வேங்குழல் 31

கணவனின் முதல் தொடுகை அருவிக்குள் காதல் அருவியை ஊற்றெடுக்க செய்தது. 

 

“என்னுள்ளே என்னுள்ளே பலமின்னல் எழும்நேரம்

எங்கெங்கோ எங்கெங்கோ என்எண்ணம்போகும்தூரம்

 

என அவளின் இளமை உணர்வுகள் எங்கெங்கோ செல்ல, எழுந்து முகம் கழுவி நெற்றியிலும் உச்சியிலும் திலகமிட்டு கணவனை தேடி வந்தாள். செல்வி அருவியிடம் காபியை நீட்டினார், “முரளி பால்கனில இருக்கான், நீயும் அவனும் சேர்ந்து காபியை குடிச்சிட்டு பேசிட்டு இருங்க, இன்னைக்கு உங்களுக்கு சடங்கு இருக்கு” என்று குறிப்பு கொடுத்தார்.

 

அவர் சொல்ல வந்ததன் அர்த்தம் புரிய நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி, செல்வியிடம் இருந்த காபியை வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். முரளி தன் போனில் ஆழ்ந்திருந்தவன் எதிரே நிழலாடவும் நிமிர்ந்து அருவியை பார்த்தான். அன்றலர்ந்த மலர்போல பளிச்சென்று இருந்த மனைவியின் முகத்தை பார்த்து புன்னகையுடன் அவள் கையில் இருந்த காபியை வாங்கி கொண்டு அவளுடன் சகஜமாக பேச ஆரம்பித்தான்.

 

அவனுடைய வேலையை பற்றியும் அனுபவத்தை பற்றியும் பேசிக் கொண்டே வந்தவன், சட்டென்று தயங்கி நிறுத்தினான். “ஏன் நிறுத்திட்டீங்க”

 

“அருவி, நீ யாதவ்வோட எத்தனை வருஷம் சின்னவ?”

 

“ஏன் கேக்கறீங்க? மூணு வருஷம்”

 

“ஓ மை காட், உனக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் ரொம்ப அதிகம், கிட்டத்தட்ட 12 வருஷம். ஓ காட்” என்று நெற்றியை தேய்த்தான்.

 

“அதனாலென்ன?” என்றாள் புரியாமல்

 

அவளை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தபடி, “சாரி அருவி, உன்னோட வாழ்க்கையை நான் பாழாக்கிட்டேன்” என்றான் வருத்தமான குரலில்

 

“அய்யோ ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க, நீங்க தான் வேணும்னு விரதமிருந்து உங்களை கணவனா அடைஞ்சிருக்கேன். வயசு வித்தியாசம் எல்லாம் ஒரு பிரச்சனையா? எங்க பெரியப்பாவை விட 15 வயசு சின்னவங்க எங்க பெரியம்மா, இவ்வளவு ஏன் உங்கப்பாவான என் மாமனாருக்கும் அத்தைக்குமே பத்து வயசு வித்தியாசம் இருக்குமே. அவங்க சந்தோஷமா இல்லையா? தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்காதீங்க” அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே செல்வி அழைக்கவும் “இருங்க வரேன்” என்று சொல்லிவிட்டு காலியான காபி டம்ளரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

 

ஆனால் முரளிக்கு, தான் என்னவோ பெரிய தவறு செய்துவிட்டது போன்ற குற்ற உணர்வில் தவித்தான்.

 

அன்று இரவு அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், செல்வி அருவிக்கு அலங்காரம் செய்து, முரளியின் அறைக்கு அனுப்பி வைத்தார். தடதடக்கும் இதயத்தோடு அறைக்குள் நுழைந்தாள், அங்கே முரளி மேஜையின் அருகே அமர்ந்தபடி ஓலைச்சுவடியை பார்த்தபடி லேப்டாப்பில் ஏதோ குறிப்பெடுத்துக் கொண்டு இருந்தான்.

