வேங்குழல் 30

அருவியின் செய்கை புரியாமல் முரளி கிருஷ்ணா அவள் பின்னாலே சென்றான். அருவி அவசரமாக தன் கண்களை துடைப்பதை பார்த்து கவலைப்பட்டான். ‘இவளுக்கு நான் தான் சிலையாக இருந்தவன் என்று தெரியுமா? தெரியாதா? ஒரு வேளை எல்லாம் தெரிந்து சாபத்தால் தானே சிலையாகி இருக்கான் என்று என்னை வெறுக்கிறாளா? யோசனையுடன் அருவியை பார்த்தான்.

 

“உனக்கு விருப்பம் இல்லைனா?” என்றவனை வெடுக்கென்று திரும்பி பார்த்து முறைத்தாள்.

 

‘ஊர் ஜனங்க முன்னாடி தாலிய கட்டிட்டு கோயில்ல மாலையும் மாத்திட்டு விருப்பத்தை பத்தி பேசறானே’ என்று எரிச்சலாக இருந்தது.

 

முரளிக்கு அவனை நினைத்தே விநோதமாக இருந்தது. முன்னாடி எல்லாம் இவன் தான் எல்லாரையும் உதாசீனப்படுத்துவான். அவன் செய்கையாலும் பேச்சாலும் அவர்கள் மனம் வருந்துமே என்று யோசித்தது கூட இல்லை. இப்போது அருவிக்கு தாலிக் கட்டி தவறு செய்து விட்டேனா என்று கவலைப்படுகிறான். அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிறான். அதற்கு மேல் அவளுக்கு என்ன சமாதனம் செய்வது என்று புரியாமல் காரை நோக்கி சென்றான். மீண்டும் அவர்கள் அனைவரும் சென்னையை நோக்கி பயணித்தனர்.

 

“அருவி தான் எனக்கு மருமகளா வரணும்னு ஆசைப்பட்டேன், அது எப்படியோ நிறைவேறிடுச்சு” என்று செல்வி சந்தோஷமாக பேசிக் கொண்டு வந்தார். வெற்றிவேந்தனுக்கும் முரளியின் திருமணம் நிறைவை கொடுத்தது. அவர்கள் வீட்டை அடைந்ததும் வேலு தன்னுடைய அறைக்கு சென்று எதையோ கொண்டு வந்து முரளியிடம் நீட்டினார்.

 

“என்ன மாமா இது?” என்றான் புருவம் சுருக்கி

 

“ஐயா, நான் வேலை செஞ்சு சம்பாரிச்ச பணம் எல்லாம் பேங்க்ல போட்டு டெபாசிட் பண்ணியிருக்கேன். எனக்குனு யாரு இருக்கா, எல்லா செலவும் ஐயாவே பாத்துக்கிறார். எனக்கு அப்புறம் என் தங்கச்சிக்கு சேரட்டும்னு இருந்தேன். ஆனா இப்போ இந்த பணத்தை அருவிக்கு சீதனமா கொடுக்கறேன். எப்படியும் இது என் தங்கச்சி குடும்பத்துக்கு தானே போய் சேரும், அருவிக்கு தகப்பன் ஸ்தானத்துல இருந்து பிறந்த வீட்டு சீதனமா இதை வச்சிக்கோங்க” என்று பேங்க் பாஸ் புத்தகத்தையும் செக்கையும் அவன் முன்னால் நீட்டினார்.

 

“மாமா என்ன இதெல்லாம்?” என்ற முரளியை பார்த்து, “முரளி வாங்கிக்க, அப்போதான் தனிக்கட்டையா வாழ்ந்த வேலுவுக்கு மனசு நிறைவா இருக்கும். அவனுக்குனு மகள் மருமகன் இருக்காங்கனு சந்தோஷப்படுவான், அருவிக்கும் அது மரியாதையா இருக்கும், வேலுக்கு செய்ய தான் நாம இருக்கோம் இல்ல” என்றார் வெற்றி வேலுவின் மனமறிந்து.

