறதுங்கிறது நடக்காத காரியம்” என்றார் பெருமூச்சோடு
இரவு சமையலை செய்துக் கொண்டிருந்த அருவியின் செவியில் அவர்கள் பேச்சு விழுந்தது.
கணவர் சமாதானம் செய்திருந்தும் செல்விக்கு இருதலைக் கொள்ளியின் நிலைதான். யாதவனை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அதே சமயம் முரளியையும் அவரால் இழக்க முடியாது. சாப்பிட உட்கார்ந்த முரளியிடம் இதை பற்றி பேசலாமா என்று நினைத்து அவன் அருகில் சென்று அமர்ந்தார். செல்வியை கண்டதும் முரளி, “அம்மா வாங்க, நானே பரிமாறேன்” என்று பார்த்து பார்த்து அனைத்தையும் தட்டில் எடுத்து வைத்து அன்னையை சாப்பிட வைத்தான்.
மனைவியிடம் திரும்பி பெருமையாக, “செல்வி அம்மாவுக்கு என்னை தான் ரொம்ப பிடிக்கும் தெரியுமா அருவி? நான் எவ்வளவு பெரியவனா ஆனாலும் எனக்கு ஊட்டி விடுவாங்க. ஆனா யாதவ் பிறந்த பின்னாடி தான் அவங்களால எனக்கு ஊட்டி விட முடியல, எனக்கு ஊட்டுற நேரத்துல தான் கரெக்டா அழுவான்” என்றவன் குரல் லேசாக தான் செய்த தவறை எண்ணி தழுதழுக்கவும், அது அவர்களுக்கு வேறுவிதமாக பட்டது. செல்வி மகனிடம் பேசும் எண்ணத்தை அப்போதே கைவிட்டார். கணவரை திரும்பி பார்க்க, ‘நான் தான் அப்பவே சொன்னேன் கேட்டியா’ என்பதாய் இருந்தது வெற்றியின் பார்வை.
சாப்பிட்டு முடித்ததும், செல்வியின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான். வாய்ப்பு கிடைத்தும் செல்வியால் யாதவ்வை பற்றி கேட்க மனம் வரவில்லை. அமைதியாக முரளியின் தலையை கோதியபடி, அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். முரளி அன்னையின் மடியில் படுத்துக் கொண்டு, “அருவி” என்று குரல் கொடுத்தான்.
கணவன் குரல் கேட்டதும் “சொல்லுங்க மாமா” என்று ஆவலுடன் வந்து அவனை விழுந்து விழுந்து உபசரிப்பவள், இப்போது நிதானமாக வந்து நின்று, கணவனை ஆழ்ந்து பார்த்து விட்டு “நான் போய் தூங்கறேன்” என்று பொதுவாக சொல்லிவிட்டு அறைக்குள் சென்று விட்டாள். முரளி கிருஷ்ணா புருவ முடிச்சுடன் ‘என்னாச்சு இவளுக்கு?’ என்று நினைத்தவன், “இரு மா வந்திடுறேன்” என்று சொல்லிவிட்டு மனைவியின் பின்னாலேயே அறைக்குள் சென்றான்.
“அருவி” அவளிடம் பதில் இல்லை, அமைதியாக படுக்கையில் இருந்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.
“என்னாச்சுடி, நல்லா தானே இருந்தே, ஏன் திடீர்னு முகம் டல்லாயிடுச்சு?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல, நல்லா தான் இருக்கேன்” என்றபடி தன் வேலையை தொடர்ந்தாள். அவள் கையில் இருந்த துணியை பிடுங்கி தூர எறிந்தவன் அவள் இடையை தன் கையால் அழுத்தி தன் மேல் அவளை மோதவிட்டான். குனிந்திருந்தவளின் நாடியை பற்றி ஒற்றை விரலால் நிமிர்த்தி அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான்.
“என்னாச்சுடி? எதுவா இருந்தாலும் ஓபனா சொல்லு, உன் மனசுல என்ன இருக்குனு கண்டுபிடிக்கற அளவுக்கு எனக்கு புத்திசாலிதனம் இல்ல. ஒருவேளை நான் செல்வி அம்மா மடியில படுக்கறதுனால இவன் என்ன அம்மா புள்ளையா இருக்கானேனு உனக்கு பொசசிவ்வா பீல் ஆகுதா? நீ அப்படி எல்லாம் நினைக்கிறவ இல்லயே? நான் தான் தினமும் ராத்திரி உன் மடியில தானே” என்று குறும்பாக பேசவும் அவனை பார்த்து “என் அத்த மேல நானே பொறாமை படுவனா?” என்றபடி முறைத்தாள்.