 

பால் டம்பளருடன் அவனருகே போய் நின்றவளை அவன் நிமிர்ந்தும் பார்க்காமல், “அருவி, நீ தான் வீக்கா இருக்க, பாலை குடிச்சுட்டு தூங்கு, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சுட்டு வந்து படுக்கறேன்” என்று சொல்லிவிட்டு வேலையில் ஆழ்ந்தான்.

 

மாலையில் முரளியின் இதழ்களும் மீசையும் அருவியின் கால்களில் ஏற்படுத்திய குறுகுறுப்பிற்கே சிலிர்த்தவள், அன்றைய இரவில் கணவன் தன் மேல் நடத்த போகும் ராஜாங்கத்தை  எண்ணி படபடக்கும் இதயத்தோடு எதிர்ப்பார்ப்போடு வந்த அருவிக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது, ஆனாலும் அவனிடம் எதுவும் கேட்காமல் போய் படுத்துக் கொண்டாள். அவன் முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவள் அப்படியே உறங்கியும் போனாள். வெகுநேரம் கழித்து தூக்கத்தில் புரண்டு படுக்க எத்தனித்தவளுக்கு காலில் ஏதோ கூச்சமாக இருக்கவும் மெல்ல கண்திறந்து பார்த்தாள். முரளி தான் அவள் பாதத்தில் தன் மீசை உரச முத்தமிட்டு கொண்டிருந்தான். என்ன செய்கிறான் பார்க்கலாம் என்று கண்களை திறக்காமலே அவனை கண்காணித்தாள்.

 

அவனோ அவளுடைய கால்களுக்கு மென்மையாக முத்தமிட்டுவிட்டு, அதை எடுத்து தன் மடியில் போட்டுக் கொண்டு போனில் ஏதோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு கை மட்டும் அவள் கால்களை விடாமல் வருடிக் கொண்டு இருந்தது. நீண்ட நேரம் கழித்தே அவள் அருகில் சற்று இடைவெளியுடன் படுத்து கொண்டான். அவள் விழிக்கும் முன் எழுந்து சென்று விட்டான். இதுவே ஒரு வாரமாக தொடரவும் அருவி கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழந்து கொண்டிருந்தாள். அவருக்கு என்னை பிடிக்கலையா? அப்படினா தினமும் எதுக்கு என்னோட காலை எடுத்து அவர் மடியில வச்சுக்கணும்? பாதத்துக்கு மட்டும் முத்தம் கொடுக்கணும்? என்று யோசித்தாள். கணவனுக்கு தன் மேல் ஆர்வமும் இருக்கிறது அதே சமயம் தான் செய்த தவறுகளின் குற்றஉணர்ச்சியிலும் தவிக்கிறான் என்று புரிந்தது. எப்படியாவது அதிலிருந்து அவனை வெளியே கொண்டு வரவேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.

 

அன்று வழக்கம் போல அவள் அவனிடம் பால் டம்ளரை நீட்ட, அவன் திரும்பாமலே “நீ போய் தூங்கு அருவி” என்று விட்டு தன் லேப்டாப்பில் மூழ்கினான். அருவி இப்போது கால் வைக்கும் இடத்தில் தலையை வைத்து மாற்றி படுத்துக் கொண்டு போர்வையால் தன்னை முழுவதுமாக போர்த்திக் கொண்டாள்.

 

முரளி எப்போதும் போல தன் வேலையை முடித்துவிட்டு எழுந்து கட்டில் அருகில் வந்தவன், அருவி முழுவதும் போர்த்திக் கொண்டு தூங்குவதை பார்த்து திகைத்தான். ‘என்னாச்சு இவளுக்கு? குளிருதா’ என்று நினைத்தவன் ஏசியின் குளுமையை குறைத்தான். கட்டிலின் விளிம்பில் தரையில் மண்டியிட்டு அமர்ந்துக் கொண்டு அவள் பாதம் இருக்கும் என்று அவளை நோக்கி குனிந்தபடி மெல்ல போர்வையை நீக்கினான். 