 

உடனே மகன் தந்தை பேச்சை தட்டாமல் வேலுவிடமிருந்து அதை வாங்கி அருவியிடம் நீட்டினான். தலைகுனிந்து இருந்தவள், நிமிராமல் அவன் கையில் இருந்ததை கவனமாக விரல் படாமல் வாங்கி கொண்டாள். அவளை ஆழ்ந்து பார்த்து ஒரு பெருமூச்சு விட்டவன், “நான் போய் ரெஸ்ட் எடுக்கறேன்” என்று தன் அறைக்கு போக எத்தனித்தான்.

 

“முரளி, அருவியை உன்னோட ரூமுக்கு அழைச்சிட்டு போ, அவளும் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்றார் வெற்றி

 

“வா” என்று அவளை நாேக்கி கையை நீட்டினான்.

 

“நானே வரேன்” என்றவளை ஆழ்ந்து பார்த்து விட்டு முன்னால் நடந்தான்.

 

அருவி அறைக்குள் நுழைந்ததும் கதவை சாத்தி தாழிட்டான். அதுவரை குனிந்த தலை நிமிராமல் இருந்தவள் இப்போது அதிர்ச்சியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் கைகளை கட்டிக் கொண்டு அவளை தான் ஆராய்ச்சியாக பார்த்தான். என்ன செய்ய போகிறானோ என்று பேந்த பேந்த விழித்தாள்.

 

“பயப்படாத, சில விஷயங்கள ஓபனா பேச தான் கதவ சாத்தினேன்”

 

“சொல்லுங்க” என்றாள் தடுமாறிய குரலில்

 

“உனக்கு என்னை நிச்சயமா புடிக்கும்னு நினைச்சு, ஓவர் கான்பிடன்ட்ல உன் கழுத்துல தாலி கட்டிட்டேன். அதுமட்டுமில்லாம ஏதோ என்னை இயக்கின மாதிரியும் இருந்துச்சு. உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லனு நல்லாவே தெரியுது, ஏற்கனவே செஞ்ச பாவத்தையே எப்படி சரி செய்யறதுனு தெரியாம தவிச்சுட்டு இருக்கேன். இப்போ நான் கட்டாய கல்யாணம் பண்ணிக்கிட்ட மாதிரி குற்ற உணர்ச்சியா இருக்கு, இதுக்கு என்ன செய்யலாம்னு நீயே சொல்லு, உன்னோட முடிவு எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே”

 

அவன் பேச்சில் திகைத்தவள், “எனக்கு உங்களை கட்டாயம் புடிக்கும்னு எப்படி நினைச்சீங்க? பெரிய பணக்காரர்னு உங்களை ஏத்துப்பேன்னு நினைச்சிட்டிங்களா?” 

 

“ச்சேச்சே அப்படி எல்லாம் இல்ல, அதுக்கு வேற காரணம் இருக்கு”

 

“என்ன காரணம்?”

 

“உனக்கு ஏன் இந்த கல்யாணத்துல இஷ்டமில்லனு ஓபனா சொல்லு, அப்புறம் நானும் என்னோட காரணத்தை சொல்றேன்”

 

அருவியிடம் மெளனம், சொல்லலாமா வேண்டாமா? சொன்னால் என்னை பைத்தியம்னு நினைப்பானோ, தயக்கத்துடன் முரளியை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு அருவி, நான் எதுவும் உன்னை தப்பா நினைக்கமாட்டேன். என்னை பத்தி உனக்கு முன்னாடியே தெரியுமா? அதனால தான் என்னை வெறுக்கறீயா?” என்றான் ஆழ்ந்த குரலில்.

 

“நீங்க என் கழுத்துல தாலி கட்டினதுக்கு அப்புறம் தான் முதன் முதலா உங்களை பாத்தேன், உங்களை பத்தி எனக்கெப்படி தெரியும்?” என்று அவனை எதிர்கேள்வி கேட்டாள்.