“பின்ன என்ன தான்டி உன் பிரச்சனை?” என்றான் சலிப்பாக
“நீங்க அத்தையையும் மாமாவையும் கன்ட்ரோல் பண்ணி வச்சிருக்க மாதிரி தோணுது. முக்கியமா அத்தை உங்க கூடவே வச்சிருக்கணும்னு நினைக்கறீங்க”
“என்னடி என்னென்வோ சொல்றே, என் பாசம் உனக்கு கன்ட்ரோல் பண்ணி வக்கிற போல தெரியுதா? உனக்கு தெரியாது அருவி, எனக்கு என் அம்மானா ரொம்ப பிடிக்கும். அப்பா எப்பவுமே வீட்ல இருக்க மாட்டாரு. அவங்களுக்குள்ள ஏதோ சண்டை, எனக்கு அந்த வயசுல எதுவுமே புரியல, ஆனா அப்பாவால தான் அம்மாவுக்கு ஆக்சிடென்ட் ஆச்சுனு நினைச்சேன். அந்த சின்ன வயசுல அம்மாவையும் தாத்தாவையும் இழந்து அதுக்கு காரணமான அப்பா கூடவே இருக்கணுமா ஆத்திரமா இருந்துச்சு.
அந்த நேரத்துல தான் என்னை பாத்துக்க செல்வி அம்மா வந்தாங்க. கால் ஒடஞ்சி இருந்த என்னை பெத்த பிள்ளை மாதிரி பாத்துக்கிட்டாங்க. இத்தனைக்கும் என்னோட சொந்த வேலையை நானே செஞ்சுக்கிற வயசுல இருந்த என்னை அப்போ பொறந்த பிள்ளை போல கொஞ்சம் கூட முகம் சுளிக்காம என்னை சுத்தமா வச்சிக்கிட்டாங்க. சாப்பாடு ஊட்டினாங்க, குளிப்பாட்டி விட்டாங்க.
ரோகிணி அம்மா உயிரோட இருந்தப்போ, எவ்வளவு தான் பாசம் காட்டினாலும் எனக்கு உடம்பு சரியில்லாத நேரத்துலு எல்லாம் வேலைக்காரங்கள தான் பாத்துக்க சொல்வாங்க. வேலை செய்யறவங்க முகத்தை சுளிச்சுட்டே செய்வாங்க. ஆனா செல்வி அம்மா என் அம்மாவுக்கும் ஒரு படி மேல பாசத்தையும் காட்டினாங்க, எனக்கு முகம் சுளிக்காம எல்லாத்தையும் செஞ்சாங்க.
அதனால தான் அவங்க என்னை விட்டு போக கூடாதுனு என் அப்பாவை கல்யாணம் கட்டிக்க சொல்லி கம்பெல் பண்ணேன். ஆனா யாதவ் பொறந்ததும், எங்கே என்னைய அவங்க ஒதுக்கிடுவாங்களோனு பயந்தேன். எல்லா சித்தி போலவும் இவங்க என்னை வீட்டை விட்டு துரத்தறதுக்குள்ள, நான் முந்திக்கணும் நினைச்சு, அவங்களை துரத்தினேன். அதுக்கப்புறம் நான் பட்ட மனவேதனை உனக்கு சொன்னா புரியாது. எனக்கு செல்வி அம்மா வேணும்னு தோணுச்சு, ஆனா அவங்க எனக்கு மட்டும் அம்மாவா இருக்கணும்னு நினைச்சேன். அதனால யாதவனை எப்பவும் எதிரியா பாத்தேன். சில சமயம் அவனை கொல்லணும்னு கூட தோணும், ஆனா செல்வி அம்மா தாங்க மாட்டாங்கனு நினைச்சு அப்பாவை பயமுறத்தறதோட நிறுத்திக்கிட்டேன். இன்செக்யூரா பீல் பண்ண நான் ரொம்பவே முரட்டு தனமா நடந்துக்கிட்டேன். என்னதான் காரணம் சொன்னாலும் நான் செஞ்சது எல்லாமே ரொம்ப பெரிய தப்பு தான்னு இப்போ உணர்றேன்” என்றான்
“செஞ்ச தப்ப உணர்ந்த மாதிரி தெரியலேயே மாமா” என்றாள் சின்ன குரலில்
“ஏன் அருவி அப்படி சொல்றே?” என்றான் புருவம் சுருக்கி
“இப்பவும் அத்தையை உங்களோட அம்மாவா மட்டும் வச்சுக்கணும்னு நினைக்கறீங்களே தவிர, அவங்களுக்கு இன்னொரு மகன் இருக்கானே அவனோட நிலைமையை நினைச்சு பாத்தீங்களா? உங்க அம்மா விபத்துல இறந்துட்டாங்க, அதனால அம்மாவை இழந்தீங்க அது தவிர்க்க முடியாதது. ஆனால் யாதவ் என்ன பாவம் செஞ்சான்? அப்பா உயிரோட இருந்தும், அவன் அப்பா பாசம் இல்லாம வளர்றதுக்கு காரணம் நீங்க தானே, அதை எப்பவாவது நினைச்சு பார்த்தீங்களா?
அப்பா இல்லாம வளர்றது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு தாங்க தெரியும், செத்து இருந்தா கூட பரவாயில்லை. கேக்கறவங்களுக்கு அப்பா செத்துட்டார்னு ஒரு வார்த்தையில முடிச்சிடலாம். ஆனா அப்பாவை உயிரோட வச்சிக்கிட்டு, உங்கப்பா யாரு? அவர் என்ன செய்யறாரு, ஏன் உங்கம்மாவேட இல்லனு எல்லாரும் கேக்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியாம நானும் யாதவ்வும் எவ்வளவு தலை குனிஞ்சு நின்னிருக்கோம் தெரியுமா?“ என்றாள் அருவி கண்களில் வலியுடன். மனைவியின் வலியை பொறுக்க முடியாமல் அவளை தனக்குள் மேலும் அழுத்தி சமாதானம் செய்தான்.