 

கால் விரல்களை எதிர்ப்பார்த்து அவன் உதடுகள் மெல்ல அவளை நெருங்க, விழிகள் அங்கே அவளின் மதிமுகத்தை பார்த்து திகைத்தது. அவன் இதழ்கள் இப்போது அவளின் இதழ்களுக்கு மிகவும் அருகாமையில் உரசிக் கொள்ளும் விதத்தில் இருக்க, அங்கே தஞ்சமடைய துடித்த தன் இதழ்களுக்கு கட்டுப்பாடு விதித்து தோற்றுப்போனான். அவன் கண்கள் முதல் முதலாக தன்னவளின் பிறை போன்ற நெற்றி, வில்லென வளைந்திருந்த புருவம், நேரான நாசி, புஷ்டியான கன்னங்களை பார்த்து மூச்சடைத்தது. கருப்பு வைரம் போல மினுமினுப்பாக இருந்த அவளின் மேனி நாவல் பழத்தை நினைவுப்படுத்தியது, வசீகரமான முகமும், செதுக்கிய சிலைபோன்ற வளைவு நெளிவுகளும் அவனை மேலும் ரசிக்க வைத்தது. அவன் எவ்வளவு முயற்சி செய்தும் அவனுடைய கண்கள் அவள் இதழ்களின் மேல் படிவதை அவனால் தடுக்க முடியவில்லை.

 

சாயம் பூசாமலே சிவந்திருந்த அவளின் ரோஜா இதழ்கள் அவன் மதியை கலங்க செய்ய, அதை கவர்ந்துக் கொள்ளும் எண்ணம் மேலாங்கியது. சட்டென்று ஏதோ தவறு செய்து விட்டவன் போல பதறி எழுந்தான். தன்னவனின் இதழ் ஒற்றலை எதிர்பார்த்து இருந்தவள் அவனின் பதற்றத்தை பார்த்து கண்திறந்தாள்.

 

முரளியோ தன் ஒரு கையால் பின்னங்கழுத்தை அடித்துக் கொண்டான். பின்பு கை முஷ்யை ஓங்கி சுவற்றில் குத்தி கொண்டே இருந்தான். பதறி எழுந்து அவனருகே ஓடியவள், “என்னாச்சு, ஏன் இப்படி பண்றீங்க” என்று அவனை தடுத்தாள்.

 

“சாரி அருவி, நான் உன்கிட்ட தப்பா நடந்துக்க டிரை பண்ணேன். எவ்வளவு பட்டாலும் எனக்கு புத்தி வரல பாரு” என்றபடி மீண்டும் தன் கைமுஷ்டியை சுவற்றில் மோத போனான்.

 

அருவி சட்டென்று அவன் கரத்தை பற்றிக் கொண்டு, “என்கிட்ட நீங்க அப்படி நடந்துக்கலனா தான் தப்பு” என்றாள் மெல்லிய குரலில்

 

“நீ என்ன சொல்றே?”

 

“கால் இருக்க வேண்டிய இடத்துல என் முகம் இருந்துச்சே, அது ஏன்னு உங்களுக்கு புரியலயா?” என்றாள் தலையை குனிந்துக் கொண்டே மெல்லிய குரலில்

 

“ஏன் இன்னைக்கு தூக்கத்துல மாறி படுத்திட்டியா அருவி” என்றான் விளங்கா பார்வையுடன்

 

“தினமும் நீங்க என் பாதத்துல முத்தம் கொடுக்கறது எனக்கு தெரியும் இன்னைக்கு நான் தான் வேணும்னு மாத்தி படுத்தேன்” என்றவள் அதற்கு மேல் அவனை நேராக எதிர்கொள்ள முடியாமல் திரும்பி அந்த சுவற்றிலேயே முகத்தை மறைத்துக் கொண்டு சாய்ந்து நின்றாள்.