 

“சரி ஓகே, உன் மனசுல என்ன இருக்குனு ஓபனா சொல்லு”

 

“அது வந்து எப்படி சொல்றதுனு தெரியல, சொன்னா என்னை பைத்தியம்னு தான் நினைப்பீங்க”

 

“பரவால்ல சொல்லு, நானே கொஞ்ச நாள் பைத்தியமா இருந்தவன் தான். இப்போ தான் தெளிஞ்சிருக்கு”

 

“எங்கம்மா செத்ததுக்கு அப்புறம் நான் அடிக்கடி சுடுகாட்டு பக்கம் போய்ட்டு வந்துட்டு இருந்தேன். அப்போ அங்கே ஒரு சிலையை பாத்தேன், அது நல்லா வாட்டசாட்டமா ஐயனார் கணக்கா இருந்துச்சு, அந்த சிலை யார் கண்ணுக்கும் தெரியல, எனக்கு மட்டும் தான் தெரிஞ்சது, ஒரு நாள் என்னோட மானத்தையும் காப்பாத்துச்சு” என்றபடி அவன் முகத்தை பார்த்தாள். கண்டிப்பாக கேலியாகவோ ஏளனமாகவோ ஏதோ சொல்ல போகிறான் என்று அவனையே கூர்ந்து பார்த்தாள்.

 

ஆனால் அவனோ, “ம், அப்புறம்?” என்றான்

 

தொண்டையை செருமிக் கொண்டு, “எனக்கு அந்த சிலையை தான் கல்யாணம் கட்டிக்கணும்னு தோணுச்சு” என்றாள் தலையை குனிந்தபடி

 

உணர்ச்சிகளை துடைத்து இருந்தவனின் முகத்தில் இப்போது மலர்ச்சி, கண்களில் மின்னல், அருவியை இப்போது ஆர்வத்துடன் பார்க்க தொடங்கினான்.

 

அவள் அவனை நிமிர்ந்து பார்க்காமலே பேச தொடங்கினாள். “ஏன் அப்படி தோணுச்சுனு தெரியல, அந்த சிலை மனுஷனா வரணும்னு வேண்டிக்கிட்டு 48 நாள் விரதம் இருந்தேன். கள்ளழகர் கோயிலுக்கு போய், அந்த சிலையே மனுஷனா வந்து என் கழுத்துல தாலி கட்டணும்னு வேண்டிக்கிட்டேன். என் கையில பூ கூட விழுந்துச்சு. ஆசையோட நான் அந்த சிலைய பாக்க சுடுகாட்டுக்கு ஓடினேன். ஆனா அந்த சிலை அங்கே இல்ல. அதை பாத்ததும் எனக்கு என்ன செய்யறதுனு தெரியல. அன்னைக்கு நைட் பூரா தூக்கமே வரல. சிலை மனுஷனா ஆகலனா கூட பரவால்ல, அந்த சிலை தான் எனக்கு புருஷனா வரணும்னு எனக்கு தோணுச்சு. அதனால தான் அன்னைக்கு ராத்திரி சுடுகாட்டுக்கு போனேன். ஆனா அந்த மாரியும் மாடசாமியும் என்னை பத்தி இல்லாததையும் பொல்லாததையும் ஊர்ல சொல்லி என்னைய முச்சந்தில நிக்க வச்சிட்டாங்க” என்றவளின் கண்களில் இப்போது கண்ணீர் வழிந்தது.

 

முரளி கிருஷ்ணாவிற்கு வானத்தில் பறப்பது போல இருந்தது. அவனுடைய தோற்றத்திற்கும் பதவிக்கும் பணத்திற்கும் எத்தனையோ பெண்கள் அவன் பின்னால் அலைந்திருக்கிறார்கள். ஆனால் சாபத்தால் சிலையான தன் மேல் ஒருத்தி காதல் கொண்டு தனக்காக விரதம் இருந்திருக்கிறாள். ஆக அவளுடைய விரதத்தால் தான் எனக்கு சாப விமோசனம் கிடைச்சதா?

 

அவனை மேலும் யோசிக்க விடாமல், “என்ன இருந்தாலும் அந்த சிலையை என் புருஷனா நினைக்க தொடங்கிட்டேன். திடீர்னு நீங்க என் கழுத்துல தாலி கட்டினதும் என்ன பண்றதுனே தெரியல, இந்த கல்யாணத்தை ஏத்துக்கவும் முடியல, அதே நேரம் ஊரறிய தாலி கட்டின உங்களை வேணாம்னு எடுத்தெறியவும் முடியல” என்று அருவி தன் மனதை வெளிப்படையாக சொன்னாள்.