“அருவி நான் இளவயசுல பெரிய தப்பு செஞ்சிட்டேன் தான், அதுக்காக ரொம்ப வருத்தப்படறேன். ஆனா இப்ப எதுக்குடி என் மேல கோபப்படுற, நான் இப்போ எந்த தப்பும் செய்யலயே” என்றபடி அவள் கன்னத்தை தன் இருகரங்களில் ஏந்தினான்.
“மாமா, நீங்க இப்பவும் தப்பு தான் செஞ்சுட்டு இருக்கீங்க. யாதவ்வும் அவன் பொண்டாட்டியும் சென்னையில இந்த வீட்ல வந்து இருக்கணும்னு அத்தையும் மாமாவும் எவ்வளவு துடிக்கிறாங்க தெரியுமா? நீங்க என்ன சொல்லுவீங்களோனு பயந்துட்டு எதுவும் கேக்காம இருக்காங்க, அவங்க இப்பவும் உங்க கிட்ட கேக்கறதுக்கு பயப்படுற இடத்துல தானே நீங்க இருக்கீங்க”
“என்னடி சொல்ற? நான் என்ன சொல்ல போறேன்? இரு யாதவ்கிட்ட நான் பேசறேன்” என்றபடி போனை எடுத்தான், பின்பு என்ன நினைத்தானோ, “நான் சொன்னா கேப்பானானு தெரியல, நீயே சொல்றீயா அருவி?” என்று போனை அவளிடம் நீட்டினான்.
“பாருங்க, உங்களுக்கு யாதவ்கிட்ட பேச சங்கடமா இருக்கு. அது போல அவங்களுக்கும் சங்கடமா தானே இருக்கும். அதனால அவங்களும் இங்கே வரமாட்டாங்க” என்றாள் திட்டவட்டமாக
“இப்போ என்னைய என்னதான்டி பண்ண சொல்றே?” என்றான் சலிப்பாக
“எனக்கு தெரியாது, நீங்க செஞ்ச தப்பை நீங்களே சரி செய்யுங்க” என்று விட்டு அவனிடமிருந்து விலகி மீண்டும் துணியை மடித்து வைக்க தொடங்கினாள்.
முரளி கிருஷ்ணா யோசனையில் ஆழ்ந்தவன் ஒரு முடிவோடு போனை எடுத்துக் கொண்டு பால்கனி பக்கம் சென்றான். சிறிது நேரத்திலேயே தன் தந்தைக்கு போன் செய்து “அப்பா உங்க கிட்ட தனியா பேசணும், கொஞ்சம் என் ரூமுக்கு வாங்க” என்றான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் உள்ளே வந்த வெற்றி, “சொல்லு முரளி”
“அப்பா நானும் அருவியும் குஜராத் போயிடலாம்னு இருக்கோம், நாங்க போனா தான் யாதவ் இங்கே வருவான்” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான் முரளி கிருஷ்ணா.
“என்னப்பா திடீர்னு இப்படி சொல்றே? என் மேலயும் அம்மா மேலயும் எதாவது வருத்தமா? அருவி நாங்க பேசினதை தப்பா புரிஞ்சுட்டு உன்கிட்ட எதாவது சொல்லிட்டாளா?” என்று மருமகளை பார்த்தார்.
“அப்பா, அருவி தப்பா எதுவும் சொல்லல, அதே சமயம் உங்க மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல, நான் எப்படியும் துவாரகா பத்தின ஆராய்ச்சியை கன்டினியூ பண்றதுக்கு டெல்லிக்கும் குஜராத்துக்கும் அடிக்கடி போய் வர வேண்டியிருக்கும். அதுக்கு அருவியையும் கூட்டிட்டு போயிடலாம்னு இருக்கேன். நான் இங்கே இருந்தா யாதவ்வும் வர மாட்டான்”
“அதுக்காக நீ தனியா போகணுமா? யாதவ்கிட்ட சொன்னா அவன் புரிஞ்சுப்பான். நான் பேசி அவனை வர வைக்கறேன். நீங்க இரண்டு பேரும் ஒண்ணா இருந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்?”
“இல்லப்பா, நான் செஞ்ச தப்பை என்னதான் யாதவ்வும் அவன் பொண்டாட்டியும் மன்னிச்சி இருந்தாலும், என்னை பாக்கும் போதெல்லாம் அந்த எண்ணம் தான் அவங்களுக்கு தோணும். எனக்கும் அவங்களை பாக்கும் போது குற்ற உணர்ச்சியா இருக்கும். இதை தவிர்க்கவே முடியாது. நாங்க இரண்டு பேரும் ஒரே வீட்ல இருக்கறதுங்கிறது ஒரே உறையில இரண்டு கத்தி இருக்கறதுக்கு சமம். இரண்டு பேருக்குமே அது நிம்மதியா இருக்காது. அதனால தனியா இருக்கறது தான் நல்லது.