 

சில கணங்கள் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் நின்றிருந்தவனுக்கு அருவியின் வெட்கம் ஏதோ சொல்லாமல் சொல்ல, அவள் வார்த்தைகளை மீண்டும் தனக்குள் ஓடவிட்டான். மெல்ல அவள் பின்னால் நெருங்கி நின்றவன் அவள் காதருகே தன் மீசை உரச, “அருவி, நான் ரொம்ப மோசமானவனா இருந்திருக்கேன், என்னை உனக்கு உண்மையாவே புடிச்சிருக்கா?” என்றான் ஆழ்ந்த குரலில்

 

“எனக்கு உங்களோட இறந்த காலத்தை பத்தி கவலை இல்ல, இப்போ நீங்க நல்லவரா தானே இருக்கீங்க, அது போதும் எனக்கு. நீங்க தான் வேணும்னு விரதமிருந்து உங்களை கட்டிக்கிட்டவ நான், உங்களை எப்படி பிடிக்காம போகும்?” என்றாள் மெல்லிய குரலில்.

 

“அருவி, எனக்கும் உனக்கும் வயசு வித்தியாசம் 12 வருஷம், ரொம்ப அதிகம், நான் யாதவனோட ஒன்பது வயசு பெரியவன்” என்றவனை திரும்பி பார்த்து முறைத்தாள்.

 

“இது தாலி கட்டும்முன் யோசித்து இருக்கணும்னு சொல்றீயா? அந்த நேரத்துல ஏதோ ஒரு சக்தி என்னை உன் கழுத்துல தாலி கட்ட வச்சது?”

 

“அப்போ உங்களுக்கு என்னைய புடிக்காதா? ஏதோ கட்டாயத்தால தான் என்னை கட்டிக்கிட்டிங்களா? அதுக்கு தான் என்கிட்ட இருந்து விலகி விலகி போறீங்களா?” என்றாள் அருவி கண்களில் வலியுடன்

 

“அய்யோ அப்படி இல்ல அருவி, குற்ற உணர்வுல இருந்த நான் உன்னோட வாழ்க்கையை எதுக்கு கெடுக்கணும்னு தான் யோசிச்சேன். மத்தபடி நீ எனக்கு மனைவியா கிடைச்சது எனக்கு வரம்” என்று பின்னாலிருந்தே அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான்.

 

அருவி இப்போது அவன் புறம் நன்றாக திரும்பி நின்று, அவனுடைய பட்டன் போடாத சட்டை காலரை ஒரு கையால் தன்னை நோக்கி இழுத்தாள், மறுகையை அவன் முகத்தருகே கொண்டு சென்று தன் விரல்களால் அவன் நெற்றி, புருவம், நாசி, இதழ்கள் என வருடி அவன் பாதி திறந்திருந்த சட்டையின் உள்ளே கைகளை நுழைத்து தன் ஆட்காட்டி விரலை மடக்கி அவன் நெஞ்சில் கதவை தட்டுவது போல தட்டினாள். அவன் சுடுகாட்டில் சிலையாக இருந்த போது செய்ததை போல இன்றும் செய்யவும் முரளி இறுக்கம் தளர்ந்து இதழ்பிரித்து சிரித்தான்.

 

மீண்டும் அவன் இதயக்கதவை தன் ஒற்றை விரலால் தட்டியவள், “உள்ளே வரலாமா?” என்றாள் புன்னகையுடன்

 

“அன்னைக்கு முதல் தடவை தட்டினப்பவே உள்ளே வந்துட்ட அருவி” என்றவன் இப்போது தயக்கங்களை தூர எறிந்து அவளை இறுக அணைத்தான். இந்த அணைப்பில் காதலை உணர்ந்தவள் மேலும் அவனுக்குள் புதைந்துக் கொண்டாள்.