 

முரளி இப்போது உரிமையுடன் அவளருகில் நெருங்கி நின்றான். திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே அவள் இருகரங்களையும் தன் இருகரங்களால் பற்றி, அவளின் உள்ளங்கைகளை அவன் இருபக்க கன்னத்தில் வைத்தான். அவன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறான் என்பதை அவன் கண்களில் இருந்த பளபளப்பு மூலம் உணரமுடிந்தது. 

 

“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்? நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? என்னோட உணர்வுக்கு மதிப்பு தரமாட்டீங்களா?” என்றாள் வேதனையுடன். “நான் காதலிச்சது ஒரு சிலை தானேனு, என்னோட காதலை லேசா நினைச்சிட்டீங்களா? என் காதலை அவ்வளவு சீக்கிரம் மறந்துட்டு உங்களை ஏத்துக்க முடியாது” என்று கோபத்துடன் அவனை பார்த்தபடி அவன் கைகளில் சிக்கி இருந்த அவளின் கரத்தை அவசரமாக உருவிக் கொள்ள முயற்சி செய்தாள்.

 

அவளின் முதல் கேள்விக்கு பதிலாக இல்லை என்பது போல பலமாக தலையசைத்தான், “உன்னோட காதலை நீ மறக்க வேணாம் அருவி” என்றவன் இப்போது அவளின் கரத்திற்கு விடுதலை கொடுத்து அவளை பார்த்துக் கொண்டே தன் சட்டை பட்டனை கழட்டினான்.

 

“என்ன பண்றீங்க?” என்று அதிர்ந்து விழித்தவள் சட்டென திரும்பி நின்றுக் கொண்டு அங்கிருந்து செல்ல எத்தனித்தாள். ஆனால் முரளி அவளின் ஒரு கரத்தை அழுத்தமாக பற்றியபடி தன் மற்றொரு கரத்தால் சட்டையை கழட்டினான்.

 

முரளியின் பெரிய கையில் சிக்கியிருந்த தன் கரத்தை முறுக்கியும் சுழட்டியும் கொண்டிருந்தவளின் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது. அவனோ அவளின் கரத்தை இறுக்கமாக பற்றி தன் வெற்று மார்பில் படர விட்டான். திரும்பி நின்றிருந்தவள் தவிப்புடன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள். முரளி அவள் கரத்தை பற்றி தன் வெற்று மார்பில் வைத்து அவளுடைய ஒரு விரலைப்பற்றி  அவன் தோள்பட்டையில் இருந்த கோடு போன்ற தழும்பில் வைத்து அழுத்தினான். அவன் ஏதோ சொல்லாமல் சொல்வதை உணர்ந்த அருவி பட்டென்று கண்களை திறந்து அவனை திரும்பி பார்த்தாள்.

 

அவன் தோள்பட்டையில் இருந்த தழும்பை உற்று நோக்கினாள், இதே தழும்பை எங்கே பார்த்திருக்கிறோமே என்று அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தவளின் ஆட்காட்டி விரலை சற்றே மடக்கி அவன் நெஞ்சில் தட்ட செய்தான். அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக முரளியின் கண்களை நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. இது எப்படி சாத்தியம்? அன்று அவளுக்கும் சுடுகாட்டில் இருந்த அந்த சிலைக்கும் நடுவே நடந்த ஒரு விஷயம் இவனுக்கு எப்படி தெரியும்? ஒரு வேளை அந்த சிலையே இவன் தானா? கண்ணீரை அவசரமாக துடைத்துக் கொண்டு அவன் கண்களை கேள்வியாக பார்த்தாள்.

 

அவன் ஆமாம் என்பது போல இமை மூடி திறந்தான். அவ்வளவு தான் அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டு கதறி அழுது விட்டாள் அருவி. பதில் பேசாமல் முரளி அவளின் தலையை கோதிவிட்டான். வெகுநேரம் அழுது தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டவள் நிமிர்ந்து அவன் கண்களை பார்த்தாள்.

 

“சிலையா இருந்த நீங்க எப்போ எப்படி மனுஷனா மாறினீங்க?”

 

அவள் கன்னத்தை தன் இருகரங்களால் பற்றி அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி “நீ சொன்னீயே, அழகரோட சித்திரை திருவிழா, அன்னைக்கு தான் மனுஷனா மாறினேன். ஆனா எப்படினு அப்போ எனக்கு தெரியல, இப்போ தான் தெரிஞ்சது” என்றான்.