சில உறவுகள் தனி தனியா இருந்தா தான் உயிர்ப்போட இருக்கும்னா அது தனியாவே இருந்துட்டு போகட்டுமே, ஒன்னா இருந்து எதுக்கு அவஸ்தை படணும்?”
“நீ சொல்றது சரியாவே இருக்கட்டும், யாதவ் இப்போ தனியா தானே இருக்கான். நீ எதுக்கு போகறேன்னு சொல்ற?
“இத்தனை வருஷமா அவனை உங்க கிட்ட இருந்து பிரிச்சு வச்சதே போதும், இனியாவது அவன் உங்களோட இருக்கட்டும்பா, நான் அப்பப்போ அருவியோட வந்து உங்களையும் அம்மாவையும் பாத்துட்டு போறேன். நீங்களும் வாங்க”
“எல்லாம் சரி, இதுக்கு யாதவ் ஒத்துப்பானா?”
“அவன் ஒத்துக்கற மாதிரி நான் பேசறேன், நீங்க தடை சொல்லாம இருந்தா போதும்” என்று விட்டு திரும்பியவன் “இப்ப ஓகேவா” என்பது போல மனைவியை பார்த்தான். அருவியும் ஆமோதிப்பாக தலையாட்டியதும் தந்தைக்கு சமாதானம் செய்து அனுப்பி விட்டு தான் உறங்க சென்றான்.
*******
பத்ரிநாத் கோயிலை சுற்றியிருந்த ஒரு மலை முகட்டின் புற்களின் மேல் யாதவ் கிருஷ்ணாவும் அவன் மனைவி ராதியும் தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை சூரியனின் ஒளிக்கதிர்கள் கண்களில் பட்டதும் மெல்ல கண்திறந்தான் யாதவ். அவன் நெஞ்சில் தலைவைத்து உறங்கி கொண்டிருந்த மனைவியை பார்த்தவன், “எங்கே போனாலும் இவளுக்கு மட்டும் தூங்கறதுல பிரச்சனையே இல்ல, இந்த மாமனோட நெஞ்சத்தையே மஞ்சமாக்கி சொகுசா தூங்குவா” என்று புலம்பிக் கொண்டே அவளை எழுப்பினான்.
“ஏய் ராதி எந்திரிடி, பாக்கறதுக்கு தான் பஞ்சு மெத்தை மாதிரி இருக்க, அரிசி மூட்டை கணக்கா ராத்திரி முழுக்க என் மேலயே படுத்திருக்கியே உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லியாடி” என்றான்.
அவன் சொல்லியதை காதில் போட்டுக் கொள்ளாமல் “யாதவா நாம இப்போ எங்கே இருக்கோம், சொர்க்கத்துலயா? நரகத்துலயா?” என்றாள். தன்னவன் வாமன அவதாரம் எடுத்ததையோ விண்கல் மேல்நோக்கி வந்தவழியே பறந்து சென்றதையோ அவள் மட்டுமல்ல அவனுமே மறந்து இருந்தான்.
“ம்ம் சொர்க்கத்துல தான் இருக்கோம்”
பட்டென்று கண்களை திறந்து அவனை பார்த்தவள், “என்ன சொல்ற யாதவா, உலகம் அழிஞ்சு போச்சா? அப்போ நாம செத்துட்டமா? சொர்க்கத்துலயா இருக்கோம்?” என்றாள் விழிவிரித்து.
அவனோ அவளோட அப்படியே உருண்டு தனக்கு கீழ் கொண்டு வந்து, அவளை போலவே அவள் நெஞ்சில் முகம் புதைத்து, “சாகலடி உயிரோட தான் இருக்கோம், ஆனா சொர்க்கத்துல தான் இருக்கோம்”
“என்ன குழப்பற?” என்று சிணுங்கினாள்
“எனக்கு நீ சொர்க்கம், உனக்கு நான் சொர்க்கம்” என்றபடி அவள் மேல் சாய்ந்தான்.
“ச்சோ உனக்கு எப்பவுமே விளையாட்டு தான், நாம எதுக்கு வந்தோம்னு மறந்துட்டியா? விண்கல்லு என்னாச்சுனு பாக்க வேணாமா?”
“கண்டிப்பா அது இருந்த இடத்துக்கே போய் இருக்கும்னு நினைக்கறேன். எதுக்கும் நியூஸ் எதாவது வந்திருக்கா பாரு” என்றபடி தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த போனை அவளிடம் கொடுத்து விட்டு மீண்டும் அவள் மேல் சாய்ந்தான்.