 

முரளி கிருஷ்ணா தன்னவளின் கன்னத்தை தன் இருகைகளில் ஒரு பொக்கிஷம் போல பற்றி, அவள் கண்களோடு தன் கண்களை கலக்கவிட்டான். நாணத்தில் அவள் பார்வை கீழ்நோக்க, நெற்றியில் தன் முதல் முத்திரையை தொடங்கி, கண், மூக்கு, கன்னம் என்று தன் அச்சாரங்களை பதித்து விட்டு, இப்போது அருவியின் இதழருகே தயங்கி நின்றான். அவன் தயக்கத்தை புரிந்துக் கொண்டவளாக அவன் உயரத்திற்கு தன் கால் கட்டைவிரலால் எட்டி நின்று, அவன் இதழோடு தன் இதழ் உரசும் படி நின்றாள். இதழோடு இதழ் உரசியது இரு மின்கம்பிகள் உரசிக் கொண்டதுபோல இருவருக்குள்ளும் தீ ஜூவாலையை ஏற்பட்டுத்த முரளி தயக்கத்தை மறந்து தன்னவளின் இதழ்களை களவாட தொடங்கிவிட்டான்.

 

தொடங்கியது அவளாயினும் தொடர்ந்தது அவன் முறையானது. இருவருக்கும் இடையே முதல் நீண்ட நெடிய இதழ் முத்தம், மென்மையில் தொடங்கி வன்மைக்கு மாறி இருந்தது. அவன் கைகள் தயக்கத்துடன் முன்னேறி அவள் மேனியை அறிந்துக் கொள்ள முயல, அவள் நாணம் தாங்காமல் அவன் தோளில் சாய்ந்தாள்.

 

இப்போது தயக்கமின்றி அருவியின் இடையை பற்றி தன் உயரத்துக்கு மேலே தூக்கி தட்டாமலை சுற்றினான். அவள் பிடிமானம் இல்லாமல் அவன் மீதே சரிய, அவளின் மென்மைகள் இப்போது முரளி என்னும் முரடனின் முகத்தருகே இருக்கவும் மூர்ச்சையாகாத குறை தான் அவனுக்கு. அதே மயக்கத்தோடு அவளை கட்டிலில் கிடத்தி அருவியென்னும் வற்றாத ஜீவ நதியில் தன்னுடைய தீரா மோகத்தையும் தாகத்தையும் தீர்த்துக் கொள்ள தொடங்கி விட்டான். 

 

தயங்கி தயங்கி இருந்தவன் இப்போது தனக்குள் கட்டுப்படுத்தி இருந்த காட்டாற்று வேகத்தை காட்டவும் அருவி சற்றே திணறித்தான் போனாள். அவள் கைகைள் தன்னிச்சையாக ஆங்காங்கே அவனுக்கு தடை போட, அவள் கைகளை சிறை செய்து, தான் மட்டும் சுதந்திரமாக அவளுக்குள் முழ்க தொடங்கி விட்டான். இருவரும் ஈருடல் ஓருயிராய் கலந்து தாம்பத்ய வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தனர்.

 

*******

 

யாதவ் கிருஷ்ணா தன் மனைவியுடன் பலதரப்பட்ட இடங்களுக்கு சென்று பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி மக்களை காப்பாற்றி இருந்தான். கடைசியாக அருவிக்கு பிரச்சனை என்பதால் மனைவியை அழைத்துக் கொண்டு மதுரைக்கு வந்திருந்தான். அவன் திட்டப்படி முரளிகிருஷ்ணாவிற்கும் அருவிக்கும் திருமணம் செய்து முடித்தாயிற்று, ஆனாலும் இன்னும் என்னவோ கடமை பாக்கியிருப்பதாக அவன் உள் மனது சொல்லிக் கொண்டே இருந்தது.

 

இருவரும் அழகர் கோயிலை ஒட்டி இருந்த வைகை நதியோரம் அமர்ந்து கொண்டிருந்தனர். செந்தாழினி தன் கணவன் தோள் மேல் தலைசாய்த்து அவன் ஒற்றைக் கரத்தை தன் இருகைகளால் சிறைப்பிடித்திருந்தாள்.

 

“என்னை இப்படி உன் கைக்குள்ளவே வச்சிக்கறதா உத்தேசமா ராதி?” என்றான் சீண்டலாக

 

“ஆமா, விட்டா உங்களை யாராச்சும் கொத்திட்டு போயிடுவாங்க. எல்லாருக்கும் என் புருஷன் மேல தான் கண்ணு” என்று புலம்பினாள்.