 

“இப்போ என்ன தெரிஞ்சது?” என்றாள் குழப்பத்துடன்

 

“உன்னோட தீவிர வேண்டுதலால தான் எனக்கு சாப விமோசனம் கிடைச்சிருக்கு”

 

“சாப விமோசனமா?”

 

“ஆமா அருவி, சிலையா இருந்த நான் எப்படி மனுஷனா மாறினேன்ங்கிறத விட மனுஷனா இருந்த நான் எப்படி சிலையா மாறினேன்னு தான் உனக்கு முதல்ல தெரியணும்” என்றவன் நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லி முடித்தான்.

 

“நீங்க சொல்றது எல்லாம் நிஜமா? இப்படி எல்லாம் கூட இந்த காலத்துல நடக்குமா? என்னால நம்பவே முடியலயே”

 

“நீ சிலையா இருந்த என்னை விரும்பினது எவ்வளவு உண்மையோ, அதே போல தான் நான் சொன்னது எல்லாம் உண்மை. இப்போ சொல்லு, இவ்வளவு கொடுமைக்காரனா இருந்த என்னை இப்பவும் நீ ஏத்துக்க தயாரா இருக்கியா?”

 

அருவியின் சில நிமிட மெளனத்தை கூட தாங்க முடியாமல், “இனிமே யாதவ் முகத்துலயும் அவன் மனைவி முகத்துலயும் எப்படி முழிப்பேன்னு தெரியல. மன்னிக்க சொல்லி கேட்கறதுக்கு கூட எனக்கு தகுதி இருக்கானு தெரியல. எனக்கு தெரியும் அருவி, எனக்கும் அந்த மாரிக்கும் பெரிசா வித்தியாசம் இல்ல. சொல்ல போனா அவனை விட மோசமானவனா இருந்திருக்கேன். சுடுகாட்டுல கல்லா இருந்த எனக்கு புத்தி வரதுக்கு முதல் காரணமா இருந்தவ நீ தான், நீ என்ன தண்டனை கொடுத்தாலும் அதுக்கு நான் கட்டுப்படுறேன்”

 

“எனக்கு என்ன சொல்றதுனு தெரியல, என்ன தான்  நீங்க என் புருஷனா இருந்தாலும் நீங்க செஞ்சது ரொம்ப பெரிய பாவம் தான். அதுக்கான தண்டனையும் அனுபவிச்சு இருக்கீங்க, செஞ்ச தப்பை  உணர்ந்து மனுஷனா வாழ முடிவெடுத்த பின்னாடி இதுல நான் மறுபடியும் தண்டனை கொடுக்க என்ன இருக்கு? உங்களுக்காக உங்களோட சேர்ந்து நானும் யாதவன்கிட்டயும் செந்தாழினிகிட்டயும் மன்னிப்பு கேக்கறேன்” என்றவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு அவள் தோளில் முகம் புதைத்தவனின் கண்களில் வழிந்த கண்ணீர் அவள் கழுத்தை நனைத்தது.

 

“இது போதும் அருவி, உண்மை தெரிஞ்சா நீ என்னை வெறுத்துடுவீயோனு நினைச்சேன்” என்றவன் மீண்டும் அவள் தோளில் முகம் புதைத்தான்.

 

“நீங்க மறைக்காம உண்மையை சொன்னதால நான் உங்களை முழுசா நம்பறேன்” என்றவளை மேலும் தனக்குள் இறுக்கினான். ஆறுதல் தேட அவன் அவளை தனக்குள் அழுத்த அழுத்த, அவளுக்கு இப்போது ஒரு மாதிரியாக இருந்தது. முதல் முறையாக ஒரு ஆடவனின் வலிய கரத்திற்குள் கோழிக்குஞ்சாக இருந்தவளின் மொத்த உடலும் அவன் மேனியில் அழுத்தமாக உரசிக் கொண்டு இருந்தது. அவளுடைய அவஸ்தை புரியாமல் அவன் மேலும் அவள் கழுத்திலேயே தன் முகத்தை புரட்டி கண்களை துடைக்கவும் அருவியின் உடல் சிலிர்த்தது. கண்களோட அவன் உதடுகளும் அல்லவா அவளின் கழுத்தை உரசி சென்றது, புது வித அவஸ்தையில் சட்டென அவனிடமிருந்து விலகி நின்றாள்.