போனை எடுத்து பார்த்தவள், யாதவ் சொன்னது போல விண்கல் பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வியாழன் கோளின் சுற்றுப்பாதையை அடைந்துவிட்டதாக செய்திகள் வந்திருந்தது. தன் மேல் சாய்ந்திருந்தவனின் தலை முடியை லேசாக பிடித்து இழுத்து அவளை பார்க்க செய்தபடி “நீ சொன்னது கரெக்ட் தான் யாதவ், நம்ம பூமிக்கு இப்போ எந்த பிரச்சனையும் இல்ல, அடுத்து என்ன பண்றதா உத்தேசம்?” என்றாள்
“உன்னை அம்மாவாக்கறது தான்” என்றான் ஒற்றைக் கண்ணை அடித்து
அவன் முதுகில் ஒரு அடி கொடுத்தவள், “விளையாடாத யாதவா, எழுந்திரு”
“ஏய் நான் விளையாடலடி சீரியசா தான் சொல்றேன்”
“அப்போ கிளம்பு நம்ம ஊருக்கு போகலாம்”
“சரி சரி, கோயில் பக்கத்துல இருக்கோம், குளிச்சிட்டு இன்னொரு முறை சாமியை பார்த்துட்டு கிளம்பலாம்” என்றபடி அவளிடமிருந்து விலகினான்.
இருவரும் கோயில் அருகே ஓடிக் கொண்டிருக்கும் அலக்நந்தா நதியில் நீராட நினைத்து அங்கே சென்றனர். செந்தாழினி காலை மெதுவாக நதியினுள் நுழைத்தவள், பட்டென்று கால்களை எடுத்துக் கொண்டாள், உடலே விறைத்து போகும் அளவுக்கு நீர் ஜில்லிட்டு இருந்தது.
யாதவனோ அசராமல் அந்த பனி உருகும் நீரில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தான். பாவமாக பார்த்தவளை பார்த்து சிரித்தவன், “என்னை கட்டிப்பிடிச்சுனு குளிக்கறீயா, குளிராது” என்று கண்சிமிட்டினான்.
“கோயில்ல இருந்துனு பேசற பேச்ச பாரு” என்று அவனை முறைத்தாள்.
“சரி சரி முறைக்காதடி, பக்கத்துலயே சப்த குண்டம்னு ஒரு தீர்த்தம் இருக்கு பாரு, அங்கே போய் குளி, வெந்நீர் வரும்” என்றான்
“என்னை பார்த்தா உனக்கு கிண்டலா இருக்கா? இந்த குளிர்பிரதேசத்துல வெந்நீர் எப்படி வரும்?”
“ஏய் ராதி, நிஜமா தான்டி, அக்னிபகவான் தன்னோட பிரச்சனை தீர பத்ரிநாராயணனோட திருவடியில ஜலமாகி சப்த குண்டலத்துல விழுந்ததா ஒரு நம்பிக்கை இருக்கு. அது உண்மையானு தெரியாது. ஆனா கண்டிப்பா அங்கே வெந்நீர் வரும், நீ வேணும்னா போய் பாரு” என்றான்.
“அப்படி வெந்நீர் வரலனைா?”
“இங்கே என்கூட வந்து குளி” என்று கண்சிமிட்டினான். அவனை முறைத்து விட்டு சப்தகுண்டலத்தை நோக்கி சென்றாள், அவன் சொன்னது போலவே வெந்நீர் வரவும் குளித்து விட்டு வந்தாள். இருவரும் தயாராகி கோயிலுக்குள் செல்லும் போது ஒவ்வொருவராக வர தொடங்கினார்கள்.
இருவரும் கடவுளை தரிசித்துக் கொண்டிருக்கும் போது யாரோ பாடல் பாடவும் யாதவ் தன்னையறியாமல் புல்லாங்குழலை எடுத்து அந்த பாடலுக்கு ஏற்றவாறு வாசிக்க தொடங்கிவிட்டான். அங்கிருந்த மக்கள் எல்லாம் யாதவனின் இசையில் மயங்கி நிற்க, செந்தாழினியின் நிலையை சொல்லவும் வேண்டுமா?
இருவருமே நிழலுக்கும் நிஜத்திற்கும் இடையில் தள்ளாடிக் கொண்டிருந்தனர். சில நிமிடங்கள் அவர்களை ராதா கிருஷ்ணனாகவும், சில சமயம் யாதவ் செந்தாழினியாகவும் மாறி மாறி உணர்ந்தனர். உண்மையில் யார் அவர்கள்? இனி யாராக வாழப்போகிறார்கள்? இருவருக்குமே ஒரே நேரத்தில் அந்த சந்தேகம் இப்போது மிகப்பெரிய விஸ்வரூப கேள்வியாக உருவெடுத்தது.
யாதவனால் புல்லாங்குழலை எடுத்து வாசிக்காமலும் இருக்க முடியவில்லை, அதை எடுத்து வாசிக்கும் கணம், அவன் அவனாக இருப்பதில்லை என்பதை யாதவ் கிருஷ்ணாவும் உணர்ந்தே இருந்தான். செந்தாழினியின் நிலையும் கிட்டத்தட்ட அதே தான். அவன் வாசிக்க தொடங்கினாலே அவளுக்கு மயக்க நிலை தான்.