 

அதைக்கேட்டு சத்தமாக சிரித்தான் யாதவ் கிருஷ்ணா. சற்று முன்பு கோயிலுக்கு வந்த சில இளம்பெண்கள், யாதவ் தனியாக நின்றிருப்பதை பார்த்து அவனிடம் வந்து பேச்சு கொடுத்தனர். “if you dont mind, are you single?” என்றனர் கோரசாக

 

“ஏன் கேக்கறீங்க?” என்றான் புரியாமல்

 

“இவ்வளவு நேரம் எங்களுக்கு வரப்போற புருஷன் எப்படி எல்லாம் இருக்கணும்னு கோவில்ல வேண்டிக்கிட்டமோ அதே போல இருக்கீங்க, யு ஆர் சோ ஆன்ட்ஸ்சம் அன் ஹாட்” என்றனர். (you are so handsome and hot)

 

அதைக்கேட்டு சத்தமாக சிரித்த யாதவ்வின் வசீகரமான தோற்றத்திலும் ஆளுமையான உயரத்திலும் அந்த பெண்கள் மயங்கி நின்றனர். பிரசாத்தை வாங்கிக் கொண்டு வந்த செந்தாழினிக்கு இந்த காட்சியை கண்டதும் காதில் புகை வராத குறை தான். செந்தாழினியின் முகம் செங்கொழுந்தென மாறி கனன்று கொண்டிருந்ததை பார்த்த யாதவ் அப்படியே சிரிப்பை நிறுத்தினான்.

 

“ராதி நான் எதுவும் பண்ணலடி, அவங்க தான்” என்று மாட்டிக் கொண்ட சிறுவன் போல திருதிருவென விழித்தான்.

 

அப்போது தான் பின்னாடி இருந்த பெண்கள் செந்தாழினியை திரும்பி பார்த்தனர். அவளோ அவர்களை கண்டுக்கொள்ளாமல் கணவனை பார்த்து பற்களை கடித்தாள், “அவங்க சிங்கிளானு கேட்டா ஆல்ரெடி மிங்கிளுனு சொல்ல வேண்டியதுதானே, என்ன இளிப்பு வேண்டி கிடக்கு” என்றாள் அடிக்குரலில்.

 

“லேடிஸ், நாம இன்னொரு நாள் பேசலாம் இப்போ காலநிலை சரியில்ல, நீங்க கிளம்புங்க” என்றான், அந்த பெண்கள் சற்று நகர்ந்ததும் எட்டி அவன் காதை பிடித்து திருகினாள் மனைவி. “இன்னொரு நாள் பேசுவீங்களா? இப்போ காலநிலை சரியில்லையா? இதுக்கு தான் இந்த கிருஷ்ணன் பேர் வச்சங்களை நம்ப கூடாது” என்று மூக்கை உறிஞ்சினாள்.

 

“ஏய் ராதி சும்மா விளையாடினேன்டி” என்று மனைவியை தோளோடு அணைத்தவன், “என்னோட பேரு யாதவ் கிருஷ்ணாவா இருக்கலாம், ஆனா உனக்கு நான் ஸ்ரீராமன்டி” என்றான்

 

“நம்பிட்டேன்” என்று திரும்பிக் கொண்டாள், “ஏய் நம்புடி” என்றபடி அவளை சமாதானம் செய்ய தன் இடையில் இருந்த பான்சூரி முரளியை எடுத்து வாசித்தான். அந்த இசைக் கொடுத்த இனிமையில் அவள் சற்றே சாந்தமாகி அவன் தோளோடு தலை சாய்ந்து அவன் கரத்தை தன் இருகரங்களால் சிறைப்பிடித்துக் கொண்டாள். தன்னவளின் உரிமை போராட்டத்தை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவன் பார்வை ராதியின் முழங்கையில் கூர்மையாக பதிந்தது. ராதியின் கரத்தில் படிந்திருந்த சாம்பலை பார்த்து “ராதி இங்கே பாரு, உன் கையில என்ன இது” என்றான்.