 

“என்னாச்சு” என்றபடி கேள்வியாக அவன் அவளை பார்க்க, அவளின் முகம் தன் கருமை நிறத்தை மீறி ரத்தமென சிவந்திருந்தது. தலையை குனிந்து கொண்டு “நீங்க ரெஸ்ட் எடுங்க, நான் அத்தைக்கு எதாவது உதவி செய்யறேன்” என்றபடி வெளியேற போனாள்.

 

“என்கூட உன்னையும் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்களே அருவி” என்றான் ஆழ்ந்த குரலில்.

 

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திருதிருவென விழித்தாள். “பயப்படாதே நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன், டேக் யுவர் ஓன் டைம், நான் போய் குளிச்சிட்டு வரேன், நீ அதுக்குள்ள உன்னோட டிரஸ் மாத்திக்க” என்று விட்டு குளிக்க சென்றுவிட்டான்.

 

அவளை அணைத்து விட்டு அவனால் எப்படி எளிதாக கடக்க முடிகிறது? ஆனால் எனக்கு இன்னுமே இதயம் படபடனு துடிக்குதே என்று நினைத்தவள் அவசரமாக தான் கொண்டு வந்த பேகிலிருந்து இலகுவான புடவையை எடுத்து உடுத்திக் கொண்டாள். முரளி குளியலறையிலிருந்து “அருவி நான் வெளியே வரப்போறேன்” என்று குரல் கொடுத்தபடி வந்தான்.

 

அவசரமாக தன்னை சரிசெய்துக் கொண்டு நின்றவளிடம், “நீ என்னைய ஏத்துக்கிட்ட மாதிரி யாதவ்வும் செந்தாழினியும் மனசார என்னை மன்னிச்சிட்டாங்கனு தெரிஞ்சா தான் என்னால இயல்பான வாழ்க்கையை வாழ முடியும் அருவி. ஆனா நான் போன் பண்ணா என்கிட்ட பேசுவாங்களானு தெரியல” என்றான் வருத்தமான குரலில்

 

“போன் பண்ணி கொடுங்க நான் பேசறேன் யாதவ்கிட்ட” 

 

உடனே முரளி அருவியை ஹாலுக்கு அழைத்துச் சென்று வீட்டின் லேண்ட் லைனில் யாதவ்விற்கு  அழைத்து அருவியிடம் கொடுத்தான்.

 

“ஹலோ” என்ற யாதவ்வின் குரல் கேட்டதும், அருவி வழக்கம் போல “ஹேய் கருப்பா” என்றாள் துள்ளலுடன்

 

“ஹேய் கருப்பி, என்னடி எங்க அப்பா வீட்டு நம்பர்ல இருந்து கூப்பிடுறே? எப்போ அங்கே போனே” என்றான் ஆச்சரியத்துடன்.

 

“அது அது வந்து, உங்க அண்ணன்” எப்படி சொல்வது என்று தெரியாமல் திணறியவள், “யாதவா நான் இப்போ உனக்கு அண்ணி முறை” என்று சொல்லி முடித்தாள்.

 

“அருவி, என்ன சொல்ற? அந்த முரடன் முரளி உன்னைய கடத்திட்டு போய் கட்டாய தாலி கட்டிட்டானா? சொல்லு அருவி, வந்து அவனை உண்டு இல்லைனு ஆக்கிடுறேன்” என்று அந்த பக்கம் எகிறினான்.

 

பக்கத்தில் நின்றிருந்த முரளிக்கு யாதவ்வின் குரல் தெளிவாக கேட்டது ‘என்னமா நடிக்கிறான்டா சாமி, அலங்காநல்லூர்ல நடந்த ஊர்பஞ்சாயத்து அப்போ அங்கே தான் இருந்தான். புல்லாங்குழலோட மந்திர சக்தியில மாயாவி ஆகி அருவி கழுத்துல என்னை தாலியும் கட்ட வச்சு அப்புறம் மாரிய அவன் வாயால உண்மையை சொல்லவும் வச்சிட்டு எதுவுமே தெரியாத மாதிரி கேக்கறானே’ என்று மனசுக்குள் பொங்கினான் முரளிகிருஷ்ணா.