யாதவ் இருமனநிலையின் குழப்பத்தோடு வாசித்துக் கொண்டிருக்க, அங்கிருந்த மக்களின் கைத்தட்டலில் சுயம் பெற்றான். கோயில் அர்ச்சகர் அவர்கள் முன்னால் வந்து, “உங்க இரண்டு பேரை பார்க்கும் போது அந்த ராதா கிருஷ்ணரை பார்த்தது போலவே இருக்குது. உங்க வாசிப்புக்கு கண்டிப்பா இந்நேரம் பத்ரிநாத் கோயிலை சுற்றியிருக்கிற பனிக்கட்டி எல்லாம் உருகி இருக்கும்” என்று பாராட்டினார்.
அவருக்கு நன்றியை தெரிவித்து விட்டு, மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான் யாதவ் கிருஷ்ணா.
“ராதி எனக்கென்னவோ புல்லாங்குழலை எடுத்த எடத்துலயே வச்சிட்டு வந்துடலாம்னு தோணுது” என்றான் அவள் தோளில் கரம் வைத்தபடி
“ஏன் யாதவ்?”
“போதும்டி நாமளும் சாதாரண மனுஷங்களா வாழலாம். புல்லாங்குழல் நம்ம கையில இருந்தா அதோட மந்திர சக்தியை யூஸ் பண்றதை தவிர்க்க முடியல, அதே நேரத்துல அதை வாசிக்கும் போதும் நீயும் நானும் என்ன பண்றோம்னு நமக்கே தெரியல. கனவுல இருக்கற மாதிரியே பீல் ஆகுது. நாமளும் சராசரி கணவன் மனைவியா சண்டை போட்டு அடிச்சுக்க வேணாமா?”
“சராசரி கணவன் மனைவினு சொன்னே சரி, அதென்ன சண்டை போட்டு அடிச்சுக்க வேணாமானு கேக்கற, என்னைய அடிப்பியா நீ?” என்றாள் கண்களை உருட்டி
“நான் எங்கே இருந்து உன்னைய அடிக்கிறது, நீ என்னய அடிக்காம இருந்தா போதாதா” என்றான் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு
“எந்த பொண்ணு பின்னாடியாவது போனேனு தெரிஞ்சது அவ்வளவு தான்” என்றாள் மிரட்டும் தொணியில்
“ராதி நான் என்னடி பண்ணட்டும், நானா அவங்களை தேடி போறேன்? அவங்க தான் என் மேல பாசத்தோட வர்றாங்க, முகத்துல அடிச்ச மாதிரியா பேசி அனுப்ப முடியும். அது தான் சிரிச்சு பேசி…” என்று வசீகரமாக சிரித்து கண் சிமிட்டியவனை பார்த்து மனம் உருக தயாராக, தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு,
“ப்பா, என்னமா நடிக்கிற, சரியான திருடன், நடிக்காதடா, கள்ளசிரிப்பு சிரிக்காதே” என்று உதட்டை சுழித்தாள்.
“இருடி, மதுராக்கு போய்ட்டு வந்து உன்னை அப்புறமா கவனிச்சுக்கறேன்” என்று கருவினான்.
“மதுராவுக்கா திரும்பவுமா? எதுக்கு?” என்று வாயை பிளந்தாள்
“புல்லாங்குழலை திருப்பி கொடுக்கணும்னா அங்க தானே போகணும்?”
“யாதவ் ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டு தான் அங்கே போனோம். திரும்பவும் கந்தர்வ வனம், யமுனை ஆறு, துளசிவனம், பந்திர்வன் காடு எல்லாம் கடந்து போகணுமா? நினைக்கும் போதே கண்ணை கட்டுதே” என்று பெருமூச்சு விட்டாள்.
“ஆமா ராதி, நம்ம கடமை முடிஞ்சுருச்சு, அதனால திரும்பவும் ஒப்படைச்சுட்டு நம்ம ஊருக்கு கிளம்புவோம்” என்றான்.
அவளும் சம்மதமாக தலையசைத்தாள்.
*********
யாதவ் கிருஷ்ணாவும் செந்தாழினியும் மதுராவை அடைந்து அங்கிருந்த கோயில்களுக்கு எல்லாம் சென்று கடவுளை தரிசித்து விட்டு கடைசியாக கந்தர்வ வனத்தை நோக்கி சென்றார்கள்.
இருவரும் அந்த வனத்திற்குள் காலடி எடுத்து வைத்த அந்த கணம், முட்செடிகளால் புதர் மண்டிக் கிடந்த அந்த இடமே மலர் வனமாக மாறி நறுமணம் வீச தொடங்கியது. மனோரஞ்சித மலர்களின் வாசம் மனதிற்கு இதத்தை தர இருவரும் ஒருவரை ஒருவர் காதலோடு பார்த்துக் கொண்டார்கள். பின்னே இருப்பது கந்தர்வ வனமாயிற்றே!
கந்தர்வர்களும் தேவ கன்னிகைகளும் அழகான பட்டுடுத்தி இருபக்கமும் நின்றுக் கொண்டு தலையை தங்கள் இடைவரை குனிந்து இருவருக்கும் வணக்கம் கூறி வரவேற்றனர். தேவ கன்னிகைகள் மலர்தூவி வரவேற்க, கந்தர்வர்களோ யாழிசைக்க தொடங்கி விட்டனர். ஆளுக்கொரு வாத்தியக் கருவிகளை வைத்துக் கொண்டு இசை முழங்க, யாதவன் மட்டும் சும்மா இருப்பானா? தன் இசை ஆயுதத்தை எடுத்து வாசிக்க தொடங்கி விட்டான்.