 

“ப்ச் ஏதோ டஸ்ட் யாதவ், காத்துல வந்திருக்கும்”

 

“இல்ல மேல இருந்து வந்தது போல இருந்துச்சு, இது என்னனு லேப் டெஸ்ட் பண்ணிடலாம் வா” என்றான்

 

“என்ன இதுக்கு போய் ஓவர் ரியாக்ட் பண்றீங்க, ஜஸ்ட் சாம்பல் தானே, காத்துல வந்து விழுந்திருக்கும்” என்றாள் சுரத்தே இல்லாமல்

 

“இல்ல ராதி, எனக்கு ஏதோ சரியில்லனு கொஞ்ச நாளா தோணிட்டு இருக்கு, இப்போ இந்த சாம்பல் என்னனு பாத்திடணும், இது மூலமா எனக்குள்ள இருக்கிற கேள்விக்கு விடை தெரிஞ்சுடும்னு நினைக்கிறேன்” என்றான் தீவிரமாக

 

“சரி வாங்க, லேப் டெஸ்ட் பண்ற இடத்தை விசாரிச்சு போய் என்னனு பார்க்கலாம்” என்றாள்.

 

இருவரும் ஒரு ரசாயன ஆய்வகத்திற்கு சென்று செந்தாழினியின் மேல் விழுந்த சாம்பல் துகளை ஆய்வு செய்தனர். “இது எதையோ எரிச்சதால வந்த சாதாரண சாம்பல் இல்ல, நம்ம பூமில கிடைக்காத அரிய வகை தாதுப்பொருட்கள் இதுல அடங்கியிருக்கு, உதாரணமாக அரியவகை மக்னீசியம், சிலிக்கேட், இரும்பு, சோடியம்னு எல்லாம் கலந்திருக்கு, முக்கியமா இது வெடிச்சு சிதறனதால வந்த சாம்பலா இருக்க அதிக வாய்ப்பு இருக்கு” என்றார் அங்கிருந்த ஒரு ஆய்வாளர்.

 

“என்ன சொல்றீங்க வெடிச்சு சிதறனதுனா, யாராவது வெடிகுண்டு வச்சிருப்பாங்களா? அது வெடிச்சு தான் சாம்பலா ஆயிடுச்சா?” என்றான் யாதவ்.

 

“அப்படி இருக்காது, வெடிகுண்டுனா இந்நேரம் எதாவது சோதாரம் ஏற்பட்டிருக்கும், கவர்மெண்ட்க்கும் தெரிஞ்சிருக்கும். இது அது மாதிரி இல்ல, என்னனு சரியா சொல்ல தெரியல” என்று யோசனையில் ஆழ்ந்தார்.

 

“யாதவ், நான் ஏற்கனவே இதை பத்தி படிச்சிருக்கேன், வானத்திலிருந்து பூமிக்கு வரும் எரிகற்கள் பூமியை நோக்கி வரும்போது வர்ற வழியிலேயே வளிமண்டலத்துல இருக்கற காத்தோடு எபெக்ட்ல வெடிச்சு சிதறிடுமாம், அதோட சாம்பலா இருக்க வாய்ப்பு இருக்கு” என்ற செந்தாழினியை மெச்சுதலாக பார்த்தார் அந்த ஆய்வாளர்.

 

“எக்ஸாட்லி மிஸஸ் யாதவ், நானும் இதையே தான் நினைச்சேன். ஆனா சரியா தெரியாம எப்படி சொல்றதுனு தான் தயங்கினேன். பொதுவா சாம்பல் கூட பூமியை வந்தடையாது, காத்தோடு கலந்திடும். ஆனா உங்க கையில எப்படி சாம்பிள் கலெக்ட் பண்ற அளவுக்கு வந்துச்சுனு தான் ஆச்சரியமா இருக்கு” என்றார் அவர்.

 

“ஓகே சார், தேங்க்ஸ் பார் யுவர் இன்பர்மேஷன், ராதி வா கிளம்பலாம்” என்று மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான் யாதவ்.