 

ஆனால் முரளியின் மனசாட்சியோ “அவன் அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் போல அண்ணனை மிஞ்சின புத்திசாலி. நீ யாதவனை மாட்டி விட ஒரு பெரிய சக்கரவியூகம் போட்ட, ஆனா அதுல மாட்டினது நீதான். தன்வினை தன்னை சுடும். ஆனா அவன் பாரு உன்னை விட சின்னவனா இருந்தாலும் உனக்கு நல்லது செய்யறமாதிரி ஒரு சக்கரவியூகம் போட்டிருக்கான்’ என்று அவனை இடித்துரைக்க அமைதியாக தன் மனைவியின் உரையாடலை பார்த்தான்.

 

“அப்படி எல்லாம் இல்ல கருப்பா, எனக்கும் அவரை பிடிச்சிருக்கு” என்றாள் மெல்லிய குரலில் கிசுகிசுப்பாக அவனுக்கு மட்டும் கேட்கும் படி

“என்ன அந்த முரடனையா புடிச்சிருக்கு? அவன் மோசமானவன், என்ன எல்லாம் பண்ணான் தெரியுமா?” என்றான் யாதவ் சத்தமாக

 

‘அடப்பாவி பிள்ளையை கிள்ளி விட்டுட்டு தொட்டிலை ஆட்ற கதையை கேள்வி பட்டிருக்கேன், இவன் தொட்டிலை ஆட்டிவிட்டுட்டு, பிள்ளையை கிள்ளி விடுறானே, இப்போ அருவி என்ன சொல்ல போறாளோ’ என்று மனைவியின் முகபாவனையை பார்த்தான்.

 

“எல்லாத்தையும் சொல்லிட்டாரு கருப்பா, அவர் செஞ்சதை நினைச்சு ரொம்பவே வருத்தப்படுறாரு. உன்கிட்ட மன்னிப்பு கேக்க நினைக்கிறாரு, இதோ இங்கன தான் இருக்காரு, பேசறீயா?” என்றாள்

 

“எனக்கு அவன்கிட்ட பேச விருப்பம் இல்ல” அந்தப்பக்கம் தெறித்து விழுந்தன வார்த்தைகள்

 

“கருப்பா எனக்காக அவரை மன்னிச்சுடு, குற்ற உணர்ச்சியில தவிக்கிறாரு. அவர் கவலையோட இருந்தா நான் எப்படி சந்தோஷமா இருக்க முடியும்? எனக்காக அவரை நீ மன்னிக்க கூடாதா?” 

 

“என்னடி புருஷனுக்கு சப்போட்டா, உன் புருஷனுக்கு பாவம் பாத்தா என் பொண்டாட்டி என்னை அடி வெளுத்துடுவா,  அது பரவாயில்லையா உனக்கு?” என்றான். அந்தபக்கம் ஏதோ சலசலப்பு கேட்டது, செந்தாழினி கணவனின் தோளில் இடித்தாள். 

 

“பாரு என் பொண்டாட்டி இப்போ கூட என்னைய அடிக்கிறா” என்று கூவினான் யாதவ், அவனிடமிருந்து போனை பிடுங்கி செந்தாழினி பேச ஆரம்பித்தாள்.

 

“அருவி, பழசை எல்லாம் மறந்துட்டு புதுவாழ்க்கையை தொடங்குங்க. உங்க இரண்டு பேருக்கும் என்னோட திருமண வாழ்த்துக்கள். செஞ்ச தப்புக்கு உண்மையாவே உன் புருஷன் வருந்தினார்னா, இனியாவது தொல்லியல் ஆராய்ச்சியில சுயநலமில்லாம வேலை செய்ய சொல்லு, அவரோட புத்திசாலிதனத்தை நல்லதுக்கு பயன்படுத்துனா நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது. முடிஞ்சா நாலு பேருக்கு நல்லது செய்ய சொல்லு, பாவ கணக்கு குறைஞ்சு, புண்ணியம் சேரும்” என்றாள்.