ராதியோ தன்னவனின் வாசிப்பில் எப்போதும் போல கிறங்கி நின்றாள். எங்கிருந்தோ பைராகி வந்து அவர்கள் முன்னால் மண்டியிட்டு வணங்கினார்.
யாதவனும் ராதியும் தம்பதி சமேதராக அவருக்கு ஆசி வழங்க, அவர் கருடனாக மாறினார். அதன் குறிப்புணர்ந்து இருவரும் இப்போது அந்த ராட்சச கழுகின் மீது ஏறி அமரவும், அது பறக்க தொடங்கியது.
கந்தர்வர்களும் தேவகன்னிகைகளும் கழுகை பின் தொடர்ந்து வந்தனர். அனைவருமாக சேர்ந்து யமுனை நதிக்கரை கடந்தனர்.
இப்போது துளசியின் மனம் நாசியை துளைத்தது, ஆமாம் துளசி வனத்திற்குள் நுழைந்து விட்டனர். ஆனால் இப்போது துளசி மரங்கள் எல்லாம் கோபியர்களாக மாறியிருந்தனர். இருவரையும் பார்த்த மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டாடினர்.
அவர்களும் யாதவனை இசைக்க சொல்லி வேண்டுகோள் வைக்க, அவர்கள் ஆசையையும் நிறைவேற்ற தொடங்கிவிட்டான். ஆடுமாடுகள் எல்லாம் எங்கிருந்தோ வந்து அந்த இடத்தையே புடை சூழ்ந்துக் கொண்டன.
பந்திர்வன் காட்டில் இருக்கும் கோயிலில் எப்போதும் போல மணியோசை கேட்கவும், “மாதவா, சாயங்கால பூஜை முடிந்து விட்டது, இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாரும் கிளம்பி விடுவார்கள், நீங்க எங்களுக்காக எங்களோட சேர்ந்து ராச லீலா நடனம் புரியணும்” என்று அனைவரும் கேட்க, யாதவன் ராதியை பார்த்தான்,
அவளும் சம்மதமாக தலையசைக்க, ஆளுக்கொரு இரண்டு குட்டையான கட்டைகளை எடுத்துக் கொண்டு தாண்டியா நடனமாட தொடங்கி விட்டனர். கோபியர்களும், தேவகன்னிகைகளும் யாதவனோடும் ராதியோடு ஆடிக் கொண்டிருக்க, அதற்கேற்ற தாள லயங்களுடன் கந்தர்வர்கள் வாசிக்க தொடங்கி விட்டனர்.
அந்த கண்கொள்ள காட்சியை காண பல கோடி கண்கள் வேண்டும் என்று வானில் இருந்த தேவர்கள் எல்லாம் பார்த்து பரவசப்பட்டனர். ஒருவாறு அனைத்தும் முடிந்து யாதவன் தன் இருக்கையில் ஓய்வாக சாய்ந்துக் கொள்ள, ராதி அவன் தோள் மேல் தலை சாய்த்துக் கொண்டு அனைவரையும் புன்னகையுடன் பார்த்தாள்.
கழுகாக இருந்த பைராகி மீண்டும் மனித உருவிற்கு வந்து, “மாதவா நீங்க திரும்பி வந்ததுல எங்களுக்கு எல்லையில்லா ஆனந்தம். இனி தினம் தினம் கோலாகலம் தான்” என்றார் மகிழ்ச்சியாக
“தினந்தோறுமா? எப்போதும் போல மாய உருவில் வேணுமானால் உங்கள் ஆசையை நிறைவேற்றி வைக்கிறேன். இந்த உருவில் இனி முடியாது” என்றான் யாதவன்
“ஏன்? நீங்க எங்களோட இங்கேயே தங்கி விட முடிவெடுத்து தானே இங்கே வந்து இருக்கீங்க மாதவா?” என்று கேட்டார்.
“இல்ல பைராகி, புல்லாங்குழலை இங்கேயே வச்சிட்டு போகலாம்னு வந்தேன்”
“யாதவா, இது உங்களோட புல்லாங்குழல், இதை ஏன் திரும்ப வைக்க கொண்டு வந்தீங்க” என்று பதறினார் பைராகி.
கந்தர்வர்களும் தேவகன்னிகைகளும், “ஆமாம், யாதவா இது நின் வேங்குழலே” என்றனர் கோரசாக.
“வேங்குழல் என்னுடையது தான். ஆனால், யாதவ்கிருஷ்ணா அதை வைத்திருக்க விரும்பலையே. இரண்டு பேரும் சராசரி வாழ்க்கையை வாழ விரும்பறாங்க. நானும் அவங்களை இனி தொல்லை செய்ய மாட்டேன்” என்றான் மாயவன்
“அப்ப நாங்க உங்களை பார்க்க முடியாதா? உங்க புல்லாங்குழல் இசையை கேட்க முடியாதா?” என்று அனைவரும் ஏக்கத்தோடு கேட்க,
‘அதுக்கான காலநேரம் வரும் போது பார்க்கலாம், மனித உருவில் வந்தா தான் என்னை உணர்விங்களா? நான் எப்பவும் உங்களோட தானே இருக்கேன், மத்த நேரத்துல என்னை நீங்க உணரலையா?” என்று அவன் எதிர் கேள்வி கேட்க, இதற்கு பதில் சொல்ல முடியுமா அவர்களால்? வாயடைத்து போனார்கள்.