 

“ராதி ஏதோ எரிகல்னு சொல்லிட்டு இருந்தியே அதைப்பத்தி விவரமா சொல்லு”

 

“யாதவ் நீங்க பதட்ட படற அளவுக்கு இது பெரிய விஷயமில்ல. பிரபஞ்சத்துல நம்ம பூமி சூரியனை சுத்தற மாதிரி எண்ணிலடங்காத கற்களும் பாறைகளும் பால்வெளி மண்டலத்துல சுத்திட்டு இருக்கு. அதுல சில கற்கள் தன்னோட பாதை மாறி பூமியில வந்து விழறது உண்டு, அப்படி விழும் போது அது வளிமண்டலத்துலயே எரிஞ்சு சாம்பலாயிடும். அதை தான் நாம எரிகற்கள் எரிநட்சத்திரம்னு சொல்லுவோம்.

 

தினமும் சராசரியா பத்து லட்சத்துக்கும் குறையாத எரிகற்கள் சின்னதும் பெருசுமா நம்ம பூமிக்கு வந்து வெடித்து சிதறிட்டு தான் இருக்கும், இராத்திரில நட்சத்திரங்களோட வெளிச்சத்துல அது அவ்வளவா தெரியாது, பகல்ல நமக்கு சுத்தமா தெரியாது, அதிகாலை நேரத்துல சிலது கண்ணுக்கு தெரியும். மத்தபடி நமக்கு இதனால எந்த பாதிப்பும் இல்ல. ஒரு வேளை என் மேல விழுந்த சாம்பல் அப்படிப்பட்ட ஒரு எரிகல் எரிஞ்சதால கூட வந்து விழுந்திருக்கலாம், ஆனா அது கொஞ்சம் அளவுல பெரிசா இருந்திருக்கும்னு நினைக்கிறேன், அதனால தான் அதோட சாம்பல் பூமியோட தரை வரைக்கும் வந்திருக்கு” என்றாள் யோசனையோடு.

 

“அது தான் என்னோட சந்தேகம் ராதி, பூமியை வந்து அடையறதுக்கு முன்னாடியே எரிஞ்சு சாம்பலாகி காத்தோடு கலக்கறது, இப்போ ஏன் சரியா உன் கையில வந்து விழணும்? அதுமட்டுமில்லாம எனக்கும் ஏதோ நடக்க போகுதுனு உள்ளுணர்வு இருந்துட்டே இருக்கு, இந்த மாதிரி ஒரு எரிகல்லால பூமிக்கு பிரச்சனை வருமாங்கிறது தான் என்னோட சந்தேகம்” என்ற யாதவனை அப்படியும் இருக்குமா? என்று அதிர்ச்சியோடு பார்த்த செந்தாழினி.

 

“எரிகல்னாலே எரிஞ்சுடும் யாதவ், பிரச்சனைனு வந்தா அது பெரிய பெரிய விண்கல்லால தான் வரும்”

 

அதே நேரம் முரளி கிருஷ்ணாவின் தனிப்பட்ட எண்ணிலிருந்து யாதவ்விற்கு அழைப்பு வந்தது. இவன் எதற்காக அழைக்கிறான்? என்ற யோசனையோடு போனை பார்த்த யாதவ் கிருஷ்ணாவிற்கு அதை எடுத்து அவனோடு பேச விருப்பமில்லை. அந்த பக்கம் இருந்த முரளியும் அதை புரிந்துக் கொண்டானோ என்னவோ, வாட்ஸ்அப்பில் தொடர்ந்து சில செய்திகளை அனுப்பிக் கொண்டே இருந்தான்.

 

யோசனையோடு கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். யாதவ் வாட்ஸ்அப்பை திறந்து முரளி அனுப்பிய செய்திகளை திறந்து பார்த்தவன் அதிர்ச்சியுடன் மனைவியை பார்த்தான், அவள் கண்களிலும் அதே அதிர்ச்சி!

 

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top