 

முரளிகிருஷ்ணா செந்தாழினியின் வார்த்தைகளை முழுவதுமாக ஏற்றுக் கொண்டதற்கு சாட்சியாக தலையை ஆமோதிப்பாக ஆட்டினான்.

 

அதன்பிறகு அருவியும் செந்தாழினியும் கொஞ்ச நேரம் பேசினார்கள், பின்பு வீட்டில் இருந்த அனைவரிடமும் யாதவ் பேசிவிட்டு போனை வைத்தான்.

 

முரளி தனக்குள் யோசித்தபடி பால்கனி பக்கம் சென்றான். அருவிக்கு இப்போது மனது நிறைவாக இருந்தது. கோயிலில் கள்ளழகரிடம் தான் கோபித்துக் கொண்டதை நினைத்து அவளுக்கு சிரிப்பாக இருந்தது. இன்னொரு முறை முரளியுடன் அங்கே சென்று வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். முன் தினம் தூங்காமல் சுடுகாட்டில் அலைந்தது, காலையில் ஊர்பஞ்சாயத்தில் திருமணம் முடிந்து சென்னை வந்தது வரை நினைத்து பார்த்தாள், ஒரு நாளில் எத்தனை பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. எல்லாம் நல்ல படியாக நடந்து முடிந்ததில் நிம்மதியாக உணர்ந்தவளுக்கு அலைச்சலின் காரணமாக தூக்கம் கண்களை சுழற்றியது. எதையும் யோசிக்காமல் முரளியின் அறைக்கு சென்று அவனுடைய கட்டிலில் படுத்து உறங்க தொடங்கினாள்.

 

முரளி கிருஷ்ணா வெகுநாட்களாக தொல்லியல் குறித்த வேலை செய்யாமல் போனதால் தன்னிடமிருந்த ஓலைச்சுவடிகளை எடுத்து பார்க்கலாம் என்று தன் அறைக்குள் நுழைந்தவன் அங்கே தன்னுடைய கட்டிலில் படுத்து உறங்கி கொண்டிருந்த மனைவியை ஆனந்த அதிர்ச்சியுடன் ஆழ்ந்து பார்த்தான். களங்கமற்ற குழந்தை முகத்துடன் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தாள் அருவி. இனி வாழ்க்கையே இல்லை என்றிருந்தவனுக்கு மறுபிறப்பை அளித்தவளை பாசத்தோடு பார்த்தவன் அவள் அருகே சென்று அமர்ந்தான்.

 

அவளின் இரு கால்களையும் மெல்ல எடுத்து சேர்த்து பிடித்து அவள் பாதங்களில் முகம் புதைத்தான். அது அருவிக்கு கூச்சத்தை கொடுக்க மெல்ல கண்திறந்து பார்த்தாள். முரளி அவள் கால் பெருவிரல் தொடங்கி பாதம் முழுவதும் மென்மையாக முத்தமிட்டான். அவன் முத்தத்தில் காமம் இல்லை, ஆராதிப்பவன் போல இதழ்களையும் கண்களையும் ஒற்றி எடுத்துக் கொண்டிருந்தான். ஆனால் அருவிக்கு தான் அது கிளர்ச்சியை கொடுத்தது. தன்னவனின் முதல் முத்தம் இதழில் தொடங்காமல் கால் பெருவிரலில் தொடங்கியிருந்தாலும், அதுவுமே அவளுக்குள் குறுகுறுப்பை ஏற்படுத்தியது. முத்தமிடும் போது அவள் பாதங்களை உரசும் அவன் மீசை கூச்சத்தை கொடுக்க, மெல்ல காலை அசைத்தாள். அதில் அவள் புடவை முழங்கால் வரை சற்றே மேலேற முரளியின் கண்கள் விரிந்தன. உடனே அவன் கண்களில் குற்ற உணர்ச்சியும் தோன்ற, என்ன நினைத்தானோ சட்டென்று எழுந்து அவசரமாக வெளியே சென்று விட்டான். 

முரளியின் முதல் முத்தம் கொடுத்த மயக்கத்தில் அவன் சென்றது கூட உணராமல் கண்மூடி படுத்திருந்தாள் அருவி

 

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top