மாயவன் தன் மாயப்பேச்சிலும் சிரிப்பிலும் தன் முடிவை அவர்களும் ஏற்றுக் கொள்ளும்படி செய்து விட்டான். புன்னகையோடு தன் மனைவியை எழுப்பிக் கொண்டு, பைராகி அவர்களுக்கு மணமுடித்து வைத்த கோயிலுக்கு சென்றான். அங்கே இருந்த அக்னிகுண்டம் ஏற்கனவே மலர்குண்டமாக இருந்தது. அதற்குள் அவன் இறங்கியதும் வைகுண்ட வாசல் திறப்பது போல அனைத்து கதவுகளும் படாரென்று திறந்துக் கொள்ள, ராதியின் தோள் மேல் கைப்போட்டபடி உள்ளே சென்றான்.
அவர்கள் இதற்கு முன்னே அங்கே வந்திருக்கிறார்கள் தான், ஆனால் அப்போது யாதவ் கிருஷ்ணா செந்தாழினியாக வந்திருந்தார்கள். இப்போதோ ராதாகிருஷ்ணனாக உரிமையுடன் வந்து இருந்ததால் எந்த தடையும் இல்லாமல் அவர்களால் உள்ளே செல்ல முடிந்தது.
மிக பெரிய அரண்மனை தோற்றத்தில் இருந்த அந்த மாளிகையில் தங்கி ஓய்வெடுத்து அன்றைய இரவை கழித்தனர். பின்பு கிளம்ப தயாரான யாதவன் தன்னிடமிருந்த புல்லாங்குழலை எடுத்து அந்த தங்க நிற பேழைக்குள் வைத்துவிட்டு “போகலாமா ராதி” என்று மனைவியிடம் கேட்டான், அவளும் சம்மதிக்க, இருவரும் இப்போது வெளியே வந்தபோது மீண்டும் யமுனை ஆற்றின் கரையில் இருந்த கந்தர்வ வனத்தில் இருந்தனர்.
அனைவரும் சற்றே வாடிய முகத்துடன் யாதவனை வழி அனுப்ப காத்திருந்தனர். அனைவரையும் பார்த்து “இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை, மாற்றம் ஒன்றே மாறாதது, வாழ பழகிக் கொள்ளுங்கள்” என்று விட்டு அனைவருக்கும் ஆசி வழங்கிவிட்டு மனைவியோடு கந்தர்வ வனத்தை விட்டு வெளியேறினான்.
வெளியே வந்தவன் இப்போது தன்னை யாதவ்வாக உணர்ந்தான். இருவருக்குமே களைப்பாக இருந்ததால் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு பயணத்தை மேற்கொள்ளலாம் என்று மதுராவிலேயே ஒரு ஓட்டல் அறையில் தங்கினார்கள். இரவின் தனிமையில் யாதவ் செந்தாழினியை இறுக்கமாக அணைத்து. “ராதி இப்படியே காஷ்மீர் எங்காச்சும் போய் நம்ம ஹனிமூனை கொண்டாடலாமா?” என்று அவள் காதில் கிசுகிசுத்தான்
“ச்சோ என்ன யாதவ் இது? நமக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சு. என்ன தான் உலகத்தை காப்பத்தறதா சொல்லி எல்லா இடமும் சுத்தினாலும் கிடைக்கிற இடைவெளியில எல்லாம் வேங்குழலோடு சேர்த்து என்னையும் தானே வாசிச்சீங்க, இப்போ என்ன புதுசா?” என்று சிணுங்கினாள்.
“போடி, இதுவரை நடந்தது எல்லாம் கனவா நிஜமானே தெரியல. இரண்டு பேரும் ஏதோ மயக்கத்துல இருக்கற மாதிரி தான் இருந்தோம். நமக்கு நடுவுல என்னென்னலாம் நடந்துச்சுனு எல்லாத்தையும் ஒண்ணுவிடாம உன்னால சொல்ல முடியுமா?” என்று கேட்டான். அவள் இல்லை என்பது போல உதட்டை பிதுக்கவும், “அதுக்கு தான் எல்லா கோட்டையும் அழிச்சிட்டு முதல்ல இருந்து தொடங்கணும்னு சொல்றேன். புரியலையா? இன்னைக்கு தான் நம்மோட முதல் இரவு” என்றபடி அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்.
அதே நேரம் போன் ஒலிக்கவும், அதை எடுத்து பார்த்தவன் அதில் முரளியின் பெயர் தெரியவும், “அதானே பார்த்தேன், நான் சந்தோஷமா இருந்தாலே இவனுக்கு மூக்கு வேர்த்திடுமே” என்றபடி போனை எடுத்தான்.
(தொடரும்)